மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பெலாருஸ் உடனான போலாந்து எல்லை மோதலுக்கு உதவுவதற்காக, கூட்டு நேட்டோ சக்தியின் முதல் தரைப்படை நிலைநிறுத்தலாக, இங்கிலாந்து அதன் ராயல் எலக்ட்ரிக்கல் அண்ட் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் பிரிவிலிருந்து போலாந்துக்குப் பத்து துருப்புக்களை அனுப்பியுள்ளதாக நேற்று அறிவித்தது. அது எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும், பிரிட்டனில் இருந்து படைகளின் தலையீடு என்பது, ரஷ்யாவை இறுதி இலக்காக வைத்து போலாந்து அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் ஆத்திரமூட்டலில் ஒரு தீவிரப்பாட்டைச் சமிக்ஞை செய்கிறது.
பெலாருஸில் இருந்து போலந்து வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய முயன்று வருகின்ற பல ஆயிரம் அகதிகள், பாரியளவில் இராணுவப் படை நிலைநிறுத்தல் மற்றும் வன்முறையைச் சந்திக்கின்றனர். 20,000 பேர் இருக்கலாம் என்று செய்திகளில் கூறப்படும் போலாந்து சிப்பாய்கள் இப்போது தஞ்சம் கோருவோரைச் சட்டவிரோதமாக, மூர்க்கமாக, திருப்பி அனுப்புவதை மேற்பார்வையிட்டவாறு, பெலாரஷ்ய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெலாருஸ் அரசுப் படைகள் ஆயிரக் கணக்கான மைல்களுக்கு மக்களை ஏற்றி வந்து எல்லையைக் கடக்க உதவுவதாக கூறி, 'கலப்பினப் போர்' மற்றும் 'அரசு பயங்கரவாதத்தில்' பெலாருஸ் ஈடுபட்டிருப்பதாக போலந்து குற்றஞ்சாட்டுகிறது. இந்த கொள்கையின் சிற்பியாக அவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
போலாந்தின் இந்த போர்-ஆக்ரோஷம் பரந்தவொரு தாக்குதலின் பாகமாக இருப்பதை, இவ்வாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளிடம் இருந்து வந்த அறிக்கைகள் உறுதிப்படுத்தின.
வியாழக்கிழமை ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டம் ஒன்றில், எஸ்தோனியா, பிரான்ஸ், அயர்லாந்து, நோர்வே, அமெரிக்கா மற்றும் பிரிட்டனும் ஓர் அறிக்கை வெளியிட்டன, இதை ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா நிராகரித்தது. அந்த அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது, “அண்டை நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லையையும் நிலைகுலைக்கும் நோக்கில் மற்றும் அதன் சொந்த அதிகரித்து வரும் மனித உரிமைமீறல்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில், அரசியல் நோக்கங்களுக்காக, மனித உயிர்களையும் நல்வாழ்வையும் பொலாருஸ் ஆபத்திற்கு உட்படுத்தி கருவியாக்குவதற்காக அவர்களை முடுக்கி விடுவதை நாங்கள் கண்டிக்கிறோம்,” என்றது.
ஒரு 'பலமான சர்வதேச எதிர்வினைக்கு' அழைப்பு விடுத்த அவை, 'நாம் எடுக்கக்கூடிய கூடுதல் நடவடிக்கைகளை விவாதிக்க' உறுதிபூண்டன.
நேட்டோவின் அறிக்கை, நடத்தப்பட்டு வரும் ரஷ்ய-விரோத தாக்குதலின் அளவைத் தெளிவுபடுத்தியது:
'அரசியல் நோக்கங்களுக்காக போலந்து, லித்துவேனியா மற்றும் லாட்வியாவுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட கலப்பின நடவடிக்கைகளின் பாகமாக, பெலாருஸ் செயற்கையாக உருவாக்கிய ஒழுங்குமுறையற்ற புலம்பெயர்வைத் தொடர்ந்து கருவியாக்குவதை வட அட்லாண்டிக் கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது... போலந்து, லித்துவேனியா மற்றும் லாத்வியாவுடனான அதன் எல்லைகளில் பெலாருஸ் செய்யும் கூடுதல் ஆத்திரமூட்டல் மற்றும் தீவிரப்பாட்டின் அபாயத்திற்கு எதிராக நாங்கள் விழிப்புடன் இருப்போம் என்பதோடு, கூட்டணியின் பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளை தொடர்ந்து கண்காணிப்போம்,” என்று குறிப்பிட்டது.
பெலாருஸில் புலம்பெயர்வோர் 'ஆயுதமயமாக பயன்படுத்தப்படுகிறார்கள்' என்று கூறப்படும் விவகாரத்தை நேட்டோ ஒரு பிரச்சார நடவடிக்கையாக முன்னெடுக்கின்ற அதேவேளையில், அது ரஷ்யாவின் எல்லையில், கருங்கடலில், பொறுப்பற்ற இராணுவ ஆத்திரமூட்டல்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஒரு பிரிட்டிஷ் போயிங் RC-135 ரைவெட் ரக கூட்டு உளவு விமானத்தை (RC-135 Rivet Joint spy plane) இடைமறித்துப் பிடிக்க ரஷ்யா ஒரு போர் விமானத்தை அனுப்பியதாகவும், அந்த பிரிட்டிஷ் உளவு விமானம் கிரிமியாவுக்கு நெருக்கமாக வர முயன்றதாகவும் வியாழக்கிழமை ரஷ்யா குறிப்பிட்டது. அதே 24 மணி நேரத்தில் அப்பகுதியில் நான்கு உளவு விமானங்களும் இரண்டு அமெரிக்க போர்க் கப்பல்களும் இயக்கப்பட்டதைக் கண்டதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்தது.
ரஷ்யாவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷெக்கா கருத்துரைக்கையில், 'கிழக்கு உக்ரேனிய நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ஓர் இராணுவ நடவடிக்கைக்கு உக்ரேன் தயாராகும் பட்சத்தில் ஒரு சாத்தியமான போர் அரங்கைக் காண விரும்பும் நடவடிக்கைகளாகவே, கருங்கடலில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் இராணுவ நடவடிக்கைகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கையாள்கிறது,” என்றார்.
உக்ரேனின் கிழக்கில் மோதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்தும், மற்றும் மூர்க்கமான ரஷ்ய-விரோத உக்ரேனிய அரசை நேட்டோவில் அனுமதிக்கும் பேச்சுவார்த்தைகள் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், கடந்த மாதத்தில் இருந்து பதட்டங்கள் அதிகரித்து உள்ளன.
அக்டோபர் 26 இல், உக்ரேனிய படைகள் டொன்பாஸ் பகுதியில் துருக்கிய பெய்ராக்தார் TB2k (Bayraktar TB2k) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஷ்ய சார்பு படைகள் மீது அவற்றின் முதல் டிரோன் தாக்குதலை நடத்தின, இந்த தொழில்நுட்பம் லிபியா மற்றும் நகோர்னோ-காராபாக் மோதல்களில் 'திருப்புமுனையை' ஏற்படுத்தி இருந்ததாக Foreign Policy இதழ் விவரித்தது.
உக்ரேனுக்கு நேட்டோ அங்கத்துவம் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறு, சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டினின் உக்ரேன் பயணத்தாலும், அத்துடன் ஜோர்ஜியா மற்றும் ருமேனியா பயணங்களாலும், அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. உக்ரேனின் நேட்டோ அபிலாஷைகளுக்கு ரஷ்யாவின் ஆட்சேபனைகள் பற்றி அவர் விஜயத்தின் போது கேட்டதற்கு, ஆஸ்டின் கூறுகையில், 'உக்ரைனுக்கு... அதன் சொந்த எதிர்கால வெளியுறவுக் கொள்கையை முடிவு செய்ய உரிமை உண்டு, எந்த வெளிப்புற தலையீடும் இல்லாமல் அவர்கள் அதை செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,' என்று பதிலளித்தார்.
'கிரிமியா மீதான அதன் ஆக்கிரமிப்பைக் கைவிடுமாறு' ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்த அவர், 'தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான உக்ரேனின் முயற்சிகளுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம்,' என்று எச்சரித்தார்.
அதற்கு புட்டின் பதிலளித்தார், 'நேட்டோவில் [உக்ரேனுக்கு] முறையான உறுப்பினர் அந்தஸ்து நிறைவேறாமல் போனாலும், அப்பிராந்தியத்தில் இராணுவ அதிகரிப்புகள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்றன... இது ரஷ்ய கூட்டமைப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறது,' என்றார்.
அக்டோபர் 30 இல், வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுகையில், ரஷ்யாவின் உக்ரேனிய எல்லைக்கு அருகே ரஷ்யப் படைகள் கணிசமானளவு கட்டமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் Politico அந்த கதையைப் பிடித்துக் கொண்டது, Maxar Technologies நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்கள் 'ரஷ்ய நகரமான யெல்னியாவுக்கு அருகே தரைப்படைகளுடன் சேர்ந்து கவசப் பாதுகாப்புப்படை, டாங்கிகள் மற்றும் தானியங்கி சிறுபீரங்கிகள் ஆகியவை கட்டமைக்கப்பட்டு இருப்பதை' காட்டியதாக அது குறிப்பிட்டது. இவற்றில் 1ஆம் உயரடுக்கு பாதுகாப்பு டாங்கி ஆயுதப்படையும் உள்ளடங்கும்.
அந்த வலைத்தளம் தொடர்ந்து குறிப்பிட்டது, 'ரஷ்யாவின் 4 ஆம் டாங்கி படைப் பிரிவில் இருந்து உபகரணங்கள் உக்ரேனின் வடக்கு எல்லைக்கு அருகில் உள்ள ப்ரையன்ஸ்க் மற்றும் குர்ஸ்க் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளதை ஜேனின் [ஓர் இராணுவ உளவுத்துறை நிறுவனத்தின்] ஒரு புதிய பகுப்பாய்வு திங்கட்கிழமை வெளிப்படுத்தியது.”
மொத்தம் சுமார் 90,000 ரஷ்ய துருப்புக்கள் ஈடுபட்டிருப்பதாக உக்ரேனின் பாதுகாப்பு அமைச்சகம் வாதிடுகிறது.
Politico இன் கட்டுரையை 'தரந்தாழ்ந்தது' என்று ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் உதறித் தள்ளினார். அதே நேரத்தில், “எங்கள் இராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதப்படைப் பிரிவுகளின் நகர்வு… முற்றிலும் எங்களின் சொந்த விவகாரம்,” என்று வலியுறுத்தினார்.
நேற்று அவர் கூறுகையில், “எங்கள் எல்லைகளுக்கு அருகில் எங்கள் எதிரிகள் பலத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளும் போது எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம். நாங்கள் அதற்கு அலட்சியாக இருக்க முடியாது,” என்றார்.
ரஷ்யா உடனான அதன் எல்லை அருகில் உக்ரேன் இதுவரையில் 8,500 துருப்புகளை நிலைநிறுத்தி உள்ளது.
புதனன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் வாஷிங்டனில் ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தினார். உக்ரேனில் நேட்டோ ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து நடந்த கிரிமியா இணைப்பைக் குறிப்பிடும் விதத்தில், 'ரஷ்யா 2014இல் செய்த பெரும் தவறை மீண்டும் மேற்கொள்ள மறுபரிசீலனை செய்ய முயற்சிக்கக் கூடும் என்பதே எங்கள் கவலை' என்று ப்ளிங்கன் தெரிவித்தார்.
எச்சரிக்கும் விதத்தில், “நாங்கள் இதை மிக நெருக்கமாக, மிகவும் நெருக்கமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக கலந்தாலோசித்து வருகிறோம்,” என்றவர் நிறைவு செய்தார். “உக்ரேனின் இறையாண்மைக்கும், அதன் சுதந்திரத்திற்கும், அதன் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் நாங்கள் உறுதியாக பொறுப்பேற்றுள்ளோம் என்பதை நான் டிமிட்ரோவுக்கு மீண்டும் தெரிவித்தேன் என்ற சேதியை நாங்கள் இன்று மீண்டும் வழங்குகிறோம்,” என்றார்.
அமெரிக்கா 'எங்களிடம் உள்ள பல்வேறு கருவிகளைக் கவனத்தில்' கொண்டுள்ளது என்பதையும் அந்த வெளியுறவுத்துறை செயலர் நேற்று சேர்த்துக் கொண்டார்.
பிரெஞ்சு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் அவர்களின் ரஷ்ய சமபலங்களுடன் சந்திப்பு நடத்திய பின்னர் அவரது அச்சுறுத்தல்களையே அவர்களும் எதிரொலித்தனர். பிரெஞ்சு அமைச்சர்கள், “உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு புதிய பாதிப்பு சம்பந்தமாகவும் தீவிர விளைவுகள் ஏற்படுமென எச்சரித்தனர்' மற்றும் 'ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளை இலக்கு வைத்து புலம்பெயர்வு ஓட்டத்தை கருவியாக்குவது தொடர்பான பெலாரஷ்ய அதிகாரிகளின் பொறுப்பற்ற மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கையை கண்டித்தனர்,” என்று ஒரு கூட்டு பத்திரிகை அறிக்கை குறிப்பிட்டது.
வெள்ளிக்கிழமை காலை, இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப், 'ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்கலாம், அமெரிக்கா எச்சரிக்கிறது,' என்ற தலைப்பில் அதன் முதல் பக்க தலைப்பு செய்தியை வெளியிட்டது. உக்ரேனிய எல்லையில் ரஷ்ய துருப்புகளின் நடமாட்டம் பற்றிய செய்திகள் குறித்து இங்கிலாந்து அரசாங்கம் 'கவலை' கொண்டிருப்பதாகவும் மற்றும் 'அங்கே அதிகாரிகளிடையே 'இழுபறியும்' 'பதட்டமும்' இருப்பதாகவும்' அந்த பத்திரிகைக்கு 'மூத்த வொய்ட்ஹால் ஆதாரநபர்கள்' தெரிவித்ததாக அந்த செய்தி குறிப்பிட்டது.
“அவர்கள் [அமெரிக்க அதிகாரிகள்] ரஷ்ய நகர்வுகள் பற்றிய உளவுத்தகவல்களைக் கூட்டாளிகளுடன் பகிர்ந்துள்ளதுடன், ஓர் இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறு குறித்து அவர்களுக்கு விளக்கி உள்ளனர்,” என்றது தொடர்ந்து குறிப்பிட்டது.
இத்தகைய சம்பவங்கள் ஐரோப்பாவில் தீவிரமான போர் அபாயம் வெடித்து வருவதை எடுத்துக் காட்டுகின்றன.
ஐரோப்பிய மற்றும் நேட்டோ சக்திகள், போலந்து மற்றும் உக்ரேனில், ஆயிரக் கணக்கான துருப்புகளின் நகர்வுகள் சம்பந்தப்பட்ட ஓர் ஆக்ரோஷமான ரஷ்ய-விரோத நடவடிக்கையை முன்நகர்த்த மிகப் பெரிய பாசிச வட்டாரங்களைக் கொண்ட அதிவலது பினாமிகளைச் சார்ந்துள்ளன. அவை ரஷ்ய எல்லையைத் தாக்கும் தூரத்தில் அவற்றின் சொந்த படைகளை நிலைநிறுத்தி உள்ளன.
அவை உருவாக்கியுள்ள நிலைமை ஓர் ஆயுத மோதலைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. ரஷ்யா உக்ரேனிய எல்லையில் சிப்பாய்களை நிலைநிறுத்தியதற்குக் கூடுதலாக, போலாந்து எல்லையின் வெடிப்புப் புள்ளியிலிருந்து வெறும் 20 மைல் தூரத்தில் பெலாருஸ் உடன் வெள்ளிக்கிழமை திடீரென பறக்கும் படைப்பிரிவின் (paratrooper) ஒத்திகைகளை நடத்தியது. அதே நாளில் ஆங்கில கால்வாயை நோக்கி வடக்கு கடலின் மீது பறந்த இரண்டு அணுஆயுதமேந்தும் ஆற்றல் கொண்ட ரஷ்ய குண்டுவீசி விமானங்களை ராயல் விமானப்படை வழி நகர்த்தி விட்டதாக பிரிட்டன் வாதிடுகிறது.
பெரும் சமூக பதட்டங்களை வெளியே திசைதிருப்பி விடுவதற்கும் மற்றும் மேலாதிக்கம் செலுத்தத்தக்க அடிபணிந்த ஒரு ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான அவற்றின் நீண்டகால மூலோபாய இலட்சியத்தைப் பின்தொடர, ஏகாதிபத்திய சக்திகள் ஒரு பேரழிவுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன.