ரஷ்யாவுடனான அதன் ஐரோப்பிய எல்லையில் நேட்டோ ஆபத்தான மோதலுக்கு அழுத்தம் கொடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான இராணுவப் பதட்டங்கள் இரண்டு முக்கிய வெடிக்கும் புள்ளிகளான போலந்து-பெலாருஸ் எல்லை மற்றும் உக்ரேனில் உள்ள கருங்கடல் பகுதி ஆகியவற்றில் வார இறுதியில் மேலும் அதிகரித்துள்ளன. உக்ரேனும் போலந்தும் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து பல தசாப்தங்களாக ரஷ்யாவை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ சுற்றி வளைப்பதில் அடித்தளமாக இருந்து வருகின்றன.

போலந்து-பெலாருஸ் எல்லையில் ஆயிரக்கணக்கான அகதிகள் நுழைவதை ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோவும் சட்டவிரோதமாக மறுத்து வருவதால், நேட்டோ அங்கத்துவ நாடுகள் பெலாருஸுக்கு எதிரான இராணுவ அச்சுறுத்தல்களை அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் நெருக்கடியின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகக் கூறி அகதிகளைப் பயன்படுத்தி 'மறைமுகமான போரில்' ஈடுபடுகின்றன.

ஜூன் 26, 2021 சனிக்கிழமையன்று, ஜோர்ஜியாவின் பாடுமி துறைமுகத்திற்கு பிரித்தானிய நாச காரி HMS Defender வந்தடைந்தது (Georgian Interior Ministry via AP)

சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் (Law and Justice Party) தீவிர வலதுசாரி போலந்து அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை போலந்து, லாத்வியா மற்றும் லித்துவேனியா ஆகியவை நேட்டோவின் அசாதாரண கூட்டத்தை கூட்டுவதற்கு நேட்டோ சாசனத்தின் 4 வது பிரிவைத் தூண்ட விரும்புவதாக அறிவித்தது. போலந்து பிரதம மந்திரி மாட்டியுஸ் மோராவிக்கி கூட்டணி தலையிடுவது 'தவிர்க்க முடியாதது' என்று கூறினார். கடந்த வாரம், பெலாருஸுடனான அதன் எல்லை மோதலில் போலந்து அரசாங்கத்திற்கு உதவ இங்கிலாந்து ஏற்கனவே எல்லைக்கு துருப்புக்களை அனுப்பியுள்ளது.

நேட்டோவின் அதிகரித்துவரும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு, ரஷ்ய அரசாங்கம் வெள்ளிக்கிழமையன்று ஒரு கூட்டு ரஷ்ய-பெலாருஸ் பாராசூட் பயிற்சியின் மூலம் பதிலளித்துள்ளது. இதில் இரண்டு ரஷ்ய பாராசூட் படையினர் இறந்தனர். கிரெம்ளின் அகதிகள் மூலம் எல்லையில் 'மறைமுகமான போரில்' ஈடுபட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்து, நெருக்கடியுடன் தனக்கு தொடர்பு 'எதுவும் இல்லை' என்று வலியுறுத்துகிறது. பெலாருஸுக்கு அகதிகளை அனுப்புவதாகக் கூறப்படும் ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏரோஃபுளொட் இனை தடைசெய்யும் ஐரோப்பிய சக்திகளின் திட்டங்களையும் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி கண்டித்தார்.

எவ்வாறாயினும், ரஷ்யாவிலிருந்து பெலாருஸ் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் யாமல்-ஐரோப்பா குழாய் வழியாக எரிவாயு விநியோகத்தை துண்டிப்பதாக பெலாருஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுக்காஷென்கோ அச்சுறுத்தியதையும் புட்டின் நிராகரித்தார். கடந்த ஆண்டு பெலாருஸ் அதிபருக்கு எதிராக ஒரு வெகுஜன எதிர்ப்பு இயக்கம் வெடித்ததில் இருந்து கிரெம்ளின் அவருக்கு ஆதரவளித்தது. ஆனால் உறவுகள் பதட்டமாக இருந்தன. மேலும் மாஸ்கோ லுக்காஷென்கோவை விரைவில் பதவியில் இருந்து வெளியேற்ற முயற்சித்தபோதும் இதுவரை வெற்றி பெறவில்லை.

நெருக்கடிக்கு தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியத்துடன் நேரடி கலந்துரையாடலுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. போலந்து-பெலாருஸ் எல்லையில் உள்ளவர்கள் உட்பட ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் அகதிகளுக்கு எதிராகவும், ரஷ்யாவிலேயே குடியேறியவர்களுக்கு எதிராகவும் ரஷ்ய பத்திரிகைகள் நீண்டகாலமாக ஒரு தீய, இனவாத பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவுடன், மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட இடிபாடுகள், சமூகப் பேரழிவுகள் மற்றும் உள்நாட்டுப் போர்களில் இருந்து தப்பியோடிய பாதுகாப்பற்ற அகதிகளை போலந்து இராணுவம் வன்முறையாக ஒடுக்கியது. குறைந்தபட்சம் எட்டு பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். மேலும் பலர் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்துவிட்டதால் உறைந்து இறந்து போகும் அபாயத்தில் உள்ளனர்.

போலந்தின் யூத-எதிர்ப்பு பற்றி குறிப்பிடுவதைத் தடைசெய்து, பாசிஸ்டுகளுடன் வெளிப்படையாக ஒத்துழைக்கும் தீவிர வலதுசாரி போலந்து அரசாங்கத்தின் அகதிகள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான வெறித்தனமான பிரச்சாரம் ஐரோப்பிய பத்திரிகைகள் முழுவதும் எதிரொலித்தது. ஜேர்மனி, குறிப்பாக, ஒரு பெரிய பத்திரிகைப் பிரச்சாரத்தை கண்டுள்ளது. ஜேர்மன் அரசாங்கம் ஏற்கனவே போலந்துடனான அதன் எல்லையில் குடியேறியவர்களை எதிர்த்துப் போராட ஆயிரக்கணக்கான காவல்துறையினரை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

பாசிச சக்திகள் கிளர்ந்தெழுந்திருப்பதற்கான அறிகுறியாக, உக்ரேனிய இராணுவத்தின் 61 வது காலாட்படை பிரிவின் செய்தி சேவை உக்ரேனிய எல்லையை கடக்க முயற்சிக்கும் எந்த புலம்பெயர்ந்தோரையும் 'அழித்துவிடும்' என்று அதன் முகநூல் பக்கத்தில் அறிவித்தது. உக்ரேன் முன்னதாக 8,500 படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை பெலாருஸுடனான 1,000 கிலோமீட்டர் எல்லைக்கு நகர்த்துவதாகவும், 560 மில்லியன் யூரோக்களுக்கு எல்லைக் காவல் அரண்களை அமைப்பதாகவும் அறிவித்தது. பெப்ரவரி 2014 இல் ஏகாதிபத்திய ஆதரவுடன், தீவிர வலதுசாரி சதியினால் உருவாகிய இந்த ஆட்சி, பல ஆண்டுகளாக தீவிர வலதுசாரி சக்திகளை பெரிதும் ஊக்குவித்து வருகிறது. நவ-நாஜிக்கள் உக்ரேனிய தெருக்களில் வழக்கமாக அணிவகுத்து, அரசியல் எதிரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் இன சிறுபான்மையினரை பயமுறுத்துகிறார்கள் மற்றும் படுகொலை செய்கிறார்கள்.

நேட்டோ கிழக்கு ஐரோப்பா, கருங்கடல் பகுதி மற்றும் உக்ரேனில் மேலும் தெற்கே ரஷ்யாவின் மீது அழுத்தத்தை ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதால் போலந்து-பெலாருஸ் எல்லையில் ஆபத்தான மோத்தல் விரிவடைகிறது. கருங்கடலில் அமெரிக்க கூட்டுப் படைகளின் கட்டளையகம் ஐரோப்பா இராணுவப் பயிற்சியில் பங்கேற்க அமெரிக்கா ஒரு ஏவுகணை அழிப்பான் USNS John Lenthall மற்றும் பணியாளர் கப்பலான USS Mount Whitney ஆகியவற்றை அனுப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்து 600 துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்ப தயாராகி வருவதாக பிரிட்டிஷ் பத்திரிகைகள் தெரிவித்தன.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் நடவடிக்கைகள் 'கருங்கடல் பிராந்தியத்தில் ஒரு ஸ்திரமின்மைக்கான காரணியாகும் மற்றும் இதன் குறிக்கோள்களில் ஒன்று உக்ரேனிய பிரதேசத்தை இராணுவரீதியாக கைப்பற்றுவது' என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமையன்று ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டதை ஒரு 'கடுமையான சவால்' என்று விவரித்தார். மேலும் மேலும் கூறினார், 'எங்கள் பாதுகாப்பைக் குறைக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை இது உருவாக்குகிறது. சரி, நாங்கள் எங்கள் பாதுகாப்பைக் கவனிப்பதை குறைக்கவில்லை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உக்ரேனை கூட்டணியில் சேர்க்க நேட்டோ எடுக்கும் எந்த முயற்சியும் ரஷ்யாவிற்கு 'ஏற்றுக்கொள்ள முடியாதது' என்ற கிரெம்ளினின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு இந்த பிராந்தியத்தில் நேட்டோவின் மூன்றாவது பெரிய ஆத்திரமூட்டலான கருங்கடல் பிராந்தியத்தில் சமீபத்திய மோதல்கள் அக்டோபர் இறுதியில் ரஷ்யா உக்ரேனின் எல்லைக்கு அருகே துருப்புக்களை நகர்த்துகிறது என்று அமெரிக்கா முற்றிலும் ஆதாரமற்ற கூற்றுகளுடன் தொடங்கியது. இந்த கூற்றுக்கள் ஆரம்பத்தில் ரஷ்யாவால் மட்டுமல்ல, உக்ரேனாலும் நிராகரிக்கப்பட்டன. வாஷிங்டன் அதன் சிஐஏ இயக்குனரை உக்ரேனுக்கு அனுப்பியது. பின்னர் உக்ரேனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவுடன் வெளியுறவுத்துறையில் 'மூலோபாய கூட்டாண்மை' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தில், உக்ரேனை இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தொடர்ந்து ஆதரிப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது. மாஸ்கோவால் சிவப்புக் கோடாகக் கருதப்படும், நேட்டோவில் உக்ரேனின் நுழைவு சாத்தியம் குறித்து இந்த ஆவணம் உக்ரேனின் 'நேட்டோவில் சேருவதற்கான உக்ரேனின் அபிலாஷைகள் உட்பட, வெளிப்புறத் தலையீடுகள் இல்லாமல் அதன் சொந்த எதிர்கால வெளியுறவுக் கொள்கைப் போக்கை தீர்மானிக்கும் உரிமையை' ஆதரிக்கிறது.

2014 இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பம் மற்றும் கிழக்கில் உள்ள டொன்பாஸ் பிராந்தியத்தின் மீதான போரில் உக்ரேனை அடுத்த மாதத்திற்குள் பென்டகன் ஆதரிக்க திட்டமிட்டுள்ளதாக வார இறுதியில் ரஷ்ய பத்திரிகைகளில் பல கட்டுரைகள் விவாதித்துள்ளன. டொன்பாஸ், 2014 முதல் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளால் கட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு உக்ரேனில் இருக்கின்றது. இந்த பிப்ரவரியில், உக்ரேனிய அரசாங்கம் கிரிமியன் தீபகற்பத்தை 'மீண்டும்' எடுக்க ஒரு இராணுவ மூலோபாயத்தை அறிவித்ததால் இது பல வாரங்கள் நீடித்த நெருக்கடியைத் தூண்டியது.

கியேவ் இப்போது 8,500 துருப்புக்களை ரஷ்யாவுடனான தனது எல்லையில் நிறுத்தியுள்ளது மற்றும் கருங்கடலில் இருந்து அசோவ் கடலுக்கு தனது கடற்படையின் சில பகுதிகளை இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த கடல் பிராந்தியம் ரஷ்யாவால் உரிமை கோரப்படுவதால் அத்தகைய எந்த நடவடிக்கையும் மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் இருக்கும். 2018 ஆம் ஆண்டில், உக்ரேன் அமெரிக்க ஆதரவுடன் அசோவ் கடலுக்கு மூன்று போர்க்கப்பல்களை அனுப்பியது. இது ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலைத் தூண்டியது.

கிழக்கு ஐரோப்பாவில் இராணுவ நெருக்கடிகள் இன்னும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று கொண்டிருக்கும் தொற்றுநோய்க்கு மத்தியில் முதலாளித்துவ சமூகத்தின் ஆழமான ஸ்திரமின்மையின் பின்னணியில் வெளிவருகின்றன. இதன் விளைவாக உருவாகும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்கள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி, ஏகாதிபத்திய நாடுகள் ரஷ்யாவுடனான பதட்டங்களை பெருகிய முறையில் பொறுப்பற்ற முறையில் தூண்டுவதற்கு குறிப்பாக அமெரிக்காவில் ஒரு முக்கிய காரணியாகும்.

கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் வர்க்கப் பதட்டங்கள் அதிகமாக உள்ளன. அங்கு ஆளும் தன்னலக்குழுக்கள் தொற்றுநோயை குற்றவியல்தன்மையுடன் கையாள்வது பாரிய இறப்பு மற்றும் குழந்தைகளிடையே தொற்றுநோய்களின் பயங்கரமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த நாடுகளின் அரசாங்கங்களின் நெருக்கடி இந்த நிலைமைக்கு கூடுதல் உறுதியற்ற தன்மையைக் கொடுக்கிறது. ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தை ஒன்றிணைப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நனவான முயற்சிகள் மூலம் மட்டுமே போரின் அபாயத்தை எதிர்க்க முடியும்.

Loading