இலங்கை ஜனாதிபதி பொருளாதார நெருக்கடிக்கு கோவிட்-19 தொற்று மீது குற்றம் சுமத்துகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடக ஆசிரியர்களின் கூட்டத்தில் பேசியபோது, அவரது அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதனது 'செழிக்கும் எதிர்பார்ப்பை' யதார்த்தமாக்கும் என்று அறிவித்தார்.

நவம்பர் 2019 தேர்தலின் போது தனது போலியான வாக்குறுதிகளை அவரது அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதற்கு “தொற்று நோயால் உருவாக்கப்பட்ட பின்னடைவை” அவர் குற்றம் சாட்டினார்.

இராஜபக்ஷ, விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை திசை திருப்புவதற்கும் மேலும் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாரிப்பதற்கும் ஊடகங்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களின் கூட்டத்தில் பேசினார்.

4 ஜனவரி 2022 அன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான மஹாபாகேயில் எரிவாயு சிலிண்டர்களை வாங்க மக்கள் அதிகாலையில் இருந்து காத்திருக்கின்றனர் (Photo: WSWS Media)

“தற்போதைய பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, என்று எச்சரித்தமைக்காக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்கவை ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்தார்.

டிசம்பரில், உணவுப் பற்றாக்குறை 22 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் உத்தியோகபூர்வமாக ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 12 சதவீதத்தை எட்டியது. அக்டோபர் மாதத்தில் அரசாங்கம் கிட்டத்தட்ட அனைத்து விலைக் கட்டுப்பாடுகளையும் நீக்கி, விலைகளை உயர்த்துவதற்கு பெரும் வணிகங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது. இப்போது அது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பால் மா, சீனி, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்துகள் போன்றவற்றின் தட்டுப்பாட்டை மக்கள் எதிர்கொள்கின்றனர். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நீண்ட வரிசைகள் தோன்றியுள்ளன. கடந்த ஆண்டு முழுவதும் சம்பள உயர்வு கோரி தனியார் மற்றும் அரச துறைகளில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு அலைகளும் வெடித்தன. உரம் இறக்குமதிக்கு அரசு விதித்துள்ள தடையால் ஏற்பட்டுள்ள விவசாயப் பேரழிவுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் இந்த ஆண்டும் தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

எவ்வாறாயினும், ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது, இராஜபக்ஷ வெகுஜனங்களின் சகிக்க முடியாத நிலைமைகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையைப் பற்றி அவருக்கு சவால் விடுவது ஒருபுறம் இருக்க, இணக்கமான ஸ்தாபன ஊடகத்தின் ஆசிரியர் எவரும் கேள்வி கேட்கவில்லை.

ஜனாதிபதி -கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிக்கும் வகையில்- தனது அரசாங்கம் 'மோசமான பேரழிவைத் தடுக்க' தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்துவதில் 'வெற்றிகரமாக' செயற்பட்டு வருவதாக அறிவித்தார். இருப்பினும், குறைத்து மதிப்பிடப்பட்ட மற்றும் நம்பமுடியாத உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தை எட்டியுள்ளதுடன் மரணங்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 15 ஆயிரத்தை கடந்தது.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய, அதிக வேகமாக தொற்றக்கூடிய ஒமிக்ரோன் மாறுபாட்டின் ஆபத்துகள் பற்றி இராஜபக்ஷ எதுவும் கூறவில்லை. 'சமூகத்தில் கண்டறியப்படாத ஓமிக்ரோன் நோயாளிகள் அதிகமாக இருக்கலாம்' என்று சுகாதார அதிகாரிகள் நேற்று ஒப்புக்கொண்டனர்.

உண்மையில் தொற்றுநோயியல் நிபுணர்களின் எச்சரிக்கைகளை பல ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 'தொற்றுநோய் வருவதை யாரும் கண்டறியவில்லை' என்று அவர் பொய்யாகக் கூறினார். தயாராவதற்குப் பதிலாக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் பொதுச் சுகாதாரச் செலவினங்களைக் குறைத்துள்ளன - இதையே கடந்த இரண்டு வருடங்களாக இராஜபக்ஷவும் பின்தொடர்கின்றார்.

உலம் முழுதும் உள்ள ஏனைய அரசாங்கங்களைப் போலவே, 'வைரஸுடன் வாழ்வது' என்ற இராஜபக்ஷ நிர்வாகத்தின் கொள்கை, உழைக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்வை விட இலாபத்தை முன்னிலைப்படுத்துகிறது. நாட்டின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துவதுதான் அதன் அதீத அக்கறை ஆகும்.

கடந்த இரண்டு வருடங்களாக, சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக 10 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இராஜபக்ஷ வருத்தம் தெரிவித்தார். தொற்றுநோயின் ஆரம்ப மாதங்களில் ஏற்றுமதி கடுமையான பின்னடைவை எதிர்கொண்ட அதே வேளையில் புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புவது குறைந்துள்ளது.

ஃபிட்ச் ரேட்டிங் உட்பட சர்வதேச தர நிர்ணய முகவர் அமைப்புகள், இலங்கையினால் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரித்து வருகின்றன. வெளிநாட்டு நாணய கையிருப்பு $1.6 பில்லியனாக குறைந்துள்ளது. இது இரண்டு வார இறக்குமதிகளுக்கு நிதியளிக்க போதுமானதாக இல்லை.

ஒரு கடன் தவனைத் தவறலை தவிர்க்க அரசாங்கம் கடன்களைப் பெற தீவிரமாக முயற்சிக்கிறது. கடந்த மாதம் சீனா 1.5 பில்லியன் டொலர் நாணய பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, மத்திய வங்கி அதன் இருப்பு 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக அறிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை, மோர்னிங் ஊடகம், 1.9 பில்லியன் டொலர் பொதியை வழங்குவதை இந்திய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தது. இதில் 400 மில்லியன் டொலர் நாணய மாற்று ஒப்பந்தம், உடனடியாக வழங்கப்படும் 500 மில்லியன் டொலர் எரிபொருள் கடன்கள் மற்றும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக பின்னர் வழங்கப்படவுள்ள 1 பில்லியன் டொலரும் அடங்கும்.

இந்த நடவடிக்கைகள் நெருக்கடியைத் தீர்க்காது. மாறாக அவை அதை மேலும் வெடிக்கும் தன்மை கொண்டதாக ஆக்குகின்றன.

அந்நிய செலாவணி நெருக்கடியின் காரணமாக அரசாங்கம் 'தேவையற்ற இறக்குமதிகளை' தடை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக இராஜபக்ஷ ஆசிரியர்களிடம் கூறினார். தேவையற்ற இறக்குமதி என்று அழைக்கப்படுபவற்றில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்களும் அடங்கும். அவற்றை வெட்டுவதும் தொழிலாளர்களின் வேலையை அபகரிக்கின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, மத்திய வங்கியின் கட்டுப்பாடுகள், பொருட்களுக்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணியை விடுவிப்பதை தடுத்து வைத்திருப்பதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவு கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கிக் கிடக்கின்றன.

“இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம்” என்ற போலிக்காரணத்தின் கீழ் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் கடந்த ஆண்டு தடை செய்தது. நெல், காய்கறிகள் மற்றும் பயிர்செய்கைகள் பாழாகிப் போனதால், ஏழை விவசாயிகளின் வாழ்க்கையும் பாழாகிப் போயுள்ளது.

மின்சார விநியோகத்தை பராமரிப்பதற்கு போதுமான எரிபொருள் மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாத நிலையில், இராஜபக்ஷ திடீரென 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரிப்பதற்கான' தனது உறுதிப்பாட்டை அறிவித்துள்ளார். கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதன் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை திங்கட்கிழமை மூடியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பிணை எடுப்பு பெறுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. அத்தகைய எந்த ஒப்பந்தமும் தவிர்க்க முடியாமல் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு மேலாக புதிய சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதோடு தொழிலாள வர்க்கத்திற்கு புதிய சுமைகளை கொண்டுவரும்.

உழைக்கும் மக்கள் பணவீக்கம் மற்றும் வேலை இழப்புகளை எதிர்கொள்ளும் அதே வேளை, அரசாங்கமானது பெருவணிகத்துக்கும் செல்வந்த உயரடுக்கிற்கும் பணம் பெருக்கெடுப்பதை உறுதி செய்துள்ளது.

மத்திய வங்கி மூன்று டிரில்லியன் ரூபாயை நிதிய அமைப்பிற்குள் செலுத்தியுள்ளமை, இலாபத்தை உயர்த்தியுள்ளதுடன் ஊகங்களையும் ஊக்குவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரை கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 292 பில்லியன் ரூபா நிகர லாபத்தை பெற்று சாதனையை முறியடித்தன. பிரதான பங்கு சுட்டெண் 80 சதவீதம் அதிகரித்து, 2021 இறுதியில் 12,226 என்ற சாதனையளவை எட்டியுள்ளது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் வசிப்பவர்களால் அதிகம் வாங்கப்பட்ட மாடிமனை சொகுசு குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. இது சமூகத்தின் உயர்மட்ட அடுக்குகளால் அபரிமிதமான செல்வம் குவிக்கப்பட்டு வருவதின் மற்றொரு அறிகுறியாகும்.

எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவை, அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன கோபத்தை சுரண்டிக்கொள்வதற்காக வளர்ந்து வரும் உணவு நெருக்கடி சம்பந்தமாக இராஜபக்ஷவை விமர்சிக்கின்றன. இருப்பினும், அவை எதுவும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீர்வை கொண்டிருக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பை கோருவது, உழைக்கும் மக்களுக்கு மேலும் துன்பத்தை திணிக்கும் என்பதை நன்கு அறிந்திருக்கின்ற போதிலும், ஐ.தே.க. மற்றும் ஐ.ம.ச. பிணையெடுப்பை கோருமாறு அரசாங்கத்திற்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளன. இந்தக் கட்சிகளின் தலைவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்துவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்களாவர்.

ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கான எந்தவொரு கோரிக்கையும் 'எச்சரிக்கையுடன்' விடுக்கப்பட வேண்டும், ஏனெனில் அது கடினமான நிபந்தனைகளை விதிக்கும் என்று கூறினார். ஆனால் அவர் அத்தகைய நடவடிக்கையை எதிர்க்கவில்லை. அது எச்சரிக்கையுடன் விடப்படுகிறதோ இல்லையோ, கடுமையான நிபந்தனைகளை ஆணையிடுவது இலங்கை அரசாங்கம் அன்றி, சர்வதேச நாணய நிதியமே ஆகும்.

இந்த தொற்றுநோய் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்தின் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளதுடன், முதலாளித்துவ வர்க்கங்களும் அவர்களது அரசாங்கங்களும் மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் உட்பட எல்லாவற்றையும் விட இலாபத்தை முன்னிலைப்படுத்துகின்றன என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

தொழிலாளி வர்க்கம் தான் பிரச்சினைகளை தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் கொள்கைகளை ஒழுங்கமைந்து எதிர்க்கவும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உயிர்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாள வர்க்க அயல் பகுதிகளில் நடவடிக்கை குழுக்களை நிறுவுவதற்கு சோ.ச.க. அழைப்பு விடுத்துள்ளது. இத்தகைய போராட்டங்கள் பெரும் பணக்காரர்களின் இலாபத்திற்காக அன்றி, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் பேரில், சமூகத்தை மறு ஒழுங்கமைப்பதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும்.

Loading