மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமசன் தொழிலாளர்களின் வெளிநடப்புகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு மத்தியில், புதன்கிழமை பிரிட்டனின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மின் உற்பத்தி ஆலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தங்களின் ஓர் அலை உருவானது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை விடப் பாரியளவில் பின்தங்கி உள்ள கூலிகள் வீழ்ச்சி அடைந்து வருவதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.
ஆகஸ்ட் 2021 இல் பொறியியல் மற்றும் கட்டுமானத் தொழில் சங்கத்துடன் (ECIA) யுனைட் (Unite) மற்றும் GMB தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்ட, பொறியியல் மற்றும் கட்டுமானத் துறைக்கான தேசிய ஒப்பந்தத்தின் (NAECI) மூலம் பாதிக்கப்பட்ட ஆலைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.
பொறியியல் மற்றும் கட்டுமானத் துறைக்கான தேசிய கூட்டுக் கவுன்சிலின் தலைவர் ஜாக் சிம்ப்சன், “திட்டங்களை உரிய நேரத்தில் உரிய வரவு-செலவு கணக்குக்குள் முடித்து வழங்க, தொழிலாளர் உறவுகளை நிர்வகிப்பதற்கான வழிவகைகளாக', மற்றும் 'தொழில்துறை உறவுகளின் ஸ்திரப்பாட்டுக்கு திறவுகோலாக' அந்த 'புளூ புக்' (Blue Book) உடன்படிக்கை உற்சாகமாக வரவேற்றார். பிரிட்டன் பொறியியல் கட்டுமானத் தொழில்துறை 'உலகளவில் போட்டித்தன்மையோடு', “உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்திறன் மிக்க தொழிலாளர் சக்தியை' கொண்டதாக விளங்கச் செய்வதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்த உடன்படிக்கை 2022 ஜனவரியில் வெறும் 2.5 சதவீத சம்பள உயர்வையும், 2023 ஜனவரியில் மற்றொரு 2.5 சதவீத உயர்வையும் வழங்குகிறது. பணவீக்கம் கிட்டத்தட்ட 12 சதவீதமாக இருப்பதுடன், வேகமாக அதிகரித்து வருகிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வினியோகித்த துண்டுப் பிரசுரம், 'எங்களுக்கு ஒரு கண்ணியமான சம்பள உயர்வு வேண்டும்' என்று கோரியதுடன், இந்த நடவடிக்கை 'தொழிலாளர்கள் மீது வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஏற்படுத்தி வரும் பாதிப்பை ECIA அங்கீகரிக்க மறுப்பதற்கான விடையிறுப்பு' என்று விவரித்தது.
'நிஜமான அர்த்தத்தில் குறைந்தது 10 சதவீதச் சம்பள வெட்டை' கண்டித்த தொழிலாளர்கள், 'அதை அப்படியே விட்டு விடுவோம்' என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள் என்றனர்.
'நாட்டின் செயல்பாட்டுக்காக எங்களில் சிலர் இந்தப் பெருந்தொற்று நெடுகிலும் வேலை செய்தோம், எங்களில் சிலர் மிதமிஞ்சி வேலை செய்தோம்,” அதேவேளையில் எஞ்சியவர்கள் 'சம்பள முடக்கத்தை ஏற்றோம்.” முதலாளிமார்களோ, மற்றொரு முன்மொழிவை வழங்க 'நேரடியாகவே மறுத்துள்ளனர்' என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, “இந்த ஆணவமான மனோநிலை தொடர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று தொடர்ந்தது.
“வாடிக்கையாளர்கள் அதிகபட்ச இலாபங்களை ஈட்டுகிறார்கள். பணவீக்கமோ 40 ஆண்டுகளில் இல்லாதளவுக்குக உள்ளது. இலாபங்களை விட மக்கள் தான் முக்கியம்,” என்று அந்தத் துண்டறிக்கை நிறைவு செய்கிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் ஒவ்வொரு புதன்கிழமையும் வேலை வெளிநடப்பு செய்ய உத்தேசித்துள்ளனர்.
நிலைமை எவ்வளவு வெடிப்பார்ந்து உள்ளது என்பதைக் குறித்து தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த மே மாதம் முதலாளிமார்களிடம் கவலைப்பட்டதாகவும், ஆனால் 2024 வரையில் காத்திருக்குமாறு கூறப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தியோகப்பூர்வமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஸ்காட்லாந்தின் ஃபைஃப் நகரில், Mossmorran ExxonMobil சுத்திகரிப்பு ஆலையில் சுமார் 250 தொழிலாளர்கள், அந்த ஆலைக்கு வெளியே ஒன்று கூடி சாலையை மறித்து, இதில் பங்குபற்றினர். ஒருவர் The Courier க்கு கூறுகையில், 'இந்த பெருந்தொற்றின் போது ஒப்பந்த தொழிலாளர்கள் இன்றியமையா தொழிலாளர்களாகக் கருதப்பட்டனர், இந்த Mossmorran ஆலையைத் தொடர்ந்து இயக்கியதில் முக்கிய பங்கு வகித்தனர்'.
அதிகபட்ச இலாபங்களுக்கு 'பேராசைப்படுவதாக' முதலாளிகளை விமர்சித்த மற்றொருவர், “இந்த ஆலை திறந்து இருப்பதற்காக இந்தச் சமூக அடைப்பு காலத்தில் நான் ஒரு ஷிப்டு கூட தவற விட்டதில்லை,” என்றார்.
வேல்ஸின் பெம்ப்ரோக்கில் உள்ள வலெரோ சுத்திகரிப்பு ஆலையிலும் இதே எண்ணிக்கையிலானவர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிகரித்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் கட்டணங்களைக் குறிப்பிட்டு வேலைநிறுத்தக்காரர் ஒருவர் Western Telegraph க்கு கூறுகையில், “வேலையில் உள்ள எந்த ஆணும் பெண்ணும் வேலைக்குப் போகக் கூடாது, சாப்பிட வேண்டுமா அல்லது வெப்பமூட்டலுக்குச் செலவிட வேண்டுமா என்பதில் ஏதாவதொன்றை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமோ என்று கவலைப்பட வேண்டாம்.
“வேலைநிறுத்தம் ஒரு விஷயம் மட்டுந்தான் நாம் செய்ய முடியும்.”
எலெக்ட்ரீசியன்கள், கட்டுமானச் சாரம் கட்டுபவர்கள், குழாய் பொருத்துபவர்கள் உட்பட சுமார் 300 தொழிலாளர்கள், பிலிப்ஸ் 66 நிறுவனம் நடத்தும் வடகிழக்கு இங்கிலாந்தின் ஹம்பர் சுத்திகரிப்பு ஆலையில் வேலைநிறுத்தம் செய்தனர். Grimsby Live க்கு ஒரு தொழிலாளர் கூறினார், “இதைச் செயல்பாட்டில் வைத்திருக்க நாங்கள் இந்தப் பெருந்தொற்றிலும் வேலை செய்தோம், எங்களுக்கு முழுமையான சம்பளம் கூட கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட எங்கள் எல்லோருக்குமே கோவிட் ஏற்பட்டது.
'அடிப்படையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் சம்பாதித்ததை விட குறைவாகச் சம்பாதிக்கிறோம்.'
அவர்கள் 15 சதவீத உயர்வுக்காக வேலைநிறுத்தம் செய்து வருவதாக மற்றொருவர் அந்த பத்திரிகைக்குக் கூறினார்.
பக்கத்தில் லிண்ட்சே சுத்திகரிப்பு ஆலையில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்களும் ஹம்பர் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வந்தனர். ஒருவர் Hull Live க்கு கூறினார், “வாழ்க்கைச் செலவு 11.6 சதவீதத்திற்கு உயருமெனக் கூறப்படுகிறது, எங்களுக்கோ வெறும் 2.6 சதவீத சம்பள உயர்வு மட்டுமே கிடைக்கப் போகிறது. இது இப்படியே போனால், மக்களால் வாழவே முடியாமல் போய்விடும். இப்போதே மக்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.”
பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பணியாளர்கள் உட்பட சுமார் 250 தொழிலாளர்கள், ஸ்காட்லாந்தின் பெட்ரோனியோஸின் Grangemouth சுத்திகரிப்பு ஆலைக்குச் செல்லும் பிரதான சாலைகளை மறித்து, அங்கே புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர். இங்கிலாந்தின் மிகப் பெரிய ஆலையான சவுத்தாம்ப்டன், ஃபாவ்லியில் உள்ள ExxonMobil சுத்திகரிப்பு ஆலையில் மற்றொரு போராட்டம் நடத்தப்பட்டது. பிரிட்டனின் எந்தவொரு மின் நிலையத்தை விடவும் மிக அதிக உற்பத்தித் திறன் கொண்ட, யோர்க்ஷேரின் செல்பிக்கு அருகில் உள்ள Drax மின் உற்பத்தி ஆலையில் நூற்றுக் கணக்கானவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஊடகங்களின் இருட்டடிப்பால் உறுதி செய்வது சிரமமாக உள்ளது என்றாலும், மொத்தம் 20 க்கும் அதிகமான வேலை இடங்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் உள்ளன.
இந்த ஆலைகளை இயக்கும் நிறுவனங்கள் அனைத்தும் அதிகபட்ச இலாபங்களை ஈட்டி வருகின்றன. ExxonMobil சமீபத்தில் இரண்டாவது காலாண்டு இலாபமாக 17.85 பில்லியன் டாலர் அறிவித்தது; வலெரோ, 4.7 பில்லியன் டாலர்; பிலிப்ஸ் 66 நிறுவனம், 3.2 பில்லியன் டாலர்; Ineos, 572 மில்லியன் டாலர். இந்த ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் Drax 200 மில்லியன் பவுண்டு இலாபம் ஈட்டி உள்ளது.
தன்னிச்சையான திடீர் அமசன் வேலைநிறுத்தங்கள் மற்றும் இந்த மாத ஆரம்பத்தில் வடமேற்கு இங்கிலாந்தின் Bury இல் உள்ள Cranswick Continental Foods இல் நடந்த வேலை வெளிநடப்புகள் ஆகியவற்றுடன், இந்தச் சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தங்கள் தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பார்ந்த உணர்வைக் காட்டுகின்றன. ஆனால் எந்தவொரு போராட்டமும் தொழிற்சங்கங்களால் நாசமாக்கப்படுகின்றன.
இந்தச் சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தங்கள், இந்த மே மாதம் 16 இடங்களில் நடந்த கடலோர எண்ணெய் ஆலை தொழிலாளர்களின் தன்னிச்சையான திடீர் வெளிநடப்புகளை நெருக்கமாக பிரதிபலிக்கின்றன, அவற்றுடன் ஹம்பர் சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானத் துறைத் தொழிலாளர்களின் வெளிநடப்பும் சேர்ந்திருந்தது. இவைத் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக துணை-ஒப்பந்ததாரர்களின் பணியாளர்களாலும் நடத்தப்பட்டன. எரிசக்தி நிறுவனங்கள் மிகப் பெருமளவில் இலாபம் ஈட்டியுள்ளன என்பதை மேற்கோளிட்டு, தொழிலாளர்கள் ஒரு 'சம்பளப் புரட்சிக்கு' அழைப்பு விடுத்து, மணிக்கு 7 பவுண்டு அதிகரிக்கக் கோரினர்.
Unite, GMB மற்றும் இரயில்வே, கடல்வழி மற்றும் தரைவழி போக்குவரத்து (RMT) தொழிற்சங்கங்கள் ஊடகங்கள் இந்த நடவடிக்கையை இருட்டடிப்பு செய்வதையும், வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக அந்த நிறுவனம் கடுமையான அச்சுறுத்தல்கள் விடுத்ததையும் சவால் செய்ய மறுத்ததன் மூலம் விடையிறுத்தன. அவை பின்னர் நிறுவனத்துடன் சேர்ந்து வேலைக்குத் திரும்புமாறு அழைப்பு விடுக்க ஒரு சாக்குப்போக்காக, எரிசக்தி சேவைகள் உடன்படிக்கையில் (ESA) துணை-ஒப்பந்த நிறுவனம் Bilfinger UK கையெழுத்திட ஒப்புக் கொண்டதைச் சுட்டிக் காட்டின.
ESA என்பது NAECI க்கு நிகரானது, இது 5,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் நிபந்தனைகளை அமைக்கிறது. யுனைட் இன் பிராந்திய அதிகாரி ஜோன் போலண்ட் கருத்துத் தெரிவிக்கையில், 'எரிசக்தி சேவைகள் உடன்படிக்கையானது தொழில்துறையும் மற்றும் நம் உறுப்பினர்களும் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்க்க அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் ஒரு புதிய வழி என்பதோடு, தொழிற்சங்கங்கள் மூலமாக அவர்கள் நியாயமாக நடத்தப்படுவதையும் அவர்களின் முயற்சிகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்துகிறது.
தொழிற்சங்கங்களிடம் இருந்து வரும் இத்தகைய அனைத்து நிறுவன சார்பு பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தும் வகையில், ESA உடன்படிக்கை இந்தாண்டு தொழிலாளர்களுக்கு அவமானகரமாக 2.32 சதவீத சம்பள உயர்வே வழங்கியது.
பணவீக்கம் ஏற்கனவே 7.1 சதவீதமாக இருப்பதுடன், வேகமாக உயர்ந்து வரும் நிலையில் 2022 இல் 6.2 சதவீத சம்பள உடன்படிக்கையை முன்நகர்த்த, கடந்த நவம்பரில், லிவர்பூல் அருகே, ஸ்டான்லோ எஸ்ஸார் சுத்திகரிப்பு ஆலையில் 400 தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை Unite சங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது.
இந்த ஜூன் மாதம், Fawley சுத்திகரிப்பு ஆலையில் 100 தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை Unite சங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது. தொழிலாளர்களுக்கு வெறும் 9.2 சதவீத உயர்வு வழங்கப்பட்டது, அது அந்த நேரத்தில் 11.1 சதவிகித பணவீக்க விகிதத்தை விட மிகக் குறைவாக இருந்தது, மேலும் சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கான முக்கிய கோரிக்கையும் தீர்க்கப்படவில்லை.
எரிசக்தி தொழிற்துறை முழுவதும் தொழிலாளர்களின் ஒரு பாரிய இயக்கம் உருவாவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இலாபமீட்டும் இந்த எரிசக்தி துறை நிறுவனங்களுக்கு எதிராக நல்ல கூலிகளுக்கான ஒரு நிலைப்பாடு, அழிவார்ந்த எரிபொருள் கட்டணங்களை எதிர்கொள்ளும் பிரிட்டன் எங்கிலுமான தொழிலாளர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவைப் பெறும். ஆனால் தொழிற்சங்கங்கள் அத்தகைய ஓர் இயக்கத்தை ஒழுங்கமைக்க மறுக்கின்றன. அவை மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினைகளையே முன்னெடுக்கின்றன, எப்போதுமே விற்றுத்தள்ளலில் போய் முடிகிறது, அதேவேளையில் அவை பேரம்பேசிய திகைக்க வைக்கும் விகிதங்களால் பெரும்பாலான தொழில்துறை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை அவை அனுமதிக்கின்றன.
Fawley தொழிலாளர் பிரச்சினையின் போது, வெறும் இரண்டு ஒப்பந்த நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, யுனைட் சங்கம் படுபயங்கரமாக நடந்து கொண்டது. அந்தத் தொழிற்சங்கத்தின் சொந்த பிரதிநிதிகளில் ஒருவர் அந்த பிரச்சினையில் சம்பந்தப்படாத ஓர் ஒப்பந்ததாருடன் இருந்த அவர் சகாக்கள் 50 பேரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இணைய அனுமதித்ததற்காக வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், Unite சங்கம் அந்த வேலைநிறுத்தத்தை இடைநிறுத்தி, அதற்குப் பின்னர் விரைவிலேயே அதைக் கலைத்து விட்டது.
தொழிலாளர்கள் இனி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. அவர்கள் டோரி அரசாங்கம் மற்றும் 'எதிர்கட்சியான' தொழிற்கட்சியின் ஒரு மூர்க்கமான எதிர்ப்பை முகங்கொடுக்கிறார்கள், தொழிலாளர்கள் அவற்றைத் தோற்கடிக்க அவர்களின் முழு பலத்தையும் அணித்திரட்ட வேண்டும்.
பாரியளவில் கருங்காலிகளைக் கொண்டு செயல்பாடுகளைத் தொடர்வதற்கு உதவும் சட்டங்களை டோரிகள் ஏற்கனவே நிறைவேற்றி இருக்கிறார்கள். ஜோன்சனை அடுத்து வருபவர் வேலைநிறுத்தத்திற்குத் தடை விதிக்கும் ஒரு புதிய சட்ட தொகுப்பை நடைமுறைப்படுத்துவார்.
ஆபரேஷன் யெல்லோஹாம்மர் (Yellowhammer) என்ற குறியீட்டுப் பெயரில் இப்போது பெரிதாகக் கட்டவிழ்ந்து வரும் உடன்பாடின்றி பிரிட்டன் வெளியேறுவது (no-deal Brexit) மீது அரசாங்கம் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிடுகையில், இது பிரிட்டனின் எரிபொருள் தொழில்துறை மீதும் மிகப் பெரிய ஒருமுனைப்பைக் கொண்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் எதிர்நோக்குவதில் ஒரே திருத்தப்பட்ட பத்தி, சுத்திகரிப்பு ஆலைகளில் நடக்கும் வேலைநிறுத்தங்களின் அச்சுறுத்தலுடன் சம்பந்தப்பட்டது.
இந்த ஆவணங்கள் அனைத்தும் 'உள்நாட்டு அமைதியின்மையை' கையாள பத்தாயிரக் கணக்கான துருப்புக்கள் மற்றும் பொலிஸை நிலைநிறுத்துவது மற்றும் கடுமையான எதேச்சதிகார அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்கும் தற்செயலான உள்நாட்டு நடவடிக்கை சட்டத்தை (Civil Contingencies Act) பயன்படுத்தும் திட்டங்களின் பின்னணியில் விவாதிக்கப்பட்டன.
ஆளும் வர்க்கத்தின் இந்த கடுமையான அரசு தாக்குதலை முறியடிப்பது என்பது ஒரு புதிய அரசியல் முன்னோக்கை ஏற்று, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான புதிய போராட்ட அமைப்புகளை கட்டி எழுப்புவதை அர்த்தப்படுத்துகிறது. தொழிலாளர்களின் வேலை அந்தஸ்து எதுவாக இருந்தாலும் எல்லா தொழிலாளர்களையும் உள்ளடக்கி, தேசியளவிலும் சர்வதேச அளவிலும் எரிசக்தி தொழில்துறை எங்கிலும் தொடர்புகளை உருவாக்கி, கோரிக்கைகளின் பட்டியலை வரைந்து, அவற்றை ஜெயிக்க எல்லா விதமான ஒருங்கிணைந்த நடவடிக்கையை ஒழுங்கமைத்து, ஒவ்வொரு வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை நிறுவ வேண்டும்.