இலட்சக் கணக்கான இலங்கை அரச ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வரவு-செலவுத் திட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்காத தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 10,000 ரூபா சம்பள உயர்வு உட்பட இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் அரச ஊழியர்கள் டிசம்பர் 8 புதன்கிழமை சுகயீன விடுப்பு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தபால் மற்றும் விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்கள், மாகாண சபைகள், நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனர். சுமார் 600,000 பேர் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளதாக போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

வேலைநிறுத்தத்திற்கு சமாந்தரமாக கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் அன்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணிக்கு, கோவிட் தொற்றுநோய் காரணமாக, குறைந்தளவான மக்கள் அழைக்கப்பட்டிருந்ததாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பரதீப் பஸ்நாயக்க தெரிவித்தார். இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

8 டிசம்பர் 2021 அன்று, ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் கோரி, ஊதிய அதிகரிப்புக்கான தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் மறியலில் ஈடுபட்ட போது. (Photo: WSWS media)

'அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவால் உயர்த்துங்கள்!' அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தும் திட்டத்தை இரத்து செய்!' 'அரசு ஊழியர்களை நாட்டுக்கு சுமை என்ற அரசின் நிலைப்பாட்டை விலக்கிக்கொள்!', 'கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை ரத்து செய்!' போன்ற பதாதைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த வேலை நிறுத்தத்திற்கு ஊதிய உயர்வுக்கான தொழிற்சங்க கூட்டமைப்பு (ஊ.உ.தொ.கூ.) அழைப்பு விடுத்துள்ளது. தொழிற்சங்கமானது மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களின் கூட்டணியாகும். அபிவிருத்தி சேவை உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், இலங்கை விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கம், தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், இலங்கை கிராம சேவையாளர் சங்கம், இலங்கை அலுவலக கனிஷ்ட பணியாளர்கள் சங்கம் மற்றும் சுயாதீன துறைமுக ஊழியர்கள் உட்பட சுமார் 50 தொழிற்சங்கங்கள் இந்த கூட்டணியில் உள்ளன.

ரூபா 10,000 சம்பளக் கோரிக்கைக்கு மேலாக, அவர்களின் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள அரசின் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிப்பதை கைவிட வேண்டும், ஒய்வு வயதை 55 வயதாக மீண்டும் குறைக்க வேண்டும், ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளும் அடங்கும்.

புதன்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் அதே கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் நவம்பர் 29 முதல் டிசம்பர் 6 வரை மதிய உணவு நேரத்தில் நாடளாவிய ரீதியில் தங்கள் வேலைத் தளங்களுக்கு முன்னால் பிரச்சாரம் செய்தனர்.

பொது ஊழியர்களின் போராட்டத்திற்கு மேலதிகமாக, வடமேல் மாகாண சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நாளில், கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீதத்தை அமெரிக்க நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு எதிராகவும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிராகவும், இலங்கை மின்சார சபை, துறைமுகம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலியத் தொழிலாளர்கள் டிசம்பர் 08, 2021 அன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நடத்திய போராட்டம் (Photo: WSWS media)

‘யுகதனவி ஒப்பந்தத்தை வாபஸ் பெறு!’, ‘தேசிய வளங்களை விற்பதை நிறுத்து!’ என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். அதே வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மறியல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலியத் தொழிலாளர்கள் டிசம்பர் 8, 2021 அன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். (Photo: WSWS media)

அதனையடுத்து, தொழிற்சங்க தலைவர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். யுகதனவி உடன்படிக்கையை இரத்துச் செய்தல் மற்றும் தேசிய வளங்களை விற்பனை செய்வதை நிறுத்துதல் என்பனவே இந்த மனுவின் பிரதான கோரிக்கைகளாகும் என அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

“ரணுக்கின் சம்பளக் கமிட்டி அறிக்கையின்” பரிந்துரைகளை அமுல்படுத்துதல் மற்றும் முரண்பாடுகளை களைதல், சுகாதார நிபுணர்களுக்கான போக்குவரத்து மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை (DAT) 3,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக உயர்த்துதல், மேலதிக நேர கட்டணத்தை அடிப்படை சம்பளத்தில் 1/80 ஆக உயர்த்துதல், பதவி உயர்வுக்கான சுற்றறிக்கைகளை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடமேல் மாகாண சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மதிய உணவு நேரத்திலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தாதிகள், நிறைவுகாண் வைத்தியர்கள், குடும்ப சுகாதாரம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுமார் ஆயிரம் சுகாதார ஊழியர்கள் கலந்துகொண்டனர். இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார வல்லுநர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு முன்னெடுத்த நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் பாரதூரமான கொந்தளிப்பை இந்தப் போராட்டங்கள் காட்டுகின்றன. கடந்த பன்னிரெண்டு மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

100 நாள் அரசு ஆசிரியர்களின் போராட்டம்; கிட்டத்தட்ட 30 சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு; துறைமுகங்கள், மின்சார சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், தபால், இரயில் மற்றும் பிற பொதுத் துறைகளில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள்; பெருநதோட்டப் பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களும், அவற்றில் சில. கடந்த சில மாதங்களாக, கிராமப்புற ஏழை விவசாயிகள் உரம் மற்றும் இதர பயிர்ச்செய்கை வசதிகளை கோரி போராடி வருகின்றனர், பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி உரிமைக்காக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்ட அலையின் ஒரு பகுதியாகும்.

இந்த போராட்டங்கள் கோவிட்-19 தொற்றுநோயின் பரவல் மற்றும் இறப்புக்கு எதிராகவும், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் சுமையின் கீழ் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை நசுக்கப்படுவதற்கு எதிராகவும் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்கள், இராஜபக்ஷ அரசாங்கத்தாலும் முதலாளித்துவ கூட்டுத்தாபனங்களாலும் தூண்டிவிடப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக, ஒரு ஐக்கிய எதிர்ப்புப் போராட்டத்தை ஒழுங்கமைக்க பலம்வாய்ந்த முறையில் அழைப்பு விடுத்தன.

ஆனால் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தி, தொழிலாளர்களை பிளவுபடுத்துவதிலும் மற்றும் இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் முதலாளிமார் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற மாயையை பரப்பி, வெறும் எதிர்ப்புக்களுக்குள் சிறைப்படுத்தி தொழிலாளர்களை திசைதிருப்பி விடவே செயற்பட்டுள்ளன. இதன் விளைவாக காட்டிக்கொடுப்பின் மூலம் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

தொழிற்சங்கங்களின் இந்த நடவடிக்கை புதன்கிழமை அழைக்கப்பட்ட ஒவ்வொரு போராட்டத்திலும் தனித்து வெளிப்பட்டது.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பேரணியில் உரையாற்றிய ஜே.வி.பி தலைவரும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் அழைப்பாளருமான வசந்த சமரசிங்க, வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அரசாங்கம் சம்பளக் கோரிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் ஜனவரி மாதம் பாரிய போராட்டத்தை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

“இந்தக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இந்த அரசாங்கம் எடுத்துள்ள இந்த கேவலமான நடவடிக்கைக்கு எதிராக நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும், மாணவர் இயக்கமும், இந்நாட்டு விவசாயிகளும் ஒரு மாபெரும் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தான் ஒரு பாரிய போராட்டத்தை நடத்துவதாக சமரசிங்க கூக்குரலிடுவது வெறுமனே தொழிலாளர்களை தவறாக வழிநடத்தும் வாய்ச்சவடால் ஆகும். சமரசிங்கவும் ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் 10,000 ரூபா சம்பள உயர்வுக்காக பிரச்சாரம் செய்து, வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மறுநாள் முதல் 'பாரிய' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்த பின்னர், ஜே.வி.பி.இன் மற்றுமொரு தலைவரும், இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளருமான ரஞ்சன் ஜயலாலும், ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக செயலக அதிகாரிகள் உறுதியளித்ததாக கூறி பெருமிதம் கொண்டார். தீர்வு கிடைக்காவிடில் ’பாரிய’ போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்தார்.

இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் அடித்துக் கூறிக்கொண்டிருந்த போதிலும், இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் தேசிய அரசாங்க அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்கா, ’சம்பள கோரிக்கை சம்பந்தாமக கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் இன்னும் அவகாசம் வழங்கவில்லை’ என்று த மோர்னிங்க பத்திரிகைக்கு தெரிவித்த கருத்து ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

'அரச சேவை நாட்டுக்கு சுமை' என நிதியமைச்சர் பசில் இராஜபக்ஷ தெரிவித்துள்ள அதே வேளை, அரச ஊழியர்களின் சம்பளத்தை ஒரு வருடத்திற்கு அதிகரிக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார். இராஜபக்ஷ பொதுச் சேவையை 'நாட்டின் சுமை' என்று அழைத்தது, அதை வெட்டி சீர்குலைக்கும் நோக்கத்துடனேயே ஆகும்.

அரசாங்கம் தயாரிக்கும் தாக்குதல் கொள்கைக்கு எதிராக ஏனைய தொழிலாளர்களுடன் அரச ஊழியர்களை அணிதிரட்டுவதற்குப் பதிலாக, பஸ்நாயக்க மற்றும் ஏனைய அதிகாரத்துவத்தினர் இராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை திரும்பப் பெறவேண்டும்! என கோழைத்தனமாக கோரியுள்ளனர்.

அது மட்டுமா? 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்களுக்காக தற்போது வருடாந்தம் 1,000 பில்லியன் ரூபாவைச் செலவிடுவதாகவும், அரச ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகளை கொடுத்தால் மேலதிகமாக 324 பில்லியன் ரூபா செலவிடப்பட வேண்டி வரும் என்றும், இந்த சந்தர்ப்பத்தில் இது எந்த வகையிலும் சாத்தியமில்லை எனவும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பெருமுதலாளிகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாங்கம், உழைக்கும் மக்கள் மீது அனைத்து சுமைகளையும் சுமத்தும் கொள்கையை கடைபிடிப்பது தெளிவாகிறது. அந்தக் கொள்கையைத் தோற்கடிப்பதற்கு, அரசாங்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிரான அரசியல் போராட்டம் அவசியமாகும். முதலாளித்துவ அமைப்பு மற்றும் அரசுடன் பிணைந்துள்ள தொழிற்சங்கங்கள் அந்த அரசியல் போராட்டத்திற்கு விரோதமானவை ஆகும்.

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை முறையாக ஏற்பாடு செய்யவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 'தொழிற்சங்கங்கள் பெருந்தொகையில் உள்ளன, எல்லோரும் முன்னும் பின்னுமாக இழுக்கிறார்கள், உண்மையான போராட்டத்தை நடத்த முடியவில்லை. எங்களுடன் சுமார் ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள், அதில் ஒரு பகுதியினர் மட்டுமே சுகவீன விடுப்பு எடுத்தனர். மற்றவர்கள் வேலைக்கு வந்ததால் எப்படி வேலைநிறுத்தம் வெற்றி பெறும்? என்று கண்டியில் உள்ள விவசாயத் திணைக்களத்தின் தலைமை அலுவலக ஊழியர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்களிடம் கூறினார்.

தொழிலாளர்கள் போராட்டங்களில் சேர தயக்கம் காட்டுவது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நனவான செயலாகும்.

கண்டி தபால் நிலையத்தில் சுமார் 100 ஊழியர்கள் இருந்த போதிலும், 16 பேர் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

“நாங்கள் இலங்கை அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் அங்கத்தினர். தொழிற்சங்கங்கள் சோர்ந்து போயுள்ளன. UPTO வேலை நிறுத்தத்தில் பங்குபற்றவில்லை. வரவு-செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டதாக அவர் கூறினார்: 'இப்போது வாழ வழி இல்லை. எங்களால் குடும்பத்தை நடத்த முடியாது. விலைவாசி அதிகம் .அதனால் தான் போராட்டத்திற்கு வந்தோம். கோரிக்கைகளை ஏற்கும் வரை போராடுவோம்.’

’அரச சேவை நாட்டுக்கு சுமை' என நிதியமைச்சர் பசில் இராஜபக்ஷ கூறியதைக் கண்டித்து, இரண்டு அபிவிருத்தி அதிகாரிகள் கூறியதாவது: நாங்கள் கள அலுவலர்கள். கடமையில் இருக்கும் போது மக்களின் ஏழ்மையைக் காணும்போது, கடமைக்கு மேலதிகமாக எமது தனிப்பட்ட பணத்தில் அவர்களுக்கு உதவுகின்றோம். அரச ஊழியர்கள் தொற்றுநோய்களைக் கையாள்வதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.’

ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தி இருப்பது வாழ்க்கைத் திட்டங்களைத் குழப்பிவிடும் என்று அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஓய்வு பெற்றவர்களின் சம்பளத்தை அரசு குறைத்துள்ளதாகக் கூறிய ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர், ‘2016 முதல் 2019 வரை கடந்த அரசாங்கத்தால் உயர்த்தப்பட்ட 10,000 ரூபாவில் ஒரு பகுதியை பெறக்கூடியதாக இருந்தது. ஜனவரி 2020 இல், இந்த அரசாங்கம் எஞ்சியதை செலுத்துவதாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. பின்னர் அது இரத்து செய்யப்பட்டது. இதனால் சுமார் 15,000 ரூபாயை இழந்தோம்,'' என்றார்.

Loading