மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சகிக்க முடியாத சமூக நிலைமைகள் மற்றும் மூச்சடைக்கும் அளவிலான சமூகச் சமத்துவமின்மைக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் தொடர்ச்சியான பல சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூகப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
படிப்படியாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் தூண்டப்பட்டு, தொழிலாளர்களைப் பிளவு படுத்துவதற்கும் பலவீனப் படுத்துவதற்கும் ஆளும் வர்க்கத்தால் அமைக்கப்பட்ட பொய்யான தடைகளை இந்தப் போராட்டங்கள் தகர்த்து வருகின்றன. நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இரண்டு பகுதிகளில் இருந்தும், எல்லா இனம் மற்றும் வம்சாவழியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த மற்றும் பல்வேறு சம்பள விகிதங்களைக் கொண்ட தொழிலாளர்கள் இதில் உள்ளனர்.
- விஸ்கான்சினின் ரேசின் மற்றும் அயோவாவின் பர்லிங்டன் ஆகிய இடங்களில் வேளாண் மற்றும் கட்டுமான உபகரண நிறுவனமான CNH இன் 1,200 உற்பத்தித் தொழிலாளர்கள் மூன்று வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல வருடங்களாக நிலவும் சம்பளம் தேக்கம் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்கக் குறைந்தபட்சம் 50 சதவீத சம்பள உயர்வு கோரி வருவதாக அந்தத் தொழிலாளர்கள் WSWS க்குத் தெரிவித்தனர்.
- கலிபோர்னியாவின் ரிச்மாண்டில், செவ்ரான் சுத்திகரிப்பு ஆலையில் 500 எண்ணெய் துறைத் தொழிலாளர்கள் மார்ச் 21 இல் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ரிச்மாண்ட் நாட்டின் மிகவும் செலவு மிக்கப் பிராந்தியங்களில் ஒன்றான சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது, வேலைக்குச் செல்ல ஓட்டிச் செல்லும் அவர்களின் கார்களுக்கு, அவர்கள் சுத்திகரிக்கும், எரிவாயுவை நிரப்பக் கூட அவர்களால் முடியவில்லை என்று அந்தத் தொழிலாளர்கள் WSWS க்குத் தெரிவித்தார்கள்.
- கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் மருத்துவமனையில் சுமார் 5,000 செவிலியர்கள், கணிசமான சம்பள உயர்வு மற்றும் போதுமான அளவுக்குப் பணியாளர்கள் கோரி மே மாத தொடக்கத்தில் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அம்மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சுட்டர் ஹெல்த் மருத்துவமனைகள் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸின் சிடார் சினாய் உட்பட கலிபோர்னியா முழுவதிலுமான மருத்துவமனைகளில் சமீபத்திய வாரங்களில் வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன.
- அயோவா, இண்டியானா, நியூ யோர்க் மற்றும் டென்னசியில் உள்ள ஆர்கோனிக் ஆலையின் கிட்டத்தட்ட 3,500 அலுமினியத் துறைத் தொழிலாளர்கள் கடந்த வாரம் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஒருமனதாக வாக்களித்தனர். மற்ற இடங்களில் உள்ள அவர்களின் சகோதர சகோதரிகளைப் போலவே, ஆர்கோனிக் ஆலைத் தொழிலாளர்களும் பாரிய இலாபமீட்டுவதற்காக நிறுவனத்திற்கு மட்டும் 'இன்றியமையாதவையாக' கூறி, அதேவேளையில் பணவீக்கத்துடன் ஒப்பிட்டால் சம்பள வெட்டுக்களுக்கு நிகராக உள்ள அற்ப சம்பள உயர்வுகள் வழங்குவதன் மீது கோபமடைந்து வருகின்றனர்.
- இராணுவ வாகனங்களுக்கான இயந்திரங்கள் தயாரிக்கும், மிச்சிகன் ரெட்ஃபோர்டில் உள்ள டெட்ராய்ட் டீசலில் ஆலையின் 1,300 வாகனத் துறைத் தொழிலாளர்கள், ஆறு ஆண்டுகளின் முடிவில் சம்பளங்களை வெறும் 8 சதவீதம் உயர்த்தும் ஓர் ஒப்பந்தத்தைக் கடந்த வாரம் பெருவாரியாக நிராகரித்தனர், பணவீக்கம் இப்போதைய விகிதத்திற்கு அருகில் நிலைத்தாலும் கூட, இந்த ஆறு ஆண்டுகளில் பணவீக்கம் 45 சதவீதம் அதிகரித்திருப்பதாக இருக்கும்.
- மின்னிசொடாவின் இரட்டை நகரங்கள் மற்றும் இரட்டை துறைமுகங்களில் உள்ள 15,000 செவிலியர்களுக்கான ஒப்பந்தங்கள் அடுத்த மாதம் காலாவதியாகின்றன, செவிலியர்கள் அதிக சம்பள உயர்வுகள் கோரியும், போதுமான பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பான வேலையிட நிலைமைகள் கோரியும் ஜூன் 1 இல் அந்நகர மருத்துவமனைகளில் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கும் மேலாக, அயோவா மற்றும் மின்னிசொடாவின் 400 மனநல செவிலியர்கள் மே 24 இல் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்த உள்ளனர்.
- இந்த மாத தொடக்கத்தில் வாஷிங்டன் டி.சி. இல் ஒரு மதிப்பீட்டின்படி 10,000 செவிலியர்கள், சம்பளம், பணியாளர்கள் மற்றும் இலாப நோக்கம் கொண்ட மருத்துவ அமைப்பு முறை ஆகியவை சம்பந்தமாக போராடினர். அதற்கடுத்த நாள் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் டென்னசி நீதிமன்றத்திற்கு வெளியே போராடினர், அங்கே ஜோடிக்கப்பட்ட ஒரு மருத்துவத் தவறுக்காக செவிலியர் ராடோண்டா வாட் க்கு நன்னடத்தைக் காவல் தண்டனை வழங்கப்பட்டது, இறுதியில் பார்த்தால், இந்த தவறும் கூட பணியாளர் பற்றாக்குறை மற்றும் ஏனைய மருத்துவமனை அமைப்பு முறை பிரச்சினைகளால் ஏற்பட்டதாகும்.
அமெரிக்காவில் தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் உலகளாவிய இயக்கத்தின் ஒரு முக்கியமான பாகமாகும். ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போர் மற்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் பெருந்தொற்று ஆகியவற்றால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் செங்கனல் நெருப்புக்கோல்கள் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களைப் போராட்டத்தில் தள்ளி வருகின்றன.
உலக ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் இந்த கட்டுப்பாட்டு மையம் இதில் விதிவிலக்கல்ல. அமெரிக்காவில், பெப்ரவரி முதல் மார்ச் வரையிலான வெறும் ஒரு மாதத்தில், உக்ரேன் போராலும் அத்துடன் போரிலிருந்து இலாபமீட்டும் எரிபொருள் மற்றும் எரிவாயு பெருநிறுவனங்களாலும் உந்தப்பட்டு, எரிவாயு விலை 18.3 சதவீதம் அதிகரித்தது. மளிகைப் பொருட்களின் விலைகள் முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்தது, இது 1981 க்குப் பிந்தைய மிகப் பெரிய அதிகரிப்பாகும், அதேவேளையில் மின்சாரத்தின் விலை ஆண்டுதோறும் 32 சதவீதம் அதிகரித்தது.
அதே நேரத்தில் சராசரி வாடகை 11 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவின் 22 மில்லியன் இடம் பெயரும் வீடுகளில் வசிப்போர்களின் வாடகை, வரவிருக்கும் மாதங்களில் அதிர்ச்சியூட்டும் வகையில் 70 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனென்றால் இடம் பெயரும் வீட்டு வளாகங்களை வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்து வருகிறார்கள், பின்னர் இவர்கள் இலாபத்திற்காக குடியிருப்போரைக் கசக்கிப் பிழிவார்கள்.
கடன் அட்டை வழி கடன்களின் இந்த நிலத்தில், வட்டி விகித உயர்வுகள் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெள்ளியன்று குறிப்பிடுகையில், கார் மற்றும் வீட்டு அடமானக் கடன்களைக் கட்டத் தவறுவது 'பெப்ரவரியில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது' என்று குறிப்பிட்டது.
ஜேர்னலின் கூற்றுப்படி, கடன்களைச் செலுத்தவியலாத நிலைமைகளின் அதிகரிப்பானது, உண்மையில் சொல்லப் போனால், இந்த கொரொனா வைரஸ் பெருந்தொற்றின் தொடக்கத்தில் நிறைவேற்றிய சமூக திட்டங்களைக் காலாவதியாக அரசாங்கம் அனுமதித்ததன் விளைவாகும், இதன் அர்த்தம் மில்லியன் கணக்கானவர்கள் இப்போது கடன் செலுத்த இயலாத நிலைமையில் உள்ளனர். உக்ரேனில் உள்ள பாசிச படைப்பிரிவுகளுக்கு ஆயுதம் வழங்க கிட்டத்தட்ட இரவோடு இரவாக 40 பில்லியன் டாலரைக் காணும் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளும், ஆனால் உள்நாட்டில் முன்பில்லாத சமூக சிரமங்களைத் தடுக்க போதுமான பணம் இல்லை என்று வாதிடுகின்றன.
புளோரிடாவின் உணவுப் பொருள் வினியோக நிர்வாகி ஒருவர் டாம்பா பே தொலைக்காட்சி சேனலிடம், “எங்கள் வரிசையில் வெவ்வேறு விதமான குடும்பங்கள் வருவதை நாங்கள் பார்க்கிறோம், முதல்முறையாக சில குடும்பங்கள், நடுத்தர வர்க்க குடும்பங்கள் வருவதைப் பார்க்கிறோம், சமூக பாதுகாப்புக்காக சில குடும்பங்கள் வருகின்றன,” என்று கூறும் நிலையில், உணவுப் பொருள் வினியோக மையங்களுக்கான தேவை ஒருபோதும் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை.
பைடென் நிர்வாகத்தின் 'எல்லாம் துப்பாக்கிகளுக்கே வெண்ணெய்க்கு இல்லை' என்ற கொள்கை பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டுள்ளது. அமெரிக்க உணவு வங்கிகளில் மூன்றில் இரண்டு பங்கு வேகமாக அதிகரித்து வரும் தேவையை அனுபவிக்கின்ற போதினும், அவை 'பெடரல் அரசாங்கம் வழங்கும் உணவில் 45 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றன' என்று இம்மாத தொடக்கத்தில் CNN தெரிவித்தது. இலாப நோக்கற்ற அமைப்பான Feeding America இன் ஒரு தலைவர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறினார், “நாம் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்தில் இருக்கிறோம். ஒரு மிகப் பெரிய பட்டினி நெருக்கடியைத் தவிர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.”
'உலகின் மிகப் பணக்கார நாட்டில்' மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் உயிர் பிழைப்பதற்காக அவர்கள் இரத்தத்தை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வியாழக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் $50,000 சம்பளம் பெறும் 41 வயதான ஓர் ஆசிரியரைக் குறித்து எழுதி இருந்தது, அவர் பணத்திற்காக வாரத்திற்கு இரண்டு முறை இரத்தத்தை விற்கிறார். “என் குழந்தைகளுக்கு உணவளிக்க என் இரத்த செல்களை விற்க வேண்டிய நிலையில் நான் இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை' என்று லூசியானாவின் ஸ்லெடைலைச் சேர்ந்த கிறிஸ்டினா சீல் கூறினார். “எனக்குத் தெரிந்த ஒவ்வொரு அரசு திட்டத்திற்கும் விண்ணப்பித்துள்ளேன். உணவு வில்லைகளைப் பெற எனக்கு தகுதி இல்லை, எந்த திட்டத்திற்கும் நான் தகுதி பெறவில்லை.” இரத்த விற்பனை '2006 இல் இருந்து நான்கு மடங்கு அதிகரித்துள்ளன' என்று போஸ்ட் விவரித்தது.
உலகின் நிதிய உயரடுக்கிற்கு, இடைவிடாமல் இலாபம் தேட இன்னும் கூடுதலாக சமூக துயரங்கள் நியாயப்படுகின்றன.
சம்பள அழுத்தங்களைக் குறைக்க எதிர்கால வட்டி விகிதங்களுக்கு உறுதியளித்த பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், “இதில் சில வலிகள் இருக்கலாம்,” என்றார். RBC மூலதனச் சந்தைகளின் உலகளாவிய எரிபொருள் துறைக்கான மூலோபாய மேலாண்மை இயக்குனர் மைக்கெல் டிரான் கூறுகையில், உக்ரேன் போர் இழுத்துக் கொண்டே செல்வதால், “இது ஒரு விலை உயர்ந்த கோடை காலமாக இருக்கப் போகிறது,” என்றார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் Kristalina Georgieva வியாழக்கிழமை ஜி7 நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களிடம் கூறுகையில், 'நாம் இதை சௌகரியமாக ஏற்க பழகிக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன், இதுவே கடைசி அதிர்ச்சியாக இருக்காது,' என்றார்.
அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றுடன் தொழிலாளர்கள் 'வாழ வேண்டி' இருந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர், பொருளாதார கடுமையைத் தொழிலாளர்கள் 'அதிக சௌகரியமாக ஏற்றுக் கொள்ள' வேண்டும் என்ற இந்த வாதம் வருகிறது.
பெருநிறுவனங்களும் அரசாங்கமும் இந்த பெருந்தொற்று முழுவதிலும் இருந்ததைப் போலவே, அவை இந்தப் போராட்டங்களைத் தனிமைப்படுத்தவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நசுக்கவும், உற்பத்தியைத் தொடரவும் தொழிற்சங்கங்களை நம்பியுள்ளன.
ஆர்கோனிக்கில், ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர் சங்கம் (USW) தொழிலாளர்களின் ஒருமனதான வேலைநிறுத்த வாக்கெடுப்பை மீறி, அதற்குப் பதிலாக பணவீக்கத்திற்கும் குறைவான சம்பள உயர்வுகள் கொண்ட ஓர் ஒப்பந்தத்தை முன் நகர்த்த முயன்று வருகிறது, இது தொழிலாளர்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியது. இதே போல், டெட்ராய்ட் டீசல் நிறுவனத்தில், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (UAW) தொழிலாளர்களின் 98 சதவீத வேலைநிறுத்த வாக்குகளை புறக்கணித்து, அவர்கள் ஏற்கனவே நிராகரித்த கிட்டத்தட்ட அதே ஒப்பந்தத்திற்கு வாக்களிக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தி வருகிறது. பெருநிறுவனத்திடம் இலஞ்சம் வாங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் UAW இன் துணைத் தலைவர் நோர்வூட் ஜூவல் தான் கடைசி ஒப்பந்தத்தை பேரம் பேசி முடித்திருந்தார் என்ற உண்மை மீது எழுந்த கோபத்தின் பாகமாகவே CNH இல் இந்த வேலைநிறுத்தம் தூண்டப்பட்டது.
ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர் சங்கத்தின் (USW) தலைவர் டாம் கான்வே, சம்பள உயர்வுகளைப் பணவீக்கத்தை விட குறைவாக வைக்க அவர் சங்கம் உதவும் என்று ஜோ பைடெனிடம் உறுதியளித்தார். எங்கும் ஏற்பட்டிருக்கும் பணியாளர் பிரச்சனைகளுக்குச் சரி செய்ய செவிலியர் சங்கங்கள் எதுவும் செய்யவில்லை. இந்த பெருந்தொற்றின் ஒவ்வொரு அலையின் போதும் ஆசிரியர்களை மீண்டும் பள்ளிக்குத் திரும்புமாறு ஆசிரியர் சங்கங்கள் கட்டாயப்படுத்தி உள்ளன. தொழிலாளர் நன்னடத்தை பேணுகிறோம் மற்றும் வினியோக தடங்களை நிர்வகிக்கிறோம் என்ற பெயரில் அமசன் போன்ற நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் நிறுவுவதை பைடென் நிர்வாகம் செயலூக்கத்துடன் ஊக்குவிக்கும் அளவுக்கு, அரசாங்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தொழிற்சங்கங்கள் மிகவும் முக்கியமாக ஆகி உள்ளன.
ஆனால் வேர்ஜீனியாவில் 3,000 வோல்வோ ஆலை தொழிலாளர்கள் மற்றும் 10,000 ஜோன் டீர் ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் 3,000 டேனா வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை தொழிலாளர்களின் ஒப்பந்தப் போராட்டம் உட்பட, கடந்த ஆண்டில் முக்கியமான அனுபவங்களைத் தொழிலாளர்கள் கடந்து வந்துள்ளனர். இந்த ஒவ்வொரு விவகாரத்திலும், தொழிலாளர்களால் சாமானிய தொழிலாளர் குழுக்களை நிறுவ முடிந்தது, நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவன தொழிற்சங்கங்கள் இரண்டுக்கும் எதிராக அவர்கள் பலத்தை உறுதிப்படுத்தத் தொடங்கினர்.
தொழிலாளர்கள் தனிப்பட்ட முதலாளிமார்களையோ அல்லது பெருநிறுவனங்களையோ எதிர்கொள்ளவில்லை மாறாக உலகின் அரசாங்கங்கள், பொலிஸ் மற்றும் இராணுவங்களால் ஆதரிக்கப்படும் சக்தி வாய்ந்த உலகளாவிய நிதி நிறுவனங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால் தொழிலாளர்கள் தங்களின் வர்க்க ஒற்றுமை, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து அவர்களின் சுயாதீனம், மற்றும் அவர்கள் போராட்டங்களின் சர்வதேச தன்மை ஆகியவற்றில் இருந்து அவர்கள் பலம் பெருகுகிறது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் மகத்தான ஆற்றலைக் கட்டவிழ்த்து விட முடியும்.
உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள தொழிலாளர்கள் அவர்கள் அனுபவங்களைப் பற்றி குறிப்பிடத்தக்க அரசியல் முடிவுகளை எடுத்து வருகின்றனர். அயோவா CNH தொழிலாளர் ஒருவர் சமீபத்தில் WSWS க்குக் கூறியது போல:
இப்போது அதிகமானவர்களின் கண்கள் திறந்துவிட்டது. நீங்கள் வோல்வோ மற்றும் ஜோன் டீரைப் பார்க்கும் போது, அந்தத் தொழிலாளர்கள் கடந்து வந்த அனைத்தையும் பார்க்கும் போது, UAW ஆல் அவர்கள் மீது விஷயங்கள் எப்படி திணிக்கப்பட்டன என்பதை, நிறைய பேர் கவனித்தார்கள். இப்போது உண்மை வெளியே வருகிறது, ஏனென்றால் அது மக்களுக்கு முக்கியமானது. நாம் அனைவரும் நிஜமான மாற்றத்திற்காக பாடுபடுகிறோம், வெறுமனே நமக்காக மட்டுமல்ல, மாறாக ஒவ்வொருவருக்காகவும். இந்த வேலைநிறுத்தம் வெறுமனே நம் வேலையைப் பற்றியது மட்டுமல்ல, இது முதலாளித்துவத்தைப் பற்றியது. இந்த போர் உண்மையில் என்ன அர்த்தப்படுத்துகிறது, விலைவாசி உயர்வு, பைத்தியக்காரத்தனமாக உள்ளது, இது அனைத்தும் ஒன்றிணைந்து செல்கிறது. உலகெங்கிலும் அவர்கள் நம்மை முதலாளித்துவத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள், நாம் கீழே கீழே செல்ல வேண்டுமென விரும்புகிறார்கள்.