மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலகெங்கிலும், வளரும் நாடுகளிலும், மற்றும் முன்னேறிய நாடுகள் என்று அழைக்கப்படுவதிலும் ஒரே மாதிரியாக, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியில், மில்லியன் கணக்கான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பட்டினியை முகங்கொடுக்கிறார்கள்.
பெரிதும் உலகளாவிய கோதுமை விலைகள் அதிகரிப்பால் உந்தப்பட்டு, இந்தாண்டு உணவு விலைகள் 22.9 சதவீதம் அதிகரிக்குமென எதிர்ப்பார்ப்பதாக உலக வங்கி கடந்த மாதம் மதிப்பிட்டுள்ளது. சர்க்கரை, பால் பொருட்கள், தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் பிரிவில் சர்வதேச விலைகளில் மாதாந்திர மாற்றங்களைக் கண்காணிக்கும் FAO உணவுப்பொருள் விலைக் குறியீடு, ஏப்ரல் 2021 இல் இருந்ததை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில், கடந்த மாதம் ஒட்டுமொத்த உணவுப் பொருட்கள் விலை 9.5 சதவீதம் அதிகரித்ததாகவும், இறைச்சி விலைகள் 2021 ஐ விட 20 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் தொழிலாளர் புள்ளிவிபர ஆணையம் கண்டறிந்தது.
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொழிலாளர்களின் சம்பளங்கள் அந்த வேகத்திற்கு ஈடுகொடுப்பதாக இல்லை. பணவீக்கத்தைக் காரணியாகக் கொண்டு பார்த்தால், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, நிதி நடவடிக்கைகள், சுரங்கம் மற்றும் பதிவுத்துறை, உற்பத்தி, கட்டுமானம், கல்வி மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளில் அமெரிக்கத் தொழிலாளர்களின் 'உண்மையான சம்பள அதிகரிப்பு' ஜனவரி 2021 இல் இருந்து ஏப்ரல் 2022 வரை குறைந்திருப்பதாகக் கடந்த வாரம் Business Insider கண்டறிந்தது. வர்த்தகம், உற்பத்தி மற்றும் கட்டுமானம் உட்பட பெரும்பாலான தொழில்துறைகள் மூன்றில் இருந்து நான்கு சதவீதம் வரை சரிவைக் கண்டன.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு உண்மையான சம்பளங்கள் குறைந்து வருவதால், இந்தாண்டு கோதுமை விலைகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பானது ஏற்கனவே உலகளாவிய பட்டினியைக் கணிசமாக அதிகரிக்க வழி வகுத்துள்ளது. 'ஒரு பட்டினி பேரழிவு' என்ற தலைப்பில் ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கை, உலகெங்கிலும் 811 மில்லியன் பேர் அல்லது மனிதகுலத்தில் ஏழில் ஒரு பகுதியினர் 'உணவுப் பாதுகாப்பின்மை' முகங்கொடுப்பதாகவும், ஒவ்வொரு இரவும் 'பட்டினியோடு படுக்கைக்குச் செல்வதாகவும்' மதிப்பிட்டது.
'கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால்' பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2019 இல் 135 மில்லியனில் இருந்து கடந்தாண்டு 276 மில்லியனாக 'இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக' அதே அறிக்கை குறிப்பிட்டது, இந்தாண்டு அது 323 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மதிப்பீட்டின் படி 48.9 மில்லியன் பேர் 'தற்போது பஞ்சத்தின் விளிம்பில்' உள்ளனர், 'பட்டினியால் வாடும்' அபாயத்தில் உள்ளனர்.
இந்த 'அதிர்ச்சிகரமான பட்டினி நெருக்கடி' பின்வரும் நான்கு காரணிகளால் உந்தப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது: போர், காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் தொடர்ந்து பயிர்கள் நாசமாவது, கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட 'பொருளாதார விளைவுகள்' மற்றும் ஒட்டுமொத்தமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை ஆகும். 2019 உடன் ஒப்பிடுகையில் அதே உணவுப் பொருட்களுக்கு 2022 இல் 30 சதவீதம் அதிகமாகச் செலுத்தியதாக WFP குறிப்பிட்டது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு, யுனிசெஃப் ஐ (UNICEF) செவ்வாய்க்கிழமை 'குழந்தைகளுக்கான [அவசர கால] எச்சரிக்கையை' (child alert) வெளியிட இட்டுச் சென்றது, அவசரகால நிதி ஒதுக்கீடு இல்லாவிட்டால் 600,000 குழந்தைகள் உடனடியாக 'மிகக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு' ஏற்படும் ஆபத்தில் இருப்பதாக அது எச்சரித்தது. இந்தக் காரணத்தால் ஏற்படும், தடுத்திருக்கக் கூடிய குழந்தை மரணங்கள், 'படுமோசமாக விரயமாக்குதல்' (severe wasting) என்றும் அழைக்கப்படும் இது, 2016 இல் இருந்து '40 சதவீதத்திற்கும் அதிகமாக' அதிகரித்துள்ளதை அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.
அந்த அறிக்கையுடன் சேர்ந்து வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், UNICEF நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் எழுதினார், 'தடுத்திருக்கக் கூடிய குழந்தை இறப்புகள் மற்றும் குழந்தைகளை வீணாக்கும் நடைமுறையால் குழந்தைகள் பாதிக்கப்படுவது வேகமாக நடைமுறையில் ஒரு வெடி உலையாக மாறி வருகிறது.” யுனிசெஃப்/உலகச் சுகாதார அமைப்பு/உலக வங்கி ஆகியவற்றின் புள்ளிவிவரங்களின்படி, படுமோசமான விரயத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் உலகிலேயே இந்தியா முன்னிலையில் உள்ளது, ஐந்து வயதுக்குட்பட்ட 5.7 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் சுமார் 812,564 குழந்தைகள் கடுமையான வீண்விரயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் பொதுவான பருவக் கால நோய்களால் குழந்தைகள் இறக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதற்கு அடுத்ததாக பாகிஸ்தானில் 678,925 குழந்தைகளும், நைஜீரியாவில் 482,590 குழந்தைகளும், பங்களாதேஷில் சுமார் 327,859 குழந்தைகளும் உள்ளனர்.
உணவு நெருக்கடி வளரும் நாடுகளோடு ஒதுங்கி விடவில்லை. நவீன உற்பத்தியின் பூகோளமயப்பட்ட தன்மை மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது பணவீக்கத்தின் பேரழிவுகரமான தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், பிரிட்டனில் நடத்தப்பட்டு செவ்வாய்கிழமை ஸ்கை நியூஸில் வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, பணவீக்கச் சுமைகளைச் சமாளிக்க, பிரிட்டனில் 27 சதவீதம் பேர் அல்லது சுமார் 10 மில்லியன் பேர் ஏப்ரல் மாதம் 'உணவைத் தவிர்த்து' இருந்ததைக் கண்டறிந்தது. மற்றொரு 65 சதவீதம் பேர் அறை வெப்பமூட்டலை நிறுத்தி செலவுகளைக் குறைக்க முயன்றனர்.
ஏற்கனவே 30 ஆண்டுகளில் இல்லாதளவில் 7 சதவீதத்திற்கு உயர்ந்துள்ள பணவீக்கம் இன்னும் அதிகரித்து வரும் அபாயம் குறித்து திங்கட்கிழமை பொதுச் சபையின் நிதித்துறைக் கமிட்டி முன்னால் பேசுகையில், பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி 'நிறைய நிச்சயமற்றத்தன்மை' இருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
'ஒரு கணம் பேரழிவைக் குறித்து கூறுவதற்காக மன்னிக்கவும், ஆனால் ஒரு பெரும் கவலை உள்ளது,' என்று பெய்லி ஒப்புக் கொண்டார். பெய்லியின் கவலைகளை அலசிப் பார்த்த பிரிட்டிஷ் சில்லறை விற்பனை அமைப்பு மார்க்ஸ் & ஸ்பென்சர் அதற்கடுத்த நாள் அறிவிக்கையில் பிரிட்டனில் உணவு விலை பணவீக்கம் இந்தாண்டு இறுதி வாக்கில் இன்னும் கூடுதலாக 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எச்சரித்தது.
அமெரிக்காவில், நாடு முழுவதும் பெற்றோர்களால் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்டுபிடிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு சில பெற்றோர்கள் விஷயத்தில், இதைக் கண்டுபிடிக்க அவர்கள் மெக்சிகோவுக்கு ஓட நிர்பந்திக்கப்படுகிறார்கள், அதேவேளையில் மற்றவர்களோ மருத்துவமனையைத் தவிர வேறு எங்கும் செல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு மழலைக் குழந்தை மற்றும் பாலர் பள்ளிச் செல்லும் ஒரு குழந்தை என இரண்டு குழந்தைகள் 'நேரடியாகவே ஊட்டச்சத்துக் குறைபாடு சம்பந்தமான' நோய்களால் டென்னசியின் மெம்பிஸில் உள்ள Le Bonheur குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக டாக்டர் மார்க் கோர்கின்ஸ் WHBQ-TVஇல் கூறியதைச் செவ்வாய்கிழமை பல செய்தி நிறுவனங்களும் அறிவித்தன.
'நேரடியான அர்த்தத்தில் இது மெம்பிஸில் மட்டுமல்ல, டென்னசியில் அல்லது தெற்கில் மட்டுமல்ல. உண்மையில் இது வட அமெரிக்கா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று கோர்கின்ஸ் தொடர்ந்து கூறினார். குழந்தைகள் பொறுத்துக் கொள்ளக் கூடிய எந்த மருந்தும் மருத்துவமனையிலோ அல்லது எந்தக் கடைகளிலோ இல்லை என்பதால் IV திரவ மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டதாக டாக்டர் கோர்கின்ஸ் தெரிவித்தார். “விரைவில்' நடவடிக்கை எடுக்காவிட்டால், நிறைய குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக டாக்டர் கோர்கின்ஸ் கூறினார்.
உலகளாவிய எரிபொருள் பற்றாக்குறையே உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கிறது, எரிபொருள் பற்றாக்குறை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஒருபோல பாதித்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி விலை மொத்த 50 மாநிலங்களிலும் 4 டாலருக்கும் அதிகமாக இருப்பதாகவும், தேசியளவில் கலிபோர்னியா ஒரு கேலன் 6.02 டாலருடன் முன்னணியில் இருப்பதாகவும் செவ்வாய்கிழமை முதன்முறையாக வாகனத் துறைக் கூட்டமைப்பு AAA அறிவித்தது.
'எரிபொருள் நிரப்பும் இடங்களில் விலைகள் அதிகமாக இருப்பது, குறைந்த வருமான குடும்பங்களை மிகவும் ஆழமாகப் பாதிக்கிறது, ஏனென்றால் அவர்கள் அவர்கள் வருமானத்தில் அதிக விகிதத்தை அவர்கள் எரிவாயுவிற்காகச் செலவிடுகிறார்கள், அவர்கள் மின்சார வாகனங்கள் ஓட்ட பெரிதும் விரும்புவதில்லை' என்று ரைஸ் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைக்கான பேக்கர் பயிலகத்தின் ஒரு வல்லுனரான மார்க் ஃபின்லே ப்ளூம்பேர்க்கிற்குத் தெரிவித்தார்.
உக்ரேனில் நடந்து வரும் போர் உட்பட பல காரணிகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்குப் பங்களிக்கின்றன. கோதுமையைப் பொறுத்த வரை, ரஷ்யாவும் உக்ரேனும் மொத்த உலகளாவிய கோதுமை ஏற்றுமதியில் 30 சதவீதத்தைக் கணக்கில் கொண்டுள்ளன. எகிப்து மற்றும் சோமாலியா உட்பட 26 க்கும் மேற்பட்ட நாடுகள், அவற்றின் கோதுமை இறக்குமதியில் 50 முதல் 100 சதவீதம் வரை இவ்விரு நாடுகளில் ஒன்றைச் சார்ந்துள்ளன. தற்போது சுமார் 4.5 மில்லியன் டன் கோதுமை கருங்கடல் துறைமுகங்களில் தேங்கி உள்ளது, தொடர்ந்து கொண்டிருக்கும் விரோதங்கள் காரணமாக இவற்றை கப்பலேற்ற முடியாமல் உள்ளது.
இந்தப் போர் வெடித்ததில் இருந்து, 23 நாடுகள் உணவு மீது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன, இது உலகச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படும் மொத்த கலோரிகளில் 17 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி அமைப்பின் உணவு வர்த்தகக் கொள்கைக் கண்காணிப்பாளரின் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. முக்கிய உணவுப் பொருட்களுக்கு அப்பாற்பட்டு, நாடுகள் பொட்டாஷ் மற்றும் நைட்ரஜன் உரங்கள் மீதும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன, இது விலை உயர்வுகளுக்கு வழிவகுக்கிறது. இந்த விலைவாசி உயர்வுகள், பயிர்களைக் குறைத்துப் பயிரிடுவதன் மூலம் நிலைமையைச் சமாளிக்க உலகளவில் விவசாயிகளை நிர்பந்திக்கிறது, இது கூடுதலாக வினியோகத்தைக் குறைத்து, நுகர்வு விலைகளை அதிகரிக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனும் ஜனநாயகக் கட்சியும், உணவு மற்றும் எரிவாயு விலைகள் உயர்வை முற்றிலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தவறு என்று சாட்ட முயற்சித்துள்ளதுடன், பணவீக்கத்தை 'புட்டினின் விலை உயர்வு' என்று திரும்பத் திரும்பக் குறிப்பிடுகின்ற அதேவேளையில், யதார்த்தமோ முற்றிலும் வேறுவிதமாக உள்ளது. உக்ரேன் போர் கூடுதல் அதிகரிப்புகளுக்குப் பங்களித்துள்ளது என்றாலும், உண்மை என்னவென்றால், வாடகை செலுத்த வேண்டியிருக்கும் அல்லது மளிகைப் பொருட்களை வாங்க வேண்டியிருக்கும் எந்தவொரு தொழிலாளிக்கும் தெரியும், பெப்ரவரி 2022 க்கு முன்பே நீண்ட காலமாக விலைகள் உயர்ந்து வந்தன.
யதார்த்தத்தில், விலை உயர்வுகள் மற்றும் பணவீக்க உயர்வானது இரண்டு பெருவணிகக் கட்சிகளும், குறிப்பாக 2008 நிதி நெருக்கடியில் இருந்து, பின்பற்றிய இரண்டு கட்சிகளது ஒருமனதான நிதிக் கொள்கைகளின் விளைவாகும், அப்போது ஜனாதிபதி பராக் ஒபாமா, பெடரல் ரிசர்வ் மூலம், நிதிச் சந்தைகளுக்கு முட்டுக்கொடுக்கவும் மற்றும் பெரும் பணக்காரர்களின் செல்வ வளத்திற்கு உத்தரவாதம் வழங்கவும் பில்லியன் கணக்கான டாலர்களை அச்சிட்டுப் புழக்கத்தில் விட்டார்.
மார்ச் 2020 இல், அமெரிக்க அரசாங்கம் பல ட்ரில்லியன் டாலர் CARES சட்டத்தின் வடிவில் நிதிய தன்னலக் குழுவிற்கு மற்றொரு பாரிய பிணையெடுப்பை வழங்கியது, இது பெப்ரவரி 2020 இல் 4.1 ட்ரில்லியன் டாலரில் இருந்த பெடரல் இருப்பு நிலைக் கணக்கை மே 2022 இல் $8.9 ட்ரில்லியனாக இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்க இட்டுச் சென்றது.
வங்கிகளையும் மற்றும் மிகப் பெரும் செல்வந்தர்களின் பங்குகளையும் காப்பாற்றுவதற்காக அமெரிக்க அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டால், இந்தப் பெருந்தொற்றின் போது அமெரிக்கப் பில்லியனர்களின் செல்வ வளம் 62 சதவீத அளவுக்கு அதிகரித்தது, அதேவேளையில் தொழிலாளர்களின் கூலிகளோ அதே காலகட்டத்தில் வெறும் 10 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக ஏப்ரல் மாத ஆக்ஸ்ஃபாம் அறிக்கைக் குறிப்பிட்டது.
செல்வந்தர்களுக்குப் பிணை வழங்குவதற்கும் போர்ச் செலவுகளுக்கும் தொழிலாள வர்க்கத்தைப் பணம் கொடுக்கச் செய்ய ஆளும் வர்க்கம் தீர்மானித்துள்ளது. கோவிட் தடுப்பூசிகள், குழந்தை வரி நிதியுதவிகள் (child tax credits) அல்லது பெருந்தொற்று தொடர்பான வேலையின்மை திட்டங்களுக்குப் பணம் இல்லை என்று கூறப்படும் அதேவேளையில், இரண்டு பெருவணிகக் கட்சிகளும் உக்ரேனிய இராணுவத்திற்கு இந்தாண்டு 53 பில்லியன் டாலர்கள் வழங்கியுள்ளன.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவும் மற்றும் அடிப்படைப் பண்டங்கள் கிடைக்காததும் உலகெங்கிலும் பாரிய போராட்டங்களைத் தூண்டியுள்ளன. இது இலங்கையில் தொழிலாளர்களின் பாரிய இயக்கத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளுக்கு எதிராக இதே போன்ற பெரிய அளவிலான போராட்டங்கள் துனிசியா மற்றும் பெருவிலும் நடந்துள்ளன.
இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் இணைகின்றன. சுகாதாரத் துறையின் சாமானியத் தொழிலாளர்களின் பலத்தைச் சக்தி வாய்ந்த விதத்தில் காட்டும் வகையில், கடந்த வாரம், டென்னசி செவிலியர் ராடோண்டா வாட் மீது அநீதியான துன்புறுத்தலை எதிர்த்து, கடந்த வாரம், செவிலியர்கள் தொழிற்சங்கத்தை சாராமல் சுயாதீனமாக ஒழுங்கமைத்தனர், இது வழக்கு தொடுத்த வாதி தரப்பினர் ஆறாண்டு காலக் கடுமையான சிறைத் தண்டனைக் கோரி கோரிக்கைகளைப் புறக்கணித்து, அதற்குப் பதிலாக அவரை நன்னடத்தைக் காவலில் வைக்க நீதிபதியை நிர்பந்தித்தது.
கடந்த வாரம் மிச்சிகன் டெட்ராய்டில், டெட்ராய்ட் டீசல் தொழிலாளர்களில் 79 சதவீதம் பேர் ஆறு ஆண்டுகளில் கூலிகளை வெறும் 8 சதவீதமே அதிகரிக்கும் ஓர் ஒப்பந்தத்தைப் பெருவாரியாக நிராகரித்தனர்.
நிதிய தன்னலக் குழு தொடர்ந்து மிகப் பெருமளவில் கொழிக்க வைக்கப்படும் அதேவேளையில், பட்டினியின் அளவு அதிகரித்து வருவது இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் திவால்நிலைமைக்கு ஒரு சான்றாகும். உலகெங்கிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் நுழைகையில், இந்த முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாளர்கள் அல்ல, இந்த நிதிய தன்னலக் குழுக்களே விலை கொடுக்க வேண்டும் என்றும், இந்த பகுத்தறிவற்ற சமூக ஒழுங்கை முடிவுக்குக் கொண்டு வந்து சோசலிசத்தால் இதை பிரதியீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோர வேண்டும்.
மேலும் படிக்க
- தேசியக் கடன் 30 டிரில்லியன் டாலர்களை எட்டியதால் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆழமடைகிறது
- ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: நெருக்கடியிலிருந்து பேரழிவை நோக்கி செல்லும் ஏழை நாடுகள்
- உணவு, எரிவாயு விலைகள் அதிகரிக்கையில் உலகம் முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் பரவுகின்றன
- பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தொழிலாள வர்க்க வேலைத்திட்டம்