இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கத்தின் குண்டர்கள் மற்றும் அரச படைகளின் தாக்குதல்களில் இருந்து உயிர்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க சுயாதீன நடவடிக்கை குழுக்களை உருவாக்குங்கள்!

திங்களன்று (மே 9) ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குண்டர்கள், காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள நிராயுதபாணியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதலை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வன்மையாகக் கண்டிப்பதுடன் உழைக்கும் மக்களின் உயிர்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க சுயாதீனமாக தலையிடுமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

அலரிமாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர்கள் காலிமுகத்திடல் எதிர்ப்பாளர்களின் கட்டுமானங்களை அழித்துள்ளனர் (Photo: Facebook) [Photo: ෆේස්බුක්]

அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விண்ணைத் தொடும் விலைவாசி மற்றும் தினசரி மின்வெட்டு மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் ஆக்ரோஷமான தாக்குதல்கள் போன்ற தாம் எதிர்கொள்ளும் சகிக்க முடியாத நிலைமைகள் சம்பந்தமாக, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென கோரி, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் உட்பட வெகுஜனங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் மிகக் கடுமையான ஆபத்துக்களை கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டர் தாக்குதல் மிகத் தெளிவாக வெளிக்கொணர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தொழிலாள வர்க்கம் தனது சொந்தப் பாதுகாப்பையும், உணவு உட்பட மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதையும் உறுதி செய்ய, ஒரு சுயாதீனமான அரசியல் தலையீட்டின் தேவை வெளிப்படையாக எழுந்துள்ளது.

இதற்காகப் போராடுவதற்கு தொழிலாளர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஒடுக்கப்பட்டவர்களும் ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் தங்களுடைய சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. சுகாதார ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் இத்தகைய நடவடிக்கைக் குழுக்களை ஏற்கனவே அமைத்திருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி, அத்தகைய குழுக்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் கட்டியெழுப்பவும் தொழிலாளர்களை முதன்மையாக கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, அதன் முழு அரசியல் ஆதரவை உறுதிப்படுத்துகிறது.

இன்றியமையாத சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குழுக்களின் வலையமைப்புடன் இணைந்து, போராட்டத்தில் இறங்கும் மக்களை அரசாங்கத்தின் குண்டர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்புக் குழுக்களையும் பாதுகாப்புப் படைகளையும் அமைக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி சுட்டிக் காட்டுகிறது. குண்டர்கள் காலி முகத்திடல் போராட்டத் தளத்திற்குள் நுழைந்து சுதந்திரமாகத் தங்கள் தாக்குதல்களை நடத்த அனுமதித்து பொலிசார் பார்த்துக்கொண்டிருந்ததோடு, அவர்கள் குண்டர்களுடன் ஒத்துழைத்த விதமும், முதலாளித்துவ அரசின் ஒரு பகுதியாக இருக்கும் இராணுவம் மற்றும் பொலிசிடம் இருந்து தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கும் எந்த பாதுகாப்பு கிடையாது என்ற உண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியது. முதலாளித்துவ ஆட்சி மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குக் கடமைப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளின் உண்மையான பங்கு, ரம்புக்கனையில் நிராயுதபாணியான எதிர்ப்பாளர்கள் மீது கொடூரமாக சுட்டு, சமிந்த லக்ஷான் என்ற தொழிலாளியைக் கொன்று, இன்னும் டசின் கணக்கானவர்களைக் காயப்படுத்தியதன் மூலம், மேலும் தெளிவாகியுள்ளது.

காலிமுகத் திடல் எதிர்ப்பாளர்கள் மீது குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 9 அன்று கண்டியில் சுகாதார ஊழியர்கள் பேரணி நடத்தினர். (Photo: WSWS media)

அதேபோல், தொழிலாள வர்க்கம் தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, கொடூரமாக தாக்குதல் தொடுக்கும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் போது, தொழிற்சங்கங்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது. இந்த எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டைத் தடுக்க செயற்பட்டன. பல வார மௌனத்திற்குப் பின்னர், தொழிலாளர்களின் அதிகரித்து வந்த அழுத்தங்களுக்கு மத்தியிலேயே, தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய இரண்டு தினங்களில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன.

அத்துடன் அந்த நடவடிக்கைகளை ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்கு மட்டுப்படுத்திய தொழிற்சங்கங்கள், மே 11 முதல் பொது வேலைநிறுத்தம் மற்றும் ஹர்த்தாலை நடத்துவதற்கு முதலில் அழைப்பு விடுத்த போதிலும், பின்னர் அதை கைவிட்டு, எதிர்ப்பு இயக்கத்தை நசுக்க குண்டர் தாக்குதல்களை தயாரிப்பதில் அரசாங்கத்தின் கரத்தை பலப்படுத்தின. அரசாங்கத்தின் குண்டர் தாக்குதலுக்கு எதிராக, தேசிய மருத்துவமனை மற்றும் தபால் திணைக்களத்தை சேர்ந்தவர்கள் உட்பட தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களை அலட்சியம் செய்து உடனடியாக எதிர்ப்பில் இறங்கிய நிலையிலேயே, தொழிற்சங்கங்கள் இப்போது 9 ஆம் திகதி முதல் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் சகிக்க முடியாத சமூக நிலைமைகள் எந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழும் இல்லாமல் போகப் போவதில்லை. அரசாங்கத்தைப் போலவே அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) உட்பட அனைத்து கட்சிகளும், சர்வதேச நாணய நிதியத்தால் பரிந்துரைக்கப்பட்ட கொடூரமான மக்கள் விரோத சிக்கன திட்டத்தை செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. எனவே மக்கள் தங்கள் வாழ்வுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் அவர்கள் மேற்கொள்ளும் அரசியல் மற்றும் நடைமுறை தயாரிப்புகளைப் பொறுத்தே அந்தப் போராட்டத்தின் காலம் குறுகியதாக இருக்கும். நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது அவசரமான ஒன்று என்பதை இது மேலும் வலியுறுத்துகிறது.

நடவடிக்கை குழுக்கள் என்பது, தொழிலாளர்களும் ஏழைகளும், ஜனநாயக ரீதியாக, இன, மொழி வேறுபாடுகள் இன்றி, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தங்களது ஒற்றுமையை ஸ்தாபிக்கின்ற ஒரு அமைப்பு வடிவமாகும். இது முதலாளித்துவ ஆட்சிக்கு மாற்றாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய முற்போக்கான அரசியல் கண்ணோட்டத்தால் வழிநடத்தப்படாத போது, 9 ஆம் தேதி இரவு நேரத்தில் செய்தது போல், தனியார் சொத்துக்களை அழிப்பதானது அரசாங்கத்தின் மற்றும் பிற்போக்கின் கைகளை பலப்படுத்தும்.

முதலாளித்துவ அமைப்பு வெகுஜனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதன் முழுமையான இயலாமையை அம்பலப்படுத்தியிருக்கின்ற நிலைமையின் கீழ், அவற்றை ஒழுங்கமைக்கும் பணியை, தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பால் பொறுப்பேற்க முடியும்.

கிராமப்புறங்களில் அமைக்கப்படும் நடவடிக்கை குழுக்கள் மூலம், ஏழை விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரங்களை விநியோகித்தல், விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், சேமிப்பு மையங்களை ஒழுங்கு செய்தல் மற்றும் விலையை நிர்ணயம் போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண நடவடிக்கை குழுக்கள் போராடுகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி ஏப்ரல் 7 அன்று பொதுமக்களுக்கு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு அவற்றை வரிசைப்படுத்தியுள்ளது:

மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதன் பேரில், நடவடிக்கை குழுக்களின் பங்களிப்பை செய்வதற்காக பின்வரும் நடவடிக்கையை நாங்கள் முன்மொழிகிறோம்:

* மக்களின் வாழ்க்கைக்கு தீர்க்கமாக தேவைப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற வளங்களின் உற்பத்தியும் விநியோகமும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்! வங்கிகள், பெரு நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்கு!

முதலாளித்துவ வர்க்கம் அதன் உற்பத்தி மற்றும் விநியோகச் சாதனங்களின் உரிமையைப் பயன்படுத்தி மிகப் பெரும் இலாபங்களைக் குவிக்கிறது. தொழிலாள வர்க்கம் அதன் அத்தியாவசியத் தேவைகளைப் பெறுவதற்கான ஒரே வழி, முதலாளிகளின் கைகளில் இருந்து அவற்றைப் பெறுவதும், தற்போதைய துன்பங்களையும் துயரங்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பயன்படும் வகையில் வளங்களின் பட்டியலை உருவாக்குவதே ஆகும்.

* அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கனக் கோரிக்கைகளை நிராகரி!

இராஜபக்ஷ அரசாங்கம் அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு காரணமாக, உலகளாவிய வங்கியாளர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதாக கூறுகின்றது. எதிர்க் கட்சிகளும் இதை ஒப்புக்கொள்கின்றன. இந்த ஆண்டு செலுத்த வேண்டிய 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சர்வதேச வங்கிகளின் கருவூலங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, அது உழைக்கும் மக்களுக்குத் தேவையான உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

* பில்லியனர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் பெரும் செல்வத்தை கைப்பற்று!

உலக சமத்துவமின்மை தரவுத் தளத்தின் படி, 2021 இல் இலங்கை சமூகத்தின் 10 வீதமான செல்வந்தர்கள், தீவின் மொத்த செல்வத்தில் பாரியளவான 63.8 வீதத்தை தம்வசம் வைத்திருக்கும் அதேவேளை, கீழ்மட்டத்தில் உள்ள 50 வீதமானவர்கள் வெறும் 4.3 வீதத்தையே பகிர்ந்துகொள்கின்றனர். தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட இந்தப் பரந்த செல்வம் சமூகத் தேவையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும்.

* ஏழை மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் அனைத்து கடன்களையும் இரத்து செய்! விவசாயிகளுக்கு உர மானியம் உட்பட அனைத்து மானியங்களையும் மீண்டும் வழங்கு!

தங்களை நசுக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு வழியை வழங்குவதன் மூலம், தொழிலாள வர்க்கமானது ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கும், அதிக கடன், விலையுயர்ந்த உள்ளீடுகள் மற்றும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத விலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிறு வியாபாரிகளுக்கும் அணிதிரள்வதற்கு ஒரு ஈர்ப்பு துருவமாக மாறும்.

* கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுடன் அனைவருக்கும் தொழில் உத்தரவாதம் வேண்டும்! வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கு ஏற்ப ஊதியம் வேண்டும்!

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச வங்கியாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தால், மலைபோல் தொழில் அழிப்பு நடக்கும். பணவீக்கம் ஏற்கனவே அபரிமிதமாக அதிகரித்து, சம்பளத்தை விழுங்கிவிட்டது. விடயங்களை தொழிற்சங்கங்களின் கைகளில் விட்டு வைத்தால், பல ஆண்டுகளாக நடந்தது போலவே வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் பேரம் பேசப்பட்டு அழிக்கப்படும்.

இலங்கையில் போராடும் தொழிலாளர்கள் தங்கள் பொதுவான வர்க்க எதிரிகளுக்கு எதிராக, தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து ஒரு பொது போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். உலகெங்கிலும் அதிகரித்து வரும் வர்க்கப் போராட்ட அலையானது இலங்கைத் தொழிலாளர்களுக்கு தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள் மற்றும் அலுவலகங்கள் உட்பட எல்லா இடங்களிலும் கூட்டாளிகள் கிடைப்பதை சாத்தியமாக்குவதோடு ஆதரவு தளங்களையும் வழங்குகிறது. உலகளாவிய பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பொருளாதார மேலாதிக்கத்திற்கு எதிராக சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டமாக இது உருவாக்கப்படலாம். இதற்காக இலங்கையில் கட்டியெழுப்பப்படும் நடவடிக்கை குழு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் இப்போதே ஒருங்கிணைக்கப்பட்டுள்ள, நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் இணைந்து போராடும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றது. இராஜபக்ஷ ஆட்சியானது, 1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரத்தில் இருந்தே அதன் முன்னோடிகள் மற்றும் அதன் இனவாத கூட்டாளிகளும் இனவாத ஆத்திரமூட்டல்களையும் சிங்களப் பேரினவாதத்தின் விஷத்தையும் பரப்பி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை இன ரீதியாகப் பிரிக்கும் அவநம்பிக்கையான முயற்சியில் ஈடுபடுவார்கள். இருப்பினும், அனைத்து தொழிலாளர்களும் ஏழைகளும் ஒரேவிதமான அவநம்பிக்கையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் வகுப்புவாதத்தை நிராகரிப்பதானது இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தொழிலாளர்களின் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாதாகும்.

இலங்கையில் ஒரு சோசலிசப் புரட்சி தேவை, அதற்கு ஒரு புரட்சிகர தலைமைத்துவம் இன்றியமையாதது. ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் போர்க்குணமிக்க மற்றும் உறுதியான போராட்டங்கள் கூட தவிர்க்க முடியாமல் தோற்கடிக்கப்பட்டு, எதிர் புரட்சிக்கும் மிலேச்சத்தனமான அடக்குமுறைக்குமான கதவைத் திறந்துவிடுகின்றன என்பதை கடந்த நூற்றாண்டின் முழு வரலாறும் காட்டியுள்ளன.

இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் படிக்க

Loading