இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மத்திய இலங்கையின் மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தேயிலை தோட்டத்தைச் சேர்ந்த, வேலைநிறுத்தம் செய்த 8 தொழிலாளர்கள், பெப்ரவரி 17 அன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெப்ரவரி 3 அன்று 1,000 ரூபாய் (5.19 டொலர்) அடிப்படை தினசரி ஊதியம் கோரி வேலை நிறுத்தம் செய்த சுமார் 500 ஓல்டன் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் நோக்கத்திலேயே இந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுகள், கம்பனி-பொலிஸ் கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
வேலை நிறுத்தம் செய்துவரும் ஓல்டன் தோட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள எட்டு தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கக் கோருகின்றனர். எஸ். புவனேஸ்வரி, கனபதி தேவி, ஜி. சதீஸ்வரி, பிரான்சிஸ் திரேசம்மால், மாரிமுத்து தமிழ்செல்வி, யோகசக்தி, எம்.கே. ஷானிதுனி, அந்திமுத்து விஸ்வகேது ஆகியோரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பிரதான பெருந்தோட்ட தொழிற்சங்கமும், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசியல் பங்காளியுமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) இந்த தாக்குதல்களுக்கு செயலில் ஆதரவளித்துள்ளது.
பெப்ரவரி 17 அன்று, பொலிசார் தொழிலாளர்களை கைது செய்ய முயற்சித்த போது, வேலைநிறுத்தக்காரர்கள் அதை எதிர்த்து நின்றனர். ஆனால், தோட்டத்திற்கு வருகை தந்த தொழிற்சங்கத்தின் உப தலைவர் கனகராஜ், மஸ்கெலியா பிரதேச தலைவர் ராஜராம் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைத் தவிசாளரான சென்பகவல்லி உட்பட இ.தொ.கா. தலைவர்கள், தொழிலாளர்களை பொலிசில் ஒப்படைக்க தலையிட்டனர்.
வாக்குமூலம் பதிவு செய்ய மட்டுமே வேலைநிறுத்தம் செய்பவர்களில் எட்டு பேர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று இ.தொ.கா. அலுவலர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள், பெருந்தோட்ட நகரமான ஹட்டனில் உள்ள நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவர்கள் இப்போது மலையகத்தின் தலைநகராக கருதப்படும் கண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடல், வறிய மட்டத்திலான ஊதியம், வேலைச் சுமை அதிகரிப்பு, மற்றும் தங்களது அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல்களை தொடர்ச்சியாக எதிர்த்து நிற்கும் ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர்களுக்கும் எதிராக அரசாங்கமும் கம்பனிகளும் முன்னெடுக்கும் பரந்த அடக்குமுறையின் ஒரு பகுதியாகும்.
இந்த கடுமையான கோபத்தைக் கட்டுப்படுத்தவும், ஒரு விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தை திணிப்பதற்கும் முயற்சிக்கும் இ.தொ.கா., பெப்ரவரி 5 அன்று 1,000 ரூபாய் ஊதியக் கோரிக்கைக்காக ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த ஊதிய உயர்வை வெல்வதற்கும் பிற கோரிக்கைகளைப் பெறுவதற்கும் உறுதிப்பாட்டுடன் இருந்த சுமார் 200,000 தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஓல்டன் தோட்டம் போன்று, பல இடங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் சமீபத்தில் நடந்த மோதல்களைப் பற்றிக்கொண்ட பெருந்தோட்டக் கம்பனிகள், அரச அடக்குமுறையை அதிகரிக்கக் கோரியுள்ளன.
பிரதமர் இராஜபக்ஷவுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் லலித் ஒபேசேகர, தொழிலாளர்களுக்கு எதிரான அரச தலையீட்டுக்கு அழைப்பு விடுத்தார். பெருந்தோட்ட முகாமையாளர்கள், ”ஆர்.பி.சி. இன் (பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின்) தேயிலை உற்பத்தியை நாசமாக்குவதற்காக, குண்டர்களால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற... ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை எதிர்கொண்டுள்ளனர்...” என்று ஒபசேகர பொய்யாக கூறினார்.
”சட்டம் மற்றும் ஒழுங்கு இவ்வாறு பேரழிவுகரமாக சீரழிவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது, தோட்டங்களில் வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு எதிராக ஏன் அர்த்தமுள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையிட்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்,” என அவர் தெரிவித்தார்.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், இ.தொ.கா. பெப்ரவரி 5 அழைப்பு விடுத்திருந்த ஒருநாள் தேசிய வேலைநிறுத்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே காலவரையற்ற தொழில்துறை நடவடிக்கையைத் தொடங்கினர். பெப்ரவரி 2, வேலைநிறுத்தம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, ஓல்டன் தொழிலாளர்கள் தோட்டத் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை தூள்களை கொழும்புக்கு கொண்டு செல்லும் லொரியைத் தடுக்க முயன்றனர்.
இதற்கு பிரதிபலித்த ஓல்டன் தோட்ட முகாமையாளர், இ.தொ.கா. மாவட்டத் தலைவரான ஒரு பெண் தொழிலாளியை அடித்து கீழே தள்ளிவிட்டார். அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொழிலாளர்கள் தாக்குதல் குறித்து எதிர்ப்பு தெரிவித்த மறுநாள், முகாமையாளர் கைது செய்யப்பட்ட போதிலும், அவர் உடனடியாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு நேர்மாறாக, பெப்ரவரி 2 அன்று தொழிலாளர்ளின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு தோட்ட முகாமையாளர் பொலிஸை அழைத்தபோது, அவர்கள் உடனடியாக தலையிட்டு, தொழிலாளர்களை அச்சுறுத்தியதுடன், லொரியை பயணிக்க அனுமதிக்கும்படி உத்தரவிட்டனர். லொரி தோட்டத் தொழிற்சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளனியூஜி சந்தியை அடைந்தது. ஓல்டன் தொழிலாளர்களின் கோபத்தைத் தணிக்கும் முயற்சியில், இ.தொ.கா. தலைவர் சென்பகவல்லி லொரியைத் தடுத்து, சாரதியை தொழிற்சாலைக்குத் திரும்பும்படி கூறினார்.
ஓல்டன் தொழிலாளர்களுக்கு எதிராக கம்பனியுடனும் பொலிசுடனும் இ.தொ.கா. ஒத்துழைத்தமை, தொழிற்சங்கத்தை மீறி தொழிலாளர்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியின் பாகமாகும்.
பெப்ரவரி 7, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 50 ஓல்டன் தொழிலாளர்கள், கொட்டகலை நகரில் உள்ள இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமானின் அலுவலகத்திற்கு சென்று, தங்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்குமாறு கோரினர். இராஜபக்ஷ அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் தொண்டமான் அதை மறுத்துவிட்டார்.
இ.தொ.கா.வின் துரோகத்தால் பலமடைந்த ஓல்டன் தோட்ட நிர்வாகம், பெப்ரவரி 16 அன்று, தோட்டத்தின் ஒரு பிரிவில் வேலைநிறுத்தத்தை குழப்பும் நடவடிக்கையை ஏற்பாடு செய்தது. எவ்வாறாயினும், கோபமடைந்த வேலைநிறுத்தக்காரர்கள் தலையிட்டு, பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துகளை முச்சக்கர வண்டியில் மற்றொரு தோட்டத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதைத் தடுத்தனர்.
அடுத்த நாள் தோட்ட முகாமையாளரின் பங்களாவுக்கு வெளியே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்கு பிரதிபலித்த நிர்வாகம், தமது இழி நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய தொழிலாளர்களை, ”வன்முறையில்” ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவர்களை கைது செய்யக் கோரியது.
உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய ஓல்டன் பெண் தொழிலாளர்கள் குழு, இ.தொ.கா. ஆற்றிய துரோகப் பங்கை ஆத்திரத்துடன் கண்டித்தனர். பெப்ரவரி 17 அன்று, பொலிசார் தோட்டத்திற்கு வந்தபோது, அவர்கள் யாரைக் கைது செய்வது என்பது குறித்து தெளிவில்லாமல் இருந்தனர் என்று ஒரு தொழிலாளி விளக்கினார். இ.தொ.கா. தலைவர்களான கனகராஜ், ராஜாராம் மற்றும் சென்பஹவல்லியும், பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட வேண்டிய தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்லுமாறு வலியுறுத்தியதாக, அந்த தொழிலாள கூறினார்.
மற்றொரு ஓல்டன் தொழிலாளி கூறியதாவது, “பொலிசார் தோட்டத்திற்கு வந்தபோது, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எட்டு தொழிலாளர்களை கைது செய்வதைத் தடுத்தோம். ஆனால் இ.தொ.கா. தலைவர்களோ, “பொலிசார் அவர்களிடமிருந்து வாக்குமூலங்களை மட்டுமே பெறுவார்கள், அதனால் நீங்கள் அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று எங்களிடம் கூறினார்.
“கைது செய்யப்பட்ட எல்லோரையும் விடுவிக்கக் கோரி நாங்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தத் தயாராக உள்ளோம், ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் எங்களை அங்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பொலிஸ் நிலையத்திலிருந்து தொழிலாளர்களை விடுவிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்த டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அன்று மாலை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்தனர்,” என அவர் விளக்கினார்.
“அனைத்து தொழிற்சங்கங்களும் எங்களை காட்டிக்கொடுத்துவிட்டன. பொலிஸ், நீதிமன்றம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கமும் தோட்ட கம்பனிகளுடன் இணைந்து எங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அவர்களை விடுதலை செய்யாமல் நாங்கள் வேலைநிறுத்தத்தை முடிக்க மாட்டோம். எங்கள் போராட்டத்தை ஆதரிக்குமாறு ஏனைய அனைத்து தொழிலாளர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்,” என அவர் தெரிவித்தார்.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களின் உறுதியான போராட்டமானது, பொலிஸ் தோட்டக் கம்பனிகளை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதை மட்டுமன்றி, இ.தொ.கா.வும் ஏனைய தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை பழிவாங்குவதற்கு எவ்வாறு கம்பனிகளுடனும் பொலிசுடனும் ஒத்துழைக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்துகிறது.
ஒழுக்கமான சம்பளம் மற்றும் ஏனைய அடிப்படை சமூக உரிமைகளுக்கான தங்களது போராட்டத்தை முன்னேற்றுவதற்கு, தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைத்துக்கொள்வதோடு, இதேபோன்ற அரசாங்கங்களதும் முதலாளிமாரதும் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாளர்களுடனும் ஐக்கியப்பட வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளர் போராட்டத்திலும், பெப்ரவரி 5 நடந்த ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்திலும் தீவிரமாக தலையிட்ட சோசலிச சமத்துவக் கட்சி, பின்வரும் அதன் அறிக்கையை பரவலாக விநியோகித்து: “பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் சம்பள திட்டங்களை நிராகரி! ஒழுக்கமான ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளுக்காக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடு! நடவடிக்கைக் குழுவை உருவாக்கு!”
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், சோ.ச.க.வின் இந்த பகுப்பாய்விற்கு சக்திவாய்ந்த முறையில் பிரதிபலித்தனர். பெப்ரவரி 21 அன்று இந்த கட்டுரையின் எழுத்தாளர் உரையாற்றிய கூட்டத்தில், தோட்டத்தில் ஒரு நடவடிக்கைக் குழுவை ஸ்தாபிக்க தொழிலாளர்கள் உடன்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள எட்டு தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதற்காக பிரச்சாரம் செய்வதற்கும், ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதற்கும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க
- இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகளதும் தொழிற்சங்கங்களதும் சம்பளப் பிரேரணையை நிராகரி!உயர்ந்த ஊதியம் மற்றும் தொழில் உரிமைகளை வெல்ல சோசலிச முன்னோக்குக்காகப் போராடு! நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!
- தீவிரமாக பரவும் தொற்றுநோய்க்கு மத்தியில் பலாத்காரமாக வேலையில் ஈடுபடுத்த வேண்டாம்! தொழிலாளர்களுக்கான முழு இழப்பீட்டுடன் அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் நிறுத்து!
- இலங்கை: சம்பள வெட்டு மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிரான தோட்டத் தொழிலாளர்களின் போரட்டத்திற்கான முன்னாக்கிய பாதை
- இலங்கையில் தொழில்கள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்