காணொளி: “இலண்டன் பேருந்து ஓட்டுநர்களின் அழைப்பு, இந்தியாவில் மகாராஷ்டிராவில் வேலைநிறுத்தம் செய்யும் 70,000 பேருந்து தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்போம்”

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலண்டன் பேருந்து சாமானிய தொழிலாளர்கள் குழுவின் தலைவரும், பேருந்து ஓட்டுநருமான டேவிட் ஓ'சல்லிவன், மகாராஷ்டிராவில் 70,000-க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள், டிக்கெட் சேகரிப்பாளர்கள், மெக்கானிக்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களின் தைரியமான ஐந்து மாத வேலைநிறுத்தத்தை ஆதரிக்கும் சக்திவாய்ந்த வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 4, 2021 முதல், 70,000க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்து போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் பூகோளரீதியான முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் காட்டுமிராண்டித்தனமான நிர்வாகத்தின் பழிவாங்கல்களையும் மற்றும் அவர்களது வேலைநிறுத்த நடவடிக்கைகளை சட்டவிரோதமானது என அறிவித்த நீதிமன்றங்களையும் மீறியுள்ளனர். அதேபோல் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் இரண்டு டஜன் தொழிற்சங்கங்களை மீறி அவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை நடத்த வேண்டியிருந்தது. நீதிமன்றங்களுக்கு பணிந்து, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அதற்கான தங்கள் அனுமதியை திரும்பப் பெற்றன.

இன்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்ட ஓ'சல்லிவனின் செய்தியில் உலகம் முழுவதும் உள்ள பேருந்து மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 'மஹாராஷ்டிரா பேருந்து தொழிலாளர்கள் எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கின்றனர்' என அவர் தனது ஐந்து நிமிட வீடியோவில் கூறியிருக்கிறார்.

கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பாதுகாப்பான பணியிடம் வேண்டும் எனக் கோரிய தனது சக ஊழியர்களின் உரிமைகளுக்காக நின்றதற்காக பிப்ரவரி 2021 இல் ஓ'சல்லிவன் மெட்ரோலைன் பேருந்து நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார். தன்னை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி அவர் போராடி வருகிறார்.

மகாராஷ்டிரா பேருந்து தொழிலாளர்கள் தனியார்மயமாக்கல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். அரசுக்குச் சொந்தமான பேருந்துக் கழகத்தை (MSRTC) முழுமையாக மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். மாநில அரசு ஊழியர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை விட சிறந்த வேலை பாதுகாப்பு, ஊதியம் மற்றும் சலுகைகள் உள்ளன. ஆனால் மாநில அரசாங்கம் அவ்வாறான இணைப்பை நிராகரித்துள்ளது மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளது.

நேற்று, ஏப்ரல் 6, பம்பாய் உயர்நீதிமன்றம் மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்து நிறுவன வேலைநிறுத்தக்காரர்களை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் வேலைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தியது. அவர்கள் வேலை இழக்கும் வாய்ப்பை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், பரந்தளவில் கைதுகளுக்கும் ஆளாக நேரிடும்.

மகாராஷ்டிராவில் உள்ள தொழிலாளர்கள் 5 மாதங்களாக தங்கள் வேலைநிறுத்தத்தைத் தக்கவைத்து, பணியிடைநீக்கங்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் பிற நிறுவன பழிவாங்கல்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு மிகப்பெருமளவில் போர்க்குணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். போராட்ட நிதிக்காக ஒரு ரூபாய் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை.

ஆனால் அவர்களின் போராட்டம் பெரும் ஆபத்தில் உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினிச சிபிஐ மற்றும் சிபிஎம் தலைமையிலான தேசிய தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் 'இடது' கட்சிகள் என்று கருதப்படுபவை வேண்டுமென்றே அவர்களது போராட்டத்தை தனிமைப்படுத்தினர். ஸ்ராலினிசத் தலைமையிலான தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் மகாராஷ்டிராவில் அவர்களின் பாதுகாப்புக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை என்பது ஒரு புறம் இருக்க, மகாராஷ்டிராவில் அந்த போராட்டத்திற்கு வெகுஜன ஆதரவு திரட்டக்கூட ஒன்றும் செய்யவில்லை.

பிஜேபி பிரதமர் நரேந்திர மோடியின் பெருவணிகச் சார்பு சிக்கன மற்றும் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிரான சமீபத்திய 2 நாள் பொது வேலைநிறுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கக் கூட்டமைப்புகள், மகாராஷ்டிர பேருந்துத் தொழிலாளர்களின் நீடித்த வேலைநிறுத்தத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதை தொடர்ந்து பராமரித்தனர்.

இது மிகவும் அவசரமாக்குவது என்னவென்றால் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மகாராஷ்டிரா பேருந்து தொழிலாளர்களுக்கு உதவ முன் வர வேண்டும். அவர்கள் தனித்து போராடும்படி விடக்கூடாது! ஓ சல்லிவன் தனது வீடியோ செய்தியில் விளக்குவது போல், அவர்களின் போராட்டம் பூகோள ரீதியான வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்தின் ஒரு பகுதியாகும்.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச கூட்டணி ஆகியவை மகாராஷ்டிராவில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்படி அனைத்து இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. இலண்டனில் இருந்து வெளியிடப்பட்ட இன்றைய வீடியோ செய்தியை உங்கள் சகாக்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பகிருங்கள். இந்தியாவில் உறுதியான போராட்டத்தை ஆதரிக்கும் செய்திகளையும் பணியிடத் தீர்மானங்களையும் அனுப்புங்கள்.

மஹாராஷ்டிரா தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் செய்தியின் இறுதியில் ஓ'சல்லிவன் கூறுவது போல்; 'உங்கள் போராட்டம் எங்கள் போராட்டம்.'

உங்கள் ஆதரவு செய்திகளை இங்கே WSWS க்கு அனுப்பவும்.

Loading