பங்களாதேஷின் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பெரும் கொடிய தீ விபத்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை இரவு பங்களாதேஷின் காக்ஸ் பஜாரிலுள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது, இதனால் குறைந்தது 15 ரோஹிங்கியா அகதிகள் இறந்துள்ளனர், 400 பேரைக் காணவில்லை, மேலும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தங்குமிடம் இல்லாமல் போயுள்ளது.

இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் உத்தியோகபூர்வ விசாரணையில் உள்ளதானது ரோஹிங்கியா அகதிகளின் அதிர்ச்சியூட்டும் அவலநிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. பெரும்பாலும் 2017 முதல் அண்டை நாடான மியான்மாரில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டு வந்து, அண்ணளவாக 900,000 பேர் உலகின் ஏழ்மையான நாடுகளுக்குள் ஒன்றான இந்நாட்டில் மோசமான மற்றும் பாதுகாப்பற்ற குடிசை நகர்ப்புறங்களில் சிக்கியிருக்கின்றனர்.

மார்ச் 22, 2021, திங்கட்கிழமை, தெற்கு பங்களாதேஷில், பாலுக்காளியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம் நெருப்பில் மூழ்கியது. இந்நெருப்பு நூற்றுக்கணக்கான குடில்களை அழித்து ஆயிரக்கணக்கானவர்களை வீடற்றவர்களாக்கியுள்ளது (AP Photo / Shafiqur Rahman)

பெரும் வல்லரசு நாடுகள் இவர்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைந்து விடாமல் தடுக்க தங்களது எல்லைகளை தொடர்ந்து மூடி வைத்துள்ள நிலையில், மில்லியன் கணக்கான ஏனைய அகதிகள் பூகோள அளவில் தப்பியோடி அடக்குமுறைக்கும் வறுமைக்கும் ஆளாவதுடன், கோவிட்-19 பெருந்தொற்று நோயின் காரணமான கூட்டு அழிவுக்கும் உள்ளாகின்றனர்.

ஐ.நா. அகதிகள் அமைப்பான UNHCR இன் தற்காலிக அறிக்கைகளின் அடிப்படையில், நேற்று, உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளுக்கு மேலதிகமாக, 560 க்கும் மேற்பட்ட அகதிகள் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 45,000 பேர் இந்த நரக சூழலில் தங்களது தங்குமிடங்களையும் உடமைகளையும் இழந்து தவிப்பதாகவும் கூறப்படுகிறது. மதிப்பீடுகள் தொடரும் நிலையில், இந்த புள்ளிவிபரங்கள் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நெருப்பு மற்ற இரண்டு முகாம்களுக்கும் பரவுவதற்கு முன்னர் காக்ஸ் பஜாரிலுள்ள 34 முகாம்களில் ஏதோவொன்றிலிருந்து பரவ ஆரம்பித்திருக்கும் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள், எரிந்து கொண்டிருக்கும் குடில்கள் மற்றும் கூடாரங்களில் இருந்து பெரும் அலை போல கடும் புகை மண்டலம் அங்கு உருவாகியிருந்ததைக் காட்டியது, இந்நிலையில் தன்னார்வ குடியிருப்பாளர்களும், தீயணைப்பு படையினரும், மற்றும் உதவிப் பணியாளர்களும் தீப்பிழம்புகளை எதிர்த்துப் போராடி அதில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்ற வெளியே இழுத்துக் கொண்டிருந்தனர்.

இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் தாங்கள் கண்ட துயரகரமான காட்சிகளை விளக்கினர். “கண்களுக்கு முன்னால் மக்கள் சாம்பலாகிக் கொண்டிருந்தனர்,” என்று மக்களை இதிலிருந்து மீட்க முயன்ற 25 வயது அகதியான சாய்ஃபுல் அரக்காணி BBC க்கு தெரிவித்தார். மேலும், “மக்கள் ‘எங்கள் அம்மாவைக் காப்பாற்றுங்கள், எங்கள் சகோதரியைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறிக் கொண்டே தங்களது குடில்களிலிருந்து தப்பியோடுவதை நான் கண்டேன். இது முற்றிலும் குழப்பமான ஒரு சூழ்நிலை. என்ன செய்வது என்று எவருக்கும் புரியவில்லை” என்றும் அவர் கூறினார்.

Save the Children அமைப்பின் தன்னார்வத் தொண்டரான Tayeba Begum இவ்வாறு தெரிவித்தார்: “என்ன நடந்தது என்று நாங்கள் புரிந்துகொள்வதற்கு முன்னரே தீ விரைந்து வெடித்து பரவி எங்களது வீட்டையும் பற்றிக் கொண்டது. மக்கள் கதறிக் கொண்டே இங்கும் அங்கும் பரிதவித்தனர். தங்களது குடும்பத்தினரை தேடி அழுதவாறே, குழந்தைகளும் சிதறி ஓடினர். இது நான் சமீபத்தில் கண்ட மிகக் கொடூரமான சம்பவமாக இருந்தது.”

திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இந்த தீ பரவத் தொடங்கியது, தீயணைப்பு படையினர் அநேகமாக ஒரு மணி நேரம் கழித்து அதை அணைத்தனர். என்றாலும் அடுத்து உடனடியாக இரவு 11.00 மணிக்குப் பின்னர் மற்றொரு நெருப்பு அலையும் அங்கு உருவாகி, அதிகாலை 12.30 மணியளவில் குடிசைகளை எரித்துக் கொண்டிருந்ததாக அகதிகள் கூறினர்.

முகாம்களைச் சுற்றி சமீபத்தில் அமைக்கப்பட்ட முள்வேலிக்குள் பலர் சிக்கிக் கொண்டனர், இதனால் கூட சிலர் உயிரிழக்க நேரிட்டது என்று சில சாட்சியாளர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச மீட்புக் குழு (International Rescue Committee-IRC) இவ்வாறு தெரிவித்தது: “ஆரம்பகட்ட அறிக்கைகள், புதிதாக அமைக்கப்பட்டிருந்த முள்வேலி, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட, அகதிகள் தீயிலிருந்து தப்பியோடும் வேகத்தை கடுமையாக கட்டுப்படுத்தியது.” மேலும், இந்த தீ, சுகாதார நிலையங்கள், மசூதிகள், சமூக மையங்கள் மற்றும் பெண்களுக்கான IRC இன் பாதுகாப்பு இடங்கள் என அனைத்தையும் அழித்துவிட்டதாக IRC தெரிவித்தது.

இந்த ஆண்டு இந்த முகாமில் ஏற்பட்ட பல தீ விபத்துக்களில் இது மிகப்பெரியது. நான்கு நாட்களுக்கு முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று முகாம்களில் ஏற்பட்ட இரண்டு தனித்தனி தீ விபத்துக்கள் கூட ஏராளமான குடிசைகளை அழித்துவிட்டிருந்தன. மேலும் ஜனவரியில் இரண்டு பெரிய தீ விபத்துக்கள் முகாம்களைத் தாக்கின, அதனால் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகினர், மேலும் அங்கிருந்த நான்கு UNICEF பள்ளிகளும் அகற்றப்பட்டன.

சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிரச்சாரகரான, ஸாத் ஹம்மாதி (Saad Hammadi), “அடிக்கடி நிகழும் இந்த தீ விபத்துக்கள் மிகவும் தற்செயலானவை அல்ல, ஏனென்றால் குறிப்பாக இச்சம்பவங்கள் தொடர்பான முன்னைய விசாரணைகளின் முடிவுகள் இதுவரை அறியப்படாதபோது, அவை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றனவே” என்று ட்வீட் செய்துள்ளார்.

100,000 அகதிகளை நாட்டின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாசன் சார் தீவுக்கு (Bhasan Char Island) இடம்பெயரச் செய்ய பங்களாதேஷ் அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதுவரை, சுமார் 13,000 ரோஹிங்கியாக்கள், 2006 ஆம் ஆண்டில் மேக்னா நதி வங்களா விரிகுடாவிற்குள் நுழைகையில் பெரும் வண்டல் குவிப்பை உருவாக்கியதால் உருவான வெள்ளம் மற்றும் சூறாவளியின் பாதிப்புக்குள்ளான சேற்றுப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கே திருப்பியனுப்ப பங்களாதேஷ் அரசாங்கம் மீண்டும் முயல்கிறது, பிப்ரவரி 1 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு வரை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருந்த ஆங் சான் சூ கி இன் ஆதரவுடனான இராணுவத்தின் இனப்படுகொலை வன்முறையிலிருந்து தப்பிக்க அங்கிருந்து தான் ரோஹிங்கியாக்கள் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், பங்களாதேஷில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் உள்ளனர், இவர்களில் சிலர் நகர்ப்புறங்களில் பரிதாபகரமான நிலைமைகளில் வாழ்கின்றனர். பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அவர்களை நாட்டுக்கு ஒரு சுமையாக கருதுகின்றது, மேலும் அவர்களுக்கு எதிராக ஊடக சூனிய வேட்டையைத் தூண்டி, அவர்களை “பாதுகாப்புக்கு” அச்சுறுத்தலானவர்கள் என்றும் முத்திரை குத்தியுள்ளது.

காக்ஸ் பஜார் முகாம்கள் உலகில் அதிக மக்கள் நெரிசலுள்ள அகதிகள் முகாம்களில் ஒன்றாகும், இங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 40,000 க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அவர்களுக்கு போதுமான தண்ணீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் வசதிகள் இல்லை, மேலும் கோவிட்-19 உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அவர்களிடையே பரவுவதற்கு அச்சுறுத்துகின்றன.

பல நூற்றாண்டுகளாக மியான்மாரில் வாழ்ந்து வந்த பெரும்பாலும் முஸ்லீம் சிறுபான்மையினராகவுள்ள ரோஹிங்கியாக்கள் மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்படுவதற்கு நேரடி பொறுப்புள்ளவர்களில் சூ கி யும் அடங்குவார். ரோஹிங்கியாக்களுக்கு எதிரான இனப்படுகொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான நாட்டின் இராணுவத்திற்கு முழுமையாக மன்னிப்பவராகவுள்ள அவர் டிசம்பர் 2019 இல் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரானார்.

குடியுரிமை உரிமைகள் மறுக்கப்பட்டு, “சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்ட ரோஹிங்கியா மக்களை அச்சுறுத்தும் மிருகத்தனமான நடவடிக்கைகளில் மியான்மார் இராணுவம் 2017 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. வின் உண்மையை கண்டறியும் பணிக்குழு ஒன்று, இராணுவப் படை 10,000 க்கும் மேற்பட்டவர்களை கொன்றது, கிட்டத்தட்ட 400 கிராமங்களை அழித்தது, மற்றும் 750,000 க்கு நெருக்கமான ரோஹிங்கியாக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றியது போன்றவற்றைக் கண்டறிந்தது.

ரோஹிங்கியாக்களின் வெளியேற்றம் என்பது வெறுமனே இராணுவத்திற்கும் ஆயுதமேந்திய ரோஹிங்கியா பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையிலான மோதலின் விளைவே தவிர, இன அழிப்புக்கான நனவான கொள்கை அல்ல என்று சூ கி கூறுகிறார்.

ரோஹிங்கியாக்களுக்கு புகலிடம் வழங்க மறுத்த ஆஸ்திரேலியா உட்பட சர்வதேச அளவில் முன்னேறிய நாடுகளின் பல அரசாங்கங்களுக்கும் இது குறித்து சமமான பொறுப்பு உள்ளது.

தொழிற்கட்சி மற்றும் தாராளவாத-தேசிய கூட்டணிக் கட்சிகளின் அடுத்தடுத்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள், ரோஹிங்கியா அகதிகளின் படகுகளை விரட்டியடித்தன, மேலும் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்த எவரையும் சிறையிலடைத்தன, அல்லது பாதுகாப்பற்ற தற்காலிக வதிவிட அனுமதியுடன் (visa) வந்தவர்களை அடிப்படை உரிமைகள் எதுவுமின்றி, வறிய நிலைமைகளுக்கு உட்படுத்தின.

பூகோள அளவில், கோவிட் பெருந்தொற்றுக்கான அரசாங்கங்களின் பதிலிறுப்புக்கள் உலகின் அகதிகள் நெருக்கடியை ஒரு புதிய மட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. கடந்த மே மாதம் முதல், 177 நாடுகள் தங்களது எல்லைகளை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ மூடி வைத்து, மக்கள் புகலிடம் கோரும் உரிமையை இரத்து செய்துள்ளன.

UNHCR இன் சமீபத்திய புள்ளிவிபரங்களின் படி, டிசம்பர் 2019 இல், தொற்றுநோய்க்கு முன்னரே, உலகெங்கிலுமாக குறைந்தது 79.5 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. மேலும், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் இயக்க சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட மில்லியன் கணக்கான நாடற்ற மக்களும் உலகில் உள்ளனர்.

ரோஹிங்கியாக்கள் நடத்தப்படும் விதம், எல் சால்வடோர், கொண்டூரஸ் மற்றும் குவாத்தமாலா நாடுகளிலிருந்து மனிதர்கள் வெளியேற்றப்படுவது தொடர்பான அமெரிக்காவில் பைடென் நிர்வாகத்தின் பிரதிபலிப்புடன் ஒத்துப்போகிறது, இந்த நாடுகள் அனைத்தும் நீண்டகாலமாக அமெரிக்க ஆதரவிலான வறுமை மற்றும் அடக்குமுறைக்கு ஆளானவை. அமெரிக்க அரசாங்கம் அதன் கதவுகளை மூடி வைத்து, ஆதரவற்ற 15,000 குழந்தைகளை சட்டத்தை மீறுபவர்களாக கூறி தடுத்து வைத்துள்ளது.

இதேபோன்ற நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதும் எடுக்கப்பட்டு வருகின்றன, இதனால் 2021 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் மத்தியதரைக் கடலில் ஏராளமான மக்கள் நீரில் மூழ்கிப் போகும் நிலை உருவானது.

ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா வரையிலுமாக, முன்நிகழ்ந்திராத அளவிலான மனித துயரங்களுக்கு முதலாளித்துவ அமைப்பு வழங்கும் கொடூரமான, பகுத்தறிவற்ற பதில் இதுதான். இது, உலகளாவிய சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆளும் நிதிய உயரடுக்குகளுக்கு எதிராக தேசிய எல்லைகள் எங்கிலும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.

அதற்கு, சுகாதார பாதுகாப்புரிமை, வாழ்வதற்கு தேவையான வருமானம், மற்றும் அடக்குமுறை அல்லது நாடுகடத்தப்படுவது குறித்த பயம் எதுவுமின்றி வேலை செய்யும் மற்றும் பயணிக்கும் வாய்ப்பு உட்பட முழு குடியுரிமை உரிமைகள் வழங்கப்பட்டு, தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள நாட்டில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் அவர்களுக்கு நிபந்தனையற்ற பாதுகாப்புரிமை வழங்கப்படுவது தேவைப்படுகிறது.

Loading