மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலக சோசலிச வலைத் தளம், ஐக்கிய வாகனத் தொழிலாளர்களின் (UAW) தலைவருக்கான வில் லெஹ்மனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒப்புதல் அளிக்கிறது, மேலும் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் அதற்கான பரந்த சாத்தியமான ஆதரவை வலியுறுத்துகிறது. பென்சில்வேனியாவின் மாக்கன்கி இல் உள்ள மாக் ட்ரக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 34 வயதான லெஹ்மன் ஒரு சோசலிஸ்ட், கடந்த வாரம் ஒரு காணொளி அறிக்கையுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
லெஹ்மன் தனது வீடியோவில் குறிப்பிடுவதுபோல, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் எதிர் தாக்குதலின் ஒரு பகுதியாக UAW இன் அதிகாரத்துவ எந்திரத்திற்கு எதிராக சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை அபிலிருத்தி செய்வதே அவரது பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
'எனது பிரச்சாரம் மற்றெல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டது' என லெஹ்மன் கூறுகிறார், 'ஏனென்றால் ஒரு அதிகாரத்துவ அதிகாரியை இன்னொரு அதிகாரியால் பிரதியீடு செய்வது, UAW இன் 'சர்வதேச' அல்லது உள்ளூர் மட்டத்தில் உள்ள அதிகாரத்துவத்தின் தன்மை குறித்து எதையும் மாற்றாது என நான் வலியுறுத்துகிறேன். அதிகாரத்துவம் அல்ல, தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம் நமது சுயாதீனமான பலத்தை நாம் ஒழுங்கமைக்கும் அளவிற்கு மட்டுமே மாற்றம் நிகழும்.
பாரிய UAW அதிகாரத்துவத்தை இடித்துத் தள்ளுவதற்கும், தொழிலாளர்கள் மீதான அதன் பிடியை உடைப்பதற்கும், லெஹ்மனின் இணைய தளம் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைக்கிறது. இவை அவற்றில் அடங்கும்:
- தொழிலாளர்களை விற்றுத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஆறு புள்ளி சம்பளங்களைப் பெறும் நிர்வாகிகள் மற்றும் பிற தலைவர்களின் உயர்த்தப்பட்ட பதவிகள் மற்றும் சம்பளங்களை நீக்குதல்;
- UAW-பெரிய மூன்று 'கூட்டுப் பயிற்சி' திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல். இது நிறுவனங்கள் UAW இல் பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்த அனுமதித்தது;
- அனைத்து ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள், வாக்கு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை;
- தொழிலாளர்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டத்தை விரிவுபடுத்துதல், முக்கிய ஊதிய உயர்வுகள், அனைத்து அடுக்குகளையும் ஒழித்தல், பணவீக்கம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் செயலில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க COLA வை உயர்த்துகிறது.
லெஹ்மனின் பிரச்சாரம் ஒரு அசாதாரணமான மற்றும் தீவிரமடைந்து வரும் நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது, இது அமெரிக்காவில் அதன் மிகச் செறிவான வெளிப்பாட்டைக் காண்கிறது. முதலாளித்துவம் —அதாவது, பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் இலாப நலன்களுக்கு எல்லாவற்றையும் அடிபணியச் செய்யும் ஒரு சமூக மற்றும் பொருளாதார அமைப்பு— ஒவ்வொரு கட்டத்திலும் அதன் திவால்நிலையை நிரூபித்து வருகிறது.
அமெரிக்கா, சமூக சமத்துவமின்மையின் அதிர்ச்சியூட்டும் அளவுகளால் வகைப்படுத்தப்படுகிறது, இது தொற்றுநோயின் இரண்டரை ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. நாடு சிதைந்து கொண்டிருக்கிறது. உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சமூக உள்கட்டமைப்பு ஆகியவை குழப்பமான நிலையில் உள்ளன, இது நீண்டகால பணியாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆளும் வர்க்கம் சுரண்டலை பெரிதும் தீவிரப்படுத்த முயற்சிப்பதன் மூலம் பதிலளித்தது, இது வேலையில் விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் பட்டறைகளில் இறப்பதற்கும் வழிவகுத்தது.
கடந்த திங்கட்கிழமை இல்லினோய் மாகாணத்தில் உள்ள ஹைலாண்ட் பூங்காவில் நடந்ததைப் போன்ற கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அமெரிக்காவில் தினசரி நடைபெறுகின்றன. COVID-19 தொற்றுநோய் அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது மற்றும் தினசரி 100,000 க்கும் அதிகமான மக்களைத் தொடர்ந்து பாதிக்கிறது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக வேகமாக அதிகரித்து வரும் அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாசிச சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல் ஆகியவற்றுடன் அணுசக்தி மோதலாக அதிகரிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் இதே நிலைமைகள் நிலவுகின்றன. இருப்பினும், தொழிலாளர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள போராடத் தொடங்கியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள முக்கிய வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற தொழிலாளர் போராட்டங்கள் துரிதப்படுத்தப்படுகின்றன, இது உணவு மற்றும் பெட்ரோல் விலையை உயர்த்துவதன் மூலம் தூண்டப்படுகின்றன.
கடந்த மாதம், இங்கிலாந்தில் பல்லாயிரக்கணக்கான இரயில் தொழிலாளர்கள் ஒரு தலைமுறையின் முதல் தேசிய இரயில் வேலைநிறுத்தத்தில் வெளிநடப்பு செய்தனர். சமீபத்திய வாரங்களில், சர்வதேச விமானத் துறையில் வேலைநிறுத்தங்கள் அல்லது வேலைநிறுத்த வாக்கெடுப்புகள் வேகமாக பரவி வருகின்றன.
இந்தியாவின் கரையோரத்தில் உள்ள தீவு நாடான இலங்கையில், மார்ச் மாதம் முதல் முறையாக பெரும் வெகுஜனப் போராட்டங்கள் வெடித்தன. உணவு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் காரணமாக ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்கள் தொடர்ந்தன. கடந்த வாரம், தீவில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைக்குச் செல்வதற்கான எரிபொருள் மற்றும் போக்குவரத்தை வேண்டுமென்றே பறித்ததற்காக அரசாங்கத்தை அவர்கள் கண்டித்தனர். இதனால் தேசிய சுகாதார சேவையும் வீழ்ச்சியடையும் என அச்சுறுத்தினர்.
ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் வேலைநிறுத்தங்கள் பிரேசில் முதல் உகாண்டா வரை, ஆஸ்திரேலியா முதல் சீனா வரை, ஒரு நாடு மாறி இன்னொன்றாக, உண்மையான ஊதிய வீழ்ச்சி மற்றும் பள்ளி வரவு-செலவுத் திட்டங்களில் வெட்டுக்கள் ஆகிய இரண்டின் மீதான கோபத்தால் உந்தப்பட்டு வருகின்றன. மேலும் உலகளாவிய வாகன மற்றும் கனரக உபகரணத் தொழில்களில், போர்க்குணமிக்க போராட்டங்கள் உருவாகி வருகின்றன. தென் கொரியாவில், உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தில் 40,000க்கும் மேற்பட்ட வாகனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில், பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பதில் தொழிற்சங்க எந்திரத்தை வலுப்படுத்த முயற்சிப்பதும், நிர்வாகம் மற்றும் அரசின் கட்டமைப்புகளில் அதை நேரடியாக ஒருங்கிணைப்பதும் ஆகும். பைடென் தன்னை 'வரலாற்றில் மிகவும் தொழிற்சங்க சார்பு ஜனாதிபதி' என்று அழைக்கும் போது, அவரது நிர்வாகம் தொழிற்சங்க எந்திரமும் அதன் சிறப்புரிமை பெற்ற நிர்வாகிகளும் சிக்கன மற்றும் போரை ஏற்றுக்கொள்ள தொழிலாளர்களை கட்டாயப்படுத்துவதற்கு முக்கியமானதாக கருதுகிறது.
எவ்வாறாயினும், உலக சோசலிச வலைத் தளம் நீண்டகாலமாக முன்னறிவித்தது போல், உலக வர்க்கப் போராட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட வெடிப்பு, கடந்த நான்கு தசாப்தங்களாக ஆளும் வர்க்கத்தின் சார்பாக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியின் வடிவத்தை எடுத்துள்ளது.
பெருநிறுவன-சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் கிளர்ச்சியானது கடந்த ஆண்டு தொழிற்சங்கங்களால் ஆதரிக்கப்பட்ட ஒப்பந்தங்களை பெருமளவில் நிராகரித்ததில் அதன் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்டது. மே 2021 இல் வொல்வோ லாரி தொழிலாளர்கள், நிறுவன சார்பு ஒப்பந்தத்தை 91 சதவீதம் நிராகரித்ததில் தொடங்கி, UAW ஆல் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்சம் எட்டு ஒப்பந்தங்களை தொழிலாளர்கள் பெருமளவில் நிராகரித்தனர்.
மிக சமீபத்தில், கிராமப்புற மிச்சிகனில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் ஆலையான வென்ட்ரா எவார்ட்டில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் UAW பேச்சுவார்த்தைக் குழுவால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு எதிராக 95 சதவீதம் பேர் வாக்களித்தனர், UAW இன் சர்வதேச பிரதிநிதி டான் கோஷெபா, தொழிலாளர்களிடம் அவர்கள் தகுதியற்றவர்கள் மற்றும் சிறந்த ஊதியங்களைப் பெற மாட்டார்கள் என்று கூறினார். அவர் கொடுத்த காரணம் என்னவென்றால், தொழிலாளர்கள் 'பெரிய மூன்று [வாகன உற்பத்தியாளர்கள்] அல்ல'. (இவை: ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் டைம்லர்-கிறைஸ்லர்).
கடந்த ஆண்டு பல போராட்டங்களில், தொழிலாளர்கள் சுயாதீன அமைப்பை நோக்கி முதல் படிகளை எடுத்து வைத்துள்ளனர். வொல்வோவில், உதிரிபாகங்களைத் தயாரிக்கும் டேனா இன்க்., விவசாய உபகரண நிறுவனமான ஜோன் டியரிலும், இப்போது வென்ட்ராவிலும், சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழு உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சாலைக் குழுக்களை உருவாக்கியுள்ளனர். அவர்களின் குறிக்கோள், அவர்களின் தேவைகளை வெளிப்படுத்துவதும், வாதிடுவதும், அவர்களின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதும், தொழிற்சங்கத் தலைவர்களால் திணிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தகவல் பற்றாக்குறையை தாண்டிவருவதும் ஆகும்.
இந்த ஆண்டு UAW தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவின் தேர்தல், 2017இல் இருந்து தொழிற்சங்கத்தை பகிரங்கமாக உலுக்கிய ஊழல் நெருக்கடியில் அரசின் தலையீட்டின் காரணமாக மட்டுமே நடக்கிறது. கூட்டாட்சி விசாரணையின் வெளிப்பாடுகள் தொழிலாளர்கள் நீண்டகாலமாக சந்தேகித்ததை உறுதிப்படுத்தியது: UAW, பெருநிறுவனங்களின் ஊதியத்தில் மோசடி செய்பவர்கள் மற்றும் குண்டர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
எவ்வாறாயினும், UAW என்பது ஒரு உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கின் ஒரு வெளிப்படையான வெளிப்பாடு மட்டுமே. ஒரு பிற்போக்கு தேசியவாத நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு, தொழிற்சங்கங்கள் 1970களின் பிற்பகுதியில் பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் கருவிகளாக மாறுவதன் மூலம் உற்பத்தியின் பூகோளமயமாக்கலுக்கு பதிலளித்தன. வணிகம் மற்றும் அரசுடன் தொழிற்சங்கங்களின் நெருக்கமான ஒருங்கிணைப்பு, தொழிற்சங்க எந்திரத்தின் செல்வம் மற்றும் சலுகைகளில் பாரிய அதிகரிப்புடன் ஒத்துப்போகிறது. அது, கணிசமான பங்குகள் மூலம் பொருள்சார் நலன்களை வளர்த்துக் கொண்டது, இது அதை தொழிலாளர்களின் நலன்களுடன் முரண்பட வைத்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், லெஹ்மன் தனது பிரச்சாரத்தின் மையத்தில் சர்வதேச நோக்குநிலையை வைத்து, தனது காணொளியில்: 'உழைக்கும் மக்கள் அனைவரின் நலன்களையும் மனதில் கொண்டு நாம் போராட வேண்டும், ஏனெனில் நமது போராட்டங்கள் உற்பத்தியின் உலகளாவிய தன்மையால் பிணைக்கப்பட்டுள்ளன' எனக் கூறினார். அவரது பிரச்சாரம் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை (IWA-RFC) அடையாளம் கண்டு ஆதரிக்கிறது என லெஹ்மன் கூறினார். IWA-RFC ஆனது உலக சோசலிச வலைத் தளம் மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளால் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது, இது உழைக்கும் மக்களுக்கு சர்வதேச நிறுவனங்களுக்கு எதிராக உலக அளவில் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் ஐக்கியப்படுத்துவதற்கும் ஒரு நிறுவனக் கட்டமைப்பை வழங்குகிறது.
இந்த பிரச்சாரம், தொழிலாளர்கள் மீது தொழிற்சங்க எந்திரத்தின் பிடியை உடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஒரு நீண்ட பாரம்பரியத்திற்கு ஏற்ப உள்ளது. 1940 ஆகஸ்டில் ஒரு ஸ்ராலினிச முகவரால் அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் 1941 இல் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்ட 'ஏகாதிபத்திய சிதைவின் சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள்' என்ற கட்டுரையில் ட்ரொட்ஸ்கி, 'முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக மட்டுமல்ல, ஆனால் தொழிற்சங்கங்களுக்குள்ளேயே சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும்
இந்த ஆட்சியை அமல்படுத்தும் தலைவர்களுக்கு எதிராகவும் மக்களை அணிதிரட்ட வேண்டியது அவசியம்” என்று எழுதினார்.
எவ்வாறாயினும், அத்தகைய கிளர்ச்சியின் இறுதி குறிக்கோள், தனியார் இலாபம் அல்ல, மாறாக உற்பத்தியின் மீதான தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை நிறுவுவதும், மனித தேவைகளின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைப்பதும் ஆகும். லெஹ்மன் ஒரு சோசலிஸ்டாக இயங்குவதாக தனது அறிக்கையில் விளக்கினார். 'தொழிலாளர்கள் சோசலிசம் பற்றி நிறைய தவறான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்,' என்று அவர் கூறினார். 'ஏனென்றால், அது என்ன என்பது பற்றி பல பொய்யான கருத்துக்கள் உள்ளன,” சோசலிசம் என்பது சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு சமூகமாகும், அங்கு உற்பத்தியானது தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்படுகிறது, ஆனால் பல பில்லியனர்கள் மற்றும் பங்குதாரர்களின் உயரடுக்கால் அல்ல.
UAW தலைவருக்கான லெஹ்மனின் பிரச்சாரம் தகுதியானது மற்றும் அனைத்து உழைக்கும் மக்களின் தீவிரமான மற்றும் ஆற்றல்மிக்க ஆதரவு தேவைப்படுகிறது -
முதலும் முக்கியமானதுமாக, கார் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தொழிலாளர்கள், மாக் மற்றும் வொல்வோ ட்ரக்ஸ் தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் செய்யும் ஜோன் டியர், கட்டர்பில்லர் மற்றும் CNH தொழிலாளர்கள், பட்டதாரி மாணவர்கள், தற்காலிக தொழிலாளர்கள், முழுநேர தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள், அத்துடன் மற்ற UAW இல் உள்ள மற்ற தொழிலாளர்களிடம் இருந்து.
வாகனத் தொழில் துறையை மையமாகக் கொண்டாலும், அனைத்துத் தொழில்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த பிரச்சாரம் ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது. WSWS அனைத்து தொழிலாளர்களையும் தங்கள் தொழிற்சாலைகள், பண்டகசாலைகள் மற்றும் பணியிடங்களில் நடவடிக்கை குழுக்களின் வளர்ச்சிக்கான போராட்டத்தில் அவருக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
UAW அதிகாரத்துவம் லெஹ்மனின் வேட்புமனுவை தடுக்க முடிந்த அனைத்தையும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், அதன் வெற்றியானது, பல்வேறு தொழில்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் பரந்த மற்றும் ஒன்றோடொன்று இணைந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கான ஒரு மையப் புள்ளியாக அது எந்த அளவிற்கு மாறுகிறது என்பதைப் பொறுத்தது.
இந்த நோக்கத்திற்காக, WSWS உலகம் முழுவதும் உள்ள அதன் வாசகர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வில் லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு சாத்தியமான பரந்த ஆதரவை கோருகிறது.
வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillForUAWPresident.org ஐ பார்வையிடவும்.
மேலும் படிக்க
- UAW தலைமை வேட்பாளர் வில் லெஹ்மன் வென்ட்ரா மற்றும் GM சப்சிஸ்டம்ஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவைக் கோருகிறார்
- UAW தலைவர் பதவிக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்தை தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர்: "அதற்கு தேவையானது ஒரு தீப்பொறி"
- மாக் ட்ரக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளியான வில் லெஹ்மன் UAW தலைவர் பதவிக்கான பிரச்சாரத்தை அறிவிக்கிறார்