UAW தலைவர் பதவிக்கு போட்டியிட வில்லியம் லெஹ்மன் பரிந்துரைக்கப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மாக் ட்ரக்ஸ் தொழிலாளியும் சோசலிசவாதியுமான வில் லெஹ்மன், அக்டோபரிலும் நவம்பரிலும் நடைபெறும் தேர்தலில் ஐக்கிய வாகனத் தொழிற்சங்கத்தின் (UAW) தலைவர் பதவிக்கு போட்டியிட பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை பிற்பகல் டெட்ராய்டில் நடந்த UAW 38 ஆவது தேர்ந்தெடுப்பு மாநாட்டின் தளத்திலிருந்து இரண்டு பிரதிநிதிகளால் லெஹ்மன் பரிந்துரைக்கப்பட்டார். அவர் தான் பரிந்துரைக்கப்படுவதை ஏற்றுக்கொண்டார் மற்றும் 70 ஆண்டுகளில் முதன்முறையாக நடக்கும் UAW இன் நேரடி தேர்தலில் தற்போதைய தலைவர் ரே கரி மற்றும் ஏனைய வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவார்.

ஜூலை 26, 2022 அன்று UAW தேர்ந்தெடுப்பு மாநாட்டில் வில் லெஹ்மன் பிரதிநிதிகளிடம் பேசுகிறார் (WSWS Photo)

அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் வாகனத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு தேர்தல் முன்மொழிதல் என்பது மிகப்பெரிய சாதனையாகும். பல தசாப்தங்களாக காட்டிக்கொடுப்புகளையும் தோல்விகளையும் மேற்பார்வையிட்டதான UAW இல் உள்ள அதிகாரத்துவ எந்திரத்தின் பிடியை உடைக்க ஒரு சக்திவாய்ந்த சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்க வில் போராடுகிறார். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் மற்றும் பணியிடத்திலும் சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களைக் கட்டமைப்பதற்கான, மற்றும் உலகளாவிய பெருநிறுவனங்களுக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான அவரது பிரச்சாரம், தொழிலாளர்கள் மத்தியில் ஒரு சக்திவாய்ந்த ஆதரவை வென்றுள்ளது.

லெஹ்மனை போட்டியிடவிடாமல் தடுக்க முயற்சித்த UAW அதிகாரத்துவத்தின் கணிசமான மிரட்டலையும் மீறி அவரை மாநாட்டில் இரண்டு பிரதிநிதிகள் பரிந்துரைத்தனர்.

அவரை முதலில் பரிந்துரைத்தவர் டெட்ராய்ட்டை சேர்ந்த ஒரு மூத்த தொழிற்சாலை தொழிலாளி ஆவார். “UAW லோக்கல் 677 இல் இருந்து வில் லெஹ்மனை UAW இன் தலைவராக பரிந்துரைப்பதை நான் ஆதரிக்கிறேன்” என்று அத்தொழிலாளி கூறினார்.

அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து நிமிடங்களில் மீதியை UAW அதிகாரத்துவத்தில் உள்ள ‘திருடர்களை’ விமர்சிக்கப் பயன்படுத்தினார். அதாவது, தற்போதைய UAW சர்வதேச நிறைவேற்றுக் குழுவின் (International Executive Board-IEB) உறுப்பினர்கள் ‘தவறான செயல்களை மூடி மறைத்துள்ளனர்’ என்று கூறினார். அப்போது UAW துணைத் தலைவர் டெர்ரி டிட்டெஸூம் மாநாட்டின் ஏனைய பிரதிநிதிகளும் அவரை குறுக்கிட முயன்றபோது, தொழிலாளி தனது நிலைப்பாட்டில் நின்று, ஊழலை மூடிமறைப்பதில் உடந்தையாக இருந்த சர்வதேச நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர் ‘வேறு தொழிலைத் தேட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

சில நிமிடங்களுக்குப் பின்னர் சிகாகோவிலிருந்து மற்றொரு பிரதிநிதி ஒலிவாங்கிக்கு வந்து இவ்வாறு கூறினார், “நான் வில் லெஹ்மனை தலைவர் பதவிக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்த இளைஞர் அதிகாரத்தை நம் கையில் மீட்டுக் கொடுக்க விரும்புகிறார். நமது தொழிற்சங்க முடிவுகளை நாம்தான் எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்: நாம் என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம். அவர் செய்ய விரும்புவது அவ்வளவுதான். அவர் அதிகாரத்துவத்தை விரும்பவில்லை. நமது நலன்கள், சேவை பற்றிய முடிவுகளை சர்வதேச அளவில் மற்ற தொழிற்சங்கங்களுடன் மரியாதையுடன், சமமாகவும் ஒன்றாகவும் இணைந்து எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்”.

பல தசாப்தங்களாக, UAW தலைவர்களும் தொழிற்சங்கத்தின் ஏனைய உயர்மட்ட நிர்வாகிகளும், UAW அதிகாரத்துவம் மற்றும் அதன் ஆளும் நிர்வாகக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், விசுவாசமான ஆதரவாளர்களுடன் கைக்கோற்கப்பட்ட தேர்ந்தெடுப்பு மாநாடுகளின்போது அவர்கள் நியமிக்கப்பட்டனர்.

UAW இல் உள்ள பரவலான ஊழல் அம்பலப்படுத்தப்பட்டதன் காரணமாக மட்டுமே இந்த முறை மாற்றப்பட்டது. இது இரண்டு தேசியத் தலைவர்கள் உட்பட ஒரு டஜன் தொழிற்சங்க அதிகாரிகளை சிறையில் அடைக்கவும் மற்றும் நேரடித் தேர்தல்களில் வாக்கெடுப்பை மேற்பார்வையிட்ட நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளரை நியமிக்கவும் வழிவகுத்தது. ரே கரியும் சர்வதேச நிறைவேற்றுக் குழுவும் ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்பதை மாற்றுவதை பிடிவாதமாக எதிர்த்தனர். ஆனால் UAW உறுப்பினர்கள் 2 க்கு 1 என்ற வித்தியாசத்தில் அவர்களை தோற்கடித்தனர்.

இருந்தபோதிலும், UAW அதிகாரத்துவம், தலைவர் வேட்பாளர்களின் பட்டியலை தற்போதைய தலைவர் ரே கரி மற்றும் அதிகபட்சமாக, ஜனநாயகத்திற்காக அனைத்து தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தும் (Unite All Workers for Democracy – UAWD) குழுவுடன் இணைந்த அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் ஆதரவைப் பெற்றவரும், UAW இன் ஒற்றுமை மத்திய தலைமையகத்தின் சர்வதேச சேவை பிரதிநிதியுமான ஷான் ஃபைன் உட்பட ஒரு சில விசுவாசமான எதிர்ப்பாளர்களுடன் கட்டுப்படுத்தும் என்று நம்புகிறது.

சமீபத்தில் டெட்ராய்ட் டீசல் தொழிலாளர்களின் போராட்டத்தை விற்று முடித்த UAW லோக்கல் 163 தொழிற்சாலைத் தலைவரான மார்க் ‘கிப்பி’ கிப்சனுடன் ஃபைன் புதன்கிழமை பரிந்துரைக்கப்பட்டார். மேலும், ‘UAW Real Talk’ முகநூல் பக்கத்துடன் தொடர்புடைய மிச்சிகனின், வாரன் நகரிலுள்ள ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளியான பிரையன் கெல்லரும் பரிந்துரைக்கப்பட்டார்.

வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாளில், லெஹ்மனும் அவரது ஆதரவாளர்களும் ஸ்டெல்லாண்டிஸ் (கிரைஸ்லர்) வாரன் கனவூர்தி ஒருங்கமைப்பு ஆலையில் நூற்றுக்கணக்கான வாகனத் தொழிலாளர்களுடன் பேசினர். தொழிலாளர்கள் தங்கள் பிற்பகல் மாற்றுப்பணியின் போது வில்லை அன்புடன் வரவேற்றதுடன், அவர்கள் தேர்தலில் உண்மையான தேர்வைப் பெறும் வகையில் மாநாட்டில் உள்ள பிரதிநிதிகள் லெஹ்மனை நியமிக்க வேண்டும் என்று பலரும் கோரினர்.

பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள UAW எந்திரத்தை ஒழித்துக்கட்டவும், தொழிற்சாலை மற்றும் பணியிடங்களில் சாமானிய ஜனநாயக தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் தொழிற்சாலைகளில் சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தை நிறுவவும், மற்றும் பாரிய ஊதிய உயர்வுகளுக்காக போராட அனைத்து தொழிலாளர்களையும் அணிதிரட்டவும், வாழ்க்கைச் செலவு பாதுகாப்புக்களை மீட்டெடுக்கவும், அனைத்து அடுக்குகளுக்கும் முடிவு கட்டவும், அனைத்து பகுதி நேர பணியாளர்களையும் உடனடியாக மாற்றவும், மற்றும் நிறுவனம் அனைத்து தொழிலாளர்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு கட்டணங்கள் மற்றும் ஓய்வூதியத்தை வழங்கவும் போராடக்கூடிய ஒரே வேட்பாளராக லெஹ்மன் மட்டுமே உள்ளார்.

அவரது வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர், வில், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு அவர் கொண்டுவரவுள்ள திட்டம் பற்றி உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) பேசினார். “UAW இல் உள்ள அதிகாரத்துவத்தை ஒழிக்க தொழிலாளர்களுக்காக நான் போராடுவேன். அது நம்மீது ஒரு ஒட்டுண்ணி அடுக்கு போல் செயல்படுகிறது மற்றும் நமது போராட்டங்களை தடுக்கிறது அல்லது அவற்றை ஒரு முட்டுச்சந்திற்கு இட்டுச் செல்கிறது” என்றார்.

மேலும், “சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees - IWA-RFC) உருவாக்குவதற்கான போராட்டத்தை நான் முன்னெடுத்துச் செல்வேன். அதாவது, தொழிலாளர்கள் நமது போராட்டங்களை விரிவுபடுத்தி, அவற்றை ஒருங்கிணைத்து, தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட இழப்புக்கள் எதுவும் இல்லாமல் வெற்றி கிடைக்கும் வகையில் போராடலாம். தொழிலாளர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் தொழிலாளர்கள் நாம் இருக்கும் சூழ்நிலையையும் அதிலிருந்து வெளியேற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்தால் மட்டுமே இந்த மாற்றங்கள் சாத்தியமாகும். நாம் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பணியிடத்திலும் தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வேண்டும், உண்மையான ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும், அதாவது UAW அதிகாரத்துவத்தினர் நமக்குத் துரோகம் செய்கையில் அவர்கள் நம்மிடம் பிரசங்கிக்கும் ஒற்றுமையை அல்ல. அது தொழிலாளிக்கு தொழிலாளி, ஒவ்வொரு தொழிற்சாலையிலும், மற்றும் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

“தேசிய நலன்களை கருத்தில் கொண்டு நாம் செயல்பட முடியாது. ஆனால் வர்க்க நலன்களை கொண்டு செயல்பட முடியும். ரே கரி பைடென் நிர்வாகம் மற்றும் பிற ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றுகிறார். ஆனால் ஜனநாயகக் கட்சியோ அல்லது குடியரசுக் கட்சியோ தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. நாம் நம்மை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் மற்றும் அதன் அடிப்படையில் சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும்” என்றும் கூறினார்.

தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் கடினமான சவால்களைப் பற்றி லெஹ்மன் மேலும் இவ்வாறு கூறினார், “தொழிலாளர்கள் பெருநிறுவனங்களுடன் மட்டுமல்ல, ஒரு அதிகாரத்துவத்துடனும் போராடுகிறார்கள். UAW க்கு இப்போது 9 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள பணவீக்கத்தை எதிர்த்துப் போராடும் எண்ணம் இல்லை. நாங்கள் உண்மையான ஊதியத்தில் பெரும் வெட்டுக்களை எதிர்கொள்கையில் புதிய ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். ஆனால் நிறுவனங்கள் வழமை போல் எப்படியும் ஒப்பந்தங்களைப் புறக்கணிக்கின்றன.”

“உக்ரேன் மற்றும் தைவானில் பதட்டங்களுடன் கூடிய ஒரு உலகப் போர் உருவாகி வருகிறது. மேலும் UAW பைடெனின் பொறுப்பற்ற இராணுவ விரிவாக்கத்திற்குப் பின்னால் நம்மை இணைக்க விரும்புகிறது. தற்போது பரவும் ஒரு தொற்றுநோய் உள்ளது. ஆனால் அரசாங்கமும் ஊடகங்களும் எங்களைப் புறக்கணிக்க விரும்புகின்றன. காரணம் தொழிற்சாலைகளில் நாங்கள் அவர்களுக்காக இலாபமீட்டித் தர வேண்டும் என்றே அவை விரும்புகின்றன” என்றும் கூறினார்.

“இப்போது ஃபோர்டு, ஸ்டெல்லாண்டிஸ் மற்றும் GM நிறுவனங்களின் வேலை வெட்டுக்கள் மற்றும் பொருளாதார மந்தநிலையின் அச்சுறுத்தல்கள் உள்ளன. ஆட்குறைப்பு பற்றி UAW அலட்சியமாக இருப்பதுடன், அதை எதிர்த்துப் போராடும் எண்ணமும் அதற்கில்லை. மாறாக, ‘வேலைகளை பாதுகாக்கும்’ பெயரில் குறைவான ஊதியங்களை பரிந்துரைக்க அது திட்டமிட்டுள்ளது. ஆனால் UAW இன் அனைத்து வேலைப் பாதுகாப்பு வாக்குறுதிகளும் எதற்கும் பொருந்தவில்லை. எல்லா இடங்களிலும் இதே நிலைதான் உள்ளது. உதாரணமாக, ஃபோர்டு நிறுவனம் இந்தியாவின் சென்னை மற்றும் ஜேர்மனியின் சார்லூயிஸ் நகரங்களில் உள்ள அதன் ஆலைகளை மூடுகிறது, மேலும் தொழிற்சங்கங்கள் அதை அப்படியே ஏற்கின்றன” என்று கூறினார்.

மேலும், “முதலாளித்துவ அமைப்பு வேலைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. மாறாக இலாபத்தை மட்டும் பெருக்குவதுடன், ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் முடிந்த அளவு இலாபத்தை பிழிந்தெடுக்கிறது. தொழிற்சங்கங்கள் முதலாளித்துவத்தை ஆதரிக்கின்றன. ஆனால், தொழிலாளர் உரிமைகளை அல்லாது நிறுவனத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பின் கீழ் நாம் ஏன் செயல்பட வேண்டும்? தொழிலாளர்களாகிய நாம்தான் இந்த சமுதாயத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பதால், எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்கக்கூடிய ஒரே பிரிவினராக நாம்தான் உள்ளோம். தொழிலாளர்கள் கொண்டிருக்கும் மிக ஆபத்தான கருத்து என்னவென்றால், அது எப்போதும் இவ்வாறே இருக்கும் என்று நம்புவதுதான். அதாவது, இந்த முதலாளித்துவ அமைப்பு இயங்கவில்லை என்றால், நாம் அமைப்பை மாற்ற வேண்டும்” என்றும் கூறினார்.

Loading