மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட்-19 தொற்றுநோய் தொடர்ந்து பரவி, உலகளவில் பாரிய உயிரிழப்புகளும் மற்றும் துயரங்களும் ஏற்பட்டு வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளினது உலகளாவிய "நல்லிணக்கத்திற்கான" அழைப்புகள், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களைப் பொறுத்த மட்டில், செவிட்டு காதில் ஊதிய சங்கொலியாக ஆகி வருகின்றன.
அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர், கோவிட்-19 நெருக்கடி சம்பந்தமான அவர் அறிக்கையில், தஞ்சம் கோரும் உரிமையை இல்லாதொழிப்பதற்கும் மற்றும் மரணம் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தப்பியோடி வருபவர்களை மீண்டும் திரும்ப அனுப்புவதற்கும் சாக்குபோக்காக இந்த தொற்றுநோய் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராக எச்சரித்தார். “இத்தகைய சவாலான நேரத்தில், போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பித்து வருபவர்களை மறந்து விடக்கூடாது. முன்பை விட இன்னும் அதிகமாக இப்போது அவர்களுக்கு —நம் எல்லோருக்குமே— நல்லிணக்கமும் இரக்க உணர்வும் தேவைப்படுகிறது,” என்றவர் தெரிவித்தார்.
“நல்லிணக்கம் மற்றும் இரக்கவுணர்வு" என்பதிலிருந்து வெகுதூரம் விலகி, உலகளவில் அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் அரசு வன்முறை, பாரிய நாடு கடத்தல்கள், தடுப்புக் காவல், பட்டினி மற்றும் மரணங்களைப் பெறும் முனையில் உள்ளனர். உலகெங்கிலுமான முதலாளித்துவ சமூகத்தில் மேலோங்கி உள்ள சமூக சமத்துவமின்மை மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட சுரண்டல், ஏகாதிபத்திய போரை நோக்கிய இடைவிடாத ஓட்டம், எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய திருப்பம் என இவற்றுடன் சேர்ந்து, இந்த வைரஸ் அதன் முதல் பலியை எடுப்பதற்கு முன்னரே பெரிதும் ஆக்ரோஷமாக இருந்த அகதிகள் மீதான போரைத் தீவிரப்படுத்தவும் மற்றும் நியாயப்படுத்தவும் இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய் சேவையாற்றி உள்ளது.
இன்று வரையில், 177 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அவற்றின் எல்லைகளை மூடியுள்ளன, பெரும்பாலும் உலகெங்கிலும் தஞ்சம் கோருவதற்கான உரிமை நடைமுறையளவில் விட்டொழிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை விட வேறெங்கும் இந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியாது, அங்கே ட்ரம்ப் நிர்வாகம் கோவிட்-19 என்ற வார்த்தைப் பிரயோகம் வருவதற்கு முன்னரே திட்டமிட்டிருந்த அதிகரித்தளவிலான புலம்பெயர்ந்தோர்-விரோத உத்தரவாணைகளை நடைமுறைப்படுத்த இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சாதகமாக்கி கொண்டுள்ளது. அமெரிக்காவை விட கொரோனா வைரஸ் பரவல் பெரிதும் குறைவாகவே உள்ள நாடுகளுக்கு பத்தாயிரக் கணக்கானவர்களை நாடு கடத்துவதற்காக, ட்ரம்ப் நிர்வாகம், தொடர்புகள் மூலமாக பரவும் நோயிலிருந்து பாதுகாப்பதற்காக என்ற பெயரில் நிறைவேற்றப்பட்ட குழப்பமான புலம்பெயர்வு சட்ட சாசனத்தைக் கையிலெடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவுக்குள் சீனா வேண்டுமென்றே இந்த வைரஸை "விதைத்தது" என்று ட்ரம்ப் நிர்வாகம் சூழ்ச்சி தத்துவங்களை ஊக்குவிக்கும் அதேவேளையில், மத்திய அமெரிக்காவின் வறிய நாடுகளுக்கும் அத்துடன் ஹைட்டி மற்றும் கரீபியன் பகுதியிலுள்ள ஏனைய இடங்களுக்கும் துல்லியமாக புலம்பெயர்ந்தோர் நிரம்பிய விமானங்கள் மூலமாக அவர்களை வேகவேகமாக நாடு கடத்தி வருகிறது. புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையங்களில் பலவும் பெருநிறுவனங்கள் நடத்தி வரும் இலாபத்திற்கான சிறைகள் என்பதுடன், அங்கெல்லாம் கொரொனா வைரஸ் காட்டுத்தீயைப் போல பரவி உள்ள நிலையில், அவற்றிலிருந்து இருந்து இழுத்து வரப்பட்டு நாடு கடத்தல்கள் செய்யப்படுகின்றன, இத்தகைய நாடுகடத்தல்கள் வேகவேகமாக மருத்துவ அமைப்புகள் நிரம்பி வழிந்து வரும் நாடுகளில் இந்த தொற்றுநோய் பரவுவதில் ஒரு உந்துசக்தியாக ஆகிவிடுகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு பணிவடக்கமான கூட்டாளியான குவாத்தமாலாவின் அதிவலது ஜனாதிபதி Alejandro Giammattei கூட, அமெரிக்க நாடு கடத்தல்களைக் கண்டிக்க நிர்பந்திக்கப்பட்டார், அவர் வாஷிங்டன் சிந்தனை குழாமான Atlantic Council க்கு கூறுகையில், “மக்களை அமெரிக்கா நாடு கடத்த விரும்புகிறது என்பது எங்களுக்குப் புரிகிறது, எங்களுக்குப் புரிகிறது ஆனால் அவர்கள் தொற்று ஏற்பட்ட விமானங்களில் அவர்களை எங்களிடம் அனுப்புகிறார்கள் என்பது தான் எங்களுக்கு புரியவில்லை,” என்றார். அவரது வார்த்தைகள், அமெரிக்காவிலிருந்து அவர் நாட்டு மக்கள் பலவந்தமாக அனுப்பப்படுவதை நோக்கிய அவர் அரசாங்கத்தின் புறக்கணிப்பு மற்றும் குரூரத்தைத் துல்லியமாக பிரதிபலிக்கின்றன.
அமெரிக்க அரசாங்கத்தின் வக்கிர மனப்பான்மையிலிருந்து குழந்தைகள் கூட விதிவிலக்காக விடப்படவில்லை, அவர்களில் 1,000 க்கும் அதிகமானவர்கள் விசாரணையின்றி மெக்சிகோவுக்கும் மார்சில் இருந்து மத்திய அமெரிக்காவின் வன்முறை நிரம்பிய வடக்கு முக்கோண நாடுகளுக்கும் நாடு கடத்தப்பட்டனர்.
இந்த கொரொனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எந்தவொரு நடைமுறையளவிலான கொள்கையையும் செயல்படுத்துவதிலிருந்து அது மானக்கேடாக தோல்வி அடைந்திருப்பதற்காக ட்ரம்ப் நிர்வாகம் இழிபெயரெடுத்துள்ளது, இது உலக மக்கள்தொகையில் வெறும் நான்கு சதவீதத்தைக் கணக்கில் கொண்டுள்ள ஒரு நாடான அமெரிக்காவை உலகின் நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளில் அண்மித்து மூன்றில் ஒரு பங்கை ஏற்றிருக்குமாறு விட்டு வைத்துள்ளது. ஆனால் இந்த கடற்கரையிலிருந்து அந்த கடற்கரை வரையில் எந்த இடையூறும் இல்லாமல் ஏற்கனவே பரவியுள்ள ஒரு வைரஸில் இருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதற்காக என்ற போலி சாக்குப்போக்கின் கீழ், அது எல்லைகளை மூடுவதையும், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான இன்றியமையா உரிமைகளை மறுப்பதற்காக அமெரிக்க சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மிதித்து நசுக்கி வருவதையும் அதிகரித்துள்ளது.
இதுபோன்றவொரு விடையிறுப்பு வெறுமனே அமெரிக்க ஜனாதிபதியின் பாசிசவாத மற்றும் குற்றகரமான மனோநிலையின் விளைபொருள் அல்ல என்பது உலகெங்கிலும் புலம்பெயர்ந்தோர் மீது இதேபோன்று கடுமையான ஒடுக்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதில் இருந்து தெளிவாகிறது.
ஐரோப்பாவில், “ஐரோப்பிய கோட்டையின்" பிரதான முன்கள எல்லை பாதுகாவலர்களாக சேவையாற்றும் இரண்டு நாடுகள் —அதாவது, மத்திய தரைக்கடல் மற்றும் பால்கன் புலம்பெயர்வு பாதைகளைப் பாதுகாக்கும் முறையே கிரீஸ் மற்றும் ஹங்கேரி— தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பித்து வரும் பெருந்திரளான அகதிகளுக்கு எதிராக சம அளவில் காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன.
கிரீஸில், ஆயிரக் கணக்கானவர்கள் இல்லையென்றாலும் நூற்றுக் கணக்கான தஞ்சம் கோருவோர்கள் இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்தே நீதி விசாரணையின்றி நாடுகடத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா மற்றும் ஏனைய இடங்களிலும் ஏகாதிபத்திய போர்களின் பாதிப்புகளில் இருந்து தப்பி வரும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கிரேக்க எல்லையில் பொலிஸின் கண்ணீர் புகைக்குண்டுகளையும் மற்றும் அமைக்கப்பட்டுள்ள ரேசர் முள்வேலிகளையும் சந்திக்கின்றனர். அந்நாட்டில் ஏற்கனவே உள்ள அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் வீதிகளில் இருந்தும் தடுப்புக்காவல் மையங்களில் இருந்தும் பொலிஸால் இழுத்துச் செல்லப்பட்டு, அடித்து, அவர்களின் பணமும் செல்போன்களும் பறிக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்படுகின்றனர், துருக்கி எல்லைக்கு வெளியே பலவந்தமாக தள்ளப்படுகின்றனர். இதற்கிடையே தான் கொரொனா வைரஸ் நெரிசல் கூட்டம் மிகுந்த கிரேக்க அகதி முகாம்களில் மூர்க்கமாக பரவி கொண்டிருக்கிறது.
உலகில் மிக அதிகபட்ச அதிகங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான துருக்கியிலேயே கூட, நிலைமைகள் அதிகரித்தளவில் படுமோசமாக ஆகி வருகின்றன. அந்நாட்டின் தஞ்சம் கோருவோர்கள் மற்றும் புலம்பெயர்வோர் நல்லிணக்க அமைப்பு நடத்திய ஓர் ஆய்வு, அகதிகளில் 63 சதவீதத்தினர் இந்த தொற்றுநோயின் போது தங்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமப்படுவதாக கூறியிருப்பதையும், மற்றும் இந்த தொற்றுநோய்க்கு முன்னரே 18 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மையுடன் ஒப்பிடுகையில் 88 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும் கண்டறிந்தது.
சேர்பியா மற்றும் குரோஷியாவிலிருந்து வர முயலும் அகதிகள் ஹங்கேரியின் எல்லையில் உள்ள “புலம்பெயர்ந்தோர் நகர்வு மண்டலங்கள்" (migrant transit zones) என்றழைக்கப்படும் இடங்களில் சிக்கி, ஒரு சிலர் ஓராண்டுக்கும் அதிக காலமாகவே கூட, கப்பல் கொள்கலன்களில் வாழ விடப்பட்டு, ரேசன் முள்வேலிகள் மற்றும் கனரக ஆயுதமேந்திய எல்லை பாதுகாப்புப்படைகளால் சூழப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளைச் சட்டவிரோதமானவை என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்புக்கு ஹங்கேரி சென்ற வாரம் தலைவணங்கியது. அதே நேரத்தில், தஞ்சம் கோரும் எவரொருவரும் அதன் எல்லைக்குள் நுழைவதை அது தடுக்கும் என்றது அறிவித்தது, இது நேரடியாக ஜெனிவா சாசனங்களை புறந்தள்ளுவதாகும்.
இதற்கிடையே, கடந்த நான்காண்டுகளில் ஐரோப்பாவை வந்தடைவதற்கு முயன்று 20,000 பேர் உயிரிழந்துள்ள மத்திய தரைக்கடலில், இந்த தொற்றுநோயுடன் சேர்ந்து நிலைமைகள் இன்னும் குரூரமாக மட்டுமே ஆகி உள்ளது. கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் என்ற பெயரில் மால்டாவும் இத்தாலியும் புலம்பெயர்ந்தவர்களுக்கு அவற்றின் துறைமுகங்களை அடைத்து விட்ட நிலையில், நூற்றுக் கணக்கான அகதிகள் வாரக் கணக்கில் அக்கடலில் தவிக்க விடப்பட்டுள்ளனர். ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவு செய்யப்பட்ட காணொளி சம்பவத்தில், மால்டா ரோந்து படகுகள் மூழ்கி கொண்டிருக்கும் ஒரு ரப்பர் படகிலிருந்து தண்ணீரில் அவர்கள் மூழ்கி கொண்டிருக்கும் அகதிகளைச் சுற்றி அச்சுறுத்தும் விதமாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஐரோப்பாவை எட்டுவதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்ட ஆயிரக் கணக்கானவர்கள், இந்த தொற்றுநோய்க்குப் பின்னர்— ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி பெறும் லிபிய "கடல் ரோந்துப்படையின்" உதவியுடன்— லிபியாவுக்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர், அங்கே பல தடுப்புக்காவல் மையங்கள் ஆயுதமேந்திய இராணுவப் போராளிகள் குழுக்களால் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவற்றில் அவர்கள் அடைக்கப்படுகின்றனர், அங்கே அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, பட்டினியில் விடப்படுகின்றனர், கற்பழிப்பும் மற்றும் அடிமையாக விற்கப்படுவதும் கூட நடக்கிறது.
புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளை இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக கையாளுவதை உந்துவது எதுவென்றால் மேற்கத்திய ஐரோப்பா அனைத்தினதும், அவற்றில் முன்னணியில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆளும் வர்க்கங்களினது கொள்கைகளும் நலன்களும் ஆகும்.
ஒரு நாடு மாற்றி நாட்டுக்குள், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா வரையில் பாரசீக வளைகுடா எண்ணெய் முடியாட்சிகள் வரையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிக மோசமான நிலைமைகளை முகங்கொடுக்கின்றனர் என்பதோடு கோவிட்-19 பலிகளின் மொத்த பங்கில் பொருத்தமற்ற விகிதாச்சார எண்ணிக்கையில் உள்ளனர். இதில், அமெரிக்காவில் இறைச்சி பதனிடும் ஆலைகள் உள்ளடங்குகின்றன, முன்னதாக ICE வேட்டையாடல்களின் இலக்கில் வைக்கப்பட்ட இந்த ஆலை தொழிலாளர்கள் பின்னால் கைகளைக் கட்டி ஆலைகளில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டனர், இப்போது "இன்றியமையா சேவைகள்" என்று அறிவிக்கப்பட்டு, நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பலரும் உயிரிழந்துள்ள வேலையிடங்களுக்குள் அவர்கள் திரும்ப வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர்.
முதலாளித்துவத்தின் இதே விடையிறுப்பு பெருந்திரளான தெற்காசிய தொழிலாளர்கள் வரையில் நீள்கிறது, இப்போது அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற நாடுகளில் இருந்து சத்தமில்லாமல் தூக்கி வீசப்பட்டு வருகிறார்கள், அங்கே அவர்கள் அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் குறைந்த கூலிகளில் உழைத்து, தொழில்சக்தியின் முதுகெலும்பாக சேவையாற்றி உள்ளனர். இதில், ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் மிக மோசமான நிலைமைகளில் உழைத்து வரும் பெரும் எண்ணிக்கையிலான கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களும் உள்ளடங்குவர்.
இதற்கிடையே, உலகெங்கிலுமான அகதி முகாம்களில், நூறாயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நெரிசலாக விடப்பட்டிருக்கும் இடங்களில், கொரொனா வைரஸை எதிர்த்து போராட சமூக இடைவெளியைப் பேணுவது, கைகளைக் கழுவுவது மற்றும் ஏனைய அடிப்படை தூய்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று சுகாதார அதிகாரிகளின் வலியுறுத்தல்கள் அவர்களால் செய்ய முடியாதளவுக்கு வெகு தொலைவில் வைக்கப்பட்டுள்ளனர்.
“வெளிநாட்டு" தொற்றுதலில் இருந்து தேசிய எல்லைகளை மூடுவதன் மூலமாக கொரொனா வைரஸை தோற்கடித்து விடலாம் என்ற பாசிசவாத கருத்துரு எந்தளவுக்கு விஞ்ஞானப்பூர்வமானது இல்லையோ அதேயளவுக்கு பிற்போக்குத்தனமானதும் ஆகும். இந்த வைரஸ் எந்த தேசிய எல்லைகளையும் மதிப்பதில்லை; அதற்கு நுழைவனுமதியோ அல்லது கடவுச்சீட்டோ தேவைப்படுவதில்லை. இந்த புவியில் அது எங்கேனும் ஓரிடத்தில் இருக்கும் வரையில், அது தொடர்ந்து மனிதகுலம் மொத்தத்தையும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கும்.
இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன்களையும் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ அமைப்புமுறையையே சற்றும் சமரசத்திற்கிடமின்றி எதிர்க்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சமூக சக்தியைச் சுயாதீனமாக அணித்திரட்ட வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக இதற்கு உலக சோசலிச புரட்சியின் மூலோபாய முன்னோக்கு மீது அடித்தளமிட்ட தேசிய எல்லைகளைக் கடந்த தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் அவசியமாகும். தொழிலாளர்கள் அவர்கள் விரும்பும் நாடுகளில் வாழவும் வேலை செய்யவும், மருத்துவக் கவனிப்பு பெறுவதற்கான உரிமை, வாழ்வதற்கேற்ற வருவாய், ஒடுக்குமுறை அல்லது நாடுகடத்தல் குறித்த அச்சமின்றி வேலை செய்வதற்கும் பயணிப்பதற்குமான ஆற்றல் உட்பட முழு குடியுரிமைகள் பெறவும் தொழிலாளர்களுக்கான இந்த உரிமையை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பதே இந்த முன்னோக்கின் உள்ளார்ந்த பாகமாக அமைந்துள்ளது.