இலங்கை ஆசிரியர் போராட்டத்தின் மூன்று மாத அனுபவம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கை பாடசாலை ஆசிரியர்கள் ஒழுக்கமான வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியம் கோரி முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தத்திற்கு மூன்று மாதங்கள் ஆகியுள்ள நேற்று, ஆசிரியர் சங்கத் தலைவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சம்பள கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் கோரிய சம்பள அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கான சிறு தொகையை இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் இராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். அவரின் கூற்றுப்படி, அதில் ஒரு பகுதி 2022 ஜனவரியிலும் மற்றொரு பகுதி 2023 ஆம் ஆண்டிலும் ஆசிரியர்களின் சம்பளத்தில் சேர்க்கப்படும். இதை ஆட்சேபிக்காத தொழிற்சங்க தலைவர்கள், இன்று தங்கள் இறுதி முடிவை அறிவிப்பதாக கூறுகிறார்கள்.

யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து சுமார் 250,000 அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தற்போது இலங்கையில் மிக நீண்ட வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அக்டோபர் 6, 2021 அன்று நுவரெலியாவில் ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (Photo credit: Facebook/Malayaga Kuruvi)

கடந்த மூன்று மாதங்களாக, ஆசிரியர்கள், தங்கள் ஊதியக் கோரிக்கைகளை, அரசாங்கம் இடைவிடாமல் நிராகரிப்பதையே கண்டனர். ஆசிரியர் சங்கங்களுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளிலும், 'தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரம் சரிந்துவிட்டதால், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது' என்று அரசாங்கம் கூறியது. 'ஷைலொக் போன்று இறைச்சி இறாத்தலைக்' கேட்க வேண்டாம் என்று அரசாங்க அதிகாரிகள் ஆசிரியர்களிடம் கூறினர்.

நான்கு நாட்களுக்கு முன்பு, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பாராளுமன்றத்தில் 2022 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஆசிரியர் சேவையில் ஊதிய சமத்துவமின்மை நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்றும் 'ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கவுள்ள சம்பள உயர்வு பற்றி பாராளுமன்றத்திற்கு தெரிவிப்பதன் மூலம் பாதீட்டு இரகசியங்களை வெளிப்படுத்தும் தவறை செய்வதற்கு தயாராக இல்லை” என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், ஆசிரியர்களின் சம்பளம் குறித்து வெளிப்படும் பாதீட்டு இரகசியத்தை அரசாங்கத்தின் இன்றைய முடிவு அம்பலப்படுத்துகிறது. 2022 பாதீட்டு ஒதுக்கீடுகளைக் சமிக்ஞை செய்யும் இந்த ஆண்டு ஒதுக்கீட்டு மசோதா, கல்விக்காக ஒரு பில்லியன் ரூபாய் என்ற அற்ப தொகையையே அதிகப்படியாக ஒதுக்கியுள்ளது. இது அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு கூட போதாது.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, அரசாங்க-சார்பு தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக தொடர்ந்து சதி செய்து வந்தார். அக்டோபர் 6 அன்று, நாடு முழுவதும் ஆசிரியர் போராட்டம் மீண்டும் தொடங்கிய அன்றே, அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்கும் கருங்காலி தொழிற்சங்கத் தலைவராக பேர்போன முருத்தெட்டுவே ஆனந்த என்ற பௌத்த பிக்கு, அனைத்து கட்சி மாநாடு ஒன்றை கூட்டினார். “ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், ஆசிரியர் பிரச்சினைகளில் தலையிடுவதே தனது நோக்கம்” என்று கூறினார். இந்த “தலையீட்டின்” ஒரே நோக்கம், ஆசிரியர்களின் போராட்டத்தை தகர்ப்பதே ஆகும்.

'பிள்ளைகளின் கல்வியை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் தயாரிப்புகளில் தலையிடாமல், 21 ஆம் தேதி வேலைக்குச் செல்லுமாறு' 11 ஆம் திகதி ஆனந்த ஆசிரியர்களை வலியுறுத்தினார்.

இந்த அனைத்து சூழ்ச்சிகளுக்கு மத்தியில், அரசாங்கம் ஆசிரியர்களின் மீது பெரும் அழுத்தத்தை கட்டவிழ்த்துவிட பொலிஸ் வழிமுறைகளைப் பயன்படுத்தியது. வேலைநிறுத்தம் செய்யும் அனைத்து ஆசிரியர்களையும் மிரட்டுவதற்காக, முந்தைய போராட்டங்களில் ஈடுபட்ட டசின் கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலும் சில ஆசிரியர்கள் பொலிஸ் குற்றவியல் விசாரணை பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, 'பயங்கரவாதத்தை அழித்தது போல் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்குவதாக' அச்சுறுத்தியுள்ளார். ஆசிரியர்களின் போராட்டம் சம்பந்தமான அரசாங்கத்தின் தற்போதைய எதிர்வினையை 'மெனமையானதாக' இருப்பதால் எதிர்காலத்தில் 'பாரதூரமான நடவடிக்கை' எடுப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். முதலாளித்துவ ஊடகங்களுடன் இணைந்து செயல்படும் அரசாங்கம், எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஆசிரியர்களின் ஊதிய கோரிக்கை 'நியாயமற்றது' என்றும், வேலைநிறுத்தம் காரணமாக பிள்ளைகளின் கல்வி பொறிந்துபோயுள்ளதாகவும்” பொய்யாக கூறி, ஆசிரியர்களுக்கு எதிராக ஒரு பொது உணர்வைத் தூண்டிவிடவும் முயல்கிறது.

இவ்வளவு பெரிய அளவிலான தாக்குதலுக்கு அரசாங்கம் தயாராகும் போது, இலங்கை ஆசிரியர் சங்கம் (இ.ஆ.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (இ.ஆ.சே.ச.) மற்றும் போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) தலைமையிலான ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கம் (ஒ.ஆ.சே.ச.) ஆகியவற்றினால் பிரதானமாக தலைமை வகிக்கப்படும் ஆசிரியர், அதிபர்கள் தொழிறசங்க கூட்டணியானது அரசாங்கத்திடம் ஏதாவதொரு நிவாரணத்தைக் கோரி, பல சுற்றுப் பேச்சுக்களுக்கு ஊர்ந்து சென்றன.

முதல் கலந்துரையாடலிலேயே, “பொருளாதாரம் பலவீனமாக உள்ள காராணத்தால் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பணம் இல்லை” என்ற பிரதமரின் கூற்றை தொழிற்சங்க தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன்படி, அவர்கள் அரசாங்கம் முன்மொழிந்த அற்பத் தொகை ஊதிய உயர்வை ஏற்றுக்கொண்டு, ஆசிரியர்களின் எதிர்ப்பைத் தவிர்ப்பதற்காக, ஊதிய உயர்வை தவணையாக செலுத்தாமல் ஒரேமுறையில் அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொண்டனர்.

தொழிற்சங்கங்களின் துரோகத்தின் உதவியை கொண்ட தற்போதைய இராஜபக்ச ஆட்சி உட்பட அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், கடந்த 24 ஆண்டுகளாக ஆசிரியர் ஊதியக் கோரிக்கைகளை நிராகரித்து வந்துள்ளன. இதன் விளைவாக, இலங்கை ஆசிரியர்கள், நாட்டில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் அரசாங்க ஊழியர்களில் ஒருவராக உள்ளனர். இம்முறையும் தொழிற்சங்கங்கள் முன்பு போலவே காட்டிக்கொடுக்கத் தயாராகி வருகின்றன.

ஒழுக்கமாக வாழ ஆசிரியர்கள் ஒழுக்கமான ஊதியத்திற்காகப் போராடுகையில், தனது பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது சுமத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் ஒட்டுமொத்த தாக்குதல் கொள்கைக்கு எதிரானதாக இந்தப் போராட்டம் இருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த கொள்கையின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அனைத்து அமைச்சுக்களுக்கும், ஊதியங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகைகள் உட்பட செலவினங்களைக் குறைக்கவும், புதிய ஆள்சேர்ப்புகளைத் தடை செய்யவும் அறிவுறுத்தியுள்ள அதே நேரம், அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் வேலை செய்வதற்கான 7,500 ரூபா மாதாந்திர கொடுப்பனவை வெட்டுவதற்கு எதிராக, சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்கள், மேலதிக நேர வேலை ஊதியக் குறைப்புக்கு எதிராக பெட்ரோலியத் தொழிலாளர்களின் போராட்டங்கள், சம்பள வட்டு மற்றும் வேலை வேப்படுத்தலுக்கு எதிரான தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் தாங்கமுடியாத வாழ்க்கை செலவுக்கு எதிரான வெகுஜன போராட்டங்களும் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இது இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட போக்கு அல்ல. தொற்றுநோயால் ஆழமடைந்துள்ள உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பரந்த சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அதே வேளை, அவற்றுக்கு எதிராக வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பை நசுக்குவதற்கு, அதிக சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கமும், அவசர கால நிலை பிரகடனம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவை ஆணைகள் போன்ற வர்க்கப் போர் நடவடிக்கைகள் மூலம் அதே திசையில் முன்நகர்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழு மட்டுமே, ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை சூழ ஏனைய தொழிலாளர்களின் ஆதரவை திரட்டிக்கொண்டு ஒட்டுமொத்த முதலாளித்துவ முறைமைக்கு எதிராக. ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் அடக்குமுறையை தோற்கடித்து தங்களது கோரிக்கைகளை வெல்லக்கூடிய ஒரே வழி என்று தொழிலாளர்களுக்கு விளக்கியது.

அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையின் திவால்நிலையையும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டத்தின் சரியான தன்மையும் கடந்த மூன்று மாதங்களில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர் போராட்டத்தின் தொடக்கத்தில், ஜூலை 26 அன்று ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி:

உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து பாயும் இந்த தாக்குதல்களுக்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் முழு முதலாளித்துவ முறைமைக்கும் எதிரான அரசியல் போராட்டம் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டமான இதற்கு இந்த தொழிற்சங்கங்கள் முற்றிலும் எதிரானவை ஆகும். ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை சங்கங்களின் கைகளில் விட்டுவைக்க அனுமதிக்க கூடாது. அவர் அதை உடனடியாக தங்களது கைகளில் எடுக்க வேண்டும். இதற்காக, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான புதிய அமைப்பு வடிவங்களாக, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழுக்களை உருவாக்குவது அவசியம் ஆகும்.

ஒவ்வொரு பாடசாலை சூழலிலும் இதுபோன்ற குழுக்களை அமைக்க அனைத்து ஆசிரியர்களும் முன்வர வேண்டும். அந்த குழுக்களை சூழ இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாக்க அக்கறை கொண்ட மக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய தொழிலாள வர்க்க ஒடுக்கப்பட்டவர்களை அணிதிரட்ட போராடுமாறு நாங்கள் அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த அடிப்படையில், ஆசிரியர்கள் மத்தியில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதிலும், உலக சோசலிச வலைத் தளத்தில் அவர்களது கருத்துக்களை விரிவாக பிரசுரித்து, அந்த எதிர்ப்பிற்கு ஒரு வெளிப்பாட்டை வழங்குவதிலும், ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழுவில் புதிய அங்கத்தவர்களாக இந்தப் போராட்டத்தின் முன்னேறிய பிரிவினரை இணைத்துக்கொள்வதிலும், வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களில் கணிசமான எண்ணிக்கையினரின் பங்குபற்றலுடன் ஒரு வெற்றிகரமான கூட்டத்தை நடத்துவதிலும் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழு வெற்றி கண்டது.

அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் அடக்குமுறையின் உண்மையான ஆபத்தை தொழிற்சங்கங்கள் குறைத்து மதிப்பிட்டு வருகின்ற அதே வேளை, அரசாங்கத்தின் தாக்குதல்களை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழு, ஆசிரியர்களின் போராட்டத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று ஏனைய தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. அந்த ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் ஒரு பகுதியாக, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள் நடவடிக்கை குழுவுடன் ஒரு கூட்டத்தில் பங்குபற்றி ஒரு கூட்டுப் போராட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியத்தை கலந்துரையாடினர்.

இத்தகைய ஒன்றிணைந்த போராட்டத்தில், சலுகைகளை வெல்வதற்காக முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிதிலாக, தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்டி, முதலாளித்துவ முறைமையை தூக்கியெந்து அனைத்துலக சோசலிசத்துக்கான வேலைத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்கும் முன்நோக்கிற்காக தொழிலாளர்கள் போராட வேண்டும்.

Loading