இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்த வாரம் இலங்கை முழுவதும் பத்தாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கோரியும் தமது ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். திங்கள் அன்று தொடங்கி தொடர்சியாக நடந்த இந்த தீவு தழுவிய நடவடிக்கையானது இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் அதிகரித்துவருகின்ற எதேச்சதிகாரத்திற்கும் எதிராக வளர்ச்சியடைகின்ற தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மற்றுமொரு சமிக்ஞை ஆகும்.
நவம்பர் 29 அன்று, அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி மற்றம் கிராம சேவகர்கள், மற்றும் அலுவலக உதவி ஊழிர்கள், அதே போன்று தபால் மற்றும் இறைவரி திணைக்கள ஊழியர்கள் உள்ளடங்களாக தொழிலாளர்கள் தத்தமது வேலைத் தளங்களிற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கொழும்பு தபால் பரிவர்த்தனை அலுவலகம், கண்டியில் உள்ள கல்வி அமைச்சு மற்றும் காலி நகரில் உள்ள இறை வரி திணைக்களத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
தொழிலாளர்கள் 10,000 ரூபா சம்பள உயர்வு கோரியதோடு ஓய்வு பெறும் வயதை 55 இல் இருந்து 65 ஆக உயர்த்தும் வரவு-செலவுத் திட்டங்களை கொழும்பு கைவிடவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர். மேலும் அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் அரச ஊழியர்கள் மீதான தடையை நிறுத்தவும் கோருகின்றனர்.
இந்த போராட்டத்தை அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் சங்கம், இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளடங்களாக 35 தொழிற் சங்கங்களின் கூட்டணியான இலங்கை அரச உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. சில உள்நாட்டு இறைவரி மற்றும் தபால் திணைக்கள தொழிற்சங்கங்களும் பங்கேற்றன.
மறுநாள், சுமார் 1,000 சுகாதார ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு மற்றும் ஏனைய கோரிக்கைகளை வலியுறுத்தி கொழும்பில் சுகாதார அமைச்சு அலுவலகம் வரை வாகனப் பேரணி ஒன்றை நடத்தினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஊழியர்கள் கடந்த மாதம் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். புதன் கிழமை அன்று, சுமார் 50 உதவிச் சுகாதார ஊழியர்கள் கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றய தினம் நாற்றுக்கணக்கான கல்வி சாரா ஊழியர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், பேராதணை மற்றும் மாத்தறை உட்பட இடங்களில் தத்தமது பல்கலைக்கழகங்களிற்கு முன்னால் போராட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கையில் 15 அரச நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
கடந்த மாதத் தொடக்கத்தில், அதாவது நவம்பர் 8, 9 ஆகிய தினங்களில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட புகையிரத நிலைய ஊழியர்கள், தனியார் துறைத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கத்தின் ஏனைய பிரிவினரும் வேலை நிறுத்தங்கள் மற்றும் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
அதிகரித்து வரும் விலையேற்றத்துடன் ஏறக்குறைய அனைத்து விலைக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் நீக்கியதனால் ஏற்பட்ட அத்தியவசியப் பொருட்களின் கூர்மையான விலை அதிகரிப்புக்கு வழியை திறந்து விட்டுள்ளது. இது வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு எழுச்சி அலைகளைத் தூண்டிவிட்டுள்ளன.
நவம்பரில், வருடாந்த அடிப்படையில் அளவிடப்பட்ட இலங்கையின் வருடாந்த பணவீக்க அளவானது 9.9 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இது 12 வருடங்களில் ஆகக்கூடிய பதிவு ஆகும். உணவு விலைவாசியானது அக்டோபரில் 12.8 சத வீதத்தில் இருந்து நவம்பரில் 17.5 சதவீதமாக அதிகரித்த அதே வேளை, இதே காலப் பகுதியில் உணவு-சாரா விலையேற்றமானது 5.4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த மாத வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்கத்தின் கோபத்தை கலைக்கும் ஒரு முயற்சியில், வெகுஜன போராட்டங்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் போன்றன, அரசாங்கத்தை சம்பள அதிகரிப்புகளை வழங்க கட்டாயப்படுத்தும் என பொய்யாகக் கூறின.
கோவிட்-19 தொற்று நோயால் பாரியளவில் மோசமாக்கப்பட்டுள்ள இலங்கையின் நீண்டகால பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்கக்கத்தின் மீது சுமத்துவதை நோக்கமாகக் கொண்ட இராஜபக்ஷவின் கொடூரமான சிக்கன வரவு-செலவு திட்டத்தினால், இந்த கட்டுக்கதைகள் சிதறடிக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 12 அன்று, நிதி அமைச்சர் பசில் இராஜபக்ஷ தனது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் “அரச துறை ஊழியர்களுக்காக பொதுப் பணத்தை [குறைந்தது ஒரு வருடத்திற்கு] ஒதுக்குவதற்கு எந்த வழியும் இல்லை” எனத் தெரிவித்தார்
இலங்கை அரச உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க சம்மேளனத் (SLPOTUF) தலைமைத்துவமானது அதன் அங்கத்தவர்களுக்கு 18,000 ரூபா மாதாந்த சம்பள உயர்வு கொடுக்குமாறு ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தது.
எவ்வாறாயினும், தொழிற்சங்க சம்மேளனமானது பின்னர் அதன் சம்பளக் கோரிக்கையை “அரசாங்கத்தின் நெருக்கடியை கருத்தில் கொண்டு“ 10,000 ரூபாவாக குறைத்ததோடு “நாங்கள் உங்கள் அக்கறைகளையும் அர்ப்பணிப்பையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக“ அடிமைத்தனமாக இராஜபக்ஷவிற்கு கூறியது.
பின்னர், SLPOTUF இன் தேசிய அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க, இந்தக் கடிதத்திற்கான எந்தவொரு பதிலும் சம்மேளனத்திற்கு கிடைக்கவில்லை என உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்த அதேவேளை, “அரச துறையானது இலங்கை பொருளாதாரத்தின் மீது தாங்க முடியாத சுமை, என்ற தனது நிலைப்பாட்டை விலக்கிக்கொள்ளுமாறு நிதி அமைச்சரிடம் பரிதாபகரமான வேண்டுகோளை விடுத்தது.
நிதி அமைச்சர் இராஜபக்ஷவின் “தாங்க முடியாத சுமை“ என்ற கருத்தானது அரச ஊழியர்கள் மீது அரசாங்கம் கொடூரமான வேலை-அழிப்புக்களையும் தனியார் மயமாக்கல் தாக்குதலையும் கட்டவிழ்த்துவிடும் என்பதற்கான ஒரு தெளிவான அறிகுறியாகும். இந்த தாக்குதலை பரிதாபகரமான தொழிற்சங்க வேண்டுகோள்களால் எதிர்த்துப் போராட முடியாது. மாறாக, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர்களின் அரசியல் மற்றும் தொழிற்துறை அணிதிரட்டலைத் தயாரிப்பதன் மூலமே எதிர்த்துப் போராட முடியும். இதற்கு SLPOTUF கடுமையாக எதிராக நிற்கின்றது. தீவு முழுவதிலும் உள்ள அவர்களது சகாக்களைப் போன்று சம்மேளனமானது தொழிலாளர்களை பயனற்ற போராட்டங்களுக்குள் திசைதிருப்பி விடவும், அரசாங்கத்துடன் பின்னர் அமுல்படுத்தப்பட உள்ள ஒரு அழுகிய ஒப்பந்தம் சம்பந்தமாக பேச்சுவார்தை மேற்கொள்ளவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
தனது கொள்கைளை எதிர்க்கத் துணியும் எந்தவொரு அரச ஊழியர் மீதும் ஜனநாயக-விரோத தடையையும் கடுமையான தண்டனைகளையும் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. கடந்த மாதம், பொது நிர்வாக அமைச்சு, அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக “ஒழுக்காற்று நடவடிக்கை“ எடுக்கப்படும் என அச்சுறுத்தி, அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் சுற்று நிரூபம் அனுப்பியது.
வியாழன் அன்று, சுகாதார தொழில்வல்லுனர் கூட்டமைப்பின் துணைச் செயலாளர் ரவி குமுதேஷ், அரச ஊழியர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காவும் முன்நிற்கின்ற எந்தவொரு சக்தியையும் நிபந்தனை இன்றி இணைப்பதற்கு தனது கூட்டணி தயாராக இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அந்த சக்திகள் யாராக இருக்கலாம் என்று குமுதேஷ் குறிப்பிடவில்லை, ஆனால் தொழிற்சங்கக் கூட்டின் கடந்த காலப் பதிவேடுகளில் சென்றால், இது சுகாதார ஊழியர்களை துரோகத்தனமாக பாராளுமன்ற முதலாளித்துவ எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற ஒரு முட்டுச்சந்து கூட்டணிக்குள் தள்ளும்.
நேற்றைய தினம், பல்கலைக்கழக கல்வி-சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு, அதன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது. அதை அது 'அமைதியான எதிர்ப்பு' என்று விவரித்ததோடு அதன் உறுப்பினர்களை அணிதிரட்டத் தவறியது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மதிய உணவு நேர ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தொழிற்சங்க கூட்டுத் தலைவர்களில் ஒருவர், அநீதி இழைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். “ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொள்வது ஆச்சரியமளிக்கிறது. பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு நாங்கள் தெரிவிக்கவில்லை” என்றும், “எங்களுக்கு அரசியல் சித்தாந்தங்கள் தேவையில்லை” என்றும் அவர் கூறினார்.
இலங்கை முதலாளித்துவத்தின் தொழில்துறை பொலிஸ் படையாகச் செயல்படும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் அதிகரித்து வரும் போர்க்குணத்தைப் பற்றி மேலும் மேலும் பதற்றமடைந்து, அதை நசுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இலங்கையின் அரச ஊழியர்கள் இந்த அமைப்புகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் வரை, அவர்களது சம்பளம், வேலைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது. தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முழு தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகப் போராட வேண்டும்.