முன்னோக்கு

பைடெனின் புதிய "என்றென்றும் தொடரும் போர்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போலந்தின் வார்சோவில் ஆக்ரோஷமான கோபத்துடன் ரஷ்யாவுடனான மோதலுக்கு நேட்டோவை அணிதிரட்டுவதற்கான அவரின் ஒரு வார கால ஐரோப்பிய பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் சனிக்கிழமை நிறைவு செய்தார். பைடெனின் உரையைக் காட்டிய ஊடகங்கள் அதன் இறுதி பத்தியில் வெளிப்படையாகவே முன்யோசனையின்றி கூறப்பட்ட கருத்தில் கவனத்தைக் குவித்திருந்தன, அதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் 'அதிகாரத்தில் இருக்க முடியாது' என அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஆனால் அந்த உரையின் இன்னும் முக்கியமான அம்சம் ஒன்று பெரும்பாலும் விவாதிக்கப்படாமல் போய்விட்டது: 'தசாப்த காலம் நீளும்' போருக்கு அமெரிக்காவின் 'உறுதிப்பாட்டை' பைடென் அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி ஜோ பைடென் வார்சோவில் மார்ச் 26, 2022 சனிக்கிழமை உரையாற்றுகிறார் (AP Photo/Evan Vucci)

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்து வரும் இந்த மிகப் பெரிய தரைவழிப் போரின் பின்புலத்தில், பைடென் அறிவித்தார், “நீண்ட காலத்திற்கு நீடிக்க இருக்கும் இந்த சண்டையில் நாமும் இருப்பதற்கு இப்போது நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். நாம் இன்றும், நாளையும், நாளை மறுநாளும், இன்னும் பல ஆண்டுகளுக்கும், பல தசாப்தங்களுக்கும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,” என்றார்.

பைடென் எந்த 'சண்டைக்கு' அமெரிக்காவைப் பொறுப்பாக்குகிறார்?

ஒன்பது மாதங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக பைடென் அறிவிக்கையில், “நாம் நீண்ட காலமாக போரில் ஈடுபட்டு வரும் தேசமாக இருக்கிறோம். உங்களுக்கு இன்று 20 வயதாக இருந்தால், அமெரிக்கா அமைதியாக இருந்த காலத்தை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.” மேலும் அவர், 'இது என்றென்றும் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம்,' என அறிவித்தார்.

இப்போதோ, அமெரிக்க மக்களை ஒரு புதிய நிரந்தரப் போருக்கு பைடென் பொறுப்பாக்குகிறார் — இதற்காக மிகப் பெரிய 'விலை' கொடுக்க வேண்டியிருக்கும் என்பதோடு 'எளிதானதாக இருக்காது' என்றவர் கூறினார்.

பைடென் அவரது உரையில், அமெரிக்கா தொடங்கும் இந்த தசாப்த காலம் நீளும் 'சண்டை' 'சுதந்திரத்திற்கான மாபெரும் போர்: ஜனநாயகத்திற்கும் எதேச்சதிகாரத்திற்கும் இடையே, சுதந்திரத்திற்கும் அடக்குமுறைக்கும் இடையே, விதிகள் அடிப்படையிலான ஒழுங்குக்கும் மிருகத்தனமான சக்தியால் ஆளப்படும் ஓர் ஒழுங்குக்கும் இடையிலான ஒரு போர்' என்று அறிவித்தார்.

'ஜனநாயகத்திற்கான' போராட்டத்தை தொடங்க பைடென் ஒரு விசித்திரமான இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். 'நீதித்துறை, பொதுமக்கள் சமூகம் மற்றும் ஊடகங்களின் மீது கூடுதலாக கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள அதே வேளையில், அடிப்படை மனித உரிமைகளை வெட்டி, புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற சிறுபான்மை குழுக்களை பலிக்கடா ஆக்குவதன் மூலம் பிளவுகளைத் தூண்டுகிறது' என இந்த ஆண்டு, பேர்லினை மையமாக கொண்ட ஐரோப்பாவுக்கான மக்கள் உரிமைகள் மையம் போலாந்தைக் குற்றஞ்சாட்டியது.

போலந்து அரசாங்கம், அதிதீவிர வலதுசாரி, பேரினவாத, யூத-விரோத மற்றும் சர்வாதிகார PiS கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. பைடெனின் போர் நாடும் தர்மயுத்தத்தின் போது அவரின் நிலையான துணையாக இருந்த ஜனாதிபதி டுடா, குடும்பக் கட்டுப்பாட்டின் ஒரு வடிவமாக கருக்கலைப்பை முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஓர் அரசாங்கத்திற்குத் தலைமை வகிக்கிறது, அது LGBT சமூகத்தை வழக்கில் இழுத்துள்ளதுடன், மற்றும் யூத இன ஒழிப்பில் போலந்து உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்துவதை குற்றகரமாக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைமை வகிக்கிறது.

அமெரிக்க வரலாற்றில் ஜனநாயக உரிமைகளின் மிகக் கடுமையான மீறல்களைக் கண்ட 'பயங்கரவாதத்தின் மீதான போர்' போலவே, பைடெனின் இந்த புதிய தசாப்த கால போரும் 'ஜனநாயகத்தை' யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஒரு விஷயமாக கையாள்கிறது.

ரஷ்யாவின் எல்லையில் நேட்டோ பினாமியை ஆயுதமேந்த செய்வதன் மூலம் ரஷ்யாவின் படையெடுப்பை அமெரிக்கா எந்தளவுக்குத் தூண்டிவிட்டது என்பதை பைடென் அவரே அவரது உரையில் தெளிவுபடுத்தினார்.

“இந்த படையெடுப்புக்கு முந்தைய ஆண்டுகளில், நாங்கள், அமெரிக்கா, அவர்கள் எல்லையைக் கடந்து வரும் முன்னரே, வான்வழி தகர்ப்பு மற்றும் கவச வாகன தகர்ப்பு உபகரணங்கள் உட்பட, உக்ரேனுக்கு 650 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அனுப்பியுள்ளோம். படையெடுப்புக்குப் பின்னர், அமெரிக்கா மற்றொரு 1.35 பில்லியன் டாலர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கியுள்ளது.”

கடந்த வாரத்தில் பைடென் செய்த அனைத்தும் உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமிப் போரைத் தூண்ட நோக்கம் கொண்டிருந்தன. அவர் ரஷ்ய ஜனாதிபதியை கற்பனைக்குத் தோன்றிய ஒவ்வொரு பெயரையும் இட்டு அழைத்தார், 'கசாப்புக் கடைக்காரர்' என்பது முதல் 'கொலைகார சர்வாதிகாரி', 'போர்க் குற்றவாளி' மற்றும் 'குண்டர்' என்பது வரையில். பைடென் உக்ரேனுக்குள் ஆயுதங்களைப் பாய்ச்சியதுடன் ரஷ்யாவின் எல்லைகளில் நிறுத்தப்பட்ட படைகளை இரட்டிப்பாக்கினார். பைனான்சியல் டைம்ஸின் எட்வார்ட் லூஸ் கருத்து தெரிவித்தது போல, 'அமெரிக்க தாராளவாதிகள் குறைந்தபட்சமாவது பழமைவாதிகளைப் போன்ற போர் வெறியர்களாக உள்ளனர்.”

போலந்தில் பைடெனின் பேச்சு, பெல்ஜியத்தின் புரூசெல்ஸில் நேட்டோ உச்சிமாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து வந்தது, அங்கே நேட்டோ கூட்டணியின் தலைவர்கள் மோதலை பெரியளவில் தீவிரப்படுத்துவதற்குத் திட்டம் தீட்டியிருந்தனர். அந்த உச்சி மாநாட்டில், நேட்டோ ரஷ்யாவின் எல்லையில் அதன் படைகளை இரட்டிப்பாக்குவதாக அறிவித்தது மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் ரஷ்யாவுடன் முழு அளவிலான போருக்கான அமெரிக்காவின் திட்டங்களைக் குறித்து விவரித்தது.

இந்த புதிய 'என்றென்றைக்குமான போரின்' உண்மையான காரணங்களை அமெரிக்க இராணுவ திட்ட வகுப்பாளர்களின் ஆவணங்களில் காணலாம்.

1991 இல், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு மத்தியில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், ஈராக்கிற்கு எதிரான அந்த வளைகுடாப் போர் அமெரிக்கா தலைமையிலான ஒரு 'புதிய உலக ஒழுங்கை' உருவாக்கும் என்று அறிவித்தார்.

அதற்கடுத்த ஆண்டு, பென்டகன் 'வொல்போவிட்ஸ் கோட்பாடு' (Wolfowitz Doctrine) என்று அழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு திட்டமிடல் வழிகாட்டலை வெளியிட்டது, அது அமெரிக்காவின் 'முதல் நோக்கமே, முன்னாள் சோவியத் ஒன்றிய பிரதேசத்திலோ அல்லது வேறு இடத்திலோ, சோவியத் ஒன்றியத்தால் முன்னர் முன்நிறுத்தப்பட்ட ஒழுங்கு மீது ஓர் அச்சுறுத்தலை முன்நிறுத்தும் ஒரு புதிய எதிரி மீள்எழுவதைத் தடுப்பதாகும்,” என அறிவித்தது.

ஈராக் மீதான முதல் படையெடுப்பால் தொடங்கப்பட்ட அமெரிக்க இராணுவவாதத்தின் வெளிப்பாட்டை அடுத்து, மூன்று தசாப்த காலம் நீடித்த போர், யூகோஸ்லாவியா மீது குண்டுவீச்சு மற்றும் துண்டாடுதல், ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் சீரழிவு, ஈராக் மீதான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு, லிபிய அரசாங்கத்தைத் தூக்கிவீசியமை மற்றும் சிரியாவில் பல ஆண்டுகளாக நீடித்த ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் பின்தொடர்ந்தன.

இப்போதோ, இந்தப் போர்கள் ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்காவின் ஒரு நேரடி மோதலாக மாற்றமடைந்து, கணக்கிட முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளன.

2018 தேசிய பாதுகாப்பு மூலோபாயம், ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்த்துப் போராடும் முயற்சிகளுக்காக மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ ஈடுபாடுகளின் முன்னெடுப்பை அறிவித்தது. “அமெரிக்க தேசிய பாதுகாப்பின் பிரதான அக்கறை இப்போது பயங்கரவாதம் அல்ல,' 'அரசுகளுக்கு இடையேயான மூலோபாய போட்டி,' ஆகும் என்று அது அறிவித்தது.

இந்த உள்ளடக்கத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து பைடென் படைகளைத் திரும்பப் பெற்றமை, இன்னும் பெரிய அளவிலான இராணுவ மோதல்களுக்கான தயாரிப்பில் படைகளை மீண்டும் நிலைநிறுத்துவதே தவிர வேறொன்றுமில்லை என்பது தெளிவாகிறது.

பைடெனின் கருத்தைத் தட்டிக்கழிப்பதற்கான வெள்ளை மாளிகையின் முயற்சிகளுக்கு மத்தியில், முன்யோசனையின்றி கூறப்பட்ட பைடெனின் அந்த கருத்து அந்த மொத்த உரையின் தவிர்க்க முடியாத தொகுப்புரையாக இருந்தது. பைடெனின் கருத்துக்கள், உண்மையான அமெரிக்கக் கொள்கையை தெளிவாகப் பிரதிபலிக்கின்றன, அதன் நோக்கம் ரஷ்யாவை இராணுவரீதியில் தனிமைப்படுத்தி பொருளாதாரரீதியில் சீரழித்து, அதன் அரசாங்கத்தை அகற்றி, அதை ஒரு கைப்பாவை அரசாக மாற்றும் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதாகும்.

பைடெனின் புதிய, தசாப்த காலத்திற்கான பொறுப்புறுதியைக் குறித்த பிரகடனம், ஐரோப்பாவுக்கு அவர் புறப்படுவதற்கு முன்னர், “அங்கே ஒரு புதிய உலக ஒழுங்கு ஏற்படுத்தப்பட உள்ளது, நாம் அதற்குத் தலைமை கொடுக்க வேண்டும்,” என்ற அவரின் பிரகடனத்திற்கு வெறும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் வருகிறது.

ஏழாண்டுகளுக்கு முன்னர், உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த், அவரின் ஒரு கால் நூற்றாண்டு கால போர்; உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைவு 1990-2016 என்ற நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

அமெரிக்கா தூண்டி விட்ட கடந்த கால் நூற்றாண்டு கால போர்கள் சங்கிலித் தொடர் போல ஒன்றோடொன்று இணைந்த நிகழ்வுகளாக ஆய்வு செய்யப்பட வேண்டும். உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைவின் மூலோபாய தர்க்கம் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் உள்ள நவகாலனித்துவ நடவடிக்கைகளுக்கும் அப்பால் நீள்கிறது. நடந்து கொண்டிருக்கும் பிராந்தியப் போர்கள், ரஷ்யா மற்றும் சீனாவுடன் அமெரிக்காவின் வேகமாக அதிகரித்து வரும் மோதலின் கூறுபாடு அம்சங்களாகும்.

இந்த வார நிகழ்வுகள் ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன. ரஷ்யா மற்றும் சீனாவுடனான 'வல்லரசு மோதலுக்கான' அமெரிக்காவின் திட்டங்கள், திட்டமிடும் கட்டத்தைக் கடந்து, நடைமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தூண்டிவிட்ட அமெரிக்கா, அணு ஆயுதமேந்திய எதிரிகளுக்கு எதிராக இராணுவ வழிமுறைகள் மூலம் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, பல தசாப்தங்களாக திட்டமிட்டு வந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாக்குப்போக்காக அதை பற்றிக் கொள்கிறது.

மனித குலத்தை அச்சுறுத்தும் பேரழிவிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி, போருக்கு மூலக் காரணமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ரஷ்ய, உக்ரேனிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கங்களை ஐக்கியப்படுத்தும் நோக்கில், போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

Loading