இலங்கை நீதி அமைச்சர் பிரதான துறைகளில் வேலைநிறுத்த தடைக்கு அழைப்பு விடுத்துள்ளார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த மாத இறுதியில் இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவிடம், பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடை செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி நெத்FM வானொலியில் நடந்த சுமார் 90 நிமிட உரையாடலின் போது சப்ரி தனது வேண்டுகோளை விடுத்தார்.

“துறைமுகம், சுங்கம், CEB [இலங்கை மின்சார சபை], பெற்றோலியக் கூட்டுத்தாபனம், GMOA [உண்மையில், இங்கு அவர் சுகாதாரத் துறையைக் குறிப்பிட்டார்] போன்ற முக்கிய மூலோபாய பொருளாதாரத் துறைகள் உள்ளன. இவை அனைத்திலும் வேலைநிறுத்தங்கள் தடை செய்யப்பட வேண்டும்,” என்று சப்ரி கூறினார்.

அலி சப்ரி (Photo: Facebook)

இந்த நிறுவனங்களில் வேலைநிறுத்தங்கள் ஒரு 'குற்றம்' என்று தொடர்ந்து கூறிய அவர், வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறினார். 'இராணுவத்தால் வேலைநிறுத்தம் செய்ய முடியாது, பொலிசால் வேலை நிறுத்தம் செய்ய முடியாது, அவர்களைப் போலவே மற்ற பொருளாதார மூலோபாய நிறுவனங்களிலும் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது.' ஜனாதிபதி 'கொஞ்சம் மென்மையானவர்,' என்று கூறிய சப்ரி, 'கொஞ்சம் இரக்கமின்றி செயல்படும் ஒரு ஜனாதிபதியை நாங்கள் எதிர்பார்த்தோம்,' என மேலும் தெரிவத்தார்.

சப்ரி ஒரு மூத்த கூட்டுத்தாபன சட்டத்தரணி ஆவார். அவர் முன்னர் பெரிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், 2019 இல் இராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக அணிதிரண்ட பல நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்களில் ஒருவருமாவார். இது, இராஜபக்ஷவின் 'தேசிய பாதுகாப்பு முதலில்' மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு 'வலுவான ஆட்சி” என்ற தேர்தல் பிரச்சாரத்தை முன்நிலைப்படுத்திய வியத்மக என அறியப்படும் வலதுசாரி குழுவாகும்.

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை கோவிட் தொற்றுநோய் கூர்மையாக ஆழப்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன் தவனையைத் செலுத்தத்தவறும் நிலையிலும் வருவாயில் கூர்மையான சரிவிலும் நாடு உள்ளது. அடுத்த ஆண்டும் இதே போன்ற கடன் தொகையை செலுத்த வேண்டும். அந்நிய நாணய கையிருப்பு நெருக்கடி மற்றும் வருவாய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ ஆட்சி, இறக்குமதியைக் குறைத்து, விலைவாசி அதிகரிப்பதற்கும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டிற்கும் வழிவகுக்கிறது.

சம்பளம், தனியார்மயமாக்கல் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரம், மின்சாரம், பெட்ரோலியம், துறைமுகங்கள், கல்வி, பெருந்தோட்டம் மற்றும் ஆடைத் துறைகளில் இலட்சக் கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் குற்றவியல் பிரதிபலிப்பு சம்பந்தமாக பரவலான வெகுஜன கோபமும் உள்ளது. கிராமப்புற மாவட்டங்கள் விவசாயிகளின் போராட்டத்தால் சூழ்ந்துள்ளன. சப்ரியின் கருத்துக்கள், எழுச்சி பெறும் இந்த வெகுஜன எதிர்ப்பு சம்பந்தமாக இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் முழு ஆளும் உயரடுக்கினதும் பீதியைப் பிரதிபலிக்கின்றது.

மின்சார சபை ஊழியர்களின் எதிர்ப்புக்கள் பொறியியலாளர்கள் மத்தியில் உள்ள ஊழல்வாதிகளின் நடவடிக்கைகளின் விளைவாகும் என்றும், ஊழியர்களின் இடமாற்றம் போன்ற சம்பவங்களை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு சாக்குப் போக்காகப் பயன்படுத்துவதாகவும் சப்ரி நெத்FM இடம் கூறினார்.

இந்த கூற்றுக்கள் போலியானவை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பற்றாக்குறை மற்றும் தனியார்மயமாக்கலை நோக்கிய நகர்வுகள் சம்பந்தாமக போராட்டம் நடத்தும் தொழிலாளர்களை அவதூறு செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. சப்ரியின் கூற்றுகளுக்கு மாறாக, தொழிற்சங்கங்கள் சமூக கோபத்தைக் கலைக்கவும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை நசுக்கவும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றன.

அரச துறையை குறிவைத்த சப்ரி, அது பெருமளவிலான தொழிலாளர்களால் நிரம்பி வழிகிறது, அவர்களில் பலர் சும்மா அமர்ந்துள்ளனர், இப்போது 1948 சுதந்திரத்தின் போது இருந்ததை விட 10 மடங்கு அதிகமானோர் வேலை செய்கிறார்கள், என்றார். கடந்த பத்து ஆண்டுகளில், அரசுக்கு சொந்தமான 52 நிறுவனங்கள் 200 பில்லியன் ரூபாய் (சுமார் 1 பில்லியன் டொலர்) இழப்பை சந்தித்தன. இதற்கு மாறாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தனியார் துறை அதிக லாபம் ஈட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

30 ஜூலை 2021 அன்று நுவரெலியாவில் ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் [கடன்: WSWS Media]

அரசுத் துறையைப் பற்றிய சப்ரியின் கருத்துக்கள, ஆட்குறைப்பு மற்றும் தனியார்மயமாக்கல் போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய கோரிக்கைகளை எதிரொலிக்கிறது. தற்போதைய இராஜபக்ஷ ஆட்சி உட்பட அடுத்தடுத்த அரசாங்கங்கள் ஏற்கனவே சில அரச துறைகளை தனியார் மயமாக்கியுள்ளன.

1980களில் நாட்டை 'காப்பாற்ற' வேலைநிறுத்தங்களை முறியடித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சரை சுட்டிக் காட்டிய சப்ரி, 'வெறுக்கத்தக்க முடிவுகள்' எடுக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார். அவர் 'இரும்புப் பெண்' என்று அழைக்கப்பட்டதாக சப்ரி கூறினார். அந்த கால கட்டத்தில் வேலைநிறுத்தங்களை நிறுத்த பொலிஸ்-அரச நடவடிக்கைகளைப் பயன்படுத்திய சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவையும் சப்ரி சுட்டிக் காட்டினார்.

சப்ரியின் கருத்துக்கள் தற்செயலானவை அல்ல. இதேபோன்ற உணர்வுகளை ஏனைய அரசாங்க அமைச்சர்களும் வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரலில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இராஜபக்ஷவை 'ஹிட்லரைப் போல் செயல்படுங்கள்' என்று அழைப்பு விடுத்தார்.

ஜனவரி 21 அன்று, இலங்கை ஜனாதிபதி ஹிட்லரைப் போன்று செயற்படுவதாக பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தவர்களை விமர்சித்த காணி அமைச்சர் எம்.எஸ். சந்திரசேன: 'நாட்டின் பிரச்சினைகளைப் பார்க்கும் போது அதற்கு ஹிட்லரைப் போன்ற தலைவர் தேவை,' என்று அறிவித்தார்.

வேலைநிறுத்தத் தடைகளுக்கான சப்ரியின் அழைப்பும் மற்றும் இராஜபக்ஷ ஹிட்லரைப் போல் செயல்பட வேண்டும் என்று ஆளும் கட்சியிலிருந்து விடுக்கப்பட்ட ஏனைய வேண்டுகோள்களும் அரசாங்கம் வர்க்கப் போருக்குத் தயாராகி வருவதைத் தெளிவாகக் காட்டுகின்றன. எவ்வாறாயினும், ஆளும் உயரடுக்கு, தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பின் காரணமாகவே ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் சர்வாதிகார வழிமுறைகளுக்க வெளிப்படையாக அழைப்பு விடுக்கவும் தைரியம் பெற்றுள்ளது.

கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், பெட்ரோலியம், பெருந்தோட்டங்கள் மற்றும் பிற தொழில்துறைகளில் போராட்டங்கள் வெடித்தபோது, தொழிலாளர்களின் கோரிக்கைகளை வழங்குமாறு நெருக்கடியில் சிக்கியுள்ள இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் பெருவணிகத்திற்கும் அழுத்தம் கொடுத்து ஜெயிக்கலாம் என்ற மாயையை தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே ஊக்குவித்தன. அரசாங்க தாக்குதல்களுக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த அரசியல் போராட்டத்தில் இருந்து போராட்டங்களை திசைதிருப்ப அவர்கள் நனவுடன் வேலை செய்தனர், அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு கதவைத் திறந்துள்ளனர்.

1930களில் ஜேர்மனியிலும் 1980களில் பிரிட்டனிலும் இருந்த சூழ்நிலைகள் இன்றிலிருந்து வேறுபட்டிருந்தாலும், ஹிட்லர் மற்றும் தாட்சரின் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், இரண்டு நிகழ்வுகளிலும், தொழிலாள வர்க்கத்தின் சந்தர்ப்பவாத அமைப்புகளின் துரோகத்தால் எளிதாக்கப்பட்டன.

சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் உதவியுடனேயே ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தார். நாஜி கட்சி மற்றும் அதன் தாக்குதல் துருப்புக்களுக்கு எதிராக. தொழிலாள வர்க்கம் அதன் ஐக்கிய முன்னணி நடவடிக்கையை எடுக்கவிடாமல் எதிர்க்குமாறு, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்டாலின் வழிநடத்தினார். தொழிலாளர் கட்சி மற்றும் தொழிற்சங்க காங்கிரஸும், போலி இடதுசாரிகளின் உதவியுடன், டோரி அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த அணிதிரள்வை எதிர்த்ததால் மட்டுமே, உருக்கு ஆலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் பிற அரசுக்குச் சொந்தமான தொழில்களை மூடுவதன் மூலம் தனது வர்க்கப் போர் தாக்குதலை தாட்சரால் மேற்கொள்ள முடிந்தது.

இலங்கையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் சப்ரியின் கருத்துக்களை பகிரங்கமாக எதிர்த்துள்ளதுடன், தொழிற்சங்கங்களை நசுக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா என்றும் கேட்டுள்ளன. ஒரு போலியான போர்க்குண தோரணையை வெளிப்படுத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின்: 'உண்மையில் இந்த மாதிரியான காரியம் நடந்தால், அதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் நிச்சயமாக ஒன்றுபடும்,' என்றார்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு, இலங்கை ஆசிரியர் சங்கமும் ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களும் 250,000 ஆசிரியர்களின் உறுதியான 100 நாள் இணையவழி கற்பித்தல் வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்தன. அற்ப ஊதிய உயர்வை ஏற்றுக்கொண்ட சங்கங்கள், கோவிட்-19 நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலைமையிலும் பாடசாலைகளை மீண்டும் திறப்பதை ஆதரித்தன. இந்த தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினர்களுடன் ஆசிரியர்களை ஒன்றிணைவதைத் தடுத்தன.

கடந்த ஆண்டு, இராஜபக்ஷ பல அரச நிறுவனங்களின் மீது அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தை திணித்து, அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளையும் தடை செய்ததோடு அதன் விதிமுறைகளை மீறும் எவருக்கும் கடுமையான தண்டனையை விதித்தார். இந்த அடக்குமுறை சட்டத்தை எந்தவொரு தொழிற்சங்கமும் எதிர்க்கவில்லை.

இராஜபக்ஷ ஆட்சி தொழிலாள வர்க்கத்தின் மீதான அரச தாக்குதல்களை தீவிரப்படுத்துவதில் தனியாக இல்லை. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமீபத்தில் கொழும்பில் நடந்த ஒரு கூட்டத்தில், இலங்கைக்கு 'தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம்' ஒன்று தேவை என்று கூறியதுடன், தாட்சரை பாராட்டினார். 'திருமதி தாட்சர் 'இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்பட்டார், ஏனென்றால் அவர் செய்ய வேண்டியதை பயமின்றி செய்தார்,' என்று அவர் அறிவித்தார்.

தொழிலாள வர்க்கம் ஒரு கூர்மையான எச்சரிக்கையை பெற வேண்டும். போலி-இடதுகளின் உதவியுடன் தொழிற்சங்கங்கள், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த ஆளும் ஆட்சிக்கு வழி வகுத்துக்கொடுத்து வருகின்றன. சிக்கன நடவடிக்கைகளுக்கும், தொற்று நோய்க்கு இலாபத்தை முன்நிலையாக கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தின் வளரச்சியடைந்து வரும் விரோதத்தை அடக்குவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் போலவே, நெருக்கடி நிறைந்த ஆளும் வர்க்கம், மேலும் மேலும் எதேச்சதிகார நகர்வுகளுடன் பிரதிபலிக்கின்றது.

தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலமும், அவர்களின் வேலைகள், ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும் பதிலளிக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் கூட்டணியிலும் தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் வர்க்க ஐக்கியத்துக்காகப் போராட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த முன்னோக்குக்காகப் போராடும் ஒரே அமைப்பு ஆகும்.

Loading