சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சமூக வெட்டுக்களை மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் தோள்களில் சுமத்தி, விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் விஷமத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், துறைமுகங்கள், மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றாக நிற்கின்றது. இந்த போராட்டம் உலகம் முழுவதும் முதலாளித்துவ அரசாங்கங்களின் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஒரு சில அதிசெல்வந்த முதலாளிகளின் இலாபத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்த நாட்டின் முதலாளித்துவ ஆளும் வர்க்கம், அதற்காக ஏற்கனவே இலட்சக் கணக்கான தொழில்களை அழித்துவிட்டுள்ளதுடன், எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீது கடுமையான வரிகளை விதித்து, கல்வி மற்றும் சுகாதாரத சேவைகளுக்கான நிதியைக் வெட்டிக் குறைத்து பொதுமக்களின் பரந்த வெறுப்புக்கு உள்ளாகியுள்ளது. அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட அடக்குமுறை இராணுவ-பொலிஸ் பாய்ச்சல்களும் கைதுகளும், நெருக்கடி நிறைந்த அரசாங்கம் முதலாளித்துவ முறைமையை பாதுகாக்க எப்படிப் போராடுகிறது என்பதையே காட்டுகிறது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள வருமான வரி உயர்வுக்கு எதிராக இன்றைய தினம் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்துக்கு 'நியாயமற்ற வரி மசோதாவை ரத்து செய்யும் வரை போராடு' என்ற தலைப்பில் 'துறைமுகங்கள், கப்பல்துறை, எஸ்.ஏ.ஜ.டி. (பார ஊர்தி போக்குவரத்து நிறுவனம்) ஆகியவற்றை சேர்ந்த, நியாயமற்ற வரி மசோதாவுக்கு எதிரான ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டணி' மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விகிதங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட 2023 சிக்கன வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆயிரக்கணக்கான அரச தொழில்களை அழித்தல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், மானிய வெட்டுக்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் அரசாங்க செலவினங்களை இந்த வரவு-செலவுத் திட்டம் கடுமையாகக் குறைக்கிறது. இந்த நடவடிக்கைகள், நெருக்கடியிலிருந்து விடுபட 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் பெறுவதற்காக, சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு ஏற்பட மேற்கொள்ளப்படுகின்றன.
அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்தில், உழைக்கும் மக்கள் மீதான வரி அதிகரிப்பு மற்றும் மின்சாரம், தண்ணீர், எரிபொருள் மற்றும் உரம் ஆகியவற்றின் மீதான விலை மானியங்களை நிறுத்துவதும் அடங்கும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவுகள் வெட்டுப் பலகை மீது வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது வரவு-செலவுத் திட்ட உரையில், ஸ்ரீலங்கா டெலிகொம், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான சுற்றுலா ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார். விற்பனைக்கு வசதியாக இலங்கை மின்சார சபையை 15 நிறுவனங்களாக பிரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து பல்வேறு துறைகளில் போராட்டங்கள் மூலம் இந்தத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் உறுதியை தொழிலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பதுதான் கேள்வி.
வருமான வரியை உயர்த்துவது அரசின் ஒட்டுமொத்த தாக்குதல்களில் ஒன்றாகும். 'அராஜகவாத அரசியல் சக்திகளால் போடப்படும் தடைகளை அலட்சியம் செய்துவிட்டு, நான் அந்த சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்துவேன்' என்று பெப்ரவரி 4 அன்று தேசத்திற்கு ஆற்றிய உரையில் விக்கிரமசிங்க கூறினார். இந்த முழுத் தொடர் தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டும்.
இருப்பினும், அதைப் புறக்கணித்து, தொழிற்சங்கத் தலைமைத்துவம் வேண்டுமென்றே இந்தப் போராட்டங்களை வருமான வரிக்கு மட்டும் மட்டுப்படுத்தி, அரசாங்கத்தின் அனைத்து சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக நடத்த வேண்டிய நாடு தழுவிய ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தடுக்கின்றது.
அரசாங்கத்தால் இந்த வரி மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு மூல காரணமான, சர்வதேச நாணய நிதியத்தால் உத்தரவிடப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகள் பற்றி தொழிற்சங்கத் தலைவர்கள் மௌனம் காக்கின்றனர். இந்த தொழிற்சங்கங்களில் பல சர்வதேச நாணய நிதிய ஆணைகளை ஆதரிக்கும் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளுடன் -அதாவது ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி உடன் தொடர்புடையவை ஆகும்.
முந்தைய இராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை அணுகாமல் இருந்தமை பற்றி, ஐ.ம.ச. முன்னர் விமர்சித்ததை தொழிலாளர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். நாட்டை மீட்டெடுத்தல் என்ற பெயரில் சிக்கனக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் தனது அரசாங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜே.வி.பி. இப்போது பகிரங்கமாக கூறிக்கொள்கின்றது.
தொழிற்சங்கங்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க முன்வந்திருப்பது, தொழிலாளர்களின் உரிமைகள் மீதான அக்கறையின் காரணமாக அல்ல, மாறாக அவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் கோபத்தின் காரணமாகவே ஆகும். தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை திசை திருப்பவும் நீர்த்துப்போகச் செய்யவுமே, அழுத்தம் கொடுத்து அரசாங்கத்தை வளைத்து கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற மாயையை தொழிற்சங்கங்கள் பரப்புகின்றன.
வரிச் சட்டத்துக்கு எதிராக மட்டுமன்றி, அனைத்து அரசாங்கத் தாக்குதல்களையும் எதிர்த்துப் போராடுவதில், தொழிலாளர்கள் தங்கள் கடந்தகால கசப்பான அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த வெகுஜனப் போராட்டங்களுக்கு மத்தியில், தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய இரு தினங்களில் இரண்டு பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தது நினைவிருக்கலாம். இடைக்கால அரசாங்கம் ஒன்றுக்காக ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. விடுத்த கோரிக்கைகளுக்கு இந்த வேலைநிறுத்தங்களை மட்டுப்படுத்தி கலைத்து விடவே அவர்கள் இதைச் செய்தனர். முன்நிலை சோசலிசக் கட்சி அதற்கு முண்டு கொடுத்தது. அந்த காட்டிக்கொடுப்பிலிருந்து வாய்ப்பை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, அபகீர்த்திக்குள்ளான விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தது.
அரசாங்க தாக்குதல்களுக்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை நடத்த, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்திற்காக, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத்தளத்திலும், தொழிற்சாலையிலும் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அழைப்பு விடுக்கின்றது. கிராமப்புற ஒடுக்கப்பட்டவர்களையும் இதே போன்ற நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விக்கிரமசிங்க அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, தங்கள் சொந்த சுயாதீனமான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்யவும், கிராமப்புற ஏழைகளை தங்கள் பக்கம் அணிதிரட்டிக்கொள்ளவும் தொழிலாள வர்க்கத்திற்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.
தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஒடுக்கப்பட்டவர்களின் நடவடிக்கை குழுக்களைச் சூழ, தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும். சோ.ச.க. பின்வரும் கொள்கைகளை முன்மொழிகிறது.
- தொழிலாளர் ஊதியத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் இரத்து செய்!
- சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை நிராகரி! சம்பள வெட்டு வேண்டாம்! ஓய்வூதிய வெட்டு வேண்டாம்!
- அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப சம்பள உயர்வு வேண்டும்! உயர் பணவீக்கத்தை எதிர்கொள்ளக் கூடிய மட்டத்துக்கு ஓய்வூதியத்தை உயர்த்து!
- பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு வேண்டாம்! அனைவருக்கும் போசாக்கான உணவை உறுதி செய்!
- அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்! பெரும் பணக்காரர்களின் சொத்துக்களை கையகப்படுத்தி, பெரிய வங்கிகளையும் பெருநிறுவனங்களையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்கு!
மில்லியன் கணக்கானவர்கள் எதிர்கொள்ளும் பசி மற்றும் பஞ்சத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், மருத்துவமனைகளில் போதுமான அளவு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்யவும் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாள வர்க்கம் அதன் சொந்த ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மறுசீரமைக்க வேண்டும். கிராமப்புற விவசாயிகளின் அவல நிலையை போக்க, அவர்களின் கடனை தள்ளுபடி செய்து, உர மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.
விக்கிரமசிங்க, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதாகவும், இராணுவம் மற்றும் பொலிஸை நிலைநிறுத்துவதாகவும், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் எந்த எதிர்ப்பையும் நசுக்குவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். ஏற்கனவே, அவர் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இழிந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றில் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்வதற்காக அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை (ESA) நீட்டிக்க அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது.
சிக்கன நடவடிக்கைக்கு எதிரான தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் போராட்டம் அவர்களை அரசாங்கத்துடனும் ஒடுக்கும் அரசு எந்திரத்துடனும் நேரடி மோதலுக்கு கொண்டு வரும். இந்த நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்குவதற்கும் தொழிலாள வர்க்கம் போராட வேண்டிய அவசரத் தேவை உள்ளது. உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரம் அடிப்படை சமூக உரிமைகளுக்கான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
முதலாளித்துவ முறைமையின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட முடியாது. சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவதற்கு தங்களது வலிமையை ஒன்று திரட்டுவதும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டுவதும் அவசியமாகும்.
அதற்கான ஒரு மையமாக ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற ஏழைகளினதும் மாநாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்க சோ.ச.க. நடவடிக்கை எடுத்துள்ளது. தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஒடுக்கப்பட்டவர்களின் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளின் அடிப்படையில், இந்த மாநாடு உருவாக்கப்படும்.
இந்தப் போராட்டம் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஆளும் வர்க்கத்தால் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில், இலங்கைத் தொழிலாளர்கள் உலகெங்கிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்ற உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களே இலங்கை தொழிலாள வர்க்கத்தின் கூட்டாளிகள் ஆவர். இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்டுள்ள தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேசக் கூட்டமைப்பில் இணைய வேண்டும். இது உலகளவில் தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த வழிவகை செய்கிறது.
இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கும் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப முன்வருமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கைப் பாராளுமன்றம் கொடூரமான “புனர்வாழ்வு” சட்டத்தை நிறைவேற்றியது
ஆயிரக்கணக்கான இலங்கை சுகாதாரத் தொழிலாளர்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தனர்
