மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் ஆதரவு பெற்ற ஒரு புதிய ஐந்தாண்டு கால விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்திற்கான வாக்குப்பதிவின் ஆரம்ப முடிவுகள், அந்த உடன்படிக்கை பாரிய தோல்வியை நோக்கிச் செல்வதை எடுத்துக்காட்டுகின்ற நிலையில், டேனா வாகன உதிரி பாகங்கள் ஆலை தொழிலாளர்களிடையே ஓர் உத்வேகமான உறுதிப்பாடு அதிகரித்து வருகிறது. இவ்வாரம் முழுவதும் தொடரும் வாக்குப்பதிவு, வியாழக்கிழமைக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சோசலிச வலைத் தள வாகனத்துறை தொழிலாளர் செய்தியிதழ் நடத்திய பகுப்பாய்வின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில், நாடெங்கிலுமான ஆலைகளில் இருந்து வெளியான முடிவுகள் 80 சதவீதம் “வேண்டாம்” வாக்குகளைக் காட்டுகின்றன, 803 வாக்குகள் எதிராகவும் வெறும் 202 தொழிலாளர்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்துள்ளனர். அந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக எந்த ஆலையும் வாக்களிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
அந்த தேசிய அல்லது “உலகளாவிய” ஒப்பந்தம் மீது ஞாயிற்றுக்கிழமையிலிருந்து நடந்த வாக்கு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
கென்டக்கியின் டான்வில் – 67% வேண்டாம், 33% வேண்டும் (மொத்த வாக்குகள் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை)
ஓஹியோ, லிமா – 68% வேண்டாம், 32% வேண்டும் (வாக்குகள் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை)
டென்னஸி, பாரீஸ் – 83% வேண்டாம், 17% வேண்டும் (174 க்கு 35)
பென்சில்வேனியாவின் போட்ஸ்டவுன் – 79% வேண்டாம், 21% வேண்டும் (157 க்கு 42)
இண்டியானாவின் போர்ட் வேய்ன் – 90% வேண்டாம், 10% வேண்டும் (362 க்கு 39)
மிச்சிகன், வாரென் – 56% வேண்டாம், 44% வேண்டும் (110 க்கு 86)
உள்ளூர் தொழிற்சங்க அதிகாரிகளின் கூற்றுக்களின்படி, ஊர்ஜிதப்படுத்தப்படாத இதன்படி, உலகளாவிய உடன்படிக்கையை நிராகரிப்பதற்கு அந்த உடன்படிக்கையில் உள்ள ஆலைகளால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் “வேண்டாம்” வாக்குகள் தேவைப்படுகிறது. UAW மற்றும் USW ஒப்பந்தங்களில் உள்ளடங்கும் ஒரு டஜனுக்கும் அதிகமான ஆலைகளில் சுமார் 3,500 செயலூக்கமான தொழிலாளர்கள் உள்ளனர்.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த வேலை நிலைமைகளுக்குப் போட்டியோக விளங்கும் இன்றைய வேலையிட நிலைமைகளுக்கு எதிராக போராட டேனா தொழிலாளர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள், அவர்களில் பலர் வாரத்திற்கு ஒரு நாள் கூட ஓய்வின்றி தினமும் பன்னிரெண்டு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர். இது தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்திற்காக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்காக கூட நேரம் ஒதுக்க முடியாமல் விட்டு வைத்துள்ளது என்பது மட்டுமல்ல, மாறாக கென்டக்கியின் டிரை ரிட்ஜ் டேனா ஆலை தொழிலாளர் டேனி வால்டர்ஸ் வேலையின் போதே மூளை பாதிப்பு அடைந்ததைப் போன்ற துயரகரமான மனித இழப்புகளையும் ஏற்படுத்துகிறது. அந்த ஒப்பந்தத்தின் விபரங்களைத் தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை தான் பிரசுரிக்க தொடங்கி இருந்த நிலையில், அது பணவீக்க விகிதத்திற்கு குறைவாக சம்பள உயர்வுகளை வழங்கும் அதேவேளையில் எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்க்க எதுவும் செய்யவில்லை.
இந்த நிகழ்முறை நெடுகிலும், UAW மற்றும் USW சங்கங்கள் அவற்றின் வழியில் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பொய் சொல்வதற்கும் பயமுறுத்துவதற்கும் முயன்றன. அந்த ஒப்பந்தத்தை டேனாவின் 'கடைசி மற்றும் சிறந்த' சலுகையாக சித்தரித்த அவை, இதற்கு வேறு மாற்றீடு ஒரு நீண்ட பலனற்ற வேலைநிறுத்தமாக தான் இருக்கும் என்று வாதிடுகின்றன. ஆனால், டேனா தொழிலாளர்கள் இடையே பெருகி வரும் போராட்டத்தை ஒடுக்க, தனிமைப்படுத்த, காட்டிக்கொடுக்க இந்த தனிச்சலுகை கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் தீர்மானகரமாக இருப்பதை இது நிரூபிக்கிறது. எவ்வாறாயினும், தொழிலாளர்கள் மத்தியில், வேலைநிறுத்தத்திற்கான விருப்பம் பரவலாக உள்ளது, மேலும் இந்த வேலைநிறுத்தத்திற்கு UAW மற்றும் USW சங்கங்கள் வழங்கும் 'தலைமை' மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுடன் விரோதமாகவும் உள்ளனர்.
'எதையும் செய்ய நீங்கள் தொழிற்சங்கத்திடம் செல்ல முடியாது, உண்மையில் அது என்னை ஏமாற்றுகிறது' என்று டென்னசி பாரிஸ் ஆலை தொழிலாளி ஒருவர் கூறினார். 'தொழிற்சங்கம் ஏதாவது செய்திருந்தால் நாங்கள் அவற்றை உள்ளங்கையில் வைத்து தாங்கியிருப்போம். யாரும் ஒரு வேலைநிறுத்தத்தை விரும்பவில்லையென்று UAW கூறுகிறது. ஆனால் எங்களால் முடியும். இது நலன்களுக்கு இடையிலான முரண்பாடாக தெரிகிறது. அவர்கள் எப்படி எங்கள் பிரதிநிதிகளாய் இருக்க முடியும், அவர்கள் [ஜெனரல் மோட்டார்ஸின்] சொந்த பங்குகளாக இருக்கிறார்கள்?” என்றார்.
இது நிறுவனத்தின் “அடிப்பட்ட நிலைப்பாடுகள்” உடன் தொழிற்சங்கங்கள் எவ்வாறு அவற்றின் சொந்த நலன்களை அடையாளம் காண்கின்றன என்பதை மட்டும் எடுத்துக்காட்டவில்லை, மாறாக மற்ற நிறுவனங்கள் உடனான போட்டியில் தொழிலாளர்களை அடிமட்டத்திற்கு விரட்ட அவை எவ்வாறு நிர்வாகத்துடன் கூடி வேலை செய்கின்றன என்பதையும் காட்டுகிறது. டெட்ராய்டின் மிகப்பெரிய மூன்று வாகன உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி செலவைக் குறைக்கும் நோக்கில் UAW பாரியளவில் கூலி வெட்டுக்களுக்கு வழி வகுத்ததுடன், ஓஹியோ டொலிடோவின் AP உதிரி பாகங்கள் ஆலை வேலைநிறுத்தம் உட்பட 1980 களில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை தொழிலாளர்களின் தொடர்ச்சியான பல வேலைநிறுத்தங்களை ஒட்டுமொத்தமாக அது காட்டிக்கொடுத்தது. 2007 இல், UAW மற்றும் USW சங்கங்கள் டேனா தொழிலாளர்களுக்கு நான்காண்டு கால உடன்படிக்கை ஒன்றை ஒப்புக் கொண்டது, அது புதிய இரண்டடுக்கு கூலி கட்டமைப்பை அறிமுகப்படுத்தி, கூர்மையாக மருத்துவச் சலுகைகளைக் குறைத்து, ஆலைமூடல்களை ஏற்படுத்தி, ஆயிரக் கணக்கானவர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற நிர்பந்தித்து அந்நிறுவனத்திற்கு ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் டாலர் சேமித்து கொடுத்தது. அதற்கு ஓராண்டுக்குப் பின்னர், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் 87 நாள் கடுமையான வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்து, வாகனத்துறை மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் தொழிற்சாலைகள் முழுவதிலும் இன்னும் கூடுதலான சுற்று பாரிய கூலி வெட்டுக்களுக்கு வழிவகுத்தது.
டேனா தொழிலாளர்கள் சங்கங்களின் நிலைப்பாடுகளை உடைக்கவும், அவர்களின் சொந்த ஆலைகளுக்கு உள்ளேயும் மற்றும் மற்ற ஆலை தொழிலாளர்களுடனும் அவர்கள் தகவல்தொடர்பைக் கட்டமைக்கவும் அவர்கள் சுயாதீனமான முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக தொழிற்சங்கங்களின் மிரட்டல்கள் எல்லாம் கண்கூடாக தோல்வியடைந்துள்ளன. டொலிடோவில் UAW நிர்வாகிகள், போர்ட் வேய்ன் போன்ற ஆலைகளில் “ஆம்” வாக்குகள் ஏறத்தாழ உறுதியாகி விட்டதாகவும், டொலிடோவில் அவர்கள் ஆலையின் “வேண்டாம்” வாக்குகள் இழுபறியை உண்டாக்கும் என்றும் தொழிலாளர்களுக்குக் கூற முயன்றனர். இது உடனடியாக போர்ட் வெய்ன் தொழிலாளர்களாலேயே நிராகரிக்கப்பட்டது, அவர்கள் இதுவரை இல்லாதளவில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வாக்களித்து ஒப்பந்தத்தை நிராகரித்தனர்.
டேனா தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு உருவாக்கப்பட்டதே இந்த அதிகரித்து வரும் கிளர்ச்சியின் மிகவும் முன்னேறிய வெளிப்பாடாக உள்ளது, அது வளர்ந்து வரும் இந்த இயக்கத்திற்கு ஒரு பொதுவான மூலோபாயம் மற்றும் ஒழுங்கமைப்பை வழங்க போராடி வருகிறது. பல ஆலைகளின் தொழிலாளர்களும் இந்த வாரயிறுதியில் வாக்களிப்பின் போது சாமானிய தொழிலாளர்களின் கண்காணிப்பு வேண்டுமென்ற அந்த குழுவின் அழைப்பை நடைமுறைப்படுத்த முனைந்தனர். இந்த வாரயிறுதியில் வாக்களிக்க உள்ள ஆலைகளில், தொழிற்சங்கத்தின் மோசடியைத் தடுக்க வாக்களிப்பைக் கண்காணிப்பதற்காக தொழிலாளர்களால் ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அந்த ஒப்பந்தத்தின் நிராகரிக்கப்படும் சம்பவத்தில் வியாழக்கிழமைக்கு முன்னதாக தொழிற்சங்கங்கள் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரியும், நாடெங்கிலுமான ஆலைகளில் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த சாமானிய தொழிலாளர் குழுக்களைத் தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தும் டேனா சாமானிய தொழிலாளர் குழு திங்கட்கிழமை மாலையில் கூடுதலாக ஒரு அறிக்கை வெளியிட்டது.
“இந்த முடிவு தொழிற்சங்கத்தை மிகவும் ஆச்சரியப்படுத்தியது,” என்று அந்த பாரீஸ் தொழிலாளர் கூறினார். “அந்த தொழிற்சங்கம் இத்தகைய ஆலைகளில் மத்தியஸ்தராக இருக்கிறது, இப்போது நாங்கள் ஒருங்கிணைய தொடங்கிவிட்டோம், அவர்கள் அதை தடுக்கிறார்கள். சாமானிய தொழிலாளர் [குழு] எங்களை ஐக்கியப்படுத்தி வருகிறது. அவர்கள் மற்ற ஆலைகளின் முடிவுகளை எங்களுக்கு தெரிவிப்பதும் இல்லை. இது ஒன்றுபடுவதற்கான நேரம் என்றாலும் [அந்த சங்கம்] எங்களைப் பிரித்து வைக்கிறது. அதனால் தான் நான் சாமானிய தொழிலாளர் குழுவை விரும்புகிறேன். நாங்கள் ஒருங்கிணைந்து வந்தால் உங்களால் எங்களுக்குக் குப்பைகளை உணவாக்க முடியாது. இது சங்கங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை நான் விரும்புகிறேன்.’
செவ்வாய்கிழமை கென்டக்கி லூயிஸ்வில்லில் வாக்குப்பதிவு தொடர்கிறது, புதன்கிழமை மிச்சிகனின் செயிண்ட் கிளையர் மற்றும் அபர்ன் ஹில்ஸ் ஆகியவற்றில் தொடர்கிறது. கென்டக்கி டிரை ரிட்ஜ் ஆலையும் புதன்கிழமை வாக்களிக்க உள்ளது, இங்கே டேனி வால்டர் மரணம் மீதான கோபம் ஏறக்குறைய நிச்சயமாக அந்த உடன்படிக்கையை ஒரு மிகப் பெரிய தோல்விக்கு தள்ளும்.
திங்கட்கிழமை செயிண்ட் கிளையர் ஆலையில் இறுதியாக முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டதும் அங்கே தொழிலாளர்களும் பரந்த கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். “அவர்கள் அதை பார்த்து, இதுவொரு அவமானம்,” என்றதாக ஒரு தொழிலாளர் தெரிவித்தார். ஃபோர்ட் வெய்ன் ஆலையில் வேண்டாம் வாக்குகளின் வித்தியாசத்தைக் குறைக்கும் முயற்சியில் நிறைய பேர் சில்லரைத்தனமான விளையாடி வருகிறார்கள்,” என்றார். தொழிலாளர்கள் அவர்கள் ஆலையிலுள்ள வயதான தொழிலாளர்களின் நிர்கதியைக் குறித்து கவலை தெரிவித்தனர், அவர்களுக்கு சுலபமான வேலைகள் இருந்தாலும் கூட கடினமான உடலுழைப்பபு வேலைகளைச் செய்ய அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
ஓஹியோ டொலெடோ ஆலையில், வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடக்குமென UAW திங்கட்கிழமை மாலை தான் அறிவித்தது. திங்கட்கிழமை அந்த ஆலையின் பேரம்பேசும் குழு ஒரு பதட்டமான பெரிதும் தற்காப்பான ஓர் அறிக்கையை அனுப்பியது, உள்ளூர் TA பற்றி இன்னும் “எதுவும் இறுதியாகவில்லை” ஆகவே அது “தகவல்களை மறைக்கவில்லை” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. “உங்களுக்குள் நிறைய கேள்விகள் இருப்பது எங்களுக்குத் தெரியும் விஷயங்கள் இறுதியானதும் அவை தெளிவாக்கப்படும், ஒரு கூட்டமும் ஏற்பாடு செய்யப்படும். ஆனால் இந்த விபரங்களை சமூக ஊடகத்தில் கொண்டு செல்ல முடியாது, கொண்டு செல்ல மாட்டோம், நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.”
வாகனத் துறை தொழிற்சாலை முதலாளிகளுடன் ஒத்துழைப்பதற்காக UAW உள்ளூர் கிளை 12 இழிபெயர் எடுத்துள்ளது. அது 1984 AP உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்தி காட்டிக்கொடுத்தது. கடந்தாண்டு பியட் கிறைஸ்லர் (இப்போது ஸ்டெல்லன்டிஸ்) தொழிலாளர்கள் அந்த ஆலை எங்கிலும் பெருந்தொற்று பரவியுள்ள போதும் அவர்களை வேலையில் வைத்திருப்பதற்காக அந்த உள்ளூர் சங்க நிர்வாகிகளைக் கண்டித்து அந்த ஜீப் உற்பத்தி ஆலையில் உள்ளூர் சங்கக் கிளை 12 இன் அலுவலகத்திற்குள் வெள்ளமென புகுந்தார்கள். உள்ளூர் 12 கிளை சங்க நிர்வாகிகள் டேனா ஆலையுடன் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பதோடு, டெட்ராய்ட் சொலிடாரிட்டி ஹவுஸ் தலைமையகத்தில் UAW சர்வதேச நிர்வாகிகள், கொக்கி போட்டு அல்லது வஞ்சகத்தின் மூலம் ஒப்பந்தத்தை முடிக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
“ஒவ்வொருவரும் வெறுப்படைந்து வருகிறார்கள்,” என்று டொலெடோ தொழிலாளர் ஒருவர் கூறினார். “மக்கள் நமது பேரம்பேசும் குழு தேர்தல் மீதே ஒரு மறுஎண்ணிக்கை கோரி வருகிறார்கள். நாங்கள் கேள்விகள் கேட்டு வருகிறோம் ஆனால் எந்த பதிலும் இல்லை. எங்களுக்கு ஏன் எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை, நாங்கள் ஏன் கடைசியாக வாக்களிக்கிறோம் என்பதன் மீது எங்களுக்கு ஒரு துளி குறிப்பும் இல்லை.
“வெறும் வதந்திகளே உள்ளன. அவர்கள் இந்த ஒப்பந்தத்தின் மீது பேரம்பேசவும் கூட இல்லை என்றவொரு வதந்தியும் உலவுகிறது, ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரிவிப்பதில்லை. தகவல்களை அவர்கள் மறைக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் எதுவும் கூறுவதில்லை. நாங்கள் ஏழு நாட்களும் வேலை செய்கிறோம், நிறைய பேர் சோர்ந்து போய்விட்டார்கள். நாங்கள் வேலைநிறுத்தம் செய்யும் போது எங்கள் நிறைவேற்று சாதனத்தைப் பறிப்பதற்காக நிறுவனம் உதிரி பாகங்களை நிறைய கையிருப்பில் வைக்க அவர்கள் அனுமதித்து வருவதாக நான் நினைக்கிறேன். நாங்கள் ஜீப் மற்றும் ஃபோர்டு ஆலைகளுக்கு வினியோகித்து வருகிறோம்.
“தேசிய ஒப்பந்தத்தின் கீழ் இல்லாத ஒரே ஆலை எங்களுடையது தான். நாங்கள் ஒரு ‘நிலையான ஒப்பந்தத்தில்’ [இந்த ஆலை 2017 இல் திறக்கப்பட்டு, 2018 இலேயே UAW சங்கம் வசம் ஆனது] இருக்கிறோம். எங்கள் ஒப்பந்தம் ஒட்டுமொத்தமாக சிதைக்கப்பட்டது. நாங்கள் வாக்களித்த போது அது எங்களுக்குப் புதிதாக இருந்தது. எங்களுக்குப் போதிய கல்வியறிவு இல்லை.
“அவர்கள் நிறைய தற்காலிக தொழிலாளர்களைக் கொண்டு வந்தார்கள். குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே தற்காலிக தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது, ஆனால் அவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள். மூத்த தொழிலாளர்கள் உடனான பிரச்சினையிலிருந்து வெளியில் வர, வருகை பிரச்சினைகளுக்காகவும் வேறு சில அற்ப காரணங்களுக்காகவும் அவர்களை அவர்கள் வேலையிலிருந்து நீக்கி விடுகிறார்கள். அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பாக, அதைக் குறித்து ஒன்றும் தெரியாத தொழிலாளர்களை உள்ளே கொண்டு வருவது ஒரு மூலோபாயமாக உள்ளது.
“உங்களுக்கு ஆறு புள்ளிகள் பதிவாகி விட்டால் நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவீர்கள். பாதி நாள் வரவில்லை என்றால், அது அரை புள்ளியாகும். ஒரு நாள் வரவில்லை என்றால் அது ஒரு முழுமையான புள்ளி. நீங்கள் முன்கூட்டியே தெரிவிக்காமல் தாமதமாக வந்தால் அது ஒரு புள்ளி, அதற்கு எழுத்துப்பூர்வ விளக்கக் கடிதம் கொடுக்க வேண்டும். நாங்கள் வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை செய்கிறோம், சம்பளத்துடன் கூடிய விருப்பு நேரமே இல்லை. விடுமுறை காலம் கொடூரமானது. எங்கள் விடுமுறை காலம் நியமன தேதியில் இருந்து [அல்ல] ஜனவரி வாக்கில் தொடங்குகிறது.”
“ஆலையில் உள்ள ஒவ்வொருவரும் ’வேண்டாம்’ என்பார்கள் என்றே நினைக்கிறேன். கடுமையாக பிழிந்தெடுக்கப்படுவதால் தொழிலாளர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள். பெரிய விஷயமே தகவல் தொடர்பு தான்,” என்றார்.
கூடுதல் விபரங்களுக்காகவும், டேனா சாமானிய தொழிலாளர் குழுவில் இணையவும் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்: மின்னஞ்சல் - DanaWRFC@gmail.com, குறுஞ்சேதி (248) 602–0936.
மேலும் படிக்க
- அமெரிக்கா: டேனா நிறுவனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஆட்டோ தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்கின்றனர்
- மதர்சன் ஆலை தொழிலாளர்கள் தரமான உணவு மற்றும் சிறப்பான நிலைமைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்
- சோசலிச சமத்துவக் கட்சி கோடைப் பயிலரங்கம் வர்க்க போராட்ட வளர்ச்சிக்காக உறுப்பினர் சேர்க்கைக்குத் தயாரிப்பு செய்கிறது