முன்னோக்கு

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 100 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த மாதம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) ஸ்தாபக மாநாடு ஜூலை 1921 இல் ஒரு ஷாங்காய் மகளீர் பள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட 100 ஆண்டுகளைக் குறிக்கிறது. 1917 ரஷ்ய புரட்சியால் உத்வேகம் பெற்ற இந்த நிகழ்வு, உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வர்க்க ஒடுக்குமுறைக்கும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கும் எதிராக சீன மக்களின் நீடித்த போராட்டத்தில் இது ஒரு தீர்க்கமான திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது.

100 ஆண்டுகளுக்கு முன்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத்திற்கு வழிகாட்டிய புரட்சிகர கருத்துக்கள், இந்த உத்தியோகபூர்வ நூற்றாண்டு கொண்டாட்டங்கள் குணாதிசப்படுத்தும் பாசாங்குத்தனம் மற்றும் பொய்யான கருத்துக்களுக்கு முற்றிலும் முரணாக நிற்கின்றன. இக் கொண்டாட்டங்கள் கட்சி பற்றிய மக்கள் கண்ணோட்டத்தையும், குறிப்பாக ஜனாதிபதி ஜி ஜின்பிங் பற்றியும் உயர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஜூலை 1, 2021 வியாழக்கிழமை பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவின் போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசுவதை ஒரு திரை காட்டுகிறது (AP Photo/Ng Han Guan) [AP Photo/Ng Han Guan]

கட்சியின் வரலாற்றை சித்தரிக்கும் நாடகங்களால் சீன தொலைக்காட்சி மூழ்கி வருகிறது. நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் குடியிருப்புகளிலும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. மாவோ சேதுங்கின் பிறப்பிடம் உட்பட, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுடன் தொடர்புடைய தளங்களைப் பார்வையிட கட்சி கிளைகள், தொழிற்பட்டறைகள் மற்றும் உள்ளூர் கழகங்களால் “சிவப்பு சுற்றுலா” ஊக்குவிக்கப்படுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை மகிமைப்படுத்தும் படங்கள் வாரத்திற்கு இரண்டு முறை திரையிடப்படுவதுடன் மற்றும் புரட்சிகர நாடகங்கள் என்று அழைக்கப்படுபவை நாடக அரங்கங்கில் அரங்கேற்றப்படுகின்றன. 'கட்சியை என்றென்றும் பின்பற்றுங்கள்' மற்றும் 'சீன மக்களின் பயணத்தை எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது' போன்ற எண்பது புதிய முழக்கங்கள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

இத்துடன் அனைத்தும் முடிந்துவிடவில்லை. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு சீனாவின் அவமானகரமான அடிபணிவை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், சீன தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கும் மற்றும் சீன தேசியவாதத்தினை ஊதிப்பெருக்க செய்வதும் அனைத்து முனைகளிலும் தொடர்கின்றது. சர்வதேச அரங்கில் சீனாவை ஒரு சிறந்த சக்தியாக மாற்ற பள்ளி குழந்தைகள் ஜியின் “சீன கனவு” பற்றி கட்டுரைகளை எழுத பள்ளிப் பிள்ளைகள் கேட்க்கப்படுகின்றனர். மாவோயிச சித்தாந்தத்தையும், ஒரு புதிய சகாப்தத்திற்கான சீன குணாதிசயங்களுடன் சோசலிசம் பற்றிய ஜி ஜின்பிங்கின் சிந்தனையையும் புகழ்ந்துரைக்கும் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டால் வயது வந்தோர் சமூக கல்லூரி படிப்புகளுக்கு தள்ளுபடியை வழங்குகின்றன.

இந்த தேசியவாத களியாட்டத்திற்குப் பின்னால், இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்கள் என்பது உத்தியோகபூர்வ கட்சி வரலாற்று உள்ளடங்கலான பொய்களின் வழிபாட்டை விமர்சனரீதியாக கேள்விக்குள்ளாக்கக்கூடும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எந்திரத்தில் ஒரு வெளிப்படையான பதட்டம் உள்ளது. ஏப்ரல் 9 ம் தேதி, சீனாவின் இணைய பொலிஸ் அமைப்பின் ஒரு பிரிவான சட்டவிரோத மற்றும் ஆரோக்கியமற்ற தகவல்களுக்கான அறிக்கையிடல் மையம், 'வரலாற்று நிகிலிசத்தை' எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு புதிய வசதியை அறிவிப்பதன் மூலம் ஏற்கனவே விரிவான தணிக்கைக்கு ஒரு புதிய பிரிவைச் சேர்த்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை சிதைக்கும், அதன் தலைமை அல்லது சித்தாந்தத்தைத் தாக்கும் அல்லது “வீர தியாகிகளை அவதூறு செய்யும்” இணையத்தள இடுகைகளைப் பற்றி புகாரளிக்க குடிமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக மக்களின் செல்வந்த அடுக்குகளின் நலன்களை அப்பட்டமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஊழல் நிறைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்துவத்துடன் பரவலான வெறுப்பு நிலவும் சூழ்நிலைகளில், அக்கவலைக்கு நல்ல காரணம் உள்ளது. முழு உத்தியோகபூர்வ கொண்டாட்டமும் கட்சி அதன் ஆரம்பகால ஸ்தாபகக் கொள்கைகளுக்கு உண்மையாகவே உள்ளது என்ற அப்பட்டமான பொய்யின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. உண்மையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலத்திற்கு முன்னர் அது ஸ்தாபிக்கப்பட்ட சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை கைவிட்டுவிட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் திருத்திக்கொள்ளாத ஜூலை 1 அல்லாது ஜூலை 23, 1921 அன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக மாநாடு ஷாங்காயின் பிரெஞ்சு கட்டுப்பாட்டுப் பகுதியில் போவன் மகளிர் உயர்நிலை பள்ளியின் (Bowen Women’s Lycee) ஒரு தங்குமிடத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டு, பின்னர் ஒரு தனியார் வீட்டிற்கு மாற்றப்பட்டது. ஷாங்காய், பெய்ஜிங், வூஹான், சாங்ஷா மற்றும் ஜினான் ஆகிய இடங்களிலிருந்து தலா 12 பிரதிநிதிகளும், மூன்றாம் அகிலத்தின் அல்லது கொமின்டேர்னின் இரண்டு பிரதிநிதிகளான மாரிங் என அழைக்கப்படும் ஹென்க் ஸ்னீவ்லீட் மற்றும் சீனாவில் நிகோல்ஸ்கி என அழைக்கப்படும் விளாடிமிர் நெய்மன் ஆகியோர் இருந்தனர். கலந்துகொள்ள முடியாத ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சென் துஷியோ (Chen Duxiu) வின் ஒரு சிறப்பு பிரதிநிதியும் கலந்து கொண்டார்.

தற்போதைய சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் காங்கிரஸை ஒரு சீனப் பிரச்சினையாக முன்வைக்கும் அதே வேளையில், சீனாவிலும் பிற நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறுவப்பட்டதானது, அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியின் மகத்தான சர்வதேச தாக்கத்தையும், விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியால் முதல் தொழிலாளர் அரசை ஸ்தாபித்ததையும் பிரதிபலித்தது. மார்ச் 1919 இல் மூன்றாம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டின் அறிக்கையானது காலனித்துவ நாடுகளில் உள்ள மக்களுக்கு ஒரு நேரடி வேண்டுகோளை விடுத்து, “ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் காலனித்துவ அடிமைகள்: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான நேரமே உங்கள் விடுதலையின் நேரமாக இருக்கும்” என்று அறிவித்தது.

நாட்டின் அரைக் காலனித்துவ ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கான வழியைத் தேடும் சீனாவில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்கள் இந்த செய்தியை மிகவும் ஈர்ப்புமிக்கதாக கண்டனர். 1911 ஆம் ஆண்டின் சீனப் புரட்சி, கோமின்டாங் (KMT) இனை உருவாக்கிய முதலாளித்துவ தேசியவாதியான சன் யாட்-சென் இனை “சீனக் குடியரசின்” தற்காலிகத் தலைவராக்கியது. ஆனால் நாட்டை ஒன்றிணைப்பதிலோ அல்லது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதிலோ அவர் வெற்றிபெறவில்லை. மேலும், முதலாம் உலகப் போருக்குப் பின்னர், 1919 இல் நடந்த வேர்சாய் சமாதான மாநாட்டில், போரில் முக்கியமான வெற்றிபெற்ற சக்திகள் ஜேர்மனியில் இருந்து கைப்பற்றப்பட்ட சாண்டோங் மாகாணத்திற்கான ஜப்பானின் உரிமைகோரலை ஆதரித்தன. இந்த முடிவு பகிரங்கமாக வெளிவந்தபோது, அது மே 4, 1919 முதல் பரவலான ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டியது. மே 4 இயக்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்விலிருந்து உருவானாலும், ஆனால் அது மிகவும் பரந்த புத்திஜீவித மற்றும் அரசியல் வடிவத்தை எடுப்பதற்கு வழிவகுத்தது. இதில் சென் துஷியோ மற்றும் அவரது நெருங்கிய ஒத்துழைப்பாளர் லி டாசோவ் (Li Dazhao) ஆகியோர் முக்கிய பாத்திரங்களை வகித்தனர்.

அரசுக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் அதன் “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டுதின படிப்பினைகள்” தொடரில் வெளியிட்ட சமீபத்திய கட்டுரை, 1921 ஆம் ஆண்டில் கட்சியின் ஸ்தாபக இலக்கு “சீன தேசத்தின் பெரும் மறுமலர்ச்சி” என்று அறிவிக்கிறது. இது தொடர்ந்து “சீன கம்யூனிஸ்ட் கட்சி நாட்டைக் காப்பாற்றுதல், புத்துயிர் பெறுதல், வளப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் போன்ற வரலாற்றுப் பணிகளை தனது மேற்கொள்கிறது; எப்போதும் சீன தேசத்தினதும் சீன மக்களினதும் முன்னணி பாதுகாப்புபடையாக இருக்கும்; அதன் பெரிய சாதனைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குறிப்பிடப்பட கூடியதாக இருக்கும் ஒரு வரலாற்று நினைவுச்சின்னத்தை உருவாக்கும்” எனக் குறிப்பிடுகிறது.

சீன தேசியவாதத்தின் இந்த மகிமைப்படுத்துதல், சீனப் புரட்சி மற்றும் சீனாவில் மூன்றாம் அகிலத்தின் தலையீட்டோடு பிணைந்திருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத்தை வழிநடத்திய கருத்துக்களுக்கு முற்றிலும் தொடர்பற்றதாகும். கட்சியை அமைப்பதற்கான மே 4 இயக்கத்திலிருந்து தோன்றிய அந்த இளைஞர்களும் புத்திஜீவிகளும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான சர்வதேசப் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது என்ற புரிதலின் அடித்தளத்தில் அதற்கு வென்றடுக்கப்பட்டனர். அதன் குறிக்கோள் உலக சோசலிச புரட்சியே தவிர, இது ஜி இன் “கனவின்” மத்திய இலக்கான “சீன தேசத்தின் மறுமலர்ச்சி” என்ற பிற்போக்குத்தனமான தேசியவாத கருத்து அல்ல.

1921 இல் நடந்த முதல் மாநாட்டின் ஆவணங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை பின்வருமாறு விரிவாகக் கூறின: தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவத்தை தூக்கிவீசி மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பது, வர்க்கங்களை இல்லாதொழிப்பதற்கு இட்டுச்செல்வது, உற்பத்தி சாதனங்களின் தனியார் சொத்துடைமையை முடிவிற்கு கொண்டுவருவது மற்றும் மூன்றாம் அகிலத்துடனான ஐக்கியம், என்பவையாகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய எந்தவொரு புறநிலை ஆய்வும், இந்த இலக்குகளுக்காக தொடர்ந்து போராடுகிறது என்ற கூற்று பொய் என்பதை அம்பலப்படுத்துகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் கட்சி அல்ல, ஆனால் சீனாவை ஆட்சி செய்யும் அதிகாரத்துவ எந்திரத்தின் கட்சியாகும். அதன் சொந்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி கூட, கட்சி உறுப்பினர்களில் 7 சதவிகிதம் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். இது சீனாவின் பணக்கார பில்லியனர்களில் சிலரை உள்ளடக்கிய அரசாங்க செயற்பாட்டாளர்களால் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அரசு நடத்தும் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை கண்காணிப்பதுடன் மற்றும் தங்கள் ஒடுக்குமுறை நிலைமைகளுக்கான எந்தவொரு தொழிலாளர்களின் எதிர்ப்பையும் அடக்குகின்றன.

தனியார் இலாபமும் சந்தையும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆதிக்கம் செலுத்தும் அதன் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் மற்றும் பணக்கார பல பில்லியனர்களுடனான சீனா, “சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசத்தை” குறிக்கிறது என்ற கூற்று கேலிக்குரியதாகும். ஜியின் “கனவான” ஒரு சக்திவாய்ந்த சீன அரசுக்கும் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது. 1978 முதல் டெங் சியாவோ பிங்கின் கீழ் சீனாவில் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதன் மூலம் தோன்றிய பெரும் செல்வந்த தன்னலக்குழுக்கள் மற்றும் செல்வந்த உயரடுக்கின் இலட்சியங்களையே இது பிரதிபலிக்கின்றது.

சீன அரசாங்கத்தின் தற்போதைய கொள்கையில், 1921 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதை எடுத்துக்காட்டும் சர்வதேசியவாதத்தின் எந்தவொரு தடயமும் இல்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் இன்று ஏகாதிபத்தியத்தை தூக்கிவீசுவது அல்ல, மாறாக உலக முதலாளித்துவ ஒழுங்கமைப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுவதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, சீனா உட்பட, உலகில் எங்கும் சோசலிசப் புரட்சியை அது பரிந்துபேசவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. சீனாவில் எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பையும் அடக்குவதற்கு அதன் மிகப்பெரிய பொலிஸ்-அரசு எந்திரத்தைப் பயன்படுத்துகிறது.

உண்மையான சோசலிசத்திற்காக போராட விரும்பும் சீனாவில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் இன்று எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த போராட்டத்திற்கு என்ன முன்னோக்கு வழிகாட்டும் என்பதாகும். இந்த கேள்விக்கு பதிலளிக்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவத்தை தூக்கியெறிய போராடும் ஒரு புரட்சிகரக் கட்சி என்பதிலிருந்து அதற்கு நேரெதிராக எப்படி, ஏன் மாற்றப்பட்டது என்பதைப் விளங்கிக்கொள்ளவேண்டும்.

கட்சியின் நீண்டதும் சிக்கலானதுமான வரலாற்றில் மூன்று முக்கிய தருணங்கள் மிகவும் கவனத்திற்குரியவை.

இரண்டாவது சீனப் புரட்சி (1925–27)

முதலாவதாக, 1925-27 ஆம் ஆண்டின் இரண்டாவது சீனப் புரட்சி மற்றும் அதன் துன்பகரமான தோல்வியைப் பற்றி குறிப்பிட்டாகவேண்டும். இந்த பரந்த புரட்சிகர இயக்கத்தை நசுக்குவதற்கான பிரதான அரசியல் பொறுப்பு ஸ்ராலினின் கீழ் மாஸ்கோவில் வளர்ந்து வந்த அதிகாரத்துவத்திடம் உள்ளது. இது ஐரோப்பாவில் புரட்சிகளின் தோல்வி மற்றும் தொழிலாளர் அரசை தொடர்ந்து தனிமைப்படுத்திய நிலைமைகளின் கீழ், ரஷ்ய புரட்சிக்கு அடித்தளமாக இருந்த சோசலிச சர்வதேசியவாதத்தை கைவிட்டதுடன் மற்றும் 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்கு முன்னோக்கை முன்வைத்தது.

அவ்வாறு செய்யும்போது, ஸ்ராலினிச எந்திரம் மூன்றாம் அகிலத்தை உலக சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதற்கான வழிமுறையாக மாற்றுவதிலிருந்து சோவியத் வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக மாற்றியது. இதனூடாக ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் இடது கட்சிகள் மற்றும் அமைப்புகள் என்று அழைக்கப்படும் சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்கு அடிபணிய வைக்கப்பட்டது.

1925-27 புரட்சியின் போது ஷாங்காயில் ஆயுதமேந்திய தொழிலாளர்கள்

இளம் மற்றும் அனுபவமற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி மீதான இதன் தாக்கம் பாரியளவிலானதாக இருந்தது. 1923 ஆம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் எதிர்ப்பிற்கு மாறாக, கட்சி தன்னை கலைத்துவிட்டு, முதலாளித்துவ கோமின்டாங்கினுள் தனித்தனியாக நுழைய வேண்டும் என மூன்றாம் அகிலம் வலியுறுத்தியது. கோமின்டாங் 'சீனாவின் ஒரேயொரு தீவிர தேசிய புரட்சிகரக் குழுவை' பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறியது.

இந்த அறிவுறுத்தல், 'தாராளவாத முதலாளித்துவத்துடன்' சமரசம் செய்ய முடியாத எதிர்ப்புடன் மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய புரட்சியின் முழு அனுபவத்தையும் நிராகரித்தது. ரஷ்யாவில் ஜாரிச எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் ஒரு முதலாளித்துவ குடியரசை ஸ்தாபிப்பதில் தாராளவாத கடேட்டுகளுக்கு மட்டுமே உதவ முடியும் என்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை ஒரு இரண்டாம் கட்டமாக காலவரையற்ற எதிர்காலத்திற்கு தள்ளிவைத்த மென்ஷிவிக்குகளின் இரண்டு கட்ட தத்துவத்தை நோக்கி இது பின்னோக்கி செல்வதாகும்.

1923 இன் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவில் இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டபோது, கோமின்டாங்கிற்குள் நுழைவதை எதிர்த்து வாக்களித்த ஒரே உறுப்பினர் லியோன் ட்ரொட்ஸ்கி மட்டுமே. மே 1922 இல் ஆரம்பித்த தொடர்ச்சியான பக்கவாதத்தால் லெனின் இயலாமையுடன் இருந்தார். 1920 இல் எழுதப்பட்ட 'தேசிய மற்றும் காலனித்துவ கேள்விகள் பற்றிய வரைவு ஆய்வறிக்கையில்', லெனின் பாட்டாளி வர்க்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், தேசிய முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

ரஷ்ய புரட்சிக்கு வழிகாட்டிய நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் ட்ரொட்ஸ்கி, அடிப்படை முதலாளித்துவ கடமைகளைச் செய்ய தேசிய முதலாளித்துவத்தின் இயலாமையை எடுத்துக்காட்டினார். எனவே சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே அதை அடைய முடியும் எனக் குறிப்பிட்டார். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோசலிச சர்வதேசியவாதத்தின் கோட்பாடுகள் கைவிடப்படுவதற்கு எதிராக, அதனைப் பாதுகாக்க 1923 ஆம் ஆண்டில் அவர் இடது எதிர்ப்பை உருவாக்கினார்.

மே 30 அன்று ஷாங்காயில் ஆர்ப்பாட்டக்காரர்களை பிரிட்டிஷ் நகராட்சி காவல்துறையினர் சுட்டுக் கொன்றதன் மூலம் தூண்டப்பட்ட 1925 ஆம் ஆண்டில் வெடித்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் வெகுஜன புரட்சிகர இயக்கத்திற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் அதனால் சீன தொழிலாள வர்க்கம் கோமின்டாங்கிற்கு அடிபணிந்தமையும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது. இப்போது சியாங் கேய்-ஷேக் தலைமையிலான கோமின்டாங்கிற்குள் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பெருகிய முறையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், ஸ்ராலின் கோமின்டாங்கிலிருந்து உடைத்துக்கொண்டு வருவதையும் எதிர்த்து, மேலும் இந்த முதலாளித்துவக் கட்சியை பிரகாசமான “புரட்சிகர” வண்ணங்களில் வரைந்தார்.

1927 ஆம் ஆண்டில், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் சீன முதலாளித்துவத்தை ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை வகிக்க கட்டாயப்படுத்தும் என்ற ஸ்ராலினின் கூற்றின் பொய்யை ட்ரொட்ஸ்கி அம்பலப்படுத்தினார்:

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டம் பலவீனமடையவில்லை, மாறாக வர்க்கங்களின் அரசியல் வேறுபாடுகளை பலப்படுத்துகிறது… தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உண்மையில் எழுச்சியுறச் செய்வதற்கு அவர்களின் அடிப்படையான மற்றும் மிக ஆழமான வாழ்க்கை நலன்களை நாட்டின் விடுதலைக்கான பாதையுடன் இணைப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்… ஆனால் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட வெகுஜனங்களை தங்கள் கால்களில் எழுந்துநிற்க செய்யும் அனைத்தும் தவிர்க்க முடியாமல் தேசிய முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியவாதிகளுடன் ஒரு பகிரங்க கூட்டிற்குள் தள்ளும். முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் பலவீனமடையவில்லை, மாறாக, ஒவ்வொரு கடுமையான மோதலிலும் இரத்தக்களரியான உள்நாட்டுப் போரின் கட்டம் வரை ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் கூர்மைப்படுத்தப்படுகிறது.

சியாங்கின் கொலைகார குண்டர்களில் ஒருவர் 1927 இல் ஒரு கம்யூனிச தொழிலாளிக்கு மரணதண்டனை நிறைவேற்றுகிறார்

இந்த எச்சரிக்கை துன்பகரமாக உறுதிப்படுத்தப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியை கோமின்டாங்கிற்கு அடிபணியச் செய்வதன் மூலம், ஸ்ராலின் புரட்சியின் புதைகுழி தோண்டுபவர் ஆனார். இது ஏப்ரல் 1927 இல் ஷாங்காயில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை சியாங் கேய்-ஷேக் மற்றும் அவரது படைகள் படுகொலை செய்வதற்கும், அதைத் தொடர்ந்து, மே 1927 இல் இடது கோமின்டாங் என ஸ்ராலினிஸ்டுக்களால் அழைக்கப்பட்டவர்களால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் படுகொலை செய்யப்படுவதற்கும் உதவியது. ஸ்ராலின் பின்னர் திடீரென நேரெதிராக நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். தணிந்து வரும் புரட்சிகர அலைக்கு மத்தியில், நொறுங்கிப்போன சீன கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ச்சியான அழிவுகரமான சாகசங்களுக்குள் அவர் தள்ளிவிட்டார்.

20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் இதுபோன்ற நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பேரழிவுகரமான தோல்விகள், சீன தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி இருப்பது உண்மையில் முடிவிற்கு வந்ததை குறித்தது.

இந்த துன்பகரமான அனுபவத்திலிருந்து தேவையான அரசியல் படிப்பினைகளை எடுப்பதற்கு பதிலாக, ஸ்ராலின் தனது கொள்கைகள் சரியானவை என்று வலியுறுத்தி, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சென் துஷியோவை தோல்விகளுக்கு பலிகடாவாக்கினார். இரண்டாம் சீனப் புரட்சியால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடும் சென் மற்றும் பிற முக்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின்பால் ஈர்க்கப்பட்டு, சீன இடது எதிர்ப்பை உருவாக்கி, பின்னர் சீனாவிலும் சர்வதேச அளவிலும் ஸ்ராலினிசத்தின் கொடூரமான துரோகங்களுக்கு எதிராக 1938 இல் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியை உருவாக்கினர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் எஞ்சியிருந்தவர்கள் ஸ்ராலினையும் மென்ஷிவிக் இரண்டு கட்ட தத்துவம் உட்பட அவரது குற்றங்களையும் பாதுகாத்து கிராமப்புறங்களுக்கு பின்வாங்கினர். 1935 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை இறுதியில் எந்த சவாலுமின்றி ஏற்றுக்கொள்ளவிருந்த மாவோ சேதுங், 1920 களின் தோல்விகளில் இருந்து சீனப் புரட்சியின் பிரதான சக்தியாக இருந்த விவசாயிகளே தவிர பாட்டாளி வர்க்கம் அல்ல என்ற மார்க்சிச எதிர்ப்பு முடிவை எடுத்தார்.

1949 மூன்றாம் சீனப் புரட்சி

இந்த முடிவு, 1949 மூன்றாம் சீனப் புரட்சிக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திய, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் இரண்டாவது பெரிய திருப்புமுனையாக இருந்தது.

சீனாவில் விவசாயிகளின் போராட்டங்களின் மகத்தான புரட்சிகர-ஜனநாயக முக்கியத்துவத்தையும், விவசாய மக்களின் ஆதரவை தொழிலாள வர்க்கம் வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ட்ரொட்ஸ்கி நன்கு அறிந்திருந்தாலும், புரட்சிகர சோசலிச இயக்கத்தின் சமூக அடித்தளமாக இருக்கும் பாட்டாளி வர்க்கத்தினை விவசாயிகளை கொண்டு பிரதியீடு செய்வதற்கான முயற்சியின் தாக்கங்கள் குறித்து அவர் ஒரு தீவிரமான எச்சரிக்கையை தெரிவித்தார்.

இடது எதிர்ப்பாளர்களது சீன ஆதரவாளர்களுக்கு 1932 இல் எழுதிய கடிதத்தில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

விவசாயிகள் இயக்கம் பெரிய நிலச்சுவாந்தர்கள், இராணுவவாதிகள், நிலப்பிரபுத்துவவாதிகள் மற்றும் கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக இயக்கப்படும் வரையில் ஒரு பெரிய புரட்சிகர காரணியாகும். ஆனால் விவசாயிகள் இயக்கத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த தனியுடைமை சார்பு மற்றும் பிற்போக்குத்தனமான போக்குகள் உள்ளன. இவை மேலும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது தொழிலாளர்களுக்கு விரோதமாகி, ஏற்கனவே தாங்கியுள்ள ஆயுதங்களைக் கொண்டு அந்த விரோதத்தை காட்டமுயலலாம். விவசாயிகளின் இந்த இரட்டை தன்மையை மறந்தவர் ஒரு மார்க்சிசவாதி அல்ல. முற்போக்கான தொழிலாளர்களுக்கு ‘கம்யூனிச’ சின்னங்களுக்கும் பதாகைகளுக்கும் பின்னால் இருக்கும் உண்மையான சமூக நிகழ்ச்சிப்போக்கை அறிந்துகொள்ள கற்பிக்கப்பட வேண்டும்.

மாவோ தலைமையிலான விவசாயப் படைகள் பாட்டாளி வர்க்கத்தின் பகிரங்க எதிரியாக மாற்றப்படலாம் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களின் மார்க்சிச முன்னணிப்படைக்கு எதிராக விவசாயிகளை தூண்டலாம் என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்.

1949 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிகரமான விவசாய இராணுவம்

கோமின்டாங்கின் தோல்விக்கு பின்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அக்டோபர் 1949 இல் சீன மக்கள் குடியரசை பிரகடனப்படுத்தியமை உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரு முக்கியமான புரட்சிகர எழுச்சியின் விளைவாகும். இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் முழுவதும் வெடித்த புரட்சிகர இயக்கங்கள் மற்றும் காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களின் ஒரு பகுதியாகும். இது இரண்டு உலகப் போர்களையும் பெரும் மந்தநிலையையும் உருவாக்கிய முதலாளித்துவ அமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் உழைக்கும் மக்களின் உறுதியை பிரதிபலிக்கிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் ஆதிக்கத்தின் விளைவாக, சீனப் புரட்சி என்பது ஒரு முரண்பாடான நிகழ்வு என்பது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. குறிப்பாக ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய புரட்சிகர இயக்கங்களின் தோல்விகளின் விளைவாக ஸ்ராலின் ஆணையிட்ட நிலைப்பாட்டைத் தொடர்ந்து, மாவோ மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கோமின்டாங்குடன் சந்தர்ப்பவாத கூட்டணியைப் பேணி, 1937 இல் சீனாவின் ஜப்பானிய படையெடுப்பிற்கு எதிராக கூட்டணியை உருவாக்க முயற்சித்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சியாங் கேய்-ஷேக் மற்றும் கோமின்டாங் இராணுவ நடவடிக்கைகளை தொடங்கியபோதுதான், மாவோ இறுதியாக அக்டோபர் 1947 இல் அதை தூக்கியெறிய வேண்டும் என்றும் 'புதிய சீனாவை' கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கோமின்டாங் ஆட்சியின் விரைவான சரிவு அதன் உள்அழுகல் மற்றும் சீன முதலாளித்துவத்தின் திவால்தன்மைக்கு சான்றளித்தது. இது தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்த அலை உட்பட பரவலான எதிர்ப்பை உருவாக்கியது. எவ்வாறாயினும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவிதமான நோக்குநிலையையும் வழங்கவில்லை. மேலும் மாவோவின் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட படைகள் நகரங்களுக்குள் நுழைவதற்கு அது செயலற்ற முறையில் காத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. மென்ஷிவிக்-ஸ்ராலினிச இரண்டு கட்ட தத்துவத்தை தொடர்ந்து, ஒரு 'புதிய சீனா' பற்றிய மாவோவின் முன்னோக்கு ஒரு முதலாளித்துவ குடியரசின் முன்னோக்கு ஆகும். அந்த குடியரசில், பெரும்பாலும் கோமின்டாங்குடன் தைவானுக்கு தப்பி ஓடிய சீன முதலாளித்துவ வர்க்கத்தின் எச்ச சொச்சங்களுடன் கூட்டணிகளையும் சீன முதலாளித்துவ சொத்து உறவுகளையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பராமரித்தது.

மாவோவின் வேலைத்திட்டம் புரட்சியின் சிதைவுக்கு வழிவகுத்தது. முதலாளித்துவ சொத்து உறவுகளைப் பேணுவது என்பது தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் அதிகாரத்துவரீதியாக அடக்குவதாகும். விவசாயப் படைகளின் தலைமையிலிருந்து தோன்றி, அவர்கள் மீது தங்கியிருந்த ஸ்ராலினிச அரசு எந்திரம் தொழிலாள வர்க்கத்திற்கு ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டிருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட்டது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் குரலை வழங்குவதற்காக அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் மீது அதன் கட்டுப்பாட்டை கடுமையாக்குவதற்காகவே.

புரட்சியின் 'ஜனநாயக' கட்டம் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று மாவோ கூறியிருந்தார். இருப்பினும், ஒரு வருடத்திற்குள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1950 ல் கொரியப் போரைத் தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டது. போர் தொடர்ந்ததும், சீனா தலையிட நிர்பந்திக்கப்பட்டதும், கொரியாவில் உள்ள அமெரிக்கத் தலைமையிலான படைகளை தங்களது சாத்தியமான விடுதலையாளர்களாகக் கருதிய முதலாளித்துவ வர்க்கத்தின் அடுக்குகளிலிருந்து அது உள் நாசத்தை எதிர்கொண்டது. சாத்தியமான அமெரிக்க படையெடுப்பை எதிர்கொண்டு, மாவோயிச ஆட்சி விரைவாக தனியார் நிறுவனங்களுக்குள் ஊடுருவுவதற்கும், அதிகாரத்துவ சோவியத் பாணியிலான பொருளாதாரத் திட்டமிடலை ஏற்படுத்துவதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டது.

அதே நேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கு அஞ்சிய மாவோயிச ஆட்சி சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீது தாக்குதலை மேற்கொண்டு, டிசம்பர் 22, 1952 மற்றும் ஜனவரி 8, 1953 ஆகிய தேதிகளில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஆதரவாளர்களை நாடுதழுவிய வகையில் கைது செய்தது. முக்கிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பல தசாப்தங்களாக குற்றச்சாட்டு இன்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.

1955 ஆம் ஆண்டு தீர்மானத்தில், சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகள்[1] சீனாவை ஒரு ஊனமுற்ற தொழிலாளர் அரசாக (deformed workers’ state) வரையறுத்தனர். தொழிற்துறை மற்றும் வங்கிகளின் தேசியமயமாக்கல், அதிகாரத்துவ பொருளாதார திட்டமிடல் ஆகியவற்றுடன், ஒரு தொழிலாளர் அரசுக்கு அடித்தளத்தை அமைத்திருந்தது. ஆனால் அது ஸ்ராலினிசத்தால் பிறப்பிலேயே ஊனமுற்றிருந்தது. நான்காம் அகிலம் சீனாவில் நிறுவப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளை நிபந்தனையின்றி பாதுகாத்தது. எவ்வாறாயினும், அதே நேரத்தில், அதன் மேலாதிக்கம்மிக்க அம்சத்தை கொண்டிருந்தபோதிலும் மாவோயிச ஆட்சியின் அதிகாரத்துவ ஊனமுற்ற மூல ஊற்றை அது அடையாளம் கண்டுகொண்டதுடன், சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசியல் புரட்சியின் மூலம் அது தூக்கியெறியப்படுவது சீனாவில் சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கான ஒரே வழியாகும் என்று குறிப்பிட்டது.

1949 சீனப் புரட்சி, சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் ஒரு மகத்தான முன்னேற்றமாக கருதப்படுகிறது. இது நேரடி ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும் சுரண்டலையும் முடிவுக்குக் கொண்டுவந்தது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் புரட்சிகர இயக்கத்தின் சமூக அபிலாஷைகளுக்கு விடையிறுக்கும் வகையில், சீன சமூகத்தில் சமூக மற்றும் கலாச்சாரரீதியாக பின்தங்கிய தன்மைகளான பலதார மணம், குழந்தை திருமணம், கால் கட்டுதல் மற்றும் திருமணபந்தத்தில் இல்லாத மறைமுக உறவு போன்ற பலவற்றை ஒழிக்க சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கட்டாயப்படுத்தப்பட்டது. இதில் கல்வியறிவின்மை பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு மற்றும் ஆயுட்காலம் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது.

ஆயினும்கூட, 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச முன்னோக்கு, விரைவிலேயே ஒரு பொருளாதார முட்டுக்கட்டைக்கு வழிவகுத்ததுடன் மற்றும் 1961-63 சீன-சோவியத் பிளவுக்குப் பின்னர் சீனா சர்வதேசரீதியாக தனிமைப்படலுக்கு வழிவகுத்தது. தேசிய தன்னிறைவு கட்டமைப்பிற்குள், சீனாவின் பிரச்சினைகளுக்கும் அதன் வளர்ச்சிக்கும் தீர்வு காண மாவோவாத தலைமையால் முடியவில்லை.

இதன் விளைவாக தொடர்ச்சியான கசப்பான மற்றும் அழிவுகரமான உள் பிரிவு மோதல்களால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து வெளியேற ஒரு வழியை தேடியது. இது பேரழிவிற்குப் பின்னர் பேரழிவிற்கு வழிவகுத்தது, கட்சியின் தேசியவாத முன்னோக்கு மற்றும் அகநிலை மற்றும் நடைமுறை சூழ்ச்சிகள் மூலம் சீனாவின் வளர்ச்சியின் சிக்கல்களை சமாளிக்க மாவோ மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவற்றுடன் பிணைந்திருந்தது.

அதில் பாரிய பஞ்சத்தை ஏற்படுத்திய மாவோவின் பேரழிவுகரமான “முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்” மற்றும் பெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி ஆகியவை அடங்கும். இக்கலாச்சாரப் புரட்சியில், பெரும் பாட்டாளி வர்க்கத்திற்குரியதோ அல்லது புரட்சிகரமானதோ எதுவும் இருக்கவில்லை. தனது போட்டியாளர்களுடன் கணக்குகளை தீர்ப்பதற்கான வழிமுறையாக மாணவர்களையும், உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் கூறுகளையும், விவசாயிகளையும் தனது செம்படைக்கு அணிதிரட்ட மாவோ செய்த முயற்சி ஒரு தீர்க்கப்படாத பேரழிவாக மாறியது. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை தகர்த்தெறிய இராணுவத்தை பயன்படுத்தியதோடு இது முடிந்தது.

1970 களில் முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கான திருப்பம்

சீனத் தொழிலாளர்கள் 1949 ஆம் ஆண்டின் அவசியமான மற்றும் நியாயமான புரட்சிக்கும் கலாச்சாரப் புரட்சியின் பிற்போக்குத் தன்மைக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டை வரைந்துகொள்ள வேண்டும். இக்கலாச்சாரப் புரட்சியின் கொந்தளிப்பு, மூன்றாவது பெரிய வரலாற்று திருப்புமுனையான முதலாளித்துவ மறுசீரமைப்புக்கும், 1949 இன் வெற்றிகளை திட்டமிட்டு அழிப்பதற்குமே களம் அமைத்தது.

பல்வேறு நவ-மாவோவாத போக்குகள், மாவோவை ஒரு உண்மையான சோசலிஸ்டாகவும் மார்க்சிச புரட்சியாளராகவும் அவரது கருத்துக்கள் குறிப்பாக 1978 ஆம் ஆண்டில் ஆரம்ப சந்தை சார்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய டெங் சியாவோபிங் போன்ற மற்றவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் சித்தரிக்க முயல்கின்றன.

ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், சீனப் பிரதமர் சூ என்-லாய்க்கும் தலைவர் மாவோ சே-துங்கின் மனைவி சியாங் சிங்கிற்கும் நடுவே பிப்ரவரி 22, 1972 இல் பீக்கிங்கில் உள்ள மக்களின் பாரிய மண்டபத்தில் நடந்த ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் அமர்ந்திருக்கிறார் (AP Photo)

உண்மையில், முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கான பாதையைத் திறந்தவர் மாவோ தான். அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான போர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பெய்ஜிங் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சோவியத் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கியது. இது, உலகளாவிய முதலாளித்துவத்துடன் சீனாவின் ஒருங்கிணைப்புக்கு அடிப்படையாக அமைந்தது. 1972 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனுடன் மாவோவின் உடன்பாடு, வெளிநாட்டு முதலீட்டிற்கும் மற்றும் மேற்கு நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிப்பதற்குமான அத்தியாவசிய முன் நிபந்தனையாக இருந்தது. வெளியுறவுக் கொள்கையில், மாவோவாத ஆட்சி, அமெரிக்கா தலைமையிலான மிகவும் பிற்போக்குத்தனமான சர்வாதிகாரங்களுடன், குறிப்பாக சிலியில் ஜெனரல் அகுஸ்டோ பினோசே மற்றும் ஈரானில் ஷா ஆகியோருடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தது.

அமெரிக்காவுடனான உறவுகள் இல்லாமல், வெளிநாட்டு மூலதனம் மற்றும் சந்தைகளுக்கான அணுகல் மற்றும் 1978 ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கிராமப்புறங்களில் கம்யூன்களுக்கு பதிலாக தனியார் நிறுவனங்களை நிறுவியது மற்றும் திட்டமிட்ட பொருளாதாரத்தை சந்தையால் மாற்றுவது உள்ளடக்கிய தனது பாரிய 'சீர்திருத்த மற்றும் பொருளாதாரத்தை திறந்துவிடும்' நிகழ்ச்சி நிரலை டெங் தொடங்கியிருக்க முடியாது.

இதன் விளைவாக தனியார் நிறுவனங்களின் பரந்த விரிவாக்கம், குறிப்பாக கிராமப்புறங்களில், சமூக சமத்துவமின்மையின் விரைவான உயர்வு, கட்சி அதிகாரத்துவத்தால் கொள்ளையடிக்கப்படுதல் மற்றும் ஊழல், வளர்ந்து வரும் வேலையின்மை மற்றும் உயரும் பணவீக்கம் ஆகியவை 1989 ல் தேசிய எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்தன. தியனன்மென் சதுக்கத்தில் மட்டுமல்ல, சீனா முழுவதிலும் உள்ள நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை டெங் மிருகத்தனமான முறையில் அடக்கியமை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெள்ளத்திற்கு கதவைத் திறந்தது. அவர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாள வர்க்கத்தை கண்காணித்துக்கொள்ளும் என்பதில் நம்பியிருக்க முடியும் என்பதை புரிந்து கொண்டனர்.

மே 1989 இல் தியனன்மென் சதுக்கத்தில் வெகுஜன ஆர்ப்பாட்டம் (AP Photo - Sadayuki Mikami)

மாவோயிசத்தின் பிற்போக்குத்தனமான பங்கு சர்வதேச அளவில் அதன் ஸ்ராலினிச சித்தாந்தமான 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' மற்றும் தொழிலாள வர்க்கத்தை தேசிய முதலாளித்துவத்திற்கு அடிபணிய வைக்கும் 'நான்கு வர்க்கங்களின் கூட்டு' ஆகியவற்றின் கொடூரமான விளைவுகளில் அதன் தெளிவான வெளிப்பாட்டைக் காண்கிறது. இந்தோனேசியாவில், இந்த அரசியல் ஒரு இராணுவ சதித்திட்டத்தின் போது தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்கி, ஒரு மில்லியன் தொழிலாளர்களை அழிக்க வழிவகுத்தது. மாவோயிசம் தெற்காசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் இதேபோன்ற தோல்விகளுக்கும் துரோகங்களுக்கும் வழிவகுத்தது.

ஜி மற்றும் பிற சீனத் தலைவர்கள் அபத்தமாக 'சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசம்' என்று அழைக்கப்படும் பொருளாதார சாதனைகளைப் பற்றி பெருமை பேசுகிறார்கள்.

அவர்கள் இன்னும் சோசலிசத்தைப் பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளதுடன், மேலும் அவர்களின் முதலாளித்துவக் கொள்கைகள் மார்க்சிசத்தால் வழிநடத்தப்படுகின்றன என்று கூட அறிவிக்கிறார்கள் என்பது, 1949 புரட்சியின் வெற்றிகளுடன் சீன மக்கள் தம்மை தொடர்ந்து அடையாள கண்டுகொள்வதற்கான சான்றாகும். கடந்த மூன்று தசாப்தங்களாக சீனாவின் மகத்தான பொருளாதார வளர்ச்சி, சீனப் புரட்சியின் தாக்கத்தை ஒரு முரண்பாடான முறையில் பிரதிபலிக்கிறது. அந்தப் புரட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்டகால சமூக சீர்திருத்தங்கள் இல்லாமல் அது சாத்தியமில்லை.

சீனப் புரட்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, ஒருவர் பின்வரும் கேள்வியை கேட்பது போதுமானது: இதுபோன்ற வளர்ச்சி இந்தியாவில் ஏன் ஏற்படவில்லை? இரு நாடுகளுக்கிடையேயான வேறுபாடு கோவிட்-19 தொற்றுநோய்களில் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது. இது ஆரம்ப கட்டத்தில் சீனாவால் கட்டுப்படுத்த முடிந்தது, அதே நேரத்தில் இது இந்தியாவில் கட்டுப்பாடில்லாமல் பரவி வருகிறது, ஏற்கனவே 400,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

சீனாவின் மறுக்கமுடியாத பொருளாதார வளர்ச்சி தொழிலாள வர்க்கத்தின் அணிகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில் உழைக்கும் மக்களின் குறிப்பிடத்தக்க பிரிவுகளின் சமூக நிலைமைகளையும் உயர்த்தியுள்ளது.

இந்த வளர்ச்சி இருந்தபோதிலும், மாவோயிசத்தின் கட்டமைப்பிற்குள் அல்லது ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய கொள்கைகளுக்குள் தீர்க்க முடியாத முதலாளித்துவத்திற்கு திரும்பியதன் அனைத்து முரண்பாடுகளையும் விளைவுகளையும் சீனா இன்று எதிர்கொள்கிறது.

உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் அதன் ஒருங்கிணைப்பு மற்றும் மலிவான சீன உழைப்பை சுரண்டுவதற்காக வெளிநாட்டு மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்தின் பாரிய வருகைக்கு சீனா ஒரு பயங்கரமான விலையை எதிர்கொள்கிறது. பொருளாதார வளர்ச்சி சீன முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை அதிகரித்துள்ளதுடன், பாரிய சமூகப் பதட்டங்களை உருவாக்கி ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்கு தூண்டியுள்ளது.

சீனாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், அது இன்னும் பல நாடுகளுக்குப் பின்தங்கி உள்ளதுடன் மற்றும் உலகில் 78 ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு, நூற்றாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியவுடன், சீனா 'முழுமையான வறுமையை' ஒழித்துவிட்டதாக ஜி பெருமை பேசினார். ஆனால் மிகவும் குறைந்த மட்டத்தில் காட்டப்படும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இவை மிகவும் கேள்விக்குரியவையும் மற்றும் வறுமை பரவலாக உள்ளது. மேலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. சீனாவின் பல பில்லியனர்களின் மகத்தான செல்வம் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது பரந்த மக்கள் மீது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 ல் செங்டுவில் உள்ள கோகோ கோலா தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்(Photo: Tianya/ty_一路上有你706

இறுதி ஆய்வில், சீனப் புரட்சியைத் தூண்டிய வரலாற்று கேள்விகளான ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தரகு முதலாளிகளின் பிடியை உடைத்தல் போன்றவை தீர்க்கப்படாமல் உள்ளன.

உண்மையில், சீனாவின் முதலாளித்துவ பொருளாதாரம் உலகளாவிய முதலாளித்துவ சந்தையில் தங்கியிருப்பதாலும், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் இராணுவ சுற்றி வளைப்பாலும் அவை இன்று இன்னும் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன. அதிகரித்தளவில் விரோதமான தேசிய அரசாக மாறிவரும் தைவான், சாத்தியமான உலகப் போருக்கான மோதல்களின் மையமாக மாறி வருகிறது. சுயாதீனமான தேசிய அபிவிருத்திக்கு மாவோயிசம் முன்வைத்த அனைத்து வாய்ப்புகளும் முற்றிலும் திவாலாகிவிட்டது.

சீனாவில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஹான் (Han) பெரும்பான்மையின் அடிப்படையில் தேசியவாதத்தை ஊக்குவிக்கிறது. வீகர் 'இனப்படுகொலை' பற்றி ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குத்தனமான பிரச்சாரம் அவமதிப்புக்கு தகுதியானது என்றாலும், தேசியவாத உணர்வுகளுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விடுத்த அழைப்பு, பரந்த பன்மொழி மற்றும் பன்முக சமுதாயத்தில் எந்தவொரு முற்போக்கான பங்கையும் வகிக்க முடியாது.

உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் மற்றும் விவசாயிகளால் ஆதரிக்கப்படும் ஒரு சோசலிச புரட்சியின் மூலமாக மட்டுமே, ஏகாதிபத்திய ஒடுக்குமுறை உட்பட, தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில், அடிப்படை ஜனநாயக மற்றும் தேசிய பணிகளை நிறைவேற்ற முடியும் என்ற ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்தை அதன் அனைத்து சிக்கலானதும், முரண்பாடானதுமான சீனாவின் வரலாறு உறுதிப்படுத்தியுள்ளது.

உலக சோசலிச புரட்சிக்கான இந்த பாதை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ அடுக்குகளுக்கும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

தணிக்கை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள் மீதான வன்முறை அடக்குமுறை, சமூக பதட்டங்கள் கூர்மையடைவதானால் வளர்ந்து வரும் எதிர்ப்பின் அறிகுறிகளை எதிர்கொள்கையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஸ்ராலினிசத்தின் அடக்குமுறை முறைகளைத் தவிர வேறு தீர்வு இல்லை.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தானே ஊழல் மற்றும் பிரிவு மோதல்களால் உந்தப்பட்டு உடைந்துபோக அச்சுறுத்தப்படுகின்றது. கட்சி ஒற்றுமையைத் தக்கவைக்க அவரை நம்பியுள்ள போட்டி பிரிவுகளை சமநிலைப்படுத்தி, ஒரு போனபார்ட்டிச நபராக ஜி உருவெடுத்துள்ளார். வழக்கமாக 'மத்தியில்' நிற்பதாக குறிப்பிடப்பட்டு, மாவோவுக்கு அடுத்தபடியாக புகழப்படும் ஜி இன் மகிமை, தனிப்பட்ட அரசியல் பலத்திலிருந்து உருவாகவில்லை, மாறாக கட்சியை உலுக்கும் ஆழ்ந்த நெருக்கடியை பிரதிபலிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சீனாவுடனான பெருகிய முறையில் ஆக்கிரமிப்பு மோதல்கள், ஜனாதிபதி ஒபாமாவால் தொடங்கப்பட்டு மற்றும் ட்ரம்ப் மற்றும் இப்போது பைடெனின் கீழ் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் பல தசாப்த கால பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு உதவிய அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும், இப்போது சீனாவை அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முதன்மை அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. மேலும் சீனாவை வாஷிங்டனால் நிறுவப்பட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கின், 'சர்வதேச விதிகளின் அடிப்படையிலான அமைப்புக்கு' அடிபணியச் செய்ய போர் உட்பட அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த அவர்கள் தயாராகி வருகின்றனர்.

ஏகாதிபத்தியத்துடனான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'சமாதான சகவாழ்வு' முன்னோக்கு மற்றும் முதலாளித்துவ உலக ஒழுங்கில் தனது இடத்தைப் பெறுவதற்கான சீனாவின் அமைதியான உயர்வுக்கான எதிர்பார்ப்பு ஆகியவை உடைந்து கொட்டுகின்றன. ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஆதரவுடன் பைடென், அமெரிக்க நட்பு நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு எதிரான போருக்கு ஆயுதம் ஏந்த நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை இறைக்கின்றார். அதே நேரத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினால் பிரிவினைவாத போக்குகளை கடுமையாக அடக்கப்படுவதன் மூலம் தூண்டப்பட்ட சீனாவிற்குள்ளான பதட்டங்களை வாஷிங்டன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டை பலவீனப்படுத்துவதற்கும் உடைப்பதற்கும் முயற்சிக்கிறது.

ஒரு பேரழிவுகரமான போரின் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை, இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை அடிப்படையில் சீனாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதன் ஆயுதப் படைகளை கட்டமைத்து, அதன் “ஒரே இணைப்பு, ஒரே சாலை முன்முயற்சியை” (“Belt and Road Initiative”) ஊக்குவிக்கிறது. ஒருபுறம், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சமாதானப்படுத்தவும் புதிய ஒப்பந்தத்தை எட்டவும் முயற்சிக்கிறது. மறுபுறம், அது ஒரு பயனற்ற ஆயுதப் பந்தயத்தில் ஈடுபட முற்பட்டு பேரழிவில் மட்டுமே முடிவுக்கு வரக்கூடிய தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தைத் தூண்டிவிடுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட சோசலிச சர்வதேசியவாதத்தை வெகு காலத்திற்கு முன்பே கைவிட்ட நிலையில், சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் எந்தவொரு அழைப்புவிட அது இயல்பிலேயே இலாயக்கற்றுள்ளது.

போர், சுற்றுச்சூழல் பேரழிவு, சமூக நெருக்கடிகள் அல்லது கோவிட்-19 தொற்றுநோய் போன்ற மனிதகுலத்தை எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் எதுவும் முதலாளித்துவத்தின் கட்டமைப்பிற்குள்ளும் மற்றும் உலகத்தை போட்டி தேசிய அரசுகளாக காலாவதியானமுறையல் பிரிப்பதாலும் தீர்க்கப்பட முடியாது. சீனாவில் தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எந்திரத்தால் தூண்டப்பட்ட துர்நாற்றம் வீசும் தேசியவாதத்தை நிராகரித்து, 1921 இல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதன் அடிப்படையை உருவாக்கிய சோசலிச சர்வதேசியவாதத்தின் பாதையில் திரும்புவதாகும்.

இதன் பொருள், சீனத் தொழிலாள வர்க்கத்திற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பை மறுசீரமைப்பதாகும். நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் ஸ்ராலினிசம், அதன் பொய்கள், வரலாற்று பொய்மைப்படுத்தல்களுக்கு எதிராக மார்க்சிச கொள்கைகளுக்கான அதன் பல தசாப்த கால போராட்டத்தின் அரசியல் படிப்பினைகள் குறித்து கற்றுக்கொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைத் தொடர்புகொண்டு அதன் புரட்சிகர முன்னோக்குக்காக போராட ஒரு சீனப் பிரிவை நிறுவுவதற்கான செயல்முறையைத் தொடங்குமாறு நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

பிற்குறிப்புகள்

அமெரிக்காவில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) 1953 ஆம் ஆண்டில் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாத போக்குக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை அமைப்பதற்கான போராட்டத்தை வழிநடத்தியது. இந்த சந்தர்ப்பவாத போக்கு, ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசத்தை ஒரு எதிர்ப்புரட்சிகர போக்கு என்று வரையறுத்ததை நிராகரித்ததோடு, மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு ஒரு புரட்சிகர நோக்குநிலையை எடுக்க அழுத்தம் கொடுக்க முடியும் எனக் கூறியது. 1963 ஆம் ஆண்டில், சோசலிச தொழிலாளர் கட்சி சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து பிரிந்து, 1953 இல் தோன்றிய அரசியல் வேறுபாடுகள் குறித்து எந்த விவாதமும் இன்றி, கொள்கை ரீதியான அடித்தளமேதுமின்றி பப்லோவாதிகளுடன் ஒன்றிணைந்தது.

Loading