கோவிட்-19 நோய்தொற்றை காய்ச்சலைப் போல கையாள PSOE-பொடேமோஸ் கட்சி அழைப்பு விடுப்பதை ஸ்பானிய விஞ்ஞானிகள் எதிர்க்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிஸ்ட் கட்சி (PSOE) – பொடேமோஸ் அரசாங்கம், கோவிட்-19 நோய்தொற்றை பருவகால காய்ச்சல் போன்ற ஒரு “உள்ளூர் நோயாக” கையாள அழைப்பு விடுத்து, பாரிய கோவிட்-19 நோய்தொற்றுக்களையும் இறப்புக்களையும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளச் சொல்வதால் அதற்கு எதிராக விஞ்ஞானிகளின் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஸ்பெயினில் கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை இன்னும் கடுமையாக அதிகரித்து வருவதுடன், இறப்புக்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

கடந்த திங்களன்று, ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், கோவிட்-19 ஐ காய்ச்சல் போன்ற உள்ளூர் நோயாகக் கருதுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) அழைப்புவிடுத்த முதல் ஐரோப்பிய தலைவர் ஆவார். அவர் Cadena SER வானொலிக்கு இவ்வாறு தெரிவித்தார்: “ஒரு வருடத்திற்கு முன்பு நாம் எதிர்கொண்ட நிலைமை இப்போது இல்லை. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தற்போது நாம் எதிர்கொள்ளும் நிலைமை வரையிலான கோவிட் இன் பரிணாம வளர்ச்சியை ஒரு உள்ளூர் நோயாக நாம் மதிப்பிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”

ஜூன் 5, 2021, சனிக்கிழமை, ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தில் உள்ள ஒரு வணிக வீதியில் கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாக்க மக்கள் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். (AP Photo/Manu Fernandez)

வாரத்தின் பிற்பகுதியில், சுகாதார அமைச்சர் கரோலினா டாரியாஸ், ஸ்பெயினின் கோவிட்-19 கண்காணிப்பு நெறிமுறைகளை காய்ச்சலைக் கண்காணிக்க பயன்படுத்தப்படும் முறையைக் கொண்டு சீரமைக்க முன்மொழிந்தார். அவர் இவ்வாறு கூறினார்: “நாம் சிறந்த தரத்துடன் கூடிய அவசரகால-பாணி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும், அது பிற சுவாச வகை சிகிச்சைகளுக்கு பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும்.” மேலும் அவர், “ஐரோப்பிய ஒன்றியத்திலும், சர்வதேச அளவிலும் “இந்த விவாதத்தை நடத்த ஸ்பெயின் விரும்புகிறது” என்றும் கூறினார்.

கோவிட்-19 ஐ உள்ளூர் நோயாக்கும் அழைப்புக்கும் விஞ்ஞானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்ளூர் நோய் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த மக்களிடையே நிலையாக இருக்கக்கூடிய மற்றும் பரவக்கூடிய நோயாகும்.

ஒவ்வொரு நாளும் கோவிட்-19 ஆல் இறப்பவர்களின் எண்ணிக்கைகள் பற்றி மருத்துவமனைகள் மத்திய அரசாங்கத்திற்கு இனி அறிவிக்கத் தேவையில்லை என்ற அமெரிக்காவின் நிலையைப் போல, ஐரோப்பிய ஒன்றியத்தில், ஸ்பெயின் பாரிய நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களை மூடிமறைக்கும் ஒரு அரசியல் முயற்சியாக கோவிட்-19 பற்றிய அறிக்கைகளை மட்டுப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. விஞ்ஞானிகள் எச்சரிக்கைகளை எழுப்புகின்றனர்.

பொது மற்றும் குடும்ப மருத்துவர்களின் ஸ்பானிய சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் லோரென்சோ ஆர்மெண்டெரோஸ், El Confidencial இடம், இந்த கொள்கை “சூழ்நிலையின் சிக்கலை குறைத்துக் காட்டி, நம் தலையை மணலில் புதைக்க” நோக்கம் கொண்டுள்ளது என்று கூறினார். கோவிட்-19 ஐ இந்த வழியில் கையாள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார், அதாவது இது “பிறழ்வுகளுக்கு சாத்தியமற்ற அல்லது ஒரு சில பிறழ்வுகள் கூட இல்லாத ஒரு நிலையான நோயாக இருக்க வேண்டும், மேலும் குறைந்த அளவிலான தொற்றும் தன்மை கொண்டதாகவும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மருந்துகள் மூலம் மாற்று சிகிச்சை அளிக்கக்கூடியதாகவும்” இது இருக்க வேண்டும் என்கிறார். PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தின் கொள்கை, “தெரிந்துகொள்ளக்கூடிய அல்லது அது கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்ற எச்சரிக்கையை ஏற்படுத்தக்கூடிய தரவை மறைப்பதற்கு நெருக்கமாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.

இதேபோல், முதன்மை பராமரிப்பு மருத்துவர்களின் ஸ்பானிய சங்கத்தின் (Semergen) தொற்றுநோயியல் நிபுணர் விசென்டே மார்டின், கோவிட் ஐ “காய்ச்சல்” போல கையாளுவது “மோசமானது” என்று கூறினார். நாளாந்த இறப்புக்கள் 200 என்பதை நாம் சாதாரணமாகக் கருத வேண்டுமா? ஏற்றுக்கொள்ளக்கூடிய மரணங்களின் எண்ணிக்கை என்பது எது? என்று கேள்விகள் எழுப்பினார். மேலும் இது “கோவிட் ஐ காய்ச்சல் போன்றது என்று கூறி அவசரப்படுத்துவதாகும் அல்லது அற்பமாக்குவதாகும்” என்றும் அவர் விமர்சித்தார்.

15,000 அளவிற்கு ஆண்டு இறப்புக்களை விளைவிக்கும் காய்ச்சலை கட்டுப்படுத்த மார்டின் அதிக கோரிக்கையை வலியுறுத்தினார். “காய்ச்சலை போன்றது கோவிட்” என்பதற்கு பதிலாக, “கோவிட் ஐ உருவாக்கும் காய்ச்சல்” என்று அவர் முறையிட்டதுடன், 99.9 சதவீத சுகாதார நிபுணர்களுக்கு கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்கிறார்.

தொற்றுநோயியல் நிபுணரும் முன்னாள் WHO அதிகாரியுமான டேனியல் லோபஸ் அகுனா RTVE.es இடம், “நாங்கள் இந்த பிரச்சினையை நிறுத்தப் போவதில்லை, ஏனென்றால் நாங்கள் எண்ணுவதை நிறுத்திவிட்டோம்” என்று கூறினார். மேலும், “நோய்தொற்றுக்களைக் கணக்கிடாமல், அல்லது தனிமைப்படுத்துதல் நாட்களை குறைப்பதால், அல்லது நம்மிடம் இருந்த மாணவர்களை அப்படியே வைத்துக் கொள்வதற்கு பதிலாக ஐந்து குழந்தைகளுடன் பள்ளிகளில் தனிமைப்படுத்துதலைக் கொண்டு வருவதால் இனி இந்த பிரச்சினை இருக்காது என்று நினைப்பது தவறாகும்… இந்த பிரச்சினை தொடர்ந்து இங்கு உள்ளது, அது தீர்க்கப்பட வேண்டும்” என்று கூறினார். மேலும், “நாம் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தினால், நமக்கு ஏற்படப் போவது மேலும் அதிக தொற்றுக்களாகும்” என்றும் கூறினார்.

PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கை மக்களிடையே வைரஸை வேகமாகப் பரவ அனுமதித்தது என்பதையும் அகுனா குறிப்பிட்டார். இரண்டு வாரங்களுக்குள், நோய்தொற்றுக்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்வது நிறுத்தப்படலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது, தனிமைப்படுத்துதல் காலத்தை 10 நாட்களிலிருந்து 7 நாட்களாக குறைத்துள்ளது, வகுப்பறைகளில் ஐந்து நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டால் மட்டுமே மாணவர்களை தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளது, மேலும் அதன் தொடர்பு தடமறிதல் திட்டத்தை மீண்டும் மட்டுப்படுத்தியுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், El Pais இன் கருத்துப்படி, காய்ச்சல் போன்ற புதிய கண்காணிப்பு முறை ஐந்து பிராந்தியங்களிலும் மற்றும் ஒன்பது மருத்துவமனைகளிலும் இரகசியமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. 2020 வசந்த காலத்தில் கடுமையான பூட்டுதல்களை விதிக்க அரசாங்கங்களை கட்டாயப்படுத்திய, முக்கியமாக தெற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வாகனம், உற்பத்தி மற்றும் இறைச்சி பொதியிடுதல் துறைகளில் எழுந்த திடீர் வேலைநிறுத்த அலைகளால் நிர்ப்பந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட கடுமையான பூட்டுதல் நடவடிக்கைகளை PSOE-பொடேமோஸ் அரசாங்கம் நீக்கியதன் பின்னர் 2020 கோடையில் இருந்து இதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இருப்பினும், இந்த மூலோபாயத்தை மிக விரைவாக செயல்படுத்துவதற்கான கணக்கீடுகளை வெளிப்படையாக அடிப்படையாகக் கொண்டு இந்த கொள்கை செயல்படுத்தப்படவில்லை.

இருப்பினும், ஓமிக்ரோன் மாறுபாட்டின் உச்சபட்ச தொற்றும் தன்மையானது, தடுப்பூசி மட்டும் உத்தி மூலம் கோவிட்-19 ஐ கையாள்வதில் ஆளும் உயரடுக்கு வைத்திருந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளது. பாரிய நோய்தொற்றின் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை பெறுதல் என்ற அப்பட்டமான கொள்கைக்கு அவர்கள் மாறியுள்ளனர்.

பிப்ரவரி 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஸ்பெயினில் பதிவான நோய்தொற்று பற்றிய அனைத்து உச்சபட்ச தரவுகளையும் ஓமிக்ரோன் மாறுபாடு தகர்த்தாலும், PSOE மற்றும் போலி-இடது பொடேமோஸ் கட்சி சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிட்டுள்ளது. ஸ்பெயினில் ஒவ்வொரு 33 பேரில் ஒருவருக்கு என்ற வீதத்தில், அதாவது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 3 சதவீதம் பேருக்கு, கடந்த இரண்டு வாரங்களில் கோவிட்-19 நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை, 180,000 புதிய நோய்தொற்றுக்களுடன், கோவிட் நோய்தொற்றுக்கள் பற்றிய அதன் முன்னைய உச்சபட்ச பதிவுகளை ஸ்பெயின் முறியடித்தது. கடந்த மூன்று வாரங்களில், 1,700 க்கும் மேற்பட்ட கோவிட் இறப்புக்கள் அங்கு ஏற்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 8 மில்லியன் மக்கள் (அல்லது ஸ்பெயின் மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர்) நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மருத்துவ பரிசோதனை சீர்குலைந்துபோன நிலையிலும், மற்றும் சுய பரிசோதனை பொதிகளை பலரும் பயன்படுத்துவதால் அவர்களுக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட விபரத்தை சுகாதார அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவிக்காத நிலையிலும், இது குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளாகும்.

வைரஸின் அதிவேக பரவல் மருத்துவமனைகள் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. 2,228 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICUs) கவனிப்பில் உள்ளது உட்பட, தற்போது 17,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 26 மாகாணங்களில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட படுக்கைகளை கோவிட்-19 நோயாளிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த சுகாதார பேரழிவு மற்றும் நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் உண்மையான விகிதங்களை மூடிமறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு மத்தியில், ஸ்ராலினிச நுகர்வோர் விவகார அமைச்சர் அல்பெர்ட்டோ கார்ஸோன் இன் கருத்துக்கள் டிசம்பர் இறுதியில் The Guardian இல் வெளியானதன் பின்னர், செய்தி ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய விவாதமாக விலங்குகளின் நலன் மீது தொழிற்சாலைப் பண்ணைகள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய பிரச்சாரங்கள் உள்ளன. மில்லியன் கணக்கானவர்களைக் கொல்வதற்கு அச்சுறுத்தும் ஆளும் வர்க்கங்களின் குற்றவியல் சுகாதாரக் கொள்கை பற்றிய செய்திகளுக்கு மாறாக, பன்றிகள் மற்றும் பசுக்களுக்கு சிகிச்சையளிப்பது பற்றிய செய்திகள் தான் ஊடகங்களை ஆதிக்கம் செலுத்துகின்றன.

வைரஸை உள்ளூர் நோயாக மாற்றுவதற்கான PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தின் அழைப்பு, “இனி பூட்டுதல்கள் இல்லை! உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்!” என்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனின் மோசமான கருத்திற்கு சமமானதாகும். இதன் பொருள், இது மில்லியன் கணக்கான நோய்தொற்றுக்களையும் இறப்புக்களையும் குறிக்கும் என்றாலும், உயிர்களை விட இலாபத்திற்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் மக்களிடையே வைரஸை பரவலாகப் பரவ அனுமதிப்பதாகும். இந்த கொள்கை ஏற்கனவே ஸ்பெயினில் 115,000 பேரின் மரணத்திற்கும், ஐரோப்பா முழுவதும் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோரின் மரணத்திற்கும் வழிவகுத்துள்ளது.

இந்த குற்றவியல் கொள்கையை ஆதரிப்பதற்கான பொடேமோஸின் இந்த முடிவு பாரிய மரணத்திற்கு வழிவகுக்கிறது, அதாவது இது “ஒரு சிறிய காய்ச்சல் தான்” என்று வைரஸை குறைத்து மதிப்பிட்ட பிரேசிலின் பாசிச ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோவின் கருத்துக்களை அப்படியே எதிரொலிக்கிறது.

இது, அமெரிக்காவில் பேர்னி சாண்டர்ஸ், பிரான்சில் ஜோன் லூக் மெலோன்சோன், அல்லது கிரீஸில் சிரிசா போன்ற சர்வதேச அளவில் பொடேமோஸூடன் இணைந்த பிரமுகர்களின் குற்றச்சாட்டாகவும் உள்ளது. இந்த போலி இடது சக்திகளை பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது சாத்தியமற்றதாகும். ஜேர்மனியில், இடது கட்சி பிராந்திய அலுவலகத்தில் இதே கொடிய கொள்கைகளையே திணிக்கிறது.

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட எந்தத் தேர்தல் உத்தியும் இல்லை. ஒரு ஒழிப்பு உத்தி மட்டுமே மேலதிக உயிரிழப்பைத் தடுக்க உதவும், இதற்கு வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச திருப்பம் தேவை. முதலாளித்துவத்திற்கும் அதன் பாரிய நோய்தொற்று கொள்கைகளுக்கும் எதிராக இயக்கப்பட்ட ஸ்பானிய, ஐரோப்பிய மற்றும் உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் நனவான பாரிய இயக்கத்தால் மட்டுமே தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவந்து உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

Loading