நியூசிலாந்து: வெலிங்டன் பஸ் ஓட்டுநர்களை காட்டிக்கொடுக்க வாக்களிக்க வேண்டாம்! சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெலிங்டன் பஸ் ஓட்டுநர்கள், நியூசிலாந்து பஸ் மற்றும் டிராம்பாதை தொழிற்சங்கத்தால் வழங்கப்பட்ட புதிய வரைவு கூட்டு வேலை ஒப்பந்தத்தை (CEA) தீர்க்கமாக நிராகரிக்க சோசலிச சமத்துவக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

ஏப்ரல் முதல் பஸ் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட நான்காவது ஒப்பந்தம் இதுவாகும். மிக சமீபத்தில், ஜூன் 23 அன்று, தொழிற்சங்கத்தால் ஆதரிக்கப்பட்ட ஒரு காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்தை ஓட்டுநர்கள் நிராகரித்தனர். இது கூடுதல் வேலைநேர மற்றும் வாரஇறுதி ஊதிய விகிதங்களைக் குறைத்து, டாக்ஸி கொடுப்பனவுகளை இரத்து செய்து, வழமையான தொடர்ச்சியற்ற முறையிலான மாற்றுவேலைநாளை 11 முதல் 12 மணி நேரம் வரை நீட்டித்திருக்கும்.

ஏப்ரல் 23 அன்று NZ பஸ் ஒரு கதவடைப்பின் போது வெலிங்டன் ஓட்டுநர்களின் மறியல் (Credit: WSWS Media)

NZ Bus சார்பாக செயல்படும், டிராம்வேஸ் தொழிற்சங்கம் ஓட்டுனர்களிடம் ஒரு சிறந்த சலுகைக்கு வாய்ப்பில்லை என்று பொய்யாகக் கூறியது. மேலும் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அவர்கள் 'மக்கள் ஆதரவை' இழக்க நேரிடும் என்றது. வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக பலமுறை வாக்களித்த ஓட்டுநர்கள், அப்பட்டமாக நிறுவன சார்பு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கத்தின் முயற்சிகளுக்கு கோபமாக பதிலளித்தனர்.

ஜூன் 23 அன்று ஒப்பந்தத்திற்கு 'இல்லை' என்று வாக்களிக்கப்பட்டமை ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இது நியூசிலாந்திலும் சர்வதேச அளவிலும் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். சிக்கன நடவடிக்கை மற்றும் வெட்டுக்களைச் செயல்படுத்த முற்படுவதில் கூட்டாளிகளாக செயல்படும் நிறுவனங்கள், தொழிற் கட்சி தலைமையிலான அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்கள் பெருகிய முறையில் மோதலுக்கு வருகின்றனர். NZ Bus ஓட்டுநர்களின் வாக்களிப்புடன், சுமார் 30,000 செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இந்த வாரம் நியூசிலாந்து செவிலியர் அமைப்பின் ஆதரவுடன் ஒரு காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கை தொடர்பாக வாக்களித்து வருகின்றனர். நியூசிலாந்து செவிலியர் அமைப்பு ஆர்டெர்ன் அரசாங்கத்தின் பொதுத்துறையினருக்கான ஊதிய முடக்கத்திற்கு ஆதரவளிக்கின்றது.

வெலிங்டன் ஓட்டுநர்கள் நிறுவனம், தொழிற்சங்கம், ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை எதிர்த்து தங்கள் ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகளை குறைப்பதற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தனர். இப்போது பின்வாங்குவதற்கான நேரம் அல்ல.

சமீபத்திய ஒப்பந்தம் ஜூலை 25 அன்று உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஜூலை 29 அன்று ஒரு ஒப்புதல் கூட்டத்திற்கு முன்னதாக தொழிலாளர்கள் அதைப் படிக்க நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன. தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஒரு செய்தியில், டிராம்வேஸ் தொழிற்சங்க செயலாளர் கெவின் ஓ'சுல்லிவன், “ஜூன் 23 கூட்டத்தில் எழுந்த அனைத்து சிக்கல்களுக்கும் கவனம் செலுத்தப்பட்டு தற்போதைய அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் கணிசமான ஊதிய உயர்வுடன் புதிய ஒப்பந்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன” என்றார்.

இது முற்றிலும் தவறானது. முதலாவதாக, புதிய வரைவு கூட்டு வேலை ஒப்பந்தம் டாக்ஸி கொடுப்பனவைப் பராமரிக்கிறது மற்றும் வேலைநேரத்தை நீட்டிக்கவில்லை என்றாலும், ஓட்டுனர்களை வறுமை மட்ட ஊதியத்திலும், பலரை 11 மணி நேர வேலை நாட்களிலும் வைத்திருக்கிறது. அதில் அவர்களுக்கு வெறும் 8 மணிநேரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில், NZ Bus ஆண்டு ஊதிய விகிதங்களை வெறும் 2 சதவீதம் அல்லது அது அதிகமாக இருந்தாலும் உத்தியோகபூர்வ பணவீக்க வீதத்தின் அளவிற்கே அதிகரிக்கும்.

கடந்த மாதம் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தத்தைப் போலவே, கிரேட்டர் வெலிங்டன் பிராந்திய கவுன்சில் (GWRC) ஓட்டுநர்களின் அடிப்படை ஊதியத்தை 22.10$ NZ ($ 15.15.39) ஆக உயர்த்த NZ Bus இற்கு மானியம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இது செப்டம்பரில் 22.75$ ஆக உயரும்.

தொழிற்சங்க ஆதரவுடைய 'வாழ்க்கை ஊதிய இயக்க' வலைத் தளம் இந்த விகிதம் தொழிலாளர்களை 'வாழ்க்கையின் தேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கும் சமூகத்தில் செயலில் உள்ள குடிமகனாக பங்கேற்கவும்' அனுமதிக்கிறது என்று கூறுகிறது. உண்மையில், இது பெரும்பாலான ஓட்டுநர்கள் தற்போது பெறும் 20$ மணிநேர குறைந்தபட்ச ஊதியத்திற்கு மேலாக ஓரிரு சென்ட்டுகள் கூடுதலாக அல்லது குறைவாக பெறுகின்றனர்.

தொழிற்கட்சி உறுப்பினரான GWRC தலைவர் டரன் பொன்டர் கூட ஜூன் 16 அன்று Radio NZ பின்வருமாறு ஒப்புக் கொண்டார். 'வாழ்க்கை ஊதியம்' அதிக வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு 'நிலையானது அல்ல'. Trade Me Property இன் படி, வெலிங்டனில் சராசரி வார வாடகை 595$ ஆகும். இது கடந்த ஆண்டில் மட்டும் 8 சதவீதம் அதிகரித்துள்ளதுதுடன், மேலும் வரிக்குப் பின்னரான குறைந்தபட்ச வாராந்திர ஊதியத்தை விட மிகக் குறைவாக இல்லை.

ஓட்டுநர்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக “வாழ்க்கை ஊதியம்” கிடைக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதம் கூட இல்லை. செப்டம்பர் 3, 2022 க்குள் NZ Bus மற்றும் பிராந்திய கவுன்சில் பொருத்தமான 'நிதி ஏற்பாடுகள்' குறித்து உடன்பட முடியாவிட்டால், 'வாழ்க்கை ஊதியம் அதிகமாக இருந்தாலும் கூட, ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 2 சதவிகிதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டு 23.20$ ஆக உயர்த்தப்படும்' என்று புதிய வரைவு கூட்டு வேலை ஒப்பந்தம் குறிப்புடுகின்றது.

புதிய சலுகை அனைத்து தற்போதைய விதிமுறைகளையும் நிபந்தனைகளையும்” தக்க வைத்துக் கொண்டுள்ளது என்ற தொழிற்சங்கத்தின் கூற்று பொய்யானது.

ஓட்டுநர்களுக்கு மேலதிகவேலை நேரத்திற்காக சனிக்கிழமைகளுக்கு ஒன்றரை மடங்கு மணிநேரத்திற்கான ஊதியமும், ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இரட்டை ஊதியமும் வழங்கப்படாது. புதிய வரைவு கூட்டு வேலை ஒப்பந்தம் 'வாழ்க்கை ஊதிய இணக்க கொடுப்பனவு ஒவ்வொரு நாளும் 8 மணித்தியாலத்திற்குப் பிறகு வேலை செய்யும் மணிநேரங்களில் செலுத்தப்படாது; அல்லது ஒவ்வொரு வாரமும் 40 க்குப் பிறகு; அல்லது வார இறுதி நாட்களில் அல்லது கூடுதல் நேரம் அல்லது மேலதிக வேலைநேர விகிதங்கள் செலுத்தப்படும் வேறு எந்த வேலைநேரத்திற்கும் வழங்கப்படமாட்டாது” என்று தெரிவிக்கின்றது.

மேலதிக நேரம் மற்றும் வார இறுதி விகிதங்கள் நிறுவனத்தின் அடிப்படை விகிதங்களின் அடிப்படையில், கவுன்சிலின் உயர்வு இல்லாமல் இருக்கும். வாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 22.10$ பெறும் ஓட்டுநர், 'வாழ்க்கை ஊதிய இணக்க கொடுப்பனவு' பயன்படுத்தப்பட்டால், 44.20 டாலருக்கு பதிலாக, ஞாயிற்றுக்கிழமைகளில் 40$ க்கும் சற்று அதிகமாகப் பெறுவார். ஓட்டுநர்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரே வேலையை இரண்டு தனித்தனி அடிப்படை விகிதங்களுக்கு செய்வார்கள்.

தங்களுக்கு தரமான ஊதியத்திற்கு பணம் செலுத்த முடியாது என்ற நிறுவனத்தின் கூற்றை தொழிலாளர்கள் அவமதிப்புடன் நிராகரிக்க வேண்டும். NZ Bus ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட நாடுகடந்த தனியார் முதலீட்டு நிறுவனமான Next Capital க்கு சொந்தமானதுடன், இது 600 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை நிர்வகிக்கிறது. இரு நாடுகளிலும், அதன் பணக்கார பங்குதாரர்களுக்கு 25 சதவிகித முதலீட்டில் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற கூறப்பட்ட நோக்கத்துடன், இது நிறுவனங்களை வாங்குகிறது மற்றும் விற்கிறது. இது வேலைகள், வேலை நிலைமைகள் மற்றும் ஊதியங்களின் இழப்பில் அடையப்படுகிறது.

NZ Bus மோதலானது இந்த தாக்குதல்களை செயல்படுத்துபவர்களாக தொழிற்சங்கங்களின் பங்கை அம்பலப்படுத்தியுள்ளது. இவை தொழிலாளர்களின் அமைப்புகள் அல்ல. ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பெருவணிகங்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்து செயல்படும் சலுகை பெற்ற அதிகாரத்துவங்களாகும்.

எங்கள் சமீபத்திய இணையவழி கூட்டத்தில் சோசலிச சமத்துவக் குழு விளக்கியது போல, டிராம்வேஸ் தொழிற்சங்கமும் பிற தொழிற்சங்கங்களும் ஆரம்பத்தில் இருந்தே NZ Bus ஓட்டுனர்களை திட்டமிட்டு தனிமைப்படுத்தவும், ஒரு நல்ல ஒப்பந்தத்திற்காக போராடுவதற்கான நம்பிக்கை இல்லை என்று அவர்களை நம்பவைக்கவும் செயல்பட்டன.

ஒரு ஓட்டுநர் உலக சோசலிச வலைத் தளத்திடம் பின்வருமாறு கூறினார்: 'முழு ஓட்டுநர் சமூகத்திலிருந்தும் இன்னும் கொஞ்சம் ஐக்கியப்பட்ட முன்னணி இருந்தால், நாங்கள் இன்னும் பலமாக இருக்க முடியும்.'

GWRC இனால் NZ Bus, Tranzit, Uzabus, Mana Coach Services மற்றும் பயணிகள் இரயில் நிறுவனமான Transdev ஆகிய ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐந்து பொது போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் தொழிலாளர்கள் அனைவரும் இதேபோல் குறைந்த ஊதியங்கள் மற்றும் மனிதாபிமானமற்ற வேலைநேர முறைகளில் உள்ளனர். இந்த தொழிலாளர்கள் அனைவருமே ஒன்றிணைந்த தொழில்துறை பிரச்சாரம் இல்லை என்பதை தொழிற்சங்கங்கள் உறுதி செய்துள்ளன.

டிராம்வேஸ் தொழிற்சங்கங்க ஓக்லாந்து மற்றும் பே ஆஃப் பிளெண்டியில் நூற்றுக்கணக்கான NZ Bus தொழிலாளர்களை அணிதிரட்ட மறுத்துவிட்டது. அங்குள்ள நிலைமைகள் வெலிங்டனில் இருந்ததை விட மோசமாக உள்ளன. ஆர்டெர்ன் அரசாங்கத்தின் ஊதிய முடக்கம் காரணமாக செவிலியர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பிற பொதுத்துறை ஊழியர்களுடன் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு எந்தவொரு அழைப்பும் விடப்படவில்லை.

தொழிற்சங்கங்களின் குழுவானது (CTU) இப்போராட்டத்தின் போது NZ Bus இன் ஆஸ்திரேலிய உரிமையாளரை இலக்காகக் கொண்ட தேசியவாதத்தைத் தூண்ட முயன்றது. மேலும் எப்படியாவது நியூசிலாந்து வணிகங்கள் மென்மையானவை என்று குறிப்பிடுகின்றது. இந்த பிரச்சாரம் தாக்குதல்களின் உண்மையான மூலமான நியூசிலாந்து உட்பட அனைத்து வணிகங்களாலும் அதிகரித்த இலாபத்திற்கான உந்துதலில் இருந்து கவனத்தை திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டது. Next Capital போன்ற நாடுகடந்த முதலாளிகளுக்கு எதிராக எந்தவொரு ஐக்கியப் போராட்டத்தையும் தடுக்கும் பொருட்டு, தொழிற்சங்கங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள தமது சக தொழிலாளர்களிடமிருந்து நியூசிலாந்து தொழிலாளர்களைப் பிரிக்க முற்படுகின்றன.

தொழிற் கட்சி அரசாங்கம் ஓட்டுநர்களுக்குப் ஆதரவாக இருப்பதாக CTU பொய்யாகக் கூறியது. உண்மையில், 2017 ஆம் ஆண்டில் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஓட்டுநர்களின் ஊதியங்கள் மற்றும் நிபந்தனைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் துல்லியமாக எதுவும் செய்யவில்லை. இவ்வாறு செய்தமை 2020 இல் அதை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு தொழிலாளர்கள் சொல்வதிலிருந்து தொழிற்சங்கங்களை தடுக்கவில்லை.

பெருநிறுவன மற்றும் அரசாங்க சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான முதல் படியாக, சோசலிச சமத்துவக் குழு தொழிற்சங்கங்களுக்கு எதிரான சாமானிய தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சியையும், தொழிற் கட்சியிலிருந்து ஒரு முழுமையான அரசியல் முறிவையும் கோருகிறது.

இதற்கு முன்னோக்கி செல்லும் ஒரேவழி சர்வதேச அளவில் தொழிலாளர்கள், ஜனநாயகரீதியாக தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமாகவும் அதற்கு எதிராகவும் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை அமைப்பதாகும்.

இங்கிலாந்தில், தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், COVID-19 தொற்றுநோய்களின் போது விதிக்கப்படும் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை எதிர்க்க லண்டன் பஸ் சாமானிய தொழிலாளர்கள் குழு போராடியது. லண்டனில் மட்டும் 60 க்கும் மேற்பட்ட பஸ் சாரதிகள் தொற்றுநோயினால் இறந்துள்ளனர்.

அமெரிக்காவின் வேர்ஜீனியாவில், வொல்வோ டிரக் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 3,000 தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுக்க United Auto Workers தொழிற்சங்கத்தின் முயற்சிகளை எதிர்ப்பதற்காக ஒரு சாமானிய தொழிலாளர்கள் குழுவை ஒழுங்கமைத்தனர். தொழிற்சங்கத்தின் நிறுவன சார்பு ஒப்பந்தங்களை தொழிலாளர்கள் மூன்று முறை நிராகரித்த பின்னர், தொழிற்சங்கம் இறுதியாக இந்த மாதத்தில் அதேபோன்ற ஒப்பந்தத்தினை திணித்ததன் மூலம், பெருநிறுவன நிர்வாகத்தின் ஒரு பகுதியாக தன்னை வெளிப்படுத்தியது.

தொழிலாளர்கள் போராட்டங்களை எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைப்பதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு இதுபோன்ற குழுக்களின் சர்வதேச கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிற்சங்கங்களின் தேசியவாத விஷத்திற்கு எதிரான ஒரு உலகளாவிய மூலோபாயம், போராட்டத்திற்கு வரும் தொழிலாளர்களின் தனிமைப்படுத்தலை உடைக்கவும், பன்னாட்டு நிறுவனங்களை தோற்கடிக்கவும் அவசியம்.

NZ Bus தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர்கள் உடனடி ஊதிய உயர்வு மற்றும் தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சிறந்த நிலைமைகளை கோரும். இது நிறுவனத்தினதும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தேவைகளுக்கு ஆதரவாக இருக்காது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் உள்ள பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், செவிலியர்கள் மற்றும் பிறருடன் தொடர்புகளை ஏற்படுத்த இது போராடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு உண்மையான போராட்டம் சோசலிசக் கோரிக்கைகளால் வழிநடத்தப்பட வேண்டும். இதில் அனைத்து போக்குவரத்து சேவைகளின் பொது உடைமையாக்கல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அதிக ஊதியம், பாதுகாப்பான வேலைகள் மற்றும் அனைவருக்கும் இலவச போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கும் பல பில்லியன் டாலர்கள் ஒதுக்குவதும் அடங்கும். தொற்றுநோயால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடி முழுவதும் தொடர்ந்து இலாபம் ஈட்டிய வங்கிகள் மற்றும் தனியார் பங்கு நிறுவனங்கள் உட்பட பணக்காரர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான டாலர்களிடமிருந்து இந்த நிதி பெறப்பட வேண்டும்.

Loading