முன்னோக்கு

பிரிட்டனில் பாரிய வேலைநிறுத்த அலை, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டன் தற்போது பல தசாப்தங்களில் காணாத அளவிலான வேலைநிறுத்த அலைகளை கண்டுவருகிறது.

இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் (RMT) மற்றும் போக்குவரத்து சம்பளப் பணியாளர்கள் சங்கம் (TSSA) பிரதிநிதித்துவப்படுத்தும் 40,000க்கும் மேற்பட்ட இரயில் தொழிலாளர்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தேசிய இரயில் வேலைநிறுத்தங்களைத் தொடரவுள்ளனர். இலண்டன் நிலத்தடி மற்றும் புறநகர் இரயில்களில் பணிபுரியும் சுமார் 10,000 RMT உறுப்பினர்கள் வெள்ளியன்று வேலைநிறுத்தம் செய்வார்கள். அதே நேரத்தில் 1,600 இலண்டன் ஐக்கிய பேருந்து ஊழியர்களும் இரண்டு நாள் வெளிநடப்பு நடவடிக்கையை தொடங்குவார்கள்.

பிரித்தானிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையில், அனைத்து கொள்கலன் சரக்குகளில் பாதிக்கு பொறுப்பான Felixstowe துறைமுகத்தில் உள்ள 1,900 தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை எட்டு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குவார்கள். பிரிட்டனின் நான்காவது பெரிய துறைமுகமான லிவர்பூல் துறைமுகத்தில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்துள்ளனர்.

தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்கத்தில் உள்ள 115,000 Royal Mail தொழிலாளர்கள் ஆகஸ்ட் 26 மற்றும் 31 மற்றும் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வார்கள். அதே தொழிற்சங்கத்தில் உள்ள மேலும் 50,000 BT தொலைத் தொடர்பு தொழிலாளர்கள் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வார்கள். ஆகஸ்ட் 26, 27 மற்றும் 30 அன்று தபால் அலுவலக ஊழியர்கள் இணைவார்கள்.

தொழிலாளர்கள் மத்தியில் உள்ள கோபம் மற்றும் உறுதியான மனநிலையை உறுதிப்படுத்தும் வகையில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் அமசனில் நடந்துள்ளன. மேலும் இங்கிலாந்தின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்பு முழுவதும் துணை ஒப்பந்தக்காரர்கள் முழுவதிலும் 14 நாட்களுக்கு தொடர்கின்றன.

ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க தொழில்துறை நடவடிக்கைகளை எடுத்து வருவகையில் இந்த வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றன. இத்தாலி, கிரீஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளன. துருக்கி முழுவதும் வேலைநிறுத்தங்களின் அலை வீசியுள்ளது. மேலும் ஐரோப்பாவின் சில பெரிய விமான நிறுவனங்களுக்கு எதிராக முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்பெயினில் உள்ள Ryanair இல் திட்டமிடப்பட்ட ஐந்து மாதங்கள் வேலைநிறுத்தங்கள் அடங்கும்.

1930களின் பெரும் மந்தநிலையுடன் ஒப்பிடக்கூடிய வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்ட பேரழிவுகரமான சரிவால் தொழிலாளர்கள் போராட்டத்தில் தள்ளப்படுகின்றனர். இங்கிலாந்தில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சீரான நிலையில் உள்ள ஊதியங்கள், ஏப்ரல்-ஜூன் வரையிலான வருடத்தில் தேசிய புள்ளிவிபர திணைக்களத்தின் பணவீக்க மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. குடும்பங்களில் மூன்றில் இரண்டு பங்கினர் எரிபொருள் வறுமையுடனான குளிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். சராசரி செலுத்துமதிகள் அடுத்த ஏப்ரலில் ஆண்டுக்கு 4,426 பவுண்டுகளாக ஆக உயரும். இலட்சக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களுக்கு சரியாக உணவளிக்க கூட முடியாமல் இருக்கின்றனர்.

பெருகிவரும் வெகுஜன இயக்கம், தொழிலாள வர்க்கத்தை போராட்டத்தை கட்டுப்படுத்தவும் நாசவேலை செய்யவும் தீவிரமாய் உழைக்கின்ற தொழிற்சங்கங்களுடன் நேரடியாக மோதலுக்கு கொண்டுவருகிறது. ஒரு பழமைவாத அரசாங்கம் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் ஆதரவுடன் நெருக்கடியின் முழு எடையையும் தொழிலாளர்கள் மீதும் அவர்களது குடும்பங்கள் மீதும் தேவையான எந்த வகையிலும் திணிக்க முயல்கிறது.

இந்த மாதம் 200,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய பிரிவினர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் அணிதிரட்டப்படுமானால் இது 3 மில்லியனை நெருங்கும்.

தேசிய சுகாதார சேவையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களும், கல்வித் துறை மற்றும் உள்ளூர் அரசாங்கத்தில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களும், ஒரு நீட்டிக்கப்பட்ட ஆலோசனை வாக்களிப்பு மற்றும் இலையுதிர்காலம் வரையும், அதற்கு அப்பாலும் தாமதமாக்கப்படும் உண்மையான வாக்களிப்பினால் வேலைநிறுத்தம் செய்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள்.

அரசாங்கத்தை கவிழ்க்கக் கூடிய ஒரு அணிதிரட்டலை தவிர்ப்பதற்காக இது வேண்டுமென்றே செய்யப்படுகிறது. தொழிற்சங்கங்கள் இந்த சாத்தியத்தை அறிந்து அஞ்சுகின்றன. இது RMT பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச் மற்றும் Aslef பொதுச் செயலாளர் மிக் வீஹ்லன் ஆகியோரின் கருத்துக்களால் வெளிப்படுத்தப்பட்டது.

இருவரும் ஒரு பொது வேலைநிறுத்தம் பற்றிய பிரச்சினையை எழுப்பினர், அவ்வாறான ஒன்றை ஏற்பாடு செய்வது தங்கள் அதிகாரத்தில் இல்லை என்று வலியுறுத்துவதற்காக மட்டுமே பொது வேலைநிறுத்தம் பற்றிய பிரச்சினையை எழுப்பினர். தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) மட்டுமே 'பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முடியும், நான் அல்ல. அவர்கள் அதற்கு அழைப்புவிட்டால் நாங்கள் அதை ஆதரிப்போம் என்று பிபிசி நியூஸ்நைட்டில் லிஞ்ச் விளக்கினார். TUC அப்படி ஒரு அழைப்பை விடுக்காது என்பதை அறிந்தே அவர் அவ்வாறு செய்தார். இதே பாணியில் வீஹ்லன் Sky News இடம், 'ஒரு பொது வேலைநிறுத்தம் இடம்பெறும் என்று நான் நினைக்கவில்லை…' என்றார்.

ஆயினும்கூட, இரண்டு தொழிற்சங்கத் தலைவர்கள் ஒரு பொது வேலைநிறுத்தம் பற்றி பேசுவது அவசியம் என்று உணர்கின்றனர். ஏனெனில் இது ஏற்கனவே மறியல் போராட்டங்கள் மற்றும் பணியிடங்களில் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. நடைமுறையில் ஊதியக் குறைப்புக்கள், ஆயிரக்கணக்கான வேலை இழப்புகள் மற்றும் வேலை வேக அதிகரிப்புகள் மீதான மக்களின் கோபத்தைத் தணிக்க முயற்சிக்கின்றனர்.

அதே அரசியல் கவலைகள்தான் லிஞ்ச் இன் புதிய அனைத்தும் போதும் (Enough is Enough) பிரச்சாரத்தை அடிக்கோடிட்டுக் கொண்டிருக்கின்றன. இது தொழிற் கட்சியின் கோர்பின்வாத இடதுசாரிகள் மற்றும் ஜாக்கோபினுக்குச் சொந்தமான Tribune ஆகியவற்றால் தொடங்கப்பட்டது. இதனுடன் RMT, CWU தொழிற்சங்கங்கள் மட்டுமே இணைந்துள்ளன. அதன் கோரிக்கைகள்: “உண்மையான ஊதிய உயர்வு”, “எரிசக்தி கட்டணங்களை குறைத்தல்”, “உணவு வறுமையை ஒழித்தல்”, “அனைவருக்கும் கண்ணியமான வீடுகள்” மற்றும் “பணக்காரர்களுக்கு வரி” என்பதாகும்.

இவை முக்கியமானதும் அவசியமானதுமான நடவடிக்கைகளாகும். ஆனால் அவை முதலாளித்துவத்தின் மீதான ஒரு முன்னணித் தாக்குதல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்சங்கங்கள் தீவிரமாக தடுக்க விரும்புகின்ற தொழிற் கட்சிக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை வேண்டி நிற்கின்றது.

தொழிற் கட்சித் தலைவர் சேர் கீர் ஸ்டார்மர் வேலைநிறுத்தங்களைக் கண்டித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதாக அச்சுறுத்தி, 'மந்திர பண மரம்' (magic money tree) சீர்திருத்தங்கள் மீதான டோரி தாக்குதல்களை எதிரொலிக்கும் போது, லிஞ்ச் மற்றும் வீஹ்லன் டோரிகளுக்கு ஒரே மாற்றாக அவரை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 'வேலியைவிட்டு இறங்கிவா' என அழைக்கின்றனர்.

தொழிலாள வர்க்கம் தனது நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு உண்மையான போராட்டத்தை நடத்துவதற்கு, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான புதிய போராட்ட அமைப்புகளை உருவாக்குவது அவசியமாகும். இப்போது வெடித்துக்கொண்டிருக்கும் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான நிலைமைகளைத் தயாரிக்கவும், ஒவ்வொரு பணியிடத்திலும், சமூகத்திலும் ஜனநாயக ரீதியாக தலைமை தாங்கும் குழுக்கள் கட்டமைக்கப்பட வேண்டும்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதில், பிரித்தானியாவிலுள்ள தொழிலாளர்களின் மிக முக்கியமான கூட்டாளிகள் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள அவர்களது சகோதர சகோதரிகளாவர். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் மூலம் அவர்களின் ஆதரவிற்கு அழைப்புவிட முடியும்.

இத்தகைய போராட்டத்தை தொழிற்துறையுடன் மட்டும் நிறுத்திவிட முடியாது. பல தொழிலாளர்கள் தாங்கள் இந்த அல்லது அந்த முதலாளியுடன் மட்டும் போராடவில்லை என்பதையும், ஒரு டோரி அரசாங்கமும் ஒரு தொழிற் கட்சியும் இணைந்து முக்கிய பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதிய தன்னலக்குழுவின் கட்டளைகளை சுமத்துவதற்கு ஒன்றாக செயல்படுகின்றன என்பதையும் புரிந்துகொள்கிறார்கள்.

டோரிகளின் தலைமைக்கான போட்டியில் லிஸ் ட்ரஸும் ரிஷி சுனக்கும் பாரிய வேலைநிறுத்த உடைப்பு மற்றும் வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புகளையும் முற்றாகத் தடைசெய்வதற்கான மிகக் கொடூரமான திட்டங்களை யார் வகுக்க முடியும் என்பதில் போட்டியிடுகின்றனர். அனைத்து 'முக்கியமான தொழில்கள் மற்றும் சேவைகளில்' குறைந்தபட்ச சேவை நிலைகளை அமுல்படுத்துதல், ஒரே பணியிடத்தில் வெவ்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை தடை செய்தல், முதலாளிக்கு 'பதிலளிப்பதற்கான உரிமை' வழங்கும் நேரத்தை கொடுப்பதால் வேலைநிறுத்தங்களை தாமதப்படுத்துதல், தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் சட்டத்தை இரத்து செய்தல் ஆகியவை செப்டம்பர் முதல் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளில் அடங்கும். அடுத்த ஆறு மாதங்களில் எந்த நேரத்திலும் வேலைநிறுத்த ஆணையைப் பயன்படுத்தும் உரிமையை இல்லாதொழித்தல், ஒவ்வொரு வேலைநிறுத்தத்திற்குப் பின்னரும் 60 நாட்கள் வரை நீடிக்கும் கட்டாய ஆலோசனைக் காலத்தை வழங்குதல் உள்ளடங்கும்.

ஒரு சில போலியான விமர்சனங்களுடன், தொழிற் கட்சி இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் செயல்படுத்த அனுமதிக்கும் மற்றும் அவற்றை எதிர்க்கும் எந்த தொழிலாளர்களையும் தாக்கும்.

இத்தகைய இரக்கமற்ற நடவடிக்கைகளின் மூலம், பெருவணிகத்தின் பாரிய பிணையெடுப்புக்கள் மற்றும் நேட்டோ சக்திகளால் நடத்தப்பட்ட உக்ரேனில் ஏகாதிபத்திய பினாமி போரின் திகைப்பூட்டும் செலவுகள் ஆகியவற்றிற்காக தொழிலாள வர்க்கம் விலை செலுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதல் மட்டுமே வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தை நசுக்கவும் மற்றும் டோரி அரசாங்கத்திதும் தொழிற் கட்சியினதும் வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிரான அரசியல் சவாலைகளை தடுக்கும் தொழிற்சங்கங்களின் முயற்சிகளை தோற்கடிக்க முடியும்.

வெஸ்ட்மின்ஸ்டரில் அரசியல் சதிகாரர்களை அம்பலப்படுத்தி தோற்கடிக்க, சோசலிச சமத்துவக் கட்சி உடனடியாக பொதுத் தேர்தலைக் கோருமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலுக்கு எதிராகவும், அணு ஆயுதப் போரின் ஆபத்து இருக்கையிலும் ரஷ்யாவிற்கு எதிரான போரின் இடைவிடாத விரிவாக்கம், ஒரு தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதை குற்றவியல்ரீதியாக மறுப்பது, பாரிய தொற்று மற்றும் மரணத்தை அனுமதிப்பது; முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிசத்தை கட்டமைக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே எங்கள் நோக்கமாகும். பெருவணிகக் கட்சிகளின் ஆட்சி உரிமைக்கு சவால் விடும் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் இத்தகைய போராட்டம், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

Loading