ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான இராணுவ செலவினத்தை ஜேர்மனி அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மூன்றாம் உலகப் போராக பெருகிய முறையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் ஆக்கிரமிப்புக் கட்டமைப்பில் ஜேர்மனி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரிய பாத்திரத்தை ஆற்றி வருகிறது.

பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ரின லாம்ப்ரெக்ட் (Christine Lambrecht, SPD) நேற்று ரஷ்யாவிற்கு எதிரான சாத்தியமான போருக்கு ஜேர்மன் ஆயுதப்படைகளை தயார்படுத்துவதற்காக பாதுகாப்பு செலவினங்களில் விரைவான மற்றும் பாரிய அதிகரிப்புக்கு அழைப்பு விடுத்தார். 'உக்ரேனின் எல்லைகளில் உள்ள அச்சுறுத்தும் சூழ்நிலையானது, இன்று எவ்வளவு பயனுள்ள தடுப்பு நடவடிக்கை முக்கியமானது என்பதை துரதிர்ஷ்டவசமாக நமக்கு மீண்டும் ஒருமுறை மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது,' என்று அவர் Der Spiegel க்கு விளக்கினார். இதிலிருந்து, ஜேர்மனியின் ஆளும் கூட்டணி, 'ஜேர்மன் இராணுவத்திற்கு நிதியுதவி செய்வது' என்ற முடிவுகளை கட்டாயம் எடுக்க வேண்டும்.

பிப்ரவரி 16, 2022 அன்று புரூஸ்ஸெல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நடந்த நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளின் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் (SPD) தனது அமெரிக்கப் பிரதிநிதி லாயிட் ஜே. ஆஸ்டின் III உடன் (Stephanie Lecocq, Pool Photo via AP)

நேட்டோவிற்குள் தேசிய மற்றும் கூட்டணி பாதுகாப்பு என்பது, —இது ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகளுக்கான குறியீட்டு வார்த்தையாகும்— ஜேர்மன் ஆயுதப்படைகளின் முக்கிய பணிகளில் ஒன்றாகும் என்று லாம்ப்ரெக்ட் விளக்கினார். 'இதற்கு அவர்கள் சிறந்த முறையில் ஆபுதபாணியாக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்,' என்று அவர் கூறினார்.

திரைக்குப் பின்னால் விவாதிக்கப்படும் செலவு புள்ளிவிவரங்கள் மிகப்பெரியவை. Der Spiegel இன்கூற்றுப்படி, 2026 வரையிலான ஆண்டுகளில் இராணுவத்திற்கு கூடுதலாக 37.6 பில்லியன் யூரோக்கள் தேவைப்படும் என ஆயுதப் படைகளுக்கான திட்டமிடுபவர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்த கூடுதல் செலவு, 'நேட்டோவிற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மற்றும் புதிய போர் விமானங்களை வாங்குவது போன்ற அவசரமாக தேவைப்படும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும்' இவை தேவைப்படும்.

முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்யாவிற்கு எதிரான போர்த் தாக்குதலைப் பற்றிய ஒரு உரையில், லாம்ப்ரெக்ட் தனது கோரிக்கையை மீண்டும் கூறினார். “நாளைய பாதுகாப்புக்கு நாம் இன்று பணம் செலுத்த வேண்டும். நான் உண்மையில் சொல்கிறேன்: நமது ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான சூழ்ச்சிக்குத் தேவையான இடத்தை நாமே வழங்குவதற்கு, நாம் நல்ல நிதி நிலையில் இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் தொடர்ந்து பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் மேலும் அதை நிலையானதாகச் செய்ய வேண்டும்,' என்று அவர் கருத்து தெரிவித்தார்.

துளியும் மினுக்குப் பேச்சு இல்லாமல், ஆளும் வர்க்கம் மீண்டும் முழு அளவிலான போர்களுக்கு தயாராகி வருவதாக அவர் அறிவித்தார். 'எதிர்கால மோதல்கள் இனி நிலத்திலும், கடலிலும், வானிலும் மட்டுமல்ல, சைபர்ஸ்பேஸ் மற்றும் விண்வெளியிலும் போராடப்படும்,' என்று அவர் கூறினார். 'நாங்கள் எப்போதும் புதிய ஆயுத அமைப்புகளைக் கையாள்வோம்: ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்டீரியபிள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் எதிர்காலத்திற்கான ஒரு விஷயமாக இருந்தன. இன்று அவை யதார்த்தமாகி விட்டன.”

அணுசக்தி நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவை லாம்ப்ரெக்ட் எதிரிகளாக அடையாளம் காட்டினார். மாஸ்கோ 'சிப்பாய்களை மிகவும் நகரக்கூடிய, மிகவும் திறமையான மற்றும் அதிக நெகிழ்ச்சி தன்மை கொண்ட ஒரு வெளிப்புற கட்டமைப்பை உருவாக்கியுள்ளது' மற்றும் சீனாவில் 'உயிரி ஆராய்ச்சிக்கு இராணுவ முன்னுரிமை உள்ளது.' “எந்தவிதமான தாக்குதல்களுக்கும் நமது சமூகத்தை மேலும் தாங்கக்கூடியதாக மாற்ற வேண்டும் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்; புதிய வடிவிலான மோதலுக்கும், மோதலின் பகுதிகளுக்கும், எதிர்கால ஆயுதங்களுக்கும் நமது ஆயுதப் படைகளை பொருத்தமாக மாற்ற வேண்டும்' என அவர் முடித்தார்,

உண்மையில், 'எதிர்கால மோதல்கள்' நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டன. 30 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து, ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் கிட்டத்தட்ட தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவைப் பொறுத்தவரை, வளங்கள் நிறைந்த மற்றும் புவி மூலோபாய ரீதியில் மையத்தில் உள்ள நாட்டை அடிபணியச் செய்யும் இலக்கை அவர்கள் பின்தொடர்கின்றது, மேலும் சீனாவிற்கு எதிரான போருக்கு ஒரு முன்நிபந்தனையாகவும் உள்ளது.

கடந்த சில வாரங்கள் மற்றும் நாட்களாக, மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு என்று கூறப்படும் இட்டுக்கட்டப்பட்ட சாக்குப்போக்கின் கீழ் மாஸ்கோவிற்கு எதிராக ஒரு போரைத் தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 18, 2022 அன்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலேனா பெயர்பொக் (பசுமை) பேசுகிறார் (Ina Fassbender/Pool via AP)

'இன்று, இதை நாம் மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும், நமது ஐரோப்பாவின் மத்தியில் ஒரு புதிய போர் அச்சுறுத்துகிறது' என ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலேனா பெயர்பொக் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் தனது உரையில் கூறினார். ரஷ்யா 'உக்ரேனுக்கு எதிராக அதன் துருப்புக்களை நிலைநிறுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, ஆனால் நம் அனைவருக்கும் எதிராகவும் ஐரோப்பாவில் நமது அமைதி வடிவமைப்புகளுக்கு எதிராகவும்' உள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கெனுடன் சேர்ந்து முனிச்சில் தோன்றிய பசுமை வெளியுறவு அமைச்சர் யாரை முட்டாளாக்க விரும்புகிறார்? உக்ரேன் மோதலில், ஆக்கிரமிப்பாளர் ரஷ்யா அல்ல, நேட்டோவாகும். 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில், வாஷிங்டனும் பேர்லினும், பாசிச சக்திகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பில், ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு எதிராக அங்கு ஒரு சதித்திட்டத்தை ஏற்பாடு செய்தனர். அப்போதிருந்து அவர்கள் கிழக்கு ஐரோப்பாவிற்கு துருப்புக்களை திட்டமிட்டு நகர்த்தி வருகின்றனர்.

புதன் மற்றும் வியாழன் அன்று புரூஸ்ஸெல்ஸில் நடந்த கூட்டத்தில், நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் கிழக்கு ஐரோப்பாவில் தங்கள் இருப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்தனர். 'மேம்படுத்தப்பட்ட முன்னோக்கி இருப்பு' என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக, இராணுவக் கூட்டணி பல்கேரியா மற்றும் ருமேனியாவில் 'போர் குழுக்களை' நிறுத்த விரும்புகிறது, மேலும் எதிர்காலத்தில் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிலும் இருக்கலாம். பால்டிக் மாநிலங்கள் மற்றும் போலந்தில் 2017 முதல் இருந்த 'போர்க்குழுக்கள்' தற்போது பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவிற்கு எதிரான போர் கட்டமைப்பில் ஜேர்மனி முக்கிய பங்கு வகிக்கிறது. வியாழன் அன்று, ஜேர்மன் இராணுவம் 'முதன்முதலில் வலுவூட்டல் படைகளின் பெரிய அணிவகுப்புக் குழு' லித்துவேனியாவில் உள்ள ஜேர்மன் தலைமையிலான நேட்டோ போர்க் குழுவை அடைந்ததாக அறிவித்தது. அதே நாளில், தந்திரோபாய விமானப்படை Squadron 74 இல் இருந்து மூன்று யூரோஃபைட்டர்கள் நேட்டோவின் வான் காவல் என்று அழைக்கப்படுவதில் பங்கேற்பதற்காக ருமேனிய விமானத் தளமான மிக்கைல் கோகல்னிசியானுவுக்கு வந்தடைந்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை, ஜேர்மனி, மற்ற நேட்டோ நட்பு நாடுகளுடன் சேர்ந்து, நேட்டோ தலையீட்டுப் படையின் செயல்பாட்டுத் தயார்நிலையை அதிகரித்தது. 'நேச நாட்டு ஐரோப்பாவின் சுப்ரீம் தளபதி, ஜெனரல் டோட் வோல்டர்ஸின் வேண்டுகோளின் பேரிலும், நேட்டோவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடனும், நேட்டோ பதிலளிப்புப் படையில், பதிவுசெய்யப்பட்ட ஜேர்மன் இராணுவத்தின் படைகளின் பதிலளிப்பை கூட்டாட்சி அரசாங்கம் அதிகரிக்கும்' என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உறுதியான வகையில், நேட்டோ பதிலளிப்புப் படையின் ஒரு பகுதியாக ஜேர்மனிக்கு அனுப்பப்பட்ட கிட்டத்தட்ட 14,000 துருப்புகளை இடமாற்றம் செய்வதற்கான தயார்நிலை குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, 'செயல்பாட்டுத் தயார்நிலையை அதிகரிப்பதற்கும், நேட்டோவின் பதிலளிப்பை மேம்படுத்துவதற்கும் மேலும் ஆயத்த நடவடிக்கைகள்' பின்பற்றப்படலாம்.

இந்த அணிதிரட்டல் ஊடகங்களில் காது கேளாத பிரச்சாரத்துடன் சேர்ந்து வருகிறது, அதன் முன்னணி கருத்து உருவாக்குபவர்கள் போருக்கான கோரிக்கையுடன் வாயில் நுரை தள்ளுகிறார்கள் மற்றும் அரசாங்கம் இன்னும் கூச்சத்துடன் பதிலளிப்பதாகக் கூறுகிறார்கள். இது, 'ஜேர்மன் விவாதத்தின் சிறப்பியல்பு, இது கிட்டத்தட்ட ஒழுக்க வகைகளில் நடத்தப்படுகிறது, ஆனால் ஜேர்மன் நலன்களை வலியுறுத்த எது உதவுகிறது என்ற கேள்வியின் அடிப்படையில் அல்ல' என்று Süddeutsche Zeitung இன் அரசியல் துறையின் தலைவர் ஸ்டீபன் கோர்னேலியஸ் புகார் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வளங்கள் மற்றும் புவி மூலோபாய செல்வாக்கைப் பாதுகாக்க நீங்கள் மீண்டும் குற்றங்களைச் செய்ய வேண்டும். தொற்றுநோய்களில் ஏற்கனவே 120,000 உயிர்களைப் பறித்துள்ள ஆளும் வர்க்கத்தின் மனநிலை இதுதான்.

ஜேர்மன் ஆளும் உயரடுக்கின் ஆக்ரோஷமான நடத்தை சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. 2014 ஆம் ஆண்டு முனிச் பாதுகாப்பு மாநாட்டில் அப்போதைய வெளியுறவு அமைச்சரும் தற்போதைய கூட்டாட்சித் தலைவருமான ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைய்ன்மயர் (SPD) ஜேர்மனி 'உலக அரசியலில் ஒருபுறம் இருந்து கருத்து தெரிவிப்பதை விடவும் மிகவும் பெரியது' என்றும் மேலும் 'முன்னதாக வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் மிகவும் தீர்க்கமாகவும், மேலும் கணிசமானதாகவும்' ஈடுபட வேண்டும் என்றும் அறிவித்தார். மிகவும் சிறிது காலத்திற்குப் பின்னர் உக்ரேனில் ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரித்தது.

நாங்கள் எழுதினோம்:

வரலாறு வஞ்சம் தீர்ப்பதுடன் திரும்பிக் கொண்டிருக்கிறது. நாஜி குற்றங்களின் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தில் அதன் தோல்விக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கமானது கெய்சர் பேரரசு மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய வல்லரசு அரசியலை மீண்டும் ஒருமுறை ஏற்றுக்கொண்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போர் பிரச்சாரத்தின் வெடிப்பின் வேகமானது, முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர் நிகழ்வை மீண்டும் நினைவூட்டுகிறது. உக்ரேனில் ஜேர்மன் அரசாங்கமானது ஸ்வோபோடா மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தில் நாஜி ஒத்துழைப்பாளர்களின் மரபில் நிற்கும் ரைட் செக்டார் பாசிஸ்டுகளுடன் கூடிவேலை செய்துகொண்டிருக்கின்றது. இரண்டு உலகப் போர்களிலும் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டு ரஷ்யாவிற்கு எதிராக நிலைகொள்ளும் தளமாக இருந்த நாட்டை இப்போது அது மீண்டும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனில் தங்கள் பாசிச ஒத்துழைப்பாளர்களின் திட்டத்தை செயல்படுத்துகின்றன. உக்ரேனின் நாடாளுமன்ற உறுப்பினரும், நவ-நாஜி ஸ்வோபோடா கட்சியின் தலைவருமான ஓலே ரயானிபொக் (Oleh Tyahnybok), இந்த மாத தொடக்கத்தில், கிரிமியாவை மீண்டும் உக்ரேனுக்கு கொண்டு வர, ரஷ்யா 'துண்டாக்கப்பட வேண்டும்' மற்றும் இரண்டு '20 தேசிய அரசுகளாக' பிரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். ரயானிபொக் ஏற்கனவே 2014 இல் ஸ்ரைய்ன்மயரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக இருந்தார்.

1941 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் மீது நாஜி வேர்மாக்ட் படையெடுத்ததன் வழியே பெருகிய முறையில் பின்பற்றப்படும் ஆக்கிரமிப்புக்கு, புட்டின் ஆட்சியிடம் எந்த முற்போக்கான பதிலும் இல்லை. ஸ்ராலினிச முதலாளித்துவ மறுசீரமைப்பிலிருந்து மகத்தான சொத்துக்களை குவித்துள்ள ஊழல் நிறைந்த தன்னலக்குழுவின் நலன்களை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் அதன் பிற்போக்கு தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்துடன், அது போரின் ஆபத்தை மேலும் அதிகரித்து வருகிறது.

ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே, உலகப் போர் மற்றும் காட்டுமிராண்டித்தனம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்கான ஒரே வழி.

Loading