இலங்கை சோ.ச.க.. மற்றும் IYSSE உலகளாவிய போர்-எதிர்ப்பு இணையவழி கூட்டத்துக்காகப் பிரச்சாரம் செய்தன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) உறுப்பினர்கள், “உக்ரைனில் போரை நிறுத்த ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டமைப்போம்!' என்ற தலைப்பில் இடம்பெற உள்ள சர்வதேச வலையரங்கு கூட்டத்தை கட்டியெழுப்ப இலங்கை முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஐ.வை.எஸ்.எஸ்.இ. இந்த கூட்டத்தை டிசம்பர் 10 அன்று நடத்துகிறது. இந்நிகழ்வு மூன்றாம் உலகப் போராக மாறுவதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கும்.

இந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் ஆற்ற வேண்டிய வகிபாகம் பற்றி, கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர, மொரட்டுவை, பேராதனை, உருகுணை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

ஆரம்பத்தில், பல மாணவர்கள் உக்ரைனில் நடக்கும் போர், அதன் தாக்கங்கள் மற்றும் போலி-இடதுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆற்றும் வகிபாகம் பற்றிய அறிவின் பற்றாக்குறையை வெளிப்படுத்தினர். இவை வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் பிரமாண்டமான ஆபத்தைப் பற்றி அவர்களுக்கு மூடி மறைப்பதற்கு ஒத்துழைக்கின்றன.

பொறுமையாகக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்ட பிறகு, பலர் வலையரங்கு கூட்டத்திற்கு பதிவு செய்ய ஒப்புக்கொண்டனர். ஐ.வை.எஸ்.எஸ்.இ. அதன் அறிக்கையின் நூற்றுக்குக்கும் மேற்பட்ட பிரதிகளை விற்றது. 'உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ஒரு அழைப்பு: உக்ரைன் போரை நிறுத்த ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டமைப்போம்!' என்ற தலைப்பிலான இந்த அறிக்கை சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கட்சியின் ஏனைய இலக்கியங்களையும் வாங்கி, சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் முன்னோக்கு பற்றி மேலும் கலந்துரையாட ஒப்புக்கொண்டனர்.

யுத்தம் காரணமாக இளைஞர்கள் மிகவும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர் ஒருவர் தெரிவித்தார். 'எங்கள் எதிர்காலத்தை நாம் எப்படி திட்டமிட்டாலும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான உலக வல்லரசுகளின் ஒரு முடிவால் அனைத்தையும் அழிக்க முடியும்,' என்று அவர் கூறினார். “உக்ரேனில் நடந்த போர் குறித்து இலங்கை ஊடகங்களில் செய்திகள் ஏதும் இல்லை, எனவே இளைஞர்களிடம் அது பற்றிய சமீபத்திய தகவல்கள் இல்லை. ஆனால் இந்த உலகளாவிய நெருக்கடி குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.”

சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள் போரின் மூல காரணங்களையும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர நடவடிக்கையால் மட்டுமே அதை நிறுத்த முடியும் எனவும் விளக்கினர். 'தொழிலாளர் வர்க்கம் அனைத்து முதலாளித்துவ அமைப்புகளிலிருந்தும் சுயாதீனமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் நான் உடன்படுகிறேன்,' என அந்த மாணவர் பதிலளித்தார்:

இதில் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்பவற்றில் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) அடங்கும். அந்த மாணவர் மேலும் கூறியதாவது: “[ஜனாதிபதி ரணில்] விக்ரமசிங்கவை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க முடிந்தவரை பல குழுக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் இந்த கலந்துரையாடலின் போது, இன்னொரு முதலாளித்துவ அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவரும் அத்தகைய வேலைத்திட்டத்திற்கு பதிலாக, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டம் தேவை என்பது எனக்கு தெளிவாகியது.”

உக்ரைனில் ரஷ்யாவின் போரை அமெரிக்கா தூண்டிவிட்டதாக களனி பல்கலைக்கழக மாணவர் ரஞ்சித் தெரிவித்தார். 'அமெரிக்கா எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற, அவர்கள் இராணுவ சக்தியைப் பயன்படுத்தி நாடுகளை ஆக்கிரமித்து அவற்றின் வளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். இந்த நோக்கத்தை அடைவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக மத்திய கிழக்கில் அழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

மோசமடைந்து வரும் சமூக நெருக்கடி மீதான எதிர்ப்பை திசைதிருப்ப இலங்கையில் ஆளும் வர்க்கம் எவ்வாறு தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத இனவாதத்தைப் பயன்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ரஞ்சித், அமெரிக்கா மற்றும் ஏனைய முதலாளித்துவ நாடுகளுக்கு யுத்தம் அதே நோக்கத்திற்காக சேவை செய்கிறது என்றார்.

'இது ஒரு இராஜதந்திர பிரச்சினை மட்டுமல்ல,' என்று அவர் கூறினார். “முதலாளிகளின் இலாப நலன்களுக்காக நடத்தப்படும் போரில் நமது முழு எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது. இந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன், டிசம்பர் 10 நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்வேன்.

அனுஜ, பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு விவசாய மாணவர்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில், முதலாம் ஆண்டு விவசாய மாண அனுஜ, அணுவாயுத யுத்தம் மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரதான ஆபத்து என்று கூறினார். 'இளைஞர்களே போரில் பலியாகின்றனர். எனது சகோதரர் ரஷ்யாவில் படிக்கிறார், அங்குள்ள இளைஞர்கள் பரந்த இராணுவமயமாக்கலால் அச்சுறுத்தப்படுகிறார்கள். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உலகம் இதுபோன்ற விஷயங்களை அனுபவித்தது, மீண்டும் அந்த நிலைமை எங்களுக்கு வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “உலகின் பெரும்பான்மையான மக்கள் போருக்கு முடிவு கட்டவே விரும்புகின்றனர். உழைக்கும் மக்களால் அதைச் செய்ய முடியும், ஆனால் அது சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இணையவழி சந்திப்பில் கலந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். உலகெங்கிலும் உள்ள மக்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர தைரியத்துடன் ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது.”

ஒரு உடல் விஞ்ஞான மாணவரான சசிந்த, அமெரிக்கா தங்கள் இராணுவ சக்தியால் எல்லாம் சாத்தியம் என்று நினைக்கிறது, 'ஆனால் அணு ஆயுத சக்திகளிடையே பதட்டங்களுக்கு மத்தியில் இதுபோன்ற கணக்கீடுகளை செய்வது பேரழிவு தரும்' என்றார்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் மீது வீசப்பட்ட இரண்டு அணுகுண்டுகள் பாரிய அழிவை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். “ஒரு அறிவியல் மாணவனாக அணுசக்தி எதிர்வினைகள் எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதை நான் கற்றுக்கொண்டேன். அமெரிக்கா தலைமையிலான வல்லரசுகள் ரகசியமாக உருவாக்கிய ஆயுதங்களை உலகம் இன்னும் பார்க்கவில்லை, மேலும் அவை ஏற்படுத்தும் சேதத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது.

“அமெரிக்க இராணுவச் செலவுகளைப் பற்றி மக்கள் கேட்கும்போது, அவர்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவார்கள். இது உலகம் முழுவதும் பசியையும் துன்பத்தையும் போக்கப் பயன்படும் பணம். ஆனால் நீங்கள் சொல்வது போல் அந்த பணம் போர் வெறி பிடித்த ஆட்சியாளர்களின் கையில் உள்ளது. நாம் போருக்கு எதிராக கடும் எதிர்ப்பை எதிர்ப்பை வளர்க்க வேண்டும், இந்த வலையரங்கம் அதில் பெரும் பங்கு வகிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அரசியல் விஞ்ஞான பிரிவின் ஏனைய மாணவர்களுடன் ரோய் (வலது)

ஒரு அரசியல் விஞ்ஞான மாணவரான ரோய், அமெரிக்க அரசாங்கத்தின் பிரச்சாரத்தின் பாசாங்குத்தனத்தை சுட்டிக்காட்டினார்: 'மனித உரிமைகள் பற்றி அதிகம் பேசும் அமெரிக்கா, மனித உரிமைகளை மிகவும் மீறும் நாடாக மாறியுள்ளது.'

போரை நிறுத்துமாறு ஏகாதிபத்திய சக்திகளிடமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபை போன்ற அவர்களின் அமைப்புகளிடமோ முறையிட்டும் பயனில்லை என்பதை அவர் புரிந்து கொண்டார். 'மனித உரிமை அமைப்புகளில் அவர்கள் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும், அவர்கள் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடியிலிருந்து வெளியேற ஒரு அழிவுகரமான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.' இந்த போர்-எதிர்ப்பு செய்தியை வெகுஜன பார்வையாளர்களுக்கு தெரிவிப்பதில் WSWS ஆற்றிய பங்கிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

கலைப்பீட மாணவியான பியுமி ஹன்சிகா பிரச்சாரகர்களிடம் கூறியதாவது: “ஏகாதிபத்திய சக்திகள் போரை முடிவுக்கு கொண்டுவரும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் எப்போதும் போர்கள் மூலம் உலகை காலனித்துவப்படுத்த முயற்சிக்கின்றனர். பல தசாப்தங்களுக்கு முன்பு, அமெரிக்கா உலகின் பொருளாதார ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த நாடாக இருந்தது. அவர்களிடம் அணு ஆயுதங்கள் மற்றும் பாரிய இராணுவப் படைகள் உள்ளன, அதை அவர்கள் தங்கள் பொருளாதார சரிவை எதிர்கொள்ள பயன்படுத்துகின்றனர்.” ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா போரை நடத்தி வருவதாகவும், சீனாவின் கனிமங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களை பெற சீனாவுடன் போரை நடத்த அச்சுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

கலை மாணவி பியுமி ஹன்சிகா

உக்ரைன் போரின் தாக்கம் இலங்கை மற்றும் உலகின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை சுட்டிக்காட்டிய பியூமி, “இயற்கை எரிவாயு, எரிபொருள் மற்றும் எரிசக்தி பொருட்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும். யுத்தம் அந்தப் பொருட்களுக்கான விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அது இலங்கை ஆளும் வர்க்கத்தின் நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளது,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது: “இந்த சர்வதேச நிலைமை பற்றி இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. உலகப்போர் குறித்து அரசியல் கட்சிகள் மௌனம் சாதிப்பது இதற்கு முக்கிய காரணம். முதலாளித்துவத்தைப் பற்றிய உண்மையைக் கற்றுக் கொள்வதிலிருந்து மக்களைத் திசைதிருப்ப அவர்கள் அனைவரும் வேலை செய்கிறார்கள். அவர்கள் தேசியவாதத்துடன் தொழிலாளர்களையும் மாணவர்களையும் சிக்க வைக்கின்றனர்.

“மாணவர்களால் இந்தப் பிரச்சனைகளுக்கு எதிராக தனியாகப் போராட முடியாது, நாம் மக்களிடம் திரும்பி அவர்களை ஒரு சக்தியாக உருவாக்க வேண்டும். அவர்களால் மட்டுமே உலகப் போரை நோக்கிய உந்துதலை நிறுத்த முடியும் மற்றும் நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.”

விவசாய மாணவரான திலின, எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்திய சக்திகள் வைத்திருக்கும் பரந்த அளவிலான மேம்படுத்தப்பட்ட அணு ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்தை எடுத்துரைத்தார். 'அணுவாயுத யுத்தம் பெரும்பான்மையான வெகுஜனங்களைக் கொல்லக்கூடும்,' என்று அவர் கூறினார்.

விவசாய மாணவர் திலின

அவர் சமூக நெருக்கடியை பற்றியும் பேசினார்: “இளைஞர்களாகிய எங்களுக்கு எதிர்காலம் இல்லை. நாங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தவுடன், எங்களுக்கு வேலை கிடைக்கும், ஆனால் எங்களுக்கு போதுமான சம்பளம் கிடைக்காது. எல்லா நாடுகளிலும், மக்கள் போர் மற்றும் சமத்துவமின்மையின் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். எனவே இரண்டுக்கும் எதிராக நாம் போராட வேண்டும்.”

சட்டபீட மாணவர் ராகுல், 'இந்தப் போர், நாடுகள் தங்கள் பலத்தை அதிகரிப்பதற்கான போட்டியின் விளைவு என்று நான் நினைக்கிறேன்.' என்று ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களிடம் கூறினார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, ஆனால் அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளின் பல ஆத்திரமூட்டல்களை அடுத்தே தலைதூக்கியது என்று பிரச்சாரகர்கள் விளக்கினர். 1991 முதல் ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கிலும் பிற இடங்களிலும் இலாபம் மற்றும் வளங்களுக்காக போரை நடத்தி வருகின்றன; இப்போது இது அணுவாயுத உலகப் போரின் அபாயத்திற்கு வழிவகுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் போருக்கு பணம் செலுத்துவதற்காக சமூக திட்டங்களை குறைத்து வருவதாக ராகுல் குறிப்பிட்டார். “இலங்கையில் வரவு செலவுத் திட்டத்தில் விக்கிரமசிங்க இராணுவச் செலவுகளை அதிகரித்திருப்பதையும் கல்விக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பதையும் நாம் காண்கிறோம். இந்த சிக்கன நடவடிக்கைகளின் விளைவுகளை நாங்கள் ஏற்கனவே அனுபவித்து வருகிறோம்.” மாணவர் விடுதிகளில் இனி வைஃபை அல்லது மொபைல் இணைய வசதி இல்லை என்று அவர் விளக்கினார்.

போர் சம்பந்தமாக முன்நிலை சோசலிசக் கட்சியும் அது வழிநடத்தும் அனைத்துப் பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியமும் மௌனம் சாதிப்பது குறித்து கருத்து தெரிவித்த ராகுல், “அவர்கள் போரைப் பற்றி பேசினால், முதலாளித்துவத்தை தூக்கி எறிய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் கலந்துரையாட வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் அவர்கள் மௌனம் காக்கின்றனர்” என்றார்.

'முதலாளித்துவ அமைப்பு மற்றும் அணுவாயுத போருக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும், ஆனால் அவர்களுக்கு அரசியல் தலைமை தேவை,' என்று அவர் மேலும் கூறினார். ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் தங்கள் பிரச்சாரத்தினதும் மற்றும் டிசம்பர் 10 வலையரங்கத்தின் நோக்கமும் இதுவே என்று விளக்கினர். கூட்டத்திற்கு இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

Loading