முன்னோக்கு

டாரியா டுகினாவின் படுகொலையும், உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போரும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சனிக்கிழமை, ரஷ்ய தேசியவாத வெகுஜன புத்திஜீவி அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா, ஒரு கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார், அந்தக் கார் வெடிகுண்டு தாக்குதல் ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு மேற்கே ஒரு நெடுஞ்சாலையில் அவரது டொயோட்டா லேண்ட் குரூஸரை வெடித்துச் சிதறடித்தது.

அவரது மகளைக் கொன்ற அந்தக் குண்டு வெடிப்பு டுகினை இலக்கில் வைத்திருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் நம்புகிறார்கள் என்று ரஷ்ய செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டன. அவர் மகளும் அவரும் ஒரே காரில் பயணிக்கத் திட்டமிட்டு இருந்தார்கள், கடைசி நிமிடத்தில் வாகனங்கள் மாற்றப்பட்டதாக பிபிசி குறிப்பிட்டது.

அந்த தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரங்களுக்குள், அமெரிக்க ஊடகங்கள், உக்ரேனில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போருக்கும் இந்தப் படுகொலைக்கும் தொடர்பு இருப்பதைக் குறித்த வெளிப்படையான முடிவை மறுக்க விரைந்தன.

A screenshot of the August 17, 2022 New York Times article, 'Behind Enemy Lines, Ukrainians Tell Russians ‘You Are Never Safe’'

நியூ யோர்க் டைம்ஸ், 'இந்தத் தாக்குதலுக்கும் உக்ரேன் போருக்கும் தொடர்புள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என்று அதன் வாசகர்களுக்கு உறுதியளிக்க விரைந்தது. என்ன ஓர் அபத்தமான பொய்! இந்தப் படுகொலை உக்ரேனிய இரகசிய பொலிஸ் மற்றும் அவர்களின் சிஐஏ கையாள்களின் துர்நாற்றத்தைக் கொண்டுள்ளது.

வரலாற்று ஆதாரங்களும் சமகால அபிவிருத்திகளின் தர்க்கமும் இரண்டுமே, டுகினாவின் படுகொலை ஒரு பரந்த போரைத் தூண்டுவதற்காக, வாஷிங்டன் கைரேகைகளைத் தாங்கிய, கணக்கிடப்பட்ட ஓர் அரசியல் குற்றம் என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கு இட்டுச் செல்கிறது.

இத்தகைய ஒரு சூழலில் வாஷிங்டனின் தலையீடு நம்புவதற்குரியது மட்டுமல்ல; இது உள்ளபடியே அரசியல் கருதுகோளாக அமைகிறது, இது பொய் என்று நிரூபிக்கப்பட்டால் ஒழிய உண்மை என்றே ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த வரலாறும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளால் தூண்டப்பட்ட படுகொலைகள் மற்றும் போர்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

அந்தப் படுகொலைக்கு நான்கு நாட்களுக்கு முன்னர், உக்ரேனிய இரகசியப் படைகள் பயன்படுத்தும் படுகொலை முறைகள் மற்றும் கார் குண்டு வெடிப்பு முறைகளைக் குறித்து டைம்ஸ் உற்சாகமாக விவரித்திருந்தது. 'எதிரி எல்லைகளுக்குப் பின்னால், 'நீங்கள் ஒரு போதும் பாதுகாப்பாக இல்லை' என்று உக்ரேனியர்கள் ரஷ்யர்களுக்கு கூறுகிறார்கள்' என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், குண்டு வெடிப்பு ஏற்படுத்துபவர்கள் மற்றும் 'படுகொலை அதிகாரிகளை' நிறுத்த உக்ரேனியர்கள் எவ்வாறு ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவுவார்கள் என்பதை அப்பத்திரிகை விவரித்திருந்தது.

ஒரு வலதுசாரி உக்ரேனிய செயற்பாட்டாளர் 'ஒரு டேப்பைக் கொண்டு அதுவும் பசை உள்ள பக்கத்தை வெளிப்புறமாக சுற்றி ஒரு சக்கரத்தில்' எப்படி கார் வெடிகுண்டை வைத்தார் என்று டைம்ஸ் விவரமாக விவரித்தது. வேறொரு தருணத்தில், அவர்கள் 'என்ஜின் ஸ்டார்ட் செய்த உடனே வெடிக்கும் வகையில், ஓட்டுனர் ஆசனத்திற்கு அடியில் ஒரு குண்டைப் பொருத்தினார்கள்.” அத்தகைய படுகொலைகள் வாஷிங்டனின் விருப்பத்திற்குரியதாக இருந்தன, மேலும் இந்தக் குண்டு வெடிப்புகள் 'இந்த போரில் உள்ளூர் ஆதார நபர்களை உக்ரேன் வெற்றிகரமாக அணிதிரட்டி வருகிறது என்பதை மேற்கத்திய நன்கொடையாளர்களுக்குச் சமிக்ஞை செய்வதற்காக' வடிவமைக்கப்பட்டதாக டைம்ஸ் குறிப்பிட்டது.

அமெரிக்க ஆதரவைப் பாதிக்கக் கூடிய எதையும் உக்ரேன் செய்யாது. உக்ரேன் மோதல் சிஐஏ ஆல் நடத்தப்படும் மற்றும் பென்டகனால் நிதியளிக்கப்படும் ஒரு போராகும். டாரியா டுகினா கொல்லப்பட்ட இந்த மாஸ்கோ கார் குண்டு வெடிப்பு சம்பவம், இதில் வாஷிங்டன் என்ன பாத்திரம் வகித்தது? என்ற கேள்வியை எழுப்புகிறது.

வாஷிங்டன் ஆத்திரமூட்டல் மாற்றி ஆத்திரமூட்டலை ஏற்படுத்தி உள்ளது, ஒவ்வொன்றும் போரை விரிவுபடுத்துவதறத்காகக் கணக்கிடப்பட்டு இருந்தன. கிரிமிய தீபகற்பத்தின் இராணுவத் தளம் மீது உக்ரேன் நடத்திய பல தாக்குதல்களுக்குப் பின்னர், உலக அரங்கில் இந்தக் கார் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அந்தத் தாக்குதல்கள் வாஷிங்டன் அளித்த ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்டன என்பதோடு பைடென் நிர்வாகம் அவற்றை வரவேற்றிருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் போர் வெடித்ததில் இருந்து வாஷிங்டன் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நேரடி இராணுவ உதவியையும் மற்றொரு 40 பில்லியன் டாலர் உதவிகளையும் உக்ரேனுக்குள் பாய்ச்சி உள்ளது. அது உக்ரேனிய இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளை ஆயுதம் ஏந்தச் செய்திருப்பதுடன், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்காக இலக்கு வைக்கும் தகவல்களை வழங்கி உள்ளது. கிரிமியா மீதான தாக்குதல்கள் மிகை மிஞ்சியது என்பதோடு இந்தக் கொள்கையின் விரிவாக்கமாகும்.

கிரிமியா மீதான தாக்குதல்களைக் குறைத்துக் காட்டியும், மோதலின் பரவலைக் கட்டுப்படுத்த முயன்றும், உக்ரேன் மீது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போரை நடத்தியும் புட்டின் விடையிறுத்தார்.

உக்ரேனுக்கு இந்தப் போர் சிறப்பாக இல்லை என்பது வெளிப்படையாக உள்ளது. வாஷிங்டன் அளப்பரிய பணத்தையும் ஆயுதங்களையும் இந்த மோதலுக்குள் பாய்ச்சிய போதினும், தெற்கு மற்றும் கிழக்கு உக்ரேனில் ரஷ்யாவின் பிடியில் உள்ள பகுதிகளைப் பெரும்பாலும் அசைக்க முடிவில்லை என்று தெரிகிறது.

ரஷ்யா உடனான மோதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் யுரேஷிய பெருநிலத்தின் வரைபடத்தைத் திருத்தி எழுதுவதற்குக் குறைவானதில்லை. வாஷிங்டன் ரஷ்யாவின் பரந்த அரசியல் பெரும்பகுதியில் இருந்து — ஸ்டெப்பெஸில் இருந்து டாய்கா வரையில் — அளப்பரிய மூலப் பொருட்களை அபகரிப்பதற்காக அப்பகுதியை நிர்வகிக்கத் தக்க பினாமி அரசுகளாக உடைக்க விரும்புகிறது.

ஒரு பினாமி போர் மூலமாக இந்த இலக்குகளை அடைய முடியா விட்டால், பின் நேரடி மோதலைத் தூண்ட வேண்டும்.

உக்ரேன் மிகப் பெரியளவில் தாங்கொணா இழப்பைச் சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் போர் நோக்கங்களை அடைவதற்கு, ஆயுதங்கள் மட்டுமல்ல, நிஜமான சண்டையில் சிப்பாய்களுடன் சேர்ந்து அதிக நேட்டோ தலையீடும் தேவைப்படுகிறது.

இந்தச் சமீபத்திய படுகொலை அத்துடன் கிரிமியா மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ரஷ்யாவின் எந்தவொரு குறிப்பிடத்தக்கப் பதிலடியும் உடனடியாக 'தூண்டுதல் இன்றி' நடத்தப்பட்டதாக கண்டிக்கப்படும் என்பதோடு, இந்தப் போரில் நேட்டோ இராணுவத்தினர் இன்னும் அதிகமாக மூடிமறைப்பின்றி நேரடியாக தலையிடுவதற்கு அது ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தப்படும்.

இந்த மோதல் விரிவாவதற்குப் புட்டினைக் காரணமாக்கி, அவரைப் பதிலடி கொடுக்க நிர்பந்திப்பதற்கு இதை விட வேறு என்ன சிறந்த வழிவகைகள் இருக்க முடியும்? ஆத்திரமூட்டல் மூலம் போரை விரிவாக்குவதே அமெரிக்காவின் மூலோபாயம்.

இந்தப் பொறுப்பற்ற கணக்கீடு தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இயக்குகிறது. தற்போதைய அமெரிக்க பொறுப்புறுதிகள் மற்றும் மூலோபாய நோக்கங்களை, இந்த மோதலை விரிவாக்குவதன் மூலமாக மட்டுமே காப்பாற்றி வைக்க முடியும், இதற்கு ஆத்திரமூட்டல் அவசியப்படுகிறது. ஆத்திரமூட்டல், வாஷிங்டனின் சர்வதேச அணுகுமுறையின் அடிப்படை கொள்கையாக மாறி உள்ளது. இந்த அடிப்படைக் கோட்பாடு தான், உக்ரேனிய இரகசியப் படைகளின் கார் குண்டு வெடிப்புச் செய்ததைப் போலவே, சீனா உடனான மோதலுக்கு அழுத்தம் அளிக்க, தைவானுக்கான நான்சி பெலோசியின் விஜயத்தின் அடியிலும் இருந்தது.

ரஷ்ய இராணுவத்தில் மிகவும் கடுமையான மற்றும் வெறித்தனமான அடுக்குகளுடன் தொடர்புடைய டுகின் மற்றும் அவர் மகளை இலக்கில் வைத்தமை, உக்ரேன் போரை அமெரிக்கா மற்றும் நேட்டோ உடனான பகிரங்க மோதலாக விரிவாக்க புட்டின் நிர்வாகம் மீதான அழுத்தத்தைத் தீவிரப்படுத்தும். ரஷ்ய சமூகத்தை 'இயல்பான உணர்வில் வைத்திருக்கும்' முயற்சியில் இந்தப் போரைத் தணித்து வைத்திருக்க புட்டின் முயற்சி செய்தார் என்று நியூ யோர்க் டைம்ஸ் எழுதிய போது, அது இந்த நோக்கத்தையே சுட்டிக் காட்டியது. இதை இந்தப் படுகொலை தலைகீழாக மாற்ற அச்சுறுத்துகிறது என்று அது எழுதியது.

இந்தப் படுகொலைக்கு விடையிறுத்து சனிக்கிழமை எந்த அறிக்கையும் விடுக்காமல் கிரெம்ளின் மவுனமாக இருந்தது. முக்கிய இராணுவப் பிரமுகர்களும் வலதுசாரி ஊடகப் பண்டிதர்களும் இந்தப் படுகொலைக்காக பகிரங்கமாக உக்ரேன் மீது பழி சுமத்தியதுடன், பதிலடி கொடுக்க அழைப்பு விடுத்தனர். டுகின் பதிப்பாசிரியராக உள்ள தேசியவாத வலையமைப்பான Tsargrad TV, ஏவுகணைத் தாக்குதல்களால் 'கியேவ் நடுக்கும்' என்று அறிவித்தது.

நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது, 'திருமதி. டுகினாவின் மரணத்திற்கு திரு. புட்டின் எப்படி விடையிறுப்பார் அல்லது விடையிறுப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பழி வாங்குவதற்கான அழைப்புகள், உக்ரேனியப் படையெடுப்பை தீவிரமாக ஆதரிப்பவர்கள் —அதுவும் குறிப்பாக ரஷ்யத் தலைவர் போரைத் தீவிரப்படுத்துவதைத் தவிர்க்க முயலுகையில்— எப்படி இப்போது கிரெம்ளினுடன் உடன்பாடில்லா கூட்டாளிகளாக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டியது.”

உக்ரேன் மீதான போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரையில், அமெரிக்கா ஒரு எதிர்வினையைத் தூண்டும் முயற்சியில், ஒவ்வொரு தருணத்திலும் இந்த உலகப் போர் நெருப்பில் எண்ணெய் வார்க்க முயன்றுள்ளது. அத்தகைய ஒரு எதிர்வினை, உண்மையில், கணக்கிட இயலா விளைவுகளோடு ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Loading