ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்ததில் 27 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை, பிரான்சின் துறைமுக நகரமான கலேக்கு அருகே உள்ள ஆங்கில கால்வாயில் மோசமான கடற்பகுதியில் ஒரு காற்றடைக்கப்பட்ட இரப்பர் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை முதலில் 31 என அறிவிக்கப்பட்டது, என்றாலும் வியாழனன்று காலை பிரெஞ்சு அரசாங்கத்தால் அது 27 ஆக குறைக்கப்பட்டது.

இந்த சோக சம்பவம் புதன்கிழமை பிற்பகலில் நடந்துள்ளது, அப்போது கடலில் உடல்கள் அசையாமல் மிதப்பதைப் பார்த்ததாக பிரான்ஸ் மீனவர்கள் தெரிவித்தனர். ஸ்கை நியூஸ், “மீனவர் நிக்கோலஸ் மார்க்கோல், இரண்டு சிறிய இரப்பர் படகுகளைப் பார்த்ததாக கூறினார், அதில் ஒன்றில் ஆட்கள் இருந்ததாகவும் மற்றொன்று காலியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். காலியான படகையும், 15 பேர் தண்ணீரில் அசையாமல் மிதப்பதையும் கண்டு மற்றொரு மீனவர் மீட்புப் பணியாளர்களை அழைத்ததாக அவர் கூறினார்” என்று தெரிவித்தது.

பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன், படகில் 34 பேர் இருந்ததாக தெரிவித்தார். “இறந்த 31 பேரில், எங்களுக்குத் தெரிந்தவரை, ஐந்து பெண்களும் ஒரு சிறுமியும் இருந்தனர்” என்றும் கூறினார். இரண்டு பேர் மீட்கப்பட்டனர், மேலும் ஒருவரைக் காணவில்லை. இரண்டு தப்பிப்பிழைத்தவர்கள் பற்றி டார்மனன், “இருவர் தப்பிப் பிழைத்துள்ளனர்… என்றாலும் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். காரணம் அவர்கள் கடுமையான தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார். மேலும் அவர், புலம்பெயர்ந்தோர் இருந்த ஊதப்பட்ட படகு 'மிகவும் உடையக்கூடியது... உங்கள் கொல்லைப்புறத்தில் நீங்கள் ஊதி பயன்படுத்தும் நீச்சல் குளம் போன்றது' என்று விவரித்தார்.

நவம்பர் 24, 2021, புதன்கிழமை, வடக்கு பிரான்சில் உள்ள துறைமுக நகரம் கலேயில் மீட்புப் பணியாளர்களின் வேன் ஒன்று வந்து சேர்ந்தது. பிரிட்டனுக்கு பயணித்த குறைந்தது 27 புலம்பெயர்ந்தோர் புதன்கிழமை ஆங்கில கால்வாயில் படகு மூழ்கியதால் உயிரிழந்தனர். (AP Photo/Michel Spingler) [AP Photo/Michel Spingler]

2014 ஆம் ஆண்டு முதல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதில் இருந்து, இப்போது நிகழ்ந்துள்ள மரணங்கள் கால்வாயில் ஒரே நேரத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய உயிரிழப்பாகும் என்று புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு கூறியது.

இந்த இறப்புகளுக்கான பொறுப்பு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆகியோரின் அரசாங்கங்களையே சாரும். ஏகாதிபத்திய போர்கள் மற்றும் பயங்கரமான கஷ்டங்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர் புலம்பெயர்ந்தோர் இலண்டன், பாரிஸ் மற்றும் அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களாலும் திட்டமிட்ட முறையில் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த ஆண்டு, 25,700 க்கும் அதிகமானோர் சிறிய படகுகள் மற்றும் காற்றடைக்கப்பட்ட இரப்பர் படகுகளில் உலகின் பரபரப்பான கடல்வழியான இந்த கால்வாய் வழியாக இங்கிலாந்துக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இது, 300 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்பாகும். புதன்கிழமை நிலவரப்படி, சுமார் 25 குறுக்குவழிகளால் முயற்சிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபரில் கால்வாயில் நடந்த ஒரே சம்பவத்தில் ஐந்து குர்திஷ்-ஈரானிய புலம்பெயர்ந்தோர் தண்ணீரில் மூழ்கி இறந்துபோனதான முன்னைய உச்சபட்ச இறப்புக்களை விட இப்போது ஏற்பட்டுள்ள உயிர் சேதத்தின் அளவு உண்மையில் மிக அதிகமாகும். 27 இறப்புகள் என்பது, பிரான்சில் இருந்து கால்வாயை கடக்க முயன்று இந்த ஆண்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஐ விட இருமடங்கு அதிகமாகும்.

செப்டம்பர் 16, 2021, வியாழக்கிழமை, இங்கிலாந்தின் டோவர் துறைமுகத்தில் உள்ள ஆங்கில கால்வாயில் ஒரு சிறிய இரப்பர் படகிலிருந்து மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்களாக கருதப்பட்ட நபர்கள் பிரிட்டிஷ் எல்லை ரோந்து படையின் படகிலிருந்து இறங்குகின்றனர். (AP Photo/Alastair Grant) [AP Photo/Alastair Grant]

இலண்டனும் பாரிஸும், இந்த மரணங்களுக்கு மக்கள் கடத்தல்காரர்களே பொறுப்பாளிகளாவர் என்றும், குடியேற்றத்தை கடுமையாகக் கட்டுப்படுத்துவது மட்டுமே இதற்கான பதில் என்றும் வலியுறுத்துகின்றன.

டார்மனன் கலேயில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்த மரணங்கள் “நாம் பார்த்த மிகப்பெரிய (புலம்பெயர்வு) சோகமாகும்” என்று உறுதிப்படுத்தினார், அதற்கு முன்னதாக “கடத்தல்காரர்களால் மக்கள் கடலில் மூழ்கி அழிந்து போவது பிரான்சிற்கும், ஐரோப்பாவிற்கும் மற்றும் மனிதகுலத்திற்கும் ஒரு மிரளவைக்கும் சூழ்நிலையாகும்” என்று அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இன்று நீரில் மூழ்கியவர்களுடன் தொடர்புடைய நான்கு பேர் உட்பட, சுமார் 1,500 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் பெருமை பீற்றிக் கொண்டார்.

இதற்கு “பொறுப்பானவர்களைக் கண்டுபிடித்து கண்டிக்க” உறுதியளித்ததற்கு முன்னதாக “கால்வாயை கல்லறையாக மாற்றுவதை பிரான்ஸ் அனுமதிக்காது,” என்று ஜனாதிபதி மக்ரோன் கூறினார், மேலும் “குடியேற்ற சவால் சம்பந்தப்பட்ட ஐரோப்பிய மந்திரிகளின் அவசர கூட்டத்திற்கு” அழைப்பு விடுக்க வேண்டும்' என்றும் உறுதியளித்தார்.

பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸூம், இறந்தவர்கள் “குற்றவியல் கடத்தல்காரர்களால்” பாதிக்கப்பட்டவர்கள் என்று வலியுறுத்தினார்.

புதன்கிழமை பிற்பகல், பிரதமர் ஜோன்சன், அரசாங்கத்தின் அவசரகால கோப்ரா குழுவின் கூட்டத்தை நடத்தினார். அதன்பின்னர் ஜோன்சன் “கால்வாய் பகுதியில் கடலில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் அதிர்ச்சியும், திகைப்பும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன்… என்றாலும் இவ்வாறாக கால்வாயைக் கடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தப் பேரழிவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

“குண்டர் கும்பலை,” தடுக்க மேலதிக நடவடிக்கை தேவை என்றும், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை “எங்களின் சில கூட்டாளர்களை, குறிப்பாக பிரெஞ்சுகாரர்களை, சூழ்நிலைக்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள் நினைக்கும் விதத்தில் எடுக்க வற்புறுத்துவதில் எங்களுக்கு சிரமங்கள் உள்ளன. கடற்கரைகளில் ரோந்து செல்ல உதவுவதற்கு இங்கிலாந்திலிருந்து 54 மில்லியன் பவுண்டுகள் நிதி வழங்கப்பட்டு, எங்கள் நண்பர்களால் கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்கு அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம், ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து போதுமான உதவிகள் கிடைப்பதில்லை” என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தின் மூலம் கடுமையான குடியேற்ற எதிர்ப்புச் சட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதற்கு இந்த சோகமான மரணங்களை அரசாங்கம் பயன்படுத்தும் என்பதை அவர் தெளிவுபடுத்தியதுடன், “நமது எல்லைகள் மற்றும் தேசியங்கள் மசோதாவில் அடங்கியுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முடிந்தளவிற்கு விரைவுபடுத்துவது மிகவும் முக்கியமாகும் என்பதால்தான், சட்டபூர்வமாக இங்கு வருபவர்களையும், சட்டவிரோதமாக இங்கு வருபவர்களையும் நாம் வேறுபடுத்துகிறோம்” என்று கூறினார். கால்வாய் வழியாக இங்கிலாந்திற்குள் நுழைய முனையும் புலம்பெயர்வோரையும் மற்றும் புகலிடம் கோருபவர்களையும் இந்த சட்டம் திறம்பட குற்றவாளியாக்குகிறது.

சட்டத்தை இயற்றுபவரான உள்துறை செயலர் பிரீதி பட்டேல், இந்த மரணங்கள் “இரக்கமற்ற குற்றவியல் கும்பல்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த கால்வாய் கடப்புக்களில் உள்ள ஆபத்துக்களை பகிரங்கமாக நினைவூட்டுவதாக உள்ளன. அதனால்தான் இந்த அரசாங்கத்தின் குடியேற்றத்திற்கான புதிய திட்டம் நமது உடைந்த புகலிட அமைப்பை மாற்றியமைக்கும் என்பதுடன், பிரான்சில் இருந்து இங்கிலாந்திற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள புலம்பெயர்ந்தோரை ஊக்குவிப்பதான பல நீண்டகால காரணிகளுக்கான தீர்வையும் காணும்” என்று கூறினார்.

தேசியம் மற்றும் எல்லைகள் மசோதாவானது, “இங்கிலாந்தில் இதுவரை கண்டிராத வகையிலான சர்வதேச அகதிகள் சட்டத்தின் மீதான மிகப்பெரிய சட்டரீதியான தாக்குதலாகும்” என்று சித்திரவதையிலிருந்து விடுதலை என்ற அமைப்பால் (Freedom from Torture Organization) விவரிக்கப்படுகிறது.

“எதிர்நீச்சல் போட்டு செயற்பட” “பிரான்சுடன் போதுமான வலுவான ஒப்பந்தங்களை” மேற்கொள்ளாமல் “எதுவும் நடக்காது” என்று பட்டேலை கண்டித்த சர் கெய்ர் ஸ்டார்மரால் உருவகப்படுத்தப்பட்ட எதிர்க் கட்சியான தொழிற் கட்சி அடிப்படையில் டோரிக்களிலிருந்து வேறுபட்டதில்லை.

நிழல் உள்துறைச் செயலர் நிக் தோமஸ்-சைமண்ட்ஸ் புதன்கிழமை சம்பவம் குறித்து BBC உடன் பேசுகையில், “அந்தக் கடற்கரை பகுதி முழுவதும் ரோந்து செல்ல முடியும் என்று நினைப்பது உண்மைக்குப் புறம்பானதே. கடற்கரை விவகாரத்தில் இருந்து விலகி நடைமுறைச் சட்ட அமலாக்க நடவடிக்கைகளையும் நாம் பார்க்க வேண்டும் [புலம்பெயர்ந்தோரை] கரையோரத்தில் மேலும் சீர்குலைக்க பிரெஞ்சு அதிகாரிகளுடன் இந்த பரந்த கூட்டுச் சட்ட அமலாக்கப் பணி எங்களுக்குத் தேவை' என்று தெரிவித்தார்.

இதற்கு நேர்மாறாக, குடிபெயர்ந்தோர் தொண்டு நிறுவனங்கள், ஜோன்சன், மக்ரோன் மற்றும் அவர்களது ஐரோப்பிய சகாக்கள் மீதான நேரடி பழியைச் சுட்டிக்காட்டின.

புலம்பெயர்ந்தோர் நலனுக்கான கூட்டுக் குழுவைச் சேர்ந்த ஜோ கார்டனர், “புலம்பெயர்பவர்கள் அவர்கள் சென்றடையும் முதல் நாட்டிலேயே புகலிடம் கோர வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக அப்படியில்லை, இல்லையெனில் எவரும் இங்கிலாந்தில் பாதுகாப்பைத் தேட மாட்டார்கள்” என்று BBC இடம் தெரிவித்தார்.

இங்கிலாந்து “தற்போது செய்வதை விட இன்னும் ஏராளமான அகதிகளுக்கு பாதுகாப்பை வழங்க முடியும். நாம் பிரான்சிற்கு சற்று மேற்கில் இருப்பதால், அனைவரும் பிரான்சில் தங்கியிருக்க நினைத்தால், அப்போது பிரான்சும் இத்தாலிக்கு இதையே சொல்லலாம், அடுத்து இத்தாலியும் லிபியாவிடம் இதையே சொல்லலாம், மேலும் இறுதியில், ஒட்டுமொத்த சர்வதேச அகதிகள் பாதுகாப்பு பரிபாலனமும் சிதைந்துபோகும்.”

நவம்பர் 24, 2021, புதன்கிழமை, வடக்கு பிரான்சின் கலே துறைமுகத்திற்கு வெளியே, புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் சங்கங்களின் ஆர்வலர்களும் உறுப்பினர்களும் சுவரொட்டிகளுடன் கூடினர். அவர்கள் “உங்களுக்கு எத்தனை சாவுகள் வேண்டும்?” என்ற பதாகைகளை ஏந்தியிருப்பதுடன், “கலே: மனித உரிமைகள் மீறப்பட்டது, உடைக்கப்பட்டது, தியாகம் செய்யப்பட்டது” என்றும் அறிவிக்கின்றனர்

Safe Passage International அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி பெத் கார்டினர்-ஸ்மித், பட்டேல் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், ஜோன்சன் மேலும் உயிர்சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். “கடந்த ஆண்டு, இங்கிலாந்துக்கு செல்லக்கூடிய பாதுகாப்பான வழிகளை அரசாங்கம் மூடியதிலிருந்து, ஏராளமான மக்கள் சிறிய, நிலையற்ற படகுகளில் கால்வாயை கடந்து செல்கையில் உறைபனி மற்றும் அச்சுறுத்தும் பயணத்தின் ஆபத்தை எதிர்கொள்கின்றனர்” என்றும் கூறினார்.

Care4Calais அமைப்பின் ஸ்தாபகர் கிளேர் மோஸ்லி (Clare Moseley) உம் மக்கள் தஞ்சம் கோருவதற்கு “பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான” வழியை உருவாக்குவதில் அரசாங்கத்தின் கவனம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “கடத்தல்காரர்கள் ஒரு அறிகுறியே தவிர, பிரச்சினைக்கான காரணம் அவர்கள் அல்ல” என்று ஸ்கை நியூஸிடம் கூறினார். “அவர்கள் இங்கிலாந்தில் புகலிடம் கோர வேண்டுமானால், அவர்கள் நேரடியாக இங்கு ஆஜராக வேண்டும், ஆனால் அவர்கள் இங்கு வருவதற்கு வழி இல்லை என்பதுதான் அடிப்படை பிரச்சினையாக உள்ளது என்பதே உண்மை. அதனால்தான் அவர்கள் சிறிய படகுகளில் ஏறுகிறார்கள்” என்றும் கூறினார்.

Loading