முன்னோக்கு

பைடென்-ஜி சந்திப்பு: போர் அபாயத்திற்கு முன்னால் இயலாமையின் அடையாளம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் திங்களன்று மாலை மூன்றரை மணி நேர இணையவழி கூட்டத்தை நடத்தி அவர்களின் முதல் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை நடத்தினர். இவ்விரு நாடுகளுக்கும் இடையே போர் அச்சுறுத்தலை வாஷிங்டன் வரலாற்றுரீதியில் முன்பில்லாத மட்டங்களுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு எதையும் தீர்த்துவிடவில்லை.

வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் இருந்து பைடெனும், பெய்ஜிங்கின் மக்கள் பேரரங்கின் (Great Hall of the People) கிழக்கு அறையிலிருந்து ஜி உம் ஒருவருக்கொருவர் பேசிய போது, அந்த விவாதம் ஒருபோதும் நெகிழ்வின்றி உறுதியாக மொழிபெயர்க்கப்பட்ட சம்பிரதாயங்களைக் கடந்து நகரவில்லை. அவ்விரு சக்திகளுக்கும் இடையிலான பதட்டங்கள் மிகவும் கூர்மையாக இருந்தன, குறிப்பாக வாஷிங்டன் எந்தளவுக்கு விடாப்பிடியாக இருந்தது என்றால், அந்த சந்திப்பு எந்தவொரு முக்கிய அறிவிப்புகளோ அல்லது ஓர் கூட்டு அறிக்கையோ கூட இல்லாமல் நிறைவடைந்தது, இது ஒரு மாநாட்டின் வரலாற்று தோல்விக்கான மிகத் தெளிவான அறிகுறியாகும்.

இந்த உச்சிமாநாடு ஒரு கையாலாகாத, சம்பிரதாய அடையாளமாக இருந்ததுடன், இவ்விரு சக்திகளும் போரை நோக்கி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றன என்றாலும், கட்டுப்பாட்டுடன் இருப்பதாக வாய்சவுடால் பேசியவாறு இராஜாங்க சூழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆளும் வர்க்கங்கள் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளால் மோதலை நோக்கி உந்தப்பட்டுள்ளன. முதலாளித்துவப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக உலகளவில் ஒருங்கிணைந்துள்ளது, ஆனால் முதலாளித்துவ வர்க்கமோ தேசிய அரசு மூலமாக ஆட்சி செலுத்துகிறது. போர் முனைவானது இராணுவ வழிவகைகள் மூலமாக உலகளாவிய பொருளாதாரத்தை மறுபங்கீடு செய்வதற்கான எதிர்விரோத முதலாளித்துவ தேசங்களின் போராட்டத்தை வெளிப்படுத்துகிறது.

US President Joe Biden meets virtually with Chinese President Xi Jinping from the Roosevelt Room of the White House in Washington, November 15, 2021. (AP Photo/Susan Walsh)

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வாஷிங்டன் பெய்ஜிங்கை முறுக்கிப் பிழிவதைத் திட்டமிட்டு இறுக்கி வந்துள்ளதுடன், இராணுவ அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார தடையாணைகளைக் கொண்டு சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் மற்றும் அமெரிக்க முதலாளித்துவ நலன்களுக்கு அதை அடிபணிய செய்யவும் முனைந்துள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் 'ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு' மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் போர் நடவடிக்கைகள் இரண்டுமே இந்த பொதுவான முனையையே பின்தொடர்ந்தன.

கடந்த ஓராண்டுக்குள், பைடென் நிர்வாகம் இந்த கொதித்துக் கொண்டிருக்கும் பதட்டங்களை வெளிப்படையான மோதலின் விளிம்புக்குக் கொண்டு வந்தது. வாஷிங்டன் வேண்டுமென்றே தைவான் மீதான பெய்ஜிங்கின் உரிமைகோரல் போன்ற மிகவும் உணர்வுபூர்வமான சீன வெளியுறவு விஷயங்களை இலக்கு வைத்தது. சீனப் பெருநிலத்திதற்கு எதிராக தைவானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக பைடென் பகிரங்கமாகவே அறிவித்தார், மேலும் தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் (Tsai Ing-wen), தைவான் படைகளுடன் இராணுவப் பயிற்சிகள் நடத்த வாஷிங்டன் அத்தீவில் துருப்புக்களை நிலைநிறுத்தி இருந்ததை உறுதிப்படுத்தினார். இத்தகைய நகர்வுகள் கடந்த அரை நூற்றாண்டு புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மையின் முக்கிய கொள்கையாக இருந்த ஒரே சீனா கொள்கையை மோசமாக கீழறுத்தன.

சீனாவின் வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களுக்குத் தைவான் மிக முக்கியமானது என்பதுடன், அதுவொரு எச்சரிக்கைக் கோடு என்பதை அந்த வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சி தெளிவுபடுத்தியுள்ளது. “அவர்களின் விடுதலை திட்டநிரலுக்காக அமெரிக்க ஆதரவை எதிர்நோக்குவது என்ற தாய்வான் அதிகாரிகளின்' நகர்வுகளும் 'அத்துடன் சீனாவைக் கட்டுப்படுத்த தைவானைப் பயன்படுத்தும் சில அமெரிக்கர்களின் உள்நோக்கமும்' “முற்றிலும் அபாயகரமானவை, நெருப்புடன் விளையாடுவதைப் போன்றது' என்று ஜி பைடெனுக்குத் தெரிவித்தார். “நெருப்புடன் யார் விளையாடினாலும்,” “சுட்டெரித்து விடும்,” என்றவர் அச்சுறுத்தும் விதமாக எச்சரித்தார்.

சீன முதலாளித்துவ வர்க்கம் அதன் சொந்த உலகளாவிய பொருளாதார நலன்களைக் கொண்டுள்ளன. இந்த நலன்கள் பிரதான ஏகாதிபத்திய சக்திகளின், குறிப்பாக அமெரிக்காவின் ஸ்தாபிக்கப்பட்ட நலன்களுடன் மோதுகின்றன மற்றும் ஊடுருவுகின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, இராஜாங்க வழிவகைகள் மூலமாகவும், முதலீடு மற்றும் இராணுவ நிலைநிறுத்தல்கள் மூலமாகவும், முதலாளித்துவ வர்க்கத்தை விரிவாக்கவும் பலப்படுத்தவும் முயல்கிறது.

கோவிட்-19 பெருந்தொற்றால் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை, விண்ணை முட்டும் பணவீக்கம், அமெரிக்காவில் பகிரங்கமான வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பார்ந்த எழுச்சி ஆகியவை வாஷிங்டனின் புவிசார் அரசியல் பொறுப்பற்ற தன்மையை இன்னும் கூடுதலாக எரியூட்டியுள்ளன. வர்க்கப் போராட்டத்தைத் திசைதிருப்புவதற்கும் ஒடுக்குவதற்குமான ஒரு வழிவகையைக் காண, அமெரிக்க முதலாளித்துவம் சீனாவைக் குறி வைக்கிறது.

Foreign Affairs பத்திரிகையின் நவம்பர்-டிசம்பர் இதழில், சர்வதேச உறவுகள் விவகாரத்தில் புகழ்பெற்ற அறிஞரான ஜோன் மேர்ஷெய்மர், ஓர் உலகளாவிய போர் ஆபத்து எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்பதை எடுத்துக்காட்டி, 'ஏற்கனவே இங்கே இரண்டாம் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது, இந்த இரண்டு பனிப்போர்களையும் ஒருவர் ஒப்பிடும் போது, அமெரிக்க-சீன எதிர்விரோத போட்டி அமெரிக்க-சோவியத் எதிர்விரோத போட்டியை விட சுட்டுத் தள்ளும் போருக்கு இட்டுச் செல்லும் அதிக சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது,” என்று எழுதினார். 'இந்த புதிய பனிப்போரில் ஒரு வல்லரசு போருக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருக்கலாம் என்பது மட்டுமல்ல, மாறாக அந்தளவுக்கு அணுஆயுதம் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறும் உள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இதில் மிகவும் ஆபத்தானவைப் பணயத்தில் உள்ளன என்பது வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இரண்டின் தரப்பிலும் தெரியும், ஆனால் இரண்டு தரப்புமே பின்வாங்க முடியாது. அவை மோதலை நோக்கி உந்தப்படுகின்றன. திங்கட்கிழமை உச்சிமாநாட்டின் சடங்கு சம்பிரதாயங்கள், உலகை சமாதானமான முறையில் மறுபங்கீடு செய்ய முதலாளித்துவ வர்க்கங்களுக்கு அடிப்படையிலேயே திராணியில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த அதிகரித்து வரும் மோதலில் ஆக்ரோஷ வம்புச் சண்டைக்காரராக உள்ளது. காலநிலை மாற்றத்திற்குச் சீனா மீது பழி சுமத்தியும், ஜின்ஜியாங், ஹாங்காங் மற்றும் திபெத்தில் பெய்ஜிங்கின் 'மனித உரிமை' நடவடிக்கைகளை விமர்சித்தும் பைடென் ஜி க்கு விரிவுரை வழங்கினார்.

பைடெனின் பாசாங்குத்தனம் மலைப்பூட்டுகிறது. அமெரிக்கப் படைகள் சிரியாவில் ஒரு மிகப் பெரிய போர்க் குற்றத்தை நடத்தி, நிராயுதபாணியான 80 பெண்கள் மற்றும் குழந்தைகளை எரித்து சாம்பலாக்கியதையும், அந்த குற்றத்தை மறைக்க சடலங்களை இடிபாடுகளுக்கு அடியில் புதைத்ததையும், இந்த வாரயிறுதியில் தான், நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்டு இருந்தது. வாஷிங்டன் மீது இரத்தக்கறைப் படிந்துள்ளது. மனித உரிமைகள் பற்றி பைடென் கவலை தெரிவிக்கும் போது, அது இன்னும் கூடுதலான குற்றங்களுக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்குவதற்காக மட்டுமே உள்ளது.

இந்த பெருந்தொற்று குறித்து பேசிய ஜி, 'எந்தவொரு மிகப் பெரிய நோய்க்கான விடையிறுப்பும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்' என்று பைடெனுக்கு வேண்டுகோள் விடுத்தார், மேலும் 'நோய்களை அரசியல்மயப்படுத்துவது எந்த நன்மையும் செய்யாது, மாறாக தீமை மட்டுமே விளையும்' என்றார். 330 மில்லியன் மக்களின் ஒரு தேசமான அமெரிக்காவில் கோவிட்-19 ஆல் 780,000 க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்; 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட தேசமான சீனாவில் 5,000 க்கும் குறைவானவர்களே இறந்துள்ளனர். பெய்ஜிங் விஞ்ஞானபூர்வ அகற்றல் கொள்கையைப் பின்பற்றிய வேளையில், ட்ரம்பும் பைடென் நிர்வாகமும், கணக்கிட்ட, குற்றகரமான பாணியில், மனித உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமை அளித்தனர், இதன் விளைவாக பெருந்திரளான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

'நோய்களை அரசியல்மயப்படுத்துவதற்கு' ஜி இன் எதிர்ப்பு, கோவிட்-19 வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும் இந்த பெருந்தொற்றுக்குச் சீனாவே பொறுப்பு என்றும் அமெரிக்க ஊடகங்களால் குறிப்பாக வாஷிங்டன் போஸ்டால் பரப்பப்பட்ட மற்றும் பைடென் வெள்ளை மாளிகையால் நம்பகமானது என்று கையாளப்பட்ட வூஹான் ஆய்வகப் பொய்யைப் பற்றிய ஒரு சூசகமான குறிப்பாகும்.

ஒரு சுருக்கமான தொகுப்புரைக் கூட தயாரிக்க முடியாமல் பைடென்-ஜி உச்சிமாநாட்டின் இந்த மானக்கேடான தோல்வி, அனைத்திற்கும் மேலாக வாஷிங்டனின் மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்வைத் தொகுத்தளித்த ஒரு மூத்த பைடென் நிர்வாக அதிகாரி கூறியதை CNN மேற்கோளிட்டது, 'இதன் நோக்கம் குறிப்பாக பதட்டங்களைக் குறைப்பதற்காக இருந்ததாக நான் நினைக்கவில்லை, அல்லது அவ்வாறு எதுவும் விளையவில்லை. போட்டி பொறுப்புடன் மேற்கொள்ளப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம், அதை செய்ய நம்மிடம் வழிகள் உள்ளன. அவர் கடுமையான போட்டியில் ஈடுபடப்போவதில் ஜனாதிபதி மிகத் தெளிவாக உள்ளார்,” என்றவர் குறிப்பிட்டிருந்தார்.

பைடெனுடன் ஜி 'கூட்டுறவு' பற்றி பேசிய நிலையில், பைடென் 'போட்டி' குறித்து விடையிறுத்தார், “உத்தேசித்தோ அல்லது உத்தேசமின்றியோ நம் நாடுகளுக்கு இடையிலான போட்டி மோதலாக மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்த' அவர் அழைப்புவிடுத்தார்.

ஜி ஜின்பிங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்திடம் இந்த போர் அபாயத்திற்கு எந்த பதிலும் இல்லை. சீனப் புரட்சியின் தலைமைக்கு உரிமை கொண்டாடும் ஸ்ராலினிச சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தேசியவாத முன்னோக்கு ஒரு முட்டுச்சந்தை எட்டிய போது, முதலாளித்துவ மீட்சியை மேற்பார்வை செய்தது. அது சீனத் தொழிலாள வர்க்கத்தை நசுக்கியதுடன், சர்வதேச நிதி மூலதனத்திற்கு அவர்களின் உழைப்பை விற்று இலாபம் பெற்றது. அது, உலக அரசியலில் ஒரு பாத்திரம் வகிக்க முயன்று வரும் சீன முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

இராணுவத்துடன் பிணைந்துள்ள அந்த ஆட்சியின் சில பிரிவுகள், தைவான் விவகாரத்தில் ஆயுத மோதலை அச்சுறுத்தி, குளோபல் டைம்ஸில் போர்நாடும் தலையங்கங்களை வெளியிடுகின்றன. அந்த அரசாங்கம் வேண்டுமென்றே தேசியவாத உணர்வை வளர்த்து, போர் மற்றும் பாரிய அணித்திரட்டலுக்குச் சித்தாந்தரீதியான அடித்தளங்களைத் தயாரித்து வருகிறது. போர் குறித்து அஞ்சும் மற்ற பிரிவுகள் வாஷிங்டனுடன் ஒரு புதிய சமரசத்தை வீணாக நம்பிக் கொண்டிருக்கின்றன.

சீனா உடனான வல்லரசு மோதலுக்கான அதன் முனைவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் மகத்தான திட்டம் எதுவும் இல்லை, வெற்றி பெறும் மூலோபாயமும் இல்லை. இந்த பெருந்தொற்றுக்கோ, பணவீக்கத்திற்கோ எந்த தீர்வும் அதனிடம் இல்லை, ஒடுக்குமுறை மற்றும் போரைத் தவிர வர்க்க மோதல் அதிகரிப்புக்கு அதனிடம் எந்த பதிலும் இல்லை.

மோதலில் 'திரும்பும்' ஆபத்தைத் தவிர்க்க 'பாதுகாப்பு வழிவகைகளை' ஸ்தாபிப்பது குறித்து பைடென் பேசினார், ஆனால் போர் என்பது அமெரிக்கா மற்றும் சீனாவின் தற்போதைய போக்கிலிருந்து தொடங்கப் போவதில்லை. முதலாளித்துவத்தின் புறநிலை தர்க்கத்தால் அவை எதற்காக உந்தப்படுகின்றனவோ அது போரில் வந்து முடிகிறது.

உலகப் போரை நோக்கிய இந்த பொறுப்பற்ற முனைவைத் தொழிலாள வர்க்கத்தால் நிறுத்த முடியும், தடுத்து நிறுத்த வேண்டும். சீன மற்றும் அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஒரே நலன்கள் தான், முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய போர் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு பகிர்ந்து கொள்ளப்படும் சர்வதேச சோசலிச மூலோபாயத்தின் மூலமாக மட்டுமே அதை பாதுகாக்க முடியும். இது தான் ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்கு, இதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஒழுங்கமைத்துள்ளது.

Loading