ஆப்கான் அகதிகளுக்காக மத்திய ஆசியா முழுவதும் தடுப்பு முகாம்களை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கைப்பாவை ஆட்சி அவமானகரமாக வீழ்ச்சியடைந்ததன் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கு பயணிக்கின்றனர். ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸூம் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் இந்த பிராந்தியம் எங்கிலும் அதிகாரிகளை சந்தித்ததால், அந்த பகுதிக்கு செலவு செய்ய 1 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கீடு செய்கிறது.

இந்த தலையீடு ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி குறித்த ஐரோப்பிய ஒன்றிய சக்திகளின் அறிக்கைகளின் போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறது. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதற்கு வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய சக்திகளுக்கும் உதவிய ஆப்கானியர்களை காபூல் விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு தாலிபான்களை அமெரிக்க ஊடகங்கள் கோருவதையே இவையும் எதிரொலிக்கின்றன. இருப்பினும் இவை, ஆப்கானியர்களின் சுதந்திரமான இயக்கத்திற்கு பாதுகாவலர்களாக தம்மை காட்டிக் கொள்ளும் அதேவேளை, ஆப்கானியர்களை சிறைப்பிடித்து அவர்களை ஐரோப்பாவில் தஞ்சம் புக விடாமல் தடுக்க, ஈரான், பாகிஸ்தான், துருக்கி மேலும் அவற்றுக்கு அப்பால் மத்திய ஆசியா எங்கிலும் தடுப்பு முகாம்களை அமைக்க பாடுபடுகின்றன.

ஆகஸ்ட் 31, 2021 செவ்வாய்க்கிழமை இத்தாலியின் அவெசானோவில் உள்ள இத்தாலிய செஞ்சிலுவை சங்க அகதிகள் முகாமில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் (AP Photo/Andrew Medichini)

அருகாமை நாடுகளில் அகதிகளை தங்க வைக்க தடுப்பு முகாம்களை கட்டமைப்பது என்பது புரூசெல்ஸ்ஸில் திங்கட்கிழமை இரவு நடந்த ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்களின் சிறப்பு கூட்டத்தின் விவாதப் பொருளாக இருந்தது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய மாதிரி தடுப்பு முகாம்கள், 2011 முதல் சிரியா மற்றும் லிபியாவில் நடந்த நேட்டோ போர்களில் இருந்து தப்பியோடிய மில்லியன் கணக்கான அகதிகளை அடைத்து வைக்க மத்தியதரைக் கடலில் கட்டமைக்கபட்ட அகதிகள் முகாம்களின் பரந்த வலையமைப்பாகும். கிரேக்கத்தில் மோரியா மற்றும் ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகள் போல ஐரோப்பாவில் உள்ள மோசமான தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நூறாயிரக்கணக்கான அகதிகள் தவிர, துருக்கியில் 3.7 மில்லியன், லெபனானில் 1.5 மில்லியன் மற்றும் ஜோர்டானில் 1.3 மில்லியன் என்ற எண்ணிக்கைகளில் அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக லிபியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி முகாம்கள், அகதிகளை அடித்து துன்புறுத்துதல், பாலியல் வன்கொடுமை செய்தல், கொலை செய்தல் அல்லது அவர்களை அடிமைகளாக விற்றுவிடுதல் ஆகிய கொடுமைகளுக்கு இழிபுகழ் பெற்றவையாகும்.

ஆப்கானிஸ்தான் அகதிகளை தடுத்து வைத்திருக்கும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் முகாம்களை பராமரிப்பதற்கும் மற்றும் அந்நாடுகளுடன் நல்லுறவுகளைப் பேணுவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்களின் உச்சிமாநாடு 600 மில்லியன் யூரோக்களை ஒதுக்கீடு செய்தது. 2015 ஆம் ஆண்டில், துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், துருக்கியில் இருந்து சுமார் 1 மில்லியன் அகதிகள் ஐரோப்பாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த வாரம் புரூசெல்ஸ் மாநாட்டில், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தவிர்ப்பதும், ஆப்கானிஸ்தான் அகதிகள் ஐரோப்பாவிற்கு வருவதை தடுப்பதும் தான் அமைச்சர்களின் குறிக்கோள்களாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு வந்த ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் ஸீஹோஃபர், “இராஜதந்திர முயற்சிகளை துரிதப்படுத்த இது மிகவும் அவசியமாகும். அருகாமை நாடுகள் ஆப்கான் அகதிகளை ஏற்றுக்கொண்டால், அவற்றிற்கு வலுவான ஆதரவளிக்க அரசியல் ரீதியாக இப்போது நாம் ஒப்புக்கொள்வதற்கு ஐரோப்பிய ஆணையத்தின் உதவியை நான் எதிர்பார்க்கிறேன். … நாம் விரைந்து செயல்பட்டால், 2015 நிலைமையை நாம் மீண்டும் உருவாக்க மாட்டோம்.” என்று அறிவித்தார்.

இதேபோல, ஆஸ்திரிய, டேனிஷ் மற்றும் செக் உள்துறை அமைச்சர்களும் கூட்டத்திற்கு முன் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அவர்கள் இவ்வாறு அறிவித்தனர்: “தற்போது மிக முக்கியமான விடயம் என்னவென்றால், அந்த பிராந்தியத்திற்கு சரியான செய்தி அனுப்பப்பட வேண்டும்: அதாவது மக்கள் அங்கேயே இருக்கட்டும், மக்களுக்கு உதவ அவர்களை ஆதரிக்கும் பிராந்தியத்தை நாங்கள் ஆதரிப்போம்.”

உச்சிமாநாடு “ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்த அறிக்கையை” வெளியிட்டது. இது, “கற்றுக்கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் கடந்த காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட கட்டுப்பாடற்ற பெரிய அளவிலான சட்டவிரோத குடியேற்ற நகர்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க கூட்டாக செயல்பட உறுதியாக உள்ளன.” என்று தெரிவித்தது. மேலும், ஈரான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் துருக்கி போன்ற அருகிலுள்ள நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பு முகாம்களை நடத்துவதை எளிதாக்க இராஜதந்திர, கட்டமைப்பு மற்றும் காவல் சார்ந்த முன்முயற்சிகளை எடுக்க இது முன்மொழிந்தது.

“அந்த பிராந்தியத்தில் தேவைப்படுபவர்களுக்கு முதன்மையாக போதுமான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய ஆப்கானிஸ்தானின் மிக அருகாமை நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஆதரவை வலுப்படுத்த வேண்டும். இதற்கு ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த வெளிப்புற மற்றும் உட்புற தகவல் பரிமாற்றம் முக்கியம். ஐரோப்பாவை நோக்கி ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான பயணங்களை மேற்கொள்ள மக்களை ஊக்குவிப்பதான, இணையவழி சூழல் உட்பட, கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் கட்டுக்கதைகளை எதிர்கொள்ள இலக்கு வைக்கப்பட்ட தகவல் பிரச்சாரங்கள் தொடங்கப்பட வேண்டும்.” என்றும் இது தெரிவித்தது.

இந்த அறிக்கை, “எல்லை பாதுகாப்பு திறனை வலுப்படுத்த” மத்திய ஆசிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி வழங்குவது மற்றும் “அடைக்கலம் வழங்கும் திறனை வளர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய வெளிப்புற நடவடிக்கைகளை” துரிதப்படுத்துவது பற்றி மேம்போக்காக குறிப்பிடுகிறது. இந்த இடக்கரடக்கல்களை நீக்குவதாக, நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான மக்களை அடைத்து வைத்திருக்கும் எல்லைக் காவல் அமைப்புகள் மற்றும் சிறை முகாம்களின் கண்ட அளவிலான வலையமைப்பிற்கு நிதியளிக்கும் மற்றும் மேற்பார்வையிடும் திட்டங்கள் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் துணைத் தலைவர் மார்கரிடிஸ் ஷினாஸ் (Margaritis Schinas) அத்தகைய திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் போதுமான நிதியை வழங்கும் என பைனான்சியல் டைம்ஸிடம் பெருமை பீற்றினார். “நாங்கள் வரவு-செலவுத் திட்ட சுழற்சியின் தொடக்கத்தில் இருக்கிறோம், 2015 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல, ஏராளமான அகதிகளை இப்போது நாம் அகற்றவில்லை. எனவே, பணம் பிரச்சினையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.” என்றும் கூறினார்.

ஒரே இரவில் அமெரிக்க கைப்பாவை அரசாங்கம் வீழ்ச்சியடைந்தமை, ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால நேட்டோ போரின் தோல்வியையும், 1991 இல் நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்கான ஏகாதிபத்திய சக்திகளின் பதிலிறுப்பின் தோல்வியையும் அம்பலப்படுத்தியுள்ளது. வாஷிங்டன் அதன் விரைந்து வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தை சமன்செய்ய, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் உள்ள நாடுகளை ஆக்கிரமிப்பதற்கு தனது இராணுவ மேலாதிக்கத்தை 30 ஆண்டுகளாக பயன்படுத்த முனைந்தது. மில்லியன் கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டு, டிரில்லியன் கணக்கான டாலர்கள் வீணடிக்கப்பட்ட போதிலும், இந்த போர்களால் 82.4 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவானதால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னைய மிகப்பெரிய அகதிகள் நெருக்கடிக்கு அவை வழிவகுத்தன.

இந்த காலகட்டத்தில் அதிலும் குறிப்பாக, லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோ சக்திகள் தங்கள் பினாமிகளாக பயன்படுத்திய இஸ்லாமிய வலையமைப்புக்கள் ஐரோப்பா முழுவதும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மத்தியில் உருவானதான 2015 ஆம் ஆண்டு அகதிகள் நெருக்கடியிலிருந்து, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் இன்னும் மிகுந்த பாசிச, பொலிஸ் அரசுக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. மத்தியதரைக் கடலில் ஏராளமானோரை மூழ்கடிப்பதற்கு அல்லது அடித்து துன்புறுத்தப்படும் முகாம்களில் காவலில் வைப்பதற்கு அகதிகள் குறிவைக்கப்படுவது, பாதுகாப்புப் படைகள் மற்றும் முழு அரசு இயந்திரத்திற்குள் பாசிச மற்றும் அகதிகள் விரோத மனநிலை கொண்ட ஆளும் உயரடுக்கின் வளர்ச்சியுடன் கைகோர்த்துக் கொள்ள முனைந்தது.

மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் தோல்வி நிலையையும், சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் ஏகாதிபத்தியத்தின் இராணுவவாதம் இழிவுபடுத்தப்படுவதையும் எதிர்கொள்வதில், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் அகதிகள் எதிர்ப்பு கொள்கைகளை இரட்டிப்பாக்குகின்றன. பிராந்தியத்திலுள்ள துருக்கி, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய புறப்பட்டபோது, உள்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னைய நாள், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், ஐரோப்பிய ஒன்றிய குடியேற்ற கொள்கைகளுக்கு அடித்தளமாகவுள்ள, மூலோபாய கணக்கீடுகள் மற்றும் செல்வாக்கை பின்தொடர்வது பற்றி குறிப்பிட்டார்.

மாஸ் தனது பயணத்திற்கான குறிக்கோள்களை சுட்டிக்காட்டி, “தாலிபான்கள் குறித்து ஒருங்கிணைந்த சர்வதேச அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கிறார். அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலும், அவர்களது பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கவும் நாம் உதவ முன்வருவது கூட இதன் ஒரு பகுதியே. ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சி முழு பிராந்தியத்தையும் சீர்குலைக்காது என்பதை உறுதிப்படுத்துவது எங்கள் சொந்த நலன்கள் தொடர்புபட்டதாகும்.” என்றும் கூறினார்.

இதேபோல, பேச்சுவார்த்தைக்காக ஈராக்கிற்கு செல்வதற்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ‘அமெரிக்க தோல்வியும் அகதிகளும்’ என்ற தலைப்பில் Journal du Dimanche பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்தார். “அகதிகள் குறித்த உயர் ஆணையரின் கூற்றுப்படி, ஆப்கான் அகதிகள் ஏற்கனவே ஈரானில் 850,000 பேரும், பாகிஸ்தானில் 1.5 மில்லியன் பேரும் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தாஜிக் ஜனாதிபதியுடன் நான் பேசியபோது, அவரது எல்லையில் அழுத்தம் இருப்பதாக தெரிவித்தார்” என்பதை வலியுறுத்திக் கூறி, “பெரியளவில், ஒழுங்கற்ற புலம்பெயர்வோர் வருகையிலிருந்து” பிரான்சை பாதுகாக்க அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், “பெருமளவில் அதிகரிக்கப்பட்ட நிதி பங்களிப்புக்களை” வழங்குவது “நமது கடமை என்பதுடன் மக்கள் இடம்பெயர்வதை தடுப்பதற்கான ஒரே வழி அதுதான், இல்லையெனில், அகதிகள் வருகை தவிர்க்க முடியாததாக இருக்கும்” என்று மக்ரோன் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதை அவர் மறைமுகமாக விமர்சித்ததுடன், சிறை முகாம்களின் வரவு-செலவுத் திட்டத்திற்கு வாஷிங்டனும் அதன் பங்களிப்பை வழங்க கோரினார். “இந்த பிரச்சினையை நாம் பன்முகப்படுத்த வேண்டும், அமெரிக்காவும் அதன் பங்கு சுமையை ஏற்க வேண்டும். புலம்பெயர்வு அழுத்தத்தை அவர்கள் உணராமல் இருக்கலாம், ஆனால் அதற்கு தூண்டப்பட்டதற்கு சம்பந்தமில்லாதவர்கள் அல்ல.”

உண்மையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ போரின் தோல்வி, ஏகாதிபத்திய தன்மையினதும், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து அது வெளியேற வேண்டிய அவசியத்தினதும் வரலாற்று வெளிப்பாடாகும். வாஷிங்டனுக்கு மாற்றீடு ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்தியங்கள் அல்ல. ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெற்ற சிறை முகாம்களின் பிராந்திய வலையமைப்பைக் கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ இராணுவ பிரிவுகளை மாற்றுவதற்கான அவர்களது திட்டங்கள் ஆழ்ந்த பிற்போக்குத்தனமானவை, மேலும் ஆப்கானியர்களும் மற்றும் ஒட்டுமொத்த மக்களும் விரும்பும் இடத்திற்கு பயணிக்கவும், அவர்களுக்கு விருப்பமான இடத்தில் வாழவும், வேலை செய்யவும் அவர்கள் இடம்பெயர்வதற்கான சுதந்திரத்தை பாதுகாப்பதில் ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாளர்கள் எதிர்ப்பதற்கு அவை தகுதியானவையே.

Loading