மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி அதன் ஈராண்டுக்கொரு முறை நடத்தப்படும் கோடைக்காலப் பயிலரங்கத்தை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 6, 2021 வரை நடத்தியது. இணைய வழியில் நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கம், ஜூலை 2019 இல் நடத்தப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சி முந்தைய பயிலரங்கத்திற்குப் பின்னர், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஏற்பட்ட முக்கிய சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்ய அர்ப்பணிக்கப்பட்டது.
பொதுமக்கள் நடவடிக்கைகளில் இந்த பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் அணுகலைத் தடுக்க கூகுள், பேஸ்புக் மற்றும் ஏனைய பெருநிறுவன ஊடக பெருநிறுவனங்களின் தீவிர முயற்சிகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும், சோ.ச.க. உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்துள்ளது. 2019 இல் கலந்து கொண்டவர்களை விட இந்த பள்ளியில் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள். இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆசிய-பசிபிக் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குறிப்பிடத்தக்க சர்வதேச பிரசன்னமும் இருந்தது.
சோ.ச.க. பயிலரங்கங்கள் உயர்ந்த அரசியல் மற்றும் அறிவுசார் மட்டத்தில் கவனமாக தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பது என்பது வெறும் எண்ணிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையைப் பெறுவதில் தீவிரமாக இருக்கும் ஒரு புரட்சிகரக் கட்சியில் சேருபவர்களுக்கு அரசியல் கல்வி அவசியமாகும். ட்ரொட்ஸ்கி எழுதியது போல, 'ஒரு புரட்சிகர அமைப்பானது குழுக்களுக்கிடையிலான சூழ்ச்சிகளுக்காக அல்ல மாறாக பெரும் போராட்டங்களுக்காக நபர்களைத் தேர்ந்தெடுத்து கற்பிக்கிறது.'
இந்த ஆண்டு பயிலரங்கம் குறிப்பாக சவாலாக இருந்தது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகத் தீவிரமான நெருக்கடியைத் தூண்டியுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, நான்கு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர், என்றாலும் உண்மையான இறப்பு எண்ணிக்கையோ 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம். இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கம் காட்டிய விடையிறுப்பு முழு முதலாளித்துவ அமைப்புமுறையின் திவால்நிலையையும் ஆளும் உயரடுக்குகளின் குற்றகரத்தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளதுடன், தொழிலாள வர்க்கத்தில் பெருகிய சீற்றத்தையும் எதிர்ப்பையும் தோற்றுவித்துள்ளது.
கடந்த கால சம்பவங்கள் மற்றும் அனுபவங்களை நிகழ்கால அரசியல் நோக்குநிலைக்கான அடித்தளமாக கொண்டு தொடர்ந்து விமர்சனரீதியாக மறுவேலை செய்ய வேண்டியது மார்க்சிச அரசியலுக்கு அவசியமாகும். இந்த பயிலரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளின் ஒரு மீளாய்வை மையப்படுத்தி இருந்தாலும், அது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தைப் பற்றிய விவாதத்துடன் தொடங்கியது.
இந்த பயிலரங்கத்திற்கு முன்னதாக, உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவரும் சோ.ச.க. தேசிய தலைவருமான டேவிட் நோர்த் எழுதிய கிளிஃவ் சுலோட்டரின் அரசியல் வாழ்க்கை வரலாற்றின் முதல் பாகத்தை உறுப்பினர்கள் பெற்றனர். சுலோட்டர், 1957 க்கும் 1986 க்கும் இடையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் அதன் பிரிட்டிஷ் பிரிவின் ஒரு தலைவராக இருந்தார்.
சுலோட்டர் பின்னர் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொண்டாலும், ஆரம்ப காலகட்டத்தில் சுலோட்டர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கை அங்கீகரித்துடன் சேர்ந்து, இந்த இயக்கத்தின் வரலாற்றைப் பற்றிய புறநிலைரீதியான மதிப்பீட்டின் அவசியத்தை நோர்த் அழுத்தமாக வலியுறுத்தினார்.
1956 க்கும் 1963 க்கும் இடையில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்கொண்ட பிரதான தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் பற்றிய விவாதம், இந்த பயிலரங்கின் அடுத்தடுத்த வேலைகளுக்கான வரலாற்று மற்றும் அரசியல் கட்டமைப்பை வழங்கியது. சமூகத்தில் இன்றியமையா புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கத்தை மார்க்சிசம் அடையாளப்படுத்துவதில், வர்க்கப் போராட்டம் மத்திய பாத்திரம் வகிப்பது மீதான சுலோட்டரின் வலியுறுத்தலில் கவனம் செலுத்த நோர்த் அழைப்பு விடுத்தார். 1959 இல் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் சுலோட்டரின் கருத்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது: 'அதன் மையத்தில் வர்க்க மோதலைக் கொண்டிருக்காமல், வர்க்கத்திற்கான எந்தவொரு அணுகுமுறையிலும் மார்க்சிசம் துளி கூட கிடையாது.'
ஜூலை 2019 இல் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் கடைசிப் பயிலரங்கம், 1923 இல் இருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அபிவிருத்தி கட்டங்களைப் பகுப்பாய்வு செய்தது. இந்த வரலாறு மற்றும் முதலாளித்துவ நெருக்கடி பற்றிய மீளாய்வின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முற்றிலும் புதிய கட்டத்திற்குள் நுழைந்திருப்பதையும், இது கட்சியின் நடைமுறைக்கும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும் இடையே வளர்ந்து வரும் இடைத்தொடர்பால் குணாம்சப்படும் என்பதை சோ.ச.க. முன்கணித்தது. நோர்த் 2019 இல் அவரின் அறிமுக அறிக்கையில் கூறுகையில், 'நாம் பகுப்பாய்வு செய்யும் இந்த உலக நெருக்கடியானது,' 'அனைத்துலகக் குழு அதிகரித்தளவில் செயலூக்கத்துடன் நேரடியாக பங்கெடுத்து வரும் நெருக்கடியில் ஒன்று,' என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளை மதிப்பாய்வு செய்வதில், அந்த முன்கணிப்பு ஊர்ஜிதமாகி உள்ளதா என்பதை தீர்மானிப்பது ஒரு மையப் பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர், இக்காலகட்டத்தின் பிரதான சமூக, அரசியல் மற்றும் கலாச்சார அபிவிருத்திகள் குறித்தும் அவற்றுக்குக் கட்சியின் விடையிறுப்பு குறித்தும் கண்ணோட்டத்தை வழங்கி பாடசாலையின் இந்த பகுதியைத் தொடங்கி வைத்தார். ஏனைய அமர்வுகள் இந்த அபிவிருத்திகளை இன்னும் விரிவாக ஆய்வு செய்தன.
இந்த அமர்வுகளில் முதலாவது, டொனால்ட் ட்ரம்ப் தூண்டிவிட்டு வழிநடத்திய ஜனவரி 6 கிளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்தியது. எரிக் இலண்டன் ஜனவரி 6 க்கு முந்தைய காலப்பகுதியை பற்றி ஓர் அறிக்கை அளித்தார், 2000 தேர்தல் களவாடப்பட்ட அப்போதிருந்து பின்னோக்கி சென்று அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த நெருக்கடியை அது உள்ளடக்கி இருந்தது. அந்த கிளர்ச்சியானது அரசு எந்திரம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க கன்னைகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி என்ற கட்சியின் பகுப்பாய்வை, இலண்டன், கடந்த மாதம் வெளியிடப்பட்ட புத்தகங்களின் புதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, சரி பார்த்தார்.
பாட்ரிக் மார்ட்டின் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி பற்றி விரிவான விவரங்களை வழங்கினார், ஜனவரி 6 அதிகார மாற்றத்தை நிறுத்த அந்த செயல்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதைக் அது எடுத்துக்காட்டியது. ஜனநாயகக் கட்சியின் முக்கிய உதவியுடன் நடத்தப்பட்ட அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் மூடி மறைப்பையும், அத்துடன் சேர்ந்து தேர்தலைக் கவிழ்க்கவும் மற்றும் அதிகார மாற்றத்தைத் தடுக்கவும் செய்யப்பட்ட அந்த முயற்சிக்கு எந்த உண்மையான முக்கியத்துவமும் இல்லை என்று வாதிடும் போலி-இடது பிரிவுகளைக் குறித்தும் ஜேக்கப் கிராஸ் மறுஆய்வு செய்தார்.
அதற்கடுத்த அமர்வு கோவிட்-19 பெருந்தொற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. இந்த பெருந்தொற்று பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டுள்ள பெஞ்சமின் மாத்தேயுஸ், தற்போதைய இந்த பெருந்தொற்றை 1918 ஸ்பானிய காய்ச்சலுடன் ஒப்பிட்டு, ஆளும் வர்க்கத்தின் கொலைபாதக கொள்கைகளால் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் உயிரிழப்புகளை ஆவணப்படுத்தினார்.
உலக சோசலிச வலைத் தள எழுத்தாளர் ஆண்ட்ரே டேமனின் அறிக்கை, இந்த பெருந்தொற்றின் ஒவ்வொரு கட்டத்திலும், ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு, முதலில் ட்ரம்பின் கீழும் இப்போது பைடனெனின் கீழும் எவ்வாறு மனித வாழ்க்கையை இலாபத்திற்கு கீழ்ப்படுத்துவதாக இருந்தது என்பதை மீளாய்வு செய்தது. டேமனின் அறிக்கை இந்த பெருந்தொற்றின் தோற்றுவாய்கள் சம்பந்தமான 'வூஹான் ஆய்வக தத்துவத்தை' முழுமையாக அம்பலப்படுத்தியது. பாரிய மரணத்திற்கு ஆளும் வர்க்கம் கொண்டுள்ள பொறுப்பிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவும், அதே நேரத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெருகிய ஆக்கிரோஷ பிரச்சாரத்திற்கு எரியூட்டவும் இந்த 'தத்துவம்' எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் விளக்கினார்.
ஐரோப்பா, கனடா, துருக்கி மற்றும் பிரேசிலில் இருந்து கலந்து கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் உலகம் முழுவதும் இந்த பெருந்தொற்றின் பாதிப்பு குறித்து கூடுதல் அறிக்கைகளை வழங்கினர், அவை அமெரிக்க அரசியல் அபிவிருத்திகள் சர்வதேச நிகழ்வுபோக்கின் ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடு என்பதைக் காட்டுகின்றன.
அந்த அமர்வு ஒரு குழு விவாதத்துடன் மாலை நிறைவடைந்தது, அதில் இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளுக்குப் போராடுவதில் முக்கிய பங்காற்றிய இரண்டு விஞ்ஞானிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
அதற்கடுத்த அமர்வு நியூ யோர்க் டைம்ஸின் '1619 திட்டத்தை' மீளாய்வு செய்தது, 2019 இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரை மதிப்பிழக்கச் செய்யவும், மொத்த அமெரிக்க வரலாற்றையும் இனரீதியில் மறுவிளக்கம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலையீடு இல்லாமல், அமெரிக்க வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளைப் பொய்மைப்படுத்துவதற்கு எதிரான ஒழுங்கமைந்த, நனவுபூர்வமான எதிர்ப்பு இல்லை என்பதை டாம் மக்கமன் ஓர் அறிக்கையில் அந்த அமர்வில் அறிமுகப்படுத்தினார்.
நீல்ஸ் நிமுத் மற்றும் டாம் கார்ட்டர் இரண்டு கூடுதல் அறிக்கைகளை வழங்கினர், அவை ஜனநாயகக் கட்சியினது அடையாள அரசியலின் தத்துவார்த்த மற்றும் அரசியல் தோற்றுவாய்களை ஆய்வு செய்தன. கார்ட்டரின் அறிக்கை பின்நவீனத்துவம் மற்றும் அகநிலை கருத்துமுதல்வாத மெய்யியல் போக்குகளில் வேரூன்றிய மார்க்சிச-விரோத கருத்தாக்கமான 'விமர்சனரீதியான இனக் கோட்பாட்டை' மறுத்தளித்து ஒரு விரிவான ஆய்வை உள்ளடக்கி இருந்தது.
பயிலரங்கத்தின் கடைசி நாள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர் போராட்டங்களின் எழுச்சியையும், குறிப்பாக இந்தாண்டு ஜூன் மற்றும் ஜூலையில் வேர்ஜீனியா டப்ளினில் வோல்வோ டிரக்ஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தையும் ஆராய்ந்தது.
மார்குஸ் டே வழங்கிய அந்த அறிக்கை மீது நிறைய ஆர்வம் இருந்தது, அது அந்த போராட்டத்தைக் காலவாரியாக விவரமாக மீளாய்வு செய்ததுடன், சோசலிச சமத்துவக் கட்சியின் உதவியுடன் வொல்வோ தொழிலாளர்களின் ஒரு சாமானிய குழு அமைக்கப்பட்டது குறித்தும், நிறுவன-சார்பு ஒப்பந்தத்தைத் திணிக்க ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் சதித்திட்டத்தை எதிர்த்த தொழிலாளர்களின் முயற்சிகளையும் விரிவாக ஆய்வு செய்தது. வேர்ஜீனியா வொல்வோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் தங்களின் சொந்த திடீர் நடவடிக்கையைத் தொடங்கிய பெல்ஜிய வொல்வோ கார் ஆலை தொழிலாளர்கள் உட்பட உலகெங்கிலுமான தொழிலாளர்களிடமிருந்து வொல்வோ தொழிலாளர்களுக்குக் கிடைத்த ஆதரவின் மகத்தான தாக்கத்தையும் அவர் மீளாய்வு செய்தார்.
உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் பிரிவு ஆசிரியர் ஜெர்ரி வைட் ஓர் அறிக்கையை வழங்கினார், அது தொழிற்சங்கங்கள் உடனான ஒரு நீண்ட வரலாற்று அனுபவத்தின் உள்ளடக்கத்தில் சாமானிய குழுக்களை அமைப்பதற்கான கட்சியின் முன்முயற்சியை முன்நிறுத்தியது. தொழிற்சங்கங்களின் பெரும் ஒத்துழைப்புடன் ரீகன் நிர்வாகத்தால் நசுக்கப்பட்ட 1981 PATCO விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் உட்பட, 1970 கள் மற்றும் 1980 களின் மிகப்பெரிய வர்க்கப் போர்களில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஆற்றிய முக்கிய பங்கை அந்த அறிக்கை எடுத்துக்காட்டியது.
பயிலரகங்கத்தை நிறைவு செய்து உரையாற்றிய நோர்த், கடந்த இரண்டாண்டுகளின் அபிவிருத்திகளை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நடைமுறைக்கு வெளியே புரிந்து கொள்ள முடியாது என்று வலியுறுத்தினார். பாசிசம், எதேச்சதிகாரம், போர் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் சுரண்டல் என இவற்றை நோக்கியா அல்லது சோசலிசத்தை நோக்கியா நிலைமை அபிவிருத்தி அடைகிறது என்பது விமர்சனரீதியாக கட்சி என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது என நோர்த் விவரித்தார்:
நமக்கு ஈடிணையற்ற வாய்ப்புகளை வழங்கும் புறநிலை நிலைமைகள் மாறி வருகின்றன என்பதை நம்மால் மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அனைத்துமே, இந்த வாய்ப்புகளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துள்ளது. கடந்த இரண்டாண்டுகளிலும் கூட, பல சம்பவங்கள் நடந்துள்ளன, வெற்றியானது விரைவான அரசியல் விடையிறுப்பைச் சார்ந்திருந்தது. இத்தகைய வாய்ப்புகள் நிச்சயமாக ஓர் ஆழ்ந்த வரலாற்று புரிதலில் அடித்தளமிட்டுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் புற நிலைமையில் உள்ள சாத்தியக்கூறுகளை உணர்ந்து கட்சி செயல்பட வேண்டியது அவசியம், அதுவும் தீர்மானகரமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.
இந்தப் பயிலரகங்கம் ஒட்டுமொத்தமாக இந்தக் கருத்துருவால் உயிரூப்பட்டதாகும். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாற்றின் பின்னணியில், கடந்த இரண்டாண்டு காலத்தை மீளாய்வு செய்து, கட்சி ஏற்கனவே எழுச்சி பெற்று வரும் மிகப்பெரும் புரட்சிகர போராட்டங்களுக்கான தலைமைக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.
இந்த பயிலரங்கத்தின் எல்லா பிரதான அறிக்கைகளும் வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்படும். வாசகர்கள் இந்த ஆவணங்களை வாசித்து, கடந்த இரண்டாண்டு கால அனுபவங்களைக் கவனமாக மீளாய்வு செய்யுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.