மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அக்டோபர் 1987 இல் கறுப்பு திங்கள் (Black Monday) பங்குச் சந்தை பொறிவுக்குப் பின்னர் பிரதான சில்லறை விற்பனை நிறுவனங்களின் பங்குகள் நேற்று மிகப் பெரிய வீழ்ச்சியை அனுபவித்த நிலையில், வோல் ஸ்ட்ரீட்டில் நேற்றைய பெரியளவிலான விற்றுத்தள்ளல், அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரம் வேகமாக மந்தநிலைக்குள் நகர்ந்து வருகின்றன என்பதற்கான தெளிவான அறிகுறிகளுக்கான பிரதிபலிப்பாக இருந்தது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் நடைமுறையளவில் இலவச பணம் பாய்ச்சியதில் இருந்து எரியூட்டப்பட்டு வளர்ந்த, உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை இந்த அதிகரிக்கப்படும் வட்டி விகிதங்கள் பாதிப்பதால், வோல் ஸ்ட்ரீட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிகபட்ச உச்சத்தை எட்டியதற்குப் பின்னர் இருந்தே சரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கைகளைக் கட்டுப்படுத்த, 40 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச பணவீக்கத்திற்கு விடையிறுப்பாக பெடரல் வட்டி விகிதங்களை உயர்த்தி வருவதால் இந்த பண வினியோகம் இப்போது வெட்டப்பட்டு வருகிறது.
இதன் ஒரு விளைவாக, நிதிய அமைப்பு முறையின் ஒரு மிகப் பெரிய நெருக்கடி அபாயங்களை அதிகரிக்கும் விதமாக, ஊகக் குமிழி சுருங்கி வருவதற்கு மத்தியில், தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக் (NASDAQ) குறியீடு இந்தாண்டு 25 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆனால் டோவ் குறியீடு ஏறக்குறைய இரண்டாண்டுகளில் அதன் மோசமான தினமான நேற்று 1,100 க்கும் அதிகமான புள்ளிகளை இழந்த நிலையில், எஸ்&பி 4 சதவீதமும் நாஸ்டாக் 4.7 சதவீதமும் சரிந்த நிலையில், மந்தநிலை பற்றிய அச்சங்கள் அதிகரித்த வருவதால், நேற்றைய விற்றுத்தள்ளல் பண்புரீதியில் ஒரு புதிய திருப்பத்தைக் குறித்தது.
அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான Target எரிவாயு விலை உயர்வுகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் காரணமாக அதன் செலவுகள் $1 பில்லியன் அளவுக்கு அதிகரித்திருப்பதாக அறிவித்ததும், அதன் பங்குகள் 25 சதவீதம் சரிந்தன.
அதே நேரத்தில், உணவுப் பொருட்கள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உத்தியோகப்பூர்வ பணவீக்க விகிதமான 8.5 சதவீதத்தை விட வேகமாக அதிகரிக்கச் செய்துள்ள ஒரு பணவீக்க அதிகரிப்பிற்கு முன்னால், தொழிலாள வர்க்கக் குடும்பங்கள் அவர்களின் வீழ்ச்சி அடைந்து வரும் நிஜமான கூலிகளில் அதிகளவை இந்த பொருட்களுக்காகவே செலவிட வேண்டியிருப்பதால், அத்தியாவசியமற்ற பொருள்களுக்கான செலவுகளை இது பாதிக்கிறது.
Target நிறுவனத்தின் பொறிவு வால்மார்ட்டிலும் பிரதிபலித்தது, அதன் பங்குகள் 6.8 சதவீதம் சரிந்தன, அதற்கு முந்தைய நாள் 11 சதவீதம் சரிந்தது.
1980 களில் பெடரல் ரிசர்வ் தலைவராக பால் வோல்கரால் தூண்டப்பட்ட ஒரு மந்தநிலை பாரிய சமூக மற்றும் பொருளாதார பேரழிவு ஏற்படுத்தி இருந்தது. அந்த அளவுக்கோ, அல்லது அதை விட பெரியளவிலோ, தேவையானால், ஒரு மந்தநிலையை பெடரல் ஏற்படுத்தும் என்பதை பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் மற்றும் பிற அதிகாரிகளின் பல அறிக்கைகள் தெளிவுபடுத்தி உள்ளன.
செவ்வாய்கிழமை ஒரு மாநாட்டில் பேசிய பவல், அதிகரித்து வரும் சம்பளக் கோரிக்கைகளை நசுக்க வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கையை மத்திய வங்கி முன்நகர்த்தும் என்பதைத் தெளிவு படுத்தினார்.
“விலைகளின் ஸ்திரத்தன்மையை மீட்டமைப்பது கேள்விக்கிடமற்ற தேவையாகும். இதை நாம் செய்தே ஆக வேண்டும். இது சற்று வலியை ஏற்படுத்தலாம்,” என்றார்.
பல தசாப்தங்களாக பெடரல் கொள்கையை வடிவமைத்து தீர்மானித்த இன்றியமையா வர்க்க மற்றும் சமூக இயக்கவியலை பவலின் கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
அக்டோபர் 1987 வீழ்ச்சிக்குப் பின்னர் பங்குச் சந்தையை நிலைநிறுத்துவதற்கான அதன் தீர்மானத்தால் எரியூட்டப்பட்டு, முந்தைய இரண்டு தசாப்தங்களில் நிலவிய கட்டுக்கடங்கா ஊகவணிகத்தின் காரணமாக, 2008 இல் நிதிய அமைப்பு முறை வெடித்த போது, இந்த நிதிய அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கில் பணத்தைப் பாய்ச்சி, பணத்தை அச்சடித்துப் புழக்கத்தில் விடும் முறையை பெடரல் ஏற்படுத்தியது.
இது சமூகத்தில் பங்கு பத்திரங்கள் வைத்திருக்கும் உயர்மட்ட அடுக்கின் செல்வ வளத்தை உச்சபட்ச அளவுக்கு அதிகரிக்கும் விதமாக பாரியளவில் செல்வத்தை மறுபங்கீடு செய்தது, அதேவேளையில் தொழிற்சங்கங்களால் நிஜமான கூலிகள் குறைப்பு அமல்படுத்தப்பட்டதுடன் தொழிலாளர்கள் மிகப் பெரியளவில் வேலை இழப்புகளால் பாதிக்கப்பட்டனர்.
2020 இல் கோவிட்-19 பெருந்தொற்று வெடித்த போது, அத்தியாவசிய பொது சுகாதார நடவடிக்கைகள் வோல் ஸ்ட்ரீட்டை பாதிக்கும் என்ற அச்சத்தில் நிதியச் சந்தைகள் உறைந்த போது, நிதி அமைப்புமுறைக்குள் பெடரல் 4 ட்ரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக பணத்தைக் குவித்தது. அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கு பிணையளித்து, இலாப ஓட்டம் தடைப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய, எல்லா விஞ்ஞானத்தையும் மீறி, வேலைக்கு மீண்டும் திரும்பச் செய்யும் முனைவைத் தொடங்கியது.
உலகெங்கிலுமான அரசாங்கங்கள், அமெரிக்காவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, கோவிட்-19 ஐ அகற்ற சர்வதேச அளவில் ஓர் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்ததால், அது வோல் ஸ்ட்ரீட் ஊக வணிகர்களுக்கு முடிவின்றி வழங்கப்பட்ட பண வினியோகத்தால் எரியூட்டப்பட்டு, பணவீக்க அதிகரிப்பை ஏற்படுத்திய ஒரு வினியோகச் சங்கிலி நெருக்கடிக்கு வழி வகுத்தது.
ஆனால் பல தசாப்தங்களாக தொழிற்சங்கங்களால் ஒடுக்கப்பட்ட வர்க்கப் போராட்டம், இப்போது அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக போராட்டங்களின் அலைகளில் மீண்டும் எழுந்து வருகின்றன.
இந்த இயக்கத்தை நசுக்க அமெரிக்க பெடரலும் மற்றும் பிற மத்திய வங்கிகளும் ஒரு மந்தநிலையைத் திணிக்க நகர்கின்ற நிலையில், இந்த நெருக்கடியை உருவாக்கிய அதே வர்க்க இயக்கவியல், வேறு வடிவத்தில் இருந்தாலும், அவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கின்றது.
வேறெந்த பிரதான பொருளாதாரங்களை விட மிக அதிகளவில், பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டியுள்ள பிரிட்டனில், பாங்க் ஆஃப் இங்கிலாந்து ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி, உணவு விலைகள் 'பேரழிவுகரமாக' அதிகரிப்பதைக் குறித்து எச்சரிக்கின்ற அதே வேளையில், என்ன விலை கொடுத்தாலும் வட்டி விகித உயர்வுகள் தொடரும் என்று வலியுறுத்தி உள்ளார். “நாம் [பணவீக்கத்தை] இலக்குக்குத் திரும்பக் கொண்டு வர வேண்டும். அது தெளிவாக உள்ளது,” என்றவர் இந்த வாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாணயக் கொள்கையை பெடரல் இறுக்குவது ஏற்கனவே உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அதிகரிக்கப்படும் வட்டி விகிதங்கள் பொருளாதாரத் தேக்கத்தைக் கொண்டு வரும் அதேவேளையில் டாலருக்கு நிகரான உள்நாட்டு செலாவணிகளின் மதிப்பு குறைவது குறிப்பாக உணவுப் பொருட்களின் பணவீக்கத்தை அதிகரிப்பதுடன், கடன் சுமைகளை அதிகரிக்கிறது.
450 நிதிய நிறுவனங்களின் உலகளாவிய குழுவான சர்வதேச நிதி அமைப்பு (Institute of International Finance) இந்த வாரம் குறிப்பிடுகையில், “ஒழுங்கின்றி நிதி நிலைமைகள் இறுக்கப்படுவது' நடந்து வருவதுடன் மந்தநிலை அபாயம் 'அதிகரித்துள்ளதுடன்' உலகப் பொருளாதாரம் இந்தாண்டு பெரிதும் தேக்கமுறும் என்று எச்சரித்தது.
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் காரணமாக இப்போது உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தும், கோவிட்-19 இன் தாக்கங்களுடனும் போராடி வருகின்ற, குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள், ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, இது பாரிய சமூகப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு வழி வகுத்து வருகிறது, இதில் இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெடிப்பு முன்னிலையில் உள்ளது.
அந்நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக வெடிப்புகள் ஒவ்வொரு நாட்டிலும் இயங்கிவரும் உலகளாவிய நிகழ்ச்சிப்போக்குகளின் விளைவாகும், ஆளும் உயரடுக்குகள் அவர்கள் உருவாக்கிய இந்த நெருக்கடிக்குத் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்ய முயலும் போது அவர்கள் தொடுத்து வரும் வர்க்கப் போரின் அடுத்தக் கட்டத்தைத் தீவிரப்படுத்தும்.
பொருளாதாரத்தில் மேல்நோக்கி செல்வதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை. இந்த போக்குகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக உள்ளன. ஐரோப்பியப் பொருளாதாரம் தேக்கமடைந்து மந்தநிலையின் விளிம்பில் உள்ளது. உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமான ஜப்பானிய பொருளாதாரம் இந்த முதல் காலாண்டில் 1 சதவீத ஆண்டு விகிதம் சுருங்கியது. அமெரிக்கப் பொருளாதாரமோ இதே காலகட்டத்தில் 1.4 சதவீதம் ஆண்டு விகிதத்தில் சுருங்கியது.
கடந்த தசாப்தங்கள் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளின் பொருளாதார நிகழ்வுகளின் வரலாறு, குறிப்பாக, இந்த இலாபகர அமைப்புமுறை மீதான ஒரு கடுமையான குற்றப்பத்திரிகையாக உள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்காக செயல்பட மறுப்பது அவசியமின்றி மில்லியன் கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்தது மற்றும் பணவீக்கத்தில் கட்டுப்பாடற்ற அதிகரிப்பை உருவாக்கியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போர் உணவு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது, இது உலகெங்கிலும் நூறு மில்லியன் கணக்கான மக்கள் மீது பட்டினியைத் திணிக்கிறது.
உலகின் மத்திய வங்கிகளால் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டதால் அது பணவீக்க நெருப்பை எரியூட்டி உள்ள அதே வேளையில், எந்த நேரத்திலும் வெடித்து விட அச்சுறுத்தும் ஒரு பாரிய ஊக வணிக குமிழியையும் உருவாக்கி உள்ளது.
இதற்கும் மேல், சொல்லொணா சமூக மற்றும் பொருளாதார விளைவுகளுடன் ஒரு மந்தநிலையை தூண்டுவதன் மூலம், எப்போதையும் விட குறைவான கூலிகள் மற்றும் சமூக சேவைகளில் வெட்டுக்கள் ஆகியவற்றின் மூலம் தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்ய நிதி மூலதனம் இடைவிடாது நகர்ந்து வருகிறது.
உலக தொழிலாள வர்க்கத்தால் சமூகத்தை சர்வதேசிய சோசலிச மறுஒழுங்கமைப்பு செய்வதற்கான அவசியம், ஏதோ வார்த்தையளவிலான கருத்துருவோ அல்லது வெறும் தத்துவார்த்த முன்னிறுத்தலோ அல்ல. இது, இந்த முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறை உருவாக்கிய குழப்பம் மற்றும் சீரழிவில் இருந்து மனிதகுலத்தை வெளிவர அனுமதிக்கும் இயற்கையான தீர்வாகும்.