மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஒரு நாட்டைச் சூழ்ந்துள்ள சமூக நெருக்கடியின் ஒரு அளவுகோல் என்னவென்றால், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தங்களின் நலனைக் கவனிக்க அதிகாரம் கொண்டவர்களால் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை வைத்துப் பார்ப்பதாகும். அந்த வகையில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டிலும் தலைமைப் பதவிகளில் அமர்த்தப்பட்டவர்களை தொற்றுநோய் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துகிறது. பைடென் வெள்ளை மாளிகை, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது காட்டுமிராண்டித்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான கூட்டாளிகளுக்கு இணையாக, அமெரிக்க மக்களை முற்றிலும் அவமதித்து புறக்கணிக்கிறது.
குழந்தைகளுக்கான அமெரிக்க கல்விச்சாலை (American Academy of Pediatrics-AAP) அமெரிக்காவின் குழந்தைகளிடையே நிலவும் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் நிலை பற்றி அதன் வாராந்திர அறிக்கையில், ஜனவரி 20, 2022 ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், 1.15 மில்லியனுக்கும் அதிகமாக புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவாகியிருப்பதைக் கண்டறிந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட மக்களில் 25.5 சதவீத அளவிற்கு குழந்தைகளிடையே நோய்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும், நேரடி கற்பித்தலுக்காக பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என பைடென் நிர்வாகம் தொடர்ந்து கோருகிறது.
இந்த எண்ணிக்கை தொற்றுநோயின் போதான உச்சபட்ச எண்ணிக்கையாகும், இது முந்தைய வாரம் பதிவான 981,000 நோய்தொற்றுக்களை விட 17 சதவீதம் அதிகமாகும், மேலும் கடந்த குளிர்காலத்தில் உச்சத்தில் இருந்த நோய்தொற்றுக்களின் விகிதத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும். தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்த 10.6 மில்லியன் குழந்தை நோய்தொற்றுக்களில் 2 மில்லியனுக்கும் அதிகமானவை கடந்த இரண்டே வாரங்களில் ஏற்பட்டுள்ளன. மேலும், இதில் பாதியளவு, அதாவது சுமார் 5 மில்லியன் நோய்தொற்றுக்கள், கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்டுள்ளன.
இந்தளவிலான பாரிய நோய்தொற்று நிலை வேண்டுமென்ற கொள்கையின் விளைவாக மட்டுமே நிகழ முடியும். அமெரிக்க ஆளும் உயரடுக்கு உழைக்கும் மக்களை “வைரஸூடன் வாழ,” வற்புறுத்துகிறது, இதன் பொருள் உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்கான முதலாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, உழைக்கும் வர்க்கம் தங்கள் குழந்தைகளை சாத்தியமுள்ள ஒரு கொடிய தொற்றுநோய்க்கு தியாகம் செய்வதாகும். தடுப்பூசி போடப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து மிகக் குறைவாகவுள்ள பல குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைகள் பள்ளிகளில் பாதுகாப்பாக இருப்பார்கள் மற்றும் வைரஸ் அவர்களுக்கு சிறிதளவு தீங்கையே விளைவிக்கும் என்ற தொடர்ச்சியான பொய்களின் அடிப்படையில், அவர்களை பள்ளிகளுக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தி முறையாக அவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதற்கு இது மட்டுமே சாத்தியமான விளக்கமாக உள்ளது.
தொற்றுநோயினால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உச்சபட்சமாக உள்ளது, இது இளம் வயது குழந்தைகளை அதிக விகிதத்தில் பாதிக்கிறது. AAP இன் கூற்றுப்படி, கடந்த வாரம் 2,000 குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், அதிலும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருந்து கிட்டத்தட்ட 7,000 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஒட்டுமொத்த குழந்தைகளில் 20 சதவீதமாகும்.
கோவிட்-19 நோய்தொற்றுக்களும் மருத்துவமனை அனுமதிப்புக்களும் அதிகரிப்பதோடு சேர்ந்து இறப்புக்களும் அதிகரிக்கின்றன. கடந்த வாரத்தில் 27 குழந்தைகள், அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் 4 பேர் வீதம் இறந்தனர். இது, டிசம்பர் 30, 2021 ஆம் தேதியில் முடிவடைந்த வாரத்தில் மட்டும் 34 குழந்தைகள் இறந்ததாக பதிவானதன் பின்னர் பதிவான இரண்டாவது அதிகபட்ச வாராந்திர இறப்பு எண்ணிக்கையாகும். குறிப்பிடத்தக்க வகையில், கோவிட்-19 இன் காரணமான ஒட்டுமொத்த குழந்தை இறப்புக்களில் கிட்டத்தட்ட பாதி, செப்டம்பர் தொடக்கத்திலிருந்து குழந்தைகள் மொத்தமாக பள்ளிகளுக்குத் திரும்பியதால் நிகழ்ந்துள்ளது.
ஒழிக்கப்படக்கூடிய வைரஸால் தங்கள் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதை எதிர்கொள்ளும் பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் பயத்தையும் பீதியையும் நியாயப்படுத்தும் தொற்றுநோயியல் நிபுணர்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால், கோவிட்-19 பாதிப்புள்ள குழந்தைகளில் 10 பேருக்கு ஒருவர் வீதம் அது நெடுங்கோவிட்டாக மாறுகிறது.
நெடுங்கோவிட் நோயின் அறிகுறிகளில், கடுமையான சோர்வு, பலவீனப்படுத்தும் தலைவலி மற்றும் தகவலை ஒருமுகப்படுத்தவோ அல்லது ஞாபகத்தில் வைக்கவோ இயலாமை, அல்லது இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் தோல் ஆகிய உடலுறுப்புக்கள் பாதிக்கப்படக்கூடிய, மற்றும் “கோவிட் கால்விரல்கள்” (“Covid toes”) போன்ற பல்வேறு பாதிப்பு நிலைகள் அடங்கும். இது பாதங்கள் மற்றும் கால்விரல்களில் ஏற்படும் வலிமிகுந்த கொப்புள சொறி ஆகும்.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பள்ளியின் குழந்தைகள் மருத்துவ பேராசிரியரான டாக்டர் பீட்டர் ரோவ், “கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் நீண்டகாலமாக கோவிட் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. 16 முதல் 30 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களில் 52 சதவீதம் பேர், கோவிட் பாதிப்படைந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர் நீடித்த அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. தேசிய புள்ளிவிபரங்களுக்கான இங்கிலாந்து அலுவலகம், 2 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளில் 12.9 சதவீதம் பேரும், 12 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளில் 14.5 சதவீதம் பேரும் நோய்தொற்று ஏற்பட்டு ஐந்து வாரங்களுக்குப் பின்னர் கூட நோயறிகுறிகளை அனுபவித்ததாக மதிப்பிட்டுள்ளது.
வயோதிகர் பராமரிப்பு குடியிருப்புகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கடுமையாக அதிகரித்து வருவதாகவும் அறிக்கைகள் வெளிவருகின்றன. மருத்துவ பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகளுக்கான மையங்களின் (Centers for Medicare and Medicaid Services) கருத்துப்படி, கடந்த வாரம் 40,000 க்கும் அதிகமானவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர், இது நவம்பர் மாதத்திலிருந்து பத்து மடங்கு அதிகமாகும். மேலும் கூடுதலாக, கிட்டத்தட்ட 1,000 குடியிருப்பாளர்களும் ஊழியர்களும் இறந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கோவிட்-19 நோய்தொற்றுக்களின் உச்சபட்ச எண்ணிக்கை கடந்த குளிர்காலத்தில் டிசம்பர் 20, 2020 ஆம் தேதியில் முடிவடைந்த வாரத்தில் 33,534 என்றளவிற்கு பதிவாகியிருந்தது. அந்த நேரத்தில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 6,000 வயோதிகர் இல்ல குடியிருப்பாளர்கள் இறந்தனர். இப்போது இறப்பு எண்ணிக்கை குறைவாக பதிவாகியிருப்பதற்கு இந்த குழுவில் நிறைய பேர் தடுப்பூசி போட்டிருப்பதே காரணம். என்றாலும், தடுப்பூசிகள் தொற்றுநோய் மற்றும் இறப்புக்கு எதிராக முற்றிலும் பாதுகாக்காது என்ற உண்மையையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இறப்புகள் கண்டறியப்படும் விதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, சமீபத்திய புள்ளிவிபரங்களும் குறைத்து மதிப்பிடப்பட்டவையே என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நோய்தொற்றுக்களில் பெரும்பாலானவை குடியிருப்பாளர்களுக்கு பராமரிப்பு இல்ல பணியாளர்கள் பரப்புவதன் விளைவாகும். கிட்டத்தட்ட 84 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ள போதிலும், 67,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) ஜனவரி முதல் வாரத்தில் அறிவித்தது.
கோவிட்-19 நோய்தொற்றுக்களின் கூட்டு அதிகரிப்புக்கு பணியாளர் பற்றாக்குறை காரணமாகும். நியூ ஜெர்சியில் உள்ள நீண்டகால பராமரிப்பு குறைதீர்ப்பாளரான Laurie Facciarossa Brewer, NPR இடம் பேசுகையில், “தங்களுக்கு எதுவும் மாறவில்லை, தங்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைப்பதில்லை என்றெல்லாம் கூறும் குடியிருப்பாளர்களிடமிருந்து வரும் அழைப்புக்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரிப்பதை நாங்கள் நிச்சயமாகக் காண்கிறோம்” என்று கூறினார்.
நியூ ஜெர்சியில் உள்ள பணியாளர் வரம்புகள் பகல்நேர மாற்றுப்பணிக்கு எட்டு குடியிருப்பாளர்களுக்கு ஒரு சான்றளிக்கப்பட்ட பராமரிப்பு உதவியாளரைக் கட்டாயமாக்குகிறது என்றாலும், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், இந்த கூடுதல் வேலை செய்யும் மற்றும் குறைவான ஊதியம் பெறும் உதவியாளர்கள் கவனித்துக் கொள்ளும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் உள்ளது. சீற்றமும் மன அழுத்தமும் தொழிலாளர்களை விரக்தியில் ஆழ்த்துகிறது. தீராத மன உளைச்சல் காரணமாக பலர் வெளியேறி வருகின்றனர். இதன் திருப்பமாக, இந்த பராமரிப்பு வசதிகள் அழுத்தத்தின் கீழ் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன, மேலும் மருத்துவமனைகள் தங்கள் நோயாளிகளை பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு மாற்றுவதற்கான இடத்தைக் கண்டுபிடிக்க தீவிரப்படுகையில், மருத்துவமனைகள் குழப்பத்திற்கு தள்ளப்படுகின்றன.
ஹார்ட்வர்ட் மருத்துவப் பள்ளியில் சுகாதாரப் பாதுகாப்புக் கொள்கை பேராசிரியராகவுள்ள டேவிட் கிராபோவ்ஸ்கி, “இன்று நிலைமை மோசமாக உள்ளது. தனிநபர்களால் காலியாகவுள்ள அல்லது பணியாளர் வசதியுடன் கூடிய இடத்தைக் கண்டறிய முடியாது. இது உண்மையில் மருத்துவமனைகளை ஒரு கடினமான நிலைக்குத் தள்ளுகிறது. அது ஒரு பெரிய பிரச்சினை, ஏனென்றால் அவர்கள் ஒரு புதிய நோயாளிக்கு கிடைக்க வேண்டிய படுக்கையை ஆக்கிரமித்துள்ளனர்” என்று விளக்கமளித்தார்.
கோவிட்-19 இறப்புக்களின் தற்போதைய நாளாந்த சராசரி 2,150 ஐ எட்டியிருப்பதுடன், தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றதிலிருந்து மேலும் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர். குளிர்காலம் முடிவதற்குள் உத்தியோகபூர்வ ஒட்டுமொத்த இறப்பு 1 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கொடூரமான புள்ளிவிவரங்கள் எதுவும் -குழந்தைகள் மற்றும் தாத்தா பாட்டிகளின் இறப்பு உட்பட- முக்கிய பத்திரிகைகளால் குறிப்பிடப்படவில்லை. குறைந்தது நாட்டின் சில பகுதிகளிலாவது ஒட்டுமொத்த கோவிட் நோய்தொற்றுக்களும் மருத்துவமனை அனுமதிப்புக்களும் குறைந்துள்ளதால், மகிழ்ச்சியான மனநிலை அலையின் இயல்பான போக்கால் இயக்கப்படுகிறது. நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும், மாநிலங்கள் மற்றும் மத்திய சுகாதாரத் துறைகள், இறுதியாக தொந்தரவான புள்ளிவிவரங்களைக் கைவிட்டு - இத்தகைய கேவலமான மனப்பான்மைக்கு எதிராக ஏராளமான எச்சரிக்கைகள் உள்ளபோதிலும், தொற்றுநோய் முடிந்துவிட்டதாக சம்பிரதாயபூர்வமாக அறிவிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
தொழிலாள வர்க்கம் இந்த படிப்பினைகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். கோவிட்-19 ஐ ஒழிக்க முடியும். ஆனால் அதற்கு தடையாக இருப்பது கொரோனா வைரஸ் அல்ல, மாறாக அது தொடும் அனைத்தையும் அழிக்கும் காலாவதியான முதலாளித்துவ உற்பத்தி முறையாகும்.