மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செப்டம்பர் 18 முதல் 28 வரை 10 நாள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் இந்தியக் குழுவிற்கு ஜெய்சங்கர் தலைமை தாங்கினார், அவரது பயணத்தின் முக்கிய நோக்கம் அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டை வலுப்படுத்துவதாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் என்ன வேறுபாடுகள் இருந்தாலும், இந்தோ-பசிபிக்கில் இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதியான கூட்டாளியாகும், மேலும் சீனாவுக்கு எதிராக பொறுப்பற்ற மற்றும் மேலும் ஆத்திரமூட்டும் இராணுவ-மூலோபாய தாக்குதலில் வாஷிங்டனுடன் தன்னை எப்போதும் முழுமையாக ஒருங்கிணைக்க விரும்புகிறது என்று புது டெல்லி பைடென் நிர்வாகத்திற்கு உறுதியளிக்க விரும்பியது.
மாஸ்கோவை கண்டனம் செய்யவேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா இதுவரை ஏற்க மறுத்து வருகிறது, அது (மாஸ்கோ) மேற்கு ஏகாதிபத்திய சக்திகளால் சினமூட்டப்பட்டு உக்ரேன் மீது 'ஆக்கிரமிப்பாளன்” ஆக படையெடுப்பதற்கும் மற்றும் ரஷ்யா மீது தண்டனை விதிக்கும் பொருளாதார தடைகளை சுமத்தவும் தன்னை தானே அனுமதித்துள்ளது.
தனது பயணத்தின் கடைசி நாளில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், இந்திய-அமெரிக்க கூட்டணி குறித்து தான் 'மிகவும் நம்பிக்கையுடன்' இருப்பதாக கூறினார். கூட்டாக 'உலகின் திசையை வடிவமைக்க' இது ”நிறைய வாக்குறுதிகளுடன்' ... 'மிகவும் நேர்மறையான அனுபவம் ... என்று அவர் அழைத்தார். பிளிங்கென், அவரது பங்கிற்கு, இந்திய-அமெரிக்க 'கூட்டாண்மை' 'உலகின் மிகவும் பின்விளைவுகளில் ஒன்று' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்களில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் குவாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் – குவாட் என்பது அமெரிக்கா, அதன் முக்கிய ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகியவற்றுடன் சேர்ந்து உருவாக்கிய அரை-இராணுவ கூட்டணி ஆகும்.
இந்திய முதலாளித்துவம் மற்றும் கிட்டத்தட்ட முழு அரசியல் ஸ்தாபகத்தின் முழு ஆதரவுடன், இந்தியாவின் தீவிர வலதுசாரி நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் இராணுவ-மூலோபாய கூட்டுறவை இரட்டிப்பாக்குகிறது. அதே சமயத்தில் மாஸ்கோ மற்றும் சீனா மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வாஷிங்டன் நியூகிளியர் போரை தொடுக்கவும் தயாராக உள்ளது என்பதை எடுத்துக் காட்டியள்ளது.
ரஷ்யாவை பொறுத்தவரையில், மாஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்படலாம் என்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் எச்சரிக்கைகளுக்கு பைடென் நிர்வாகம் உக்ரேனுக்கு ஏற்கனவே வழங்கி வரும் அபாரமான இராணுவ ஆதரவை மேலும் அதிகரிப்பதன் மூலம் பதிலளித்துள்ளது. அப்படிச் செய்யும் போது கூட, வாஷிங்டன் சீனாவிற்கு எதிராக தனது 'முழு தாக்குதல்' பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறது, மேம்பட்ட கணினி தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதைத் தடைசெய்துள்ளது மற்றும் தைவானுக்கு பெருமளவிலான ஆயுதங்களை வழங்கி அதை ஒரு பரந்த அமெரிக்க இராணுவக் கிடங்காக மாற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த முன்னேற்றங்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் குற்றவியல் தன்மையை சுட்டிக்காட்டுகின்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிஐஏ மற்றும் பல்வேறு அமெரிக்க இராணுவ-மூலோபாய சிந்தனைக் கூடங்கள் இந்தியாவை பூகோள புவி-அரசியலில் உலகின் மிக 'முக்கியமான ஊசலாடும் நாடு' என்று முத்திரை குத்தியது என்பதை நன்கு அறிந்த புது டெல்லி வாஷிங்டனுடன் நெருங்கிய உறவுகளை உருவாக்கியது. இந்த சமயத்தில் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் போர்கள் மூலம் பூகோள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் மற்றும் இப்போது ரஷ்யா மற்றும் சீனாவுடன் கட்டுப்பாடற்ற மூலோபாய போட்டியை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறாக இந்திய முதலாளித்துவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உலகெங்கிலும் இன்னும் ஆக்ரோஷமாகவும் பொறுப்பற்றதாகவும் செயல்பட ஊக்குவித்துள்ளது, ஆனால் குறிப்பாக பெய்ஜிங்கிற்கு எதிரான அதன் போர் உந்துதலில். இந்த உந்துதல் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீட்டின் மூலம் நிறுத்தப்படாவிட்டால், அது ஒரு பூகோள அளவிலான கொந்தளிப்பில் உச்சக்கட்டத்தை எட்டும், அது தவிர்க்க முடியாமல் தெற்காசியாவை மூழ்கடித்து, மனிதகுலம் அனைவரையும் அச்சுறுத்தும். COVID-19 தொற்றுநோயின் இரண்டரை ஆண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர உறவுகளை வியத்தகு முறையில் அதிகரிப்பதோடு, மே 2020 இல் வெடித்த சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மோடி அரசாங்கம் பெய்ஜிங்கிற்கு எதிரான விரோதத்திற்கு எரியூட்ட பயன்படுத்தியது மேலும் தெற்காசியாவிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கு வாஷிங்டனுடன் இந்தியா இன்னும் நெருக்கமாகச் செயல்படுவதை நியாயப்படுத்துகிறது.
சீனாவைப் போலவே, இந்தியாவும் இப்போது பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களைத் தங்கள் சர்ச்சைக்குரிய இமாலய எல்லையில் தொடர்ந்து மூன்றாவது குளிர்காலத்தில் நிலைநிறுத்தத் தயாராகி வருகிறது. மேலும் எல்லை பிரச்சனையில் வாஷிங்டன் தன்னைத்தானே அதற்குள் நுழைத்துக் கொள்ள மேற்கொள்ளும் மிகவும் அத்து மீறிய முயற்சிகளை இந்தியா வரவேற்றுள்ளது. இதில் மீண்டும் மீண்டும் இந்திய- சீன எல்லை பதட்டங்களை தென் சீன கடல் தகராறுடன் இணைத்து அவற்றை பெய்ஜிங்கின் ஆக்கிரமிப்பு மற்றும் 'சர்வதேச உலக ஒழுங்கை' கடைப்பிடிக்க மறுத்தலுக்கான எடுத்துக்காட்டுகளாக காண்பிப்பதும் உள்ளடங்கும்.
இந்த வார தொடக்கத்தில், இந்திய மற்றும் அமெரிக்க இராணுவங்கள் இரண்டு வார பயிற்சியான யுத் அபியாஸ் (போர் பயிற்சி) பயிற்சியைத் தொடங்கின, இதன் குறிக்கோளை வெளிப்படுத்தி காட்டும் வகையில் உயர்மட்ட மோதலுக்கான பயிற்சி மற்றும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (அதாவது, சர்ச்சைக்குரிய இந்தியா-சீனா எல்லையில் இருந்து) 100 கிலோமீட்டருக்கும் குறைவான பகுதியில் பயிற்சி நடைபெறுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் வடக்கில் உள்ள ஆலியில். இந்த பயிற்சியை ஒரு ஆத்திரமூட்டல் என்று பெய்ஜிங் கண்டித்ததில் ஆச்சரியமில்லை.
சீனாவுக்கு எதிரான இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பின் பரிமாணத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், ஜெய்சங்கர் தனது அமெரிக்கப் பயணத்தின் போது முதன் முதலாக -அமெரிக்க-பசிபிக் தீவு நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இரண்டாம் உலகப் போரின் மிகப் பெரிய கடற்படைப் போர்களின் தளமாக இருந்த தென் சீனக் கடலில் வளர்ந்து வரும் சீனப் பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கிற்கு வாஷிங்டனின் போர்க்குணமிக்க பதிலின் ஒரு பகுதியாக இந்த உச்சிமாநாடு இருந்தது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் வாஷிங்டன் உருவாக்க முயற்சிக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை போன்ற ஒன்றை அவர்களின் விருப்பத்தை மீறி பெய்ஜிங்குடன் கையெழுத்திட்டதற்கு எதிராக அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் சமீப மாதங்களில் சின்னஞ்சிறு சாலமன் தீவுகளின் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்க-பசிபிக் தீவு நாடு உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்பது, சீனாவிற்கு எதிரான பரந்த அமெரிக்க மூலோபாயத்தில் இந்தியாவின் ஒருங்கிணைப்பில் மேலும் ஒரு படியைக் குறிக்கிறது. அதிக இந்திய இன மக்கள்தொகை கொண்ட பிஜி போன்ற சில பசிபிக் தீவு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள், அமெரிக்காவை விட வலிமையானவை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 2014 இல் பிஜிக்கு விஜயம் செய்தார். ஜெய்சங்கர் வாஷிங்டனில் பப்புவா நியூ கினியா வெளியுறவு மந்திரி ஜஸ்டின் ட்காட்சென்கோவைச் சந்தித்து, தற்போதைய ஒத்துழைப்பைப் பற்றியும் அதை எவ்வாறு மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தார். இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்று, அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ராண்ட் கார்ப்பரேஷனின் தேசிய பாதுகாப்பு ஆய்வாளரான டெரெக் கிராஸ்மேன், 'பெரும் சக்திகள் இப்படித்தான் சிந்தித்து பூகோள அளவில் செயல்படுகின்றன” என்றார்.
எவ்வாறாயினும் இந்தியா-அமெரிக்க கூட்டணியில் பல பதட்டங்கள் உள்ளன, இந்திய ஆளும் வர்க்கம் எப்போதும் ஆழமடைந்துவரும் பூகோள அளவிலான முதலாளித்துவ நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் அதன் கொள்ளையடிக்கும் நலன்களை நிலைநிறுத்த போராடுகிறது, மேலும் வாஷிங்டன் அதன் உலக நிலைப்பாட்டில் ஏற்பட்டு வரும் அரிப்பை நிறுத்துவதற்காக அதன் இராணுவ வலிமையை இரக்கமின்றி பயன்படுத்த முயல்கிறது, மேலும் உலக நிதியமைப்பில் அது இன்னும் வகிக்கும் அதன் ஆதிக்க நிலைப்பாட்டையும் பயன்படுத்த முயற்சிக்கிறது.
செப்டம்பர் 30 அன்று ஹிந்து வெளியிட்ட செய்தியின்படி, ஈரானிய பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பையை தளமாகக் கொண்ட பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க கருவூலத் துறை தடைகளை விதித்துள்ளது. டிப் பெட்ரோகெமிக்கல் பிரைவேட் லிமிடெட் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பெட்ரோ கெமிக்கல் பொருட்களை 'சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு' வாங்கியதாக வாஷிங்டன் குற்றம் சாட்டுகிறது. 2018 ஆம் ஆண்டில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதற்குப் பிறகு, ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக போருக்குச் சமமான உலகளாவிய பொருளாதாரத் தடைகளை விதித்த பிறகு இதுபோன்ற தடையை எதிர்கொள்ளும் முதல் இந்திய நிறுவனம் இதுவாகும்.
இதற்கிடையில், இந்தியாவின் பரம-எதிரியான பாகிஸ்தானுடனான அதன் சிதைந்த உறவுகளை மீட்டெடுப்பதற்கான வாஷிங்டனின் முயற்சிகளால் புது டெல்லி எரிச்சல் அடைந்துள்ளது. ஜெய்சங்கர் தனது அமெரிக்கப் பயணத்தின் போது, பாகிஸ்தானின் F-16 போர் விமான படையை புதுப்பிக்க உதவுவதற்காக, பாகிஸ்தானுக்கு $450 மில்லியன் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை விற்க வாஷிங்டன் அறிவித்த சமீபத்திய ஒப்புதலுக்கு இந்தியாவின் அதிருப்தியை வெளிப்படுத்தினார். பனிப்போர் முழுவதும் அதன் முக்கிய பிராந்திய பங்காளியான பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவு, இரு நாடுகளுக்கும் 'சேவை செய்யவில்லை' என்று இந்திய வெளியுறவு மந்திரி அறிவித்தார், மேலும் F-16 கள் 'பயங்கரவாதத்திற்கு எதிராக போராட பயன்படுத்தப்படும்' என்ற வாஷிங்டனின் கூற்றை அப்பட்டமாக நிராகரித்தார். 'நீங்கள் யாரையும் ஏமாற்ற முடியாது” என்று கூறினார்.
தெற்காசியாவில் அதன் முக்கிய இராணுவ-மூலோபாய பங்காளியாக இந்தியாவை ஊக்குவிக்கும் அதே வேளையில் பாகிஸ்தானுடனான தனது பாதுகாப்பு உறவுகளை புதுப்பிக்கும் அமெரிக்க முடிவைப் பாதுகாத்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம், வாஷிங்டன் இந்தியாவையும் பாகிஸ்தானையும் “பங்காளிகளாகப் பார்க்கிறது, ஏனெனில் நாங்கள் பல விஷயங்களில் பகிர்ந்து கொள்ளும் மதிப்புகளை கொண்டுள்ளோம்.' செப்டம்பர் 26 அன்று ஐநா பொதுச் சபையின் ஒரு பக்கதில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பூட்டோ ஜர்தாரியை சந்தித்த பின்னர் பிளிங்கென் இந்தியா-பாகிஸ்தான் உறவுக்கு 'ஆக்கபூர்வமான' அழைப்பு விடுத்தார்.
இஸ்லாமாபாத் முழுவதுமாக சீனாவைச் சார்ந்து இருக்கக் கூடாது என்ற நோக்கில், பாகிஸ்தான் மற்றும் அதன் இராணுவத்துடனான அதன் நீண்டகால உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒப்பீட்டளவில் மிதமான அமெரிக்க முயற்சிகளால், புது தில்லி அல்லது வாஷிங்டனின் வளர்ந்து வரும் கூட்டாண்மை பாதிக்கப்பட போவதில்லை. புது தில்லியின் பின் தள்ளும் வலிமை சந்தேகத்திற்கு இடமின்றி, குறைந்த பட்சம், வாஷிங்டன் பாகிஸ்தானுடனான நல்லிணக்கத்தைப் பயன்படுத்தி, ரஷ்யாவிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளுமாறு புது தில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் வழிமுறையாகப் பயன்படுத்துகிறது என்று அது நம்புவதில் தான் உள்ளது. முக்கியமாக பாகிஸ்தான் சமீபத்தில் உக்ரேனுக்கு பீரங்கி மற்றும் பிற வெடிமருந்துகளை அனுப்பத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரேனில் நடக்கும் போர், இந்திய வெளியுறவுக் கொள்கை மற்றும் புவிசார் அரசியல் மூலோபாயத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக அது உலக புவிசார் அரசியலில் எப்போதும் விரிவடைந்து வரும் தவறான கோடுகளை கடந்து செல்ல முயன்றது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் தொடங்கி, பின்னர் மோடி மற்றும் அவரது பிஜேபியின் கீழ், இந்திய ஆளும் வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் பிற்போக்குத்தனமான கூட்டாண்மையை அதன் புவிசார் அரசியல் மூலோபாயத்தின் அடிக்கல்லாக மாற்றியுள்ளது. ஆனால், புது டெல்லி சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் இன்னும் வெளிப்படையாக இணைந்தாலும், அது அதன் நீண்டகால மூலோபாய பங்காளியான ரஷ்யாவுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறது, பல காரணங்களுக்காக அவ்வாறு செய்து வருகிறது. ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளின் மிகப்பெரிய விநியோகஸ்தராக ரஷ்யா உள்ளது. அது அமெரிக்காவைப் போல் அல்லாமல், பல்வேறு கூட்டு முயற்சிகள் மூலம் இந்தியாவுக்கு இராணுவ தொழில்நுட்பத்தை மாற்ற தயாராக உள்ளது. இந்தியாவின் அணுசக்தி திட்டத்திற்கு ரஷ்யாவும் முக்கிய ஆதரவை வழங்கியுள்ளது. இறுதியாக, இந்திய ஸ்தாபனமானது அதன் 'எல்லா காலநிலை நண்பன்' ஆக இருக்கும் ரஷ்யாவைப் போல் அல்லாமல், வாஷிங்டன் இந்தியாவை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வருகிறது மற்றும் அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் ஆதரவை முழுமையாகச் சார்ந்திருப்பதன் மூலம் அதன் 'மூலோபாய சுயாட்சியை' பூஜ்யமாகக் குறைக்கும் நோக்கத்தில் உள்ளது என்பதையும் அறிந்துள்ளது.
இந்தியா மீது தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்க அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், புதுடெல்லி 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ரஷ்ய தயாரிப்பான S-400 ட்ரையம்ஃப் ஏர் டிஃபென்ஸ் ஏவுகணை பேட்டரிகளை வாங்கி, நிறுத்தியுள்ளது, அது உலகின் அதிநவீன நீண்ட தூர தரையிலிருந்து வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மிக சமீபத்தில், உக்ரேன் போருக்குப் பிறகு, ரஷ்யா மீதான அமெரிக்கத் தடைகளை இந்தியா புறக்கணித்தது மற்றும் அதன் எண்ணெய் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக மாறியது. போர் மற்றும் கோவிட்-19 பெரும் தொற்றுநோயால் தீவிரமடைந்த பூகோள எண்ணெய் விலை உயர்வு மற்றும் பூகோள அளவிலான பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை எதிர்கொள்ள இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப் பெருமளவிலான எண்ணெய் விலை தள்ளுபடிகளை சாதகமாக்கி கொண்டது.
அதே நேரத்தில், புதுடெல்லி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளை சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறது. சில வழிகளில் ரஷ்யாவிடம் இருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டு, ரஷ்யாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க மற்ற நாடுகளில் இருந்து இராணுவ உபகரணங்களைப் பெறுவது உட்பட. அமெரிக்க வெளியுறவு விவகார இதழின்படி, ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக இருந்தாலும் இந்தியாவின் ஆயுதக் களஞ்சியத்தில் ரஷ்ய ஆயுதங்களின் பங்கு கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, இந்திய விமானப்படைக்கு 21 புதிய MiG-29 போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் உட்பட, மாஸ்கோவில் இருந்து அதிக இராணுவ கொள்முதல் செய்வதற்கான திட்டங்களை புது டெல்லி ஒத்திவைத்தது.
எவ்வாறாயினும், வாஷிங்டன் திருப்தி அடையவில்லை, மேலும் ரஷ்யாவுடனான இந்தியாவின் கூட்டாண்மையை சீர்குலைக்க மற்றும் இறுதியில் உடைக்க ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்ளும், ஏனெனில் அதன் முக்கிய மூலோபாய அச்சுறுத்தலாக அது அடையாளம் கண்டுள்ள சீனாவிற்கு எதிராக அதன் கரத்தை வலுப்படுத்துவதற்கு ரஷ்யாவை அடிபணிய வைப்பதை அது முக்கியமாகக் கருதுகிறது.
அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ரஷ்யாவுடனான தங்கள் போரை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும், வாஷிங்டன் சீனாவுடன் பதட்டங்களை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும், இந்தியாவின் ஆபத்தான புவிசார் அரசியல் சமநிலைப்படுத்தும் நடவடிக்கை மேலும் மேலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகி வருகிறது.
மேலும் படிக்க
- சிறப்பு குவாட் உச்சி மாநாட்டில் உக்ரேன் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யாவை கண்டிக்க இந்தியா மறுக்கிறது
- ரஷ்யாவிற்கு எதிரான போர் உந்துதலுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது
- ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா-நேட்டோவின் போர் அச்சுறுத்தல்கள் தெற்காசியாவில் புவிசார் அரசியல் நெருக்கடியை அதிகரித்துள்ளன