முகமது பக்ரியின் ஜெனின், ஜெனின் ஆவணப்படம் மீதான இஸ்ரேலிய தடைக்கு சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்கள் தடையை நிறுத்தக் கோரிக்கை விடுக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜெனின், ஜெனின் என்ற ஆவணப்படத்தின் திரையிடல் மற்றும் விநியோகத்தை தடைசெய்த இஸ்ரேலிய நீதிமன்ற தீர்ப்பை உலகெங்கிலுமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் கண்டித்துள்ளனர் மற்றும் தடையை நீக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

54 நிமிட திரைப்படத்தை புகழ்பெற்ற பாலஸ்தீனிய திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான முகமது பக்ரி 2002 இல் தயாரித்தார். ஒரு இஸ்ரேலிய குடிமகனான பக்ரி தனது நடிப்பு மற்றும் திரைப்படத் தயாரிப்பிற்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார், இது பெரும்பாலும் இஸ்ரேலுக்குள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பாலஸ்தீனர்களின் அவல நிலையை பிரதிபலிக்கிறது. அவர் 2017 இல் வாஜிப் (Wajib) உட்பட சுமார் 70 படங்களில் நடித்துள்ளார். அவரது மகன்கள் சலேஹ் (The Band’s Visit, The Time that Remains, When I Saw You, Wajib), சியாட் (Miral, Screwdriver) மற்றும் ஆடம் (Omar, Official Secrets) இவர்கள் அனைவரும் புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் / அல்லது இயக்குநர்களாக இருக்கின்றார்கள்.

2010 இல் முகமது பக்ரி (Photo credit- Eman)

அதை தணிக்கை செய்ய இஸ்ரேலிடமிருந்து அதிக அழுத்தம் இருந்த போதிலும் ஜெனின், ஜெனின் இரண்டு சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றது. பக்ரியின் ஆவணப் படத்தை ங்கே பார்க்கலாம்: அதேபோல் Vimeo இலும் பார்க்கலாம்.

பாலஸ்தீனிய டாக்ஸி சாரதிகள், இஸ்ரேலிய சோதனைச் சாவடிகளில் கட்டணம் செலுத்துமாறு துன்புறுத்தப்படுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்ததை அடுத்து பக்ரி தனது திரைப்படத்தை ஜெனின், ஜெனின் என்று அழைத்தார். 1967 ஆம் ஆண்டு அரபு இஸ்ரேலியப் போருக்குப் பின்னர், இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையிலுள்ள (West Bank) ஜெனினில் உள்ள பாலஸ்தீனிய அகதிகள் முகாமுக்கு இரண்டாவது இன்டிபாடாவின் போது ஏப்ரல் 2002 இல் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) மேற்கொண்ட ஊடுருவித் திடீர் தாக்குதல் நடத்தியதை இந்த ஆவணப்படம் கையாள்கிறது. இஸ்ரேலின் அறிவிக்கப்பட்ட தாக்குதலின் நோக்கம் "பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்ததாக அறியப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்துதல்" என்பதாகும்.

ஜெனின் ஒரு கடுமையான பொதுமுடக்கத்திற்கும் ஊரடங்கு உத்தரவுக்கும் உட்பட்டிருந்தது, செய்தி ஊடகம், மருத்துவ அல்லது மனித உரிமைகள் அதிகாரிகள் எவரும் நகரத்திற்கு அருகே அனுமதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் இஸ்ரேலின் பிரதம மந்திரியாக இருந்தது ஏரியல் ஷரோன் ஆவார், அவர் பாதுகாப்பு மந்திரியாக இருந்தபோது, 1982 செப்டம்பரில் லெபனானிலுள்ள சாப்ரா மற்றும் ஷட்டிலா விலுள்ள அகதிகள் முகாம்களில் இஸ்ரேலின் பலாங்கிஸ்ட் (Phalangist - Lebanese Phalange party) கூட்டாளிகளின் கைகளில் பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அவர் பொறுப்பாளியாக இருந்தார். 1982 ல் நடந்த படுகொலையின் அளவிற்கு மற்றொரு கொடூரமும் இடம்பெறக்கூடும் என்ற அச்சங்கள் இருந்தன.

ஜெனினில் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 52 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய படைகள் கொன்றன, பலர் காயமடைந்தனர், 150 கட்டிடங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதோடு 450 குடும்பங்கள் வீடற்றநிலையில் இருந்தனர். இந்த சண்டையில் 23 இஸ்ரேல் படைகள் உயிரிழந்தனர்.

Jenin, Jenin

ஒரு இஸ்ரேலிய சிப்பாய் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது ஜெனினுக்குள் என்ன நடக்கிறது என்பதை படமாக்க பக்ரி தைரியமாக முடிவு செய்தார், துப்பாக்கிச்சூடு அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த இளம் நடிகையான பக்ரியின் நண்பியை காயப்படுத்தியது. ஊரடங்கு உத்தரவு முடிவதற்குள் அவர் அகதி முகாமுக்குள் நுழைந்து டஜன் கணக்கான சாட்சிகளை பேட்டி கண்டார், இஸ்ரேலிய படைகள் செய்த கண்மூடித்தனமான கொலைகளையும் அழிவையும் தனது கேமரா மூலம் காட்சிகளாக படமாக்கிக் கொண்டார்.

பத்திரிகையாளர்களும் மனித உரிமைக் குழுக்களும் அந்த முகாமுக்குள் நுழைந்து உயிர் பிழைத்தவர்களுடன் பேசிய பின்னர், அவர்கள் இஸ்ரேலிய துருப்புக்கள் மீது போர்க் குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டினர். மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) அறிக்கை ஒன்று ஜெனினின் அகதிகள் முகாம் மீதான தாக்குதல்களின் போது இஸ்ரேலிய போர்க் குற்றங்களுக்கான "முதன்மை ஆதாரத்தை" கண்டறிந்தது.

படப்பிடிப்பின் முடிவில் IDF ஆல் சுட்டுக் கொல்லப்பட்ட படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஐவாட் சமூடிக்கு அர்ப்பணிப்புடன் பக்ரியின் ஆவணப்படம் தொடங்குகிறது. இது எந்த வர்ணனையையும் அல்லது பின்னணி குரல் கொடுத்தலையும் பயன்படுத்தாது, ஜெனினின் அகதி முகாமிலுள்ள பாலஸ்தீனிய குடியிருப்பாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட 11 நாட்கள் படுகொலை பற்றிய அவர்களுடைய கதையைச் சொல்ல விட்டுவிடுகிறார்.

பக்ரிக்கு ஆதரவாகவுள்ளவர்களில் பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர்கள் கென் லோச் (Ken Loach) மற்றும் ஆசிப் கபாடியா (Asif Kapadia), பின்லாந்து திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குனர் அகி கௌரிஸ்மகி (Aki Kaurismaki), பாலஸ்தீனிய திரைப்பட தயாரிப்பாளர்கள் மிஷல் கிளிஃபி (Michel Khleifi) மற்றும் அனீமேரி ஜாகிர் (Annemarie Jacir) மற்றும் இஸ்ரேலிய இயக்குனர் அயால் சிவன் (Eyal Sivan) ஆகியோர் அடங்குவர். பாலஸ்தீன திரைப்பட நிறுவனமானது இந்த திரைப்படத்தை திரையிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு இஸ்ரேல் அரசை கேட்டுக் கொண்டு இணையவழி மனுவைத் தொடங்கியுள்ளது.

இந்த படம் 18 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானதிலிருந்து வழக்குகள் மற்றும் தணிக்கை முயற்சிகளுக்கு உட்பட்டது. 2016 ஆம் ஆண்டில், நிசிம் மேக்னாகி, ஒரு சேமப்படைச் சிப்பாய் (reservist soldier), படத்தில் ஒரு ஆவணகாப்பக காட்சிகளில் மற்ற இரண்டு சிப்பாய்களுடன் சில நொடிகள் தோன்றியிருந்தார் மற்றும் அவர்கள் பெயரிடப்படவில்லை, இதற்காக ஒரு அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வயதான பாலஸ்தீனியரிடமிருந்து பணத்தை திருடியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார், அவர் குற்றச்சாட்டை மறுத்ததோடு, அவரது “நல்ல பெயருக்கு தீங்கு விளைவித்து, அவரது கௌரவம் களங்கப்படுத்தப்பட்டுள்ளது” என்றும், இந்தப் படம் இஸ்ரேலிய சிப்பாய்களை போர்க் குற்றவாளிகளாக காட்டி அவர்களை இழிவுபடுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மிகவும் அசாதாரணமான ஒரு நடவடிக்கையாக, அட்டர்னி ஜெனரலும் முன்னாள் இராணுவ தலைமை வழக்கறிஞருமான அவிச்சாய் மண்டேல்பிளிட், இந்த வழக்கில் பொது நலன் கருதி பக்ரிக்கு எதிரான சிவில் வழக்கை ஆதரிப்பதாக அறிவித்தார். இது மேகனாகி மற்றும் அப்போதைய IDF இன் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் காதி ஐசென்கோட், இஸ்ரேலுக்கு எதிரானதாக கருதப்படும் ஆட்சிகளின் சிவிலிய உட்கட்டமைப்பை அழிக்க வேண்டும் என்று வாதிடும் இழிபுகழ் பெற்ற தாஹியா கோட்பாட்டை (Dahiya Doctrine) இயற்றியவர்.

மேக்னாகி மீது தனது படம் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை என்று பக்ரி மறுத்தார், "கேமரா ஒரு சில விநாடிகள் மட்டுமே அந்த எதிர்தரப்பு வாதியை குற்றம் சாட்டியது, மேலும் படத்தில் விவரிக்கப்பட்ட செயல்களின் பின்னணியில் இருக்கும் நபராக அவரை அடையாளம் காண முடியாது" என்றார். இந்த வழக்கின் நோக்கம் துன்புறுத்தலும் அரசியல்ரீதியான மெளனமாக்குவதாகவும் இருந்தது.

கடந்த வாரம், லொட் (Lod) மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹலிட் சிலாஷ் என்பவர் மேக்னாகிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதோடு, மேக்னாகிக்கு 50,000 டாலருக்கும் அதிகமாகவும், நீதிமன்றக் கட்டணத்தில் மற்றொரு 15,000 டாலருக்கும் மேல் செலுத்த வேண்டும் என்றும் பக்ரிக்கு உத்தரவிட்டார். மேக்னாகி "தனது நாட்டைப் பாதுகாக்க அனுப்பப்பட்டதாகவும், அவர் செய்யாத ஒரு குற்றத்திற்காக தன்னைக் குற்றம் சாட்டியதாகவும்" மற்றும் படத்திலுள்ள சில அறிக்கைகள் உண்மைக்கு மாறானவை என்றும் அவர் கூறினார். இஸ்ரேலில் படத்தை திரையிட தடை விதித்தும், படத்தின் 24 நகல்களை பறிமுதல் செய்யவும் சிலாஷ் உத்தரவிட்டார்.

மேல்முறையீடு செய்வதற்கான தனது விருப்பத்தை அறிவித்த பக்ரி, இந்த முடிவு "நியாயமற்றது" என்றும், நீதிபதி "மேலிருந்து" உத்தரவுகளின் பேரில் செயற்பட்டதாகவும் கூறினார். அவரது வழக்கறிஞரான ஹுசைன் அபு ஹுசைன், இந்தத் தீர்ப்பு "இஸ்ரேலிய கதையாடல்களிலிருந்து வேறுபடும் எந்தவொரு குரலையும் மெளனமாக்குவதை நோக்கமாகக் கொண்ட" ஒரு அரசியல் முடிவு" என்றார்.

பாலஸ்தீனிய ஆணையத்தின் (Palestinian Authority) கலாச்சார அமைச்சர் அதீப் அபு சீஃப் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்தார், இது பாலஸ்தீனிய கதையாடலுக்கு எதிராகப் போராடுவதற்கும் "ஆக்கிரமிப்பின்" "இனவெறி மற்றும் பாசிச" நடைமுறைகளை மறைப்பதற்குமான ஒரு முயற்சி என்று கூறினார்.

அக்டோபரில் ஹாரெட்ஸ் (Ha’aretz) பத்திரிகையில் படம் பற்றி எழுதிய பக்ரி, ஜெனின், ஜெனின் வெளியானதிலிருந்தே, “நான் இஸ்ரேலிய நீதிமன்றங்களின் நடைபாதையில் அலைந்து கொண்டிருக்கிறேன் —நான் ஒரு அராபியனாக இருப்பதுடன்— இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அல்லது தேசிய பாதுகாப்பு போன்ற புனிதப் பசுக்களை தொடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற இந்த உண்மையால் பல ஆண்டுகளாக துன்புறுத்தல் மற்றும் குறிக்கோளை நிறைவேற்றும் விடாதுயரளிப்பு ஆகியவற்றை நான் விளக்க முடியும். ஒரு அராபியன், ஒரு நல்ல அராபியனாக இருக்க வேண்டும், இஸ்ரேலிய கதையை மட்டுமே சொல்ல வேண்டும், இல்லையெனில் தான் குடிக்கும் கிணற்றுக்குள் சிறுநீர் கழிக்கும் ஒரு துரோகியும் இஸ்ரேலின் எதிரியாகவும் இருப்பார்”.

வாஜிப் இல் முஹம்மது மற்றும் சலே பக்ரி

அவர் மேலும் கூறுகையில், “எனக்கு 66 வயதாகிறது. அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உருவாக்க எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் அர்ப்பணித்துள்ளேன். நான் ஒடுக்கப்பட்டவர்களின் கதைகளைச் சொன்னேன் - ஆர்மீனியர்கள், குர்துகள், இத்தாலியர்கள், யூதர்கள் மற்றும் யூதப் படுகொலைகள் (ஹோலோகோஸ்ட்) மற்றும் பாலஸ்தீனியர்களின் கதைகள். எனக்கு அதிகம் மிச்சமில்லை. நேரம் குறுகியது மற்றும் பணி நீளமானது, கொரோனா வைரஸ் வெளிப்பட்டு பரவுகிறது, பைத்தியக்கார வலது உலகை ஆளுகிறது மற்றும் நம்மை வழிதவறி வழிநடத்த முயற்சித்தது. எனவே இப்போது இல்லையென்றால், எப்போது?”

பக்ரியின் கருத்து சுதந்திரத்தின் மீதான, நீதிமன்றத்தின் அப்பட்டமான அத்துமீறல் பாலஸ்தீனிய வாழ்க்கையின் யதார்த்தங்களை சித்தரிப்பதற்கான கலாச்சார முயற்சிகள் மீதான இஸ்ரேலின் பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். பாலஸ்தீனிய கலாச்சார மற்றும் கலைப் பணிகளுக்கான நிதி பற்றாக்குறையாக இருக்கிறது, பாலஸ்தீனிய இஸ்ரேலியர்கள், மக்கள் தொகையில் 20 சதவிகிதத்தினர், அரசாங்கத்தின் கலாச்சார வரவு-செலவுத் திட்டத்தில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர். கலைக்கான ரபினோவிச் அறக்கட்டளை (The Rabinovich Foundation), இஸ்ரேலில் மிகப் பெரிய திரைப்பட நிதியங்களில் ஒன்றாகும். அது இஸ்ரேலுக்கு ஒரு "விசுவாசத்தை பிரகடனம்" செய்யும் நிபந்தனையுடன் நிதியுதவி செய்கிறது.

ஜெனின், ஜெனின் மீதான நீதிமன்றத்தின் தடையானது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் அதன் மிருகத்தனத்தையும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அப்பட்டமாக மீறுவதையும் அம்பலப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் சட்டவிரோதப்படுத்தும் இஸ்ரேலின் முயற்சிகளுடன் பிணைந்துள்ளது. அத்தகைய வெளிப்பாடுகள் எதுவும் பெஞ்சமின் நெத்தனியாகுவின் வலதுசாரி அரசாங்கத்திற்கு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. பக்ரி, 18 ஆண்டுகள் துன்புறுத்துதல், அச்சுறுத்தல் மற்றும் குற்றவியல் வழக்கு உட்பட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளார் என்பது, பாலஸ்தீனியர்களின் உரிமைகளை மீறுவதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இஸ்ரேலின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில், கல்வி அமைச்சகம் ஒரு ஒழுங்கு விசாரணைக்காக ஹைஃபா உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாக இயக்குனரை அழைத்திருந்தது. இது முதல் தடவையாக இஸ்ரேலை "நிறவெறி" என்று குறிப்பிட்ட மனித உரிமைகள் அமைப்பான B'Tselem இன் இயக்குனரான Hagai El-Ad மாணவர்களுக்கு ஒரு விரிவுரை வழங்கியதைத் தொடர்ந்து நடந்துள்ளது. "IDF சிப்பாய்களை இகழ்ச்சியுடன் நடத்துகின்ற மற்றும் இஸ்ரேலை ஒரு நிறவெறி அரசு என்று அழைக்கும்" அமைப்புக்களின் பிரதிநிதிகளை பள்ளிகளில் செயற்படுவதிலிருந்து தடை செய்த ஒரு அமைச்சக உத்தரவை மீறி இந்த விரிவுரை வழங்கப்பட்டது.

Loading