முன்னோக்கு

அமெரிக்க முதலாளித்துவம் சீனாவில் நோய்தொற்று ஏற்படுத்த கோருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்கிழமை, அமெரிக்காவில் 2,997 கோவிட்-19 இறப்புக்கள் பதிவான அன்றைய தினம், நியூ யோர்க் டைம்ஸ் பைடென் நிர்வாகத்தின் இரண்டு முன்னாள் ஆலோசகர்கள் எழுதிய ஒரு பொது-தலையங்கத்தை வெளியிட்டது, அந்த தலையங்கம் உயிர்களைக் காப்பாற்ற முன்னுரிமை கொடுக்கும் சீனாவின் முடிவை 'தவறு' என்று குறிப்பிட்டதுடன், “நோய்தொற்று மூலமாக இயற்கையாக நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதில்' உள்ள ஆதாயங்களைப் பற்றி புகழ்ந்து தள்ளியிருந்தது.

கடந்த ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும், அமெரிக்காவில் சராசரியாக 2,500 பேர் கோவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளனர். அண்மித்து 880,000 அமெரிக்கர்கள், அதாவது இதுவரையில் அமெரிக்கா போரிட்ட ஒவ்வொரு போரிலும் போரிட்டு உயிரிழந்துள்ள அமெரிக்க சிப்பாய்களின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள், இந்த தடுத்திருக்கக்கூடிய நோய்க்குப் பலியாகி இருக்கிறார்கள். இதற்கு நேரெதிராக, சீனாவில், கோவிட்-19 முதலில் வெளிப்பட்ட நாடான அங்கே, வெறும் 4,636 பேர் மட்டுமே இந்நோயால் இறந்திருக்கிறார்கள், நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 103,000 ஆக இருந்தது.

ஏப்ரல் 4, 2020 சனிக்கிழமை, மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ நினைவுச்சின்னத்தின் போது ஒரு பெண் மலர் பூங்கொத்து வைத்திருக்கிறார். வான்வழித் தாக்குதல் சைரன்கள் அலறல் மற்றும் கொடிகளை அரைக்கம்பத்தில் வைத்த சீனா, நாடு முழுவதும் மூன்று நிமிடம் அனுஸ்டத்தது. கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தருணம். (AP Photo/Ng Han Guan) [AP Photo/Ng Han Guan]

ஆனால் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பார்வையில், சீனாவை முன்னுதாரணமாக வைத்து அமெரிக்கா அதைப் பின்தொடர வேண்டும் என்றில்லை, மாறாக பாரிய நோய்தொற்று பாதையில் அமெரிக்காவை சீனா பின்தொடர வேண்டும் என்றுள்ளது.

“சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையால் ஏற்படக் காத்திருக்கும் ஒரு பெருந்தொற்று' என்று தலைப்பிட்ட அவர்களின் பொது-தலையங்கத்தில் எசிக்கியெல் ஜெ. இமானுவல் (Ezekiel J. Emanuel) மற்றும் மைக்கெல் டி. ஓஸ்டர்ஹோல்ம் (Michael T. Osterholm) ஆகியோர் பின்வருமாறு வாதிடுகிறார்கள், கோவிட்-19 ஐ அகற்றும் (பூஜ்ஜிய-கோவிட்) நோக்கத்தை “அதிகளவில் பரவும் ஓமிக்ரோன் வகை இருப்பதால் எட்ட முடியாது, மேலும் அது [சீனாவை] பேரிடருக்குக் களம் அமைத்துள்ளது. கொரோனா வைரஸ் மறையப் போவதில்லை — உலகம் அதனுடன் வாழ வேண்டியிருக்கும். விஷயங்களை இன்னும் மோசமாக்கும் விதத்தில், சீனாவின் தடுப்பூசிகள் ஓமிக்ரோனுக்கு எதிராக பெரிதும் வீரியம் குறைந்தவையாக உள்ளன.”

உண்மையில் சொல்லப் போனால், இவ்வாறு சீனாவுக்கு அவர்கள் நல்லறிவு புகட்டுவது இந்த பெருந்தொற்றுக்கு அமெரிக்காவின் விடையிறுப்பைக் குறித்த பரிதாபகரமான சுய-அம்பலப்படுத்தலாக உள்ளது. கொரோனா வைரஸ் 'மறைந்து விடவில்லை' —அதாவது, அது அகற்றப்படவில்லை—ஏனென்றால் பெருந்திரளான மக்கள் உயிரிழப்பதை மட்டுமல்ல மாறாக இன்னும் அதிகமாக தொற்றக்கூடிய மற்றும் தடுப்பூசிகளையே எதிர்க்கும் திரிபுகள் பரிணமிப்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில், அமெரிக்காவும் ஐரோப்பிய அதிகாரங்களும் வேண்டுமென்றே கட்டுப்பாடின்றி இந்த வைரஸ் பரவுவதை அனுமதிக்க முடிவெடுத்துள்ளன.

ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பது, பாரிய நோய்தொற்று கொள்கையின் விளைவாக என்ன ஏற்படும் என்று விஞ்ஞானிகளும் —உலக சோலிச வலைத் தளமும்— எச்சரித்தனரோ துல்லியமாக அதுவே ஆகும். இமானுவலும் ஓஸ்டர்ஹோல்மும் நிச்சயமாக சீனாவுக்குக் கூறுகிறார்கள்: “உயிர்களை விட நிதி மற்றும் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் எங்கள் நடவடிக்கைகள் காரணமாக, இந்த வைரஸ் அகற்றப்படவில்லை. ஆகவே பாரிய நோய்தொற்றைத் தடுப்பதற்கான உங்கள் முயற்சிகள் தோல்வியடையும், நீங்கள் 'அதனுடன் வாழ' பழகிக் கொள்ள வேண்டும்.”

பாரிய மரணங்களைத் தடுக்க அமெரிக்காவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள அதிக செயல்திறன் மிக்க mRNA தடுப்பூசிகளை உடனடியாக சீனாவுக்கு வழங்க வேண்டும் என்று வாதிடுவதற்குப் பதிலாக, 'அதைப் பரவ அனுமதிக்க' வேண்டும் என்று அந்த ஆசிரியர்கள் சீனத் தலைவர்களுக்குச் சர்வசாதாரணமாக கோரிக்கை விடுக்கின்றனர். இதேயளவுக்குப் பயங்கரமான விதத்தில், தடுப்பூசி இல்லாமல் 'தவிர்க்கவியலாமல்' கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகக் கூடிய மிகப் பெரும்பான்மை மக்களைக் குறித்து அந்த ஆசிரியர்கள் எதுவுமே குறிப்பிடவில்லை.

கோவிட்-19 ஐ அகற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளை அது கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஊக்குவிப்பதற்கான நிஜமான கவலைகளை வெளிப்படுத்தி, இமானுவலும் ஓஸ்டர்ஹோல்மும் எழுதுகையில், பூஜ்ஜிய கோவிட் மூலோபாயம் 'சீனா மீது தீவிரமான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதோடு — உலக பொருளாதாரத்தில் அந்நாட்டின் இடத்தை வைத்துப் பார்த்தால், நம் அனைவருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். சீனா உலகின் உற்பத்தி தலைமையகமாக இருப்பதால், சமூகப் பொதுமுடக்கங்கள் தொடர்ந்தால் அது தாங்க முடியாததாக போகலாம்,” என்றனர்.

அதாவது, இந்த வைரஸின் தன்மை காரணமாக அல்ல, மாறாக 'பொருளாதார' நிர்பந்தங்களுக்காக, அதன் அர்த்தம் நிதிய தன்னலக் குழுக்களின் நலன்களுக்காக, பாரிய நோய்தொற்று 'தவிர்க்கவியலாததாக' உள்ளது.

பாரிய நோய்தொற்றுக் கொள்கை —மடத்தனங்கள் மற்றும் தவறுகளின் விளைவுகளை விட்டுவிட்டு பார்த்தாலும்— வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது என்பதை இமானுவலும் ஓஸ்டர்ஹோல்மும் தெளிவுபடுத்துகின்றனர். சொல்லப் போனால், அவர்கள் அதை ஒரு நல்லெண்ணத்துடன் செய்யப்படுவதாக காட்டுகிறார்கள், அது, இந்த பெருந்தொற்றின் கொடுமையான விளைவுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதாகவும், அதேவேளையில் சீனாவைப் பாதிப்புக்குள் விடுவதாகவும் கூறப்படுகிறது:

சீனா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பாதையை மற்ற நாடுகளால் காட்ட முடியும். டென்மார்க், ஜேர்மனி மற்றும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளும், அத்துடன் ஆஸ்திரேலியாவும், அமெரிக்கா அளவுக்கு இறப்பு விகிதங்கள் இல்லாமலேயே பலமான நோயெதிர்ப்பு சக்தியை எட்டியுள்ளன... இதன் விளைவாக சமூகப் பரவல் ஏற்பட்டது, ஆனால் நீண்ட அல்லது கடுமையான பூட்டுதல்கள் இருந்தாலும் அது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கும். மேலும் அந்த நாடுகள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க அனுமதித்தது.

சீனாவுக்கு முன்மாதிரியாக தூக்கிப்பிடிக்கப்படும் மற்ற எல்லா நாடுகளும், பாரியளவில் நோயாளிகள் மற்றும் இறப்புகளின் அதிகரிப்பை அனுபவித்து வருகின்றன. அமெரிக்காவைப் போல கோவிட்-19 ஆல் சீனாவும் அதேயளவில் இறப்பு விகிதங்களைக் கொண்டிருந்தால், 3.6 மில்லியன் பேர் இறந்திருப்பார்கள். ஜேர்மனியைப் போல அதேயளவுக்கு இறப்பு விகிதம் இருந்திருந்தால், அந்த எண்ணிக்கை இரண்டு மில்லியனில் இருந்திருக்கும்.

பாரிய நோய்தொற்று மூலமாக 'நோயெதிர்ப்பு சக்தி பெருக்குவது' குறித்த அவர்களின் சொந்த அறிக்கைகள் மீது அந்த ஆசிரியர்களுக்கே கூட நம்பிக்கை இல்லை. “கோவிட்-19 தடுப்பூசியோ அல்லது நோய்தொற்றோ நீண்டகாலம் நோயெதிர்ப்பு சக்தியை வழங்குமென தெரியவில்லை,” என்று அவர்கள் ஜனவரி 6 இல் எழுதினார்கள், கட்டுப்பாடின்றி கோவிட்-19 ஐ பரவ அனுமதிப்பது நோய்தொற்றின் மறுஅலைக்கு வழிவகுக்கும் என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.

அமெரிக்காவை விட நான்கு மடங்கு மக்கள்தொகை கொண்ட ஒரு நாடான சீனா, அதேயளவு நிலப்பரப்புக்குள், 2020 ஆரம்பத்தில் இருந்து ஏற்றுள்ள கொள்கையானது, இந்த அதிக பரவக்கூடிய நோயை, தடுப்பூசி இல்லாமலேயே கூட, வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

2020 ஆரம்பத்தில், விடாப்பிடியாக ஒவ்வொரு நோயாளியினது நோயின் தடம் அறிந்து, பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை விலக்கி வைத்து, சமூக பரவலை உடைப்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் பள்ளிகள் மற்றும் வணிகங்களை அடைத்து, சீனா கோவிட்-19 பரவலை ஒடுக்கியது. இதன் விளைவாக, இறக்க நேரிடும் நோய்தொற்றுக்கு உள்ளாவோமோ, நோயால் உயிர்பிழைக்க முடியாமல் போகுமோ, தங்களின் அன்புக்குரியவர்களுக்கு அதை பரப்பிவிடுவோமோ என்ற நிரந்தர கவலை இல்லாமல், சீனாவில் பெரும்பாலான மக்கள் பள்ளிக்கும், வேலைக்கும் மற்றும் சமூக இடங்களுக்கும் செல்ல முடிந்துள்ளது.

2020 ஆரம்பத்தில் இந்நோயின் இயங்குமுறை, இதன் பரவல் முறை, அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் குறித்து சீனா முழுமையான விவரிப்பை வழங்கி இருந்த போதும், அமெரிக்காவில் ஆளும் உயரடுக்கோ, அதைக் கட்டுப்பாடின்றி பரவ அனுமதிக்கும் முடிவை எடுத்தது. இந்த விடையிறுப்பு பங்குச் சந்தையை ஊதிப் பெரிதாக்கும் ஒரே எண்ணத்தைத் தொடர்வதை நோக்கி இருந்தது, இத்துடன் நிதித்துறையும் பெடரல் ரிசர்வும் சுமார் ஆறு ட்ரில்லியன் டாலர்களை வோல் ஸ்ட்ரீட்டுக்குள் பாய்ச்சின. இதன் விளைவாக உலகின் 10 மிகப்பெரிய பணக்காரர்கள், இவர்களில் ஒன்பது பேர் அமெரிக்காவில் வசிப்பவர்கள், கடந்த இரண்டாண்டுகளில் அவர்களின் செல்வவளத்தை இரட்டிப்பாக்கி கொண்டுள்ளனர், அதேவேளையில் சுமார் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க பொது சுகாதார அதிகாரிகளால் ஆரம்பத்தில் மறுக்கப்பட்டாலும், இந்த 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கை, அதாவது, மக்களிடையே வேண்டுமென்றே பாரிய நோய்தொற்றை ஏற்படுத்தும் கொள்கை, எப்போதுமே அமெரிக்காவின் நடைமுறை கொள்கையாக இருந்தது.

ஆனால் தட்டம்மை போல வேகமாக பரவும் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க இட்டுச் செல்லும் கோவிட்-19 இன் ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பது, பொதுப்படையாக பகிரங்கமாக பாரிய நோய்தொற்றைத் தழுவுவதற்கான சாக்குப்போக்கை உருவாக்கி உள்ளது. கிரேட் பாரிங்டன் பிரகடனத்தில் உருக்கொடுக்கப்பட்ட 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' இந்த கோட்பாடு ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதன் சொந்த மக்கள் மீது பாரிய நோய்தொற்றை அனுமதிக்க இட்டுச் சென்றுள்ள சமூக, அரசியல் அல்லது பொருளாதார உள்நோக்கங்கள் எதையும் ஓஸ்டர்ஹோல்மும் இமானுவலும் ஆய்வு செய்யவில்லை. இந்த நோய் பரவுவது அதிகரித்தளவில் நோய்தொற்று வகைகளை உருவாக்குவதால் சீனா இன்னும் அதிகளவில் பொருளாதார விலை கொடுக்க வேண்டும் அல்லது அதன் மக்கள் மீது பாரிய நோய்தொற்றுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுவதற்காக சர்வசாதாரணமாக அவர்கள் இந்த கொள்கைகளைக் கையிலெடுத்துக் கொள்கிறார்கள்.

'வூஹான் ஆய்வக' சதிக் கோட்பாட்டாளர்கள் சீனா என்ன செய்கிறது என்று குற்றஞ்சாட்டினார்களோ, இப்போது முக்கியமாக, அது தான் சீனா சம்பந்தமான அமெரிக்காவின் கொள்கையாக உள்ளது. சீனா அதன் மக்கள் மீது பாரிய நோய்தொற்றையும், அதைத் தொடர்ந்து தவிர்க்கவியலாமல் ஏற்படும் நூறாயிரக் கணக்கான உயிரிழப்புகளையும் அனுமதிக்க வேண்டுமென அமெரிக்கா கோருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க ஆளும் வர்க்கம் உயிரி போர்முறை வடிவில் ஈடுபட்டுள்ளது.

எசிக்கியெல் இமானுவலின் சமூக விரோத பிதற்றல்களின் அடிப்படையில் டைம்ஸ் கட்டுரையை எளிதாக விவரிக்கலாம். வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக சமூகம் செலவிடும் சமூக மற்றும் பொருளாதார ஆதாரவளங்களைக் குறைப்பதன் மூலம் மருத்துவத்துறை செலவுகளை வெட்ட அறிவுறுத்தியவர்களில் இமானுவல் அமெரிக்காவின் முக்கியமான ஆலோசகர் ஆவார், இதைத்தான் மருத்துவ நெறிமுறை வல்லுனர்கள் நவீனகால ஈஜெனிக்ஸ் (eugenics) விஞ்ஞானத்தின் ஒரு வடிவமாக குறிப்பிடுகின்றனர். பல ஆண்டுகளாக, இமானுவல் ஆயுள்காலத்தைக் குறைக்க அறிவுறுத்தி இருந்தார், அனேகமாக உயிராபத்தான ஒரு பெருந்தொற்று உருவெடுத்து அது துல்லியமாக இந்த நோக்கங்களை எட்டச் செய்யும் என்றும் கூட அனேகமாக சிறிது கற்பனை செய்திருக்கலாம்.

ஆனால் டைம்ஸில் வெளியான அந்த பொது-தலையங்கம் அரசு கொள்கையாகும். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் அவரின் சகோதரரைத் தலைமை தளபதியாக கொண்ட இமானுவல், பைடென் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் இரண்டுக்கும் ஆலோசகராக இருந்தார். கோவிட்-19 ஐ 'புதிய வழமையாக' ஆக்க ஜனவரி 6 இல் அவர் அழைப்பு விடுத்தபோது, அது இந்த பெருந்தொற்று சம்பந்தமாக NBC News இன் இரவு நேர நிகழ்ச்சிக்கு வித்திட்டதுடன், நியூ யோர்க் டைம்ஸில் முதல் பக்கத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது, மேலும் வாஷிங்டன் போஸ்ட் தலையங்கத்தில் பாராட்டப்பட்டது, அத்துடன் Meet the Press நிகழ்ச்சியில் முக்கிய விவாதமாக ஆகியிருந்தது.

நூரெம்பேர்க் தீர்பாணையத்தில் வழக்கு தொடுத்த டெல்ஃபோர்ட் டெய்லரின் (Telford Taylor) வார்த்தையைப் பயன்படுத்தினால், அமெரிக்க முதலாளித்துவம் 'அதன் சொந்த விஷத்தால் செத்துக்' கொண்டிருக்கிறது. அமெரிக்க தொழிலாளர்களைப் கும்பல் கும்பலாக உயிரிழக்க விட்டு, அமெரிக்க முதலாளித்துவத்திற்குப் புத்துயிரூட்டும் என்று குறுகிய-கால இலாபங்களை உருவாக்குவதற்காக அவர்கள் நோய்வாய்ப்பட்ட போதும் அவர்களை வேலை செய்ய நிர்பந்தித்து, அவர்களின் நல்வாழ்வை முற்றிலும் அலட்சியப்படுத்துவது ஒரு சமூக மற்றும் பொருளாதார பேரழிவுக்கு மட்டுமல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் கிளர்ச்சிக்கும் அஸ்திவாரத்தை அமைக்கிறது.

இந்த ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பதற்கும் —மற்றும் தவிர்க்கவியலாமல் இதைத் தொடர்ந்து வரவிருக்கும் வகைகளுக்கும்— தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பானது, அமெரிக்க ஆளும் வர்க்கம் ஊக்குவிக்கும் உலகளாவிய பாரிய நோய்தொற்று கொள்கைக்கு எதிராக, உலகளவில் அதை அகற்றுவதற்கும் மற்றும் முற்றிலும் ஒழிப்பதற்கும் போராடுவதாக இருக்க வேண்டும். சீனாவின் அனுபவம், பூஜ்ஜிய கோவிட் கொள்கை சாத்தியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது, ஆனால் இந்த கொள்கையை உலகளவில் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதையும் அது எடுத்துக்காட்டுகிறது.

பாரிய நோய்தொற்றில் இருந்து சீனத் தொழிலாள வர்க்கத்தின் உயிர்களைப் பாதுகாப்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீது தங்கியுள்ளது, கோவிட்-19 ஐ அகற்றும் போராட்டத்தைக் கையிலெடுப்பதில், அவர்கள் ஒரே நேரத்தில் ஆளும் வர்க்கம் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தை நடத்தியாக வேண்டும்.

Loading