மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட் தொற்றுநோய் தொடர்பான முக்கிய புள்ளிவிபரங்களுக்கான முன்னணி மற்றும் பெரும்பாலும் குறிப்பிடப்படும் ஆதாரமாக இருக்கும் Our World in Data இணைய வெளியீடு, ஜனவரி 28, 2022, வெள்ளிக்கிழமை அன்று, பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 13 மாதங்களில் உலகம் முழுவதும் 10 பில்லியன் அளவுகளுக்கு மேலாக தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில், கொரோனா வைரஸால் ஏற்பட்ட வெகுஜன இறப்புக்களை மட்டுமே தொற்றுநோய் துரிதப்படுத்தியுள்ளது. தொற்றுநோயின் போது 5.67 மில்லியன் கோவிட் இறப்புக்கள் பதிவாகியுள்ளன, இங்கிலாந்தைச் சேர்ந்த 91 வயதான மார்கரெட் கீனன், டிசம்பர் 8, 2020 அன்று முதல் நபராக ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்டதிலிருந்து கிட்டத்தட்ட 4 மில்லியன் பேர் இறந்துள்ளனர்.
அக்டோபர் 19, 2021 அன்று, மாஸ்கோவில் ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்பாக கொரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் சிறப்பு உடைகள் அணிகிறார்கள் (இடதுபுறம்), அதே நேரத்தில் மற்றவர்கள் நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற தயார்ப்படுத்துகின்றனர். (AP Photo/Alexander Zemlianichenko)
உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வெளியிடப்பட்ட புத்தாண்டு அறிக்கை குறிப்பிட்டது போல், “உலகளாவிய தொற்றுநோய் என்பது வரலாற்று பரிமாணங்களின் பேரழிவாகும். இதுவும் ஒரு குற்றமே, ஏனென்றால் தொற்றுநோயினால் ஏற்பட்ட பேரழிவுகர தாக்கமானது –முதலிலும் மற்றும் முக்கியமாகவும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில்- முதலாளித்துவ அரசாங்கங்கள் எடுத்த முடிவுகளின் விளைவாகும், அதாவது SARS-CoV-2 ஐ ஒழிக்கத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை செயற்படுத்தாமல் நிராகரித்து, வேண்டுமென்றே உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் அதற்கு பதிலாக உலகளாவிய மக்கள்தொகை மத்தியில் வைரஸை பரவலாக பரவ அனுமதிக்கும் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன.”
உண்மையில், கோவிட் தடுப்பூசி பிரச்சாரத்தை செயற்படுத்துவதன் பின்னணியில் உள்ள அரசியலானது, நிதிச் சந்தைகளின் நலன்களை உள்ளடக்கி, பல்வேறு அரசாங்க நிறுவனங்கள் ஆரம்பத்திலிருந்து செயற்படுத்த அழைப்பு விடுக்கும் மோசமான “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு பொது எதிர்ப்பையும் நிராயுதபாணியாக்கி வந்துள்ளது. தற்போதைய நோக்கம், கோவிட் பேரிடரின் அளவைப் பற்றிய தகவல்களை வழங்கத் தேவையான கோவிட் அளவீடு தரவுப்பலகைகள் உட்பட, ஒட்டுமொத்த பொது சுகாதார எந்திரத்தையும் சிதைப்பதாகும்.
சுருக்கமாகச் சொல்வதானால், இந்த பேரிடரில் இருந்து வெளியேறும் உத்தியாக தடுப்பூசிகளை மட்டுமே நம்புவதற்கான வாக்குறுதி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் விளைவு குறித்து எச்சரித்துள்ளனர், அதாவது கடுமையான நோய்தொற்று கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் தடுப்பூசிகள் மட்டும் நம்பப்படும் நிலையில், SARS-CoV-2 வைரஸின் புதிய, அதிக வீரியம் மிக்க மாறுபாடுகள் உருவாகும் அபாயம் உள்ளது. இவை சரியென நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஓராண்டுக்கு சற்று கூடுதலான காலத்திற்குள் 10 பில்லியன் தடுப்பூசி அளவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பது வைரஸை தடுக்க முடியாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுவதை பொய்யாக்கும் ஒரு வியக்கத்தக்க பொது சுகாதார சாதனையாகும். இது, தடுப்பூசி விஷயத்தில் ஆளும் உயரடுக்கின் தீங்கிழைக்கும் ஆர்வம் ஒரு சமூக வலிநிவாரணி அல்ல, மாறாக அது ஒரு அரசியல் கருவியாகும் என்பதற்கான புறநிலை ஆதாரங்களை வழங்குகிறது.
பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் குறைந்தபட்சம் முதல் அளவு கோவிட் தடுப்பூசியை வழங்க இத்தகைய அளவு போதுமானதே. இதுவரை தடுப்பூசிக்கு அங்கீகரிக்கப்படாத ஐந்து வயதுக்குட்பட்ட 680 மில்லியன் குழந்தைகளை கணக்கில் எடுக்காமல், சுமார் 7.3 பில்லியன் மக்கள் உள்ளனர். 4.8 பில்லியன் மக்கள் மட்டுமே, அதாவது தடுப்பூசி போட தகுதியுள்ளவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கும் குறைவானவர்களே முதல் அளவு தடுப்பூசியை பெற்றுள்ளனர். பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதிக வருமான நாடுகள் தங்கள் மக்கள்தொகையில் 72 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கியுள்ள அதேவேளை, குறைந்த வருமான நாடுகள், முக்கியமாக ஆபிரிக்கா கண்ட நாடுகள், தங்கள் மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு முதல் அளவு தடுப்பூசியை மட்டுமே வழங்க முடிந்துள்ளது.
இந்த அப்பட்டமான வேறுபாடுகள், பணக்கார நாடுகள் இந்த உயிர் காக்கும் சிகிச்சைகளை பதுக்கி வைப்பதற்கும், மேலும் குறிப்பாக வயதானவர்களுக்கு அல்லது குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மூன்றாவது அளவு தடுப்பூசியை, சில நாடுகளில் நான்காவது அளவு தடுப்பூசியை கூட வழங்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியதான மிகுந்த வீரியமுள்ள, தொற்றும் தன்மையுள்ள மற்றும் நோயெதிர்ப்பை தவிர்க்கும் விகாரங்கள் வெளிப்படுவதன் மூலம் மோசமான நிலை உருவாவதற்கும் வழிவகுத்த தடுப்பூசி தேசியவாதத்தின் துணை தயாரிப்புகளாகும். விநியோக வரம்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த கூடுதல் அளவுகள், ஆபிரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா பகுதிகளின் பெரும்பகுதி மக்களின் உயிர்களை விலைகொடுத்து, முக்கியமாக பணக்கார நாடுகளுக்கும் மற்றும் ஏழை நாடுகளில் உள்ள சலுகை பெற்ற உயரடுக்கிற்கும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
உயர் மற்றும் உயர்-நடுத்தர வருமான நாடுகள், ஒவ்வொரு 100 நபர்களுக்கும் 180 தடுப்பூசி அளவுகளை வழங்குவதற்கு போதுமான கோவிட் தடுப்பூசிகளை வழங்கியுள்ளன. தத்துவார்த்த ரீதியாக, இதன் பொருள் என்னவென்றால், மக்கள்தொகையில் 90 சதவீதம் பேருக்கு இரண்டு அளவு தடுப்பூசி விதிமுறைகளுக்குட்பட்டு, முழுமையாக தடுப்பூசி போடலாம் என்பதாகும். ஆபிரிக்கா கண்டத்தில் ஒவ்வொரு 100 நபர்களுக்கு 25 அளவுகள் வீதம் அல்லது 300 மில்லியனுக்கு அதிகமான அளவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பிடுகையில், ஆபிரிக்க மக்கள்தொகையில் கால் பகுதியைக் கொண்டிருந்தாலும், அமெரிக்கா 537 மில்லியன் தடுப்பூசி அளவுகளை வழங்கியுள்ளது.
புறநிலையாக, இந்த உயர் வருமான பிராந்தியங்களின் தடுப்பூசி ஏற்பு விகிதமானது, சமூக பொருளாதார காரணிகள் மற்றும் தேசிய முன்முயற்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், அமெரிக்கா அதன் மக்கள்தொகையில் 63 சதவீதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது, அதேவேளை கனடா (79 சதவீதம்), சீனா (85 சதவீதம்), சிங்கப்பூர் (87 சதவீதம்), ஆஸ்திரேலியா (78 சதவீதம்) போன்ற நாடுகளும், மற்றும் உயர் வருமானம் உள்ள பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், 2022 ஆம் ஆண்டிற்கு உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த இலக்கான 70 சதவீதத்திற்கு அதிகமாக முழுமையாக தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.
விநியோகிக்கப்பட்ட 10 பில்லியன் கோவிட் தடுப்பூசிகளில், அண்ணளவாக 1 பில்லியன் தடுப்பூசிகள் பூஸ்டர்களாக வழங்கப்பட்டுள்ளன. உயர் வருமானம் மற்றும் உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் 898 மில்லியனுக்கும் அதிகமான மூன்றாவது அளவுகள் (மற்றும் நான்காவது அளவுகள்) தடுப்பூசிகளின் பெரும் பங்கைப் பெற்றுள்ளன. இருப்பினும், நோயெதிர்ப்பைத் தவிர்க்கும் ஓமிக்ரோன் மாறுபாடு பரவி வரும், மற்றும் மூன்றாவது அளவு தடுப்பூசியும் போடப்பட்டால் தான் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்பட வேண்டியதன் சூழலில், அதன் விளைவு உலக மக்கள்தொகையில் 11 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இப்போது முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாகக் கருதலாம். அமெரிக்கா அதன் மக்கள்தொகையில் கால் பகுதியினருக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி வழங்கியுள்ளது, அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பாதியளவை நெருங்கி வருகின்றன.
தற்போது, உலகளவில் ஒவ்வொரு நாளும் 25 முதல் 30 மில்லியன் கோவிட் தடுப்பூசி அளவுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த விகிதத்தில் தடுப்பூசிகளை சமமாக விநியோகிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உலக மக்கள்தொகையில் 75 சதவீதம் பேர் முதல் அளவு தடுப்பூசியைப் பெற இன்னும் நான்கு மாதங்கள் பிடிக்கும், இது WHO நிர்ணயித்துள்ள மற்றொரு இலக்காகும்.
குறைந்த நடுத்தர வருமான நாடுகள் தங்கள் மக்கள்தொகையில் ஒவ்வொரு 100 பேருக்கு 96 அளவுகள் வீதம் மட்டும் தடுப்பூசிகள் வழங்க முடிந்துள்ளது, மேலும் குறைந்த வருமான நாடுகள் ஒவ்வொரு 100 பேருக்கு 14 அளவுகளுக்கும் குறைவாகவே தடுப்பூசிகள் வழங்கியுள்ளன. புளூம்பேர்க் சமீபத்தில் எழுதியது போல், “சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட உலகின் 107 பணக்கார நாடுகள், உலக மக்கள்தொகையில் 54 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளன, ஆனால் 71 சதவீத தடுப்பூசிகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. பூமியின் கிட்டத்தட்ட பாதி மக்கள்தொகையை உள்ளடக்கியதும், குறைந்த செல்வ வளம் கொண்டதுமான இந்தியா, ஆபிரிக்காவின் பெரும்பகுதி மற்றும் ஆசியாவின் சில பகுதிகள், இதுவரை 30 சதவீதத்திற்கும் குறைவான தடுப்பூசி அளவுகளையே வழங்கியுள்ளன.
காப்புரிமை ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், ஏகாதிபத்திய நாடுகளின் பல தலைவர்கள் உறுதியளித்தபடி, பில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியானது, தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கவில்லை. மாறாக, தடுப்பூசி மட்டுமே முயற்சியானது டெல்டா மற்றும் ஓமிக்ரோன் அலைகளை உருவாக்கியமை, இந்த திவாலான கொள்கையின் தோல்வியை நிரூபிக்கிறது.
WHO கோவிட்-19 தரவுப்பலகையின் கூற்றுப்படி, 360.6 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்கள் உள்ளன, அவற்றில் 290 மில்லியன் நோய்தொற்றுக்கள் டிசம்பர் 2020 நடுப்பகுதியில் கோவிட் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் உருவாகியுள்ளன. மேலும், தொற்றுநோயின் போதான 5.62 மில்லியன் ஒட்டுமொத்த கோவிட் இறப்புக்களில், கிட்டத்தட்ட 4 மில்லியன் இறப்புக்கள் தடுப்பூசிகள் கிடைக்க ஆரம்பித்ததன் பின்னரே நிகழ்ந்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான காலத்தில் கோவிட் தொற்றுநோயின் நிலையான மையமாக இருந்து வரும் அமெரிக்கா, இப்போது உலகின் எந்த நாட்டையும் விட உச்சபட்சமாக, 900,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இந்நோயால் அழிந்ததைக் கண்டது. டிசம்பர் 14, 2020 அன்று, அமெரிக்காவில் தடுப்பூசிப் பிரச்சாரத்தைத் தொடங்கி, நியூயோர்க்கில் உள்ள குயின்ஸில், செவிலியர் சாண்ட்ரோ லிண்ட்சே, கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை பெற்ற சமயத்தில், மொத்த கோவிட் இறப்புக்கள் 320,000 ஐ எட்டியிருந்தது. தொற்றுநோய் இறுதி ஆட்டத்தின் தொடக்கமாக, ஊடகங்களில் தடுப்பூசி பிரச்சாரம் பெரும் ஆரவாரத்துடன் நடைபெற்றன. இருப்பினும், அதன் பின்னர், அமெரிக்காவில் மேலும் 580,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது, அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் அரை மில்லியனுக்கும் அதிகமாக கோவிட் நோய்தொற்றுக்கள் பரவும் நிலையில், ஓமிக்ரோனுக்கு முந்தைய உச்சபட்ச எண்ணிக்கைகளை விட தொடர்ந்து அதிகமாக உள்ளன. கோவிட் இறப்புக்கள் நாளொன்றுக்கு 1,000 க்கு குறைவாக இருந்து வந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இறப்புக்களின் நாளாந்த சராசரி தொடர்ந்து சீராக உயர்ந்துள்ளது. அது இப்போது டெல்டா அலையினால் ஏற்பட்ட உச்சபட்ச இறப்புக்களை விடவும் அதிகமாக ஒரு நாளைக்கு 2,500 என்ற வீதத்தில் உள்ளது, மேலும் ஏழு நாள் சராசரி 3,323 ஐ எட்டியபோதான கடந்த குளிர்காலத்தின் மோசமான நீட்டிப்பின் கொடிய உச்சத்தை வேகமாக நெருங்கி வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், தற்போதைய அனைத்து கோவிட் இறப்புக்களும் ஓமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக உருவாகின்றன, இது, இது ஒரு இலேசான தொற்று மட்டுமே என்று அடிக்கடி கூறப்படும் கூற்றுக்களை முற்றிலும் மறுக்கிறது.
கோவிட் இறப்புக்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் துயரம் மற்றும் பேரழிவின் உண்மையான அளவை குறைத்துக் கணக்கிடுவதாக அறியப்படுகிறது. பாதிக்கப்பட்ட மற்றும் இறந்துபோனவர்களில் பலரும் ஒருபோதும் பரிசோதிக்கப்படவில்லை, மேலும் உத்தியோகபூர்வ புள்ளிவிபர அறிக்கைகளில் இந்த விபரம் சேர்க்கப்படவில்லை. அடுத்து தொற்றுநோயால் மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்கள், தடுக்கக்கூடிய காரணங்களால் கோவிட் அல்லாத நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுகின்றனர். சுகாதார அமைப்புக்கள் நோயாளிகளால் மூழ்கடிக்கப்படுவதால் அல்லது நோய்தொற்றுக்கு ஆளாகி விடுவோமா என்ற மக்களின் அச்சத்தினால், அவர்களின் நிலைமைகள் பெரிதும் மோசமடைந்து, மருத்துவ தலையீடு பயனற்றதாக மாறியுள்ளது.
இந்த வகையில், அதிகப்படியான இறப்புக்கள், கோவிட்-19 காரணமான மொத்த இறப்பு விகிதத்தின் மிக நம்பகமான அளவை வழங்குகிறது. Economist நாளிதழ் வரையறுத்தபடி, “இந்த எண்ணிக்கையானது, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காரணமின்றி எத்தனை பேர் இறந்தனர் என்பதற்கும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை [இந்த நிலையில் கோவிட் நோய்தொற்று] ஏற்படவில்லை என்றால், எத்தனை இறப்புக்கள் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் என்பதற்கும் இடையிலான இடைவெளியாகும்.”
உலகளவிலான அதிகப்படியான இறப்புக்களின் தற்போதைய மதிப்பீடு உத்தியோகபூர்வ உலகளாவிய கோவிட்-19 இறப்புக்களை விட 3.6 மடங்கு அதிகமாகும். 20.4 மில்லியன் என்றளவிலான இந்த எண்ணிக்கை, முதலாம் உலகப் போரின் நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட அனைத்து குடிமக்கள் மற்றும் போரில் ஏற்பட்ட இறப்புக்களை விட அதிகமாக உள்ளது. 6.9 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடான பல்கேரியாவில், ஒரு மாதத்திற்கு 185 யூரோக்கள் வருமானத்துடன் 22 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர், உச்சபட்சமாக அதிகப்படியான தனிநபர் இறப்புக்களைக் கொண்ட துரதிர்ஷ்டவசமான வேறுபாட்டைப் பற்றி கூறப்படுகிறது.
ஒவ்வொரு 100,000 பேருக்கு உச்சபட்ச அதிகப்படியான இறப்புக்களை கொண்ட சில நாடுகளில், ரஷ்யா, இந்தியா, தென்னாபிரிக்கா, ஆர்ஜென்டினா, பெரு, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவுடன் பல்கேரியா போன்ற சிறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அடங்கும். தற்போதைய மதிப்பீடுகள், உலகளவிலான நாளாந்த அதிகப்படியான இறப்புக்கள் தொற்றுநோயின் போதான உச்சபட்சமாக நாளொன்றுக்கு 78,100 என்றளவிற்கு (ஜனவரி 28, 2022) உயர்ந்துள்ளது, இது இந்தியாவை டெல்டா அழித்துக்கொண்டிருந்த மே 2021 நடுப்பகுதியில் இருந்ததை விட மிக அதிகமாகும்.
டிசம்பர் 2020 மாத நடுப்பகுதியில், அதிகப்படியான இறப்புக்கள் 5.2 மில்லியனை எட்டியது. கோவிட் தடுப்பூசிகள் பொதுவில் அறிமுகப்படுத்தப்பட்டு 13 மாதங்களில், மற்றொரு 15 மில்லியன் பேர் இறந்துள்ளனர், உலகளவில் கோவிட் நோயை ஒழிக்க ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சி எடுக்கப்பட்டிருந்தால் இவர்களை காப்பாற்றியிருக்க முடியும்.
வூஹானில் முதன்முதலில் தோன்றிய முன்னோடி SARS-CoV-2 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட தற்போதைய தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளை முழுமையாக போட்டுக்கொண்டவர்களுக்கு ஓமிக்ரோன் நோய்தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிராக 44 சதவீத செயல்திறன் மட்டுமே கிடைக்கிறது, அதிலும் கடைசி அளவு தடுப்பூசி 25 வாரங்களுக்கு முன்பு போடப்பட்டிருந்தால் மட்டும். ஓமிக்ரோனின் காரணமான அறிகுறி நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி செயல்திறன் பூஜ்ஜியத்திலிருந்து 10 சதவீதம் வரை உள்ளது, இது அடிப்படையில் பயனற்றதே. சமீபத்திய இங்கிலாந்து ஆய்வு, ஓமிக்ரோனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தது.
BA.1 மற்றும் BA.2 போன்ற ஓமிக்ரோன் கொரோனா வைரஸின் தற்போதைய மாறுபாடுகள், மிகுந்த தொற்றும் தன்மை கொண்டவை என்பதுடன், அவை பரவி வரும் ஒவ்வொரு நாட்டிலும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றின் நோயெதிர்ப்பு-தவிர்க்கும் திறன் என்பதன் பொருள், சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை கடைப்பிடிப்பது விஞ்ஞான ரீதியாக சாத்தியமற்றது என்பதே. மேலும் தொற்றுநோயை உள்ளூர் நோயாக பரவ அனுமதிக்கும் யோசனை ஒரு அரசியல் தந்திரமாகும். ஓமிக்ரோன் நோயை உள்ளூர் நோயாக கருதுவது என்பது, அது மீண்டும் மீண்டும் பரவக்கூடிய தொற்றுநோயாகவும், நிரந்தரமான தொற்றுநோயாகவும் அதை ஏற்றுக்கொள்வதாகும்.
பொது சுகாதார விஞ்ஞானத்தை கையிலெடுத்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இந்த தொற்றுநோயை தோற்கடிக்க முடியும். அத்தகைய முயற்சிகளின் உலகளாவிய தன்மை என்பது, தொழில்கள் மற்றும் பிராந்தியங்கள் சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் அவர்கள் ஒரு பொதுவான உலகளாவிய நோக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். சோசலிசப் புரட்சி என்பது தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறையாகும், மேலும், SARS-CoV-2 வைரஸ் நிரந்தரமாக வாழும் என்ற அழிவைக் குறிக்கும் கூற்றை எதிர்க்கிறது.
மேலும் படிக்க
- ஆக்ஸ்ஃபாம் அறிக்கை ஆசியாவில் பரவி வரும் தொற்றுநோய் சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுகிறது
- கோவிட்-19 நோய்தொற்றை காய்ச்சலைப் போல கையாள PSOE-பொடேமோஸ் கட்சி அழைப்பு விடுப்பதை ஸ்பானிய விஞ்ஞானிகள் எதிர்க்கின்றனர்
- கோவிட் பூட்டுதலின் வேளையில் டோரி அரசாங்கத்தின் விருந்து கொண்டாட்டங்கள் பற்றி மேலும் செய்திகள் வெளிவருகின்றன