மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
முதலாளிகளுடன் பேச்சு வார்த்தைகள் முறிந்ததை அடுத்து இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து (RMT) தொழிற்சங்கத்தின் மூன்று ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தங்களில் வியாழன் அன்று இரண்டாவது வேலைநிறுத்தம் தொடர்ந்தது. RMT பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், நடப்புச் சுற்றின் சனிக்கிழமை இறுதி வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் மேலும் ஒரு சுற்று வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார்.
தொழிற்சங்க எதிர்ப்பு, வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால், ஜூலை 9 ஆம் திகதி இது சாத்தியமானதாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ASLEF இரயில் ஓட்டுநர்கள் சங்கத்தால் சாத்தியமான வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாக, Arriva Rail London, Chiltern Railways, Great Western, LNER, Northern Trains, Southeastern, TransPennine Express மற்றும் West Midlands இரயில்கள் உட்பட 11 இரயில் இயக்க நிறுவனங்களில் ஊதியம் தொடர்பான வேலைநிறுத்தங்களுக்காக ஜூலை 11 வரை வாக்குப்பதிவு செய்யப்படும். ஜூலை 25 முதல் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்யலாம். Avanti West Coast, CrossCountry மற்றும் Direct Rail Services ஆகியவற்றில் வேலைநிறுத்தத்திற்கான வாக்குப்பதிவு 27 ஆம் திகதி முடிவடையும்.
குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்கள் இப்போது விமான நிலைய ஊழியர்களாலும் அச்சுறுத்தப்படுகின்றன. ஹீத்ரோ விமான நிலையத்தில் சுமார் 350 GMB உறுப்பினர்கள் நடவடிக்கைக்காக பெரும்பான்மையுடன் வாக்களித்துள்ளனர். திங்கட்கிழமை வாக்குப்பதிவு முடிவடையும் போது Unite பிரதிநிதித்துவப்படுத்தும் அதே எண்ணிக்கையிலான அவர்களது சக ஊழியர்களிடம் இதே முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. தொற்றுநோய்களின் போது 10 சதவிகித ஊதியத்தை குறைக்க பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விருப்பப்படி வேலையில் அமர்த்தும் மற்றும் வேலைநீக்கம் செய்வதைப் பயன்படுத்தியது. மேலும் பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் உள்ள ஐரோப்பா முழுவதும் உள்ள விமான நிலைய மற்றும் விமான ஊழியர்களுடன் இணைந்து தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியது. திகதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கோடைப் பள்ளி விடுமுறையின்போது வேலைநிறுத்தத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
லின்ச் க்கும் போக்குவரத்து செயலர் கிரான்ட் ஷாப்ஸ் க்கும் இடையே வியாழனன்று கசப்பான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. RMT தலைவர் லின்ச் 2,900 இரயில் தொழிலாளர்கள் வரையிலான சட்டபூர்வ பணிநீக்கத்தை அச்சுறுத்தும் கடிதத்தை நெட்வொர்க் இரயில் திரும்பப் பெறுவதைத் தடுத்ததன் மூலம் பேச்சுவார்த்தைகள் 'நாசமடைந்ததாக' குற்றம் சாட்டினார். நெட்வொர்க் இரயில் மற்றும் இரயில் இயக்க நிறுவனங்களை 'விடுவித்துவிட வேண்டும்' என்று அரசாங்கத்திற்கு அவர் மீண்டும் அழைப்பு விடுத்தார்.
டோரிகள் பேச்சுவார்த்தைகளை விரும்பவில்லை. ஏனெனில் இரயில் ஓட்டுநர்கள், ரோயல் மெயில் மற்றும் பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய சுகாதார சேவைத்தொழிலாளர்கள் மற்றும் விமான நிலையத் தொழிலாளர்கள் ஆகியோரின் வேலைநிறுத்த அச்சுறுத்தலைத் தடுக்க இரயில் தொழிலாளர்கள் மீது பாரிய தோல்வியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதற்கு இணங்க, கருவூலத்துறை 'பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுகள் அவர்களின் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து வர வேண்டும் என்று அமைச்சரவை அமைச்சர்களிடம் கூறியுள்ளது' என்று டைம்ஸ் அறிவித்தது. இதன் அர்த்தம் மேலதிக நிதியளிப்புகளுக்கு செலவுகளை வெட்டுதல் மூலம் எடுக்கவேண்டும் என்பதாகும். இது முழு பொதுத் துறையிலும் ஏற்கனவே வரவு-செலவுத் திட்டத்தில் அடங்கியுள்ள அதிகபட்ச ஊதிய உயர்வை 3 சதவிகிதமாக அமைக்கிறது. பணவீக்கத்தின் காரணமாக இலையுதிர்காலத்தில் உண்மையில் 10 சதவிகித வெட்டாக இருக்கும்.
நெட்வொர்க் இரயில் மற்றும் இரயில் இயக்க நிறுவனங்கள் டோரியின் விட்டுக்கொடுக்காத தன்மையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் என்ற கூற்று, இரயில் தொழிலாளர்கள் நடாத்தவேண்டிய போராட்டத்தின் தன்மையை குழப்பத்திற்கு உள்ளாக்குகின்றது. வேலைநிறுத்தங்களை அடித்து நொறுக்குவதில் அரசாங்கமும் அதன் ஆதரவான இரயில் உள்கட்டமைப்பு நிறுவனமும் சமமாக உறுதியாக உள்ளன.
நெட்வொர்க் இரயில் இன் கடிதம் அல்லது அதை திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு கோரிக்கைக்கும் தனக்கும் 'முற்றிலும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று ஷாப்ஸ் நேர்மையற்ற முறையில் அறிவித்தார். நிறுவனத்துடனான தனது பொதுவான நிலைப்பாட்டை வலியுறுத்தி, அவர் மேலும் “கடிதத்தில் 2,900 பணிநீக்கங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தைக்குப் பதிலாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தேர்ந்தெடுத்த பின்னர், நெட்வொர்க் இரயில் தொழில்துறைக்கு மிகவும் தேவையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியது எனக்குத் தெரியும்' எனக் கூறினார்.
இன்று காலை BBC இன் Breakfast நிகழ்ச்சியில், லிஞ்ச் Merseyrail இன் ஒப்பந்தத்தை 'கருவூலத்துறை கட்டுப்படுத்தபடாதபோது' எதனை சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று பாராட்டினார்.
போக்குவரத்து சம்பள ஊழியர்கள் சங்கத்தின் (TSSA) சங்கத்தின் உறுப்பினர்கள் புதன்கிழமை 7.1 சதவீத ஊதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். கார்டியன் படி, RMT பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு அதன் சொந்த உறுப்பினர்களுக்கு ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
லிஞ்ச் மேலும் 'இந்த இரயில்துறையில் கிராண்ட் ஷாப்ஸ் க்கு எந்த செல்வாக்கும் இல்லாத இடங்களில் நாங்கள் வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து பெறுவதை விட அதிக முற்போக்கான ஒப்பந்தங்களையும் சலுகைகளைப் பெறுகிறோம்' என்றார்.
RMT உதவிப் பொதுச் செயலாளர் எடி டெம்ப்சே Radio 4’s Today இடம் “போக்குவரத்துத் அமைச்சகத்துடன் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படாத ஒருவருடன் நாங்கள் எங்கெல்லாம் கையாள்கிறோமோ, அங்கெல்லாம் நாங்கள் முன்னேறி வருகிறோம். இலண்டன் நிலத்தடி இரயில்வே 8.5 சதவீதம்; Docklands Light இரயில்வேயில் பணவீக்கத்தினை ஈடுசெய்யும் ஒப்பந்தத்தை [9 சதவீதம்] பெற்றுள்ளோம்; Crossrail இலும் அதே மாதிரியே; வேல்ஸிற்கான போக்குவரத்தில் நாங்கள் இப்போது அங்கு ஏதாவது பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈடுபட்டுள்ளோம்; Merseyrail இல் 7.1 சதவீதம் பெற்றுள்ளோம்.
7-9 சதவீதத்திற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே பணவீக்கத்தினை ஈடுசெய்வதாக இல்லை. இது இப்போது சில்லறை விலைச் சுட்டெண் 11.7 சதவீதமாக இருப்பதுடன் மற்றும் அதிகரித்து வருகிறது. RMT மற்றும் பிற இரயில் தொழிற்சங்கங்கள், பணவீக்கத்திற்கு மேல் ஊதிய உயர்வு அல்லது பணவீக்கத்திற்கு ஏற்ப ஒரு போராட்டத்தை நடத்தவில்லை. ஆனால் சமூக எதிர்ப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன.
TSSA பொதுச்செயலாளர் மானுவல் கோர்டெஸ் Merseyrail ஒப்பந்தம் பற்றி, 'இது தெளிவாகக் காட்டுவது என்னவென்றால், எங்கள் தொழிற்சங்கம் மற்றும் சகோதர தொழிற்சங்கங்கள், இரயில்வேயில் அதிருப்தியான கோடைகாலத்தை தவிர்ப்பதற்கு தேவையான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் எந்த வகையிலும் தடையாக இல்லை' எனக் கூறினார்.
RMT இனால் சொந்தமாக அறிவிக்கப்பட்ட நோக்கங்கள், இதேபோன்ற பணவீக்க மட்டத்திற்கு குறைவான 7 சதவீத ஊதிய உயர்வு மற்றும் முதலாளிகளின் பல கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஈடாக, கட்டாய பணிநீக்கங்கள் இல்லை என்ற உறுதிப்பாடு ஆகும். லிஞ்ச் BBC Breakfast நிகழ்ச்சியில் 'எங்களுக்கு கட்டாய பணிநீக்கங்கள் இல்லை என்ற உத்தரவாதம் தேவை. அதைப் பெற்றால், வேலை நடைமுறைகளில் மாற்றங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை உள்ளடக்கிய பிற நிகழ்ச்சி நிரல்களுக்கு சாதகமாக செல்லலாம்' எனக் கூறினார்.
இந்த அழுகிய ஒப்பந்தம் கூட முதலாளிகளாலும் அரசாங்கத்தாலும் கவனத்திற்கு எடுக்கப்பட்வேண்டிய ஒன்றாக இல்லை. நெட்வொர்க் இரயிலின் தலைமை பேச்சுவார்த்தையாளரான டிம் ஷோவெல்லர் இன்று 7 சதவிகிதம் 'மிகவும் சாத்தியமில்லை' என்று Today க்கு கூறினார். “இப்போது அட்டவணையில் உள்ள மூன்று சதவீதத்திற்கும் ஒரு 7.1 சதவிகித உடன்படிக்கைக்கும் இடையிலான வித்தியாசம் ஒவ்வொரு ஆண்டும் 65 மில்லியன் பவுண்டுகளாக இருக்கும்… அதாவது ஒரு வருடத்திற்கு 65 மில்லியன் பவுண்டுகள், ஒவ்வொரு வருடமும் அந்த வித்தியாசத்திற்கு நிதியளிப்பதற்காக கூடுதல் சேமிப்பைக் கண்டுபிடிக்க வேண்டும்”.
இரயில் இயக்க நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Rail Delivery Group இன் தலைவராக இருக்கும் ஸ்டீவ் மொன்ட்கோமெரி, BBC இன் Breakfast நிகழ்ச்சியில் கட்டாய பணிநீக்கங்களை நிராகரிக்க மறுத்துவிட்டார். ஆனால் ஒரு “தன்னார்வ” திட்டத்தை வழங்க முடியும் என்பதைத் தெளிவுபடுத்தினார்: “நாங்கள் இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்தி எத்தனை பேர் வேலையை விட்டுச்செல்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும். மேலும் யாரும் கட்டாய பணிநீக்கங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்காது என நம்புவோம்” என்றார்.
இரயில் தொழிலாளர்கள் மீதான விரோதம் தொழிற் கட்சியால் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த வாரம், கட்சித் தலைவர் சேர் கீர் ஸ்டார்மர், கட்சி எதிர்க்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தினார்.
சனிக்கிழமை வேலைநிறுத்தம் முடிந்ததும், பகிரங்க மன்னிப்பைப் பொறுத்து, முன்வரிசை அங்கத்தவர்களான பௌலா பார்கர், கேட் ஆஸ்போர்ன், அலெக்ஸ் சோபல் மற்றும் நவேந்து மிஸ்ரா ஆகியோரை எப்படி தண்டிப்பது என்பதை ஸ்டார்மர் முடிவு செய்வார். அவர் மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கையாளும் ஒரு வாய்ப்பை பெற்றுள்ளார். இதில் கட்சியில் தற்போது ஆழமாகப் பிளவுபட்டுள்ள கோர்பின் சார்பு 'இடது' எஞ்சியிருப்போரும் அடங்கும். இது அவர்களில் டயான் அபோட், ரிச்சர்ட் பேர்கன், ஜோன் மெக்டோனல், ரெபெக்கா லாங்-பெய்லி, பெல்லி ரிபேரோ-அடி மற்றும் இயன் லாவரி ஆகியோரின் வெளியேற்றத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான சிறப்பான வாய்ப்பாகும்.
நேற்று, ஸ்டார்மர் டோரிகளால் பணவீக்கத்திற்குக் குறைவான ஊதிய அதிகரிப்பை சுமத்துவதை ஆதரிப்பதாக தெளிவுபடுத்தினார். அவரது செய்தித் தொடர்பாளர் டைம்ஸிடம், 'பொதுத்துறை ஊதிய மறுஆய்வு அமைப்புகளின் பணியை நாங்கள் மதிக்கிறோம், மேலும் பரிந்துரைகளை வழங்குவது அவர்களின் பணியாகும்' என்று கூறினார்.
ஸ்டார்மர் பணவீக்கத்திற்குக் குறைவான கொடுப்பனவுகளுக்கு ஆதரவளிப்பாரா என்று குறிப்பாகக் கேட்டதற்கு, செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார், 'எங்கள் தொடக்கப் புள்ளி ஊதிய மறுஆய்வு அமைப்புகள் எந்த ஊதிய அதிகரிப்புடன் முன்னோக்கி வருகின்றன என்பதைப் பார்ப்பதும் மற்றும் அதிலிருந்து தான் நாங்கள் அதை ஆதரிப்போமா என்பதை முடிவெடுப்போம்' என்றார்.