முன்னோக்கு

கோவிட்-19: அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கள் மாலை 5 மணிக்கு, கோவிட்-19 இல் 900,000 அமெரிக்கர்கள் இறந்ததை நினைவுகூரும் வகையில், அமெரிக்க தேசிய கதீட்ரலின் மணிகள் 900 முறை ஒலித்தன.

800,000 இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் கதீட்ரலின் மணி ஒலித்து வெறும் 55 நாட்களில், அதாவது இரண்டு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குள் மேலும் 1 இலட்சம் பேர் இறந்துள்ளனர்.

மேலும், தற்போதைய தினசரி இறப்பு 2,700 என்பதால், அமெரிக்காவில் 1 மில்லியன் இறப்புக்கள் பதிவாக வெறும் 37 நாட்கள் மட்டுமே ஆகும்.

தங்கள் நண்பர்களையும் அன்புக்குரியவர்களையும் இழந்து தவிக்கும் மில்லியன் கணக்கானவர்களுக்கு வேதனையை அளிப்பதான இந்த மைல்கல் ஊடகங்களால் பெரிதும் அலட்சியப்படுத்தப்படுகிறது.

மே 2020 இல் கோவிட்-19 காரணமான இறப்பு எண்ணிக்கை அமெரிக்காவில் 100,000 ஐ எட்டியபோது, நியூ யோர்க் டைம்ஸ் தனது முழு முதல் பக்கத்தையும் இறந்தவர்களின் பட்டியலை வெளியிட அர்ப்பணித்தது. ஆனால் தற்போது அதைப் போல் 9 மடங்கு ஆகிவிட்ட நிலையில், டைம்ஸ் பத்திரிகை, “900,000 அமெரிக்கர்கள் இறந்துள்ளனர், ஆனால் பல அமெரிக்கர்கள் தொடர்ந்து முன்னேறுகின்றனர்” என்ற தலைப்பில் தனது முதல் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் ஏதோ சிறியளவில் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக புரூக்ளினின் கிரீன்-வுட் கல்லறைக்கு வெளியே ஒரு பெண் வேலியைக் கடந்து செல்கிறார். (AP Photo/Mark Lennihan)

என்னவொரு விவரிக்க முடியாத வெட்கக்கேடு. இதன் பொருள் “முன்னேறுகிறார்கள்” என்பதா? இது வேலைகளை மாற்றுவதற்கான முடிவை விவரிக்கும்போது பயன்படுத்தக்கூடிய ஒரு வாசகமாகும். இறந்தவர்கள் “முன்னேற” முடியாது. உயிர் தப்பிப்பிழைத்தவர்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரின் மரணத்தை சமாளிக்க வேண்டும், அவர்கள் தங்கள் எஞ்சிய வாழ்நாளை இழப்பின் வலியுடன் கழிக்க வேண்டும், மேலும் எல்லாவற்றையும் விட திடீரெனவும் எதிர்பாராத நேரத்திலும் இத்தகைய மரணங்கள் நிகழும் போது, இறப்பவர்களுக்கு விடை கொடுக்க தயாராக அவர்களுக்கு சிறிது நேரம் அல்லது முற்றிலும் நேரம் இருப்பதில்லை. உயிர் பிழைத்தவர்களின் நீடித்த துயரத்தை இன்னும் அதிகமாக்கும் வகையில், எண்ணற்ற ஆயிரக்கணக்கானோர் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து ஆறுதல் பெறாமலேயே தீவிர சிகிச்சைப் பிரிவில் தனியாக இறக்கின்றனர்.

டைம்ஸ் “முன்னேறுகின்றனர்” என்று குறிப்பிடுவதானது, கடும் துக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி கூறுவது போல் இல்லை. மாறாக, டைம்ஸின் ஆசிரியர்கள் அது ஆதரிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தைப் பற்றியே விவரிக்கின்றனர்.

அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை “முன்னேறுதல்” என்றால், நிதிய-பெருநிறுவன உயரடுக்கும் அவர்களின் ஊடக மன்னிப்பாளர்களும் தொற்றுநோய் முடிந்துவிட்டதைப் போல் செயற்படுகின்றனர் என்பதே. மத்திய, மாநில அரசாங்கங்கள் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், இறப்பு எண்ணிக்கை 1 மில்லியனை விஞ்சுவதற்கு நீண்ட காலம் பிடிக்காது.

மரணங்கள் இயல்பாக்கப்படுவதால், அறிக்கையிடல் பெரியளவில் மூடிமறைக்கப்பட்டு குறைத்துக் காட்டப்படுகிறது. மாநிலங்கள், ஒன்றன் பின் ஒன்றாக, நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் தொடர் நிகழ்வுகளை குறைத்துக் காட்டுகின்றன, அவற்றின் கோவிட்-19 தரவுப்பலகைகளை மூடுகின்றன, மேலும் தொடர்புத் தடமறிதல் திட்டங்களை நீக்குகின்றன. இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் பற்றிய அறிக்கையிடலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாக, தினசரி மருத்துவமனை இறப்பு அறிக்கை அளவீடுகளை முடிவுக்குக் கொண்டு வந்தது.

தொற்றுநோயையும் “முன்னேறுதலையும்” மூடிமறைக்க அதிகரித்து வரும் முயற்சிகளானது, அமெரிக்க சமூகம் எதிர்கொள்ளும் அதிகரித்தளவில் கொடூரமான யதார்த்தத்துடன் ஒத்துப்போகின்றன.

BNO இன் கூற்றுப்படி, கடந்த வாரத்தின் ஒவ்வொரு நாளிலும், அமெரிக்காவில் கோவிட்-19 நோயால் 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் வகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18,578 பேர் அதனால் உயிரிழந்துள்ளனர்.

ஜனவரியில் 60,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்தனர். இது, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்ததான பிப்ரவரி 2021 க்கு பின்னைய மிகக் கொடிய மாதமாகும். தற்போதைய இறப்பு விகிதம் தொடருமானால், பிப்ரவரி மாதம் ஜனவரியை விட படுமோசமாக இருக்கும், அதாவது தொற்றுநோய் வரலாற்றில் மூன்றாவது கொடூர நிலை உருவாகும்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, 85 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 31 அமெரிக்கர்களுக்கு ஒருவர் வீதம் இறந்தது உட்பட, ஒவ்வொரு 366 அமெரிக்களுக்கு ஒருவர் வீதம் கோவிட்-19 நோய்க்கு பலியாகியுள்ளனர். தொற்றுநோயின் முதல் ஆண்டில், அதாவது 2020 இல், 351,000 அமெரிக்கர்கள் இறந்தனர். 2021 ஆம் ஆண்டில் மற்றொரு 475,000 பேர் அங்கு இறந்தனர். இந்த ஆண்டு இதுவரை 75,000 க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி இறப்பு விகிதம் 2022 முழுவதும் தொடருமானால், தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும், அதாவது 720,000 ஐ எட்டும்.

ஏற்கனவே நிகழ்ந்துள்ள மரணத்தின் அளவை விவரிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அமெரிக்காவின் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை நான்கு முதல் ஆறு மடங்கு அதிகமாகும். இது டெலாவேர் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகைக்கு தோராயமாக சமமானதாகும், மேலும் டெட்ராய்ட், வாஷிங்டன் டி.சி., லாஸ் ஏஞ்சல்ஸ் அல்லது சியாட்டில் நகரங்களின் மக்கள்தொகையை விட அதிகமானதாகும்.

அமெரிக்கா இதுவரை போராடிய ஒவ்வொரு போரின் போதான இறப்பு எண்ணிக்கையை விட, கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாகும்.

ஆனால் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தொற்றுநோயால் ஏற்பட்ட உயிரிழப்புக்களை குறைத்து மதிப்பிட்டாலும், அமெரிக்காவில் அதிகப்படியான இறப்புக்களின் உண்மையான எண்ணிக்கை 1.2 மில்லியனாக உள்ளது என எக்னாமிஸ்ட் மதிப்பிட்டுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் புள்ளிவிபரங்களின்படி, இறந்தவர்களில் 1,244 குழந்தைகளும் அடங்குவர் என்பதுடன், இப்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 7 குழந்தைகள் இறக்கின்றனர்.

எவ்வாறாயினும், இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்க சமூகத்தில் தொற்றுநோயின் பாரிய தாக்கத்தை முழுமையாக விவரிக்கத் தவறிவிட்டது. கடந்த அக்டோபரில் “கோவிட் அநாதைகள்” பற்றி வெளியிடப்பட்ட ஆய்வின் இணை ஆசிரியர் டாக்டர் சார்லஸ் நெல்சன், கோவிட்-19 நோய்க்கு பெற்றோரை அல்லது முதன்மை பராமரிப்பாளரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது 200,000 ஐ தாண்டியுள்ளதாக Newsweek பத்திரிகைக்கு கடந்த வாரம் தெரிவித்தார். ஒரு முழு தலைமுறைக்கும் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியின் அளவு கணக்கிட முடியாததாக உள்ளது.

ஆய்வு குறிப்பிட்டது, “தங்களுக்கு வீடுகள், அடிப்படைத் தேவைகள், மற்றும் பராமரிப்பை வழங்கிய தாய், தந்தை, அல்லது தாத்தா பாட்டியின் இழப்பால் குழந்தைகளின் வாழ்க்கை நிரந்தரமாக மாறுகிறது. பெற்றோரின் இழப்பு என்பது, மனநலப் பிரச்சினையுடன் தொடர்புடைய பிரதிகூலமான குழந்தை பருவ அனுபவங்களில் (adverse childhood experiences-ACEs) ஒன்றாகும்.”

“நாம் அனைவரும் –குறிப்பாக நம் குழந்தைகள்– இந்த பிரச்சினையின் தீவிர உடனடி மற்றும் நீண்டகால தாக்கத்தை தலைமுறை தலைமுறையாக உணருவோம்,” என்று ஆய்வு முடித்தது.

அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையுடன், மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இப்போது நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் மூளை, இதயம், நுரையீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புகள் உட்பட உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கக்கூடிய பலவீனப்படுத்தும் அறிகுறிகளின் வரிசை அடங்கும்.

ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் பெருகிவரும் இறப்பு எண்ணிக்கையை மூடிமறைக்க முற்படும், மற்றும் தொற்றுநோயைத் தடுக்க எந்தவித தீவிர நடவடிக்கையை எடுக்க மறுக்கும் அதேவேளை, அவர்கள் ரஷ்யா மற்றும் சீனாவுடனான போரைத் தூண்ட போராடுகிறார்கள். 900,000 அமெரிக்கர்கள் இறந்துவிட்ட நிலையில் கூட, அவர்கள் பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டுள்ளனர், அது மனித நாகரீகத்தை அழிக்கக்கூடிய அணுசக்தி மோதலாக விரிவடைவதற்கான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, நியூ யோர்க் டைம்ஸ் அதன் முன்னணி கட்டுரையிலும், NBC Nightly News அதன் முன்னணி பிரிவிலும், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பில் 50,000 பொதுமக்கள் இறக்க நேரிடும் என மூச்சு விடாமல் அறிவித்தன, அதே நேரத்தில் அதைவிட அதிகமான அமெரிக்கர்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் தடுக்கக்கூடிய நோயால் இறந்துபோன உண்மையைப் புறக்கணித்தன.

தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் ஆளும் வர்க்கத்திற்கு இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகின் 10 பணக்காரர்கள் தங்கள் நிகர சொத்து மதிப்பை இரட்டிப்பாக்கியுள்ளனர். S&P 500 சந்தை மதிப்பு 40 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது, மேலும் ஒவ்வொரு வகையான நிதி மற்றும் உண்மையான சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கம் தொற்றுநோயை நிறுத்தக்கூடிய மற்றும் நிறுத்த வேண்டிய சமூக சக்தியாகும். உலக அளவில், தொழிலாளர்கள் இந்த நோக்கத்துடன் இன்னும் அதிக விழிப்புணர்வுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும், கல்வியாளர்களும் மாணவர்களும் தொலைதூரக் கற்றலுக்கு மாறும்படி கோரிக்கை விடுத்து டஜன் கணக்கான வேலைநிறுத்தங்களையும் வெளிநடப்புக்களையும் நடத்தியுள்ளனர். ஜேர்மனியில், அரசாங்கத்தின் பொறுப்பற்ற பள்ளிகளை மீளத்திறக்கும் கொள்கைகளை எதிர்த்து 100,000 மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் தொழிலாளர்கள் ஒரு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த வளர்ந்து வரும் இயக்கம் தொற்றுநோய் பற்றிய விஞ்ஞானம் மற்றும் அரசியல் புரிதலுடன் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும். 900,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் தேவையற்ற மரணங்கள் என்பது ஒரு பாரிய சமூகக் குற்றமாகும், அது விசாரிக்கப்பட வேண்டும் என்பதுடன் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். கடந்த நவம்பரில், உலக சோசலிச வலைத் தளமானது, இந்த விசாரணையை மேற்கொள்ளவும், மற்றும் தொற்றுநோய்க்கு உண்மையான பொறுப்பாளி யார் என்ற உண்மையை அம்பலப்படுத்தவும் கோவிட்-19 தொற்றுநோய் குறித்த உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணை (Global Workers’ Inquest) என்ற திட்டத்தை தொடங்கியது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் உண்மையான தன்மையை மக்கள் முன் இந்த தொற்றுநோய் பகிரங்கப்படுத்தியுள்ளது: அதாவது, இது நிதிய தன்னலக்குழுவின் சுயநலமான செழுமைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூக ஒழுங்காகும், அதேசமயம் அதற்கு ஈடாக அமெரிக்காவிலும் மற்றும் உலக முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியை முற்றிலும் அலட்சியப்படுத்துகிறது.

இது ஒரு கொடூரமான பாடம், ஆனால் மனதை விட்டு அகலாத பாடமாகும். முதலாளித்துவம் நவீன சமுதாயத்தின் தேவைகளுடன் அடிப்படையில் பொருந்தாதது. தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டம் என்பது, இந்த சமூக ஒழுங்கை ஒழித்து சோசலிசத்தை கொண்டு பதிலீடு செய்யும் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.

Loading