டொன்பாஸில் பாரிய மக்கள் வெளியேற்றங்கள் தொடங்கும் போது உக்ரேனை ஆக்கிரமிக்க "புட்டின் முடிவெடுத்துள்ளார்" என்று பைடென் கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு அசாதாரண செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்து நாட்டின் தலைநகரான கியேவ் வரை முன்னேறுவதற்கான 'முடிவை' எடுத்துள்ளதாக தான் 'நம்புவதாக' அறிவித்தார். வெள்ளை மாளிகை அத்தகைய நடவடிக்கையை 'எதிர்வரும் வாரத்திற்குள், எதிர்வரும் நாட்களில்', 'எதிர்பார்ப்பதாக' பைடென் கூறினார்.

பிப்ரவரி 17, 2022, வியாழன், உக்ரேனின் கார்கிவ் நகரில் உக்ரேனிய தேசியக் காவலர் உக்ரேனிய பாதுகாப்பு சேவை முகவர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஒரு நடமாடும் சோதனைச் சாவடியைக் காவல்காக்கின்றார்.

ஒரு 10 நிமிட உரையில், 'அத்தகைய முடிவு' ரஷ்யா 'பேரழிவு மற்றும் தேவையற்ற போரை தேர்ந்தெடுத்தற்கு' 'பொறுப்பாகின்றது' என்று பொருள்படும் என்று பைடென் எச்சரித்தார். அத்தகைய போருக்கு ரஷ்யா 'பாரிய விலையை' கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், அமெரிக்காவும் நேட்டோவும் 'நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க' தயாராக இருப்பதாக அவர் அச்சுறுத்தினார்.

கியேவில் 2014ல் அமெரிக்க நிதியுதவியுடன் தீவிர வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து வெடித்த எட்டு ஆண்டுகால உள்நாட்டுப் போரின் தளமாக இருக்கும் கிழக்கு உக்ரேனில் ஷெல் தாக்குதலில் ஒரு 'பெரிய அதிகரிப்பிற்கு' ரஷ்யாவை பைடென் குற்றம்சாட்டினார். அமெரிக்க ஜனாதிபதி, பாசிஸ்டுகளால் நிரம்பிய மற்றும் அமெரிக்காவினால் ஆயுதம் மற்றும் பயிற்சி பெற்ற உக்ரேனின் இராணுவத்தை அவர்களின் 'மகத்தான தீர்மானிக்கும் திறன்' மற்றும் 'பொறுமை' ஆகியவற்றிற்காக பாராட்டினார். மேலும் அமெரிக்கா 'உக்ரேனிய மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்' என்று வலியுறுத்தினார்.

பிரிவினைவாத கட்டுப்பாட்டுப் பிரதேசமான லுகான்ஸ்கில் மழலையர் பள்ளி மீது வியாழனன்று ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்கா எச்சரித்ததற்கு ஏற்ப ரஷ்யாவின் 'தவறான கொடி நடவடிக்கை' என்று பைடென் கூறினார். கடந்த வாரங்கள் மற்றும் மாதங்களில் கூறப்பட்ட அனைத்து பொய்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் போலவே, அவர் தனது குற்றச்சாட்டுகளை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முயற்சிக்கவில்லை.

பைடென் தனது உரையை: “நம் தேசத்தையும் உலகத்தையும் பிளவுபடுத்தும் பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம். அமெரிக்க மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றுபட்டுள்ளது. அட்லாண்டிக் இடையிலான சமூகம் ஒன்றுபட்டுள்ளது. நமது அரசியல் கட்சிகள் [அமெரிக்காவில்] ஒன்றுபட்டுள்ளன. முழு சுதந்திர உலகமும் ஒன்றுபட்டுள்ளது” என்று முடித்தார்.

பைடெனின் கருத்துக்கள், முற்றிலும் மூளை குழம்பிய ஆளும் வர்க்கத்தின் கூற்றுகளாகும். அடுத்த வாரத்திற்குள் அமெரிக்கா அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவுடன் ஒரு போருக்குத் தயாராகிறது என்று அறிவித்த பின்னர், அவரின் ஆதாரமற்ற கருத்துக்களுக்கு எவ்வித எதிர்ப்பையும் காட்டாத பத்திரிகையாளர்களின் ஒரு சில கேள்விகளுக்குப் பிறகு அவர் அறையை விட்டு வெளியேறினார்.

இந்த வார இறுதியில் ஜனாதிபதி புட்டின் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்ட அணுவாயுதங்கள் தாங்கிய பெரும் இராணுவ பயிற்சிகள் பற்றி பைடெனிடம் ஒரு நிருபர் கேட்டபோது, அவர் 'அவர் தொலைவில் கூட அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை சிந்திக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவரால் இயலாமல் உள்ள, மாற்றமுடியாத ஐரோப்பாவின் இயக்கவியலை மாற்றும் திறன் அவருக்கு உள்ளது என அவர் உலகை நம்ப வைக்கும் முயற்சியில் கவனம் செலுத்துகிறார் என்றே நினைக்கிறேன்”. சிறிது நேரத்திற்குப் பின்னர், அவர் மேலும் கூறினார், 'ஆனால் அவர் எவ்வாறு சிந்திக்கிறார் என்பதை அறிவது கடினம்' என பதிலளித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தப் பயிற்சிகள் தெளிவாகக் காட்டுவதுபோல, இந்த மோதலில் ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது பற்றி ரஷ்யாவுடனான போருக்கான பொறுப்பற்ற உந்துதலில் வெள்ளை மாளிகையால் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

பைடெனின் பேச்சு, ஈராக்கில் 'பேரழிவுகரமான ஆயுதங்கள்' பற்றி கொலின் பௌலின் 2003 ஆண்டு இழிவான உரையை நினைவூட்டும், ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கென் பொய் நிறைந்த உரை நிகழ்த்திய ஒரு நாளுக்குப் பின்னரும் மற்றும் உக்ரேனை நேரடியாக எல்லையாகக் கொண்ட போலந்திற்கு அமெரிக்கா 250 டாங்கிகளை அனுப்புவதாக அறிவித்த சில மணிநேரங்களுக்கு பின்னரும் வருகிறது. உக்ரேனின் எல்லைகளுக்கு அருகே சுமார் 190,000 ரஷ்ய துருப்புக்கள் குவிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா இப்போது கூறுகிறது.

பல வாரங்களாக, அமெரிக்க ஊடகங்கள் உளவுத்துறை அமைப்புகளாலும் வெள்ளை மாளிகையாலும் ஊட்டப்படும் பொய்களை பரப்பி வருகின்றன. இதில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு உடனடியாக நிகழவுள்ளதாக கூறப்பட்டு, இந்தவாரம் புதன் கிழமை, பிப்ரவரி 16 என்று தேதியிடப்பட்டது கூட உள்ளடங்கும். ஆயினும்கூட, ரஷ்ய படையெடுப்பு எதுவும் நடைபெறாததுடன் மற்றும் கிரெம்ளின் தொடர்ந்து அவ்வாறு ஒருபோதும் திட்டமிடவில்லை எனக் கூறிவருகிறது. நேட்டோவும் அமெரிக்காவும் ஒன்றன் பின் ஒன்றாக பொறுப்பற்ற இராணுவ ஆத்திரமூட்டலில் ஈடுபட்டுள்ள நிலையில், கிரெம்ளின் இதுவரை அதுபற்றி எவ்வித பிரதிபலிப்பையும் காட்டவில்லை.

ஆனால் கோவிட்-19 இனால் உருவான பாரிய முடிவில்லாத மரணம், வானளாவிய பணவீக்கம் மற்றும் வரலாற்று ரீதியாக முன்னோடியில்லாத வகையில் செல்வத்தை பெரும் பணக்காரர்களுக்கு மாற்றுவதை மேற்பார்வையிடுவரும் அமெரிக்க ஆளும் வர்க்கம் இனியும் காத்திருக்க முடியாது என்று உணர்கிறது. பைடென் நிர்வாகம் இன்னும் வெளிப்படையாக பாசிசவாத குடியரசுக் கட்சியுடன் 'ஐக்கியத்திற்கான' அடித்தளத்தை உருவாக்கும் அதேவேளையில் ரஷ்யாவுடன் ஒரு போரைத் தூண்டிவிட்டு வெடிக்கும் வர்க்கப் பதட்டங்களை வெளிப்புறமாக திசைதிருப்ப முயல்கின்றது.

கடந்த எட்டு ஆண்டுகளில் 14,000 உயிர்களைக் கொன்று மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர செய்த ரஷ்ய-சார்பு பிரிவினைவாதிகளுக்கும் அமெரிக்க நிதியுதவி பெற்ற உக்ரேனிய இராணுவத்திற்கும் இடையிலான உள்நாட்டுப் போரின் அபாயகரமான விரிவாக்கத்தின் பின்னணியில் பைடென் தனது உரையை நிகழ்த்தினார். OSCE மேற்பார்வையாளர்கள் இந்த வார தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் வேண்டுகோளின் பேரிலும் மாஸ்கோவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இம் மோதல் பிராந்தியத்தை விட்டு வெளியேறினர்.

வியாழன் முதல், குடியிருப்பு பகுதிகள் உட்பட பலத்த ஷெல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கி முழு அளவிலான படையெடுப்புக்கான உத்தரவை வழங்க உள்ளார் என்று ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளின் கூற்றுக்களை உக்ரேனிய தலைமைப் பணியாளர்களும் அரசாங்கமும் மறுத்தாலும், நிலைமைகள் ஏற்கனவே முழு அளவிலான இராணுவ மோதலாக மாறவுள்ளது.

வெள்ளியன்று, சுயமாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் ஆயுதக்குழுவின் தலைவரின் கார் ஒரு படுகொலை முயற்சியில் தகர்க்கப்பட்டது. லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் பிரதேசத்தில் இரவு முதல் சனிக்கிழமை வரை இரண்டு குண்டுவெடிப்புகள் எரிவாயு குழாயில் பெரும் தீ விபத்துக்கு வழிவகுத்தன. உக்ரேன், பெலாருஸ் உடன் சேர்ந்து, ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கான ஒரு முக்கியமான போக்குவரத்து நாடாக உள்ளது.

ஒரு வெளிப்படையான போர் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எரிசக்தி உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சேதங்கள் எதிர்காலத்தில் என்ன வரக்கூடும் என்பதற்கான ஒரு அச்சமூட்டும் அறிகுறியாகும். முக்கியமான எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்களுக்கு அப்பால், செர்னோபைலில் 1986 ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரமான அணுசக்தி விபத்தினால் விட்டுச் செல்லப்பட்ட அணுக்கழிவுகளின் தளமாகவும் உக்ரேன் உள்ளது. உலகின் மிக கதிரியக்கமுள்ள இடங்களில் ஒன்றாகவும் மற்றும் கிழக்கு உக்ரேனுக்கும் கியேவுக்கும் இடையிலான குறுகிய பாதையில் உள்ள செர்னோபில் தடைசெய்யப்பட்ட மண்டலத்தில் சாத்தியமான இராணுவ மோதல்களை எதிர்பார்த்து உக்ரேனிய இராணுவப் படைகள் கடந்த வாரங்களாக அங்கு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

கிழக்கு உக்ரேனில், ஒரு மனிதாபிமான பேரழிவு ஏற்கனவே கட்டவிழ்ந்துவருகிறது. வெள்ளியன்று, டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பிரிவினைவாதத் தலைவர்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை பெருமளவில் ரஷ்யாவிற்கு வெளியேற்றுவதாக அறிவித்தனர். டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் பிரிவினைவாத தலைவர்கள் அங்கிருந்து மட்டும் 700,000 மக்களை வெளியேற்ற எதிர்பார்க்கின்றனர். BBC இன் கூற்றுப்படி, 18 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண்கள் டொனெட்ஸ்கை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.

வெள்ளி இரவு வரை, தெற்கு ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளில் வந்தனர். போர் வலயத்தை விட்டு கட்டாயமாக வெளியேற முனையும் அகதிகளுடன் கூடிய கார்களின் வரிசை ரஷ்ய எல்லைக்கு முன்பதாக 14 மைல்களுக்கு நீண்டுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பிரிவினைவாதத் தலைவர்கள் தங்கள் குடிமக்களில் பெரும்பகுதியை வெளியேற்றுவதற்கான முடிவால் ஆரம்பத்தில் ஆச்சரியமடைந்த கிரெம்ளின், ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு அகதிகளுக்கும் 10,000 ரூபிள் (அண்ணளவாக $129) கொடுப்பதாக உறுதியளித்ததுடன் மற்றும் எதிர்வரும் நாட்களில் பல்லாயிரக்கணக்கான அகதிகளை பொறுப்பெடுக்கத் தயாராக இருக்குமாறு பிற பிராந்தியங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கியேவின் நகரசபை பாதுகாப்பு இயக்குனர் ரோமன் தகாசுக், உக்ரேனிய வானொலியில் ரஷ்யாவுடன் ஒரு வெளிப்படையான போர் ஏற்பட்டால், கியேவின் 2.8 மில்லியன் மக்கள் அனைவரும் எங்கு அல்லது எப்படி என்று குறிப்பிடாமல் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய தரைக்கடல் மற்றும் அதன் எல்லைகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் பரிதாபமாக இறக்க அனுமதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், போரின் போது உக்ரேனிலிருந்து 'ஒரு மில்லியன் வரை' மக்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் முன்னதாக எச்சரித்துள்ளனர்.

1934 இல் எழுதுகையில், ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி மனிதகுலத்தை 'அமெரிக்க இராணுவவாதத்தின் எரிமலை வெடிப்பிற்கு முன்னே நேருக்கு நேர் கொண்டு வரும்' என்று எச்சரித்தார். இதுதான் இப்போது வெளிவருகிறது. அரசியல் நிலைமை ஆளும் வர்க்கத்தின் கைகளில் விடப்பட்டால், உலக முதலாளித்துவ நெருக்கடியால் கட்டவிழ்த்து விடப்படும் இயக்கவியல் தவிர்க்க முடியாமல் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும். இதற்கான ஒரே மாற்று பாதை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டில்தான் உள்ளது. இந்த தலையீடு ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதன் மூலமும், ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கான போராட்டத்தின் மூலமும் அரசியல்ரீதியாக தயாரிக்கப்பட வேண்டும்.

Loading