மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நாடு தழுவிய வேலைநிறுத்த நடவடிக்கையின் மூன்று நாட்களில் இரண்டாவது நாளான வியாழன் அன்று பிரிட்டிஷ் இரயில்வே தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது ஒரு சாதாரண தொழில்துறைப் பிரச்சினை அல்ல. பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனும் அவரது அரசியல் குண்டர்களின் அரசாங்கமும், 1984-85 இல் சுரங்கத் தொழிலாளர்களைக் குறி வைத்த மார்கரெட் தாட்சரின் அதே இலக்கைப் பின்பற்ற விரும்புகிறார்கள், அது பிரிட்டனைப் பெரும் பணக்காரர்களின் விளையாட்டுக் களமாக மாற்றி ஒரு தோல்வியில் போய் முடிந்ததுடன், மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களுக்கு மிகப் பெரும் ஒரு சமூகப் பேராபத்தைத் தொடங்கி வைத்தது.
இன்று டோரிகள் இரயில்வே தொழிலாளர்கள் மீது இன்னும் மிருகத்தனமான ஒரு தோல்வியைத் திணிக்க உத்தேசித்துள்ளனர் ஏனென்றால் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வரவிருக்கும் வாரங்களில் வெடிக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓர் எதிர்ப்புப் பேரலையின் மையமாக மாறியுள்ளது. ஆசிரியர்களும், செவிலியர்கள், மருத்துவர்கள், உள்ளாட்சி அரசு தொழிலாளர்களும், ராயல் மெயில் டெலிவரி தொழிலாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் டெலிகாம் தொழிலாளர்களும் அனைவரும் அடுத்த மாதங்களில் தொழில்துறை நடவடிக்கையைத் தொடங்க விரும்புகிறார்கள். ஜோன்சன் அரசாங்கத்துடன் ஒரு தீர்க்கமான மோதலுக்கான நிலைமைகள் உருவாகி வருகின்றன, ஆனால் இதற்கு ஒரு நனவுபூர்வமான வேலைத்திட்டமும் தலைமையும் கொடுக்கப்பட வேண்டும்.
தொழிலாள வர்க்கம் டோரிகளை வெற்றிபெற அனுமதிக்கக் கூடாது. பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ஒவ்வொரு தொழிலாளரும் ஜோன்சன் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க ஓர் ஒருங்கிணைந்த தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதலைத் தொடங்கி, இரயில்வே தொழிலாளர்களுக்காக அணித் திரள வேண்டும். இது, எல்லாவற்றுக்கும் மேலாக, வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்திக் காட்டிக்கொடுக்கும் தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) மற்றும் தொழிற் கட்சியின் முயற்சிகளுக்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பை அபிவிருத்தி செய்யக் கோருகிறது.
நேட்டோவின் போரும் இரயில் வேலைநிறுத்தமும்
பழமைவாத நாடாளுமன்ற உறுப்பினர் டோபியாஸ் எல்வூட் (Tobias Ellwood) மீதான நேற்றைய கொடூரமான தாக்குதல், இப்போது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்காகவும் தொடங்கி உள்ள இந்தப் போராட்டத்தின் அடிப்படைத் தன்மையைத் தெளிவுபடுத்துகிறது. அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உறுதிப்பாட்டுக்கு இந்த இரயில்வே வேலைநிறுத்தம் ஒரு மையப் புள்ளியாக மாறி உள்ளது என்பது மட்டுமல்ல. இது இப்போது ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரை விரிவாக்குவதன் மீதும் மற்றும் சீனாவை விரோதமாக இலக்கு வைப்பதன் மீதும் மையமிட்டுள்ள முக்கிய வெளியுறவுக் கொள்கையின் தவிர்க்கவியலாத நிர்பந்தங்களையும் அச்சுறுத்தி வருகிறது.
பாதுகாப்புத் துறைத் தேர்வுக்குழு தலைவர் எல்வூட் வேலைநிறுத்தம் செய்து வரும் இரயில்வே தொழிலாளர்களை 'புட்டினின் நண்பர்கள்' என்று கண்டித்திருந்ததுடன், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரைப் பிரிட்டன் வெற்றிகரமாகப் பின்தொடர்வதற்காக இந்தத் தொழில்துறை நடவடிக்கை 'முடிவுக்குக் கொண்டு வரப் பட வேண்டும்' என்றவர் வலியுறுத்தி இருந்தார்.
அவர் Sky News க்கு பேசுகையில், 'சுயமாகத் தோற்றுவித்துக் கொண்ட இந்தச் சீர்குலைவு ரஷ்யாவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும், சொல்லப் போனால் புட்டினுக்கு எதிராக நிற்கும் ஐரோப்பாவின் ஓர் அரசாங்கம் இந்த விதத்தில் முற்றிலுமாக சீர்குலைக்கப்படுகிறது என்பதைப் பார்த்து ரஷ்யா மகிழ்ச்சி அடையும் என்று நினைக்கிறேன்… 'தயவுசெய்து புட்டினின் நண்பராக இருக்காதீர்கள், நாட்டை நாம் மீண்டும் முன்நகர்த்தும் வகையில் இன்றே பேச்சுவார்த்தைக்குத் திரும்புங்கள்' என்று நான் தொழிற்சங்கங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.
ராயல் கிரீன் ஜாக்கெட் படைப்பிரிவில் ஒரு முன்னாள் தளபதியான எல்வூட், டோரி கட்சியின் உயர்மட்ட அடுக்குகளில் உள்ள பல முன்னாள் இராணுவத்தினரில் ஒருவர் ஆவார். வெளியுறவுத் துறைக் குழுவின் தலைவர் Tom Tugendhat மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலர் பென் வாலஸ் (Ben Wallace) ஆகியோருடன் சேர்ந்து, அவர் ஜோன்சனுக்கு அடுத்து பதவிக்கு வரக் கூடியவராகக் கருதப்படுகிறார்.
எல்வூட் கருத்துரைப்பதற்கு ஒரு நாள் முன்னர், ஜோன்சன் தனது அமைச்சரவைக் கூட்டத்தைப் பயன்படுத்தி, உக்ரேனில் போர் தொடுப்பதை இரயில்வே வேலைநிறுத்தங்களைத் தோற்கடிப்பதுடன் சம்பந்தப்படுத்தி ஒரு பகிரங்க அறிக்கை வழங்கினார். அவர் கியேவ் ஆட்சிக்கு 'புதிய அரசியல், இராணுவ மற்றும் நிதி உதவிகளை' உறுதிப்படுத்தவும் மற்றும் நேரடி இராணுவத் தலையீட்டைச் சூசகமாகக் குறிப்பிடும் ஒரு பெருமைப்பீற்றலாக 'உக்ரேனில் இருந்து தானியங்களைப் பெறுவதை' உறுதிப்படுத்தவும் சூளுரைத்து, 'உக்ரேன் சோர்வின்' அபாயம் குறித்து எச்சரித்தார்.
கூலி உயர்வு கோரிக்கைகளை ஒடுக்கி, இரயில்வே துறையிலும் ஏனைய இடங்களிலும் கடுமையான வெட்டுக்களை முன்நகர்த்துவதன் மூலம் அவசியமான 'நிதி ஒழுங்குமுறையை' கொண்டு வந்து, பிரிட்டன் 'உறுதியாக நிற்க' அவர் வலியுறுத்தினார்.
இந்த வேலைநிறுத்தங்களுக்கு பல வாரங்களுக்கு முன்னரே, இரயில்வே தொழிலாளர்களையும் மற்றும் இரயில்வே, கடல்வழி மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தையும் (RMT) “புட்டினின் கைப்பாவைகள்' என்ற கண்டனங்களால் டோரி பத்திரிகைகள் நிறைந்திருந்தன. எல்வூட்டின் கருத்துக்கள் இந்த தாக்குதல்களின் குறிப்பிடத்தக்க மறுபிரவேசம் ஆகும்.
உள்நாட்டில் வர்க்கப் போர்
ஒரு தலைமுறையின் மிக மோசமான வாழ்க்கைச் செலவுப் பேரழிவுக்கு எதிராக —அதாவது, வேலைகள், மேம்பட்ட கூலிகளுக்காகவும் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பாதுகாப்பதற்காகவும்— தொழிலாள வர்க்கத்தின் இந்த போராட்டமானது, பிரிக்க முடியாத வகையில் போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்துள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் எதிர்கொண்டு வரும் இந்தச் சீரழிவு பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டு வந்துள்ளன என்றாலும், முதலில் இந்தப் பெருந்தொற்றுப் பாதிப்பாலும் இப்போது உக்ரேன் போரினாலும், தீவிரத்தின் புதிய உச்சத்திற்கு வந்துள்ளது.
200,000 பேரைக் கொன்றுள்ளதும் மில்லியன் கணக்கானவர்களை நீண்ட கால நோய்வாய்ப்படுதலுக்கு உட்படுத்தி உள்ளதுமான சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் ஒரு கொள்கையைக் கடைபிடித்த அதேவேளையில் ஜோன்சன் அரசாங்கம் பிரதான பெருநிறுவனங்களுக்குப் பாரியளவில் சமூகச் செல்வ வளத்தைக் கைமாற்ற இந்தப் பெருந்தொற்றைப் பயன்படுத்தியது. தொழிலாள வர்க்கத்தின் வாழ்வாதாரத்தை அழிப்பதன் மூலம் இதற்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்ய அவர்கள் தீர்மானகரமாக உள்ளனர்.
ரஷ்யாவுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய அதே குற்றவாளிகள் சீனாவுடன் பதட்டங்களை அதிகரிப்பது என்பது ஒரு வழிவகையாகும், அதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவின் பாரிய வளங்களைத் தங்களுக்காகக் கைப்பற்றி சீனாவை ஒரு முக்கிய போட்டியாளர் அந்தஸ்தில் இருந்து அழிக்க முயல்கின்றன.
போருக்கான விலையையும் தொழிலாள வர்க்கமே கொடுக்க வேண்டியிருக்கும். இது ஏற்கனவே பிரிட்டனில் நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கத்தை 9 சதவீதத்திற்கு அதிகமாகவும் மற்றும் சில்லறை விலைக் குறியீட்டை 11.7 சதவீதத்திற்கும் உயர்த்த உதவி உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் இந்தப் புள்ளிவிபரங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணெய், எரிவாயு, கோதுமை மற்றும் கனிம வளங்கள் பணவீக்கத்தின் முக்கிய உந்தும் காரணிகளாக உள்ளன, இவை அனைத்தும் நேரடியாக உக்ரேன் போர் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான தடையாணைகளின் தாக்கத்தால் ஏற்பட்டதாகும்.
வெளிநாட்டில் போர் என்பது உள்நாட்டில் வர்க்கப் போரை அர்த்தப்படுத்துகிறது. அரசாங்கம் மற்றும் பெரும் பெருநிறுவனங்களின் தாக்குதல் முடுக்கி விடப்படும். இரயில்வே வலையமைப்பை மீளத் தனியார்மயப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களில் முதலில் 2,900 வேலை இழப்புகள், சம்பள ஒடுக்குமுறை மற்றும் ஓய்வூதியக் குறைப்பு ஆகியவை உள்ளடங்குகிறது. உள்துறைப் பணியாளர்கள் தொழிலாளர் சக்தியில் 25 சதவீத இழப்பை, அல்லது 90,000 வேலை இழப்புகளை முகங்கொடுக்கிறார்கள்.
இதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரச அடக்குமுறை தேவைப்படும். சுரங்கத் தொழிலாளர்களை 'உள் எதிரி' என்று தாட்சர் சித்தரித்தமை 13,000 பேரைக் கைது செய்து, 200பேருக்குச் சிறைத் தண்டனை விதித்து, சுமார் 1,000 பேரை வேலைநீக்கம் செய்து, மறியல் களத்தில் இரண்டு பேர் மற்றும் நிலக்கரி தோண்டும் இடத்தில் மூவர் கொல்லப்பட்டது உட்பட பாரியளவில் ஓர் அரச தாக்குதலுக்கு முன்னறிவிப்பாக இருந்ததைப் போலவே, இரயில்வே தொழிலாளர்களைப் 'புட்டினின் நண்பர்கள்' என்று சித்தரிப்பது அரசின் முழு அணித்திரட்டலுக்கு பாதை அமைக்க தயாரிப்பு செய்கிறது — ஆனால் இந்த முறை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக நடக்கிறது. குறைந்தபட்ச சேவை வழிமுறைகளைக் கொண்டு வரவும் மற்றும் மாற்று தொழிலாளர் சக்தியாக முகமைகளின் கருங்காலி தொழிலாளர்களை அணித் திரட்டவும் அரசாங்கம் ஏற்கனவே சூளுரைத்துள்ளது, எல்லா அத்தியாவசிய சேவைகளிலும் வேலைநிறுத்தங்களைக் குற்றகரமாக்குவதே இதன் அர்த்தமாக இருக்கும்.
தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் சதியைத் தோற்கடிப்போம்
தொழிலாளர்கள் மற்றொரு அரசியல் எதிரியை முகங்கொடுக்கின்றனர்: அது தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்கட்சியின் அதிகாரத்துவம் ஆகும். 1984-85 இல் டோரிகளுடன் கூட்டு சேர்ந்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு முக்கிய போராட்டத்தைத் தனிமைப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிய பங்கை மீண்டும் நிலைநாட்ட அவர்களும் முயன்று வருகிறார்கள்.
மிகப் பெரியளவில் மக்கள் அழுத்தம் இருப்பதால் தான் RMT சங்கம் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வேலைநிறுத்தத்தைச் சாத்தியமான அளவுக்கு விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நிச்சயமாக அதன் தலைமைக்குத் திரைமறைவில் கூறப்பட்டுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
கடந்த வாரம், RMT சங்கம் 'எந்த முன்நிபந்தனையும் இல்லாமல்' அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள முன்மொழிந்தது, அதேவேளையில் பணிநீக்கங்கள் 'சுய விருப்பத்திற்குள்' இருக்கும் வரையில், பாரிய பணிநீக்கங்களையும், பணவீக்கத்திற்குக் குறைவாக 7 சதவீதச் சம்பள வெகுமதி அல்லது அனேகமாகப் பிரதிபலன் குறைவாக இருந்தாலும் கூட ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை அது தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு TUC இதற்கு ஒப்புக் கொண்டது என்பது வெறும் ஒரு சில மணி நேரத்தில் தெளிவானது, தொழில்துறை நடவடிக்கையைத் தடுக்கும் ஒரு வழிவகையாக RMT உடனான ஆதரவு பேச்சுவார்த்தைகளுடன் TUC பொதுச் செயலாளர் பிரான்சிஸ் ஓ'கிரேடி (Frances O’Grady) மற்றும் பிரிட்டனின் 14 பெரிய தொழிற்சங்க தலைவர்கள் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தது.
ஜோன்சன் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி வரும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் விரோதத்தில் தொழிற் கட்சி இன்னும் அதிகமாகவே பட்டவர்த்தனமாக உள்ளது, அது அவற்றை “டோரி வேலைநிறுத்தங்கள்' என்று கண்டித்து, ஒரு வேலையிட நடவடிக்கையை எதிர்ப்பதுடன் அதைத் தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தி தடுத்திருக்க முடியுமென கூறுகிறது.
தொழிற்கட்சியின் தீவிர வலதுசாரி தன்மையை அசாதாரணமாக எடுத்துக்காட்டும் விதமாக, இரயில்வே வேலைநிறுத்த மறியல் களங்களில் கலந்து கொள்ள வேண்டாமென ஸ்டார்மர் அவர் முன்னணி பிரமுகர்களுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு கலந்து கொண்ட 5 பேரையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இரயில்வே வேலைநிறுத்தங்களுக்குத் தொழிற் கட்சி விரோதமாக இருப்பது ரஷ்யாவுக்கு எதிரான போரை அது ஆதரிப்பதுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. உக்ரேன் போர் வெடித்த போது, 'பொருளாதார வலியை' பொருட்படுத்தாமல் 'பிரிட்டிஷ் மக்கள்' “தியாகங்கள் செய்ய' தயாராக இருக்க வேண்டுமென ஸ்டார்மர் கோரினார். மறியல் களங்களுக்குச் செல்லும் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தண்டிக்க அச்சுறுத்தியது போல, தொழிற் கட்சியின் கோர்பனிச தொங்கு தசையாக உள்ள 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் Stop the War Coalition (போரை நிறுத்துங்கள் கூட்டணி) அமைப்புக்கான அவர்களின் ஆதரவைத் திரும்பப் பெற்று, “நேட்டோவுக்கு அசைக்கவியலாத ஆதரவை' அவர்கள் காட்டாவிட்டால் அவர்கள் நீக்கப்படுவார்கள் என்று மே மாதம் எச்சரித்திருந்தார். அந்த கோர்பனிச 'இடது' உடனடியாக அடிபணிந்தது.
சாமானியத் தொழிலாளர் குழுக்களையும், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான போராட்டத்தையும் கட்டமைப்போம்
ஜோன்சன் அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்குத் தொழிலாள வர்க்கத்திற்கு நிலைமைகள் உள்ளன. நாடெங்கிலும் வேலையிடங்களிலும் மறியல் களங்களிலும், இரயில்வே தொழிலாளர்களுக்காக வெளிப்படும் அனுதாபத்திற்கு மத்தியில், வேலைநிறுத்தங்கள் பற்றிய பேச்சுக்கள் உள்ளன. அதை எதிர்த்துப் போராடுவதற்கான முன்னோக்கு இருந்தால், தொழிலாள வர்க்கம் தனது போராட்டங்களை ஒரு பொது வேலைநிறுத்தத்தில் ஒன்றிணைக்க முடியும்.
இதைச் செய்ய, ஒவ்வொரு ஆலையிலும் வேலையிடத்திலும் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சியும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் வலியுறுத்துகிறது. இது வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு புதிய பாதையைத் திறந்துவிடும் என்பதோடு, இதில் தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையான பிரதிநிதிகள் தலைமை ஏற்று, திருப்பித் தாக்குவதற்கான ஒவ்வொரு மோதலையும் நாசப்படுத்துவதற்கான அதிகாரத்துவவாதிகளின் முயற்சிகளை தோற்கடிக்க முடியும்.
கடந்த வாரங்களில், கிரீஸ், இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் பொது வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளன. துருக்கியில் தொழில்துறை நடவடிக்கை அலைகள் மெதுவாக மேலெழுந்து வருகின்றன. திங்கட்கிழமை பெல்ஜியத்தில் மற்றொரு தேசிய வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது, 80,000 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தலைநகர் புரூசெல்ஸ் ஸ்தம்பித்தது. வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் புரூசெல்ஸ் ஏர்வேஸ் வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட உள்ளன என்பதோடு, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் ரையனேரில் வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட உள்ளன. பெல்ஜியத்தின் ரையனேர் தொழிலாளர்களுடன் இந்த வாரம் நெடுகிலும் ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் தொழிலாளர்களும் இணைய உள்ளார்கள் என்பதுடன், ஸ்பெயினின் ஈஸிஜெட் தொழிலாளர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்ய உள்ளார்கள்.
இரயில்வே தொழிலாளர்கள் பின்னால் அணி திரண்டவாறு, பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் ஒரு தீர்மானகரமான தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதல் ஐரோப்பிய அளவிலும் சர்வதேச அளவிலும் அபிவிருத்தி அடைந்து வரும் வர்க்கப் போராட்டங்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த மையப் புள்ளியாக இருக்கும் என்பதோடு, உத்வேகத்தையும் வழங்கும். அவை அவற்றின் பாதையில் போர் வெறியர்களைத் தடுத்து நிறுத்தும்.
மேலும் படிக்க
- அரசாங்க தாக்குதல்களுக்கு மத்தியில் பிரிட்டிஷ் இரயில் வேலைநிறுத்தம் வலுவாக உள்ளது
- பிரிட்டிஷ் இரயில்வே வேலைநிறுத்தம்: ஜோன்சன் அரசாங்கத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவோம்!
- இங்கிலாந்தில் இரயில் வேலைநிறுத்தங்கள் இந்த வாரம் தொடங்குகின்றன: தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த மூலோபாயம் தேவை