மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
முதல் கோவிட்-19 தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கிய ஐந்து மாதங்களுக்குப் பின்னர், வளரும் நாடுகளில் தடுப்பூசி வழங்குவது ஒரு பேரழிவாகி வருகின்றது.
உலகளவில் விநியோகிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளில் 87 சதவீதத்திற்கும் அதிகமானவை செல்வந்த நாடுகள் பெற்றுள்ளன. அதே நேரத்தில் “குறைந்த வருமானம் கொண்ட” முன்னாள் காலனித்துவ நாடுகள் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே பெற்றுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
ஆபிரிக்காவில், மக்கள்தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தடுப்பூசியின் முதல் கட்ட மருந்தை பெற்றுள்ளனர். உலகளாவிய தொற்றுநோய்களின் மையப்பகுதியான இந்தியாவில், சுடலைகளில் தகனம் செய்யப்படுவது இடைவிடாமல் நடக்கையிலும், மக்கள் தெருக்களில் இறந்து கொண்டிருக்கையிலும் மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் முதற்கட்ட மருந்தைப் பெற்றுள்ளனர்.
உலகளாவிய தடுப்பூசி பேரழிவு இருந்தபோதிலும், தடுப்பூசி விற்பனை அமெரிக்க மருந்து தயாரிப்பாளரான ஃபைசருக்கு ஒரு பெருங்கொடுப்பனவாக உள்ளது. இது செவ்வாயன்று தனது வருமான முன்கணிப்பான 73 சதவிகிதத்தை அடைந்ததாக அறிவித்தது.
தடுப்பூசியை உருவாக்கி உற்பத்தி செய்வதற்கான செலவை விட சுமார் 20 சதவிகிதத்திற்கு அதிகமாக விலை நிர்ணயம் செய்வதன் மூலம், நிறுவனம் முதல் காலாண்டில் மட்டும் தடுப்பூசியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் இலாபத்தை பதிவு செய்தது. இந்த ஆண்டு 26 பில்லியன் டாலர் மதிப்புள்ள தடுப்பூசிகளை விற்கலாம் என ஃபைசர் எதிர்பார்க்கிறது. இதனால் சுமார் 5 பில்லியன் டாலர் இலாபம் கிடைக்கும்.
ஃபைசரின் பங்கு விலை கடந்த ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஆரம்ப நிலையில் உள்ள அதன் ஜேர்மன் கூட்டாளர் பயோஎன்டெக் பல பில்லியன் டாலர் நிறுவனம் ஒரு சில மாதங்களில் பணக்கார பங்குதாரர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டி கொடுத்தது.
ஃபைசரின் போட்டியாளரான மொடேர்னாவின் பங்கு விலை கடந்த 12 மாதங்களில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் இப்போது கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள செல்வந்தராகியுள்ளார்.
இந்த தனியார் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்களின் பரந்த செல்வமயமாதல் அரசாங்கங்களி,ன் பாரிய முதலீடுகளின் மூலமே சாத்தியமானது. குறிப்பாக அமெரிக்காவின் முதலீடு, இது 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழித்து ஃபைசர் மற்றும் மாடர்னாவால் இலாம்படையப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்க உதவுகிறது.
இந்த இரண்டு நிறுவனங்களும் உருவாக்கிய mRNA தடுப்பூசிகள் தேசிய சுகாதார நிறுவன (NIH) தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தின் முக்கிய கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டவை. இது வைரஸின் ஸ்பைக் புரதம் தடுப்பூசியை எவ்வாறு ஸ்திரப்படுத்துகின்றது என்பதற்கான காப்புரிமையைக் கொண்டுள்ளது.
பல நிறுவனங்கள் NIH இன் காப்புரிமையை உரிமம் பெற்றிருந்தாலும், மொடேர்னா எந்த ராயல்டியையும் செலுத்தாமல் NIH கண்டுபிடிப்பை பயன்படுத்துகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேசிய சுகாதார நிறுவனத்தின் (NIH) காப்புரிமை இல்லாமல், ஃபைசர் மற்றும் மொடேர்னா தடுப்பூசிகள் இருக்காது. ஆயினும்கூட, விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் ஒரு சமமான விநியோகத்தை உறுதிப்படுத்த, தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மீது பரந்த அளவிலான கட்டுப்பாட்டை கொண்டுவருமாறு கோரியதை அமெரிக்க அரசாங்கம் மறுத்துவிட்டது.
"உலகளாவிய அணுகலை தேசிய சுகாதார நிறுவனம் (NIH) உறுதிப்படுத்தாமல் இருப்பது அமெரிக்காவின் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான அவர்களின் கடமையைக் கைவிடுவதாகும்" என்று வாஷிங்டன் போஸ்ட்டிடம் சமமான மருந்து மற்றும் சுகாதார சேவைகளை கோரும் அமைப்பான PrEP4All இன் நிர்வாக இயக்குனரும் இணை நிறுவனருமான ஜேம்ஸ் கிரெலென்ஸ்டீன் கூறினார்.
உலகம் முழுவதற்கும் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை, பணக்கார நாடுகள் எவ்வாறு கைகழுவி விட்டன" என்று நியூ யோர்க் டைம்ஸ் பின்வருமாறு எழுதியது: "மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மேற்கத்திய தலைவர்கள் முன்வரிசையில் நின்று தங்களுக்கு வாங்கிக்கொண்டனர். ஆனால் அவர்கள் பல ஆண்டுகாலமாக எச்சரிக்கைகளையும், உலக சுகாதார அமைப்பின் வெளிப்படையான அழைப்புக்களையும் புறக்கணித்தனர். இதில் ஏழை நாடுகளுக்கு அளவுகளை உறுதி செய்யும் அல்லது நிறுவனங்கள், இதுபற்றிய தங்கள் அறிவையும் கட்டுப்படுத்தும் காப்புரிமையையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று ஊக்குவிக்கும் ஒப்பந்தத்தை உருவாக்குமாறு உலக சுகாதார நிறுவனம் (WHO) கோரியதை நிராகரித்துவிட்டன.”
உலக சுகாதார நிறுவனம் (WHO) தடுப்பூசி காப்புரிமையை கைவிடுமாறு அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது, அனைத்து உலகளாவிய மருந்து உற்பத்தி திறனுக்கும் தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க பயன்படுத்தவும் உதவும். உலக சுகாதார நிறுவனத் தலைவர் Tedros Adhanom Ghebreyesus எழுதியது போல்:
இதுவரை வழங்கப்பட்ட 225 மில்லியன் தடுப்பூசிகளில், பெரும்பான்மையானவை ஒரு சில பணக்கார மற்றும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ளன. அதே நேரத்தில் பெரும்பாலான குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. முதலாவது எனக்கு மட்டும் என்ற அணுகுமுறை குறுகிய கால அரசியல் நலன்களுக்கு உதவக்கூடும், ஆனால் அது சுய தோல்வியாகும்.
காப்புரிமை உரிமைகளை தள்ளுபடி செய்வது, உலகில் உள்ள எந்தவொரு உற்பத்தியாளருக்கும் உலகெங்கிலும் மிகவும் தேவைப்படும் தற்போதைய தடுப்பூசிகளின் மலிவான, பொதுவான நகல்களை உருவாக்க அனுமதிக்கும்.
இந்த நடவடிக்கை இதுவரை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள், மருந்து உற்பத்தியாளர்களின் "அறிவுசார் சொத்து" (intellectual property) உரிமைகளை மீறுவதற்கு எதிராக ஒரு வெறித்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. திங்களன்று, வாஷிங்டன் போஸ்ட், "காப்புரிமை இல்லாத 'பிரபலமான தடுப்பூசி', ஏழை நாடுகளுக்கு உதவ சிறந்த வழி அல்ல" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. இதன் மூலம் இந்நிறுவனங்கள் இலாபமடைவதை குறுக்கறுப்பதற்கு எதிராக உள்ளது.
தடுப்பூசிகளை மிகவும் சுதந்திரமாகவும் சமமாகவும் கிடைக்கச் செய்வது "அவர்களின் அறிவுசார் சொத்துக்களை இப்போது அகற்றுவதன் மூலம் எதிர்கால கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த முடியும்."
வாஷிங்டன் போஸ்ட் வெளிப்படையாக அதன் வாசகர்களை முட்டாள்களாக்க அழைத்துச் செல்கிறது. இந்த நிறுவனங்களால் பணமாக்கப்பட்ட “கண்டுபிடிப்புகள்” பொது ஆய்வகங்கள் மற்றும் பொது ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டவை. தடுப்பூசிகளை தயாரித்து விநியோகிப்பதற்கான இலாபங்கள் மற்றும் உரிமைகள் மட்டுமே "தனிப்பட்டவர்களுக்கு உரியதாக" உள்ளது. போஸ்ட்டின் கூற்றுப்படி, உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக மருத்துவ ரீதியாக தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்வதிலும் விநியோகிப்பதிலும் அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். இது இப்போது உலகளவில் 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை தள்ளுபடி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க பைடென் நிர்வாகம் இதுவரை மறுத்துவிட்டது. ஜனாதிபதியின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோனி பௌசி திங்களன்று ஒரு நேர்காணலில், "நிறுவனங்கள் தம்மை வர்த்தகத்தில் ஈடுபடுத்தி வைத்திருப்பதற்கான அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான தேவைகளை மதிக்கிறேன்" என்று கூறினார்.
இது ஒரு அபத்தமாகும். "அறிவுசார் சொத்து" என்று அழைக்கப்படுவது முதலாளித்துவ தன்னலக்குழுவின் செறிவூட்டலுக்காக உலக மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு வார்த்தைப்பிரயோகம் மட்டுமே. மில்லியன் கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளன! சமூகத்தின் அனைத்து வளங்களும் முடிந்தவரை அதிகமான உயிர்களைக் காப்பாற்ற திரட்டப்பட வேண்டும். தன்னலக்குழுக்களின் இலாபம் நாசமாகிப் போகட்டும்!
மார்ச் 13, 2020 அன்று, உலக சோசலிச வலைத் தளம், “முதலாளித்துவம் சமூகத்துடன் போரில் உள்ளது” என்ற தலைப்பில் ஒரு முன்னோக்கை வெளியிட்டது. இந்தியாவின் பாரிய மக்கள் சுவாசிப்பதற்காக போராடுகையில், மருந்துப்பொருள் நிறுவனங்கள் இலாம்படையும் இந்த யதார்த்தத்தை வேறோன்றும் நிரூபிக்கவில்லை.
முதலாளித்துவ அரசாங்கங்களால் உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் பற்றிய மொத்த அலட்சியம் முதலாளித்துவ சமூக ஒழுங்கினை பற்றி மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இது சமூகத்தின் தேவைகளை சமூக தன்னலக்குழுக்களை நிதி தன்னலக்குழுவின் செல்வமயமாக்கலுக்கும் ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களுக்கும் கீழ்ப்படுத்துகிறது. இதனால்தான் கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்தும் போராட்டம் முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து அதை சோசலிசத்துடன் மாற்றுவதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது.