முன்னோக்கு

பள்ளிகளை மூடவும் பெருந்தொற்றைத் தடுக்கவும் உலகளாவிய போராட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செல்வ வளமிக்க முதலாளித்துவ அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க' கொள்கைளுக்கு எதிராக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா எங்கிலும், மாணவர்கள், கல்வித்துறையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒரு பகிரங்கமான கிளர்ச்சியில் இறங்கியுள்ளனர். SARS-CoV-2 இன் அதிகளவில் தொற்றக்கூடிய ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பதற்கு விடையிறுப்பாக, இந்த அரசாங்கங்கள் வேண்டுமென்றே இந்த வைரஸைப் பரவ அனுமதித்துள்ளன, கடந்த வாரம் அமெரிக்காவில் மட்டும் அண்மித்து ஒரு மில்லியன் குழந்தைகள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டனர். உத்தியோகப்பூர்வமாக மலைப்பூட்டும் அளவிற்கு மூன்று மில்லியன் பேர் உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் நோய்தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கலிபோர்னியாவில் உள்ள ரெடோண்டோ உயர்நிலைப் பள்ளியில் வேலைநிறுத்தத்தின் போது (Credit: ruhscovid via Instagram)

பெருந்திரளான இளைஞர்களும் கல்வித்துறையாளர்களும் மேற்கொண்டு நோய்தொற்றுக்களையோ, மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் கோவிட்-19 இறப்புகளையோ ஏற்க விரும்பவில்லை என்பதால், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிரான போராட்டம் மீண்டுமொருமுறை உலகளாவிய வர்க்க போராட்டத்தின் முன்னிலைக்கு வந்துள்ளது. கடந்த வாரத்தில் ஐரோப்பா எங்கிலும் பின்வரும் போராட்டங்கள் வெடித்தன அல்லது வரவிருக்கும் வாரங்களில் திட்டமிடப்பட்டுள்ளன:

  • நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் மொத்த ஆசிரியர்களில் சுமார் 75 சதவீதம் பேர் கலந்து கொண்டு பிரான்சின் ஆரம்பப் பள்ளிகளில் பாதியை மூட செய்து ஒரு வாரத்திற்குப் பின்னர், பிரான்ஸ் எங்கிலும் ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் வியாழக்கிழமை அந்நாடெங்கிலும் உள்ளூர் வேலைநிறுத்தங்களில் பங்கு பற்றினார்கள்.
  • செவ்வாய்கிழமை, ஆஸ்திரியா எங்கிலும் 100 க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளிகளைத் திறக்கும் பொறுப்பற்றக் கொள்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
  • ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வியாழக்கிழமை கிரீஸ் அரசாங்கத்தின் பெருந்தொற்று கொள்கைகள் மற்றும் இராணுவக் கட்டமைப்பை எதிர்த்து, அந்நாடு எங்கிலும் நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர். அரசாங்கம், பொலிஸ் மற்றும் அதிவலது சக்திளால் மாணவர்கள் மிரட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்ற போதினும், நாடுதழுவிய பல பள்ளிகளில் மாணவர் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன.
  • திங்கட்கிழமை, கனடாவின் மனிடோபா எங்கிலும் 90 பள்ளிகள் வரையில் நூற்றுக் கணக்கான மாணவர்கள், பாதுகாப்பற்ற நிலைமைகளின் காரணமாக வகுப்பறைகளில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
  • பிரிட்டனில், எஞ்சியுள்ள ஒரே தணிப்பு நடவடிக்கையான முகக்கவசம் அணிவதை உயர்நிலைப் பள்ளிகளில் கைவிட்டதைக் கல்வித்துறையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பரந்தளவில் கண்டித்தனர்.

அமெரிக்கா எங்கிலும், இந்த வாரம் மாணவர் வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன அல்லது பின்வரும் பிரதான நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளன:

  • கலிபோர்னியாவின் ஆக்லாந்தில் சுமார் 1,200 மாணவர்கள் செவ்வாய்கிழமை காலவரையற்ற பள்ளி வேலைநிறுத்தம் தொடங்கினர், இது பல ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவை வென்றுள்ளது.
  • செவ்வாய்கிழமை, மின்னிசொடாவின் மொத்தம் எட்டு செயிண்ட் பால் உயர்நிலைப் பள்ளிகளின் நூற்றுக் கணக்கான மாணவர்களும் மற்றும் சில நடுநிலை பள்ளி மாணவர்களும் வகுப்பறைகளைப் புறக்கணித்தனர். குறைந்தபட்சம் இரண்டு மின்னிசொடா மாணவர்களும் மற்றும் எட்டு கல்வியாளர்களும் கடந்தாண்டு கோவிட்-19 தொடர்பில் வந்த பின்னர் உயிரிழந்தனர்.
  • மேரிலாந்தின் மொன்ட்கொமெரி உள்ளாட்சியின் 18 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு வாரங்களுக்காவது இணையவழி கற்பித்தல் வேண்டுமென கோரி இன்று வெளிநடப்பு செய்கின்றனர். மொன்ட்கொமெரி உள்ளாட்சி பொதுப் பள்ளிகள், 160,000 மாணவர்களுடன் அமெரிக்காவின் 14வது மிகப்பெரிய பள்ளி கல்வி மாவட்டமாகும்.
  • கொலார்டொ டென்வரில் வியாழக்கிழமை மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறியதுடன், கோவிட்-19 குறித்த அவர்களின் கவலைகளை வெளிப்படுத்தி ஒரு கடிதம் அனுப்பினர், கல்விக்காக மாணவர்கள் தங்களின் உடல்நலனை ஆபத்திற்குற்படுத்த முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அவர்களின் மனு இரண்டே நாட்களில் 500 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைப் பெற்றது, அவர்களின் கோரிக்கைகள் பூர்த்தியாகும் வரை தொடர்ந்து வெளிநடப்பு செய்ய அம்மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
  • டெக்சாஸ் ரவுண்ட்ராக்கில் சிறந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் கோரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர். ஒரு சில உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு மனுவில் 600 க்கும் அதிகமான மாணவர்கள் கையெழுத்திட்டிருந்தனர். கடந்த வாரத்தில் மட்டும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் 2,200 க்கும் அதிகமான கோவிட்-19 நோய்தொற்றுக்கள் இருந்ததால், மாணவர்கள் முழுமையாக தொலைதூர கற்பித்தலுக்கு மாற கோருகின்றனர்.
  • உதாஹ் பார்க் நகரில் சுமார் 200 பார்க் நகர உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் கட்டாய முகக்கவசம் அணிதலை நிறுத்துவதற்கான உதாஹ் அரசு செனட் நகர்வுகளை எதிர்க்க வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
  • புளோரிடா புரோவார்ட் உள்ளாட்சியில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் திங்கட்கிழமை ஒரு வெளிநடப்புக்கு தயாரிப்பு செய்து வருகின்றனர். புரோவார்ட் உள்ளாட்சி அரசுப் பள்ளிகள் சுமார் 270,000 மாணவர்களுடன் அமெரிக்காவின் ஆறாவது மிகப்பெரிய பள்ளிக் கல்வித்துறை மாவட்டமாக உள்ளது, இங்கே தான் 2018 இல் பார்க்லாந்து பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்தது.
  • இலினொய், சிகாகோவின் நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே கணிசமான மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் செல்ல மறுத்துள்ளனர். இணையவழி வகுப்புகள் கோரும் ஒரு மனுவில் 1,500 க்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டிருந்தனர் என்றாலும் பள்ளி நிர்வாகிகள் அதை புறக்கணித்தனர்.
  • கடந்த இரண்டு வாரங்களில், நியூ யோர்க், சிகாகோ, போஸ்டன், சீட்டல் ஆகியவற்றிலும் நாட்டெங்கிலும் பல பிரதான நகரங்களிலும் மாணவர்களின் இன்னும் பல குறிப்பிடத்தக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இத்தகைய ஒவ்வொரு போராட்டங்களிலும், மாணவர்களும் கல்வித்துறையாளர்களும் அவர்களின் சொந்த பாதுகாப்புக்காக மட்டும் போராடவில்லை மாறாக அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்காக போராடி வருகிறார்கள். ஓமிக்ரோன் வகை உலகெங்கிலும் அதிகரிப்பதற்கு முன்னரே, அமெரிக்காவில் 167,000 க்கு அதிகமான குழந்தைகளும் உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளும் கோவிட்-19 ஆல் பெற்றோரில் ஒருவரையோ அல்லது முக்கிய கவனிப்பாளரையோ இழந்திருந்தனர், இந்த புள்ளிவிபரங்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகளாலோ, ஊடகங்களில் அமரும் தலைவர்களாலோ, மாணவர்களின் மனநலனைக் குறித்து பாசாங்குத்தனமாக கவலை வெளியிடும் தொழிற்சங்க நிர்வாகிகளாலோ ஒருபோதும் குறிப்பிடப்படுவதில்லை.

“பெற்றோரை இழக்கும் சுமை' என்று தலைப்பிட்டு American Journal of Psychiatry இல் பிரசுரிக்கப்பட்ட செப்டம்பர் 2018 ஆய்வில், அதன் ஆசிரியர்கள் பெற்றோர் இறப்பின் நீண்டகால பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர். “குழந்தைகளின் அனுபவத்தில் மிகவும் மன அழுத்தத்திற்குரிய சம்பவங்களில் பெற்றோரை இழப்பதும் ஒன்றாகும்,” என்றவர்கள் குறிப்பிடுகின்றனர். 7 ஆண்டுக்கும் அதிக காலமாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 'மன அழுத்தம், நோய்க்குப் பிந்தைய மன உளைச்சல் ஒழுங்கின்மை, செயல்பாட்டு குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.

பள்ளியில் குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு, கவனக்குறைவாக தங்கள் அன்புக்குரியவர்களைத் தொற்றிய குழந்தைகளால் இதுபோன்ற எத்தனை கொடூரமான மற்றும் இதயத்தை உடைக்கும் நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன? சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட உலக சோசலிச வலைத் தளத்துடனான ஒரு பேட்டியில் நியூ ஜெர்சியைச் சேர்ந்த மருத்துவத் துறை உளவியல் நிபுணர் கூறுகையில் இத்தகைய பேசப்படாத துயரம் ஓமிக்ரோன் அதிகரிப்புக்கு மத்தியில் இந்த புத்தாண்டு தொடங்கியதில் இருந்து ஒரு வளாகத்தில் ஏற்கனவே இரண்டு மாணவர்கள் ஏற்கனவே இத்தகைய சோகத்தை அனுபவித்ததாக தெரிவிக்கிறார்.

அந்த உளவியல் நிபுணர் குறிப்பிட்டார், “நாம் ஜனவரி 3 இல் விடுமுறைக் காலத்திலிருந்து திரும்பி வந்துள்ளோம். அந்த வாரம், என் மாணவர்களில் இரண்டு பேருக்குப் பள்ளியில் கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டது. அவர்கள் அதை அவர்களின் வீடுகளுக்குக் கொண்டு சென்று, கவனக் குறைவாக அவர்களின் தாய் மற்றும் பாட்டிக்கும் (இவர்கள் முக்கிய குடும்ப பராமரிப்பாளராக இருந்தார்கள்) நோய்தொற்றை ஏற்படுத்திவிட்டார்கள், அவ்விருவருமே கடந்த வாரம் இறந்து போனார்கள்,” என்றார்.

'தொடர்ச்சியான கூட்டு அதிர்ச்சியால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்ட அந்த பெண்மணி, “தங்களை பராமரிப்பவர்களை இழந்த குழந்தைகள், குறிப்பாக இந்த குழந்தைகளாலேயே கவனக் குறைவாக அவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுத்தப்பட்டு இறந்திருந்தால், உயிர்பிழைத்திருக்கும் குற்ற உணர்ச்சியை அனுபவிக்கக்கூடும், இது நோய்க்குப் பிந்தைய மன உளைச்சல் சீர்குலைவின் (PTSD) அறிகுறியாகும், இது மனஅழுத்தம், பதட்டம், உறவுகளில் சிக்கல்கள் ஏற்பட இட்டுச் செல்லும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

பதவியேற்று ஓராண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி ஜோ பைடெனின் இரண்டாவது பத்திரிகையாளர் சந்திப்பில், புதன்கிழமை, அவர் இந்த யதார்த்தத்தைக் குறிப்பிடக் கூட இல்லை என்பதோடு, அவர் பதவியேற்றதில் இருந்து கோவிட்-19 ஆல் 446,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்துள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ளவும் மறுத்தார். அதற்கு பதிலாக, “நாம் இதுவரை இருந்ததை விட சிறப்பான இடத்தில் இருக்கிறோம், தெளிவாக ஓராண்டுக்கு முன்னர் இருந்ததை விட சிறப்பாக உள்ளோம்,” என்று கூறி சமகால அமெரிக்கா மீதான ஒரு பிரமையைச் சித்தரித்தார்.

அமெரிக்கா எங்கிலும் நேரடி வகுப்புகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதைக் குறித்து கேட்ட போது, “ஒரு சில பள்ளிகள் தான் மூடப்படுகின்றன. 95 சதவீதத்திற்கும் அதிகமானவை இன்னமும் திறந்திருக்கின்றன,” என்று கூறி பைடென் இந்த நெருக்கடியைக் குறைத்துக் காட்ட முயன்றார். “நாங்கள் பின்னுக்குச் செல்லப் போவதில்லை — நாங்கள் சமூக பொது முடக்கத்திற்குப் போகப் போவதில்லை. நாங்கள் பள்ளிகளை மூட பின்னுக்குச் செல்லப் போவதில்லை. பள்ளிகள் திறந்திருக்க வேண்டும்,” என்றவர் அழுத்தமாக தெரிவித்தார்.

“பாருங்கள். நானொரு முதலாளித்துவவாதி,” என்று குறிப்பிட்டு இத்தகைய கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள சமூக நலன்களைப் பைடென் அப்பட்டமாக வெளிப்படுத்தினார். பின்னர் அவர், “நான் சோசலிஸ்ட் இல்லை,” என்று கூறி ஜனநாயகக் கட்சியின் போலி-இடது பேர்ணி சாண்டர்ஸிடம் இருந்து தன்னை தொலைவில் நிறுத்திக் கொண்டார்.

பைடெனின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் தற்செயலானவை இல்லை; அவை வேண்டுமென்றே அடித்தளமிட்டு கூறப்படுகின்றன. அவர் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் வர்க்கம் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் தேவைகள் மற்றும் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்துகிறது. பெருநிறுவனங்களுக்கு இலாபங்களை உருவாக்க பெற்றோர்களை வேலையில் ஈடுபடுத்தும் பொருட்டு, குழந்தைகளை ஓரிடத்தில் வைப்பதற்கு சேவையாற்றுவது மட்டுமே பள்ளிகளைத் திறப்பதற்கான ஒரே காரணமாகும்.

அவர் குறிப்பிட்டார், “போட்டியில்லாத முதலாளித்துவம் முதலாளித்துவமே அல்ல, அது சுரண்டல்,” என்றார். ஆனால் பைடெனின் வாதங்களுக்கு முரணாக, முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதையே அடித்தளத்தில் கொண்டுள்ளது, அது உற்பத்தி நிகழ்வுபோக்கில் உபரி மதிப்பை உறிஞ்சுவதன் மூலம் நடக்கிறது. முதலாளித்துவவாதிகளுக்கு இடையிலான போட்டி மட்டத்தைப் பொறுத்த வரையில், இந்த சுரண்டல் தொடர வேண்டும் என்பதில் அவர்கள் ஓர் அடிப்படை உடன்பாட்டைக் கொண்டுள்ளனர், இது பள்ளிகளைத் திறக்க உறுதியாக இருப்பதிலும் சமூக பொது அடைப்புகளுக்கு அவர்கள் காட்டும் எதிர்ப்பிலும் வெளிக்காட்டப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் உலகளவில் பின்பற்றப்படும் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைகளுக்கு எதிரான தங்களின் போராட்டத்தை முன்னெடுப்பதில், மாணவர்களும், கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் இந்த அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரங்களுக்கு வழங்கப்படும் எந்தவித முறையீடுகளும் செவிடர் காதில் ஊதிய சங்கு போல தான் இருக்கும். இப்போது போராட்டத்தில் நுழையும் மாணவர்களும் கல்வியாளர்களும், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதில் புறநிலை நலன்களைக் கொண்டுள்ள மனிதகுலத்தின் பெருந்திரளான மக்களான தொழிலாள வர்க்கத்திற்குள் அவர்களின் வேலைநிறுத்தத்தை விரிவாக்கி ஆதரவைக் கட்டமைக்க வேண்டும்.

ஒரு புரட்சிகர சோசலிஸ்ட் தலைமையைக் கட்டமைப்பதே மிக முக்கிய பணியாகும். ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் இந்த பெருந்தொற்று சவாலுக்குக் கீழ்படிந்துவிட்டனர், அவர்கள் முடிவில்லாமல் பாரிய நோய்தொற்றையும், துயரம் மற்றும் இறப்புகளையும் ஏற்க விரும்புகின்றனர் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டனர். இந்த அழுகிய சமூக ஒழுங்கைத் தலைகீழாக மாற்றுவதன் மூலமாக மட்டுமே இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு முடிவு கட்டி, மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதோடு, சமூக சமத்துவம் மற்றும் மனிதகுல முன்னேற்றத்தின் அடிப்படையில் ஒரு புதிய சமூகத்தைக் கட்டமைக்க அஸ்திவாரங்களை அமைக்க முடியும்.

சோசலிச நனவை வளர்க்க உங்கள் பள்ளிகள் அல்லது வளாகங்களில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) பிரிவுகளைக் கட்டமைக்குமாறு நாங்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். இவை, இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டங்களை நடத்துவதற்காக, ஒவ்வொரு அண்டை பகுதிகளிலும், பள்ளிகளிலும், முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, கல்வித்துறையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் சாமானிய குழுக்களை அபிவிருத்தி செய்வதுடன் இணைக்கப்பட வேண்டும்.

Loading