மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனின் மீதான ரஷ்ய படையெடுப்பு, ஜேர்மன் மக்களில் பரந்த பிரிவினர் மத்தியில் மூன்றாம் உலகப் போர் பற்றிய திகிலையும் அச்சத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனால் ஆளும் வட்டங்களில் உள்ளவர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் நடந்து கொள்கின்றனர். அவர்களின் சத்தமிடும் தார்மீக சீற்றம் மற்றும் ஜனாதிபதி புட்டினைக் கண்டனம் செய்ததற்குப் பின்னால் ஒரு அடக்கி வைக்கப்படாத மகிழ்ச்சி இருக்கிறது.
இறுதியாக, எண்ணற்ற அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் மற்றும் ஊடக வர்ணனைகளின் நெறிமுறையின்படி, மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கும் போரை நடத்துவதற்கும் நமக்கு இறுதியாக உரிமை உள்ளது. 75 ஆண்டுகளாக நாங்கள் எங்கள் வார்த்தைகளை நிதானப்படுத்த வேண்டியிருந்ததுடன் மற்றும் நாஜிகளின் குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. மேலும் அமைதிவாத பொதுக் கருத்துகளுக்கு தலைவணங்க வேண்டியிருந்தது. அது இப்போது முடிந்துவிட்டது! எனக் கூறப்படுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் (Bundestag) சிறப்பு அமர்வு இந்த உணர்வை சுருக்கமாகக் கூறியது. ஹிட்லருக்குப் பின்னர் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் திட்டத்தை அறிவித்து, உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்த அதிபர் ஓலாஃப் ஷோல்ஸை அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் உற்சாகப்படுத்தினர். ஷோல்ஸ் ஒரு 'வரலாற்று திருப்புமுனை' பற்றி பேசினார். மேலும் செய்தி ஊடகம் இந்த வார்த்தையை ஆர்வத்துடன் பற்றிக்கொண்டுள்ளது.
“ஆயுதப் படைகளுக்கு ஆயுதமளிப்பது பற்றிய வாக்குறுதிகளைப் போலவே உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் முடிவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இரண்டுமே சரிதான்” இவ்வாறு Süddeutsche Zeitung பத்திரிகையில் நீக்கோ ஃபிரீட் எழுதினார். 'வரலாற்றின் படிப்பினைகளை வரையறுக்கும் உச்சக்கட்ட கருத்தாக கருதுவது, ஜேர்மன் அரசாங்கத்தை அரசியல்ரீதியாக இயலாமையாக்கியிருக்கும். இந்த நிலையில் இருந்து அது தற்போது விடுபட்டுள்ளது” என்றார்.
பழமைவாத Frankfurter Allgemeine Zeitung (FAZ) பத்திரிகையில் எழுதும் ஜஸ்பார் வொன் அல்ட்டன்பொக்கும், “பாதுகாப்புக்காக மற்றவர்களை பொறுப்பேற்கவைப்பது மேற்கு ஜேர்மன் பாரம்பரியமாக இருந்தது. அவற்றின் குடையின் கீழ் ஒழுக்கத்தை போதிப்பது எளிது” என்று கேலி செய்தார். இப்போது, 1945க்குப் பிந்தைய ஜேர்மன் கருத்தியல் 'ஒரு தலைமுறையின் வரலாற்றுப் பிழை, ஏமாற்றம், தார்மீக மற்றும் பொருளாதாய தோல்வி' என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தது. அது இன்று 'அதன் அமைதிவாத மாயைகளின் பிராந்தியவாதத்திலிருந்து வெளியேறி மீண்டும் உலக விவகாரங்களின் மையத்தில் அதன் வழியைக் கண்டறியவதற்கான வார்த்தைகளைத் தேடுகிறது' என்றார்.
ஜேர்மன் செய்தி ஊடகத்தின் மிக மோசமான போர்வெறியர்களில் ஒருவரான FAZ இன் இணை ஆசிரியர் பெர்த்தோல்ட் கோலர், புட்டினுக்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்தார். ரஷ்யாவை ஒரு போருக்குள் இழுக்க உக்ரேன் நேட்டோவிற்கு தூண்டிலாக செயல்பட்டது என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் மதிப்பீட்டை உறுதிப்படுத்தினார்.
'இது இழிந்ததாகத் தெரியவில்லை என்றால், ஜேர்மன் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையை அதன் யதார்த்ததிற்கு அப்பாற்பட்ட கற்பனை உலகிலிருந்து பூமிக்குக் கொண்டு வந்ததற்காக ரஷ்ய ஜனாதிபதிக்குத்தான் ஒருவர் நன்றியுள்ளவராக இருக்க வேண்டும்' என்று பிப்ரவரி 27 அன்று FAZ இல் கோலர் கருத்து தெரிவித்தார். சமூக ஜனநாயகக் கட்சி (SPD) இப்போது 'பழைய நிலைப்பாடுகளை மிக விரைவாக விட்டுவருகிறது. மாஸ்கோ கூட இதனை பின்தொடர்வதில் சிக்கலை எதிர்கொள்கிறது.' மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இரண்டு சதவீத இலக்கை இராணுவச் செலவுகளுக்கு, அணுசக்தி பகிர்வின் தொடர்ச்சிக்கு, ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை வாங்குதற்கு இவை அனைத்திற்குமான சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னைய எதிர்ப்பு இப்போது 'நேற்று பெய்த மழையாகிவிட்டது' என்றார்.
கோலர் இத்துடன் திருப்தியடையவில்லை மேலும் அணுகுண்டுக்கு அழைப்பு விடுக்கிறார்: “மேற்கு நாடுகளுக்கு எதிரான புட்டினின் சிலுவைப்போர், அது மீண்டும் அதன் சொந்த கடந்த காலத்தைப் பற்றிக் கருத்திற்கு எடுப்பதன் மூலம் ஜேர்மனியை அனைத்துக் காலத்திற்கும் பதிலளிக்கக்கூடியதாக கருதப்படும் அணுவாயுதம் பற்றிய ஒரு கேள்வியை கவனத்தில் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்றது” என அவர் மற்றொரு FAZ கருத்துரையில் எழுதுகிறார்.
டொனால்ட் ட்ரம்ப்புடனான அனுபவம் ஐரோப்பியர்களுக்கு 'அமெரிக்காவின் அணுசக்தி குடையின் கீழ் நித்திய உத்தரவாதம் இல்லை' என்பதைக் காட்டியது. பிரான்சின் தடுப்பு ஆயுதக் களஞ்சியம் மிகவும் பலவீனமாக இருந்தது. ஐரோப்பியர்கள் ரஷ்ய அழுத்தத்திற்கு அடிபணிய விரும்பவில்லை என்றால், “ஐரோப்பா பெயருக்கு தகுதியான அணுசக்தியாக மாற வேண்டும். ஜேர்மனியின் பங்களிப்பு இல்லாமல், இது சாத்தியமாக இருக்காது” என்றும் கூறுகின்றார்.
இதே போன்ற கருத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்துச் செய்தித்தாள்களிலும் காணப்படுகின்றன, பொது தொலைக்காட்சியில் பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் இதே மாதிரியானவையாக இருக்கின்றன. ரஷ்யாவிற்கான எதிர்ப்பாளர்கள் மட்டுமே இங்கே சமநிலைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு விதிகள் 'வரலாற்றுத் திருப்புமுனைக்கு' பலியாகிவிட்டன என தங்கள் கருத்தைக் கூறுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற அமர்வானது பரவசமான போர் வெறித்தனமான மனநிலையால் குணாதிசயப்படுத்தப்பட்டது. பிரதிநிதிகள் மீண்டும் மீண்டும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். சமூக ஜனநாயகக் கட்சி (SPD), பசுமைக் கட்சி (Green), தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) கூட்டணி மற்றும் எதிர்க் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் (CDU/CSU) ஒருவரையொருவர் இராணுவவாத முழக்கங்களுடன் விஞ்சி, பரஸ்பர ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டனர். இடது கட்சி மற்றும் ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று (AfD) ஆகியவையும் போர் கூக்குரலில் இணைந்தன.
ஒன்றன்பின் ஒன்றாக, இடது கட்சி பிரதிநிதிகள் புட்டினை குற்றவியல் ரீதியாக குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக ஒப்புக்கொண்டனர். கட்சியின் மிக முக்கிய பிரதிநிதியான கிரிகோர் கீசி, ZDF தொலைக்காட்சி காலை நிகழ்வில், மேற்கு நாடுகள் மற்றும் நேட்டோவை விமர்சித்து தான் கூறிய அனைத்தும் ஏற்கனவே 'குப்பையாகிவிட்டன' என்று அறிவித்தார். ஏனென்றால் இப்போது புட்டின் சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு குற்றவியல் ஆக்கிரமிப்பு போரை நடத்த முடிவு செய்துள்ளார்' என்றார்.
உக்ரேன் மீதான புட்டினின் தாக்குதல், பெல்கிரேட் மீதான குண்டுவீச்சு, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவின் அழிவு, குவாண்டனாமோ, அபு கிரைப் மற்றும் நேட்டோ மற்றும் அதன் அங்கத்துவ நாடுகள் செய்த பல போர்க்குற்றங்களை பின்னோக்கி பார்க்கும்போது, ஏன் அவற்றை நியாயப்படுத்துகிறது என்பதை கீசி விளக்கவில்லை.
இறுதியாக, விவாதத்தின் மையச் செய்தியை AfD துணைத் தலைவர் றூடிகர் லூகாசென் தொகுத்து கூறினார். 'அதிகாரத்திற்கான மிருகத்தனமான அரசியல் மீண்டும் வந்துவிட்டது மற்றும் ஜேர்மன் அரசியலில் இருந்து அறநெறி நெறிமுறைகளை அகற்றி வருகிறது' என்று முன்னாள் தொழில்முறை இராணுவ அதிகாரி அறிவித்தார். ஜேர்மனிக்கு வேறு மாற்றீடு இல்லை என்றார். மத்திய அரசாங்கம் 'அதிகார அரசியலின் திசையில் சக்கரத்தைத் திருப்ப வேண்டும்,' அதாவது 'இராணுவ திறன்களைக் கொண்டிருப்பதை' நோக்கி என்றார்.
மறுஆயுதமதயமாக்கலுக்கான பாரிய செலவில் திருப்தியடையாது, லூகாசென் ஒரு துணைக்கருத்தியல் தாக்குதலுக்கு அழைப்பு விடுத்தார். 'நமது மக்களிடையே ஒரு புதிய திருப்பித்தாக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு' மத்திய அரசுக்கு உள்ளது என்று அவர் கூறினார். கட்டாய இராணுவ சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றார் 'திருப்பித்தாக்குதல் என்பது நமது உறுதியான சுதந்திரத்திற்கான விலை' என்றார்.
கடந்த காலத்தின் பெரும் சக்தி அரசியல் மற்றும் இராணுவவாதத்திற்கு திரும்புவதற்கான முயற்சிகள் கூட்டாட்சி குடியரசு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே இருக்கின்றன. FAZ இல் கோலர் குறிப்பிடுவது போல் இதற்கு தடையாக இருப்பது சமூக ஜனநாயகக் கட்சி அல்ல, மாறாக இரண்டு பேரழிவு தரும் போர்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் Wehrmacht (ஆயுதப் படைகள்) இன் மிருகத்தனமான குற்றங்களுக்குப் பின்னர், பரந்த அளவிலான மக்களின் எதிர்ப்பே தடையாக இருந்தது. மக்கள் மீண்டும் ஒரு போரை அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். மறுபுறம், சமூக ஜனநாயகக் கட்சி, இராணுவவாதத்தின் ஒவ்வொரு விரிவாக்கத்தையும் ஆதரித்து, ஏராளமான பாதுகாப்பு மந்திரிகளை பதவியிலிருத்த வழங்கியிருந்தது.
1950 களின் முதல் பாதியில், இராணுவத்தை (Bundeswehr) ஸ்தாபிப்பதற்கு எதிராக வெகுஜன எதிர்ப்புக்கள் இருந்தன. இது அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கமாக 1960 களில் தொடர்ந்தது. 1980 களின் முற்பகுதியில், ஜேர்மனியில் பெர்ஷிங் நடுத்தர தூர அணுசக்தி ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கு எதிராக நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 2003 இல், ஈராக் போருக்கு எதிராக அரை மில்லியனுக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேர்லினில் தெருக்களில் இறங்கினர்.
ஆயினும்கூட, ஜேர்மன் இராணுவவாதத்தை புதுப்பிக்கும் முயற்சிகள் குறையவில்லை. ஆளும் வர்க்கம் 1990இல் ஜேர்மனி மீண்டும் ஒன்றிணைவதை ஐரோப்பாவில் அதன் மேலாதிக்கத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கண்டது. 1993 இல் அப்போதைய வெளியுறவு அமைச்சர் கிளவுஸ் கின்கெல் (FDP) பின்வருமாறு அறிவித்தார். '80 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசமாக, ஐரோப்பாவின் மையத்தில் பொருளாதார ரீதியாக வலுவான நாடாக, நாங்கள் ஒரு சிறப்புப் பொறுப்பை ஏற்கிறோம். 'எங்கள் மைய நிலை, அளவு மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவுடனான எங்கள் பாரம்பரிய உறவுகள் ஆகியவற்றின் காரணமாக, இந்த அரசுகள் ஐரோப்பாவிற்கு திரும்புவதில் இருந்து முக்கிய நன்மையைப் பெறுவதற்கு நாங்கள் முன்னரே பொருத்தமானதாக உள்ளோம்'.
அப்போதிருந்து, ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோவும் மேலும் மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளன. இந்த நிகழ்வுகளில் இருந்து ஜேர்மனி பொருளாதாரரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் மிகவும் பயனடைந்துள்ளது. 1999 இல், தங்கள் சொந்த அணிகளுக்குள் இருந்து கணிசமான எதிர்ப்பிற்கு எதிராக, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் இராணுவத்தினை முதல்முதலாக சர்வதேச போரில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். இது யூகோஸ்லாவியாவை பெரும் வல்லரசுகளைச் சார்ந்து நிற்கும் ஏழு வலிமையற்ற ஏழை நாடுகளாகப் பிரிப்பதை உறுதிப்படுத்தியது.
2014 இல், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் (CDU/CSU) பெரும் கூட்டணியானது ஜேர்மனிக்கு உதவுவதற்கான அதன் முயற்சிகளை தீவிரப்படுத்தியது. அப்போதைய கூட்டாட்சித் தலைவர் ஜோகாயிம் கவுக்கின் வார்த்தைகளில் ஜேர்மனி “உலகில் மிகவும் சுறுசுறுப்பான பாத்திரத்தை வகிக்கிறது” மற்றும் ஒரு பெரிய அதிகாரக் கொள்கையை பின்பற்றுகிறது. இது உக்ரேனில் ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்தது. இது பாசிச குழுக்களின் உதவியுடன் ரஷ்ய-எதிர்ப்பு ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்து, இன்றைய போருக்கு அடித்தளம் அமைத்தது.
அப்போதிருந்து, ஜேர்மனியின் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் 2014 இல் 32.4 பில்லியன் யூரோக்களிலிருந்து 2021 இல் 46.9 பில்லியன் யூரோக்களாக வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. இப்போது அது ஒரே வீச்சில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
குறிப்பாக பசுமைவாதிகளால் இடைவிடாது திரும்பத் திரும்பக் கூறப்பட்ட உக்ரேன் போர் என்பது ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரிக்கு எதிராக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது என்ற கூற்று, நெருக்கமான ஆய்வுகளில் அட்டைகளால் உருவாக்கப்பட்ட வீடு போல் சரிகிறது.
புட்டினின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி பிற்போக்குத்தனமானவை. சோவியத் ஒன்றியத்தின் சமூகச் சொத்துக்களை கொள்ளையடித்து பணக்காரர்களாகிவிட்ட ரஷ்ய தன்னலக்குழுக்களின் நலன்களையே அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஸ்ராலினின் மரபுகள் மற்றும் ஜார் பேரரசின் பெரிய ரஷ்ய பேரினவாதத்திற்கு செல்லும் அவரது தேசியவாதத்தினால், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பேரழிவுகரமான விளைவுகளை மாற்றியமைக்க முடியாது. அது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி, தேசியவாத வார்த்தையாடிகளின் கரங்களுக்குள் தள்ளுகிறது.
ஆனால் உக்ரேனிய ஆட்சியும் சிறப்பான ஒன்றல்ல. அது ஜனநாயகத்திற்கான குறைந்தபட்ச தேவைகளை கூட பூர்த்தி செய்யவில்லை. அதன் ஆயுதப் படைகள் அசோவ் பட்டாலியன் போன்ற பாசிச ஆயுத்தாரிகளால் நிரம்பியுள்ளன. இது டைம் இதழின் அறிக்கையின்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் 50 நாடுகளில் இருந்து 17,000 வெளிநாட்டு ஆயுததாரிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது.
இது, ஜேர்மன் அரசுக்கும் நன்கு தெரியும். இந்த ஆண்டு பிப்ரவரி 9 அன்று, அரசாங்க சார்பு அமைப்பான Stiftung Wissenschaft und Politik (SWP) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் 'உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கியின் கீழ்', ஜேர்மனியின் பெரும் நிதி உதவியுடன் ஆதரிக்கப்பட்ட உக்ரேனிய ஆட்சி பற்றிய பேரழிவு தரும் பின்வரும் தீர்ப்பை வழங்கியது.
'அரசியலமைப்பு ரீதியான அமைப்புகளுக்கு மேலதிகமாக, ஜனநாயக ரீதியாகப் பொறுப்புக்கூறலுக்கு உட்படாத சக்திவாய்ந்த நபர்கள் நாட்டில் உள்ளனர்' என்று அது கூறுகிறது. இதில் தன்னலக்குழுக்கள் மற்றும் பிராந்தியரீதியாக வேரூன்றிய அரசியல்-பொருளாதார வலைப்பின்னல்கள் மற்றும் நீதித்துறைக்குள் உள்ள நபர்களின் வட்டங்கள் ஆகியவை அடங்கும்.
'அதன் அரசியல்மயமாக்கப்பட்ட நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு முறையில் சக்திவாய்ந்த முறைசாரா நபர்களின் பெரும் செல்வாக்கு காரணமாக,' உக்ரேனை 'தாராளவாத ஜனநாயகம்' என்று கருத முடியாது. 'உக்ரேனின் பாதுகாப்புக் கொள்கை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் மேற்கத்திய அரசுகளின் பிரிவினரைச் சார்ந்து இருப்பதால்,' அந்நாடுகள் 'உக்ரேனில் மற்றொரு முக்கிய பாத்திரம் வகிப்பவர்களாக' மாறியுள்ளன.
சுருக்கமாக கூறினால்: உக்ரேன் என்பது ஊழல் நிறைந்த கூட்டாளிகள் மற்றும் ஊழல்மிக்க நீதித்துறையால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அரசாகும், இது மேற்கத்திய சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டு கையாளப்படுகிறது.
மேலும், நேட்டோ என்பது ஜனநாயக நாடுகளின் சமாதானக் கூட்டணி அல்ல. மாறாக ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு போர்க் கூட்டணியாகும். இது 2020 இல் உலகின் இராணுவச் செலவில் பாதிக்கும் மேலான பங்கான 1.1 டிரில்லியன் டாலரைக் கொண்டிருந்ததுடன் மற்றும் கடந்த முப்பது ஆண்டுகளில் ஏராளமான சட்டவிரோதப் போர்களை நடத்தியுள்ளது.
ஜேர்மன் முதலாளித்துவத்தைப் பொறுத்த வரையில், உக்ரேன் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறை மட்டுமே. விற்பனைச் சந்தைகள் மற்றும் மூலப்பொருட்களுக்கான ஜேர்மன் பெருவணிகத்தின் பசி மற்றும் உள்நாட்டில் வளர்ந்து வரும் சமூக மோதல்கள் அதை ஏற்கனவே இரண்டு உலகப் போர்களில் நிகழ்ந்ததைப்போல் கிழக்கை நோக்கிய விரிவாக்கத்தில் அது ஏற்கனவே முன்னர் எடுத்த பாதையில் மீண்டும் கொண்டு செல்கிறது.
கடந்த தசாப்தங்களில் அது 'வர்த்தகத்தின் மூலம் மாற்றம்' என்ற பதாகையின் கீழ் சமாதானமான வழிகளில் அதன் இலக்குகளை பின்தொடர்ந்து வந்த நிலையில், இப்போது அது மீண்டும் இராணுவ பலத்தை நாடியுள்ளது. இதுவே நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் ஆர்வத்துடன் கொண்டாடப்பட்ட 'வரலாற்றுத் திருப்புமுனை' ஆகும். ஜேர்மனியும் நேட்டோவும் வேண்டுமென்றே தூண்டிவிட்ட உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்பு அவர்களுக்கு பொருத்தமான நேரத்தில் வருகிறது.
இந்தக் கொள்கையின் விளைவுகள் பேரழிவுதரக்கூடியவை. அணுசக்தி ரஷ்யாவுடனான இராணுவ மோதலின் ஆபத்தை அவர்கள் கற்பனை செய்வது மட்டுமல்லாமல், அது ஐரோப்பாவை அழிவிற்குள்ளாக்கிவிடும். பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டு உலகப் போர்களில் தோற்கடிக்கப்பட்ட ஜேர்மனி மீண்டும் ஐரோப்பாவின் இதயத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெரும் சக்தியாக மாறுவதை நீண்ட காலப்போக்கில் ஏற்காது. நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் ஐக்கியம் மற்றும் ஒற்றுமையை பற்றி எத்தனைமுறை குறிப்பிட்டாலும், அவர்களின் ஆக்கிரமிப்புக் கொள்கைகள் ஏற்கனவே எதிர்கால மோதல்களுக்கான விதைகளைக் கொண்டுள்ளன.
உக்ரேனிய, ரஷ்ய, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் இதர அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து, போருக்கு எதிரான போராட்டத்தை காலாவதியான தேசிய அரசமைப்புக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச தாக்குதலே இந்த முட்டுச்சந்தியிலிருந்து வெளியேற ஒரே வழியாகும்.