இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், சமீபத்தில் தமிழ் புலம்பெயர்ந்தோர் எனப்படும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த உலகெங்கிலும் உள்ள பல தமிழ் இனத்தவர்களின் அரசியல் அமைப்புகளுக்கு தடை விதித்தது.
உலகத் தமிழர் பேரவை (GTF), பிரிட்டிஷ் தமிழ்ப் பேரவை (GTF), கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC), ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC), கனடிய தமிழ் தேசிய காங்கிரஸ், தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலக தமிழர் சார்பு கழகம் போன்ற அமைப்புகளும் தடை செய்யபட்ட அமைப்புகளுள் அடங்கும்.
இதற்கு மேலாக, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தனிநபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை, அரசியல் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கும் சர்வதேச அளவில் ஒழுங்கமைந்து செயல்படுவதற்கான உள்ள ஜனநாயக உரிமை மீதான கடுமையான தாக்குதலாகும். இது பாரதூரமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. பூகோள மூலதனத்தின் தாக்குதலுக்கு எதிராக, சர்வதேச அளவில் ஒன்றிணைவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கும் உள்ள உரிமை இங்கு கடுமையான ஆபத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தாக்குதலின் பிரதான இலக்கு, உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடுகின்ற, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் இலங்கைக் கிளையான சோசலிச சமத்துவக் கட்சியுமே ஆகும்.
டெய்லி மிரர் மார்ச் 29 அன்று வெளியிட்ட செய்தியின்படி, அவற்றின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்துடன் 'இன்னமும்' தொடர்புபட்டிருப்பதால், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் காரணம் காட்டியே, அரசாங்கம் மேற்கண்ட அமைப்புகளையும் தனிநபர்களையும் தடைசெய்திருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபை 2012 இல் அமுல்படுத்திய விதி எண் 1 இன் கீழ் வரும், 4(7) விதியின் படி, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன கையெழுத்திட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், மேற்கண்ட அமைப்புகளும் தனிநபர்களும் இலங்கையில் எந்தவொரு அரசியல், சமூக மற்றும் நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுவது முழுமையாக தடை தடைசெய்யப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி.) இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 23 அன்று நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' என்ற தலைப்பிலான தீர்மானத்தில், நாட்டில் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க அழைப்பு விடுத்துள்ளது. மேற்கண்ட அமைப்புகள் அனைத்தும், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபை, கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மொன்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் அமைக்கப்பட்ட யு.என்.எச்.ஆர்.சி.இல் செயற்படுகின்ற “இலங்கை சம்பந்தமான கோர் குழுவினால்,” அமெரிக்காவின் “இணை அனுசரணையுடன்” முன்வைக்கப்பட்ட இந்த பிரேரனை, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக எந்த கவலையும் கொண்டதல்ல
உலக சோசலிச வலைத் தளம் சுட்டிக்காட்டியுள்ளபடி, தீர்மானத்தின் உண்மையான நோக்கம், 'சீனாவுடனான உறவுகளைத் துண்டிக்கவும், சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தயாரிப்புகளுடன் செயலில் ஒருங்கிணையவும் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தை நெருக்குவதாகும்.'
மறுபுறம், தடைசெய்யப்பட்ட தமிழ் புலம்பெயர்ந்தோரின் அமைப்புகள், தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு அவசியத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சிங்கள மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்துக்கு முற்றிலும் விரோதமான அவர்கள், தமிழ் தேசியவாத அல்லது அதன் நீட்சியான தமிழ் பிரிவினைவாத அரசியலின் ஆரவார பிரச்சாரகர்கள் ஆவர்.
இலங்கையில் செயல்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், தமிழ் புலம்பெயர் நாடுகளில் அரசியலில் ஈடுபட்டுள்ள மேற்கண்ட அமைப்புகளும், கொழும்பு ஆட்சியாளர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் சமரசத்தின் மூலம் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் வரப்பிரசாதங்களை குவித்துக்கொள்ளும் நோக்குடனேயே, இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் திணிக்கும் அழுத்தத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளன.
இந்த அமைப்புகளைத் தடை செய்வதன் மூலம் ஜனாதிபதி இராஜபக்ஷ அடைய விரும்பும் நோக்கங்கள் யாவை?
கொவிட்-19 தொற்றுநோயால் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ, அதன் முழு சுமையையும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டமக்கள் மீது சுமத்தும் தனது கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கு இரண்டு பிதான முறைகளைப் பயன்படுத்துகிறார். இனவெறியைத் தூண்டி தொழிலாள வர்க்க ஐக்கியத்தை தகர்த்து, அதன் வலிமையைக் குறைப்பது இதில் ஒன்றாகும். நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லீம் எதிர்ப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமடையச் செய்வதுடன், தமிழ் பிரிவினைவாதம் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் அரசாங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரத்தை மேலும் தூக்கிப் பிடிக்க இராஜபக்ஷ உத்தேசித்துள்ளார்.
அதே நேரம், 'தேசிய பாதுகாப்பிற்கு' அச்சுறுத்தல் விடுத்து பயங்கரவாதம் வேகமாக பரவி வருகின்றது என்ற அரசாங்கத்தின் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி, இராணுவமயமாக்கலை விரிவுபடுத்துவதற்கு இராஜபக்ஷ முயல்கிறார். வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தை கொடூரமான முறையில் நசுக்குவதை நோக்கமாகக் கொண்ட, இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதன் பேரில், இராஜபக்ஷ விரைவாக முன நகர்ந்து வருகிறார்.
2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை உடனடியாக பற்றிக்கொண்ட இராஜபக்ஷ, 'பயங்கரவாதத்தை வேரோடு அழித்து தேசிய பாதுகாப்பை' ஊக்குவிப்பதாக கூறி தனது ஜனாதிபதி பிரச்சாரத்தை ஊக்குவித்ததுடன் மற்றும் ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகளை அவசர அவசரமாக முக்கிய அரசாங்க பதவிகளுக்கு நியமித்து இராணுவமயமாக்கலை துரிதப்படுத்தினார்.
இதற்கும் மேலாக, அடக்குமுறை இயந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்கு, தீவின் அனைத்து மாவட்டத்திலும் ஒரு இராணுவ நிர்வாகி நியமிக்கப்பட்டார். போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மேஜர் ஜெனரலான கமால் குணரத்ன, பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையில் கையெழுத்திட்டவரும் அவரே.
இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்யும் இந்த அமைப்புகளை தடை செய்வதன் மூலம், இராணுவத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறையின் போது இடம்பெறும் வன்முறைகள் சம்பந்தமாக அதன் உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவும் இராஜபக்ஷ எதிர்பார்க்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), மற்றும் அதில் இருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.), தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்தமை பற்றி காட்டும் பிரதிபலிப்பு, அவர்களின் கபடத்தனமான கொள்கையை தெளிவாக நிரூபிக்கின்றது.
தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் தொடுத்த தாக்குதல்களுக்கு, குறிப்பாக அது தீவிரமாக முன்னெடுத்த இரத்தக்களரி யுத்தத்துக்கு எதிராக, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களிடையே வளர்ந்து வந்த சக்திவாய்ந்த எதிர்ப்பை சுரண்டிக்கொண்டு, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஜே.வி.பி. அதற்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தது.
புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்யும் என்று மிகைப்படுத்துவதற்காக, 2015 இல் ஆட்சிக்கு வந்தவுடனேயே, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் தடை செய்யப்பட்டிருந்த தமிழ் புலம்பெயர் நாடுகளில் இருந்த பல அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது, இருப்பினும், இப்போது அந்த அமைப்புகள் மீண்டும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஐ.தே.க., ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. மௌனமாக இருந்து இந்த ஜனநாயக விரோத கொள்கையை ஆதரிக்கின்றன.
தமிழ் புலம்பெயர் அமைப்புகளை தடை செய்ய கோட்டாபய இராஜபக்ஷ முன்னெடுத்துள்ள இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை, அவரது அரசியல் எதிரிகள் அனைவருக்கும், குறிப்பாக தொழிலாள வர்க்க அரசியல் அமைப்புகளுக்கும், மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் விடுக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த எச்சரிக்கையாகும்.