உக்ரேனில் நேட்டோவின் ஆயுதங்களை யார் பெறுகிறார்கள்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் போர் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, ரஷ்யாவிடம் இருந்து 'சுதந்திரம்' மற்றும் 'ஜனநாயக' உக்ரேனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரத்தின் பதாகையின் கீழ் நேட்டோ ஆயுதங்களை நாட்டிற்குள் பாய்ச்சி வருகிறது. ஊடகங்களில் எப்போதும் எழுப்பப்படாத பல கேள்விகளில் ஒன்று: இந்த ஆயுதங்களை யார் பெறுகிறார்கள்? என்பதாகும்.

உக்ரேனிய தேசிய காவலர் சிப்பாய் உக்ரேனிய பாதுகாப்பு சேவை முகவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து உக்ரேனின் கார்கிவ் இல் ஒரு நகரும் சோதனைச்சாவடியில் வியாழன், பெப்ரவரி17,2022 காவல் புரிகின்றார்.

புரட்சிகர சோசலிசத்தின் நிலைப்பாட்டில் இருந்து உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். எவ்வாறாயினும், ஏகாதிபத்திய சக்திகளின் கூற்றுக்களான தாங்களும் செலென்ஸ்கி அரசாங்கமும் 'புட்டினின் ரஷ்யாவிற்கு' எதிராக 'சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை' பாதுகாக்கின்றன என்பது இழிந்த மற்றும் ஆபத்தான பொய்யாகும்.

2014 இல் கியேவில் அமெரிக்க ஆதரவுடன் அதிவலதுசாரி ஆட்சி கவிழ்ப்பினால், ரஷ்ய-சார்பு அரசாங்கத்தை கவிழ்த்ததில் இருந்து, ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான ஏவுதளமாக உக்ரேன் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. அதன் இராணுவம் மற்றும் தீவிர வலதுசாரிகளை கட்டியெழுப்புவது இந்த செயல்முறையின் ஒரு மைய அங்கமாக இருந்து, இப்போது இந்தப் போர் உருவான விதத்தை வடிவமைத்துள்ளது.

இப்போது நடந்து கொண்டிருக்கும் பெரிய அளவிலான ஆயுத விநியோகம் ரஷ்யாவிற்கு எதிரான நேரடியான ஆத்திரமூட்டல் மட்டுமல்ல. அவற்றின் முதன்மையான பயனாளிகள், அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும், உக்ரேனிலும் சர்வதேச அளவிலும் தீவிர வலதுசாரி சக்திகளாகும். அவர்கள் பலப்படுத்தப்பட்டு, தைரியமடைந்து வருகின்றனர்.

உக்ரேனிய ஆயுதப்படைகளும் மற்றும் ஜெனீவா ஒப்பந்தங்களும்

உத்தியோகபூர்வமாக, ஆயுதங்கள் முதன்மையாக உக்ரேனிய ஆயுதப் படைகளுக்குச் செல்லும். எவ்வாறாயினும், இங்கு கூறப்படாது இருப்பது என்னவெனில், கடந்த ஒரு வாரமாக உக்ரேனின் ஆயுதப்படைகள் ஜெனீவா உடன்படிக்கைகளை மீறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அவை போர்க்குற்றங்களாகும்.

ட்விட்டர், டெலிகிராம், பேஸ்புக் மற்றும் பலவற்றில், நாட்டின் இராணுவம் ஒரு மோசமான சமூக ஊடக பிரச்சாரத்தை நடத்தி, இறந்த ரஷ்ய துருப்புக்களின் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகளை வெளியிடுகிறது. உக்ரேனில் ஏகாதிபத்தியத்தின் சார்பாகப் போராடும் சக்திகளின் பிற்போக்குத்தனமான மற்றும் வலதுசாரித் தன்மைக்கு கொடூரமான படங்களும் அவற்றை வெளியிடும் மகிழ்ச்சியும் சான்றளிக்கின்றன.

உக்ரேனின் ஆயுதப் படைகளின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு, டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களில் பயணித்த ரஷ்ய துருப்புக்களின் எரிக்கப்பட்ட மற்றும் துண்டாக்கப்பட்ட உடல்களின் பல ஒளிப்பதிவுகள் உட்பட, குறிப்பாக வன்முறைமிக்க உள்ளடக்கத்தை ஒளிபரப்புகிறது. அமெரிக்கா தயாரித்த ஜவெலின் எதிர்ப்பு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

செவ்வாயன்று, உக்ரேனின் சிறப்புப் படைகளின் தளபதியின் முகநூல் கணக்கு ரஷ்ய பீரங்கி படையினரைக் கைதிகளாக அழைத்துச் செல்லாது, ஆனால் அந்த இடத்திலேயே அவர்களைக் கொல்லப்போவதாக அறிவித்தது. உக்ரேனின் சிறப்புப் படைகளிடம் சரணடைவது மரணத்தை விட மோசமானது என்றும் கைப்பற்றப்பட்ட ரஷ்ய பீரங்கிபடையினர் 'பன்றிகளைப் போல வெட்டப்படுவார்கள்' என்றும் அந்த இடுகை அச்சுறுத்தியது.

உக்ரேனின் சிறப்புப் படைத் தளபதியின் முகநூல் பதிவில், கைப்பற்றப்பட்ட ரஷ்ய பீரங்கிகள் 'பன்றிகளைப் போல வெட்டப்படுவார்கள்' என்று அறிவித்தார்.

இந்தப் பதிவுகள் போர்க்குற்றம் செய்யும் நோக்கத்தின் அறிவிப்பாகும். இத்தகைய கொள்கைகள் போர்க் கைதிகளை (POW) நடத்துவது தொடர்பான ஜெனீவா உடன்படிக்கைகளை நேரடியாக மீறுகின்றன. இவ்வுடன்படிக்கை போர்க் கைதிகளை 'அனைத்து சூழ்நிலைகளிலும்' மனிதாபிமானமாக நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.

உக்ரேனின் தீவிர வலதுசாரிப் படைகளின் சமூக ஊடக கணக்குகளில் அதிகமானவை பல இராணுவத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அதன் வன்முறைமிக்க உள்ளடக்கம் மற்றும் ரஷ்ய படையினருக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்வதற்கான அறிவுரைகளால் நிறைந்துள்ளன.

தற்போது உக்ரேனின் இராணுவத்தில் பணியாற்றும் ஒரு நன்கு அறியப்பட்ட தீவிர வலதுசாரி 'செயல்பாட்டாளரான' சேர்கே ஸ்டெர்னென்கோ, போரின் தொடக்கத்திலிருந்து 'ரஷ்ய எதிர்ப்பு போதாது!' போன்ற ரஷ்ய எதிர்ப்பு முழக்கங்களை பிரபலப்படுத்துவதிலும் மற்றும் இறந்த ரஷ்ய படையினரின் உள்ளடக்கத்தை இடுகையிடுதலிலும் தீவிரமாக இருந்தார்.

தீவிர வலதுசாரி சேர்கே ஸ்டெர்னென்கோவின் ட்வீட், இறந்த ரஷ்ய சிப்பாயின் படத்துடன்

ஸ்டெர்னென்கோ பகிர்ந்த இடுகைகளில், பாராசூட் திறக்கத் தவறி இறந்த ரஷ்ய பாராசூட் படையினரின் புகைப்படம், இறந்த மற்றும் உறைந்த ரஷ்ய சிப்பாய், அத்துடன் எரிக்கப்பட்ட ரஷ்ய டாங்கிகள் மற்றும் உடல்களின் ஒளிப்பதிவுகள் இருந்தன. மரணம் பற்றிய கொண்டாட்டம் கேலி நகைச்சுவைகளுடன் சேர்ந்திருந்தது.

வலதுசாரி உக்ரேனிய சமூக ஊடகங்களில் பரவி வரும் குறிப்பாக பயங்கரமான TikTok வீடியோ ஒரு ரஷ்ய வாகனத்தின் சக்கரத்தின் பின்னால் ஒரு இளம் ரஷ்ய சிப்பாய் பாடுவதைக் காட்டுகிறது. இந்த பதிவின் பின்னர் அதே சிப்பாய் ஒரு வயலில் நேரடியாக தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்த பதிவை காட்டுகிறது.

இத்தகைய பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இது உக்ரேனிய அரசாங்கத்தால் தெளிவாக ஆதரிக்கப்படுகின்றது. மக்களைக் கொல்வது 'மகிழ்ச்சியானது' மற்றும் 'வேடிக்கையானது' என்பதை நிரூபிக்க முயற்சிக்கையில் இவ்வாறான கருத்துக்கள் நவ-நாஜி குழு C14 இன் தலைவர் யெவகென் கராஸ் பெப்ரவரி தொடக்கத்தில் உக்ரேனிய நாஜி-ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவின் பெயரில் ஒரு அரசியல் கருத்தரங்கில் தன் பார்வையாளர்களிடம் கூறினார். அவரைப் போன்ற நவ நாஜிக்கள் ரஷ்யர்களை கொல்வதை விரும்புவதால்தான் மேற்குலகம் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதாகவும் கராஸ் அப்பட்டமாக கூறியுள்ளார்.

பிடிபட்ட அல்லது சரணடைந்த ரஷ்ய படையினரின் ஒளிப்பதிவுகளைத் தொடர்ந்து பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதன் மூலம் உக்ரேனிய ஆயுதப் படைகள் ஜெனீவா உடன்படிக்கைகளை மீறலாம். பல சிப்பாய்கள் மிகவும் இளமையானவர்களாக தோன்றி ஏழை அல்லது கிராமப்புற பின்னணியைக் கொண்டவர்களாக தோன்றுகிறார்கள். இவர்கள் ரஷ்ய தன்னலக்குழுவின் கொடிய பிரச்சாரத்திற்கு சேவையாற்ற தள்ளப்பட்டுள்ளனர். பலர் வற்புறுத்தலின் பேரில் பதிலளிப்பதாகத் தெரிகிறது. மற்றும் ஒரு ஒளிப்பதிவில் ஒரு ரஷ்ய சிப்பாய் வலதுசாரி உக்ரேனிய முழக்கமான ஸ்லாவா உக்ரேனி! (உக்ரேனுக்கு மகிமை!) என்று கத்த மறுக்கிறார். அதே நேரத்தில் உக்ரேனிய விசாரணையாளர்களால் அவமானப்படுத்தப்படுகின்றார்.

ஜெனீவா உடன்படிக்கைகள் போர்க் கைதிகளை 'அவமதிப்பது' மற்றும் 'அச்சுறுத்துவது' மற்றும் 'பொது ஆர்வத்திற்காக' காட்டப்படுவதைத் தடுக்கின்றன. இவை அனைத்தையும் உக்ரேனிய இராணுவம் அத்தகைய சமூக ஊடக இடுகைகளால் மீறுகிறது.

இந்த பிற்போக்குத்தனமான இணையவழி பிரச்சாரம், போர்வெறி கொண்ட வாஷிங்டன் போஸ்ட் கூட வியாழன் அன்று, “இந்த இரத்தம்தோய்ந்த இணையவழி பிரச்சாரம் புட்டின் எதிர்ப்பு அதிருப்தியை விதைக்கும் என்று உக்ரேன் நம்புவது, ஒருவேளை ஜெனீவா ஒப்பந்தங்களை மீறலாம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிடும் அளவிற்கு சென்றது.

அசோவ் படைப்பிரிவும் தீவிர வலதுசாரிகளும்

நாஜிசம் மற்றும் உக்ரேனிய நாஜி ஒத்துழைப்பாளர்களை வெளிப்படையாக மகிமைப்படுத்தும் மற்றும் 2014 ஆட்சிக் கவிழ்ப்பில் முக்கிய பங்கு வகித்த அசோவ் படைப்பிரிவு, பல போர்க்குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு மற்றும் படுகொலைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2014 முதல், இது தேசிய காவல்படையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் பயிற்சி பெற்றது. உக்ரேனிய அரசாங்கம் அசோவ் படைப்பிரிவு மற்றும் பிற தீவிர வலதுசாரி அமைப்புகளை 'இளைஞர் முகாம்களை' நடத்த அனுமதிக்கிறது. அங்கு 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாசிச சித்தாந்தம் கற்பிக்கப்பட்டு மற்றும் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்பிக்கப்படுகிறார்கள்.

நேட்டோவின் பாரிய ஆயுத விநியோகங்களில் கணிசமான பகுதியை இப்போது பெறுவது இந்த சக்திகள்தான். தெற்கு உக்ரேனில் உள்ள மரியுபோல் மீதான போரில் அசோவ் படைப்பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூஸ்வீக்அறிக்கையின்படி, கியேவில் அதன் சொந்த “அசோவ் பிராந்திய பாதுகாப்புப் பிரிவையும்” உருவாக்கியுள்ளது.

அசோவ் படைப்பிரிவு போன்ற தீவிர வலதுசாரி போக்குகளால் அவர் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டாலும் கூட, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, நவ-பாசிச மற்றும் துணை இராணுவப் படைகளை போர் முயற்சியில் மேலும் ஒருங்கிணைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். போரின் தொடக்கத்திலேயே, ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்தால், போர்க் குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்கள் உட்பட தண்டனைக் குற்றவாளிகள் மன்னிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். உக்ரேனில் போரில் சேர 'வெளிநாட்டுப் கிளர்ச்சியாளர்களுக்கு' அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரேனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னாள் அரசியல் ஆய்வாளரான ஜோனாதன் புருன்சன், ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன், “தீவிர வலதுசாரிகளுக்கான உதவி என்பது தற்செயலாக தெரிகிறது. 'ஆனால் அது இனி நடக்காது. ஏனென்றால் 'அனைவரும் தயாராக இருக்க வேண்டும்' என்பது மேலும் உக்ரேனின் தீவிர வலதுசாரிகள் அவர்கள் ஒருபோதும் செய்திருக்காத ஒரு வீர பாத்திரத்தை வகிக்க உதவுகிறது.'

உக்ரேனிய தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள நவ-பாசிச சக்திகள், இப்போது உலகின் அதிநவீன ஆயுதங்களுடன் போர் அனுபவத்தைப் பெறுவர். உக்ரேனிய தீவிர வலதுசாரிகள் மற்றும் குறிப்பாக அசோவ் படைப்பிரிவு நீண்ட காலமாக மையமாக இருந்த அவர்களின் சர்வதேச வலைப்பின்னல்களை அவர்களால் தொடர்ந்து மேம்படுத்த முடியும்.

நியூஸ்வீக்கிடம் பேசிய தீவிரவாத எதிர்ப்புத் திட்டத்தின் (Counter Extremist Project) மூத்த இயக்குனர் ஹான்ஸ்-ஜாகோப் ஷிண்ட்லர்: “படையெடுப்புக்குப் பின்னர், இப்போது உக்ரேனிய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குறிப்பாக அசோவ் படைப்பிரிவு போன்ற உக்ரேனுக்குள் வலதுசாரி தீவிரவாதத்துடன் தொடர்புடைய சில குழுக்கள் தன்னார்வலர்கள் தங்களுடன் வந்து சேருமாறு சமூக ஊடகங்களில் பகிரங்க அழைப்புகளை விடுத்துள்ளனர். அசோவ் படைப்பிரிவு தனது சமூக ஊடகங்கள் வழியாக மிகவும் விரிவான பயண வழிமுறைகளை வழங்கியது. அதில் அ) தனிநபர் உக்ரேனில் இருக்கும் வரை பயணத்திற்கு வசதி செய்யப்படாது மற்றும் ஆ) தன்னார்வலர்களுக்கு பண உதவி எதுவும் வழங்கப்படமாட்டாது மற்றும் இ) பல மாதங்கள் சேவை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது' எனக் குறிப்பிட்டது.

உக்ரேனில் ஒரு 'கிளர்ச்சிக்கான' அமெரிக்க தயாரிப்புகள்

உக்ரேனின் தீவிர வலதுசாரிகளுக்கு ஆயுதம் வழங்குவது மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் அவற்றை ஒருங்கிணைப்பது ஒரு விபத்தோ அல்லது 'தவறாக' நடந்ததோ அல்ல.

உக்ரேனில் ஏகாதிபத்திய தலையீடு வரலாற்றுரீதியாக பாசிச சக்திகளை அணிதிரட்டுவதை நம்பியுள்ளது. சிஐஏ மற்றும் பிற மேற்கத்திய உளவுத்துறை சேவைகள் போருக்குப் பின்னர் உக்ரேனிய நாஜி ஒத்துழைப்பாளர்களுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. அவர்களை அவற்றின் கட்டமைப்புகளில் ஒருங்கிணைத்து சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான பனிப்போரில் அவர்களை பயன்படுத்தின.

2014 ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னும் பின்னும் தீவிர வலதுசாரிகளின் உருவாக்கம் இந்த மரபுகளிலேயே நிற்கிறது.

மேலும், 2015 முதல், சிஐஏ உக்ரேனில் ஒரு 'கிளர்ச்சிக்கு' திட்டமிட்ட தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது. ஜனவரி மாதம், Yahoo செய்தியின் அறிக்கை, கடந்த எட்டு ஆண்டுகளாக CIA “உக்ரேனிய சிறப்பு நடவடிக்கைப் படைகள் மற்றும் பிற புலனாய்வுப் பணியாளர்களுக்கு அமெரிக்காவில் ஒரு இரகசிய தீவிர பயிற்சித் திட்டத்தை கண்காணித்து வருகிறது. Yahoo வின் கூற்றுப்படி, இத்திட்டம் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்ததன்படி 'துப்பாக்கிகள், உருமறைப்பு நுட்பங்கள், நில வழிசெலுத்தல், 'மறைமுகமாக மற்றும் நகர்வு' போன்ற உத்திகள், உளவுத்துறை மற்றும் பிற பகுதிகளில் பயிற்சியை உள்ளடக்கியது. 'ஒரு முன்னாள் சிஐஏ அதிகாரி செய்தித்தளத்திடம், 'அமெரிக்கா ஒரு கிளர்ச்சியை பயிற்றுவிக்கிறது' என்றும் 'ரஷ்யர்களை கொல்வது எப்படி' என்றும் உக்ரேனியர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது என்று கூறினார்.

முன்னாள் மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர், “ரஷ்யர்கள் படையெடுத்தால், சிஐஏ திட்டங்களில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் உங்கள் போராளிகளாகவும், உங்கள் கிளர்ச்சித் தலைவர்களாகவும் இருப்பார்கள். நாங்கள் எட்டு ஆண்டுகளாக இவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அவர்கள் உண்மையிலேயே நல்ல போராளிகள். அங்குதான் சிஐஏ யின் திட்டம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்” என்றார்.

உலகின் மூன்றாவது பெரிய அணுசக்தி நாடாக இருந்த உக்ரேனை ரஷ்யாவிற்கு 'மற்றொரு ஆப்கானிஸ்தானாக' மாற்ற இருப்பதாக கடந்த ஆண்டில் அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியுள்ளனர். இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சுயாதீனமான, சோசலிச வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கம் இந்த மோதலில் தலையிடாவிட்டால், உக்ரேனிலும் சர்வதேச அளவிலும் தீவிர வலதுசாரிகள் இந்த பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தில் இருந்து வலுப்பெற்று, தைரியமாக வெளிவரமுடியும்.

Loading