உக்ரேனில் "இனப்படுகொலை" பற்றிய பைடெனின் கூற்றுகள்: ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு ஒரு சாக்குப்போக்கு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யா உக்ரேனில் இனப்படுகொலை செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் செவ்வாய்கிழமை கூறினார். அயோவாவில் செய்தியாளர்களிடம் தொடர்ந்து அவர் அளித்த அறிக்கையில், 'உக்ரேனியராக இருக்கும் எண்ணத்தை கூட புட்டின் துடைத்தழிக்க முயற்சி வருகிறார் என்பது மிகவும் தெளிவாகி இருப்பதால் தான், நான் அதை இனப்படுகொலை என்று குறிப்பிட்டேன்,' என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என்ற பைடெனின் குற்றச்சாட்டு, பொதுக் கருத்தை விஷமாக்கி, ரஷ்யா மீதான மக்கள் வெறுப்பைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு ஒரு நாள் கழித்து வெளியான வெள்ளை மாளிகையின் அறிவிப்புக்கு இது ஒரு வெளிப்படையான சாக்குப்போக்காக இருந்தது, இன்று வரையிலான போரில் அமெரிக்க இராணுவ தலையீட்டின் மிகப் பெரிய தீவிரப்பாடாக, உக்ரேனுக்கு அமெரிக்கா தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக் கணக்கான கவச வாகனங்களை அனுப்பும் என்று அந்த அறிக்கை அறிவித்திருந்தது.

President Joe Biden speaks to the media before boarding Air Force One at Des Moines International Airport, in Des Moines Iowa, Tuesday, April 12, 2022, en route to Washington. (AP Photo/Carolyn Kaster)

உக்ரேனுக்கு அனுப்பப்படும் ஆயுதங்களில், 'Switchblades' எனப்படும் 300 'kamikaze ட்ரோன்கள்', 300 கவச வாகனங்கள் மற்றும் 11 Mi-17 ஹெலிகாப்டர்கள், அத்துடன் கண்ணிவெடிகள், ரேடார்கள், ஆயிரக்கணக்கான டாங்கி தகர்ப்பு ஆயுதங்கள் மற்றும் அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவையும் அடங்கும்.

இந்த நடவடிக்கையை அறிவித்து பென்டகன் குறிப்பிடுகையில், 'பைடென் நிர்வாகம் வந்ததில் இருந்து உக்ரேனுக்கு அமெரிக்கா இப்போது 3.2 பில்லியன் டாலருக்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது,' என்று குறிப்பிட்டது. கடந்த ஆறு வாரங்களில் வழங்கப்பட்ட 2.6 பில்லியன் டாலர் இதில் உள்ளடங்கும்.

புதன்கிழமை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியிடம், 'உக்ரேனில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது என்பது அமெரிக்க கொள்கையா அல்லது அது ஜனாதிபதியின் தனிப்பட்ட நம்பிக்கையா?' என்று கேட்கப்பட்டது. இதற்கு சாகி பதிலளிக்கையில், 'இன்று நாங்கள் வழங்கியுள்ள மிகப்பெரும் இராணுவ உதவிப்பொதியே எங்கள் நோக்கத்தை நிரூபிக்கிறது,” என்றார்.

இந்த பதில் துல்லியமாக எடுத்துக்காட்டப்பட்டு வருகிறது, ஏனெனில் அது யதார்த்தத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. வெள்ளை மாளிகையின் அறிக்கைகளில், உக்ரேனில் முன்னோடியில்லாத வகையில் ஆயுதங்களைக் குவிப்பதே, ரஷ்யா 'இனப்படுகொலை' செய்து வருகிறது என்று அமெரிக்கா எந்தளவுக்கு நம்புகிறது என்பதற்கான ஒரு சான்றாகும்.

யதார்த்தமோ இதற்கு நேர்மாறாக உள்ளது: ரஷ்யாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இராணுவ விரிவாக்கக் கொள்கைக்கான பொய்யான நியாயப்படுத்தலாகும். முதலாவதாக, போர்த் திட்டங்கள் தீட்டப்பட்டன; பின்னர் அவற்றை நியாயப்படுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

யூகோஸ்லாவியா, ஈராக் மற்றும் லிபியாவுக்கு எதிராக சுமத்தப்பட்ட இதேபோன்ற 'இனப்படுகொலை' குற்றச்சாட்டுகளைப் போலவே, போருக்கான மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான இலக்கில் அமெரிக்கா ரஷ்யாவை வைத்துள்ளது என்ற சேதி ரஷ்ய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

'இனப்படுகொலை' என்ற வார்த்தையின் வரலாற்று தோற்றுவாய் குறித்து உலக சோசலிச வலைத் தளம் பிரத்யேகமாக எழுதும். நாஜி ஜேர்மனி 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களை திட்டமிட்டு நிர்மூலமாக்கியதை விவரிப்பதற்காக உருவான இந்த வார்த்தையை, உக்ரேனில் நடந்த சம்பவங்களை விவரிக்க பயன்படுத்துவது ஓர் அரசியல் அபத்தம் என்று மட்டும் சொன்னால் போதுமானதாக இருக்காது.

ஏப்ரல் 3 வரையில், போரின் போது உக்ரேனில் 1,842 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. இதற்கு மாறாக, உக்ரேனில் நடந்த யூத இனப்படுகொலையின் போது, நாஜி ஆட்சியால் 1.2 இல் இருந்து 1.6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாக இருந்தாலும் கூட, ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் பாரிய இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அவை ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன, அமெரிக்க படையெடுப்பு 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்தது மற்றும் அங்கே அமெரிக்க துருப்புக்கள் சித்திரவதை, படுகொலை மற்றும் எண்ணற்ற இன்னும் பல அட்டூழியங்களில் ஈடுபட்ட காட்சிகள் படமெடுக்கப்பட்டன.

போரின் பேரழிவுகரமான தீவிரப்பாட்டுக்கு மக்கள் ஆதரவை உருவாக்க அமெரிக்கா உணர்வுபூர்வமான 'இனப்படுகொலை' என்ற வார்த்தையைப் பயன்படுத்த முயன்று வருகிறது.

அமெரிக்காவில் அடிப்படை நுகர்வுப் பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்து வருவது 'புட்டினின் விலை உயர்வு' என்று அபத்தமாக கூறப்படுவதே இதுபோன்ற பரிசீலனைகளை அடிகோடிட்டுக் காட்டுகின்றன. போருக்கு முன்னரே கூர்மையாக அதிகரிக்கத் தொடங்கி இந்த பணவீக்கமானது பணக்காரர்களுக்குப் பிணை வழங்க ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் அச்சடிக்கப்பட்டதன் விளைவு என்ற உண்மையை அமெரிக்க மக்கள் கண்டு கொள்ளக் கூடாதென பைடென் விரும்பலாம்.

ஓர் உலகளாவிய பஞ்சம் ஏற்பட அச்சுறுத்தும் வகையில் கூர்மையான உணவு விலை உயர்வுக்கு இட்டுச் சென்றுள்ள இந்த போரின் பாதிப்பைப் பொறுத்த வரையில், அதை முடிவுக்குக் கொண்டு வரும் எந்தவொரு பேச்சுவார்த்தைத் தீர்வையும் தடுக்க செயலாற்றிய அமெரிக்காவும் நேட்டோ அதிகாரங்களுமே அதற்கு காரணமாகும்.

அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் அரசு அதிகாரத்தின் எல்லா அமைப்புகள் உட்பட, இந்த பிரச்சார நடவடிக்கை ஊடுருவி படர்ந்து பரவி உள்ளது. உக்ரேனிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களும், அசோவ் பட்டாலியன் போன்ற பகிரங்கமான பாசிசவாத போராளிகள் குழுக்களும் கூட கூறும் குற்றச்சாட்டுக்கள் ரஷ்ய அதிகாரிகளின் அறிக்கைகளுடன் முரண்பட்டாலும் கூட மறுக்க முடியாத உண்மையாக கையாளப்படுகின்றன, அதேவேளையில் ரஷ்ய அதிகாரிகளின் அறிக்கைகளோ மறுக்க முடியாத பொய்யாக கையாளப்படுகின்றன.

'இனப்படுகொலை' அறிவிப்பை எந்த நடவடிக்கைகள் நியாயப்படுத்தின என்பதை பைடென் சுட்டிக்காட்டவில்லை என்றாலும், அவரது அறிவிப்புக்கு முன்னதாக கியேவுக்கு வெளியே புச்சாவில் அப்பாவி மக்களை ரஷ்யா படுகொலை செய்ததாகவும், கிராமடோர்ஸ்க் இரயில் நிலையத்தில் அப்பாவி பொதுமக்கள் மீதான ஓர் ஏவுகணை தாக்குதலையும் குற்றஞ்சாட்டி ஒரு வார காலமாக ஊடகப் பிரச்சாரம் நீடித்திருந்தது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்த தாக்குதல்களுக்கு உக்ரேனியப் படைகள் அல்ல ரஷ்யா தான் பொறுப்பு என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இருக்கவில்லை. இருப்பினும் அவ்விரு நடவடிக்கைகளும் கிரெம்ளின் அங்கீகரித்த திட்டமிட்ட கொலை நடவடிக்கைகள் என்றும், ரஷ்யாவின் மறுப்புகள் பொய்கள் என்றும் அமெரிக்க ஊடகங்கள் திட்டவட்டமாக அறிவிக்கின்றன.

எண்ணற்ற உதாரணங்களில் ஒன்றை மேற்கோள் காட்டுவதானால், செவ்வாய்கிழமை நியூ யோர்க் டைம்ஸின் ஒரு செய்தி குறிப்பிடுகையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 'கியேவ் புறநகர் மீதான ரஷ்ய அட்டூழியங்களின் ஆதாரங்களை 'போலி' என்று பொய்யாக குறிப்பிட்டார்' என்று குறிப்பிட்டது. உக்ரேனிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும், டைம்ஸ் எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறது?

அமெரிக்கா அதன் போர் நோக்கங்களை விரிவாக்கி வருகிறது. சமீபத்தில் ஆயுதங்கள் அனுப்புவது குறித்த அதன் அறிவிப்பைக் குறித்து பைடென் கருத்துரைக்கையில், “உக்ரேனைக் கைப்பற்றி கட்டுப்பாட்டில் எடுக்கும் புட்டினின் ஆரம்ப போர் நோக்கங்களில் அவர் தோல்வியடைவதை உறுதிப்படுத்த … ஆயுதங்களைச் சீராக அனுப்பியதன் மூலம், அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் உதவி உள்ளன. இப்போது நாம் ஓய்வெடுக்க முடியாது,” என்றார்.

உக்ரேனில் ஒரு நீடித்த மோதலின் மூலம் வெறுமனே 'ரஷ்ய வெள்ளையினத்தவரை இரத்தம் சிந்த வைப்பதற்கு' பதிலாக, அமெரிக்கா ஒரு தீர்க்கமான மூலோபாய வெற்றியையும், இந்த போரை ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவ அனுமதித்து, ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை சாத்தியமாக்க வழிவகுக்கும் என்றும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

உக்ரேன் ஒரு பினாமி நாடாக ரஷ்யாவுடன் ஏற்கனவே நடைமுறையளவில் போர் நிலையில் உள்ளது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு நேரடி இராணுவ மோதலுக்குத் திட்டமிட்டு வரும் வெள்ளை மாளிகைக்குள் ஒரு 'புலி அணி' (tiger team) இருப்பதையும் ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன. கடந்த மாதம் வோர்சாவில் பேசிய பைடென், அமெரிக்கா 'வழி நடத்தும்' ஒரு 'புதிய உலக ஒழுங்கின்' தொடக்கமாக இந்தப் போர் இருக்கும் என்று அறிவித்தார்.

போருக்கான பைடென் நிர்வாகத்தின் தயாரிப்புகள் குழப்பமான தடுமாற்றமாக குணாம்சப்படுகின்றன. அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொண்டிருக்கும் பேரழிவுகரமான சமூக நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கு போர் தான் ஒரே வழி என்று வெள்ளை மாளிகை நம்புகிறது. யதார்த்தத்தில், போரானது நெருக்கடியை இன்னும் தீவிரமாக்கி தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பை இன்னும் வலுப்படுத்த மட்டுமே செய்யும்.

Loading