ஆக்ஸ்ஃபாம் அறிக்கை ஆசியாவில் பரவி வரும் தொற்றுநோய் சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சர்வதேச உதவி நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அறிக்கை, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மை வேகமாக அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் மில்லியன் கணக்கானவர்களின் துன்பத்திலிருந்து ஒரு கையளவிலான பெரும் செல்வந்தர்கள் எவ்வாறு நேரடியாக பலனடைகின்றார்கள் என்பதை ஆவணப்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள 20 புதிய 'தொற்றுநோய் பில்லியனர்களின்' இலாபங்கள் கோவிட்டுக்கான உபகரணங்கள், மருந்துகள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் இருந்து வந்தது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.

டிசம்பர் 23, 2021 வியாழன், பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள மந்த்ராவில் உள்ள சூளையில் இருக்கும் பாகிஸ்தானிய செங்கல் தொழிற்சாலை தொழிலாளர்கள் (AP Photo/Rahmat Gul)

அவர்கள் ஒரு பரந்த போக்கின் ஒரு பகுதியாக இருந்தனர். ஆசியா-பசிபிக் பகுதியில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 'தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து கணிசமாக விரிவடைந்து நவம்பர் 2021 இல் 1,087 ஐ எட்டியது' என்று அறிக்கை குறிப்பிட்டது. இது நெருக்கடிக்கு முந்தைய புள்ளிவிவரங்களில் இருந்து கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது.

'இந்த நீடித்த சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது செல்வத்தின் உச்சக்கட்ட மற்றும் அதிகரித்த செறிவாக்கல் மிகவும் குறிப்பிடத்தக்கது' என்று அறிக்கை தொடர்ந்தது. கடந்த ஆண்டு இறுதியில், இப்பகுதியில் உள்ள ஏழ்மையான 90 சதவீதத்தை விட பணக்கார 1 சதவீதத்தினர் அதிக செல்வத்தை வைத்திருந்தனர். தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து பில்லியனர்கள் தங்கள் செல்வத்தை அதிகரித்தனர்.

இந்த நேரத்தில் அவர்கள் குவித்துள்ள கூடுதல் சொத்தான 1.88 ட்ரில்லியன் டாலர்கள் மக்கள்தொகையில் 20 சதவீத ஏழைகளின் மொத்த செல்வத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு பரந்தளவில் நிகழ்ந்தது. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் மார்ச் 2020 இல் 31 பில்லியனர்கள், 95 பில்லியன் டாலர் சொத்துக்களை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் இது 47 பேராக உயர்ந்து, 204 பில்லியன் டாலர்களை வைத்திருந்தனர்.

சீனாவில், 1.177.5 டிரில்லியன் டாலர்கள் வைத்திருக்கும் 387 பேரில் இருந்து, 556 பேர் 2.31 டிரில்லியன் டாலரை வைத்திருந்தனர். தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில், பில்லியனர்களின் எண்ணிக்கை 102 இலிருந்து 142 ஆக உயர்ந்து, அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 312.6 பில்லியன் டாலர்களில் இருந்து 719 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 21 ஆக உயர்ந்து, அவர்களின் மொத்த சொத்து மதிப்பு $53.7 பில்லியனில் இருந்து $91 பில்லியனாக உயர்ந்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் தரவுகளும் இதே மாதிரியான தகவல்களை தருகின்றன.

செல்வ அதிகரிப்பின் பெரும்பகுதி தொற்றுநோயின் முதல் கட்டத்தில் ஏற்பட்டது. 2020 மார்சுக்கும் டிசம்பருக்கும் இடையில், பிராந்தியத்தில் 147 மில்லியன் முழுநேர வேலைகள் இழக்கப்பட்டபோது, கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வம் 1.46 டிரில்லியன் டாலர்கள் உயர்ந்ததைக் கண்டனர். இது வேலை இழந்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிட்டத்தட்ட 10,000 டாலர் சம்பளம் வழங்க போதுமானது.

“இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் செல்வம், 2020 மார்சுக்கும் அக்டோபருக்கும் இடையில் மிக விரைவாக அதிகரித்தது. அவர் தனது நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 195,000 ஊழியர்களின் வருடாந்திர ஊதியத்தை நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஈடுகட்ட போதுமான பணம் சம்பாதித்தார்” என்று அறிக்கை குறிப்பிட்டது.

ஒரு சிறிய உயரடுக்கின் கைகளில் இந்த விரைவான செல்வச் செறிவு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிகழும் போக்கின் தொடர்ச்சியாகும். இது 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாக சுகாதாரத் துறையிலும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் கைவிடப்பட்டதை தொடர்ந்து தொடங்கப்பட்ட ஒரு சமூக எதிர்ப்புரட்சியின் விளைபொருளாகும்.

அறிக்கை கூறியது போல்: “1990களில் இருந்து, நவதாராளவாதக் கொள்கை, தோல்வியுற்ற உலகளாவிய வரி அமைப்புமுறை மற்றும் சமமற்ற ஊதியம் மற்றும் வெகுமதி ஆகியவை, ஒரு சில உயரடுக்குகளின் கைகளுக்கு வருமானத்தையும் செல்வத்தையும் திசைதிருப்பியுள்ளன. 1987 மற்றும் 2019 க்கு இடையில், ஆசியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 40 லிருந்து 768 ஆக உயர்ந்துள்ளது.

செல்வத்தின் இந்த பாரிய திசைதிருப்பல் ஒரு சுகாதார அமைப்பை தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் செய்துள்ளது.

'நீண்டகாலமான குறைந்த முதலீடு மற்றும் பொது சுகாதார அமைப்பின் மோசமான நிர்வாகம் பல நாடுகளின் தொற்றுநோய்க்கு போதுமான மற்றும் சமமற்ற பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது'. இப்பிராந்தியத்தில் சுகாதாரத்திற்கான காப்புறுதிகளால் ஈடுசெய்யப்படாத நேரடி கொடுப்பனவுகள் (OOP) பாரிய சுகாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதுடன் தொற்றுநோயால் தீவிரமடைகிறது.

2017 ஆம் ஆண்டில், காப்புறுதிகளால் ஈடுசெய்யப்படாத நேரடி கொடுப்பனவுகள் பாக்கிஸ்தான், கம்போடியா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதார செலவினங்களைக் கொண்டிருந்தன. 13 சதவீத ஆசிய குடும்பங்கள் ஏற்கனவே தொற்றுநோய் தாக்குதலுக்கு முன்னர் சுகாதாரப் பாதுகாப்புக்கான 'பேரழிவான' செலவை அனுபவித்து வருகின்றன.

இவ்விடயத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். 'மோசமான குறைந்த முதலீடு மற்றும் பெரும் சமத்துவமின்மையால் பாதிக்கப்படும் அதன் சுகாதார அமைப்புமுறை வைரஸ் பரவுவதை எளிதாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது'. 'உலகின் நான்காவது-குறைந்த சுகாதார வரவு-செலவுத் திட்டத்தையும் மற்றும் 70 சதவீதத்திற்கும் அதிகமான தனிநபர்கள் தாமாகவே சுகாதாரச் செலவுகளை சந்திக்க வேண்டியுள்ள தனியார் இலாப நோக்குள்ள சுகாதாரத் துறையை' கொண்டுள்ளது.

பிராந்தியத்தின் பொது சுகாதார அமைப்புகளின் நெருக்கடி, கோவிட் ஆல் மோசமடைந்துள்ளதுடன், ஏனைய பகுதிகளை கடுமையாக பாதிக்கிறது. 'தெற்காசியா போன்ற HIV, காசநோய் மற்றும் மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இறப்புகளின் அடிப்படையில் இந்த மூன்று நோய்களைவிட கோவிட்-19 வைரஸின் நேரடி தாக்கம் அதிகமாக இருக்கும்' என்று அறிக்கை கூறியது.

முக்கிய முதலாளித்துவ நாடுகளால் பின்பற்றப்படும் தடுப்பூசி தேசியவாதமும் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவம்பர் 2021 நிலவரப்படி, பிராந்தியத்தின் மக்கள்தொகையில் 47 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி பெறவில்லை. பங்களாதேஷ் மற்றும் மியான்மரில், மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு முற்றிலும் தடுப்பூசி போடப்படவில்லை.

அக்டோபர் 2021 இல், பைசரின் 74 சதவீத தடுப்பூசிகளும், மொடேர்னாவின் 82 சதவீதமும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்குச் சென்றன. 1.5 சதவீதம் மற்றும் 3.4 சதவீதம் மட்டுமே வளரும் நாடுகளுக்கு விநியோகம் செய்வதற்கான COVAX திட்டத்திற்கு விநியோகிக்கப்பட உள்ளது.

பைசர் மற்றும் மொடேர்னா ஆகியவை 2021-2022 இல் 34 பில்லியன் டாலர்கள் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்ட எதிர்பார்க்கின்றன. இது ஒரு வினாடிக்கு 1,000 டாலருக்கு சமமானதாகும். ஆனால் காப்புரிமை தள்ளுபடி மூலம் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான உரிமையை ஏழை நாடுகளுக்கு உறுதி செய்யும் முயற்சிகள் 'வெற்றி பெற வாய்ப்பில்லை' எனத் தெரிகிறது. இது போன்ற முயற்சிகள் 'உலக வர்த்தக அமைப்பினால் [WTO] தடுக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் நவம்பர் 2021 இல் திட்டமிடப்பட்ட அமைச்சர்களின் மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஏனைய இதுபோன்ற அறிக்கைகளைப் போலவே ஆக்ஸ்ஃபாம் ஆய்வானது, அது முன்வைக்கும் பேரழிவு தரும் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களுக்கும் மற்றும் இப்போக்கை மாற்றுமாறு ஆளும் உயரடுக்கிடம் வேண்டுகோளின் அடிப்படையில் அது முன்வைக்கும் முற்றிலும் வெற்று கொள்கை பரிந்துரைகளுக்கும் இடையே உள்ள முற்றிலும் முரண்பட்ட தன்மையால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

அந்த அறிக்கையின் முடிவுரை, 'நெருக்கடிகள் வரலாற்றை வடிவமைக்கின்றன' என்ற சரியான கருத்தை முன்வைப்பதன் மூலம் பின்வருமாறு தொடங்குகிறது.

ஆனால், “2022 ஆசியா தனது வரி வருவாயைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் முக்கியமான துறைகளுக்கான பொதுச் செலவினங்களை வெறுமையாக்கிய ஒரு நவதாராளவாத நிகழ்ச்சி நிரலை என்றென்றும் முறித்துக் கொள்ளத் தேர்ந்தெடுக்கும் ஆண்டாக இருக்கலாம். இது ஒரு சிலரின் இலாபம் மற்றும் அதீத செல்வத்திற்கு மாறாக பலரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு உண்மையான முற்போக்கான நிகழ்ச்சி நிரலை இப்பகுதி ஏற்றுக்கொள்வதைக் காணும் திருப்புமுனையாக இருக்கலாம்”.

இத்தகைய வரிகளைப் படிக்கும்போது, ஆசிரியர்கள் உண்மையில் அவற்றை நம்புகிறார்களா என்று ஒருவர் ஆச்சரியப்படவேண்டியுள்ளது. ஏனெனில் அவர்கள் முன்வைக்கும் தகவல்கள், இலாபக் குவிப்பு அடிப்படையிலான முதலாளித்துவத்தின் தற்போதைய சமூக-பொருளாதார ஒழுங்கின் கட்டமைப்பிற்குள் எந்தக் கொள்கை மாற்றமும் இருக்காது என்பதையே காட்டுகின்றது.

ஆனால், அரசியல், சமூக, கருத்தியல் மற்றும் பொருளாதாய என்ற ஆயிரம் தளைகளால் பிணைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வறிக்கையின் ஆசிரியர்கள் சிந்தனையில் ஒரு மாற்றம் சீர்திருத்தத்தை கொண்டு வர முடியும் என்ற நச்சுத்தனமான கட்டுக்கதையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னேறிய மற்றும் ஏழ்மையான நாடுகளில் உள்ள பாரிய தொழிலாளர்கள், தற்போதைய நெருக்கடியிலிருந்து 'வரலாற்றை வடிவமைக்க' சமூகப் புரட்சியின் மூலம் முதலாளித்துவ ஒழுங்கை தூக்கிவீசுவதற்கான அவர்களின் சொந்த சுயாதீனமான போராட்டம்தான் ஒரே வழி என்று தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து முடிவெடுப்பார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

Loading