மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
டிசம்பர் 17, 1770 ஆண்டில் பிறந்த லூட்விக் வொன் பீத்தோவன் (Ludwig van Beethoven) இன் படைப்பினை உலகெங்கிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்கள் அவரது 250 வது ஆண்டு பிறந்த தினத்தில் தொடர்ந்தும் உற்சாக உணர்ச்சியுடன் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். அவரது உன்னத இசை அவர் வாழ்ந்த மற்றும் பணியாற்றிய ஐரோப்பிய கலாச்சாரத்தின் குறுகிய வரம்புகளை நீண்ட காலத்திற்கு முன்பே தகர்த்துச் சென்றுவிட்டது. இது மனிதகுலத்தின் ஒரு பிரபஞ்சக் குரலாக உருவெடுத்துள்ளதுடன் மற்றும் அர்ப்பணிப்புள்ள இசைக்கலைஞர்களின் முயற்சிகளால் இளைய தலைமுறையினரிடையேயும் நெஞ்சத்தை தொட்டுவிட்டன.
பீத்தோவனின் இசையின் சமகால சிறப்பியல்பு எதை விளக்குகிறது? செவ்விசை (பழம்பெரும் இசை) கேட்போருக்கு அப்பாலும் அனைத்து வயதினரையும் இது ஏன் கவர்ந்திழுக்கிறது?
இந்த கேள்விக்கு பதிலளிக்க பீத்தோவன் வாழ்ந்த மற்றும் போராடிய காலத்தை ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் பிரிக்க முடியாது என்றாலும், பீத்தோவன் என்ற கலைஞன் பீத்தோவன் என்ற மனிதனை விட மிக அதிகமாகச் சென்றான். பெரும் பாய்ச்சலுடன் மனித சமுதாயம் முன்னேறிய ஒரு காலகட்டத்தில் அவர் மிகவும் ஆழமான இசைக் குரலாக இருந்தார். ஒரு காலகட்டத்தில் கலாச்சார அவநம்பிக்கை கருத்தாக்கங்களின்படி, மனிதர்கள் வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்கு மட்டுமே திறன் படைத்தவர்கள் என்பது மறுக்கப்பட்டது. அவரது படைப்புகள் மனித சமுதாயத்தின் விடுதலைக்கான போராட்டத்துடன் தவிர்க்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா சுதந்திரத்தை அறிவித்தபோது பீத்தோவனுக்கு ஐந்து வயது, 16 வயதில் “பொதுவான சமூகநலத்தை” ஊக்குவிக்கும் மற்றும் “சுதந்திரத்தின் ஆசீர்வாதங்களை” பாதுகாக்கும் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஐரோப்பிய சிம்மாசனத்தையும் அதன் அஸ்திவாரம்வரை உலுக்கிய ஒரு சங்கிலி தொடர் நிகழ்வுகளை தொடக்கிவைத்த பாரிஸ் வெகுஜனங்கள் பாஸ்டி (Bastille) கோட்டையினுள் புகுந்தபோது அவருக்கு 18 வயது. வாட்டர்லூவில் நெப்போலியன் போனபார்ட்டின் தோல்வியுடன் அரசியல் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது அவருக்கு வயது 44.
ஆனால் பீத்தோவன் அடிபணிந்துபோகவில்லை. அவரது வாழ்க்கையின் கடைசி 12 ஆண்டுகளில் (1815-1827), உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் அவரது படைப்புகள் அவற்றின் காலத்திற்கு மிகவும் முந்தியதாக இருந்தன. அவைகள் அன்றைய மரபுகளை உடைத்துக் கொண்டு ஆழ்ந்த மனித நேயத்தை சமூக மாற்றத்திற்கான தீவிரமான ஒரு விருப்பத்துடன் இணைத்தன.
பீத்தோவனின் அதே ஆண்டில் பிறந்து, அவரது படைப்புகளின் பலவற்றை கேட்டவரான கிஜோர்க் பிரீட்ரிக் வில்ஹெல்ம் ஹேகல் (Georg Friedrich Wilhelm Hegel), பிரெஞ்சு புரட்சியைப் பற்றி பின்வருமாறு எழுதினார்:
“சூரியன் முதற்கொண்டு அதனுடைய வானத்திலேயே நிலையாக இருக்கையிலும், கிரகங்கள் அதனைச் சுற்றி வரும்வரையிலும் மனிதனின் இருப்பு அவனது தலையில் அதாவது சிந்தனையில் தங்கியிருக்கியின்றது என்பது உணர்ந்துகொள்ளப்படவில்லை. ... இது ஒரு மகிமையான மன விடியலாக இருந்தது. அனைத்து சிந்திக்கும் உயிரினங்களும் இந்த சகாப்தத்தின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டன. ஒரு உயரிய பண்பான உள்ளக் கிளர்ச்சிகள் அந்த நேரத்தில் மனிதனின் சிந்தனைகளைக் கிளறின; தெய்வீகத்திற்கும் மதச்சார்பற்றதன்மைக்கும் இடையிலான நல்லிணக்கம் இப்போது முதலில் நிறைவேற்றப்பட்டதைப் போல, ஒரு ஆன்மீக உற்சாகம் உலகெங்கும் பரவசப்படுத்தியது” (வரலாற்றின் தத்துவம் பற்றிய ஹேகலின் உரை).
இந்த வரிகளை பீத்தோவனின் படைப்பின் குறிக்கோளுரை (வழிகாட்டிக் கொள்கை) என்று ஒருவர் குணாதிசயப்படுத்தலாம். மனிதகுலத்தின் உயர்சிந்தனைக்கும் மற்றும் ஒரு சிறந்த உலகத்திற்கான அதன் நம்பிக்கைக்கும் அவர் அழைப்புவிட்டார். “Florestan’s Aria” மற்றும் “Prisoners’ Chorus” உடன் ஓப்ரா Fidelio இல் (1) அவரது ஒன்பதாவது சிம்பொனியில் (2) இறுதியில் வரும் “Ode to Joy” போன்ற பல பாரிய படைப்புகள் மூலம் அவர் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சுதந்திரத்தை நடைமுறைப்படுத்தவும் அவர் இன்னும் ஊக்கமளிக்கிறார். இன்று, முதலாளித்துவ அமைப்பு சமூக சமத்துவமின்மை, சர்வாதிகாரம், போர் மற்றும் அழிவினை மட்டுமே முன்வைக்கும்போது பீத்தோவனின் இசை பாரிய ஈர்ப்புச் சக்தியாகவும், சமகாலத்திற்கு உரியதாகவும் இருக்கிறது.
புரட்சிகர சகாப்தத்தில் ஒரு வாழ்க்கை
லூட்விக் வொன் பீத்தோவன் டிசம்பர் 17, 1770 அன்று பொண் (Bonn) நகரில் ஞானஸ்தானம் பெற்றார். அவரது மூதாதையர்கள் பெல்ஜியம்-பிளெமிஷ் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களாவர். அவரது தாத்தாவும் தந்தையும் பொண் நகர கோர்ட் இசைக் குழுவில் (Bonn Court Orchestra) இசைக் கலைஞர்களாவர். நான்கு வயதில் பியானோ மற்றும் வயலின் பாடங்களுடன் மொஸார்ட்டின் (Mozart) இசைமுறையில் அவரை ஒரு மேதாவிக் குழந்தையாக [wunderkind] மாற்றுவதற்கான அவரது தந்தையின் முயற்சி அவரது கிளர்ச்சியின் காரணமாக கைவிடப்பட்டது. இதன் விளைவாக அவரால் ஒரு உயர்கல்வியை பெறமுடியாது போனது. இது பற்றி அவர் பின்னர் வருத்தப்பட்டதுடன் தானாகவே கற்றுக்கொள்வதன் மூலம் இதனை பெற்றுக்கொள்ள முயன்றார்.
அவரது தாயின் அகால மரணம் மற்றும் அவரது தந்தையின் சீரழிவினால் அவர் அதிகளவில் மதுவை நம்பியிருந்ததுடன் மற்றும் மிகவும் நிலையற்றவராக இருந்ததால், கடினமான குடும்ப உறவுகள் மற்றும் நிதி கஷ்டங்களை உருவாக்கியது.
பீத்தோவனின் மிக முக்கியமான பியானோ ஆசிரியர் Christian Gottlob Neefe ஆவார். அவர் அவருக்கு ஜோஹான் செபாஸ்டியான் (Johann Sebastian) மற்றும் கார்ல் பிலிப் இமானுவல் பாஹ் (Karl Philipp Emanuel Bach) ஆகியோரின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார், மேலும் அவரை அறிவொளி சிந்தனையால் (Enlightenment thought) ஆதிக்கம் செலுத்தினார்கள். 1787 ஆம் ஆண்டில் வியன்னாவில் தனது முதல் கல்விக் காலத்தின் போது, நீஃப் (Neefe) மற்றும் பீத்தோவனின் முதல் நிதிக்கொடையாளரான கிராஃப் வால்ட்ஸ்டீன் (Graf Waldstein) ஆல் பீத்தோவன் மொஸார்ட்டை சந்திப்பது சாத்தியமானது. மொஸார்ட், "அந்த இளைஞன் உலகில் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்தும் நிலையை உருவாக்குவார்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் பொண் நகரிற்கு திரும்பிவந்த பீத்தோவன் தத்துவம் மற்றும் அரசியல் குறித்த விவாதங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திருமதி விட்டிப் கொஹ் (Wittib Koch) இன் “Zehrgarten” என்ற வைன் மதுபானசாலையில், பிரெஞ்சு புரட்சி மற்றும் கான்ட், ஹெர்டர், ஷில்லர், க்ளோப்ஸ்டாக், வைலண்ட் மற்றும் கோத்தே (Kant, Herder, Schiller, Klopstock, Wieland ,Goethe) ஆகியோரின் எழுத்துக்கள் மற்றும் கவிதைகளைப் பற்றி விவாதிக்க பொண் இலிருந்து வந்த இளம் புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்களை தவறாமல் சந்தித்தார்.
ஏற்கனவே இந்த நேரத்தில், இளம் பீத்தோவன் ஒரு இசையமைப்பாளராக இல்லாவிட்டாலும் ஒரு ஓர்கன் வாசிப்பாளராகவும் பியானோ கலைஞராகவும் கணிசமான கவனத்தை ஈர்த்தார். முன்னேற்பாடின்றி வாசித்தல் மற்றும் அவரது சுயாதீனமான புதிய பாணி அவரது கேட்போரை கவர்ந்திழுத்தது.
மொஸார்ட்டின் அகால மரணத்திற்கு ஒரு வருடம் கழித்து, 1792 இல் அவர் வியன்னாவிற்கு திரும்புகையில், அவர் ஒரு பியானோ வாசிப்பாளராக ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். பீத்தோவன் வழக்கமான, நேர்த்தியான வாசிப்பு பாணிக்கு அப்பால் சென்றார் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கருப்பொருள்களில் மெருகூட்டினார் அல்லது சுதந்திரமான கற்பனையில் மூழ்கடித்தார் என்று கூறப்படுவதும் உள்ளது. ஒரு புதிய ஓசை வடிவம் வெளிவருவது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. அது அவரது முதிர்ந்த இசையமைப்புகளில் முன்வைக்கப்பட்டிருக்கும்.
பீத்தோவனின் மாணவரான கார்ல் செர்னி (Carl Czerny), தனது சுயசரிதையில் 1799 ஆண்டில் தனது தந்தை கலந்து கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். அங்கு கெலினெக் என்ற பிரபல பியானோ கலைஞர் "வெளிநாட்டு பியானோ வாசிப்பாளருடன்" போட்டியிட்டார். கெலினெக் பின்னர், போட்டி எப்படி முடிந்தது என்ற கேள்விக்கு பதிலளித்தார், “ஓ! நேற்றைய தினத்தைப்பற்றி அடுத்துவரும் ஆண்டுகளிலும் நான் நினைவில் கொண்டிருப்பேன்! அந்த இளைஞனில் சாத்தான் ஒளிந்து கொண்டிருக்கிறான். இதுபோன்ற வாசிப்பை நான் கேள்விப்பட்டதே இல்லை! மொஸார்டின் கற்பனையில் கூட நான் அறிந்திராத, நான் கொடுத்த ஒரு கருப்பொருளை அவர் கற்பனை செய்திருந்தார். பின்னர் அவர் தனது சொந்த இசையமைப்புகளை வாசித்தார். அவை அற்புதமானவை மற்றும் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருந்தன. மேலும் அவர் நாங்கள் கனவு கண்டிராத சூட்சுமமான திறம்பட்ட விதத்தில் விளைவுகளையும் பியானோவிலிருந்து உருவாக்குகிறார்.”
பீத்தோவன் காது கேட்கும் பிரச்சனையால் அவதிப்படத் தொடங்கியபோது கிட்டத்தட்ட 30 வயதானவராக இருந்தார். பின்னர் அவை எலித் தெள்ளுப்பூச்சிக் கடியால் தொற்றும் தைபசு நச்சுக்காய்ச்சலுடன் தொடர்புபடுத்தப்பட்டன. அவர் படிப்படியாக ஒரு பியானோ கலைஞராக இருந்த தனது வாழ்க்கையை கைவிட்டார், அவர் இசையமைப்பதில் கவனம் செலுத்தினார். அவரது தனிப்பட்ட நெருக்கடி 1802 ஆம் ஆண்டின் அவரது சகோதரர்களுக்கு எழுதிய ஒரு கடிதமான Heiligenstadt சாசனத்தில் [Heiligenstadt ஒரு நகராட்சி, இப்போது வியன்னாவின் ஒரு பகுதியாக உள்ளது] அவர் தற்கொலை குறித்த எண்ணங்களை குறிப்பிடுகிறார். 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க இசை விஞ்ஞானி தியோடர் ஆல்பிரெக்ட் இதை கேள்விக்குள்ளாக்கிய போதிலும், 1818 ஆம் ஆண்டு வரை அவர் முற்றிலும் காது கேளாதவர் என்றே கூறப்படுகிறது. பீத்தோவன் தனது நண்பர்களுடன் தொடர்பு கொண்ட “உரையாடல் குறிப்பேடுகள்” பற்றிய புதிய மதிப்பீடு, இசையமைப்பாளரால் அவர் இறப்பதற்கு சற்று முன்பு வரை அவரது இடது காதில் விஷயங்களைக் கேட்க கூடியதாக இருந்ததை வெளிப்படுத்தியது.
இடைக் காலகட்டம்
1803 மற்றும் 1812 க்கு இடையில் பீத்தோவன் நம்பமுடியாத அளவிற்கு உன்னதமான பலவற்றை உருவாக்கினார். மேலும் "புதிய பாணிக்கான" அவரது ஆரம்ப எதிர்ப்பையும் மீறி அவரது புகழ் அதிகரித்தது. அதே சமயம், ஒரு மனைவியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட துரதிர்ஷ்டங்களும் அவருக்கு துன்பத்தை ஏற்படுத்தின. 1812 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அவரது புகழ்பெற்ற "அழியாத அன்புக்குரியவளுக்கான கடிதம்", விதவை ஜோஸபின் கவுண்டஸ் வொன் புருண்ஸ்விக் என்பவருக்காக இருக்கலாம். நடைமுறையில் உள்ள சட்டவழக்கங்கள் காரணமாக அவரது திருமண முன்மொழிவை அந்த அம்மையாரால் ஏற்க முடியவில்லை (பீத்தோவன் ஒரு "சாமானியராக" இருந்தார்).
1802 மற்றும் 1814 க்கு இடையில் பீத்தோவனின் படைப்புகள் பெரும்பாலும் "வீரமிக்க காலத்தை" சேர்ந்தவை என்று விவரிக்கப்படுகின்றன. இது 1815 க்குப் பின்னர் அவர் எழுதிய படைப்புகளுக்கு மாறாக உள்ளன. இந்த விளக்கம் மூன்றாம் சிம்பொனியான “Eroica” ["வீரமிக்க"] 1803 இலிருந்து குறிப்பிடப்பட்டுள்ளது. பீத்தோவன் ஆரம்பத்தில் இந்த வேலையை நெப்போலியனுக்கு அர்ப்பணித்தார். பின்னர் அதனை "ஒரு பெரும் மனிதனின் நினைவிற்காக" இசைப்பதற்கானதாக திருத்திக்கொண்டர். ஏனெனில் அவர் நெப்போலியன் சுயமாக பேரரசராக மகுடம் சூட்டிக்கொண்டதால் கோபமடைந்தார் என்று கூறப்படுகிறது.
ஆனால் “வீரமிக்க” என்ற கருத்தை எளிதில் தவறாகப் புரிந்து கொள்ள முடியும். பீத்தோவன் முதலில் தனிப்பட்ட வீரர்களின் பெருமைப்படுத்தலில் அக்கறை காட்டவில்லை. இந்த காலகட்டத்தின் படைப்புகள் உண்மையில் மனித அனுபவத்தின் முழு பரந்த எல்லையைத் தழுவிய ஒரு உள்ளக் கிளர்ச்சியின் சிக்கலை வெளிப்படுத்துகின்றன. அவரது ஆரம்பகால படைப்புகள் செவ்வியல் காலத்தின் இரண்டு சிறந்த இசைக் கலைஞர்களான மொஸார்ட் மற்றும் ஹெய்டன் (Haydn) ஆகியோரை முறையாக ஈர்த்திருந்தாலும், அவர் இப்போது புதிய பாதையில் பயணிக்கிறார். 1820 ஆம் ஆண்டில், அவர் ஒரு உரையாடல் குறிப்பேட்டில் பின்வருமாறு குறிப்பிட்டார், “உண்மையான கலை தன்முனைப்புமிக்கது… [மேலும்] தன்னை தற்புகழ்ச்சி வடிவங்களுக்குள் தள்ள அனுமதிக்காது” (இசைக் கலைஞரும் வரலாற்றாசிரியருமான டைட்டர் ரெக்ஸ்ரோத் மேற்கோள் காட்டினார்). இதனால் அவர் இசையில் பிரபஞ்சரீதியான அனுபவங்கள், உணர்வுகள் மற்றும் உள்ளக் கிளர்ச்சிகளை வெளிப்படுத்த முடிந்தது.
பீத்தோவன் மிகவும் புத்திஜீவிதத்தை கோரும் மற்றும் சிந்தனைமிக்க இசையமைப்பாளர்களில் தலைசிறந்த ஒருவராவார். ஆரம்பகால சாதாரணமான எளிய உந்தல்களிலிருந்து இருந்து சிறப்புமிக்க கூற்றுக்கள் வரை அவரது கருப் பொருளின் கட்டமைப்பு சிக்கலும் மற்றும் "தர்க்கரீதியான" வளர்ச்சியானது, ஜேர்மன் மெய்யியல் தத்துவத்தை நிறைவுசெய்த இயங்கியல் வல்லுநரான ஹேகலின் மிகப் பெரிய சமகாலத்தவராக அவரை உறுதிப்படுத்துகிறது.
ஏராளமான திருத்தங்கள் மற்றும் எண்ணற்ற வெட்டி அகற்றப்பட்ட இடங்களை கடக்கும்போது, பீத்தோவனின் கையெழுத்துப் பிரதிகள் இசை சுரங்களின் குறுகிய பிரிவுகளுக்குள் கூட மறைத்து வைக்கப்பட்டுள்ள இயக்க இயலாற்றல் அல்லது பிரபஞ்ச உண்மையை கண்டறிய முயன்ற இசையமைப்பாளரின் முயற்சியைப் பேசுகின்றன. அவரது இசையமைப்புகள் ஒரு உள் தர்க்கத்தால் முன்னோக்கி உந்தப்படுவதுடன் மற்றும் அதன் கருப்பொருளை தவிர்க்க முடியாத உணர்வை சக்திவாய்ந்த முறையில் தெரிவிக்கின்றன. இசையில் அகநிலைத்தன்மையை அறிமுகப்படுத்தியதாக அடிக்கடி கூறப்படும் இசையமைப்பாளர், ஒரு தனிமனிதனின் பற்றுக்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் வெளிப்பாடு தருவது மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் முயற்சிகள் மற்றும் மனவெழுச்சி ஆகிய புறநிலை உண்மையையும் வெளிப்படுத்தினார்.
இங்குதான் ஹேலுடனான உறவும் தெளிவாகிறது. தர்க்கவியலின் விஞ்ஞானத்தில் (Science of Logic) இருந்து எடுத்துக்காட்டப்பட்ட பின்வரும் பத்தி பீத்தோவனின் இசையில் இயங்கியல் இயக்கத்தின் கொள்கையை சுட்டிக்காட்டுகிறது: "ஆரம்பதொடக்கத்தை (தோற்றுவாய்) உருவாக்கிய தொடர்ச்சியானது அதையே நிர்ணயிக்கின்ற ஒன்றாக மட்டுமே கருதப்பட வேண்டும். இதனால் இந்த ஆரம்பமே அதைத்தொடர்ந்து வருபவற்றிற்கு அடிப்படையாக இருப்பதுடன் அது எதையும் இழப்பதில்லை.”
பீத்தோவன் சாதாரண கலைப் பண்புக் கூறுகளிலிருந்து பல அடுக்கு சிம்போனி இசை போக்கை உருவாக்கும் திறனைக் கொண்டிருந்தார். ஐந்தாவது சிம்பொனியின் பெரும் சிறப்புவாய்ந்த கலைப் பண்புக் கூறு G இலிருந்து எட்டிற்கு மூன்று விரைவான மற்றும் நீண்ட E-flat இருந்து வரையப்பட்ட இசைசுரங்கள் ஆகியவற்றைக் கொண்டது. இது இசை வரலாற்றில் ஒரு சிம்பொனியில் நன்கு அறியப்பட்ட போக்குகளில் ஒன்றாக மாறியது. (3) இதன் விளைவாக, மொஸார்ட்டைப் போலல்லாமல், சிறந்த மெல்லிசை இசையமைப்பாளர்களில் ஒருவராக அவரிருக்கவில்லை என்று அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டார். அவர் அடையமுடியாத தலைசிறந்த இசைப் படைப்புக்களை உருவாக்கினார், Moonlight Sonata வின் “Archduke Trio,” மூன்றாவது இசை அசைவு, Fidelio இல் மேலே குறிப்பிட்ட “Prisoners’ Chorus” மற்றும் அவரது பிந்தைய பியானோ சுரங்களின் வெளிப்படுத்திய பிரிவுகள் போன்றவை இதற்கான சில எடுத்துக்காட்டுகள் மட்டுமேயாகும்.
பியானோ பல்கூறு இசைப்பாக்கள்
பீத்தோவன் ஒருதொகை படைப்புகளை விட்டுச்சென்றுள்ளார். அவரது நூற்று முப்பத்தெட்டு (138) இசையமைப்புகள் ஒரு opus (opera - படைப்பு) இலக்கத்தைக் கொண்டுள்ளன. ஆனால் அவர் மிக அதிகமான எண்ணிக்கையிலான படைப்புகளை எழுதினார். அவரது படைப்புகளில் ஒன்பது சிம்பொனிகள், ஐந்து பியானோ இசை நிகழ்ச்சிகள், ஒரு வயலின் இசை நிகழ்ச்சி (violin concerto), நான்கு வெவ்வேறு ஆரம்ப இசைகளுடனான Fidelio, இரண்டு தேவாலய இசைகள் (கூட்டுப்பாடல் இசை), 32 பியானோ இசைப்பாக்கள் (piano sonatas), 16 நரம்புக் கருவிகளுக்கான படைப்புகள் (string quartets), 10 வயலின் இசைப்பாக்கள் (violin sonatas), ஐந்து செலோ இசைப்பாக்கள் (cello sonatas) மற்றும் பலவிதமான கருவிகளைக் கொண்ட இசை அரங்கங்களுக்கான (chamber music) இசையின் பல படைப்புகள் உள்ளன. மேலும், ஒரு Opus (Opera - படைப்பு) இலக்கம் இல்லாமல் 228 பட்டியலிடப்பட்ட இசையமைப்புகள் உள்ளன.
எண்ணற்ற தலைசிறந்த படைப்புகளைக் கொண்ட இந்த பரந்த பணியைக் கையாள்வது இந்த கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. எவ்வாறாயினும், பீத்தோவனின் 32 பியானோ இசைப்பாக்களால் இது குறித்து ஒரு நல்ல பார்வை வழங்கப்படுகிறது. இதனை அவரது இளமைப் பருவத்தின் முதல் பகுதி, மற்றும் அவரது மரணத்திற்கு முந்தைய ஆண்டுகளில் அவர் தனது “சொந்த” கருவிக்காக எழுதினார். அவைகள் பீத்தோவனின் இசை ஆய்வகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஒருவர் கூறலாம். அங்கு அவர் தனது சேர்ந்திசை அல்லது இசைக் குழு (orchestral) மற்றும் இசை அரங்கக் குழுக்களுக்கு (chamber music) அவர் உருவாக்கிய இசை வடிவங்களை பரிசோதித்தார். இந்த பல்கூறு இசைப்பாக்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அவைக்கென தனித்தனி சொந்த கட்டமைப்புகள் மற்றும் ஒலிப்பதிவுகள் உள்ளன.
இன்றுவரை, பீத்தோவனின் இசைப்பாக்கள் (sonatas) ஒவ்வொரு பியானோ கலைஞருக்கும் ஒரு கலைத்துவ மற்றும் தொழில்நுட்ப சவாலை முன்வைக்கின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரும் பியானோ கலைஞரும் புசோனி, பதெரெவ்ஸ்கி, பேக்ஹவுஸ், ரூபின்ஸ்டீன், ரிக்டர், கிலெல்ஸ், பிரெண்டெல், கோல்ட், ஆர்கெரிச் மற்றும் பாரன்பாய்ம் (Busoni, Paderewski, Backhaus, Rubinstein, Richter, Gilels, Brendel, Gould, Argerich, Barenboim) ஆகியோர் தொடக்கம் ஒரு புதிய உலக தலைமுறை அசாதாரண பியானோவாதிகள் வரை பதிவு செய்துள்ளனர். பீத்தோவனின் இசை அலங்காரங்கள் (embellishments), இசைவேகங்கள் (தாளகதிகள் - tempi) மற்றும் இயங்குசக்தி (dynamics) ஆகியவற்றிற்கான துல்லியமான வழிமுறைகளை வழங்கினாலும், ஒவ்வொரு கச்சேரியும் மற்றும் ஒலிப்பதிவீடும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. பீத்தோவனின் படைப்புகளுக்கு "உத்தியோகபூர்வ" விளக்கம் எதுவும் இல்லை. அவற்றின் ஆழம் மற்றும் பிரபஞ்சத் தன்மைக்கு இது சாட்சியமளிக்கிறது. இது ஒருவன் அல்லது ஒருத்தியினுடைய அவரின் சொந்த குறிப்பிட்ட காலப்பகுதியின் அனுபவங்களையும் தூண்டுதல்களையும் அவற்றின் முழு அர்த்தத்தையும் அவற்றில் பாய்ச்சி வழங்க அனுமதிக்கும் தன்மையைத் தருகிறார்.
பீத்தோவனின் ஆசிரியர் ஃபிரான்ஸ் ஜோசப் ஹெய்டனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட F minor, Op. 2, No. 1 முதல் இசைப்பா ஏற்கனவே புதிய தரங்களை அமைத்துள்ளது. குற்றுயிரொலி (Short), சுர ஒலியின் தொடர்ச்சியான குறுக்கீடு, அதிர்வொலி (trills) மற்றும் மெல்லிசை அடிப்படை வடிவம் அமைதியான தருணங்களினால் திடீரென மாற்றீடு செய்யப்படுகின்றன. அதன் அடிப்படை வடிவம் மூன்று முறை மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுவதுடன் மற்றும் மிகப்பெரிய விரைவையும் அழுத்தத்தையும் உருவாக்குகின்றன. (4)
பின்னர் பீத்தோவன், இசைப்பா இயக்கங்களின் எண்ணிக்கையை மாற்றியமைக்கத் தொடங்கினார். அவரது கடைசி படைப்புகளில் அவற்றை நான்கிலிருந்து இரண்டாக மாற்றினார். அவர் அமைதியான (piano) அல்லது உரத்த சத்தமாக (forte), மிக அமைதியான (pianissimo) அல்லது மிக உரத்த சத்தமாக (fortissimo) ஆகியவற்றின் மாறுபாட்டை நாடுகிறார், அவைகள் பெரும்பாலும் ஒன்றை ஒன்று கூர்மையாகவும் திடீரெனவும் பின்தொடர்கின்றன. மேலும் ஒரு அமைதியாக பாடல் பாடுவதிலிருந்து எழுச்சிகொள்ளும் நடனங்கள் மற்றும் சில நேரங்களில் மூர்க்கமான, முடுக்கம்மிக்க தடப்போக்காகவும், தாளத்திலும் மற்றும் தாள கதிகளிலும் (இசை வேகத்தில்) ஒரு மாற்றமும் கூட இருக்கிறது.
நடுத்தர காலத்தின் மிகவும் பிரபலமான இசைப்பாக்களாக உள்ளவை The Tempest (1801-1802) மற்றும் Appassionata ஆகும் (இத்தாலிய மொழியில் "உணர்ச்சிகளைத் திளைப்பூட்டும்", 1804-1805). “Tempest,” பற்றிய குறிப்பின் பின்னணியிலுள்ள காரணத்தைக் கேட்டால், ஷேக்ஸ்பியரின் தாமதமான காதல் The Tempest (c. 1610-1611) என்று பீத்தோவன் குறிப்பிட்டார். மறைந்த காதல் இசையமைப்பாளர்களின் பாணியில் பீத்தோவன் எந்த நிரல் இசை அல்லது -சிம்போனிக்- கவிதைகளையும் எழுதவில்லை என்றாலும், துரத்தப்பட்ட மிலானின் பிரபு Prospero ஒரு மூர்க்கமான புயல் வெடிக்கும்போது வெறிச்சோடிய தீவில் அமர்ந்திருப்பதை ஒருவர் கற்பனை செய்யலாம். கடல் உருண்டு இருட்டுடன், மூன்று-சுருதி அலைகளின் தாழ்கேளொலியில், சிகரங்களை மினுமினுக்க செய்யும், சற்று தட்டையான அடிக்கடி விரைவாக ஏற்றியிறக்கும் சுரங்களையும் (light flat arpeggios) மற்றும் அதிர்வொலிகளையும் (trills) வலது கையால் விளையாடுவதையும் தெளிக்கிறது. (5)
ஓபஸ் (Opera-படைப்பு) 31 (1802-1804) இன் மற்ற இரண்டு படைப்புகளால் பன்முகத்திரட்டான பீத்தோவனின் இசைப்பாக்கள் எவ்வளவு வித்தியாசமானதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் இருக்க முடியும் மற்றும் காட்டப்படுகிறது. அவற்றுக்கு இடையில் ஈடுபாட்டுடன், பிரமிக்கக்கூடிய Tempest சேர்க்கப்பட்டுள்ளது. பியானோ இசைப்பா G major இன் இல. 16, Op. 31, இல. 1, குறிப்பாக நகைச்சுவை மற்றும் மென்மையானது. பியானோ இசைப்பா E-flat major இன் (“The Hunt”) இல. 18, Op. 31, இல.3 மெல்லிசைசார்ந்த மற்றும் மென்மையானது. பீத்தோவன் நகைச்சுவை மற்றும் நாடக உணர்வையும் கொண்டிருந்தார். மேலும் கேட்பவரின் கவனத்தை எவ்வாறு ஈர்ப்பது என்பது அவருக்குத் தெரியும்.
Appassionata படைப்பானது புரட்சிகர நாடகம் மற்றும் இருண்ட மனவெழுச்சியின் உச்சத்தைக் குறிக்கிறது. இது Tempest விட மிகவும் சேர்ந்திசை (orchestral) மற்றும் பியானோவின் எல்லைக்கு அப்பால் வளர்கிறது. ஆரம்பத்தில், முதலாவது அடிப்படை வடிவம் மெல்லிய ஒலிகள் ஒரு நரம்புக் கருவியான tremolo வுக்கு ஒத்த அமைதியான, மெல்லிய பின்னணியில் இருந்து ஒரு ஓபோ (oboe) அல்லது க்லாரினெட் (clarinet) இலிருந்து சுதிகளைப் போல அமைதியிலிருந்து எழுகின்றன. இறுதிப் பகுதியில், இசையமைப்பாளர் ஏற்கனவே இருக்கும் கொந்தளிப்பான உலகத்தை சுட்டிக்காட்ட விரும்புவதைப் போல பியானோவின் மேல் மற்றும் கீழ் உச்சஸ்தானிகள் கேட்கப்படுகின்றன. (6)
காட்டிலே உலாவிவிட்டு வந்த பின்னர், பீத்தோவன் என்ற மேதை இந்த இறுதி இசையின் அசைவுப் போக்கை நேரடியாக எழுதினார் என்று சில காதல் இசை விமர்சகர்களால் முன்வைக்கப்பட்ட கருத்து உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது. உண்மையில், "உணர்ச்சிகளைத் திளைப்பூட்டும்" (“passionate”) Appassionata, அவரது மற்றய இசையமைப்புக்களைப் போலவே கவனமாக விரிவான பாவனையை அடிப்படையாகக் கொண்டது. இறுதி இசையின் அசைவுப் போக்கானது நம்பமுடியாத கொந்தளிப்பு கலைத்துவமாக உருவாக்கப்படுகிறது. இடைவிடா இசை விரைவு முறை மூலம், ஒரு திகைப்பூட்டும் முன்னோக்கிய வேகத்தில் அது இசைத்துக் கொண்டிருப்பதற்கு முன், திரும்பத் திரும்பவும் மற்றும் காற்றின் சிறு இடைநிறுத்தமும் தவிர்க்க முடியாத ஒரு உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இது இறுதி தாளத்தில் மட்டுமே அமைதிப்படுத்தும்வரை ஒரு கர்ணகடூர ஒலியின் வேகமாக மேல்நோக்கி உயர்ந்தும், ஒரு சில குற்றுயிரொலி, நாண்களில் ஊடுருவி திடீரென்று முடிவடைகிறது.
சில இசை விமர்சகர்கள், இந்த இசைப்பாவை இறுதியில் மரணிப்பதற்கு முன் விரக்தியடைந்த ஒரு நபரின் கிளர்ச்சி என்று விளக்குகிறார்கள். மேலும் பீத்தோவனின் செவிப்புலன் பிரச்சினைகள் குறித்து பெருகிவரும் அவநம்பிக்கையை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இந்த அகநிலை விளக்கம் படைப்பை அது எழுதப்பட்ட குமுறலான காலத்திலிருந்து பிரிக்கிறது. Appassionata வில், உலகம் எவ்வாறு கட்டுப்பாட்டை மீறுகிறது என்பதை ஒருவர் கேட்கிறார். மொஸார்ட்டின் இறுதிப் படைப்புகளுக்கு அப்பால் பீத்தோவன் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளார் என்பது இங்கே தெளிவாகிறது. இது நொருங்கிப்போன பழைய ஒழுங்கின் முரண்பாட்டைக் காட்டத் தொடங்கியது.
விளாடிமிர் இலிச் லெனின் Appassionata வை தனது விருப்பமான இசைப்பா என்று விவரித்தார். “Appassionata வுக்கு சமமான எதுவும் எனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் இது இசைக்கும் இசையை என்னால் கேட்க முடிகிறது. அற்புதமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட இசை. நான் அதைக் கேட்கும்போது, சிலவேளை அப்பாவியாகவும், குழந்தைத்தனமான பெருமையுடனும் நான் எப்போதுமே சிந்திக்கிறேன்: மனிதர்கள் எத்தகைய அதிசயங்களை நிறைவேற்ற வல்லமையுடையவர்கள்!”
பிற்காலப் படைப்புகள்
வியன்னாவில், பீத்தோவனுக்கு பிரபுத்துவ புரவலர்களான கோமகன் ருடால்ப், இளவரசர் லோப்கோவிட்ஸ் மற்றும் இளவரசர் கின்ஸ்கி போன்றவர்கள் ஆதரவு கொடுத்தனர். இருப்பினும், 1809 இல் நெப்போலியனின் துருப்புக்கள் வியன்னாவை ஆக்கிரமித்த பின்னர் அவரது நிதி விவகாரங்கள் மோசமடைந்தன. பிரபுக்களின் பல நண்பர்கள் வியன்னாவை விட்டு வெளியேறினர் கின்ஸ்கி, லோப்கோவிட்ஸ் மற்றும் இளவரசர் லிச்னோவ்ஸ்கி போன்றவர்கள் விரைவில் இறந்தனர். அவரது இசை நிகழ்ச்சிகளிலும் opera Fidelio (ஃபிடேலியோ இசை நாடகம்) முதல் பதிப்புகளிலும் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிகாரிகள் அவரது இசையினால் ஈர்க்கப்படவில்லை.
நெப்போலியனின் தோல்வி மற்றும் பிற்போக்குத்தனமான மெட்டர்னிச் சகாப்தத்தின் (Metternich era) தொடக்கத்துடன், பீத்தோவனுக்கு ஒரு முரண்பாடான நிலைமை 1814-1815 ஆண்டில் தோன்றியது. பிரெஞ்சுப் புரட்சியின் தொடர்ச்சியாக அவரை விட ஒரு வயது முதிர்ந்த நெப்போலியனின் ஒருகால அபிமானி, இப்போது பிரெஞ்சு பேரரசரின் எதிரிகளிடமிருந்து தேசபக்தி இசையமைப்பிற்கான கோரிக்கைகளைப் பெற்றார். போர்ச் சமர் சிம்பொனியான வெலிங்டனின் வெற்றியுடன் (ஜூன் 1813 இல் ஸ்பெயினில் ஜோசப் போனபார்ட் மீது கோமகன் வெலிங்டன் வெற்றியைக் குறிக்கும்) இது நிகழ்த்தப்பட்டது.
ஐரோப்பாவின் மறுசீரமைப்பு 1814-1815 இல் வியன்னா காங்கிரசில் தொடங்கப்பட்டது. காங்கிரசில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரிய வெளியுறவு மந்திரி பிரின்ஸ் வான் மெட்டர்னிச் (Prince von Metternich), ஐரோப்பிய பிற்போக்கின் தலைவராக உருவெடுத்து தணிக்கை மற்றும் உளவு முறையை அறிமுகப்படுத்தினார்.
பீத்தோவன் பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்டார். Biedermeier காலத்துக் கலை, புதுமை உணர்வூட்டும் இசை ஒப்பேரா நாடகம் மற்றும் ரோசினியின் நகைச்சுவை இசை ஒபேரா நாடகங்கள் மற்றும் நிக்கோலோ பகானினியின் இசை விற்பனப் படைப்புகளில் அதிக ஆர்வம் காட்டிய வியன்னா சமூகத்தின் உயர் பதவிகளில் இருப்போரின் சுவைகளுடன் அவரால் இயைந்துபோக முடியவில்லை. குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான இசையமைப்புகளுடன், அவர் நிராகரிக்க முடியாத நிலையில், அவர் பின்னர் இயற்றிய இசையமைப்புகளில் தீவிரமாக பணியாற்றினார்.
இந்த காலகட்டத்தில் Missa Solemnis (Solemn Mass – பக்தியான தேவாலய இசை), Diabelli Variations (இது, 1819 க்கும் 1823க்கும் இடையில் எழுதப்பட்ட பியானோவின் மாறுபாடுகளின் தொகுப்பு), Bagatelles Op. 119 மற்றும் Op 126, எட்டாவது மற்றும் ஒன்பதாவது சிம்போனிகள், பியானோ இசைப்பாக்கள் மற்றும் ஐந்து இசைக் கருவிகளைக் கொண்ட இசைக் குழு ஆகிய அழிவேயில்லாத படைப்புகள் தோன்றின. அவைகள் முற்றிலும் புதிய கலைத்துவமான மற்றும் முறையான பரிமாணங்களில் நுழைந்தன. இது அவரது சமகாலத்தவர்களில் பலரின் நம்பமுடியாத உண்மைத் தன்மையைத் தூண்டியது.
இறுதி பியானோ இசைப்பாக்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தமக்குரிய இடத்தை பியானோ இசைத்தொகுப்பில் (piano repertoire) வென்றுகொண்டன. B-flat major (“Hammerklavier”) இல், Op. 106 பியானோ இசைப்பா இல. 29 (1818) ஆனது அதன் மிகச்சிறந்த இசை அறிஞர்களில் ஒருவரான ஆல்ஃபிரட் பிரெண்டலின் கூற்றுப்படி, “இசைப்பா துறையில் எல்லாவற்றையும் தாண்டி தைரியமாகவும் சாதிக்கப்பட முயற்சிக்கப்படாமல் இருந்த அனைத்தையும் கடந்தது என்ற அடிப்படையில்” இந்த இசைப்பா நீண்டகாலமாக வாசிக்கப்பட முடியாதது என்று கருதப்பட்டது. பீத்தோவனின் மரணத்திற்குப் பின்னர் பல தசாப்தங்களுக்குப் பின்னர்தான் இது முதலாவதாக ஃபிரான்ஸ் லிஸ்ட் (Franz Liszt) ஆல் நிகழ்த்தப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டு வரை பின்னர் வந்த நான்கு நரம்பு வாத்தியங்களின் நான்கு இசை கருவிகளுக்கு (string quartets) ஏற்றவாறு அமைந்த இசையின் முக்கியத்துவம் முழுமையாகப் பாராட்டப்படவில்லை.
பிற படைப்புகள் பீத்தோவனின் வாழ்நாளில் வெற்றிகரமாக இருந்தன. அவர் ஆறு ஆண்டுகளாக உழைத்த மே 7, 1824 ஆண்டில் நிகழ்த்தப்பட்ட ஒன்பதாவது சிம்பொனி, 30 வியன்னா இசைக் கலைஞர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் அவரது சமீபத்திய இசையமைப்புகளை பூட்டிவைத்திருக்க வேண்டாம் என்று பீத்தோவனுக்கு எழுத்துபூர்வமாக வேண்டுகோள் விடுத்ததன் பின்னரே மேடையேற்றப்பட்டது. இது இசையமைப்பாளர் கலந்து கொண்ட கடைசி இசை நிகழ்ச்சியாகும். பார்வையாளர்களிடம் தனது முதுகை காட்டியபடி பியானோவின் முன் அவர் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மார்ச் 26, 1827 இல் பீத்தோவன் 56 வயதில் மரணமடைந்தார். மூன்று நாட்களுக்குப் பின்னர் வியன்னாவில் அவரது இறுதி ஊர்வலத்தில் 10,000 முதல் 20,000 பேர்கள் வரை மக்கள் கலந்து கொண்டனர்.
வாழ்க்கை வரலாற்றாசிரியர்களும் இசை அறிஞர்களும் வழக்கமாக பீத்தோவனின் பிற்கால படைப்புகளை அகநிலையை நோக்கித் திரும்புவதாகவும், உலகத்திலிருந்து விலகி இருப்பதாகவும், ஆன்மாவின் உள் பகுதிகளுக்கு பின்வாங்குவது அவரது அதிகரித்துவரும் காது கேளாதலால் விளக்கப்பட வேண்டும் என்று விளக்குகிறார்கள். இந்த விளக்கம் நின்றுபிடிக்ககூடியதல்ல. ஏனென்றால் இது பீத்தோவனின் பணியை முந்தைய காலகட்டத்தில் அவர் மிகவும் சக்திவாய்ந்த வெளிப்பாட்டைக் கொடுத்த சமூகத்தின் வளர்ச்சியிலிருந்து பிரிக்கிறது.
ஒரு உன்னத கலை மேதை என்ற முறையில், பீத்தோவன் தனது முந்தைய படைப்புகளை ஆழமாக்குவதன் மூலமும், இசையின் வரம்புகளை விரிவுபடுத்துவதன் மூலமும், எதிர்காலத்திற்கு தயாரிப்பதற்கும் தன்னைச் சுற்றியுள்ள பிற்போக்குத்தனத்திற்கு பதிலளித்தார். இதன் மூலம் முன்னர் செய்த எந்த இசையையும் விட பிரபஞ்சரீதியான வழிமுறையில் மனித உள்ளக் கிளர்ச்சிகளையும் மனிதப் பற்றுக்களையும் அவர் வெளிப்படுத்தினார். பெரும் இசையமைப்பாளர்களின் குறிக்கோளாகயிருந்த "பலவோசை மெல்லிசை (fugue), பண்ணிசைவுத்திறன் (counterpoint) மற்றும் இசைமாறுபாடு (variation) போன்ற இசை வடிவங்களை ஜோஹான் செபாஸ்டியான் பாஹ் (Johann Sebastian Bach) முழுமையாக உருவாக்கியதையும் அவரும் கூட சேர்த்துக்கொண்டார். “Hammerklavier” இசைப்பாவின் நான்காவது இசை நகர்வில் (movement) பலவோசை மெல்லிசை மற்றும் 4 நரம்பு வாத்தியங்களின் நான்கு இசை கருவிகளுக்கான Grand Fugue க்கு, Op. 133 இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். (7) Bach இன் கோல்ட்பேர்க் இசைமாறுபாடுகளுடன் (Goldberg Variations), பீத்தோவனின் டயபெல்லி இசைமாறுபாடுகள் (Diabelli Variations) இந்த இசை வகையின் மிகச்சிறந்த இசையமைப்பாக இன்றுவரை கருதப்படுகின்றன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு நூலான, லூட்விக் வான் பீத்தோவன்: ஒரு புதிய சகாப்தத்திற்கான இசை [Ludwig Van Beethoven: musik für eine neue zeit] என்பதில் இசை அறிஞர் ஹான்ஸ்-ஜோஆஹிம் ஹின்ரிச்ஸென், பீத்தோவனின் இசை “அதன் வளர்ச்சியின் அனைத்து கட்டங்களூடாகவும் தனது இளமைக்கால சிந்தனை உலகத்துடனான தொடர்பை ஒருபோதும் இழக்கவில்லை”. அவரது இசை வெறுமனே தனிப்பட்ட அகநிலைத்தன்மையின் வெளிப்பாடு அல்ல, ஆனால் “அவரது சகாப்தத்தின் கருத்தியல் உலகத்துடன் ஒரு உக்கிர மோதல்”, குறிப்பாக இமானுவல் கான்டின் அறிவொளி சிந்தனையுடன், கோத்தேயின் கவிதையுடனும் மற்றும் ஷில்லரின் அழகியல் மற்றும் நாடகத்துடனும் ஒரு சிக்கலான ஈடுபாட்டை கொண்டிருக்கின்றது. இது அவரது பிற்கால படைப்புகளுக்கும் பொருந்தும். இது பிரதிபலிப்பான, துயரமான மற்றும் சில நேரங்களில் விரக்தியின் தொனிகளுடன் இளமை நம்பிக்கையின் தடயங்களைக் கொண்டுள்ளது.
பீத்தோவனின் பிற்கால படைப்புகளின் பிரபஞ்சத் தன்மை மற்றும் முரண்பாட்டின் உணர்வைப் பெற, வாசகர்கள் அவரது இறுதிப் பியானோ இசைப்பாவான (piano sonata) C minor, Op. 111 இன் இல. 32 இரண்டு இசைத்திறனை ஒப்பிட்டுப் பார்க்க பரிந்துரைக்கிறோம். 1963 ம் ஆண்டு லைப்சிக்கில் ஸ்வியாடோஸ்லாவ் ரிக்டர் (Sviatoslav Richter) வாசித்தது அவரது கடைசி மூன்று இசைப்பாக்களின் நேரடிப் பதிவின் ஒரு பகுதியாகும். இது இசைப்பாக்களின் கொடூரமான அமைதியின்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது, அவர்களுடைய மென்மையான நெருக்கத்துடன், வேறு எந்த பியானோ கலைஞரையும் விட இது சிறந்ததுடன், மேலும் இது கிட்டத்தட்ட தாங்க முடியாத வரம்புகளுக்குத் தள்ளப்படுகிறது. இரண்டாவதாக ப்ரெண்டெல் பதிவுசெய்தார். அவர் இசையமைப்பின் செவ்விசை (பாரம்பரிய) அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். (8)
பீத்தோவனை சுற்றியிருக்கும் சர்ச்சைகள்
பீத்தோவனின் இசையின் சிக்கலானதன்மை, நுணுக்கம் மற்றும் புகழுடன் ஒரு இசைக்கலை ஆக்கப்படைப்பானது துஷ்பிரயோகம் மற்றும் தவறான விளக்கத்திற்கு உட்படுத்தப்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.
பிஸ்மார்க்கின் அடக்குமுறை ஆட்சியின் பிரதிநிதிகள், வில்ஹெல்மினியன் இராணுவம் மற்றும் நாஜிக்கள் அனைவரும் பீத்தோவனின் ஆழ்ந்த மனித நேயமான இசையமைப்புக்களை அவர்களின் மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு பின்னணி இசையாக தவறாக பயன்படுத்த முயன்றனர். Appassionata ஆனது தனது இராணுவ தைரியத்தை பலப்படுத்தியதாக பிஸ்மார்க் பெருமை பேசினார். மேலும் இசைக்குழு இயக்குனர் ஹான்ஸ் வான் பூலோ Eroica சிம்பொனியை (சிம்பொனி எண் 3) “பீத்தோவனின் சகோதரர், ஜேர்மன் அரசியலின் பீத்தோவன், இளவரசர் பிஸ்மார்க்குக்கு” என அர்ப்பணிக்க விரும்பினார். 1848 புரட்சியின் போர்களில் பங்கேற்ற ரிச்சார்ட் வாக்னர், 1871 இல் ஜேர்மன் பேரரசு நிறுவப்பட்ட பின்னர், பீத்தோவனின் இசை ஜேர்மன் இராணுவத்தின் தைரியத்திற்கு அடிப்படை என்று அறிவித்தார்.
Wilhelm Furtwängler இன் இசை இயக்கத்தில் நாஜி ஜேர்மனியில் Fidelio இயக்கப்பட்டதை பற்றி நாவலாசிரியர் தோமஸ் மான் நாடு கடத்தப்பட்ட நிலையிலிருந்து கோபமாக பின்வருமாறு எழுதினார். “[ஹென்ரிச்] ஹிம்லரின் ஜேர்மனியில் ஒருவரின் தலையில் கையை வைத்துக்கொண்டு மண்டபத்தைவிட்டு தடுமாறிக்கொண்டு வெளியே போகாமல் 'Fidelio' வைக் கேட்க என்ன மந்தமான அறிவு தேவை?”.
பிராங்ஃபேர்ட் பள்ளியின் மனச்சோர்வடைந்த பிரதிநிதிகள் தங்கள் கலாச்சார அவநம்பிக்கையை நியாயப்படுத்த பீத்தோவனைப் பயன்படுத்த முயன்றனர். 1933 ஆம் ஆண்டில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபின், தியோடர் அடோர்னோ Eroica சிம்பொனி உருவாக்கிய “உயர் உணர்ச்சியை” “அதன் சொந்த வெற்றிகளைக் கொண்டாடும் வெகுஜன கலாச்சாரத்தின்” ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சித்தார் (Beethoven: The Philosophy of Music). இந்த கூற்றில் பிராங்ஃபேர்ட் பள்ளியின் தத்துவத்தின் மையக் கருப்பொருளை ஒருவர் கண்டறிய முடியும். இது எதோச்சதிகாரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டமை பாசிச காட்டுமிராண்டித்தனத்தை சாத்தியமாக்கியது என்பதால் அறிவொளிமயமாக்கலை ஒரு தோல்வி என்று அறிவித்தது. எனவே, அடோர்னோவும் மற்றவர்களும் உள்ளக் கிளர்ச்சிகளுக்கு அழைப்புவிடும் எந்தவொரு கலையும் ஆபத்தானது என்று கூறினார்கள்.
பீத்தோவனின் பின்னைய இசையமைப்புக்களை இருத்தலியல் ரீதியாக விளக்க அடோர்னோ முயன்றார். பீத்தோவன் பற்றிய அவரது கருத்துக்கள் தோமஸ் மானின் நாவலான Doctor Faustus இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு காட்சி ஒரு நிஜ வாழ்க்கை அனுபவத்தை விவரிக்கிறது. அடோர்னோ (நாவலில் வெண்டல் கிரெட்ஸ்மார்) கலிபோர்னியாவில் நாட்டைவிட்டு வெளியேறியிருந்த தோமஸ் மானை காணச் சென்றிருந்தார். அங்கு sonata Op. 111 அவருக்கான பியானோவில் வாசித்து, மற்றும் "மகத்துவமும் மரணமும் ஒன்றிணைந்த இடத்தில் ... ஒரு வகையான மரபை நேசிக்கும் புறநிலைத்தன்மை வெளிப்படுகிறது. இது இறையாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அகநிலைத் தன்மையை விட்டுச்செல்வதுடன்" மற்றும் "பிரமாண்டமாக ஆவி போல கூட்டாக விசித்திரமாக நுழைகிறது” என்று விளக்கினார்.
நாவலின் முக்கிய கதாநாயகன் ஆட்ரியான் லிவர்கூன் (Adrian Leverkühn) பின்னர் பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனியை பற்றிக் கூறுகிறார், “மக்கள் எதற்காகப் போராடினார்கள், ஏன் அவர்கள் கோட்டைகளைத் தாக்கினார்கள். எது நிறைவேற்றி முடிக்கப்பட்டு மகிழ்ச்சியுடன் பிரகடனப்படுத்தப்பட்டதோ அவைகள் அனைத்தும் இருக்கக்கூடாது. அதை திரும்பப் பெற வேண்டும். நான் அதை மீண்டும் எடுக்க விரும்புகிறேன்” என்றார்.
இன்றுவரை, இசை ஊடகவியலாளர்கள் மற்றும் அறிஞர்கள் அடோர்னோவின் அடித்தளமாக்கொண்டு மனச்சோர்வடைந்த நிலைப்பாட்டை தமக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளனர். ஒரு உதாரணத்தை சமீபத்தில் Die Zeit என்ற வார இதழின் இலக்கிய ஆசிரியர் அலெக்சாண்டர் கம்மான், பீத்தோவன் ஆண்டுவிழா குறித்த தனது கட்டுரையில், “ஓ சுதந்திரம்!” [“O Freiheit!”] என்ற இழிந்த தலைப்பில் வழங்கினார். பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளராக பீத்தோவனை இழிவுபடுத்த கம்மான் முயன்றார். நிதி உதவிக்காக பிரபுக்களை நம்பியிருப்பதை அவமதிக்கும் வகையில் குறிப்பிட்டு மற்றும் பேர்லினின் மொயபிட் சிறையில் SS இனால் ஏப்ரல் 1945 ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆல்பிரெக்ட் ஹவுஸ்கோஃபர் எழுதிய Fidelio வைப் பற்றிய ஒரு கவிதையின் ஒப்புதலுடன் மேற்கோள் காட்டினார். அவர் அதில் எழுதினார், “வாழ்க்கையில் எந்தவிதமான சுதந்திரத்திற்கான குரலும் இல்லை. அங்கே, ஒரு ஸ்தம்பிக்கச்செய்யும் விடாமுயற்சி மட்டுமே உள்ளது. அதன் பின்னர் ஒரு தூக்கில்தொங்குதலும், ஒரு மணலில் மூழ்குவதும் தான்.”
இரண்டு மாதங்களுக்கு முன்பு, 32 பீத்தோவன் இசைப்பாக்கள் (sonatas) அனைத்தையும் இசைத்து, இந்த ஆண்டு (2020) சால்ஸ்பேர்க் இசை விழாவை நிகழ்த்திய இகோர் லெவிட்டை Süddeutsche Zeitung பத்திரிகையும் ஏனைய முன்னணி ஊடக வெளியீடுகளும் யூதவிரோத நோக்கத்துடன் தாக்கியுள்ளனர். ஜேர்மனியில் நவ-நாசிசத்தின் மறுஎழுச்சியை எதிர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 33 வயதான பியானோ வாசிப்பவரும் இசையமைப்பாளரின் இசைப்பாக்களை தொடர்ச்சியான இணைய வழி இசை நிகழ்ச்சிகள் மற்றும் podcasts களில் பீத்தோவனின் படைப்புகளால் பல்லாயிரக்கணக்கானவர்களை உற்சாகப்படுத்தியவர், வெளிப்படையாக ஆளும் வர்க்கத்தின் கண்களில் ஒரு முள்ளாக பார்க்கப்படுகின்றார்.
அந்த நேரத்தில் இது பற்றி உலக சோசலிச வலைத் தளம் (WSWS) கருத்துரைக்கையில்,
“லேவிட் மீதான தாக்குதல் ஜேர்மனிக்கு அப்பாலும் ஒரு அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் கலாச்சார மட்டத்தை உயர்த்த முற்படும் சமூக உணர்வுள்ள மற்றும் அரசியல்ரீதியாக ஈடுபடும் கலைஞர்களை கண்டு ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது.
"லெவிட் தனது அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக மட்டும் வலதுசாரிகளுக்கு இலக்காகவில்லை. பீத்தோவன் மற்றும் பிற இசையமைப்பாளர்களின் படைப்புகளை மக்கள்தொகையின் பரந்த அடுக்குகளுக்கு அணுகுவதற்கும் அதன் மூலம் ஒட்டுமொத்த கலாச்சாரத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஆளும் வர்க்கத்தால் சந்தேகத்துடன் மட்டும் பார்க்கப்படுவதில்லை, மாறாக அச்சுறுத்தலாகவும் கருதப்படுகின்றன.”
இந்த தாக்குதல்களால் பீத்தோவனின் மகத்துவத்தை கெடுக்க முடியாது. கொரோனா வைரஸ் தொற்று, பரந்த சமத்துவமின்மை மற்றும் போர் அச்சுறுத்தல்களின் நிலைமைகளின் கீழ், சுரண்டல், அடக்குமுறை மற்றும் இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு கிளர்ச்சிக்கு எதிராக கோபம் அதிகரித்து வருகிறது. பீத்தோவனின் சுதந்திரத்திற்கான குரல் நீண்ட காலத்திற்கு முன்னர் இருந்ததை விட சமகாலத்திற்கு மிகமுக்கியமானது.
பிரெஞ்சு புரட்சியின் கொள்கைகளை ஒரு புதிய சகாப்தத்திற்கு சுமந்துகொண்டு செல்லும் சோசலிச தொழிலாளர் இயக்கமே பெருமதிப்புள்ள பீத்தோவன் வைத்திருந்த மரபுகளின் உண்மையான வாரிசாகும். ஐந்தாவது சிம்பொனியால் ஆழ்ந்த ஈர்க்கப்பட்ட ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ், ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் பீத்தோவனை ஒரு முன்மாதிரியாக அறிவித்தார். நவம்பர் 1918 இல் பவேரிய மக்கள் குடியரசை (People’s State of Bavaria) நிறுவ உதவிய குர்ட் ஐஸனர், Berlin beer மண்டபத்தில் 3,000 தொழிலாளர்களுக்கு பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனியின் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அதை தொடர்ந்து பீத்தோவனின் இசை இசைக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே பீத்தோவனின் வாழ்நாளில், அவரது இசை, சமூகத்தின் கீழ் வர்க்கங்களில் உள்ளவர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1791 ஆம் ஆண்டில் கோடெஸ்பேர்க்கில் (பொண் நகருக்கு அருகே) இசையமைப்பாளரின் சமகால பாத்திரத்தை குறித்த தனது படைப்பில், டீட்டர் ரெக்ஸ்ரோத் மேற்கோளிட்டுள்ளார், “பீத்தோவன் இப்போது பார்வையாளர்களால் அவருக்கு வழங்கப்பட்ட கருப்பொருள்களை மெருகூட்டத் தொடங்கினார், எனவே நாங்கள் உண்மையிலேயே அதனால் பற்றிப்பிடிக்கப்பட்டோம். ஆனால் அதை விட மேலானது என்னவெனில் ஒரு புதிய Orpheus, தீர்க்கதரிசி இசைமேதை ஒலித்ததைப் போல இருந்தது. தேவாலயத்தில் விவசாயிகள் செய்த ஆராதனையை சுத்தம் செய்யும் சாதாரண தொழிலாளர்கள், இசையினால் உணர்ச்சிவசப்பட்டு, தங்கள் கருவிகளை மீண்டும் கீழே போட்டுவிட்டு, ஆச்சரியத்துடனும் கண்காணத்தக்க ஒப்புதலுடனும் அதனை கேட்டார்கள்.”
பீத்தோவனின் இசை இன்றும் புரட்சிகரமானது. இசையமைப்பாளரின் பிறப்பின் இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இளம் இசைக்கலைஞர்கள் மற்றும் குழுவினர் அவரது இசையை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற புதிய ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் அணுகுகிறார்கள். வர்க்க சிறப்புரிமைகளற்ற ஒரு மனித நேயமுள்ள சமூகத்தை உருவாக்கும் பணி தீர்க்கப்பட வேண்டிய மற்றும் தீர்க்கப்படக்கூடிய ஒரு புதிய சகாப்தத்திற்காக அவர்கள் குரலெழுப்புகின்றார்கள்.
இசை மாதிரிகள்
பின்வரும் இசை மாதிரிகள் அனைத்தும் YouTube இல் கிடைக்கின்றன. இவைகள் பீத்தோவனின் விரிவான படைப்புகளின் ஒரு கணநேரக் காட்சியை வழங்குகிறது. பரிந்துரைக்கப்பட வேண்டிய எண்ணற்ற பிற பதிவுகளும் இங்கு உள்ளன.
(1) James Levine conducts the Prisoners’ Chorus at the met in New York; Jonas Kaufmann sings Florestan’s Aria
(2) Ninth Symphony, fourth movement with the “Ode to Joy,” Daniel Barenboim conducts the West-Eastern Divan Orchestra
(3) Fifth Symphony, conducted by Christian Thielemann
(4) Piano Sonata No. 1, Op. 2, No. 1, played by Igor Levit at the Salzburg Music Festival 2020
(5) “Tempest Sonata,” Op. 31, No. 2, 1802, interpreted by Rudolf Buchbinder
(6) Piano sonata “Appassionata,” Op. 57, F minor, interpreted by Claudio Arrau
(7) “Grand Fugue” for string quartet, Op. 133, played by the Alban Berg Quartet
(8) Piano sonatas Op. 109–111, live recording by Sviatoslav Richter in Leipzig in 1963;
Op. 111 played by Alfred Brendel