மின்சார ஊழியர்கள் இலங்கை அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் உடன்படிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை முழுவதும் சுமார் 2,000 இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்கள் கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையம் மற்றும் ஏனைய தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளியாப்பிட்டி, குருநாகல், அநுராதபுரம், காலி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், லக்சபான, களனிதிஸ்ஸ, லக்விஜய மற்றும் சபுகஸ்கந்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டனர்.

இராஜபக்ஷ அரசாங்கம் அமெரிக்காவிற்குச் சொந்தமான நியூ ஃபோர்ட்ரஸ் நிறுவனத்துடன் இரகசிய தனியார்மயமாக்கல் ஒப்பந்தத்தில், செப்டம்பர் 17 நள்ளிரவில் அதன் அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானவர்களுடன் கையெழுத்திட்டது. ஏனைய இலங்கை மக்கள் உடன்பாடு பற்றி எந்த தகவலும் தெரியாதவர்களாக இருந்தனர்.

இந்த உட்ன்படிக்கையில், தற்போது கெரவலப்பிட்டி யுகதனவி எல்.என்.ஜி. மின் நிலையத்தை கட்டுப்படுத்தும் வெஸ்ட் கோஸ்ட் நிறுவனத்தின் 40 சதவீத உரிமை அமெரிக்க கம்பனிக்கு விற்கப்படும். அத்துடன் மற்ற மின் நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி.) உற்பத்தி செய்து வழங்கும் உரிமையும் சேர்த்து விற்கப்படுகின்றது.

காலியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் [Photo: WSWS Media]

இ.மி.ச. பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் ஊடகங்களில் இருந்து தற்போது கிடைத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களினதும் படி, நிறுவனத்திற்கு சேமிப்பு, வகைப்பாடு மற்றும் விற்பனையுடன் ஆழ்கடலில் இருந்து எல்.என்.ஜி. பிரித்தெடுக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் 15 வருட காலத்திற்கு செல்லுபடியாகும் அதே வேளை அது நீடிக்கப்படலாம்.

அதே செய்திகளின்படி, நிறுவனம் வழங்கும் எல்.என்.ஜி.க்கு அரசாங்கம் அதிக விலை கொடுக்கும். 300 மெகாவாட் (MW) கொள்ளளவைக் கொண்ட கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலையத்திற்கு 35,000 பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்கள் (BTU) அல்லது நாளொன்றுக்கு 1.2 மில்லியன் கலன் எல்.என்.ஜி. தேவைப்படுகிறது. ஒரு பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் (BTU) தற்போது 1.45 டொலர் செலவாகிறது, அதாவது அரசாங்கம் நாளொன்றுக்கு சுமார் 50,000 டொலர்களை குறித்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

எதிர்கால மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் நியூ போர்ட்ரஸ் நிறுவனத்திடமிருந்து எல்.என்.ஜி.யை கொள்வனவு செய்யுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது. ஒப்பந்தங்களின் கீழ், அரசாங்கம் குறிப்பிட்ட அளவு எல்.என்.ஜி. அலகுகளை வாங்க வேண்டும். அவை பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பது இங்கு பொருட்படுத்தப்படாது. எல்.என்.ஜி. கொள்வனவு செய்யப்படாவிட்டால், தற்போதைய விலையை விட சுமார் நான்கு மடங்கு, அதாவது, பி.டி.யூ. ஒன்றுக்கு 5.50 டொலர் என்ற அளவில், அரசாங்கம் நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

கோவிட்-19 தொற்றுநோயால் மோசமடைந்துள்ள தேசிய பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில், அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களுக்கும் அது மேலும் மேலும் முன்னெடுக்கும் சமூகத் தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பின் ஒரு பகுதியாகவே இ.மி.ச. தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான இலங்கை மின்சார ஊழியர் சங்கம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) நடத்தும் தேசிய ஊழியர் சங்கம் ஆகியவை உள்ளடக்கிய இ.மி.ச. ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பால் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள், தனியார்மயத்திற்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை ஏற்பாடு செய்யாமல், கொள்கையை மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்ற போலிக் கூற்றுக்கள் மூலம் தொழிலாளர்களின் எதிர்ப்பை சிதறடிக்கவும் திசைதிருப்பவும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

பிரச்சாரம் பற்றி கேட்டபோது, ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால், கூட்டமைப்பானது ஒப்பந்தத்திற்கு எதிராக 'பெரிய' நடவடிக்கையை அபிவிருத்தி செய்யும் என்றும், மதக் குழுக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகளை ஈடுபடுத்தும் என்றும் உலக சோசலிச வலைத் தளத்திடம், கூறினார். இந்த வகை இயக்கத்தின் நோக்கம், இ.மி.ச. தொழிலாளர்களை வேண்டுமென்றே திசைதிருப்புவதும், இலங்கை முதலாளித்துவத்தின் ஏதாவது ஒரு பிரிவுடன் அவர்களை கட்டிப் போட்டு வைத்திருப்பதுமே ஆகும்.

யாழ்ப்பாணத்தில் மின்சார ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் [Photo credit: WSWS Media]

ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு, சமீபத்திய வாரங்களில் ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. உட்பட பல முதலாளித்துவக் கட்சிகளுடன் பிரச்சாரம் பற்றி 'கலந்துரையாடுவதற்காக' சந்தித்துள்ளது. இக்கட்சிகளுக்கு இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைகளுடன் எந்த அடிப்படை கருத்து வேறுபாடும் கிடையாது. ஐ.ம.ச. தலைவர்கள். முதலில் கொழும்பின் தனியார்மயமாக்கல் கொள்கைகளை ஆரம்பித்து வைத்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தனர். அதே நேரம், ஜே.வி.பி., இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்த ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

உண்மையில், இ.மி.ச. தொழிலாளர்களதும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியடைந்துவரும் எதிர்ப்பும், இராஜபக்ஷ ஆட்சியுடன் நேரடி அரசியல் மோதலுக்கு கொண்டுவந்து, முதலாளித்துவ ஆட்சியைக் கீழறுத்துவிடும் என்ற பீதி காரணமாகவே, இந்த அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளன.

அக்டோபர் 27 அன்று ஊடகங்களுக்கு உரையாற்றிய ஜயலால், நவம்பர் 3 அன்று இ.மி.ச. தொழிலாளர்கள் கொழும்பில் அணிதிரட்டப்படுவார்கள் என்றும், அரசாங்கத்தின் யுகதனவி ஒப்பந்தத்தை அந்தத் திகதிக்கு முன்னதாக 'சுருட்டிக்கொள்ளவில்லை' என்றால், 'காலவரையற்ற வேலைநிறுத்தம்' நடக்கும் என்றும் பெருமையாகக் கூறினார். 'இராணுவம் மற்றும் அதன் உதவியாளர்களைப் பயன்படுத்தி' மின் உற்பத்தி நிலையங்களை பராமரிக்க முயற்சிக்குமாறு அரசாங்கத்திற்கு அவர் வாய்ச்சவடாலில் 'சவால்' விடுத்தார்.

பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இராஜபக்ஷ ஆட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட யுகதனவி உடன்படிக்கையையோ அல்லது அதுபோன்ற ஒப்பந்தங்களையோ, ஜயலாலின் தோரணை தோற்கடிக்காது. பொது நிறுவனங்களின் தனியார்மயமாக்கலானது, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டதும் அரசாங்கத்தின் பெருவணிகச் சார்பு திட்டத்தின் இன்றியமையாத பகுதியும் ஆகும். இலங்கை மின்சார சபையுடன் சேர்த்து துறைமுகங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், புகையிரத மற்றும் ஏனைய அரச நிறுவனங்களையும் தனியார்மயமாக்க கொழும்பு முன்நகர்கிறது.

இ.மி.ச. தொழிலாளர்கள் இந்த செயற்பட்டியலுக்கும், வாழ்க்கைத் தரங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கும் எதிராக நிற்கின்றனர். சிலாபத்தைச் சேர்ந்த இ.மி.ச. தொழிலாளி ஒருவர், உலக சோசலிச வலைத் தளத்திடம் இடம் கூறியது போல்: “தனியார்மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். இது தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களை பாதிக்கும். அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் ஏற்கனவே அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க முடிவு செய்துள்ளதுடன் தனியார்மயமாக்கலின் கீழ் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும். அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்பினர் இந்த உடன்படிக்கையை எதிர்க்கின்றனர் என்பது பொய்யானது,'' என்றார்.

“அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் தாங்க முடியாதது. கடனுக்கான கழிவுகளுக்குப் பிறகு, எனது [மாத] சம்பளம் 30,000 ரூபாய் (150 டொலர்) மட்டுமே. எனது வேலையில் மாதத்திற்கு 2,000 வீடுகளுக்கு மின்கட்டணம் பதிவு செய்வதும் எழுதுவதும் அடங்கும், ஆனால் இதற்கான பயணச் செலவை நாமே ஏற்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

கண்டியைச் சேர்ந்த இ.மி.ச. நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர், தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை ஒழுங்கமைக்காத தொழிற்சங்கங்களைக் கண்டித்தார். “27 தொழிற்சங்கங்களும் ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்ததைத் தவிர, போராட்டங்களை ஏற்பாடு செய்யவில்லை. [வெள்ளிக்கிழமை] போராட்டத்தில் குறைவான பங்கேற்புக்கு அதுவே காரணம். துறைமுகத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன, ஆனால் அங்கும் அதுதான் நடந்தது,” என்றார்.

காலியைச் சேர்ந்த இ.மி.ச. ஊழியர் ஒருவர் பொது நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதைத் தடுக்க ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். “தனியார்மயமாக்கலை ஒரே ஒரு போராட்டத்தால் தடுத்து நிறுத்த முடியாது. அரசு அதை ஒடுக்கும். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிரான பொலிஸ் அடக்குமுறை நடவடிக்கைகளின் தயாரிப்பில் இதைக் கண்டோம். உழைக்கும் வர்க்கம் மற்றும் சாதாரண மக்களின் ஆதரவைப் பெற வேண்டும்,'' என்றார்.

சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது போல், தொழிலாளர்கள் ஒவ்வொரு வேலைத் தளத்திலும், முதலாளித்துவ வர்க்கத்தின் முகவர்களாக செயல்படும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்களின் தொழிற்துறை மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்டுவதற்கு போராடுவதற்காக நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதோடு, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும். .

இ.ம.ச., இலங்கைப் பொருளாதாரத்தின் ஒரு மூலோபாயத் துறையாக இருந்தாலும், அதன் தொழிலாளர்கள் அபரிமிதமான தொழில்துறை சக்தியைக் கொண்டிருந்தாலும், தொழிற்துறை பலத்தால் மட்டும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைகளைத் தோற்கடிக்க முடியாது. வேலைகள், வேலை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதில் முழு தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த அரசியல் போராட்டம் அவசியமாகும்.

இராஜபக்ஷ ஆட்சியின் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராக, இலங்கைத் தொழிலாளர்கள் தங்களுடைய சுயாதீனமான பலத்தைத் திரட்டி, வங்கிகள் உட்பட அனைத்து பிரதான தொழில்துறைகளையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும்.

Loading